Advertisement

அத்தியாயம் 17
காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள்  என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். ஒருநாள் முழுவதுமே ஆலைப் பக்கம் சொல்லாதது என்னவோ போலிருந்தது. எழுந்ததுமே அதே எண்ணத்தில் கிளம்பி விட்டான். 
கருப்பட்டி, “என்ன முதலாளி நீங்க ஒரு நாலு நாள் லீவ் எடுத்துட்டு எனக்கொரு ஐந்து நாள் லீவ் தரக்கூடாத?” என்றான் கேலியாக. 
“இங்க இருந்தா மட்டும் நீ என்ன வேலையா செய்த?” என்றவன் முறைக்க, கப்பென்று வாயை  மூடிக்கொண்டான். 
வந்ததும் முக்கிய வேலையை மட்டும் கவனமோடு முடித்த கதிருக்கு அதற்குமேல் இருப்புக் கொள்ளவில்லை. சந்திராவின் நினைவும், தனியாக இருக்கிறாளே என்ற பதைபதைப்பு தான். 
ஆலையிலிருந்து வெளியே வந்திருந்தவன் கட்டிட வேலைகளை மேற்பார்வையிட்டுவிட்டு அருகே இருக்கும் உணவகத்தில் மதிய உணவு பார்சல் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்குக் கிளம்பியிருந்தான்.
ரேவதி நலமோடு இருக்க, இரு தினங்களாக உடன் தங்கி கவனித்துக் கொண்ட தனவதி ஊருக்குக் கிளம்பினார். ரேவதிக்கு அனுப்பி வைக்க மனமில்லை, மகளின் விருப்பம் புரிய, கதிரிடம் பேசி விரைவில்  சீமந்தம் வைத்து அழைத்துச் செல்வதாகத் தெரித்தார். 
வீடு வந்த கதிர் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க, அந்த சத்தத்தில் எதிர் வீட்டிலிருந்து வந்தாள் சந்திரா. மீண்டும் கோபித்துச் சென்றுவிட்டாளோ என்ற எண்ணத்தில், “வது அங்க என்ன செய்த?” என்றான். 
அவனை நெருங்கி வந்தவள், “வீடு கிளீன் பண்ணிட்டு வந்தேன், நீ ஏன் சீக்கிரமா வந்துட்ட?” என்றாள் மலர்ந்த இதழோடு. 
“எல்லாம் ஒரு வேலையா தான்..” என்றவனின் கண்களில் கள்ளம் மின்ன, கண்டுகொண்டாள். 
கதவைத் திறந்தபடி சந்திரா முன்னே வர, பின்னே வந்த கதிர், “நல்லா சாப்பிட்டுச் சாப்பிட்டு தூங்குற, வீடாவது சுத்தமா வைச்சிக்கிறீயான்னா அதுவுமில்லை” எனக் கடிந்து கொண்டான். 
உள்ள வந்தவள் திரும்பி நின்று முறைத்தபடி, “என் வாழ்க்கையிலே உன்னைக் கல்யாணம் பண்ணதுல இருந்து தான் இவ்வளவு வெட்டியா எனக்கு பொழுது போகுது தெரியுமா?” என்றாள். அவளே குப்பையாக்கிக் கொள்வதும் சுத்தப்படுத்திக் கொள்வதுமாகப் பொழுதைத் தள்ளிக் கொண்டிருந்தாள். 
உள்ளே வந்திருந்தவன் இடைபற்றி அருகே இழுத்து அணைத்துக் கொண்டு, “நீ வேணா என்னைக் காதலிக்கிறதே முழு நேர வேலையா செய்யேன்! கொஞ்சிட்டே இரு” எனக் கொஞ்சல் குரலில் கூற, நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள், “எது? உன்னை..? ம்ம்.. காலையில நான் முழிக்கிறதுக்கு முன்னவே ஓடுறவன்ல நீ” என்றாள். 
அவள் நெற்றியில் முட்டி சிரித்தே சமாளித்தவன், இதழ் நெருங்க, கண்கள் மூடி வரவேற்றவள் மேலும் நெருங்கியதில் நீண்ட மூச்சிழுத்து வாசம் பிடித்தாள். இதழில் இதழ் பதிக்க நெருங்க, ஊறிய இதழ் மலர, விழியும் திறந்தவள், “மட்டன் சால்னா..” என்றாள் சப்படுக்கொட்டி வாசமிழுத்தபடி. 
சட்டென விழித்த கதிர் கடுப்போடு, கையிலிருந்த பார்சலை அவள் முன் நீட்டிவிட்டு, “ஆமாம், நல்ல சாப்பிடு போ..” என்றான் ஏமாற்றமாக. 
பார்சலை வாங்கியவள் உள்ளே ஆராய, சரியான கும்பகர்ணனி என மனதில் புலம்பியபடி நொந்து கொண்டிருந்தான் கதிர். நிமிர்ந்தவள், சட்டென அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு சிட்டெனப் பறந்து சென்றிருந்தாள். 
கை கழுவி, தட்டு, தண்ணீர் செம்பு எனச் சகலமும் எடுத்துவந்து ஹாலில் வைத்து பார்சலையும் பிரிக்க, ஈரம் பதிந்த கன்னத்தைத் துடைத்தவன், இது தான் மிச்சம் என்றெண்ணத்தோடு  அவனும் சென்று அமர்ந்தான்.  
அசைவ உணவு வகைகளை அதிகமாகவே வாங்கி வந்திருந்தான். அந்த சுற்றுவட்டாரத்திற்கே ஆன தனிச் சுவை, நீர் சுரக்க, வெகு நாட்களுக்குப் பின் ரசித்து உண்டாள்.கதிர் உண்டு முடித்து சமையலறை நோக்கிச் சென்றிருக்க, சந்திரா ஒரு கட்டுக் கொண்டிருக்க, சரியாக உள்ளே வந்தார் தனவதி. 
அந்த சத்தத்தில் நிமிர்ந்தவள் வாய் முழுவதும் அடைத்து வைத்த உணவோடு, “வாங்க அத்தை..” என குழறலாக வரவேற்றாள். 
சந்திரா வெகு சாதாரணமாக வரவேற்க, தன் கண்கள் காண்பதும் உண்மை தானா என நம்ப இயலாது அதிர்ந்தார் தனவதி. உரிமையாய் நடு வீட்டில் அமர்ந்து உண்டு கொண்டிருக்கிறாளே என மனதில் குமைந்தவர் முகத்தில் அப்பட்டமாக ஏமாற்றம் தெரிய, கண்டுகொண்ட சந்திராவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு! 
வெளியே வந்த கதிரும், “வாங்க சின்னம்மா, ரேவதி நல்லாயிருக்காளா?” என வரவேற்று விசாரிக்க, பதிலுரைத்தவர், “சந்திராவை நீயே போய் கூட்டிட்டு வந்துட்டீயா ராசா?” என்றார். 
அவன் பதில் சொல்லும் முன்பே, “அவ்வளவு சீக்கிரம் நான் உங்களை எல்லாம் விட்டுப் போயிட மாட்டேன் அத்தை” என்றாள் சந்திரா. அவள் எதிர்வீட்டில் தானிருந்தாள் என கதிர் தெரிவித்தான்.
“அப்போ நீ ஊருக்கே போகலையா..?” என்றவர் குழப்பமாகக் கேட்க, “ஏன் நான் போகாததுல உங்களுக்கு ஏமாற்றமா?” எனச் சீண்டினாள் சந்திரா. 
தனவதிக்கு திக்கென்று நெஞ்சம் அடைத்தது, அவள் சென்றுவிட்டாள் என நினைத்து சேர்மமூர்த்தியிடம் வேறு வாக்கு கொடுத்து விட்டோமோ என உள்ளுக்குள் வெந்தார். 
கதிர் வேறு இருக்க, மறுப்பாய் தலையசைத்தவர், “இல்லம்மா, நீ விட்டுப்போயிட்டேன்னு அவன் தான் பத்தே நிமிஷத்துல வாடிப்போயிட்டான்” என்றார் பரிந்துகொண்டு.
“ஏன் நான் வீட்டைவிட்டுப் போறேன்னு அவர்கிட்ட சொன்னேனா? இல்லை உங்க கிட்டச் சொன்னேனா? நான் போறேனே, ஒரு எட்டு வீதிவரை எட்டிப்பார்த்திருந்தால் எங்க போறேன்னு தெரிஞ்சிருக்கும். என்ன செய்ய அவருக்கு அறிவு அவ்வளவு தான்!” எனக் கதிரை சொல்வது போலே தனவதியையும் மட்டம் தட்டினாள். 
இப்படி டேமேஜ் பண்றாளே! என்றெண்ணியவன் பார்வையிலே கண்டிப்புக் காட்ட, என் கணவன் என் உரிமை என்பது போல் சளைக்காது அவளும் எதிர்பார்வை பார்த்தாள். அந்த பார்வை பரிமாற்றம், கண்களால் பேசிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் தனவதிக்கு புதிதாய் தெரிந்தது. சந்திரா இன்னும் எழுந்திருக்கவில்லை, உண்டுகொண்டே இத்தனை வேலையும் செய்ய, பார்த்துக்கொள்ளும் படி தனவதியிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஆலைக்குக் கிளம்பிவிட்டான் கதிர். 
அவன் செல்ல, சந்திராவும் ரேவதியின் நலம் விசாரிக்க, வெறும் வார்த்தைக்குப் பதில் சொல்லிவிட்டு விலகிச் சென்றார். வழக்கமாக வரும் நேரம் கதிர் வந்துவிட, வழக்கமாக உறக்கச் சென்றிடும் சந்திரா இன்று காத்திருந்தாள். தனவதியும் இருந்தார் தான். 
கையில் பார்சலோடு வந்தவன், வரவேற்பு அறையில் அமர, “சாப்பிட வா ராசா..”என அழைத்தவரின் பார்வை, அதில் பதிய, “கிருஷ்ணாவிலாஸ் ஸ்வீட்ஸ்..” எனப் பதிலுரைத்தவன் சந்திராவின் கைகளில் தந்துவிட்டு உணவுன்ன சென்றான். 
கதிர் உண்ண, தனவதி பின்னே வர, பார்சலை பிரித்த சந்திராவிற்கு மெல்லிய புன்னகை. நெய் மிதக்கும் அல்வாவில் சிறிது கிள்ளி வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் பின்னே சென்றுவிட்டாள். சென்று தனவதியிடம் நீட்ட, பதறிய கதிர், “சின்னம்மாவுக்கு சுகர் இனிப்பு எதுவும் கொடுக்காத வது..” என்றான் கண்டிப்போடு. 
தலையாட்டிய சந்திரா, “எனக்கு தெரியாதுங்களே! பாருங்க அத்தை நான் கேட்காமலையே எனக்கு பிடிக்கும்னு அல்வா வாங்கிட்டு வந்திருக்காங்க” என்றாள் குரலில் ஏற்ற இறக்கம் காட்டி. 
தனவதி என்ன சொல்ல? உள்ளுக்குள் புகைந்த போதும் வெளியில் மென்சிரிப்பு ஒன்றை வைத்தார். கதிருக்குச் சற்றே சங்கடமாக இருந்தது, இத்தனை நாளும் வாங்கி வரவில்லை என குறைபட்டுக் கொண்டவள், இப்போ கடை பரப்பிக் கொண்டிருக்கிறாளே என கடுப்பானது. 
உணவு உண்டபடியே,“அதான் வது இருக்காளே நீங்க ஏன் சின்னம்மா இவ்வளவு நேரம் முழிச்சி இருக்கீங்க?” என்றான். 
நீ வந்து தரிசனம் தரலைன்னா உன் சின்னம்மாவுக்குத் தூக்கம் வராதே! என மனதில் நொடிந்து கொண்ட சந்திராவின் கவனம், அல்வாவில் தான்! 
“நானும் சொன்னேன் எங்க கேட்குறாவ, அவங்க புள்ளைய இருபத்தி நாலு மணி நேரமும் அவங்களே கவனிக்கணும்னா நான் என்ன செய்ய? உம்மை மேல அவ்வளவு பாசம்! இந்த வேலையைக் கூட விட்டுவைக்கலை இதுல  நான் வேலை செய்யுறது இல்லைன்னு நீங்க என்னைக் குறை செல்லுறீங்க..” என்றாள் கதிரிடம் சலுகையாக. 
அவள் பெருமை போலே சொன்னாலும் உள்ளுக்குள் இருக்கும் குட்டு புரிந்தது. ஏன் இடைச்சலாக நிற்கிறீர்களோ என மறைமுகமாகக் கேட்டுவிட, “உங்கிட்ட கொஞ்சம் பேசணும்ப்பா அதான்” என்றார் மெல்லிய குரலில். 
தனவதி கதிர் முன் நின்று பரிமாறிக் கொண்டிருக்க, சற்றே அவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சந்திரா, அல்வாவைக் கட்டி, தன் இதழ் தொட்டுக்காட்டி, தித்திப்பு எனச் சைகை காட்டினாள்.
ஒரு நொடி இயக்கம் மறந்து அழகென கதிர் ரசித்திருக்க, “ரேவதி அங்க தனியா கிடந்து அவதிப்படுறா, வளைகாப்பு போட்டுக் கூட்டிட்டு வந்திடுவோமா ராசா?” என்றார். 
கதிர் உண்டுகொண்டிருக்க, “அதுக்குள்ள ஏழாம் மாசமாகிட்டுச்சா..! நான் இருக்குற வரைக்கும் இந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன்னுல சொல்லிட்டுப் போனாவ..!” எனச் சந்திரா வியப்பாகக் கேட்க, “இல்லை, நாளாம் மாசம் தான் ஆகுது. உண்டான புள்ளை ஒத்தையில கஷ்டப்படுத்தேன்னு கவலைப்பட்டேன்” என்றார் தனவதி. 
“ஏழாம் மாசமோ, ஒன்பதாவது மாசமோ வளையல் போடுறது தான் முறைன்னு எங்க அண்ணி சீமந்தம் அப்போ பெரியவுங்க சொன்னாங்க” என பொதுவாகச் சொல்வது போல் சொன்ன சந்திரா மீண்டும் இனிப்பில் கவனமாகி விட, தனவதி கதிரின் பதிலைத் தான் எதிர்பார்த்திருந்தார். 
கதிரோ, “அப்போ ஏன் சின்னம்மா விட்டுட்டு வந்தீங்க? நீங்க இன்னும் கொஞ்சநாள் கூட இருந்து கவனிச்சிருக்களாமே..” என்றான் அக்கறையாக. 
“அது எப்படி ராசா, நீ தனியா இங்க அல்லும் பகலும் சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்படும் போது நான் அங்க இருக்க முடியும்?” என்றவர் பாசமாகக் கேட்க, நானிருக்கிறேன் என உரைப்பது போல் சந்திரா சட்டெனச் செம்பை தட்டிவிட்டு இருவரின் பார்வையும் அவள் புறம் ஈர்த்தாள் ஓர் நொடி.
முந்திக்கொண்ட தனவதி, “அதான் ராசா வளைகாப்பு போட்டுக் கூட்டிட்டு வந்துட்டா எல்லாரையும் கவனிச்சிப்பேனே!” என்றவர் ஆசையாகக் கேட்க, “அப்போ செந்தில் அண்ணா என்ன செய்வார்?” என இடையிட்டாள் சந்திரா. 
அதைக் கண்டுகொள்ளாத கதிர், “இல்லை சின்னம்மா! காம்ப்ளெக்ஸ் ஒர்க் போய்க்கிட்டு இருக்கு, நானே நெருக்கடியான நிலையில இருக்கேன். அதை விடவும் நேரமில்லைன்றது தான் உண்மை, இப்போ என்னால எதையும் எடுத்துச் செய்ய முடியாது. ஆனால் ரேவதி வளைகாப்பைச் சிறப்பா செய்யணும்னு ஆசையிருக்கு, மூனு மாசம் போட்டு ஏழாம் மாசமே முறைப்படி செய்யலாம்” என்றான் முடிவாக. 
திருப்பதியுறாத தனவதியின் முகம் இன்னுமே வாட்டமாக தெரிய, “இங்க எல்லாம் சந்திரா பார்த்துப்பாள்! நான் செந்தில் மாப்பிள்ளைகிட்ட பேசுறேன், நீங்க வேணா போய் இருந்து கொஞ்ச நாள் ரேவதியை கவனிச்சிக்கோங்க இல்லை அங்க வீட்டு வேலைக்கும் மேல் வேலைக்கும் வேணா ஆள் வைக்கிதேன் சின்னம்மா” என்றான் அக்கறையாக. 
தனவதிக்கு மூக்கு உடைந்த நிலை! இளங்கதிர் அவன் முடிவில் உறுதியாய் இருப்பது புரிய, “சரிப்பா, நீ சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும் நீயே பார்த்துக்கோ. உன் தங்கச்சி மேல உனக்கு இல்லாத அக்கறையா..!” என்றவர் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே சமையலறை நோக்கிச் சென்றார்.
மறுநொடி ஓடி வந்து கதிரின் கன்னத்தில் இதழ் பதித்த சந்திரா, “நீ கொடுத்த அல்வாக்காக..” என்றாள். 
சட்டெனக் கன்னத்தைத் துடைத்துக்கொண்டவன், “வது, என்னதிது சின்னம்மா முன்னாடி..” என மெல்லிய குரலில் கண்டிக்க, “இருக்கட்டுமே, ஏன் அவருக்குத் தெரியாததா? அவங்களும் இதெல்லாம் கடந்து வந்தவுங்க தானே!” என நியாயம் பேசினாள். 
சரியாக உள்ளிருந்து வந்த தனவதியின் காதுகளில் இது மட்டுமே விழ, அகமும் முகமும் நொடியில் சுருங்கியது. நேராக தன்னறைக்குள் சென்றுவிட்டார். மனதெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆவேசம் சந்திராவின் மீது தான். 
அவள் வந்த அன்றே ரேவதியை வீட்டைவிட்டு வெளியேறச் செய்து விட்டாள். இன்று மீண்டும் மகள் உள்ளே வருவதற்கான வாய்ப்பையும் தடுத்துவிட்டாளே என்ற கோபம்! இவளைச் சாதாரணமாக எண்ணியதும் இவள் முன்பு இதைப் பேசியதும் என் தவறு தான் என நொந்து கொண்டார். இனி தனக்குச் சாதகமான விஷயத்தை இவள் முன் கதிரிடம் பேசக்கூடாது என்ற பாடமும் கற்றுக்கொண்டார். 
அறைக்குள் வந்ததுமே கதிர் சந்திராவை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட, வேகமாக விலக்கிவிட்டவள், “நான் தரும் போது தடுத்தே தானே, இப்போ நீ தராதும் எனக்கு வேண்டாம் போ” என்றாள் ரோஷமாக.
திரும்பி நின்றவளை, பின்னிருந்து அணைத்தவன் கன்னம் உரசியபடி, “கோபமா? நான் வேணா கோபத்தைக் குறைக்கவா?” என்றான் அணைப்பை இறுக்கியபடி. 
அதை உணராதவள், உற்சாகமுடன் திரும்பி, “அப்போ திரும்பக் குற்றாலம் போறோமா?” என்றாள் எதிர்பார்ப்புடன். 
மொத்தமாக அவளிடமிருந்து விலக்கியவன், “அம்மாடி! ஆளை விடுட்டி, முந்தாநாள் போய்ட்டு வந்த அலுப்பே முழுசா தீரலை, மறுபடியுமாக்கும்..” என சலித்தவன், அவள் கோபம் போகவில்லை என்றாலும் சரி என்பது போல் சென்று கட்டில் படுத்துவிட்டான். ஒரு நொடி நின்று முறைத்தவள், மறு நொடி ஆவேசமாக அவன் மேலே விழ, அவனோ வாகாய் இழுத்து அணைத்துக்கொள்ள, புதிதாய் துவங்கியது காதல் யுத்தம் ஒன்று! 
இரு நாட்களாக, உடையும் உடலும் போலே ஒட்டிக்கொண்டே இருந்தவன் இல்லாது பகல் பொழுது கழியவில்லை சந்திராவிற்கு. தனவதி வீட்டிலிருந்தாலும் எப்போதும் போலே ஒத்துக்கிகே வைக்க, அவளும் விலகியே நின்றுகொண்டாள். 
பிறந்தகத்தில் தாத்தாவிடம் மட்டும் பேசுபவள் தற்போது மனோவை தவிர,  அனைவரிடமும் அவ்வப்போது பேசுவாள். கதிருக்கும் தெரியும் தான் ஆனாலும் அவள் உறவு, அவளோடு என விலகிக் கொண்டான். 

Advertisement