Advertisement

அத்தியாயம் ஐந்து:

ராமின் வேண்டாத எண்ணங்கள் வலுப்பெற்ற போதும் அவனால் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லவே முடியவில்லை. சுவாமிநாதனின் பால் உள்ள நன்றி உணர்ச்சி தடுத்தது.

ஒருவகையில் இந்த பெண்ணே திருமணத்தை நிறுத்திவிட்டால் பரவாயில்லை என்று வைதேகியை பற்றி நினைத்தான். இல்லை அவள் இப்படி சொல்லுகிறாள் என்று சுந்தரேசனிடம் சொல்லுவோமா என்று எண்ணினான்.

பிறகு அவர் இப்போது வந்த சொந்தம் சுவாமிநாதன் மாமாவை தனக்கு எவ்வளவு நாளாக தெரியும். அவரை விட்டு அவரின் மகளை பற்றி அடுத்தவரிடம் சொல்லுவதா என்று யோசித்தவன் பேசாமல் அவரிடம் பேசுவோமா என்று எண்ணத் துவங்கினான். 

வைதேகியோ இவனுடன் பேசியபிறகு இவன் திருமணத்தை நிறுத்துவது போல தெரியவில்லையே இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தாள். அவன் தன் அப்பாவிடம் தன்னை காட்டிக்கொடுப்பான் என்று எண்ணவில்லை.

எப்படியாவது வைதேகி சொல்வது போல இந்த திருமணம் நின்றால் பரவாயில்லை என்று எண்ணிய ராம். சுவாமிநாதனுக்கு அழைத்து, “வைதேகிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை போல. என்ன செய்யலாம் தொடரலாமா இல்லை நிறுத்தலாமா”, என்று அவருடைய போக்கிலேயே போய் கேட்டான்.

இதை கேட்ட சுவாமிநாதனுக்கு வைதேகி மேல் அடக்க முடியாத கோபம் வந்தது. இருந்தாலும் அந்த கோபத்தை வெளியில் ராமிடம் காட்டாமல் மறைத்து. “அவ உலகம் தெரியாதவ ராம் சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பேசறா நீ அதையெல்லாம் மனசுல வெச்சிக்காத அவ மேல ஒண்ணும் கோபமெல்லாம் இல்லையே”, என்றார் தன்மையாக.

“அதெல்லாம் இல்லை மாமா அவளுக்கு இஷடமில்லைன்றப்போ நாம ஏன் கட்டாயப்படுத்தனும்னு தான் யோசனை”, என்றான் நைச்சியமாக.

“அதெல்லாம் நீ ஒண்ணும் நினைச்சிக்காத ராம். அவ தெரியாம பேசறா”, என்று ஆரம்பித்தவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். அவர் பதில் சொல்லிய விதத்திலேயே அவர் திருமணத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்று ராமிற்கு தெரிந்துவிட்டது.

அவர் நம்பிக்கையை குலைக்க மனமில்லாமல் தனக்கு திருமணத்திற்கு சம்மதம் என்பது போலவே சொன்னான்.

“இதை நீ யார்கிட்டயும் சொல்லலையே ராம்”, என்றார்.

“இல்லை மாமா. சொல்லலை சொல்லவும் மாட்டேன்”, என்றான்.

பிறகே நிம்மதியாக போனை வைத்தார். “யாருக்காவது பெண்ணே மாப்பிள்ளையிடம் போன் செய்து இந்த திருமணத்தை நிறுத்த சொன்னது என்று தெரிந்தால் தங்களின் வளர்ப்பை பற்றி என்ன நினைப்பர்”, என்ற கவலை அவருக்கு.

முடிவெடுத்துக்கொண்டார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை முடிக்க. ராமிடம் பேசியது பற்றி வைதேகியிடம் எதுவும் கேட்கவில்லை. இன்னும் அவளின் எதிர்ப்பை தூண்டி விடவேண்டாம் அவளாக அடங்கட்டும் என்று விட்டார்.

இரண்டு நாட்களிலேயே திருமணத்தை உறுதி செய்யும் வைபவத்தை வைத்து, அன்றே திருமணத்திற்கு நாளும் குறித்துவிடலாம் என்று சுந்தரேசனிடம் பேசினார்.

அப்பா இவ்வளவு அவசரப்படுவார் என்று வைதேகியும் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இனி மறுத்தாலும் அவர் கேட்கபோவதில்லை என்று நன்கு புரிந்தது. இருந்தாலும் விடாமல் தந்தையுடன் திருமணத்தை எதிர்த்து போராடினாள். அவர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. அதிலும் அவரின் உடல் நிலையை காட்டி அதிகம் பயமுறுத்தினார். 

“ஏன்? அப்படி என்ன இந்த மாப்பிள்ளையிடம் இவ்வளவு சொல்லியும் ஒத்துக்கொள்ளா மறுக்கிறார். ஏன்?”, என்று வைதேகிக்கு புரியவேயில்லை எல்லாம் ராமின் மீது கோபமாக திரும்பின. 

அவளின் கோபத்தை எல்லாம் சட்டை செய்யாமல். “இன்னும் இரண்டு நாளில் திருமணம் உறுதி செய்ய சொந்தங்கள் எல்லாம் வருகிறார்கள். அவர்களின் முன்னாள் நல்ல பெண்ணாக நடந்து கொள்ள வேண்டும்”, என்று சொன்னார் அவளின் தந்தை.

“நல்ல பொண்ணா நடந்துக்கனும்னா. அப்போ இவ்வளவு நாளா நான் கெட்ட பொண்ணாவா இருந்தேன்”, என்றார் அவரிடம் நேரடியாக.

“தோ! இப்படி எதிர்த்து எதிர்த்து பேசற பார்த்தியா இது நல்ல பொண்ணுக்கு அழகில்லை. ராம் தான் என்னோட மாப்பிள்ளை அதுல எந்த மாற்றமும் இல்லை நீ எந்த குளறுபடியும் பண்ணக்கூடாது”, என்றார் நல்ல விதமாகவே.

“எப்படியோ என்னை சிக்க வைக்கறதுன்னு முடிவு பண்ணிடீங்க. அப்புறம் எதுக்கு சப்பை கட்டு கட்டுறீங்க”, என்று தைரியமாக அவரை எதிர்த்து பேசி அவரிடம் சொல்லி சென்றாள்.

இப்போது தான் எடுத்த முடிவு இன்னும் சரியாக தோன்றியது சுவாமிநாதனுக்கு. இவளுடைய வாய்க்கு யார் இவளுடன் அனுசரித்து போவார்கள், ராம் தான் அதற்கு பெஸ்ட் சாய்ஸ் என்று முடிவே பண்ணிவிட்டார்.   

அன்று காலை திருமணத்தை உறுதி செய்வதற்கென்று ஒரு கூட்டமே வந்து இறங்கியது. அவளுக்கு அப்படித்தான் தோன்றியது, உறவுகள் எல்லாரும் கூட்டம் போல. மாடியில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தாள். கிட்டதட்ட நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே ஒரு நூறு பேர் சேர்ந்திருந்தனர். இரண்டு பஸ் பேசி வந்திருந்தனர்.

அதில் ராமை அவள் கண்கள் கோபத்துடன் முறைத்தன. “நான் தான் பொண்ணு என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. ஆம்பிள்ளை தானே இவன் உன்னை எனக்கு பிடிக்கலைன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்றேன். கொஞ்சம் கூட சொரணையே இல்லாம மாப்பிள்ளைன்னு வந்து நிக்கறான் பாரு”, என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டித் தீர்த்தாள்.

அவள் திட்டுவதற்கு சற்றும் சம்மந்தமேயில்லாமல் வேட்டி சட்டையில் பாந்தமாக இருந்தான் ராம். அவன் விரும்பியோ விரும்பாமலோ மாப்பிள்ளை களை அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது. 

இங்கே இவர்களின் வீட்டில் அப்பாவும் பெண்ணும் மட்டுமே. இருந்த ஒன்றிரண்டு சொந்தங்களை சுவாமிநாதன் அழைத்திருந்தார் தான், ஆனால் அவர்கள் தான் இன்னும் வந்தபாடில்லை.

மாலதிக்கும் மனோகரனுக்கும் இப்போது தான் சற்று திருப்தி. முன்பு பார்த்த பெண் தங்களின் அண்ணியாக வரப்போவதில்லை என்றறிந்து. அவர்களின் அண்ணியை பார்க்க ஆவலாக இருந்தனர். மாலதியும் ரமாவுமே சேர்ந்து சுத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் மணப்பெண் எங்கே என்று கண்களாலேயே தேடினர். 

எங்கே வைதேகியை அலங்கரிக்க கூட ஆள் இல்லை. அவளே அவளை அலங்கரிக்க ஆள் சொல்லிகொள்வாளா என்ன? இது அவளின் இஷ்டப்பட்டா நடக்கிறது. இவர்கள் வந்து இறங்கின உடனே லீலாவதியையும் ரமாவையும் மாலதியையும் பெண்ணை பார்க்க அனுப்பினார் சுந்தரேசன்.

“உள்ள போங்க அண்ணி. அவ மேல அவ ரூம்ல இருக்கா”, என்று ரூமிற்கு வழிகாட்டினார் சுவாமிநாதனும்.

மாலதிக்கு இவர்கள் வீட்டை பார்த்ததுமே ஆச்சர்யம். இவர்கள் நல்ல வசதி போல என்று எண்ணியவள். இவ்வளவு பெரிய வீட்டில் இருக்கும் பெண் எப்படி நம்முடைய சாதாரண வீட்டில் வந்து இருப்பார்கள் என்றிருந்தது.

அந்த வீட்டின் செல்வச் செழிப்பை பார்த்து வியந்து கொண்டே தான் அத்தையுடன் மாடி ஏறினாள் மாலதி.

இதுவரை அவள் வைதேகியை பார்த்ததில்லை. சுவாமிநாதன் மாமாவை பார்த்திருந்தாலும் அவர்களின் வீட்டு ஆட்களை பார்த்ததில்லை. முதன் முறையாக வைதேகியை பார்க்க. “நல்ல அழகாக இருக்கிறார்களே இவர்கள்”, என்று தான் தோன்றியது.

வைதேகிக்கு இவர்கள் மூவரையும் பார்த்தவுடன் யார் என்று தெரியவில்லை. லீலாவதியே அறிமுகம் செய்து வைத்தார்.

“நான் உன் பெரியம்மா. இது என் மக ரமா. உனக்கு தங்கச்சியாகனும், இது ராமோட தங்கச்சி மாலதி உனக்கு நாத்தனாரகனும்”, என்று அறிமுகம் செய்து வைத்தார்.

வைதேகி சிநேகமாக புன்னகை செய்தாள். புன்னகை செய்து தானே ஆக வேண்டும் மனதில் இருந்த கோபத்தை எல்லாம் அவர்கள் மீது காட்டக்கூடாது என்ற நாகரிகம் தெரிந்தவள் தானே வைதேகி.

அவளை பார்த்தால் அவள் ஒரு சுரிதாரிலேயே இருந்தாள். “ நீ இன்னும் தயாராகலையா”, என்றார் லீலாவதி.

“என்ன சொல்வது”, என்று தெரியாமல் விழித்தாள்.

“என்ன புடவைம்மா கட்டபோற”, என்றார் லீலா.

“தெரியலை”, என்றாள். அவள் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை.

“என்னம்மா தெரியலைன்னு சொல்ற. முன்னமே முடிவு பண்ணலையா”, என்றார்.

“இல்லை பெரியம்மா”, என்றாள்.

“சரி, உங்கிட்ட என்ன இருக்கு காட்டு நாங்க சொல்றோம்”, என்றார் லீலா.

அலங்கரித்துக்கொள்ள மனமில்லாமலேயே அவள் நான்கைந்து பட்டுப்புடவைகளை எடுத்துப் போட்டாள்.

எல்லாமே அவளுக்கு நன்றாக இருக்கும் போல தான் லீலாவிற்கு தோன்றியது. ரமாவையும் மாலதியையும் பார்க்க. மாலதிக்கு ம் இதைபற்றி ஒண்ணும் தெரியாது, அவளிடம் இது போல எல்லாம் இல்லை. பட்டுபுடவை வியாபாரம் அவள் அண்ணன் செய்தாலும் அவள் இதுபோல எல்லாம் எடுத்துக்கொண்டது இல்லை. இதையெல்லாம் பார்க்க அதிசயமாக இருந்தது. வைதேகி அவர்களின் முன்னால் தான் பீரோவை திறந்து எடுத்துப்போட்டாள். இவ்வளவு உடைகளா என்றிருந்தது மாலதிக்கு.  

சாதாரண தினமாக இருந்தால் வைதேகியே அற்புதமாக தேர்வு செய்வாள். இன்று இருக்கும் மனநிலையில் ஏதோ ஒன்று கட்டினால் போதும் என்றே இருந்தது.

தனது அம்மா தேர்வு செய்ய திணறுவதை பார்த்த  ரமா. “அம்மா இது நல்லா இருக்கும்”, என்று ஒன்றை எடுத்துக்கொடுக்க.

“இதை கட்டிகிறியாம்மா”, என்று வைதேகியிடம் கேட்டார் லீலாவதி.

“சரி பெரியம்மா”, என்றவள் அதை போய் கட்டிக்கொண்டு வர. வைதேகிக்கு நீளமான கூந்தல். அதை பின்னி பூவைத்து அலங்கரித்தார் லீலாவதி.

அதற்குள், “பொண்ணை அழைச்சிட்டு வரலையா”, என்று சுந்தரேசன் குரல் கொடுக்க. “ஐந்து நிமிடம்”, என்றவர். “நகையெல்லாம் எடுத்து போட்டுக்கம்மா”, என்றார்

“எதை போடட்டும் பெரியம்மா”, என்று அவரையே கேட்டாள் வைதேகி.

“என்ன இருக்குமா உன்கிட்ட ப்ளைன் செட்டா, கல்லு வச்சதா.”,

“நிறைய இருக்கு பெரியம்மா. ப்ளைன், கல்லு வச்சது, ஜெர்கான் செட், ரூபி செட், பியர்ல் செட் ,.”,என்று அவள் அடுக்கிகொண்டே  போக. மாலதி மனதுக்குள் வாயை பிளந்தாள். தன்னிடம் எதுவும் கிடையாதே என்று. அவளின் அண்ணன் இன்னும் அவளுக்கு நகை என்று பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவள் போட்டிருக்கும் தங்க செயின்னும் வளையலும் தான் அவளிடம் உள்ளது.  

“எல்லாத்தையும் வீட்லையா வெச்சிருக்கீங்க”, என்று கேட்டார் லீலாவதி.

“அப்பா நேத்தே எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டார் பெரியம்மா”, என்றாள்.

“சரி, நீயே எதாவது போட்டுட்டு வாம்மா, கீழ அவசரபடறாங்க பாரு”, என்றார்.

அவளே தான் கட்டியிருந்த லேவேண்டேர் கலர் பட்டுபுடைவைக்கு எடுப்பாக ரூபி செட் அணிந்து கொண்டாள்.

ஏற்கனவே வைதேகி அழகு தான். இப்போது கண்களுக்கு பளிச்சென்று ஒப்பனையில் மிகவும் அழகாக தெரிந்தாள் வைதேகி.

மணப்பெண் என்று அவளை அழைத்துக்கொண்டு சபையின் நடுவில் வந்தார் லீலாவதி. எல்லாரும் பெண்ணை அப்போதுதான் முதல் முதலாக பார்த்தனர். பார்த்த எல்லோருக்கும் ராமின் அதிர்ஷ்டத்தை நினைத்து பொறாமையாக இருந்தது. ஒரே பெண் அத்தனை சொத்துக்கும் வாரிசு என்பதைவிட. அதெல்லாம் இல்லாமல் இருந்தால் கூட கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லலாம் அவ்வளவு அழகாக இருந்தாள் பெண்.

எல்லோருக்கும் சற்று பொறாமை கலந்த திருப்தி.

சுவாமிநாதனும் வைதேகி ஏதாவது கலாட்டா செய்துவிடுவாளோ என்று பயந்து கொண்டு இருந்தார். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை. அவரும் நிம்மதியாக உணர்ந்தார்.

எல்லாரும் ஒரு வகையான திருப்தியில் இருக்க. சந்தோஷமாக இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் அமைதியாகத்தான் இருந்தனர். ஒருவரை ஒருவர் தலைநிமிர்ந்தும் பார்க்கவில்லை.

மனோகருக்கு இவ்வளவு அழகான பெண் தனக்கு அண்ணியா என்றிருந்தது. லக்ஷ்மி பாட்டிக்கும் திருப்தியே. “சபையில எல்லோரையும் வணங்கிக்கோம்மா”, என்று ஒரு சவுண்ட் கொடுத்தார்.

“எப்படி”, என்று புரியாமல் வைதேகி நிற்க. “ஒரு வணக்கம் சொல்லுமா”, என்று யாரோ ஒரு பெருசு குரல் கொடுத்தது.

எல்லோரையும் பார்த்து ஒப்புக்கு வணங்கினாள் வைதேகி. அப்போதுதான் தலை நிமிர்ந்து அவளை பார்த்தான் ராம். பட்டுப்புடவையில் கண்ணை பறித்தாள் வைதேகி.

அவனின் கண்களை எட்டிய அவளின் அழகு. அவனின் மனதை எட்டியதா தெரியவில்லை. சாதாரணமாகத்தான் பார்த்தான். அவளை அவனாவது பார்த்தான். அவள் பார்க்க கூட இல்லை. அவள் யாரை நோக்கியும் கண்களை ஒட்டவே இல்லை.

குனிந்த தலை நிமிரவில்லை. யாரையும் பார்க்க பிடிக்காமல் அவள் தலையை குனிந்து நிற்க. பெண் வெட்கப்படுகிறது என்று சிலர் நினைக்க. குனிந்த தலை நிமிராத பெண் என்று சிலர் சிலாகிக்க. மொத்தத்தில் அவளின் குணம் தெரியாமல் எல்லாரும் அவளை பற்றி நல்ல விதமாகவே நினைத்தனர்.

“இவள் எப்படி இப்படி வந்து நிற்கிறாள். என்னை பிடிக்கவில்லை என்று சொன்னாள். அப்புறம் எப்படி நிற்கிறாள்”, என்று ராமிற்கு ஒரே யோசனை.

பின்பு திருமண தேதி குறிக்கப்பட்டது. ஒரு மாதத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. இவ்வளவு விரைவாகவா என்று ராமிற்கும் இருந்தது வைதேகிக்கும் இருந்தது. நாள் இருக்கும் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தாள் வைதேகி. ஒரு மாதத்தில் திருமணம் என்றது மனதிற்குள் அவளையறியாமல் ஒரு பயப் பந்து உருண்டது.

ராமிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணமா ஏற்பாடுகளை எப்படி செய்வது, பணம் எவ்வளவு செலவாகும். என்று மனம் கணக்கு போட ஆரம்பித்தது. வேறு எதுவும் தோன்றவில்லை. மனம் திருமணத்தை ஆர்வமாக எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இது வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சி என்றே எடுத்துக்கொண்டது.

மிக மிக முக்கிய நிகழ்ச்சி என்றுணரவில்லை.

அதற்குள் யாரோ ஒரு பெருசு கேட்டது. “இப்போ தான் பொண்ணு மூணாவது வருஷம் படிச்சிட்டு இருக்கா. அவ படிப்பு என்னவாகும்”, என்றதற்கு.

சுந்தரேசன், “அதுக்கு என்ன பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும். அவ அப்பா வீட்ல இருந்து படிச்சாலும் சரி. புருஷன் வீட்டுக்கு வந்து படிச்சாலும் சரி. அதெல்லாம் அவங்க முடிவு பண்ணிக்கட்டும்”, என்று பட்டென்று பேச்சை முடித்து விட்டார்.

அவருக்கு குடும்ப விஷயங்கள் சபைக்கு வருவது பிடிக்காது அதனால் பட்டென்று பேச்சை முடித்து விட்டார்.

வைதேகியின் கல்லூரி காஞ்சீபுரத்திற்கும் இவளின் வீட்டிற்கும் நடுவில் இருந்தது. இங்கிருந்து போகும் தூரமே அங்கிருந்து வரும்போதும்.  அதனால் தூரம் கவலையில்லை.

பிறகு வீட்டிலேயே  விருந்து பரிமாறப்பட்டது. மணமகனாயிருந்தும் மேற் பார்வை பார்க்க ஆள் இல்லாமல். சுவாமிநாதனை அலைய விட மனமில்லாமல்.  எல்லாவற்றையும் ராமே இழுத்து போட்டுகொண்டு செய்யும்படி ஆயிற்று. அவனுக்கு உதவ கூட மனோகரனையும் மோகனையும் அனுப்பினார் சுந்தரேசன்.

நல்ல பலமான விருந்து, அவரால் ஓடியாடி எல்லோரையும் கவனிக்க முடியாவிட்டாலும் பணத்தை தண்ணீராய் செலவு செய்திருந்தார் சுவாமிநாதன். ராமிற்கு இவர் ஏன் இவ்வளவு தடபுடல் செய்கிறார் என்றிருந்தது. இதற்கே இவ்வளவு செலவு என்றால் இன்னும் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வார் என்று அவன் மனம் கணக்கு போட்டது.

அவன் மனம் பணம் கணக்கு போடுவதிலேயே இருந்தது. வைதேகியின் மனதை கணக்கு போட தவறிவிட்டது.

வைதேகி நடப்பதனைத்தையும் ஒரு இயலாமையில் பார்த்திருந்தாள். லக்ஷ்மி  பாட்டி அவளிடம் விடாமல் தொடர்ந்து பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார் . ராமாவும் மாலதியும் வைதேகியிடம் பேசுவதற்கு ஆர்வமாக இருந்தாலும் லக்ஷ்மி பாட்டியே அவளிடம் வளவளத்துக்கொண்டிருந்தார்.

கடனே என்று எல்லாவற்றிற்கும் வைதேகி பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவரின் கேள்விகனைகளால் ஓய்ந்து போயிருந்தவள், திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளையே கேட்கவும். இடக்காக பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

“உனக்கு சமைக்க தெரியுமா”, என்பது அவரின் முக்கியமான கேள்வி.

“நான் சாப்பிடற அளவுக்கு சமைப்பேன்”, என்றாள்.

“அப்போ மத்தவங்க”,

“இன்னும் யாரும் சாப்பிட்டதில்லை. சமைச்சு தர்றேன் நீங்க சாப்பிடறீங்களா”,

“நீ கேட்டதே நான் சாப்பிட்ட மாதிரி ஆகிடுச்சு. சரி அதைவிடு வீட்டு வேலையெல்லாம் தெரியுமா”, என்று அடுத்த கேள்விக்கு தாவினார்

“வீட்டு வேலைன்னா”,

“இந்த கூட்டுறது. பாத்திரம் கழுவறது”,

“எங்க வீட்ல அதுக்கெல்லாம் ஆள் இருக்கு பாட்டி”, என்றாள்.

“ஆனா அங்க இல்லையே“,

“அப்போ இவ்வளவு நாளா பாத்திரம் எல்லாம் கழுவாம நான் வந்து கழுவறதுக்காக காத்து கிடக்கா”,

“ஐயோ என்ன இந்த பெண் இப்படி பேசுது”, என்று லக்ஷ்மி பாட்டி நினைக்க. ரமாவுக்கும் மாலதிக்கும் சிரிப்பு.

“பாட்டி இதோட நிறுத்திக்கோ. இன்னும் கேட்ட. டெய்லி உன்னை வந்து கழுவி கொடுக்க சொன்னாலும் சொல்வாங்க”, என்றாள் ரமா அவரின் காதில் மெதுவாக.

“இந்த காலத்து பொண்ணுங்க சொன்னாலும் சொல்வீங்க அம்மா”, என்று நொடித்துக்கொண்டே இடத்தை விட்டு அகன்றார்.  மாலதிக்கும் ரமாவுக்கும் வைதேகியுடன் பேச வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் அவளின் முக பாவனையை பார்த்தே அவளுக்கு பேச விருப்பமில்லை என்று தெரிந்து அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அடுத்து கல்யாண வேலைகள் ராமின் முன் அணிவகுத்து நின்றன. அன்றே சுந்தரேசனும் சுவாமிநாதனும் அவனுடன் அதுபற்றி கலந்து பேசினர். அதையெல்லாம் எப்படி முடிப்பது என்ற சிந்தனைகள் ஆக்கிரமித்தன.  அவனின் யோசனைகள் அதனையே நினைத்தன. அவனுக்கும் கல்யாணமும் ஒரு வேலையாகிப்போனது.

வைதேகியுடனான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.  திருமணத்திற்கு ஆதாரம், அடிப்படையான அன்பு, நம்பிக்கை இதெல்லாம்  ஒருவர்  மேல் மற்றொருவருக்கு மிகவும் அவசியம் என்றெல்லாம் அவன் எண்ணவில்லை. திருமணத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் அவன் எண்ணவில்லை. 

ஒரு வழியாக சொந்தங்கள் மாலை வரை எல்லாரும் இருந்து கிளம்பினர். அவர்கள் வீடு செல்லும் பொறுப்பை மனோகரிடமும் மோகனிடமும் ஒப்படைத்தார் சுந்தரேசன்.

ராம், மாலதி, ரமா, லீலாவதி மற்றும் சுந்தரேசன் அவர்களின் வண்டியில் செல்வது என்று முடிவாக. அவர்களுக்கு திருமணம் குறித்து பேசவேண்டிய சில விஷயங்கள் இருந்ததால் அவர்கள் மட்டும் பின் தங்கினர். 

சுந்தரேசனுக்கு திருமண உறுதியை நன்றாக முடித்து விட்ட திருப்தி அவரின் முகத்தில் தெரிந்தது.

“என்ன சுவாமிநாதா சந்தோஷம் தானே”, என்றார்.

“ரொம்ப சந்தோஷம் அண்ணா எல்லாத்தையும் முன்ன நின்னு செய்யறதுக்கு”, என்று சுவாமிநாதன் சுந்தரேசனின் புகழ் பாடினார்.

“சரி இப்போ நான் பேசற விஷயமே வேற. நீ வீட்டோட மாப்பிள்ளை கேட்கற ராம்க்கு அது தெரியுமா தெரியலையே”, என்றார்.

ராம்கு தெரியும் அவர் வீட்டோடு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கூறினார் என்று. ஆனால் அது மற்றவர்களிடம் அல்லவா தன்னிடமும் அதை எதிர்பார்ப்பாறா என்று இருந்தது. அவர் அதை எதிர்பார்த்தால் எப்படி அதனை மறுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவனின் யோசனைக்கு அவசியமே இல்லாமல். சுவாமிநாதனே சுந்தரேசனிடம் சொன்னார், “அது இப்போ எப்படி முடியும் அண்ணா. இன்னும் ரெண்டு கடமைகள் அவனுக்கு இருக்கே. அவனுடைய தங்கையும் தம்பியும். அது முடிச்சிட்டு எங்க கூட இருக்கட்டும்”, என்றார். சுவாமிநாதனுக்கே தெரியும் தனது தம்பி தங்கைகளின் திருமணம் முடியும் வரை அவனால் அது முடியாது என்று.

“அப்பாடா இவர் புரிந்து கொள்கிறார்”, என்றிருந்தது ராமிற்கு. இதை வைதேகி கேட்டுக்கொண்டு தானிருந்தால். “அப்போது நான் இவனின் வீட்டிற்கு போய் இருக்க வேண்டுமா”, என்றிருந்தது.

இதென்ன ஊர் உலகத்தில் இல்லாத யோசனை திருமணம் ஆனால் கணவன் வீடு செல்வது தானே முறைமை என்று அவளின் மனசாட்சி இடித்துரைத்தது. “இப்போது தானே அப்பாவின் உடம்பு சரியாகிக்கொண்டு இருக்கிறது அவரை விட்டு நான் எப்படி போவது”, என்றிருந்தது அவளுக்கு. அதை அங்கிருந்தவர்கள் முன்னிலையில் கேட்க செய்தாள்.

“அப்பாக்கு இப்போ தான் உடம்பு குணமாயிட்டு வருது. அவரை தனியா எப்படி விடமுடியும்”, என்றாள் பொதுவாக எல்லோரையும் பார்த்து. கூடவே சொன்னாள் “நான் அப்பாவோட தான் இருப்பேன். அவரை தனியாக விடமுடியாது”, என்று. இவள் என்ன இப்படி சொல்லுகிறாள் என்று ராம் அவளை பார்க்க. அவனின் பார்வையை அலட்சியமாக  எதிர்கொண்ட வைதேகி. அவனை பதிலுக்கு முறைத்து பார்த்தாள்.

Advertisement