Advertisement

அத்தியாயம் எட்டு:

விட்டத்தை வெறித்து படுத்திருந்த ராமிற்கு தூக்கம் வருவேனா என்றது. “என்னடா முதலிரவு நம்மை போல எவனும் கொண்டாடியிருக்க மாட்டான்”, என்று தோன்றியது. திரும்பி மனைவியை பார்த்தான் அவள் அசையாமல் அவனுக்கு முதுகை காட்டி படுத்திருந்தாள்.

ஒரு பெண்ணின் அருகாமை அவனுக்கு புதிய உணர்வுகளை கொடுத்தது. இத்தனை நாட்களாக எந்த பெண்ணையும் அதிகமாக சைட் அடித்தது கூட கிடையாது. புதிதாக ஒரு பெண்ணின் அருகாமையில் கைக்கெட்டும் தூரத்தில் படுத்திருப்பது இம்சித்தது. இந்த அழகு தேவதை என் மனைவி என்ற உணர்வை கொடுத்தது.

பின்பு அவள் தன்னை அலட்சியபடுத்தி பேசியது எல்லாம் நினைவிற்கு வந்தது. இவளை பேசவிட்டால் நிறைய பேசுவாள் போல. இவள் பேசுமுன் இனி நாம் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.  

அவள் தன்னிடம் நெருக்கம் காட்டாவிட்டாலும் தான் அவளிடம் சற்று நெருக்கம் காட்ட வேண்டும் இல்லையென்றால் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளி அதிகமாகிவிடும் என்று நினைத்தான். என்ன அவளுக்கு கொஞ்சம் இல்லையில்லை வாய் ரொம்ப அதிகம் போல என்று நினைத்துக்கொண்டான்.    

இப்படியா மனைவியிடம் திட்டு வாங்குவது அதுவும் முதல் தினமே. மனம் “உலகே மாயம் வாழ்வே மாயம்”, என்று பாடியது.

வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான். அது உறக்கம் வராமல் தவித்த வைதேகிக்கு நன்கு தெரிந்தது. இருந்தாலும் அவள் ஆடாமல் அசையாமல் படுத்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் உறக்கம் வருவேனா என்றது. விடியலின் அருகில் தான் இருவரும் உறங்கினர்.

விடியலில் உறங்கினாலும் காலையில் சீக்கிரமாக எழும் பழக்கம் உள்ள வைதேகிக்கு எப்பொழுதும் போல ஐந்தரைக்கு உறக்கம் கலைய கண் விழித்தாள். விழித்தவள் அதிர்ந்தாள். ஏனென்றால் அவளை ஒட்டி ராம் படுத்திருந்தான். இவள் படுத்த இடத்திலேயே தான் இருந்தாள். அவன் தான் உறக்கத்தில் இவள் புறம் உருண்டு வந்து இவளருகில் படுத்திருப்பது புரிந்தது.

வேகமாக நகர்ந்து அவனை ஆராய்ந்தாள். அவன் நல்ல உறக்கத்தில் இருப்பது புரிந்தது. அவன் வேண்டுமென்று செய்திருப்பானோ என்று அவனை ஆராய. அவனோ அழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவளின் ஆராய்ச்சிக்கு ஒரு பதிலையும் அவளால் கண்டறிய முடியவில்லை.

“பரவாயில்லை கையை காலை தூக்கி மேலே போடாமல் விட்டானே”, என்று பெருமூச்சு விட்டாள்.

எழுந்து கொண்டாள். கதவை திறந்து வந்தால் ஹாலிலேயே மனோகர் உறங்குவது தெரிந்தது. வேறு ஆட்கள் வீட்டில் இருந்த மாதிரி தெரியவில்லை. எல்லாரும் அவரவர் வீட்டிற்கு போயிருக்க வேண்டும். தன் தந்தை எங்கே இருப்பார் என்று அவளுக்கு யோசனையாக இருந்தது. வீட்டை சுற்றி பார்வையை ஓட விட்டாள்.

நல்ல பெரிய ஹால். இவர்கள் ரூம் இருந்ததற்கு எதிர் மாதிரி இன்னொரு கதவு இருந்தது. அனேகமாக இன்னொரு ரூமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. பின்னர் இன்னொரு ஹால் மாதிரி இருக்க அதையொட்டி சமையலறை இருந்தது. அதுவும் பெரிதாக தான் இருந்தது.

அவளையறியாமல் தன் வீட்டோடு இந்த வீட்டை ஒப்பிட ஒரு பெருமூச்சு கிளம்பியது.      

இவள் பின்புற கதவை திறந்து பாத்ரூம் போக அப்போது தான் விடிய ஆரம்பித்திருந்தது. வந்தவள் அங்கே இருந்த துணி துவைக்கும் மேடை மீது அமர்ந்து கொண்டாள்.

நேற்று இருட்டில் அவ்வளவாக தெரியவில்லை. இப்போது அந்த வீட்டின் பின்புறம் நன்றாக தெரிந்தது. ஒரு ஓரமாக நிறைய பூ செடிகள் இருந்தன. ஒரு கொய்யா மரமும் நெல்லிக்காய் மரமும் இருந்தது. பூ செடிகளில் நந்தியாவட்டை நன்கு பூத்திருந்தது. செம்பருத்தியும் பூத்திருந்தது. இடமே பார்க்க ரம்மியமாக இருந்தது. தனது மனது இருந்த சஞ்சலத்தில் அந்த செடிகளை எல்லாம் பார்க்கும் போது அமைதியாக உணர்ந்தாள்.

இந்த பாத்ரூம் மட்டும் ரூமுக்கு உள்ளேயே இருந்திருக்கலாம் என்ற நினைப்பை அப்போதும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் எல்லாரும் ஒரே பாத்ரூமை யூஸ் பண்ணிவதா என்றும் இருந்தது.                  

அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டாள். அந்த காலை அவளுடைய மனக்கவலைகளை சற்று மட்டுப்படுத்தியது. 

தன்னை மறந்தவளாக அப்படியே அமர்ந்து விட்டாள். எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ தெரியாது. “குட் மார்னிங் அண்ணி”, என்ற குரல் அவளை இவ்வுலகிற்கு மீட்டது.

அவளுக்கு குட் மார்னிங் வைத்தவள் மாலதி. மாலதியின் மலர்ந்த முக குட் மார்னிங்கை வைதேகியால் ஒதுக்க முடியவில்லை. பதிலுக்கு, “குட்மார்னிங்”, என்றாள்.

“எழுந்து ரொம்ப நேரம் அச்சா அண்ணி”, என்றாள்.

“ஆமாம்”, என்பது போல தலையாட்டி. “ம்”, என்று மட்டும் சொன்னாள் வைதேகி.

“இருங்க வந்துடறேன்”, என்று சொன்னவள் அவசரமாக தன்னை சுத்தபடுத்தி வந்தாள். “என்ன காலையில குடிப்பீங்க அண்ணி”, என்ற கேள்வியோடு.

வைதேகி காபி, டீ என்று எதுவும் சாப்பிட மாட்டாள். ஹார்லிக்ஸ் தான் காலையில் குடிப்பாள்.

அந்த நினைவில். “ஹார்லிக்ஸ்”, என்றாள்.

மாலதி காபியா டீயா என்ற முறையில் கேட்க. வைதேகியின் ஹார்லிக்ஸ் பதிலை கேட்டு விழித்தாள். அவர்கள் வீட்டில் ஹார்லிக்ஸ் எல்லாம் இல்லை.

ஆனாலும் வைதேகியிடம் காட்டிக்கொள்ளாமல். “நான் போட்டு கொண்டுவர்றேன்”, என்றவள் அவசரமாக போய் மனோகரை எழுப்பினாள்.

“மனோ எழுந்திரு”, என்று அவனை எழுப்பி. அண்ணாச்சி மளிகை கடைக்கு அனுப்பி. அடுப்பில் இருந்த பால் பொங்கும் வரை ஹார்லிக்ஸ் வீட்டிற்கு வந்துவிட்டது.        

வைதேகி இருந்த இடத்திற்கே ஹார்லிக்ஸ் சென்றது. அதை வாங்கி குடித்த பிறகே சற்று தெம்பு வந்தார் போல உணர்ந்தாள் வைதேகி.

“நீங்க போய் குளிச்சிட்டு வந்துடுறிங்களா அண்ணி”, என்றாள் மாலதி.

மாலதி கேள்வி கேட்ட விதம் வைதேகிக்கு பிடித்திருந்தது. “குளிச்சிடுங்க”, என்று சொல்லாமல். “குளிச்சிடுறிங்களா”, என்று அவள் கேட்டது பிடித்திருந்தது.

மாலதியை பார்த்து புன்னகைத்தவள், “சரி”, என்றபடி எழுந்து போனாள்.

“என்னடா இது எத்தனை தடவை என்னை பார்த்துட்டாங்க. ஒரு தடவை கூட என்னை பார்த்து சிரிச்சதில்லை. இன்னைக்கு என்ன ஆச்சு”, என்று எண்ணியபடியே உள்ளே சென்றாள் மாலதி.

குளித்து வந்தவள் பாத்ரூமிலேயே புடவை கட்டி பழக்கம் இல்லாததால் நைட்டியோடு வந்தாள். அவளுக்கு உடை மாற்ற வேண்டும். ஆனால் ராம் இன்னும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்று பார்த்தாள். அவன் விழிப்பது போல தெரியவில்லை. பேசாமல் அவனுக்கு அந்த புறமாக நின்று அவன் எழுவதற்கு முன் புடவையை மாற்றி விடலாம் என்று எண்ணியவள்.

அவன் படுத்திருக்கும் பக்கத்திற்கு மறுபக்கத்தில் நின்று உடை மாற்ற ஆரம்பித்தாள். அவன் எதிரே கண்ணாடி இருந்ததையோ. அது உள்ளது உள்ளபடி காட்டும் என்பதையோ மறந்து விட்டாள். அவளின் நல்ல நேரம் ராம் அதுவரையிலும் விழிக்கவில்லை.

அவள் உடைமாற்றி வர. “அண்ணா இன்னும் எழுந்திருக்கலையா அண்ணி”, என்றாள் மாலதி அவளிடம் சகஜமாக.

“இன்னும் இல்லை”, என்றாள் வைதேகி.

“இந்த காபியை அண்ணா கிட்ட குடுத்திடுங்களேன் அண்ணி”, என்று அவள் வாங்குவதற்காக காபியை நீட்டினாள் மாலதி.

“என்ன? நான் அவனுக்கு காபியை கொடுப்பதா”, என்று மனதிற்குள் தடுமாறினாள் வைதேகி.

அப்போது பார்த்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க லீலாவதி வந்தார். வேறு வழியில்லாமல் அந்த காபியை கையில் வாங்கினாள் வைதேகி.

“போம்மா போய் குடு”, என்றார் வாஞ்சையாக லீலாவதி. கடனே என்று அதை தூக்கி கொண்டு போனாள் அவள்.

அப்போது தான் ராம் எழுந்து உட்கார்ந்திருந்தான். அவன் அறை வாயிலை பார்த்துக்கொண்டிருக்க கையில் காபியோடு உள்ளே நுழைந்தாள் வைதேகி. அந்த காட்சியே ஒரு ஆனந்த பரவசத்தை கொடுத்தது அவனுக்கு. இனம் புரியா இனிமை மனம் முழுக்க நிரம்பியது.   

வைதேகி பிரெஷாக குளித்து முடித்து பார்க்க கண்களுக்கு ரம்மியமாக இருந்தாள். அடர் பச்சை வண்ண நிறத்தில் ஒரு புடவை கட்டியிருந்தாள். “இவ்வளவு அழகான பெண்ணா எனக்கு மனைவி”, என்று மனதில் ஒரு கர்வம் அவனையறியாமல் உதித்தது. அவனை அறியாமல் முகத்தில் அவளை பார்த்து புன்னகை மலர்ந்தது. அவளை பார்த்து புன்னகைத்தான்.

பதிலுக்கு இவளுக்கு சிரிப்பதா இல்லையா என்று தெரியவில்லை. சிரிப்பும் வரவில்லை. முகத்தை உம்மென்று வைத்து, “காபி”, என்றாள்.

அவள் அவனை பார்த்து சிரிக்காதது ராமிற்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

சற்று கோபமும் எரிச்சலும் வந்தது. “பெரிய மகாராணி இவ நான் சிரிச்சா பதிலுக்கு சிரிக்க கூட மாட்டாளோ.”, என்று மனதிற்குள்ளேயே திட்டினான்.

காபியை நீட்டிய வைதேகி அவன் கை தன் மீது பட்டுவிடக்கூடாதே என்று டம்ளரை நுனியில் பிடித்து ஜாக்கிரதையாக கொடுத்தாள். அவளின் செய்கையை உணர்ந்த ராமிற்கு கோபம் கரை கடந்தது.  இருந்தாலும் முகத்தில் அதை காட்டாமல் காபியை கையில் வாங்கியவன். அதை பருக வாயருகே கொண்டு போக.

“அய்யே! வாய் கூட கொப்பளிகாம அப்படியே காபியா”, என்றாள் முகத்தை ஒரு மாதிரி வைத்து.

அவள் முகத்தை ஏதோ அருவருப்பது போல வைத்த விதம் ராமின் கோபத்தை வெளியே கொண்டு வர. எப்போதும் கோபத்தை அடக்கி பழக்கப்பட்ட ராம். அவளிடம் அப்படி எதுவும் அடக்காமல் சிடுசிடுத்தான். “நான் என்ன உனக்கு பிரஷ் பண்ணாம முத்தமா கொடுக்க வந்தேன். இப்படி முகத்தை வெச்சிகற”, என்றான் பட்டென்று.

அவன் பேசியதை உணர்ந்து, “ஆங்”, என்று வாயை பிளந்தாள் வைதேகி. அவன் சொன்னதை ஜீரணிக்கவே சற்று நேரம் ஆகிற்று.

அவளின் செய்கை அவனுக்கு கடுப்பை வரவழைக்க. “என்ன ஆங்ன்னு வாயை பிளக்கற. முத்தம்னா என்னன்னு கூடவா தெரியாது”, என்றான் அவளை வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதற்கு. 

“என்ன முத்தமா”, என்று மனதிற்குள் அதிர்ந்தாள்.

அவள் பார்க்க பார்க்க வேண்டுமென்றே அப்படியே காபி குடித்தான். பின்பு அவளருகே வந்தவன் அவளின் கையை பிடித்து அந்த டம்ளரை அவளின் கையில் வைத்தான்.

“எவ்வளவு மிருதுவாக இருக்கிறது இவளின் கை”, என்று மனதிற்குள் ஓடியது. அவன் கையை பிடித்ததும் கையை இழுக்க முற்பட்டாள் வைதேகி. முடியவில்லை. “இந்த கை என்மீது படக்கூடாதுன்னு தானே அவ்வளவு ஜாக்கரதையா எனக்கு காபி கொடுத்தா. இதை எப்படி என்கிட்ட இருந்து எடுக்கறா பார்க்கிறேன்”, என்று அவனின் மனதிற்குள் ஓடியது. அவளின் கை மென்மையை அனுபவித்தவன். சற்று நேரம் கழித்தே விடுவித்தான்.

வைதேகிக்கு மிகுந்த கோபம் வந்தது. டம்ளரை அவன் மீது விசிறலாமா என்று அவள் எண்ணிய நேரம் லீலாவதி, “ராம்”, என்று அழைக்க. அவளை விடுத்து வெளியே சென்றான்.          

அவனின் நடவடிக்கையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள் வைதேகி. அழுகை எல்லாம் வரவில்லை. நிறைய கோபம் தான் வந்தது.

ராமிற்கு அவனின் செயல் குறித்து அவனுக்கே ஆச்சர்யம். தான் ஏன் அவளிடம் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்டோம் என்றிருந்தது.

“தன் வீட்டில் மிகவும் சௌகர்யமாக இருந்தவள். அப்படியே வளர்ந்தவள். தங்களோடு உடனே எப்படி ஒன்றுவாள்” என்று அவனின் நியாய மனது ஒரு புறம் யோசித்தாலும். மற்றொரு புறம் மனம், “திருமணம் எப்படியும் ஆகிவிட்டது. நான் தானே அவளின் கணவன். எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறாள் என்னிடம்., நேற்று இரவு எப்படி பேசினாள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல்.  பதிலுக்கு நான் அப்படித்தான் நடந்து கொள்வேன்”, என்றது.

“ராம்! நீ சிறுபிள்ளையல்ல. புரிந்து பொறுமையாக நடந்து கொள்”, என்று அவன் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது.

அதற்குள் லீலாவதி. “சீக்கிரம் ரெடியாகு ராம். மறு வீட்டு விருந்துக்கு மாமனார் வீட்டுக்கு போகணும். கூப்பிட யாரும் ஆளில்லை. நீங்களே தான் போகணும். உங்களை அனுப்பி விட சொல்லி உன் மாமனார் சொல்லிட்டு போனார்”, என்றார்.

“அவர் எங்கே அத்தை”, என்றான் ராம்.

“அவர் நேத்து நைட்டே எங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டார். சீக்கிரம் ரெடியாகி கிளம்புங்க”, என்று சொல்லி சென்றார்.

மாலதி அவசரமாக அவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தாள். இட்லியும் சட்னி சாம்பாரும். அந்த சமையல் பாட்டி திருமணம் முடிந்ததும் வரவில்லை. அதனால் அவள் ஒற்றை ஆளாக செய்து கொண்டிருந்தாள்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ராமிற்கு கோபம் வந்தது. தன் தங்கை ஒற்றை ஆளாய் சமைப்பதற்கு அல்லாடுவதை பார்த்து. இந்த வைதேகி வந்து மாலதிக்கு உதவக்கூடாதா என்று இருந்தது.

“ஏன் மாலதி உங்க அண்ணியை கொஞ்சம் ஒத்தாசைக்கு கூப்பிடலாம் இல்லை”,

“அண்ணா இன்னைக்கு தான் அவங்களுக்கு நம்ம வீட்டில் முதல் நாள். ரொம்ப எல்லாம் எதிர்பார்க்க கூடாது. அவங்க ரொம்ப செல்லமா வளர்ந்தவங்க. இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமோ? இல்லையோ. அண்ணா மறந்துடாத அவங்க மட்டும் ரொம்ப பெரியவங்க கிடையாது. என்னை விட ஒரு ரெண்டு வயசு பெரியவங்களா இருப்பாங்க”, என்று மன முதிர்ச்சியில் பெரியவளாக அவலின் அண்ணனை சமாதனபடுத்தினாள்.

இவன் குளித்து செல்லும் வரை வைதேகி எப்படி அமர்ந்திருந்தாளோ அப்படியே அமர்ந்திருந்தாள்.

ராமிற்கு பார்த்ததும் என்ன இவள் அப்படியே அமர்ந்தது மாதிரியே அமர்ந்து இருக்கிறாளே என்று கோபம் வந்தது. ராம் உள்ளே வந்ததும் அவன் செய்த செயலுக்காக அவனை பார்த்து முறைத்தாள். அவளை சீண்டும் எண்ணம் வர அவள் முன்னிலையிலேயே ராம் உடை மாற்ற ஆயத்தம் ஆக. அதை பார்த்தவள் அவசரமாக வெளியே ஓடிப்போனாள். அவளின் பின்னால் ராம் புன்னகைத்தது அவளுக்கு தெரியவில்லை.

“இவளை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா”, என்று மனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. பதில் தான் கிடைக்கவில்லை. பிடித்த மாதிரியும் இருக்கிறது, அதே சமயம் அவளின் செய்கைகளுக்கு கோபமும் வருகிறது. என்னவென்றே புரியவில்லையே என்றிருந்தது.  

“என்ன இருந்தாலும் அவள் உன் மனைவி அவளிடம் அந்த உணர்வோடே நடந்து கொள்ள முயற்சி செய்”, என்று மனம் அறிவுறுத்தியது.

இவள் வெளியே வந்ததும். “அண்ணி இப்போ நீங்க உங்க அப்பா வீட்டுக்கு கிளம்பனுமாம் அத்தை சொல்லிட்டு போனாங்க”, என்று மாலதி சொன்னாள்.

வீட்டிற்கு என்றதும் அவளையறியாமல் ஒரு ஆசுவாச பெருமூச்சு எழுந்தது வைதேகியிடம்.

“இப்போவேவா போறோம்”, என்று மாலதியிடம் உற்சாகமாக கேட்டாள்.

“இப்போ தான் அண்ணி. சாப்பிட்ட உடனே”, என்று மாலதி சொல்ல.

“சரி”, என்று அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அப்போது பார்த்து லக்ஷ்மி பாட்டியும் வந்தார். “என்ன மாலதி! என்ன சமையல்?”, என்று கேட்டபடி வந்தார்.

“இட்லி, சட்னி சாம்பார் பாட்டி”, என்றாள் மாலதி.

“புதுப்பொண்ணு அவ கைவரிசையை எதுவும் காட்டலியா”, என்றார் பாட்டி.

கேட்டு கொண்டிருந்த மனோகருக்கு சிரிப்பு வந்தது.

“ஏய் கெழவி எங்கண்ணி என்ன கைவரிசையை காட்டணும்னு சொல்ற. இரு உன்கிட்ட காட்ட சொல்றேன்”, என்றான் பாட்டியை பார்த்து நக்கலாக.

எப்போதும் பேசுவது தான் இருந்தாலும் ராம் அவனை அதட்டினான். “மனோ மரியாதையில்லாம பேசாத”, என்று.  அவனுக்கு பயம், மனோகர் பாட்டியிடம் கிண்டலடிக்க. அது வைதேகி தன்னை பற்றி என்று தப்பாக நினைத்துவிடக்கூடாது என்று.

அவர்கள் பேசுவது வைதேகியின் காதிலும் விழுந்தது. இருந்தாலும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

பாட்டியின் வாய் சும்மா இருக்குமா என்ன வைதேகியிடம் வந்தவர். “நீ எதுவும் செய்யலியா கண்ணு”, என்றார். பாட்டியை பார்த்தாலே அவரிடம் விளையாட வேண்டும் போல வைதேகியின் விளையாட்டு குணம் தலை தூக்கியது. 

“எனக்கு எதுவும் செய்யத்தெரியாது பாட்டி”, என்றாள் வைதேகி வேண்டுமென்றே பாவம் போல. வைதேகிக்கு நன்றாக சமைக்க வரும். அவளின் அன்னை அவரின் இறுதி நாட்களில் தன் மகள் எதற்கும் சிரமப்படக்கூடாது என்று அவளுக்கு சமையல் கலையை கற்று கொடுத்து தான் போனார்.

வைதேகிக்கு சமையல் இயல்பாகவே நன்றாக வந்தது. வைதேகி மிகவும் சுவையாக சமைக்க கூடியவள். வேண்டுமென்றே பாட்டியிடம் மாறுதலாக பதிலளித்தாள்.

“என்ன சமைக்க தெரியாதா. அப்போ நான் கல்யாணத்துக்கு முன்ன கேட்டதுக்கு சமைக்க தெரியும்ன”,

“அப்போ அப்படியா சொன்னேன். எனக்கு ஞாபகமில்லை”,

அவள் பாட்டியிடம் வேண்டுமென்றே அப்படி பேசுகிறாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது பாட்டிக்கு புரியவில்லை.

“என்ன தான் பணம் காசு இருந்தாலும் பொண்ணுங்களுக்கு சமைக்க தெரியணும் கண்ணு”, என்றார் பாட்டி.

“ஏன் பொண்ணுங்க மட்டும்”, என்ற கேள்வி உடனே வைதேகியின் மனதிற்குள் உதித்தது. “இன்னும் எந்த காலத்துல பாட்டி இருக்கீங்க. பசங்க எல்லாம் சாப்பிட மாட்டாங்களா”, என்று கேட்க வேண்டும் போல தோன்றியதை கஷ்டப்பட்டு அடக்கினாள். 

இவர்கள் பேசியதை எல்லாம் ராம் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். வேண்டுமென்றே வைதேகி பாட்டியை சீண்டுகிறாள் என்று புரிந்தது.

“ஒரு வேலையும் தெரியலை. இதுல பேச்சை பாரு சரியான திமிர்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.        

“அதுக்கென்ன பாட்டி கத்துகிட்டா போச்சு”, என்றாள் போச்சுவில் அதிக அழுத்தத்தை கொடுத்து.

இதை உணராதவறாக பாட்டி. “சீக்கிரம் கத்துக்கோ கண்ணு. சீக்கிரம் கத்துக்கோ. இந்த மூணு புள்ளைங்களும் தனியாவே அல்லாடுது. அதுங்க வாய்க்கு ருசியா சாப்பிடறதே அபூர்வம். அந்த சமையல் கார கிழவி ஏதோ கடமைக்கு சமைச்சு போடும். ஆயி அப்பன் இல்லாத புள்ளைங்க. நீதான் பொறுப்பா பார்த்துக்கணும்”, என்றார் உருக்கமாக.

அவரின் பேச்சு அவளை சற்று அசைத்தாலும். “அதுக்கென்ன பாட்டி பார்த்துகிட்டா போச்சு”, என்றாள் போச்சுவில் அழுத்தம் கொடுத்து விளையாட்டுத்தனமாக. 

அவள் எல்லாவற்றையும், “போச்சு, போச்சு”, என்று வேண்டுமென்றே பாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று ராமிற்கு புரிந்தது.

“இந்த பாட்டிக்கு புத்தியேயில்லை. அவளுக்கு போய் புத்தி சொல்லுது பாரு”, என்று நினைத்தவன். மாலதிக்கு உதவ சமையல் அறைக்கு சென்றான்.

“போ கண்ணு! சமையல் கட்டுல போயி மாலதி என்ன செய்யுது பாரு”, என்று கனிவாக சொன்னார் லக்ஷ்மி பாட்டி. அவரை தட்ட முடியாமல் எழுந்து போனாள் வைதேகி. பின்னாலேயே லக்ஷ்மி பாட்டியும் வந்தார். 

உள்ளே சென்றாள். அண்ணனும் தங்கையும் பேசியபடி சமைத்து கொண்டிருந்தனர்.

இட்லி மட்டும் செய்து அடுக்கி வைத்திருந்தாள் மாலதி. தக்காளி சாம்பாருக்கு அரைக்க அப்போது தான் எடுத்து போட்டு கொண்டிருந்தாள். ஒரு தட்டத்தில் அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

லக்ஷ்மி பாட்டி இருந்ததினால் வேறு வழியில்லாமல் மாலதியிடம் பேச்சு கொடுத்தாள் வைதேகி.

“என்ன செய்யற மாலதி”, என்றாள் வைதேகி.

“தக்காளி சாம்பார் அண்ணி”,

அவள் எடுத்து வைத்திருந்த அளவுகளை பார்த்தால் நிச்சயம் சாம்பார் நன்றாக இருக்காது என்று தோன்றியது வைதேகிக்கு. ராம் சாம்பாருக்கு வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தான்.

ஏதோ எக்ஸ்பெர்ட் போல மாலதி செய்யப்போவதை பார்த்த வைதேகிக்கு இவள் சொதப்புகிறாளே என்றிருந்தது.

தன்னையும் மீறி. “இந்த அளவு சரிவாராது மாலதி”, என்றவள் பொருட்களை கேட்டு வைதேகியே அளவை எடுத்துக் கொடுத்தாள். அதை மிக்ஸியில் விட்டாள் மாலதி. அது திப்பி திப்பியாக இருந்தது.

“இன்னும் நல்லா மசியனும்”, என்று அவளுக்கு சொல்லிகொடுத்து அதை நன்றாக மசிய வைத்தாள்.    

இதை பார்த்த ராமிற்கு ஆச்சர்யமாக இருந்தது. இவளுக்கு சமைக்க கூட தெரியுமா என்று.    ராம் வெட்டிக்கொண்டிருந்த வெங்காயத்தை பார்த்தாள். அது பெரிது பெரிதாக இருந்தது.

“அதை வாங்கி இன்னும் கொஞ்சம் சின்னதா நறுக்கி கொடு”, என்றாள் மாலதியிடம். அவள் நறுக்கி கொடுத்ததும் குக்கரை எடுத்து பத்து நிமிஷத்தில் சாம்பாரை ரெடி செய்து விட்டாள்.   அந்த சாம்பார் ரெடியாவதற்குள் சட்னியும் அரைத்து எடுத்து விட்டாள்.

இவள் வேலை செய்த விதத்தை பார்த்ததுமே சமையல் இவளுக்கு புதிதில்லை என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.  

“நல்லா வேகமா வேலை செய்யற கண்ணு நீ. என்கிட்ட சமைக்க தெரியாதுன்னு சும்மா தானே சொன்ன”, என்று கேட்டார் லக்ஷ்மி பாட்டி.

அவருக்கு பதில் சொல்லும் விதமாக. “ஆமாம்”, என்பது போல தலையை மட்டும் அசைத்தாள் வைதேகி.

“என்னவோ கண்ணு என் பசங்க இனி சாப்பாட்டுக்கு கஷ்டப்பட மாட்டாங்கங்கறதே எனக்கு பெரிய நிம்மதி”, என்று அவளுக்கு திருஷ்டி கழித்தார்.

“என்னவோ சொல்லிவிட்டு போகட்டும். நான் என்ன இங்கேயா இருக்க போகிறேன்”, என்று வைதேகியின் மனதிற்குள் ஓட. அதே தான் ராம் மனதிலும், மாலதி மனதிலும் ஓடியது.

யாரும் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக உணவருந்த அமர்ந்தனர். இதுவரை கீழே அமர்ந்து தான் அவர்கள் வீட்டில் உண்பர். அதற்கு அவசியமில்லாமல் இப்போது பெரிய டைனிங் டேபிள் ஆறு பேர் அமரக்கூடியதாக சுவாமிநாதன் மகளுக்கு சீர் செய்திருந்தார்.

எல்லோருடனும் அமர்ந்து உணவருந்துவது புதிதாக இருந்தது வைதேகிக்கு எப்போதும் தனியாகவே உண்பாள் வைதேகி. இங்கே மாலதியும் மனோகரும் சலசலவென்று பேசிக்கொண்டே அமர்ந்தனர். உணவை வாயில் வைத்ததும் அப்படியே அமைதியாகிவிட்டனர்.

“அண்ணி உங்க சாம்பார் சூப்பர் அண்ணி”, என்றான் வாயில் வைத்தவுடனே மனோகர். மாலதியும் அதையே சொன்னாள், “சூப்பரா இருக்கு அண்ணி.”,  அங்கேயே சாப்பிட அமர்ந்த லக்ஷ்மி பாட்டியும். “நல்லா இருக்கு உன் சமையல் கண்ணு”, என்று சர்டிஃபிகேட் கொடுத்தார்.

இவன் மட்டும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்பதை போல வைதேகி ராமை பார்வையால் வருட.  ராம் வாயைத்திறந்து எதுவும் சொல்லவில்லை.

ஆனால் அவன் உண்ணும் அளவை வைத்தே அவனுக்கு சாம்பார் மிகவும் பிடித்து விட்டது என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. வைதேகியை தவிர. அவன் எவ்வளவு உண்ணுகிறான் என்றெல்லாம் அவள் பார்க்கவில்லை.

“பெரிய இவன் இவன். ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொன்னா குறைஞ்சா போயிடுவான்”, என்று வைதேகிக்கு தோன்றியது. அவன் ஏன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம் என்று உணரவில்லை. 

ராம், மாலதி, மனோகர், மூவரும் தலை தூக்காமல் உணவை உண்டது அவளை சற்று அசைத்தது. இவர்கள் எல்லாரும் ரசித்து சாப்பிட ஒருமாதிரி  நிறைவாய் உணர்ந்தாள் வைதேகி. 

இப்படி நிறைய பேருடன் அவள் இருப்பது இது தான் முதல் தடவை. தன் வீட்டில் தான் இருக்கும் தனிமையான சூழ்நிலைக்கு இது நன்றாக இருப்பது போல தான் அவளுக்கு இருந்தது.

அது கொடுத்த இனிமையில் மூன்று இட்லி சாப்பிடும் அவள் கூட ஐந்தாக சாப்பிட்டாள்.   

சாப்பிட்டு முடித்து கை கழுவும் வேலையில் அவளுள் இருந்த இன்னொரு மனம் குரல் கொடுத்தது. “உனக்கு இவர்களையெல்லாம் பிடிக்காது வைதேகி”, என்று.

“எனக்கு ராமை தான் பிடிக்கவில்லை என்று சொன்னேன் இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்”, என்று தன் மனதிடம் பதில் கேள்வி கேட்டாள்.

“நீ நினைத்ததை தானே நான் கேட்கிறேன்”, என்று பதிலுக்கு சொல்லி ஜகா வாங்கிக்கொண்டது மனது.

அவர்கள் மறு வீட்டு விருந்துக்கு கிளம்பினர். ஏதாவது கார் ஏற்பாடு செய்திருப்பானாயிருக்கும் என்று எதிர்பார்த்து வந்த வைதேகிக்கு பைக்கை எடுத்துக் கொண்டு ரெடியாக நின்ற ராமை பார்த்து அதிர்ந்தாள்.

“என்ன இதுலயா அவ்வளவு தூரம் போறோம்”, என்றாள்.

“எவ்வளவு தூரம் ஜஸ்ட் ஒரு மணிநேரம்”, என்றான் ராம்.

எல்லாரும் தங்களையே பார்த்துக்கொண்டிருக்க. வேறு வழியில்லாமல் அவனின் பின்புறம் ஏறி அமர்ந்தாள். இன்னும் பைக்கில் யார் பின்புறமும் அமர்ந்து போனதில்லை. எப்போதும் கார் மற்றும் அவளின் ஸ்கூட்டி தான். அவளின் தந்தை கார் தான் உபயோகிப்பர். அதுவும் இவளுடன் எங்கு சென்றாலும் கார் தான்.

இப்போது பைக்கில் அவன் பின்புறம் அமர்ந்து போவது ஒரு மாதிரி இருந்தது. விழுந்துவிடுவோமோ என்று அவனின் தோளை கெட்டியாக வைதேகி பிடித்துக்கொள்ள. அவளாக அவளின் முதல் தொடுகை. ராம் மனதால் பறந்து. பைக்கை பறக்க விட்டான். 

“மெதுவா, மெதுவா எனக்கு பயமாயிருக்கு”, என்று அலறினாள் வைதேகி

“ஏன் உனக்கு பைக்னா பயமா”, என்றான் ராம்.

“நான் இன்னும் பைக்லயே உட்கார்ந்ததேயில்லை விழுந்துடபோறேன்”, என்றாள் பதட்டமாக.

அவளின் பதட்டம் ராமிற்கு சிரிப்பை கொடுக்க வாய்விட்டு சிரித்தான். அதே சமயம் சற்று ஆச்சர்யமாகவும் உணர்ந்தான். இன்னும் யாரின் பின்புறமும் பைக்கில் அமர்ந்ததில்லையா என்று.

“நான் இப்போ என்ன சொன்னேன்னு இந்த சிரி சிரிக்கறான்”, என்று எரிச்சலானால் வைதேகி. அவளின் எரிச்சலை உணராதவன்.  அவளின் அருகாமையை அனுபவித்து.  

“தோள்ல கைபோட்டா அப்படி தான் இருக்கும் இடுப்புல கைபோட்டுக்கோ”, என்றான் ராம்.

“என்ன இடுப்புலையா. அதெல்லாம் முடியாது”, என்றாள் பட்டென்று.  

“உன் நல்லதுக்கு தான் சொல்றேன். விழுந்தா நான் பொறுப்பில்லை”, என்றான் வேண்டுமென்றே அலட்சியமாக சொல்வது போல, அதே சமயம் பைக்கின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான். மனம் அவள் அணைக்க வேண்டுமே என்று நினைத்தது.

அவன் போகும் வேகத்திற்கு விழுந்து விடுவோமோ என்று பயந்து வைதேகியும் அவன் சொன்னதை கர்ம சிரத்தையாக கேட்டு அவனின் இடுப்பில் கைபோட்டு இறுக்கமாக அனைத்துக்கொண்டாள். 

Advertisement