Advertisement

என்ன மாயமோ? லாவண்யாவிடம் முறுக்கிக்கொண்டிருந்த தான்யா, இப்போது அப்படி ஒட்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தும் இடத்தில் அமர வைத்து ஒரு செல்பி எடுக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தனபாலிடம் “வந்து பக்கத்துல உட்காருங்க!” என்றாள் லாவண்யா. 
அவனும் அருகில் இருந்து எடுக்க, தன்யா நகர்ந்த பின் அந்த போட்டோவை எடுத்து பார்த்து “மிஸ்டர் பேக்கிரி! நமக்கு பேபி பொறந்தா அதுவும் தான்யா மாதிரி சுருட்ட முடியாதான இருக்கும்?” என்று கேட்டுக்கொண்டே பெனாசிருக்கு இப்போட்டோக்களை செல்லில் அனுப்பிக் கொண்டிருக்க,
இவ்வளவு நேரம் எப்படியோ? இப்போது தனபால் “நிஜமா பேபி! நடுவுல அந்த பாப்பாவை வைச்சு போட்டோஸ் எடுக்கவும் எனக்கும் ஆசை வந்துடுச்சி. ஊருக்கு போனதும் மேரேஜ் பண்ணிக்கலாமா?” என்றான்.
லாவாண்யா கண் தெறித்துவிடும் அளவுக்கு பெரிதாக முழித்து “நீங்களா பேசுனீங்க? ஒரே வீட்டில் இருக்கோம். இதுவரை ஒரு கிஸ் கூட பண்ணினதில்லை! உங்ககூட கடையில் இருந்து பன்னும், பட்டரும்தான் காலி பண்ணுனேன். இப்போ வெளியூர் வந்ததும் இவ்வளவு பேச்சு! ம்!” என்றாள்.
”ஒரு கல்யாணத்தில் பல கல்யாணம் பேசப்படும். அதில் இவங்களுக்கு அப்புறம் சீக்கிரமா முடியப்போறது நம்ம மேரேஜ்தான்.” என்றான் தீர்க்கமாக. அவன் குரலே சொன்னது ’இவன் அடுத்த மாதமே திருமணத்தை நடத்திவிடுவான்!’ என்று.
தன் திருமணத்திற்கு காலம் தாழ்த்துவார்கள் என்பதில் எப்போதும் அதை ஜாலியாக லாவண்யா பேசுவதுதான். இப்போது தனபாலின் குரலில் இருந்த மாற்றத்தில் இயல்பாகவே உள்ளுக்குள் ஏதோ மனம் படப்படப்பாக, ”நான் மானஸாகிட்ட போறேன்!” என்றுவிட்டு அங்கு போனாள்.
”நீ சோக கீதம் வாசிப்பன்னு நினைச்சேன். என்ன என் பக்கமே வரல?” என்று மானஸா புன்னகைக்க,
”மான்ஸே! நீதானா இது? ஸ்மைலிங் பேஸ். என்னங்கடா ஆளாளுக்கு ஷாக் குடுக்குறீங்க?” என்று புலம்பிவிட்டு,
“நம்ம ஆளு பக்கத்தில இல்லாதப்பதான் மத்தவங்களை சைட் அடிக்கிறது. பக்கத்தில் இருந்தா…………….” என்று இழுக்க,
”இருந்தா?” என்று மானஸாவும் இழுக்க,
“இருந்தா நம்ம ஆளை நம்மள பார்க்க வைக்கணும். எப்பவும் நம்மளேவா பார்க்குறது?” என்று சொல்லிவிட்டு ’தனபால் பார்க்கிறானா?’ என்று பார்க்கவென பின்னால் திரும்ப,
“லாவண்டர்! என்ன பேச்சு பேசுற!” என்று பின்னால் வந்து நின்றார் விடுதி வார்டன்.
சிலபேச்சிற்கு பின் அவர் சேரில் அமரப்போக,
”மான்ஸே! எப்படியும் வார்டன் ஆன ஷாக்குக்கு நைட் மந்திரிக்க வேண்டியது இருக்குமோ?” என்றாள் லாவண்யா.
“பாவம்! அவங்களையும் ஓடவிடுற. சரி கடைசிவரை உன் சைட் சரித்திரம் நம்ம சாருக்கு தெரியாமலே போயிடுச்சே!” என்ற மானஸாவின் கேள்வியில்,
”அய்யய்ய! மேரேஜே முடியப்போது இன்னுமா சாரு மோருன்னுட்டு இருக்க?” என்றவள் “என் சைட் சரித்திரம் முடிஞ்ச துக்குத்தை நைட் ஒரு சர்பத் இராவா அடிச்சி முடிச்சிக்குறேன்!” என்றாள். 
பேச்சு பேச்சாக இருந்தாலும் மந்திரங்கள் ஓத, அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஒரு நல்ல நேரத்தில் மானஸாவின் கழுத்தில் தாலி கட்டினான் ரமேஷ். கையைப் பிடித்து சுற்றிய சுற்றுக்களிலும் அவளின் விரல்களை இறுகப் பற்றியிருந்தான்.
——————————————————
மாலை மாற்றும் போதும் அவளுக்குதான் ரமேஷின் உயரம் எட்டவில்லை. இரண்டுமுறை முயற்சித்துவிட்டு “கொஞ்சம் குனிங்க. இல்ல நான் உயரமா குதிச்சி போட வேண்டிய இருக்கும். அப்புறம் அடக்கமில்லைன்னு பேச்சு வந்திடாம!” என்று முனங்க,
”வந்தா பேஸிக்காவே என் வொய்ப்க்கு அது இல்லைன்னு சொல்லிக்கிறேன்!” என்று குனிந்து ரமேஷ் சிரிக்க, எளிதாக மாலையை போட்டு, “தேங்க்யூ!” என்றாள்.
அனைத்து சடங்குகளும் முடித்து கிப்ட் தரவென முதல் ஆட்களாக விஜய்யும், ஆனந்தும் வந்து ரமேஷிற்கு கையை மட்டும் கொடுத்தனர்.
“என்னடா!” என்று ரமேஷ் முழிக்க,
“நான் தங்கச்சியவே உனக்கு கொடுத்துருக்கேன். கிப்ட் ஒரு கேடா?” என்று விஜய் கேட்க,
“நானெல்லாம் பல வருஷமா உனக்கு ப்ரெண்டா இருக்கேன். கை குடுக்குறதே பெரிய விஷயம்டா” என்றான் ஆனந்த்.
அந்த பக்கம் லாவண்யா பெரிய பார்சலாக மானஸாவிற்கு தந்துவிட்டு போக,
“கேவலப்படுத்துருறீங்கடா! ப்ரெண்ஸாடா நீங்க?” என்று சிரித்தான் ரமேஷ்.
இவர்களும் சேர்ந்து சிரித்துவிட்டு ”ஈவினிங் பங்ஷனுக்கு கோட், ஷர்ட் இல்ல. இதே மாதிரி வேஷ்டி சட்டைதான் நம்ம எல்லாருக்கும். பாஸ்கருக்கு முதற்கொண்டு எடுத்தாச்சு” என்று ஆனந்த் சொல்ல,
“என்ன இது புதுசா?” என்றார் ரமேஷின் தந்தை.
“இல்ல! தினமும் அதுதான் போடுறோம். ஒரு சேஞ்சுக்கு இப்படி இருக்கட்டும்னு” என்று ஆனந்த் சொல்ல,
“சரிப்பா!” என்று அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
அவர் நகர்ந்ததும் “ஏன் நண்பா! ஈவினிங் எல்லாம் முடிஞ்சதும் நைட் பர்ஸ்ட் நைட்தான?” என்று ரமேஷ் புன்னகைக்க,
இருவரும் மானஸா வேறு பக்கம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “அய்ய! நீ பேசுடா! விடிஞ்சதும் நாங்க வந்து உன்னை எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்க்கலாம்னு பார்க்குறோம்” என்று ஆனந்த் சொல்ல,
“அடி எதுவும் வாங்குனனா சொல்லுடா! மொழி ஹாஸ்பிட்டல்லேயே சேர்த்திடலாம்.” என்றான் விஜய்.
அன்றையை தினத்தின் ஒவ்வொன்றிற்கும் ’என்ன செய்ய வேண்டும்?’ என்று மொழியும், மித்ராவும் மீனாட்சியிடம் கேட்டுக் கேட்டு செய்தனர். மொத்தத்தில் மானஸாவின் சொந்தங்கள் குறைவு என்பது அங்கு தெரியவே இல்லை.
இறுதியாக யோகேஷும் தமிழும் வர, தமிழின் கையைப் பிடித்து “மச்சான்! ரொம்ப நன்றி” என்றான் ரமேஷ்.
”இதுக்கேவா? நாளைக்கும் நாங்க விஜய்சார் வீட்ல தான் இருக்கப்போறோம். எங்களோடதான் நீங்க தஞ்சாவூர் வரப்போறீங்க நாளைக்கி!” என்றான் யோகேஷ்.
தமிழ் ஒரு காரின் சாவியைத் தர, “என்னண்ணே இது?” என்றாள் மானஸா.
“ஒன்னுமில்லைமா! என்றுவிட்டு “இது நீ வாங்கணும்னு ஆசைப்பட்ட கார்” என்றான்.
இவள் ’பணத்துக்கு?’ என்று முழிக்க, 
“உன் காசுதான். வீட்ல கொடுத்த காசை வைச்சு அம்மாதான் வாங்க சொன்னாங்க!” என்றான். 
இவள் தன் அம்மாவை கண்களால் தேட, 
மொழி அருகில் வந்து ”நான்தான் சொன்னேன் உனக்கு கார் வேணும்னு” என்று சொல்ல,
”இருந்தாலும் இவ்வளவு பணம்?” என்று அவள் முழிக்க,
“இப்போ என்ன? எல்லாம் சொன்னாதான் வாங்குவியா? நாங்க, தமிழ் அப்புறம் உன் பணம் எல்லாம் சேர்ந்துதான் இந்த கார். யோசிக்காம வாங்கு!” என்றாள். 
மித்ரா குழந்தையோடு அருகில் வர “மானஸா! ஒரு தென்றல் புயலாகி வருது. அவ வந்து என்னை கண்ணை உருட்டி முழிக்கிறதுக்குள்ள வாங்கிடு” என்று தமிழ் சொல்ல, 
“சரி!” என்று வாங்கினாள்.
”சார் மொத்தமா நில்லுங்க!” என்று வீடியோ எடுத்தவன் சொல்ல,
விஜய், மொழி, ஆது என்று அவன் குடும்பம், ஆனந்த் குடும்பம், தமிழின் குடும்பம், யோகேஷ் என்று இருக்க, மானஸா செல்லாமாளையும் அழைத்தாள். மொத்தத்தில் ’இவங்களை குரூப் போட்டோக்கு நிற்க சொன்னது தப்போ?’ என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான் புகைப்படம் எடுப்பவன்.
“மச்சான் இப்போ மட்டும் நம்ம கல்யாணத்துக்கு போட்டோ எடுத்தானே, அவன் இருந்துருக்கனும். தலை சுத்தியே விழுந்துருப்பான்ல!” என்றான் தமிழ். அதில் அனைவரும் புன்னகைக்க, ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது.
அனைத்தும் நிறைவாக முடிந்து, மாலை நேரவிருந்தும் முடிந்து, இப்போது காத்திருந்த அறைக்குள் ஒவ்வொரு நொடியும் யுகங்களாகக் கழிந்தன ரமேஷிற்கு. 
இன்றைய இரவு திருமணமான எல்லோரும் கடப்பதுதான். ஆனால் அது மனதின் தேடலாகவோ, உடலின் தேவையாக இருப்பதைவிட, நிச்சயம் ஒரு பிரேதப்பரிசோதனையாக இருந்துவிடக்கூடாது என்பதில் ரமேஷ் தெளிவாக இருந்தான். 
”விதி செய்யும் மாயம்! மாயாவி அவனோ? அவளோ?”
”ஏய் என் தலைகேறுற,
பொன் தடம் போடுற,
என் உயிராடுற,
என்னடி மாயாவி நீ?”(பாடல் வரிகள்)

Advertisement