Advertisement

அத்தியாயம் ஏழு:

காலையில் முகூர்த்தம் களைகட்டியது. பெண்ணிடமும் மாப்பிள்ளையிடமும் உற்சாகம் கம்மியாக காணப்பட மற்ற எல்லோரும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். மாலதி கூட நேற்று வைதேகி நடந்து கொண்டதை மறந்து அதிக உற்சாகத்துடன் காணப்பட்டாள்.

மோகன் அவளை பார்த்தும் பார்க்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்தாலும் புதிதாக முளைத்த சொந்தம் அவனை மாலதியை சைட் அடிக்க வைத்தது.

மாலதியும் அதிக ஆபரணங்கள் இல்லாமலேயே அழகாக இருந்தாள். திருமணம் களேபாரத்தில் தான் ராமும் கவனித்தான் தன் தங்கை நகைகள் எதுவும் இல்லாமல் இருப்பதை. ரமா கூட கழுத்து நிறைய கை நிறைய என்று நகைகளோடு ஜொலித்தாள்.

லீலாவதி கூட நகை கொடுக்கிறேன் போட்டுக்கொள் என்று மாலதியிடம் சொன்னார். ஆனால் மாலதி மறுத்துவிட்டாள்.

அவளுக்கு நகைகள் வாங்க வேண்டும் என்பதை எப்படி தான் கவனிக்காமல் விட்டோம் என்று தன்னையே நொந்து கொண்டான் ராம். ஆனால் நகை போட்டுக்கொள்ளாத வருத்தம் எல்லாம் மாலதியிடத்தில் சற்றும் இல்லை. அண்ணனின் திருமணத்தில் மகிழ்ச்சியாகவே வலம் வந்தாள்.

மனம் பொறுக்காமல் ராம் தான் அவளை கூப்பிட்டு. “நான் உனக்கு இன்னும் எந்த நகையும் வாங்கலையேம்மா”, என்றான்.

“பரவாயில்லை அண்ணா. கல்யாண செலவே நிறைய ஆகிடுச்சு. நீ முதல்ல அதை சமாளி. நகை எங்க போகுது மெதுவா வாங்கிக்கலாம்.”, என்று தன் அண்ணனின் மனவருத்தத்தை உணர்ந்து அவனுக்கு ஆறுதல் கூறினாள் மாலதி.

அவளையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த மோகன் காதிலும் அது விழுந்தது. அவளின் இந்த குணம் அவனை இன்னும் கவர்ந்தது.

அதற்குள் மணமகனை மணமேடைக்கு அழைக்க. அங்கே செல்வதில் ராமின் கவனம் திரும்பியது. அவன் அங்கே போய் அமர்ந்து அய்யர் சொல்லும் சடங்குகளை செய்து கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து அய்யர் மணமகளை அழைத்து வரும்படி கூற. அவனையறியாமல் வைதேகி வரும் வழி நோக்கி பார்வையை திருப்ப. அங்கே அழகு பதுமையாக வைதேகி நடந்து வந்து கொண்டிருந்தாள். பார்வையை திருப்ப முடியவில்லை ராமிற்கு. இவ்வளவு அழகா வைதேகி என்பது போல பார்த்துக்கொண்டிருந்தான்.

வைதேகியும் ஒரு நொடி அவன் பார்வையுடன் கலந்தாள். முதன் முறையாக கண்ணில் ஒரு ஆர்வத்துடன் ராம் தன்னை பார்ப்பது தெரிந்தது.

இதுவரை அந்த மாதிரி ஒரு பார்வையை ராம் பார்த்ததே இல்லை. ஆனால் அது எந்த வகையிலும் வைதேகியை பாதிக்கவில்லை. இன்னும் கர்வமாக தான் உணர்ந்தாள். அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு மேடையில் அமர்ந்தாள்.

அவளுடைய பதில் பார்வையை எல்லாம் ராம் உணரவேயில்லை. அவன் திரும்ப அய்யர் சொன்ன வேலைகளை செய்ய அவன் கவனத்தை திருப்பினான். அய்யர் சொன்ன சடங்குகளை வைதேகியும் சற்றும் பிறழாமல் செய்தாள்.

எவ்வளவு மெதுவாக நகர்ந்தாலும் நேரம் கடந்து தாலி கட்டும் நேரமும் வந்தே விட்டது. பிடிக்காத திருமணம் என்று வைதேகி ஏதும் மனம் வருந்தி இருக்கிறாளோ இல்லை அழுகிறாளோ என்று ராம் தாலி கட்டும் ஒரே ஒரு நொடி அவள் முகம் பார்த்து தயங்க. அதற்கு நேர் மாறாக அவள் அவனை முறைத்து கோபமாக பார்த்தாள். தலை குனிந்தெல்லாம் அமரவில்லை.

எல்லோரும் தங்களையே கவனிப்பார்கள் என்றுணர்ந்த ராம் அவசரமாக அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.

எல்லாரும் சேர்ந்து தன் விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை நடத்தியே விட்டார்களே என்று கண்மண் தெரியாமல் கோபம் வந்தது வைதேகிக்கு. முயன்று மிக முயன்று முகம் மாறாமல் அமைதி காத்தாள். தான் தன்னையறியாமல் ஏமாந்து விட்டோமோ என்று தோன்றியது.   

“இவ எப்போ தான் என்னை முறைச்சு பார்ப்பதை விடுவா”, என்ற எண்ணமே ராமின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவர்கள் இருவரின் யோசனையை கலைப்பது போல இன்னும் பல சடங்குகள் அணிவகுத்து நிற்க.  இருவரின் கவனமும் அதில் திரும்பியது.

பின்பு திருமணதிற்கு பிறகு நடக்கும் மணமக்களின் நெருக்கத்தை அதிகரிக்கும் விளையாட்டுகள் எதிலும் வைதேகி ஆர்வத்தோடு கலந்து கொள்ளவில்லை. தெரிந்த விஷயம் தான் இருந்தாலும் அந்த இடத்தில் அவளின் பங்களிப்பு இல்லாமல் எல்லாவற்றிலும் ராமே பங்கெடுத்து கொள்ளும்படி ஆகிற்று.

மோதிரத்தை குடத்தில் போட்டு எடுக்கும் விளையாட்டில் ராம் கையை விட்ட பிறகே மெதுவாக கையை விட்டாள் வைதேகி. மோதிரத்தை எடுக்க சற்றும் ஆர்வம் காட்டவில்லை. அடுத்தெல்லாம் அவளை போலவே செய்ய ராம் சற்று திணறித்தான் போனான். எப்போது தான் இதெல்லாம் முடியுமோ என்று அவனுக்கே எரிச்சல் எரிச்சலாக வந்தது.    

ஒரு வழியாக திருமணம் முடிந்து எல்லா சடங்குகளும் முடிந்து மதிய விருந்தும் முடிந்து மணமக்கள் இருவரும் ராமின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். வீட்டை பார்த்த வைதேகி அதிர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

அவளுக்கு முதலில் வீட்டை பார்த்ததுமே தோன்றிய எண்ணம், “என்ன ஓட்டு வீடா”, என்பது தான். தன் தந்தையை பார்க்க முயல அவரை அவளின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காண முடியவில்லை. சுவாமிநாதனோ திருமணம் நன்றாக முடிந்து விட்ட சந்தோஷத்தில் எல்லோரிடமும் பேசிகொண்டிருந்தார். வைதேகிக்கு இது புது இடம் அவளை தான் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு தோன்றவில்லை. 

வைதேகிக்கு தான் எப்படி இங்கே இருப்பேன் என்று அவளுக்கு பயம் வந்தது. எனக்கு இந்த வீடு பிடிக்கவில்லை என்று கத்த வேண்டும் போல தோன்றியது. தன் அன்னை இருந்தால் தன்னை இப்படி விட்டிருப்பார்களா என்று என்றுமில்லாமல் அன்னையின் நினைவு அதிகமாய் தாக்கியது. தன் தந்தையின் மீது மிகுந்த கோபம் வந்தது. அழுகை பொங்கியது மிகுந்த பிரயத்தனப்பட்டு அதை அடக்கினாள். துக்க பந்து ஒன்று நெஞ்சை அடைத்தது.

அவளுக்கு ஒட்டு வீடு என்பது தான் தெரிந்தது. அது பெரிய வீடு, அதுவும் மனிதர்கள் வாழும் வீடு தான் என்பது எல்லாம் கண்ணில் படவில்லை.

அதற்குள் ஒரு சுமங்கலி வந்து ஆரத்தி எடுத்தார். யாரோ. “வலது காலை வச்சு உள்ள போம்மா”, என்றார்கள். இடது காலை வைத்தால் என்ன? என்று முரண்டிய மனதை கடிவாளமிட்டு சொன்னதை செய்தாள்.

பூஜை ரூமிற்கு சென்று விளக்கேற்ற யாரோ சொன்னார்கள். மாலதி அவளை அழைத்து போக. அதை செய்து கொண்டே கடவுளிடம் சண்டையிட்டாள் வைதேகி. “இப்படி செஞ்சிட்டியே கடவுளே. நான் என்ன அவ்வளவு கெட்ட பொண்ணா. எங்கப்பா முடிவு எடுத்திருந்தாலும் நீ எப்படி எனக்கு இப்படி ஒரு வாழ்கையை அமைத்து கொடுக்கலாம்.”, என்று அவரை கேள்வி கேட்டவள் கண்களில் இருந்து கண்ணீர் அடக்க அடக்க வழிந்தது. “ஏன் அம்மா என்னை விட்டு போன”, என்று அன்னையின் ஞாபகம் அதிகமாக தாக்கியது.

பக்கத்தில் இருந்த லீலாவதி பதறினார். “என்ன ஆச்சும்மா”, என்று.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல். “அம்மா ஞாபகம்”, என்றாள்.

“நல்ல பொண்ணு போ. முதல் முதல்ல புகுந்த வீட்ல விளக்கேத்துற. இப்படி கண்ல தண்ணி வரலாமா சொல்லு. கண்ணை துடை”, என்று அன்பாக அதட்டினார்.

மாலதிக்கு. “நான் நினைச்ச மாதிரியே நடக்குதே வந்தவுடனே இவர்கள் அழுகிறார்களே”, என்று இருந்தது. 

வைதேகிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. அவளுக்கு தெரிந்தவர் அவளின் தந்தை மட்டும் தான் அவர் அருகிலேயே காணோம்.

“இனி இதுதான் தனது வாழ்க்கையா. தன்னால் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது போல இருக்கே. மூச்சு முட்டுதே”, என்றிருந்தது வைதேகிக்கு.

அவளின் மனப்போராட்டத்தை அறியாத ராம். எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்து கொண்டிருந்தான். சுவாமிநாதன் அவளுக்கு சீர் கொண்டு வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்.

பிறகு வைதேகியை பூஜை அறையில் இருந்து கூட்டி வந்து ஹாலில் ஒரு ஜமக்காலத்தை போட்டு அமர வைத்தனர்.

அழக்கூடாது என்று மனதை அவளாகவே தேற்றிக்கொண்டாள் வைதேகி. பின்பு வேறு யார் அவளுக்கு வாழ்வின் நிதர்சனத்தை கூறி தேற்றுவார்.

யார் யாரோ வைதேகியிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் இயந்தர கதியில் பதில் சொன்னாள்.

அப்படியே ஒரு மணிநேரம் கடந்தது.

அவளுக்கு பாத்ரூம் போக வேண்டும் போல தோன்ற. யாரை கேட்பது என்று தடுமாறினாள். அவளை சுற்றி பத்து பேருக்கு மேலே உட்கார்ந்திருந்தனர். அந்த பக்கமாக ராம் ஏதோ வேலையாக போக அவளை பார்த்தவாரே சென்றான்.

அவளின் கண்களில் ஒரு தவிப்பை உணர்ந்த ராம். மாலதியை அனுப்பி ஏதாவது வேண்டுமா அவளுக்கு என்று கேட்க சொன்னான். மாலதியும் அவள் அருகில் வந்து மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு, “ஏதாவது வேண்டுமா அண்ணி”, என்றாள். 

“பாத்ரூம் போகணும்”, என்றாள் மெதுவாக வைதேகி.

“வாங்கண்ணி”, என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் போனாள் மாலதி.

அங்கே நிறைய இடம் காலியாக இருக்க. அதை தாண்டி தனியாக பாத்ரூம் இருந்தது. லைட் போட்டு இருந்தாலும் அந்த இடம் இருட்டாக இருந்தது போல இருந்தது வைதேகிக்கு. இங்கேயா பாத்ரூம் என்றிருந்தது அவளுக்கு வாய் விட்டு அதை கேட்கவும் செய்தாள். “ரூம்ல இல்லையா”, என்று மாலதியை நோக்கி.

“இல்லைண்ணி இது ஒண்ணு தான்”, என்றாள்.” என்னது ஒரே பாத்ரூம்மை எல்லாரும் உபயோகிப்பதா”, என்றிருந்தது வைதேகிக்கு. என்ன செய்வது? அவள் வளர்ந்த சூழ்நிலை அவளை அப்படி தான் நினைக்க வைத்தது.

அவளின் அப்பா இப்படியெல்லாம் அவளை கஷ்டப்பட வைப்பார் என்றவள் நினைக்கவேயில்லை. அப்பாவின் மேல் இருந்த கோபம் கண்மண் தெரியாமல் அதிகரித்தது.

“நீங்க போங்க அண்ணி. நான் வெயிட் பண்ணறேன் என்றாள் மாலதி.

வேறுவழியில்லாம உள்ளே போனாள் வைதேகி.

அதற்குள் லீலாவதி வந்து மாலதியை. “நீ போம்மா, நான் பார்த்துக்கறேன்”, என்று அனுப்பியவர். வெளியே வந்த வைதேகியிடம், “அப்படியே குளிச்சு வேற புடவை கட்டிக்கோ வைதேகி”, என்றார்.

இங்கே எப்படி குளிப்பது என்று தோன்றியது வைதேகிக்கு. விவரம் தெரிந்த நாளில் இருந்தே அட்டாச்சுடு பாத்ரூமிலேயே குளித்து பழகிய வைதேகிக்கு இங்கே எப்படி குளித்து புடவை கட்டுவது என்று மலைப்பாக இருந்தது.

அதை லீலாவதியிடமும் சொன்னாள். “எப்படி இங்க குளிச்சு புடவை கட்டுறது, எனக்கு பாத்ரூம்லயே புடவை கட்டத் தெரியாது”, என்றாள் வைதேகி.

என்ன பண்ணலாம் என்பது போல லீலாவதி கையை பிசைந்து. “நைட்டி போட்டுட்டு போய் புடவை கட்டிகோம்மா”, என்றார் அதற்கு வழி கண்டுபிடித்தவராக.

அவளின் பொருட்கள் எல்லாம் ஒரு பெட்டியில் இருந்தது. வைதேகி அதை போய் எடுத்து வந்து குளித்து வெளியே வர. மாலதி அவளை ராமின் ரூமிற்கு அழைத்து சென்றாள். முன்பு அந்த ரூமை ராமும் மனோகரும் உபயோகித்து வந்தனர். இப்போது திருமணத்தை முன்னிட்டு ராமின் ரூமாக மாறியிருந்தது அது.

ரூம் சாதாரணமாக. மிகவும் சாதரணமாக இருந்தது. ஒரு கட்டில் கூட இல்லை. இரண்டு பழைய மெத்தைகள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தன. ஒரு பழைய டேபிள் சேர். சுவரோடு ஒட்டிய ஒரு அலமாரி. மேலே ஒரு பழைய ஃபேன். வேறு பொருட்கள் எதுவும் இல்லை. ரூம் சற்று பெரியதாக இருந்தது அவ்வளவே.  அவளுடைய ரூமோடு   ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை. தந்தையின் மேல் இருந்த கோபம் அதிகரித்துக்கொண்டே போனது.

அவளின் உடைகள் அடங்கிய பேக் அங்கே வைக்கப்படிருந்தது.

தாங்கள் இருக்கும்வரை இவள் ரெடியாக மாட்டாள் என்றுணர்ந்து லீலாவதி வெளியே வந்தார். பிறகே லீலா செலக்ட் செய்து வைத்திருந்த மைசூர் சில்க் புடவையை உடுத்தி தயாரானாள் வைதேகி. இயந்தரகதியில் எல்லாம் செய்தாள்.

அவள் ரூமை விட்டு வெளியே வந்து பார்த்தாள். அப்போதுதான் சீர்வரிசைகளை சுவாமிநாதன் கொண்டு வந்து இறக்கி கொண்டிருந்தார்.

அவர் பெண்ணிற்கு அவர் செய்த சீர்வரிசைகளை பார்த்து ஊரார் மூக்கின் மேல் விரலை வைத்தனர். ஒரு வீட்டிற்கு தேவையான அத்தனை பொருட்களும் புதியதாக இருந்தன.

அப்பா எப்போது இதையெல்லாம் வாங்கினார் என்றே வைதேகிக்கு தெரியவில்லை. சுவாமிநாதன் ஒரு மாதமாக சிறுக சிறுக இந்த பொருட்களையெல்லாம் சேகரித்து கொண்டு தானிருந்தார். காஞ்சிபுரத்தில் தான் கொடுக்க வேண்டும் என்பதால் இங்கே இருந்த அவருடைய நூல் குடோநிற்கு எல்லாவற்றையும் கொண்டு வந்து இறக்கி வைத்திருந்தார்.

வைதேகியை கூட புதிதாக துணிகள் நகைகள் வாங்க பணித்தார். ஆனால் வைதேகி எதிலும் ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே தான் வாங்கிய பொருட்களின் விவரம் கூட  வைதேகியிடம் சொல்லவில்லை. ஏன் ராமிடம் கூட சொல்லவில்லை. அதனாலேயே ராமிற்கு அவர் இவ்வளவு சீர்வரிசைகளை இறக்குவார் என்று தெரியவில்லை.    

எதற்கு இவர் இப்படி செய்கிறார் என்று ராமிற்கு லேசாக கோபம் எட்டி பார்த்தது. இங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் அவரின் மகள் உபயோகிக்க மாட்டாளோ என்றிருந்தது.

அவன் நினைப்பு தான் அப்படி சொன்னதே தவிர. நிஜத்தில் அவன் வீட்டில் அதிக பொருட்களே இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பொருட்களும் மிகவும் பழையது. விட்டால் சுவாமிநாதன் அவனுக்கு புதிய வீடே கட்டிகொடுத்து விடுவார். அந்த எண்ணமும் அவருக்கு இருந்தது. ராமின் இந்த பழைய வீட்டிற்கு சுவாமிநாதன் சீர் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் பொருத்தமில்லாமல் தோன்றின. ஏனென்றால் இருப்பதிலேயே எல்லா பொருட்களும் லேட்டஸ்ட் மாடலில். இருப்பதிலேயே எல்லாம் அட்வான்ஸ்டு ஆக வாங்கியிருந்தார்.

சுந்தரேசனுக்கு பெருமை தாங்கவில்லை. எப்படிப்பட்ட வரனை நான் ராமிற்கு பார்த்து வைத்திருக்கிறேன் பாருங்கள் என்று ஊராரிடம் பெருமை பேசிக்கொண்டிருந்தார்.  ஊராரும் ராமிற்கு வந்த வாழ்க்கையை பார்த்து வியந்தனர். எவ்வளவு அழகான படித்த பெண் இவ்வளவு சீர்வரிசைகளோடு ராமிற்கு மனைவியாக கிடைதிருக்கிறால் என்றிருந்தது அவர்களுக்கு.          

எல்லோருக்கும் இரவு விருந்து நடந்து கொண்டிருக்க. ராம் சாப்பாட்டிற்கு வஞ்சனை இல்லாமல் கட்டு கட்டினான். வைதேகியால் தான் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு தினங்களாகவே சரியாக சாப்பிடாதது ஒரு மாதிரி இருக்க மீண்டும் அவளால் ஒன்றும் உண்ண முடியவில்லை.

தன் அண்ணனின் கண்ணசைவில் வைதேகி சரியாக உண்ணாததை கவனித்த மாலதி. வைதேகியின் அருகிலேயே இருந்து கவனித்தாள். இருந்தாலும் சரியாக உண்ண முடியவில்லை வைதேகியினால் .

பொழுதும் கனிய மணமக்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். இருவருக்கும் தெரியும் இதுதான் நடக்கும் என்று.

வைதேகி ரூமை பார்த்து வியந்தாள். அப்போது பார்த்த ரூமிற்க்கும் இப்போது பார்க்கும் ரூமிற்க்கும் ஏகப்பட்ட வித்தியாசம். புதிய பொருட்களால் அறை நிரம்பி இருந்தது.

புதிய இரட்டை மர கட்டில், அதன் மேல் புதிய மெத்தை. ஒரு புதிய பீரோ. அவள் வீட்டில் அவள் ரூமில் உபயோகிக்கும் பொருட்கள் புதியதாய் அங்கே இருந்தன. என்ன அந்த பழைய மேஜை சேர் மட்டும் அகற்றப்படாமல் இருக்க அந்த ரூமோடு ஒட்டாமல் இருந்தது. 

தன் தந்தை பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்று நன்கு தெரிந்தது வைதேகிக்கு.  இந்த பொருட்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்திய தன் தந்தை மாப்பிள்ளை விஷயத்தில் மட்டும் ஏன் கோட்டை விட்டு விட்டார் என்றிருந்தது அவளுக்கு.

அவளுக்கு புரியவில்லை. உடமைகளை இவ்வளவு பார்த்து பார்த்து எடுத்திருப்பவர் மாப்பிள்ளையை அப்படியா கோட்டை விட்டு விடுவார் என்று. ராம் அதிகம் படிக்கவில்லை என்பதை தவிர வேறு குறை ஒன்றும் அவனை சொல்ல முடியாது. பார்க்க நன்றாக இருப்பான். கை நிறைய சம்பாதனை. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கடுமையான உழைப்பாளி. என்ன சிக்கனம் என்று கொஞ்சம் கஞ்சத்தனம் செய்வான். அது பணத்திற்காக தாங்கள் இளமையில் கஷ்டப்பட்டதன் எதிரொலி.  

ராம் அவனுடைய பழைய சேர் நாற்காலியில் அமர்ந்திருந்தான். வைதேகி உள்ளே வந்ததும் பார்வையை அவள் மீது நிலைக்க விட்டான். வைதேகி ஏதாவது பேசுவாள் என்று ராம் எதிர்பார்க்க அவள் அங்கிருந்த பொருட்களில் பார்வையை ஒட்டியது போல அவனையும் ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அந்த பார்வையில் ஒரு முறைப்பு தெரிந்தது.

“இவ எப்போடா உன்னை சாதரணமா பாரப்பா ராம்”, என்று ராம் அவனுக்கு அவனே கேள்வி கேட்டுகொண்டான்.  

அவனருகில் வந்தாள். ராம் எதற்கு வருகிறாள் ஏதாவது சொல்லப் போகிறாளா என்று எதிர்பார்போடு பார்க்க. அவள் கையில் இருந்த பால் சொம்பை அந்த மேஜை மேல் நங்கென்று வைத்தாள்.” நீ குடித்தால் குடி, குடிக்காவிட்டால் விடு”, என்பது போல இருந்தது அவளின் செய்கை.

ராமிற்கு அவளின் செய்கையில் சிரிப்பு வந்தது. இருந்தாலும் முயன்று அடக்கி முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டான்.

பின்பு அந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டாள்.  ராம் ஏதாவது பேசுவானா என்று அவள் எதிர்பார்க்க அவனும் எதுவும் பேசவில்லை.  

அமைதியாகவே சிறிது நேரம் கழிந்தது. எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது என்று எண்ணியவள் அவன் முன்னிலையில் படுப்பதற்கு கூச்சமாக இருந்த போதும், வேறு வழியில்லாமல் படுத்துக் கொண்டாள்.

அவள் படுக்க ஆயத்தமானதை பார்த்த ராம். “சரியா சாப்பிட கூட இல்லை. இந்த பாலையாவது சாப்பிட்டிட்டு படு”, என்றான்.

அவன் பேசுவதற்காகவே காத்திருந்தவள் போல உடனே எழுந்து அமர்ந்தவள். “என் மேல அவ்வளவு அக்கறையா உங்களுக்கு”, என்று சுள்ளென்று கேட்டாள்.

ராம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாற. “அவ்வளவு அக்கறை இருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே. ஏன் செய்யலை”, என்று அவனிடம் சண்டை பிடித்தாள்.

என்ன பேசினால். இவள் என்ன பேசுகிறாள் என்று ராமிற்கு ஆயாசமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் அவனின் பதிலுக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது புரிய. “நான் தான் என்னால நிறுத்த முடியாதுன்னு சொன்னேன் இல்லை வைதேகி. முடிஞ்சா நீ நிறுத்திக்கன்னு தானே சொன்னேன்”, என்றான் தணிவாகவே.

“நான் என்னால முடியலைன்னு தானே உங்ககிட்ட சொன்னேன். நான் சொன்னதை எங்கப்பா கேட்கவே இல்லை”, என்று எரிந்து விழுந்தாள்.

“நீ சொல்லியே கேட்கலைன்னா நான் சொல்லி எப்படி கேட்பாங்க. நான் அப்பவும் சொன்னேன். உனக்கு பிடிக்கலைன்னு. அவர் ஆனா ஒத்துக்கலை”, என்றான்.

இதை கேட்டதும் வைதேகிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. “மண்ணாங்கட்டி.”, என்றாள் கோபமாக. “நான் உங்களுக்கு தான் பிடிக்கலைன்னு சொல்ல சொன்னேன். எனக்கு பிடிக்கலைன்னு உங்ககிட்ட சொல்லி நான் சொல்லனுமா. அதை நானே சொல்ல மாட்டேனா”, என்றாள் ஆவேசமாக.

“உங்கப்பா கிட்ட என்னால அப்படி சொல்ல முடியாது. அவர் பேச்சை என்னால தட்ட முடியாது. எங்கம்மா அப்பா இறந்த போது எங்களுக்கு உதவி பண்ணினது அவர்தான். நாங்க ஓரளவுக்கு நல்ல நிலைமையில இருக்கம்னா அதுக்கு காரணமும் அவர் தான். என்னால இப்போ மட்டுமில்லை எப்போவுமே எதுக்குமே அவர் பேச்சை தட்ட முடியாது”, என்றான் உறுதியாக. 

“என்ன இது?. பேச்சை தட்ட முடியாது அது இதுன்னு வெங்காயம் மாதிரி பேசற.”, என்றாள் ஏக வசனத்தில். “நான் தான் உன்னை பிடிக்கலை பிடிக்கலைன்னு அந்த கத்து கத்தறேனே எங்கப்பாவுக்கு தான் புரியலைன்னா உனக்கு கூடவா புரியலை”, 

“அவர் எங்களுக்கு நிறைய செஞ்சிருக்கார்”, என்றான் மறுபடியும்.   

“அப்போ நன்றிக்கடனா தான் என்னை நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டயா”, என்று கேட்டாள். 

இதற்கு என்ன பதில் சொல்வது ஆமாம் என்று சொல்வதா. சொன்னால் கடைசிவரையில் அதுவே வாதமாக நின்றுவிடும். அதுதான் உண்மை என்றாலும் அதை சொல்ல விருப்பமில்லை. அதே சமயம் இல்லை என்று சொல்லவும் விருப்பம் இல்லை.

அமைதியாகவே இருந்தான்.

அவனை ஓங்கி ஒரு அப்பு விட விடவேண்டும் என்று ஆத்திரமாக வந்தது வைதேகிக்கு. திருப்பி அடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயத்தில் அமைதியாக இருந்தாள்.

“எனக்கு பாலும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். உன்கிட்ட பேசறதே வேஸ்ட்”, என்று சொல்லியபடி மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

இருந்த கோபத்திற்கு தூக்கம் வருவேனா என்றது. இருந்தாலும் ஒரு பக்கமாக படுத்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். 

இனி இவளுடனான வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ராமிற்கு சுத்தமாக புரியவில்லை. தான் என்ன செய்யவேண்டும் என்று அறியவில்லை. தான் அவளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை.

இவளுடனான் தனது வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கேள்வி மனதில் பாரமாக ஏறி அமர்ந்து கொண்டது.  சுவாமிநாதனுக்காக பார்த்து தான் தவறு செய்து விட்டோமோ. இவள் தன் மனைவியாக மாறவே மாட்டாளா என்ற கவலை உதித்தது.

இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைத்தவன் வைதேகியை  பார்க்க. அவள் கண் மூடி இருந்தது. உறங்கிவிட்டாளா இல்லையா தெரியவில்லை. இவன் கட்டிலின் மறுபுறத்தில் படுத்து, விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.  

Advertisement