Advertisement

அத்தியாயம் ஒன்பது:

வைதேகியின் வீடு வந்த போது ராமின் மனம் உல்லாசமாக இருந்தது. பின்னே அவனின் மனைவி காஞ்சிபுரத்தில் ஆரம்பித்து சென்னை வரையிலும் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டே வந்தாளே.

அவன் மனம் மட்டுமே உல்லாசத்தில் மிதந்தது. அதற்கு நேர் மாறாக வைதேகி ஏக கடுப்பில் இருந்தாள். அவன்  இடுப்பை கட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு கொஞ்சமும் ரசிக்கவில்லை. மிகுந்த கோபத்தில் இருந்தாள். வீட்டிற்கு வந்ததுமே அதை தன் தந்தையிடம் காண்பித்தாள். அவரை வரவேற்க கூட விடவில்லை.

“வா ராம்”, என்று அவர் ஆரம்பிக்கும் போதே.

“ஏன் அப்பா இப்படி செஞ்சீங்க. ஒரு கார் கூட அனுப்பி வைக்கலை. அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா”, என்றாள் ராம் இருப்பதையும் பொருட்படுத்தாமல்.

ராமிற்கு மனதில் இருந்த உல்லாசம் எல்லாம் வடிந்து முகம் சுருங்கி விட்டது. இளகிக்கொண்டிருந்த இதயம் சட்டென்று கடினமாகியது.

“அதும்மா டிரைவர் ரொம்ப நேரம் கழிச்சு என்னை கொண்டு வந்து விட்டதால அவனுக்கு சரியான தூக்கம் இருக்காது. ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு அனுப்பலை”,

“என்ன அப்பா இப்படி பண்ணிடீங்க. வேற யாராவது ஆள் பார்க்க வேண்டியது தானே”, என்று அவரிடம் கத்தினாள் வைதேகி. “என்னை பைக்லயே கூட்டிட்டு வந்தாங்க விழுந்துடுவனோன்னு எவ்வளவு பயந்துட்டே வந்தேன் தெரியுமா. அவ்வளவு வேகமா வந்தாங்க”, என்றாள்.

ராம் மிகவும் அவமானமாக உணர்ந்தான். பைக்கில் சௌகர்யமாக தானே வந்தாள். அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள் என்றிருந்தது. இவள் ஸ்கூட்டி ஓட்டுகிறாள் தானே அப்புறமும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்றிருந்தது. உள்ளுக்குள் அவள் மேல் கோபம் கனன்றது. 

அவரிடம் சண்டையிட்டவள் வேகமாக அவளுடைய ரூமிற்குள் போய் புகுந்து கொண்டாள்.

சுவாமிநாதன் மிகவும் சங்கடமாக உணர்ந்தார். ராமிடம் என்ன கூறுவது என்றே தெரியவில்லை

“ரொம்ப செல்லமா வளர்ந்துட்டா அதான். அவங்கம்மா செல்லம் அதிகம் அதான் இப்படி.”, என்றார் ராமை பார்த்து தடுமாறியபடி சங்கடமாக சொன்னார். “நான் சொன்னா கேட்கற மாதிரி இருந்தா சொல்லிடுவேன். ஆனா அவங்கம்மா கூட ரொம்ப ஒட்டுதல். என்கிட்ட அந்தளவு இல்லை. கொஞ்சம் எனக்காக பொறுத்துக்கோ ராம்”, என்றார் உணர்ச்சி மிக்க குரலில்.

அவர் உணர்ச்சி வசப்படுவதை காண சகியாமல். “அவ எப்படி இருந்தாலும் நான் பொருத்துக்குவேன். நீங்க கவலைபடாதீங்க நான் அவளை பார்த்துக்குவேன்”, என்றான் உறுதியான குரலில்.   

மனம் நெகிழ்ந்தார் சுவாமிநாதன். தான் சரியான துணையை தான் வைதேகிக்கு தேர்ந்தெடுதிருக்கிறோம் என்று.

உணர்ச்சிமிக்க தருணம் அது. இருவருமே அமைதியாகி விட்டார்கள். வைதேகி நடந்து கொண்டது சற்றும் மரியாதையில்லை என்று இருவருக்குமே புரிந்தது.

“நீ உட்காரு ராம்”, என்று அவனை உபசரித்தவர். “நான் இதோ வந்துடறேன்”, என்று வைதேகியை பார்க்க போனார்.

“என்ன வைதேகி ராம் இருக்கிறதை கூட பொருட்படுத்தாம இப்படி பேசற”, என்று அவளை கடிந்தார்.

“பின்ன பயந்துட்டே வந்தது. எனக்கு தானே தெரியும்”,

“ஒரு ரெண்டு தடவை பைக்ல உட்கார்ந்தா சரியாகிடுது. அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா”, என்று கடிந்தார்.

பதில் எதுவும் பேசாமல். “நான் அப்படித்தான்”, என்பது போல ஒரு பார்வை பார்த்தால் வைதேகி.

“ராம் வெளிய இருக்காருல்ல. நீ இப்படி வந்து உட்கார்ந்துகிட்டா மரியாதையாவா இருக்கு. ரெண்டு பெரும் ரொம்ப தூரம் பைக்ல வந்தது. போ போயி அவருக்கு ஏதாவது குடிக்க குடுத்துட்டு. நீயும் சாப்பிடு”, என்றார் கனிவாக.

அவரின் சொல் தட்ட முடியாமல் முறைப்பாக எழுந்து போனாள். அதே முறைப்போடு ராமிடம் போய், “என்ன சாப்பிடுறீங்க”, என்றாள்

ராமிற்கு பதில் சொல்லவே இஷ்டமில்லை. அவள் பின்னாலயே சுவாமிநாதன் வருவதை பார்த்தவன் பதில் சொல்லும் அவசியத்தை உணர்ந்து, “காபி”, என்றான்.

மிகுந்த கோபத்தில் இருந்தான் ராம். அவன் இறுகிய முகம் பார்த்தே அதை உணர்ந்தாள் வைதேகி. இருந்தாலும் அது ஒன்றும் அவளை பாதிக்கவில்லை. “உனக்கு கோபம் வந்தா எனக்கு என்ன”, என்பது போல பார்த்தாள். அது இன்னும் ராமின் கோபத்தை அதிகரித்தது.

அதே அலட்சியத்தோடு சென்று சமையல்கார அம்மாவிடம் காபியை கலக்க சொல்லி வாங்கி வந்தாள்.

சுவாமிநாதன் அங்கே இல்லை. அதை பார்த்த ராம். அவள்காபியை  நீட்ட. ராமும் அவள் அலட்சியத்திற்கு சற்றும் குறையாமல், “வெச்சிட்டு போ”, என்றான்.

“என்ன திமிர்! இவனுக்கு காபியை நீட்டுனா வாங்க மாட்டானா. நான் என்ன இவனுக்கு வேலைக்காரியா. வெச்சிட்டு போ அப்படின்றான்”, என்று மனதிற்குள்ளேயே அவனுக்கு அர்ச்சனை செய்தாள் வைதேகி.

“வெச்சிட்டு போ”, என்று சொன்னவன், பிறகு பொறிய ஆரம்பித்தான். “ஆமா, ஒரு சின்ன விஷயத்திற்கு எதுக்கு நீ இப்படி ஒரு சீன போட்ட. ஏன் கார் இல்லாம மகாராணி எங்கயும் வரமாட்டீங்களோ. பைக்ல போறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா. நான் என்னவோ உன்னை நடக்க வச்சி கூட்டிட்டு வந்த மாதிரி அந்த அலப்பறை பண்ற”, என்றான் காட்டமாக.

அதே காட்டதிற்கு சற்றும் குறையாமல் பதிலளித்தாள்  வைதேகி. “மத்தவங்க மனுஷங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது. நான் இப்படிதான் இப்படிதான் இருப்பேன். கல்யாணத்துக்கு முன்னாடியே நமக்கு சரிவராதுன்னு தெளிவா தானே சொன்னேன். இன்னைக்கு வந்து பைக்ல போறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையான்னா என்ன அர்த்தம்”, என்று பதிலுக்கு அவனிடம் எகிறினாள்.

தன் தாய் இருந்தாள் இந்த திருமணம் நடந்திருக்குமா என்ற உணர்வு அவளுள் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. ஆனால் வாய்விட்டு சொல்லவில்லை.

வாயடைத்து போய் பார்த்தான் ராம். கொஞ்சமும் அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் எப்படி பேசுகிறாள் என்றிருந்தது.

“நான் இப்படித்தான்”, என்று நேர் பார்வை பார்த்தாள் வைதேகி. நிறைய திமிர் கலந்திருந்தது அந்த பார்வையில்.

மேலும் பேசினாள். “என்னை மாத்த எல்லாம் முயற்சி பண்ண வேண்டாம். நான் இப்படித்தான் இருப்பேன். உங்களை கல்யாணம் பண்ணினதே எங்கப்பாவோட வார்த்தையை தட்ட முடியாம தான். மத்தவங்க முன்னாடி கொஞ்சம் இணக்கமா நடந்துக்கறதால நமக்குள்ள எல்லாம் சரி வந்துடும்னு நினைக்காதீங்க”, என்று பொறிந்தாள்.

“எங்கப்பா இருக்கிற காலம் வரைக்கும் அவருக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்க தான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன். அது கூட அவருக்காக இல்லை எங்கம்மாவுக்காக”, என்றாள் அடக்க பட்ட கோபத்தை காட்டி.

“நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிடதுக்காக எதுவும் மாத்த தயாரா இல்லை. ஏன் நீங்க உங்க பைக் ரைட் கூட விட தயாரா இல்லை. ஆனா நான் மட்டும் உங்களை கல்யாணம் பண்ணின உடனே நான் இத்தனை வருஷமா இருந்ததெல்லாம் மாத்திக்கணும். இல்லைனா நீங்க மனுஷங்களா கேட்பீங்க. உங்களை கல்யாணம் பண்ணின உடனே நான் இத்தனை வருஷமா இருந்த வசதி வாய்பெல்லாம் விட்டுடனும். ஏன் அப்படி? எதுக்கு நான் என்னை மாத்திக்கணும்”, என்றாள் ஆவேசமாக.

“நான் மாற மாட்டேன். முடிஞ்சா நீங்க மாறிக்கங்க”, என்றாள் முடிவாக.

இவ்வளவு திமிரான பெண்ணை ராம் எதிர்பார்க்கவில்லை. வைதேகியை சற்று குறைவாக மதிப்பிட்டு விட்டான். திருமணம் ஆகினால் எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டான்.     

அதற்கு மேல் அவனுக்கு அவளிடம் பேசவே பிடிக்கவில்லை. அமைதியாக அமர்ந்து விட்டான். காபியின் கசப்பு சுவை அவளின் பேச்சால் இன்னும் கசப்பாக தெரிந்தது.

எனக்கும் இவளுக்குமான வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கேள்வி மீண்டும் வந்து தாக்கியது.

அதை பற்றியெல்லாம் சற்றும் கவலைப்பட்டதாக வைதேகி தெரியவில்லை. அவனிடம் பேசிவிட்டு மீண்டும் ரூமிற்குள் போய் புகுந்து கொண்டாள்.

அங்கே வந்த சுவாமிநாதன் தான் ராமிடம் பேச விழைந்தார். “இவரில்லாவிட்டால் நானும், என் தம்பி, தங்கையும் நடுத்தெருவில் நின்றிருப்போம். இவருக்காக பொருத்துக்கொள்கிறேன்”, என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

ஹாலில் பேசாமல் தன்னுடைய ரூமிற்கு அழைத்து போனார் ராமை.

இவர் எதற்கு ரூமிற்கு அழைத்து வந்திருக்கிறார் என்று புரியாமல் பார்த்தான் ராம்.     

 தனது சொத்து விவரங்கள் அனைத்தும் ராமிடம் சொல்ல ஆரம்பித்தார் சுவாமிநாதன்.

“இவரின் பெண் இருக்கும் இருப்பிற்கு இது வேறா”, என்று நொந்தவன். “எதுக்கு மாமா இப்போ சொல்றீங்க”, என்று ராம் ஆட்சேபித்தான்.

“இல்லை ராம் ஏற்கனவே எனக்கு ஒரு அட்டாக் வந்துடுச்சு. அதுவும் ரொம்ப சீரியஸ். நாலு இடத்துல பிளாக் இருக்கு சர்ஜெரி பண்ணனும்னு சொல்லிட்டு இருக்காங்க. உனக்கே தெரிஞ்சது தான். உங்க கல்யாணம் முடியட்டும்னு தான் பார்த்தேன்.”,

“நானே கேட்கணும்னு இருந்தேன் மாமா எப்போ ஹாஸ்பிடல் போகலாம்”,

“போகலாம் ராம் போகலாம்”, என்றார் அசிரத்தையாக.

“இல்லை மாமா, நான் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன். மறுப்பு சொல்லாதீங்க”,

“சரி ராம்”, என்றவர். “நான் ஆரம்பிச்சதை முடிச்சிடறேன்”, என்று விவரங்களை சொல்ல ஆரம்பித்தார். அவர் சொல்ல சொல்ல அவன் நினைத்ததைவிட அவருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்தது.

எங்கே நிலபுலன் வாங்கிப்போட்டிருகிறார். எங்கெங்கே வீடு வாடகைக்கு விட்டிருக்கிறார். பேங்கில் எவ்வளவு டெபாசிட் செய்திருக்கிறார் என்று.  எல்லா விவரமும் சொன்னார். 

நிச்சயம் சில கோடிகள் தேறும். அவர்களின் வாழ்க்கை முறையை வைத்து அவர் பணக்காரர் என்று தெரியும் தான் ஆனால் இந்தளவு பணக்காரர் என்று ராமிற்கே தெரியவில்லை.

ராம் நன்றாக சம்பாதித்தாலும் அவருடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை தான். ராமிற்கு ஆச்சர்யமாக இருந்தது தன்னை ஏன் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார் என்று. இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் எல்லாம் வைதேகி பெயரிலேயே இருந்தது. சுவாமிநாதன் பெயரில் பேங்கில் சில லட்சங்கள் மட்டுமே இருந்தது. எல்லா சொத்துக்களும் வைதேகி பெயரிலேயே இருந்தது அவர்கள் இருந்த வீடு உட்பட.

அவனின் ஆச்சர்யமான முகத்தை பார்த்தவர். “என் பொண்ணு பொறந்ததுக்கு அப்புறம் தான் இவ்வளவு சொத்து ராம். அதனால எல்லாமே அவ பேர்ல தான் இருக்கு”, என்றார்.

“அவளுக்கு தெரியுமா”,

“அவளுக்கு அவ பேர்ல வாங்கறோம்னு விவரம் தெரியும். ஆனா என்ன ஏதுன்னு கண்டுக்க மாட்டா. பண விவரமோ சொத்து விவரமோ சரியா தெரியாது அவளுக்கு. அவளுக்கு அவ்வளவா இந்த மாதிரி சொத்து விஷயத்துல ஆர்வம் கிடையாது. அதுதான் ராம் உன்கிட்ட  எல்லா விவரமும் சொல்றேன். இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்”.

மனதிற்குள்ளேயே வியந்தான். “என்ன அவளுக்கு சொத்தின் மேல் அவ்வளவு ஆர்வம் கிடையாதா என்று. என்ன சொல்ல! இருக்கும் மகராசி அதான் அப்படி இருப்பாள். இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை பெருமை தெரியும்”, என்று தோன்றியது.

பின்பும் தன் தொழில், கொடுக்கல், வாங்கல் எல்லாவற்றையும் பற்றி பேசினார். இனி தனக்கு தொழில் செய்யும் உத்தேசம் இல்லை. “இந்த தொழிலையும் சேர்த்து நீயே பார்த்துகொள்”, என்றார் உணர்ச்சி வசப்பட்டு.

“ஏன் மாமா இன்னைக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்டுறீங்க. உடம்பு கெட்டுட போகுது. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். நீங்க எந்த கவலையும் படாதீங்க”, என்றான்.

அவர் சொல்லியதோடு மட்டுமல்லாது எல்லா பத்திரங்களையும் மற்ற தஸ்தாவேஜுகளையும் அவனிடம் கொடுத்தார்.

சும்மாவே இவரின் மகள் சாமியாடுகிறாள். இன்னும் இதை வேறு வாங்கி விட்டால் அவ்வளவு தான் என்று நினைத்தவன். “இப்போ எதுக்கு மாமா இதெல்லாம். உங்ககிட்டயே இருக்கட்டும்”, என்றான்

அவர் கேட்கவில்லை, “இல்லை ராம்! உன்கிட்டயே இருக்கட்டும்”, என்றார்.

“இல்லை மாமா! இது சரியில்லை! உங்க பொண்ணுகிட்ட யாவது குடுங்க”, என்று வற்புறுத்தினான்.

“சரி ராம் உனக்காக அவகிட்ட விவரம் சொல்லிடறேன். இத்தனை சொத்துக்களை பார்க்கிற அளவுக்கு அவளுக்கு விவரம் பத்தாது. நீயே பார்த்துக்கோ”, என்றவர். “என்ன நீயே பார்த்துக்கோ!  நீதான் பார்த்துக்கணும்!”, என்றார் கட்டளை இடுவது போல.

இவரின் பொண்ணுக்கா விவரம் பத்தாது. என்னையே அந்த மிரட்டு மிரட்டுகிறாள். அவரை எப்படி மறுத்து பேசுவது என்று புரியாமல் தவித்தான்.

“நான் போய் வைதேகிக்கிட்ட சொல்லிட்டு வர்றேன்”, என்றார்

சும்மாவே அவள் அந்த ஆட்டம் ஆடுகிறாள் இனி என்ன என்ன பிரச்சனைகள் பண்ணப் போகிறாளோ என்று பயந்தான்.

அவன் பயத்திற்கு தகுந்த மாதிரி வைதேகி அவளின் தந்தையிடம் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

“இப்போவே எதுக்கு அப்பா சொத்தெல்லாம் கொடுக்கறீங்க”,

“என் பெரிய சொத்தே நீதானேம்மா. உன்னையே நம்பி கொடுத்துட்டேன். அதைவிடவா இந்த சொத்து பெருசு”, என்றார்.

“அப்பா என்னப்பா? இப்படி முட்டாள் தனமா பேசறீங்க. இந்த காலத்துல நீங்க என்னையே நம்பறதுக்கு யோசிக்கனும்னு நான் சொல்லுவேன். நீங்க என்னன்னா நேத்து கல்யாணம் பண்ணினா மாப்பிள்ளையை நம்பி இவ்வளவு சொத்தையும் தூக்கி  அசால்டா குடுக்கறீங்க”, என்றாள்.

“என்னால இனிமே இதை நிர்வகிக்க முடியாதும்மா. இதை நிர்வகிக்கவும் ஆள் வேணும் இல்லையாமா. வாடகை வசூளிக்கணும் காம்ப்ளெக்ஸ் மெயின்டெயின் பண்ணனும். நீ சின்ன பொண்ணு மா. அங்கேயெல்லாம் போயி அந்த ஆளுங்க கூட பேசி உன்னால சமாளிக்க முடியாதும்மா. எனக்கு உடம்பு கெட்ட இந்த ஒரு மாசமாவே அவனுங்க வாடகையை சரியா கொடுக்கலை. என்னாலயும் அலைய முடியாது. இல்லையின்னா உன்கிட்ட குடுக்காம எதுக்கு ராம்கிட்ட கொடுக்கப்போறேன்.”,

“சரிப்பா பார்த்துக்கற வேலையை மட்டும் வேணா அவர்கிட்ட விடுங்க. அதுக்காக சொத்து பத்திரங்களை எல்லாம் ஏன் தூக்கி கொடுக்கறீங்க”,

“எல்லாம் உன்னோடது தானேம்மா. நீங்க என்ன என்னை விட்டுடவா போறீங்க”,

“அப்பா என்னப்பா புரியாம பேசறீங்க. எல்லாம் அவர் பார்த்துக்குவார். உங்களையும் நாங்க விடமாட்டோம். நான் இங்க தானே இருக்க போறேன். எல்லாம் இங்கயே இருக்கட்டும்”,

“அங்கிருந்தும் நீ காலேஜ் போகலாமே மா”,

“அப்பா”, என்று கத்தினாள் வைதேகி.

“நான் முதல்லயே உங்ககிட்ட இது பத்தி பேசிட்டேன். உங்களை விட்டு போகமாட்டேன்னு. இல்லையின்னா நீங்க என்ன சொல்லியிருந்தாலும் நான் இவரை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். அப்புறம் ஒரேடியா அங்க போகமாட்டேன்னு சொல்லிடுவேன்.”, என்று மிரட்டினாள்.

சுவாமிநாதன் பயந்தே விட்டார். “நேற்று தான் திருமணம் ஆகியிருக்கிறது. இன்று என்ன வார்த்தை பேசுகிறாள்”, என்று.

“இப்படி அபசகுனமா எல்லாம் பேசாதம்மா”, என்றார் அவளின் பேச்சில் கவலைக்குள்ளானவறாக.

“அப்போ நான் சொல்றதை கேளுங்க. பொறுப்பை மட்டும் அவர்கிட்ட குடுங்க. மற்றபடி கணக்கு வழக்கு பேப்பர்ஸ் எல்லாம் உங்ககிட்டயே இருக்கட்டும்”, என்றாள் இறுதியாக.

“நான் ராம்கிட்ட சொல்லிட்டனேம்மா”,

“அவர் என்ன சொன்னாரு வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாறா”,

“இல்லை நான் பார்த்துக்கறது பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு. மற்றபடி எல்லாமே உங்கிட்ட கொடுக்க சொன்னார்”,

“நான் அவர்கிட்டயே பேசறேன் வாங்க”, என்று அவரை கூட்டிக்கொண்டு ராம் இருக்கும் ஹாலிற்கு போனாள்.

“அப்பா”, என்று அவள் ஆரம்பிக்கும் போதே.

இவள் தேவையில்லாதது எதையாவது பேசிவைக்கபோகிறாள் என்று நினைத்த ராம். “நான் வேண்டாம்னு சொல்றேன். அவர் புரிஞ்சிக்க மாட்டேங்கறார்”, என்றான்.

“அப்பாக்கு இதையெல்லாம் பார்த்துக்க முடியாதுன்னு சொல்றார். முடிஞ்சா நீங்க பார்த்துக்கோங்க. மற்றபடி கணக்கு வழக்கெல்லாம் அப்பாவே பார்துக்கட்டும்”, என்றாள் அவளின் முடிவு அதுதான் என்பது போல.

அந்த யோசனை ராமிற்கும் சரியாகவே பட்டது. “வைதேகி சொல்றதும் சரிதான் மாமா. நான் என்ன செய்யனும்னு மட்டும் நீங்க சொல்லுங்க. செய்யறேன். மற்றபடி கணக்கு வழக்கெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க”, என்று பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தான். 

சுவாமிநாதனும் இருவரும் ஒரே மாதிரியாக சொல்ல. “சரி கொஞ்ச நாளைக்கு இவர்கள் சொல்படி கேட்போம்”, என்று முடிவெடுத்தவறாக. “சரி என்ன செய்யனும்னு விவரம் மட்டும் கேட்டுக்கோ ராம்”, என்று விவரத்தை மட்டும் அவனிடம் சொல்ல முற்பட்டார்.

எனக்கு இது அவசியமில்லை என்பது போல ரூமின் உள்ளே அடைந்து கொண்டாள் வைதேகி.

அதற்கு விடாதவறாக, “வைதேகி”, என்று சிறிது நேரத்திலேயே அவளை அழைத்த சுவாமிநாதன். “உள்ள அந்தம்மா என்ன சமையல் பண்ணுதுன்னு பாரு வைதேகி”, என்றனுப்பினார்.         

“இந்த அப்பா ஏன் புதுசு புதுசா எல்லாம் பண்ணுறார்”, என்று முனகிக்கொண்டே உள்ளே சென்றாள் வைதேகி.

பின்பு விருந்தின் போதும். “ராமை கவனிம்மா, கவனிம்மா”, என்று இரண்டு மூன்று முறையாவது சொல்லியிருப்பார் சுவாமிநாதன். எரிச்சலானால் வைதேகி. “நான் இப்போ சாப்பிடறதா வேண்டாமா”, என்று எழுந்து போய்விடலாம் என்று நினைத்தாள். ஆனால் அது அநாகரீகத்தின் உச்சம் என்றுணர்ந்தவள் பொறுமையை முயன்று வரவழைத்து அமைதி காத்தாள்.

விருந்தும் பலம் தான். உண்டவுடனே சற்று ஓய்வெடுத்தால் தேவலை என்பது போல ராம் உணர்ந்தான். அதை சுவாமிநாதனும் உணர்ந்தாரோ என்னவோ. 

சாப்பிட்டவுடன். “போம்மா! ராமை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ! ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. சாயந்தரம் மறுபடியும் ஊருக்கு கிளம்பனும் இல்லையா”, என்றார்.

வேறு வழியில்லாமல், “வாங்க”, என்று ராமை அவளின் ரூமிற்கு அழைக்க. அதைவிட வேண்டா வெறுப்பாக ராம் கிளம்பி சென்றான்.

ரூம் உள்ளே நுழைந்தவுடனேயே ஏ.சி யின் குளிர் அவனை தாக்கியது. பகலிலேயே ஏ.சி யா என்று தோன்றியது. அவளின் ரூமை பார்த்தவனுக்கு மனம் அவனின் ரூமோடு தன்னாலேயே ஒப்பிட்டது. தன்னுடைய ஒட்டு வீட்டு ரூமிற்க்கும் அவளுடைய அல்ட்ரா மாடர்ன் ரூமிற்க்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்று அவனுக்கு புரிந்தது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இன்றைய நிலைமையில் கோடீஸ்வரி அவள்.

தான்.? அது தான் அவள் பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று அத்தனை முறை சொல்லியிருப்பாள் போல. 

அவளுக்கு இருக்கும் வசதிக்கு தான் அவளுக்கு சற்றும் பொறுத்தமில்லாதது போல இப்போது அவன் உணர்ந்தான். அவரின் வீட்டிற்கு அவன் முன்னமே வந்திருக்கிறான் தான். இந்த வீடு மட்டும் தான் அவருடையது என்று நினைத்திருந்தான்.

இத்தனை சொத்து பத்துக்கள் இருக்கும். அவள் தங்களின் வீட்டோடு பொருந்தி வரமாட்டாள் என்று தெரிந்திருந்தால் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. சுவாமிநாதன் மாமாவுக்காக பார்த்தது தவறோ என்று தோன்றியது.

நேற்று அவள் எப்படி அவனுடைய ரூமில் இந்த ஏ.சி எல்லாம் இல்லாமல் தூங்கினாள் என்றிருந்தது.

அவன் அவனின் யோசனைகளிலேயே உளன்றிருக்க. “தூங்கறீங்களா”, என்றாள் கடமையாக.

“இல்லை”, என்பது போல தலையாட்டினான்.

அவளுக்கு அவளின் ரூமில் கொஞ்சம் வேலைகள் இருந்தது. இருந்தாலும் ராம் அங்கே உட்கார்ந்திருக்கும் போது அதை செய்ய இஷ்டமில்லை.

ராம் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தான். அவளுடைய ரூமில் இருந்த டி வீ யை அவனுக்காக போட்டுவிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவனுக்கு அந்த அறையில் மூச்சு முட்டியது.  உண்மையை சொன்னால் இப்போதைக்கு அவளுடைய செல்வ செழிப்பும், திமிரும், தெனாவெட்டும், நிறைய அவனுக்கு பயத்தை கொடுத்தன.

எப்படி போகுமோ தன் வாழ்க்கை என்றிருந்தது. அவள் தன்னுடன் மனமொன்றி வாழ்வது என்பது சந்தேகமே என்பது போல தோன்றியது.

இப்படியே உட்கார்ந்திருப்பதா இல்லை எழுந்து போவதா என்று அவனுக்கு தெரியவில்லை. வேறு வழி தெரியாமல் அமர்ந்த வாக்கிலேயே கண்மூடினான். 

அப்படியே உறங்கியும் விட்டான். சிறிது நேரம் கழித்து அறைக்குள் வந்த வைதேகிஅவன் உறங்குவதை பார்த்தவள். அவள் முடிக்க வேண்டிய வேலைகளை சத்தம் செய்யாமல் வெகு சீக்கிரம் முடித்து மறுபடியும் வெளியே சென்றுவிட்டாள்.        

நான்கு மணிவாக்கில் தான் விழித்தான் ராம். அவன் விழித்து வெளியே வந்தவுடனே சூடாக கேசரியும் பஜ்ஜியும் காபியும் வந்தது.

சுவாமிநாதன் சொல்கேட்டு வைதேகியே எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தாள்.  

 மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் உணவை வீணாக்குவதில் விருப்பம் இல்லாத ராம். சாப்பிட முடியாவிட்டாலும் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினான்.

“அப்பா அடுத்த மாசம் எனக்கு செமஸ்டர் எக்ஸாம் இருக்கு. ரொம்ப நாள் நான் அங்க இருக்க முடியாது. நான் இன்னும் ரெண்டு நாள்ல இங்க வந்துடுவேன்”, என்றாள் தகவலாக ராமிற்கும் சுவாமிநாதனுக்கும்.

இருவருக்குமே அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“ஒரு பத்து நாலாவது அங்க இருந்துட்டு வாம்மா. கல்யாணம் ஆன நாலாவது நாளே வந்தா பார்கறவங்க என்ன சொல்லுவாங்க. நீ காலேஜ் போகணும்னா அங்க இருந்தே போ.”, என்றார். 

“பத்து நாள்ல வந்தா மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா”, என்றாள் பதிலுக்கு.

ராம் எதுவுமே பேசவில்லை. 

தந்தையும் பெண்ணும் வழக்கடித்து கொண்டிருக்க.

தான் இவர்களுக்கு அடிமையாக சிக்கி விட்டேனோ என்ற நினைவு தோன்றுவதை ராமால் தடுக்க முடியவில்லை. இத்தனை நாள் இவர் எனக்கு செய்த உபகாரமெல்லாம் இவர் பெண்ணிடம் தன்னை சிக்க வைப்பதற்கு தானோ என்று தோன்றியது.

தான் அவளிடம் சிக்கி கொண்டதாகவே ராமிற்கு தோன்றியது. சிற்றுண்டி முடிந்து ஊருக்கு கிளம்பும் நேரமும் வர. “காரிலேயே போயிடுங்க ராம்”, என்றார்.

அவர் பேச்சை தட்டவும் முடியவில்லை. அவரின் மகளின் இஷ்டத்திற்கு ஆடுவதா என்றும் இருந்தது. வைதேகியோ காரில் தான் போவேன் பைக் எனக்கு ஆகாது என்றபடி நின்றாள்.

“எனக்கு கொள்முதலுக்கு பைக் வேணும் மாமா. நான் காரில் போயிட்டால் பைக்கை என்ன செய்வது”, என்றான்.

“நீ அதெல்லாம் பாக்காத ராம். உன் பைக் வீட்டுக்கு வரவேண்டியது என்னோட பொறுப்பு. உன் நினைப்பு எனக்கு புரியுது ராம். இருந்தாலும் ரொம்பவும் அவ பேச்சை தட்டுனா நம்மளை மீறிடுவாளோன்னு பயம் கொடுக்குது. எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ராம்”, என்றார்.

அவர் அவ்வளவு கேட்கும் போது. “சரி மாமா”, என்று சொல்வதை தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.

வைதேகியின் இஷ்டப்படி அவர்கள் காரில் திரும்பினர்.  நான் யாருக்காகவும் எதற்காகவும் என்னை மாற்றி கொள்ள மாட்டேன் என்ற உறுதி அவளிடத்தில் இருக்க. ராமின் மனம் முழுவதும் சோர்வே நிறைந்து இருந்தது. சோர்வையும் விட தன் வாழ்க்கையை குறித்த பயம் எழுந்தது.

எதுவும் செய்யமுடியாதவனாகி நின்றான்.

ஒரு சாதாரண பயண விஷயம் அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா. காலையில் தன் மனம் இருந்த இருப்பிற்கும், இப்போது இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நினைத்தான்.

பக்கத்தில் இருந்த வைதேகியை பார்க்க. எதை பற்றியும் கவலைபடாமல் கண்மூடி அமர்ந்திருந்தாள்.       

Advertisement