Advertisement

அத்தியாயம் நான்கு:

“நான் அந்த மாதிரி எல்லாம் நினைச்சதே இல்லை அண்ணா”, என்றார் சுவாமிநாதன்.

“இதுவரை நினைக்கலைன்னா என்ன இனிமே நினைக்கலாமே”, என்றார் சுந்தரேசன்.

அவரை ஆச்சர்யமாக பார்த்தார் சுவாமிநாதன். வாய் விட்டு கேட்க கூட செய்தார். “இத்தனை நாளா அந்த பசங்களை கவனிக்காம இருந்தீங்க. இப்போ வந்து பொண்ணு தரச் சொல்றிங்க. எனக்கு ஒண்ணும் புரியலையே அண்ணா”, என்றார். 

“கவனிக்கலை அப்படின்னு கிடையாது. தூர நின்னு கவனிச்சேன். அதான் எனக்கு வேலையே இல்லாம நீதான் பார்த்துக்கிட்டியே. அவங்களும் என்னோட தேவைய உணரலை. நேத்து அவனா வந்தான். லீலாக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. இவ்வளவு நாளா நான் பசங்களை பார்த்துட்டு வந்திருக்கேன். அவளும் பக்கத்து வீடு பசங்களை கண்முன்னாடி பார்த்திருக்கா. நல்ல பசங்க. உனக்கு தெரியாததில்லை.  எனக்கு தூரம்ன்றதுக்காக அந்த பசங்க நல்ல பசங்க இல்லைன்னு ஆகிடாதில்லை”,

“நேத்து வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் நடத்திக் கொடுக்கணும்னு கேட்டான். சரின்னு சொன்னேன். லீலா கூட சொன்னா பேசாம நம்ம ரமாக்கு பார்க்கலாம்னு”,

“என்ன உங்க பொண்ணு ரமாக்கா”, என்றார் ஆச்சர்யமாக.

“ஆமா என் பொண்ணுக்கு தான். ஆனா ரெண்டு பெரும் ஏக ராசி, ஏக நச்சத்திரம், அது சரி வராது. காலையிலயே எங்களுக்கு தெரியும். இருந்தாலும் நம்ம ஜோசியர்கிட்டையும் கேட்டேன். அவரும் சரிவராதுன்னு சொல்லிட்டார். இல்லைன்னா ரமாக்கு பார்த்திருப்பேன்” என்றார்.

“உனக்கும் உடம்பு சரியில்லை. நல்லா இருக்கும் போதே பொண்ணுக்கு எல்லாம் பண்ணி பார்த்துடறது பரவாயில்லை. இது என் அபிப்ராயம் தான், கட்டாயம் இல்லை. யோசி நல்ல பையன், நமக்கு தெரிஞ்சவன், கெட்ட பழக்கம் இல்லை, பார்க்கறதுக்கும் நல்லா இருக்கான்”.

“படிக்கலையே அண்ணா”,

“அதுகென்னடா படிச்சவன் சம்பாறிக்கறதை விட அதிகமா சம்பாறிக்கறான். உன்னை நல்லா பார்த்துக்கறான். இந்த மாதிரி எங்கடா கிடைப்பான்”,

“பொண்ணுக்கு பிடிக்கனுமே அண்ணா”,

“நம்ம சொல்றதை தான்டா பொண்ணுங்க கேட்கணும். அவங்களுக்கு என்னடா தெரியும். அவங்களை ஒரு நல்லவன் கைல பிடிச்சு குடுக்கறது நம்ம கடமை தானே. இப்போ பாரு அது கூட படிக்கற பொண்ணு கூட ஓடிபோச்சு அந்த மாதிரி ஏடாகூடமா ஏதாவது நடந்துட்டா. யோசி எதுவும் கட்டாயமில்லை. என் எண்ணம் சொன்னேன்”, என்றார்.

அந்த பெண் ஓடிபோனதை பற்றியெல்லாம் பேசியதும் சற்று பயந்து விட்டார் சுவாமிநாதன்.

இவர்கள் பொண்ணுக்கு பிடிக்குமா என்று தான் பார்த்தார்கள் பையனுக்கு பிடிக்க வேண்டும் என்று எண்ணவேயில்லை. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மனதை பற்றி அவர்கள் நினைக்கவில்லை.

சுந்தரேசன் னும் நினைக்கவில்லை சுவாமிநாதனும் நினைக்கவில்லை. இது எதுவும் அறியாத ராம். “சரியான திமிர் பிடித்த பெண் போல”, என்று வைதேகியை பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். “தன்னை தெரிந்த மாதிரி கூட காட்டிக்கொள்ளவில்லை”, என்று அவனுக்கு கோபம் என்பதை விட ஒரு மாதிரி எரிச்சலாக உணர்ந்தான். சிறு வயதில் இருந்து கோபத்தை அடக்கி அடக்கியே பழகிவிட்டான்.

சிறுவயதில் நிறைய கோபம் வரும் அவனுக்கு. ஆனால் யாரிடமும் காட்டத்தான் முடியாது. அவனைவிட தம்பியும் தங்கையும் மிகவும் சிறியவர்கள் அவர்களிடமா கோபத்தை காட்டுவான். அவன் அன்னையும் தந்தையும் இருந்தவரை கோபத்தை எல்லாம் அடக்க மாட்டான். ஆனால் அவர்கள் இறந்த பிறகு கோபத்தை யாரிடமும் காட்டுவதில்லை.     

வைதேகி இன்னும் தன் சிநேகிதி சாந்தியை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். இந்த பெண் ஏன் இப்படி செய்துவிட்டது. ஓடிப்போய்விட்டாளா, “ஐயோ”, என்றிருந்தது.

ராமும் வைதேகியும் அவரவர் எண்ணங்களில் உளன்று கொண்டிருக்க. அங்கே சுந்தரேசன் சுவாமிநாதனிடம், “யோசிக்காத உன் கண்முன்னாடி வளர்ந்த பையன். உன் கைக்குள்ள இருப்பான். உன்னையும் பார்த்துக்குவான். கடைசி காலத்துல உன்னை பார்த்துகவும் ஆள் வேணும் தானே”, என்றவர்.

“என்னவோப்பா நான் என் மனசுல பட்டதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்”, என்றார்.

“நீங்க சொன்னா சரியா தான் அண்ணே இருக்கும். இருந்தாலும் நம்ம பொண்ணு கொஞ்சம் பிடிவாதம். பையன் படிக்கலைன்னு ஒத்துக்குமோ, ஒத்துக்காதோ.”, என்று சரியாக தன் மகளின் மனதை படித்தவறாக உரைத்தார்.

“நீ தான் பக்குவமா பேசி அவளை ஒத்துக்க வைக்கணும். கை மேல பையனை வெச்சிக்கிட்டு நாம எதுக்கு அங்க இங்க மாப்பிள்ளை போய் தேடனும். முக்கியமா நான் உனக்காக தான் சொல்றேன். உன்னை நல்லா பார்த்துக்குவான். வேற பையன் பார்த்தால் அவன் உன்னை பார்த்துக்குவான்னு சொல்ல முடியாது இல்லையா”, என்றார்.

கொஞ்சம் யோசித்த சுவாமிநாதன். “நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யலாம் அண்ணா”, என்றார் முடிவாக.

“முதல்ல நாளைக்கு பொண்ணு பார்க்கறதை நிறுத்து. நம்ம பொண்ணு ஜாதகத்தையும் பையன் ஜாதகத்தையும் பார்ப்போம். ஒத்துவந்தா மேல பேசலாம். ஏன்னா நம்ம பாட்டுக்கு பேசி ஒரு வேளை ஜாதகம் சரிவரலைன்னா எல்லாமே வீண் தானே.”,

அப்போதே சுவாமிநாதன் ராமிற்கு பார்த்துக்கொண்டிருந்த பெண் வீட்டாரிடம் பேசி. ஜாதகம் எங்களுக்கு சரிவரவில்லையென கூறி அவர்களிடம் இந்த சம்மந்தம் சரிவராது என்று விட்டார்.

அவர்கள் சாமான்யத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. நல்ல வரன் அவர்களுக்கு விட மனம் இல்லை. அவர்கள், “நாங்க நேர்ல வர்றோம் பேசலாம்”, என்று எவ்வளவோ சொன்னர். சுவாமிநாதன் பிடிவாதமாக மறுத்துவிட்டார். பெண் வீட்டில் வருத்தம் என்று தெரியும். அதற்கு தாங்கள் என்ன செய்ய முடியும் என்று விட்டுவிட்டார்.  

பிறகு வைதேகியின்  ஜாதகத்தை சுந்தரேசனிடம் கொடுத்தார்.

“நான் பார்த்துட்டு உனக்கு தகவல் சொல்றேன்”, என்று கிளம்பினார் சுந்தரேசன்.

இது எதுவும் ராமிற்கும் தெரியாது. வைதேகிக்கும் தெரியாது.

பிறகும் சிறிது நேரம் ராமை உடன் வைத்து பேசிகொண்டிருந்தார் சுந்தரேசன் அவனுடைய தொழில் பற்றி.

சுவாமிநாதனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான் இருந்தாலும் சுந்தரேசன் ராமின் வாயாலேயே எல்லாவற்றையும் சுவாமிநாதனுக்கு மறுபடியும் தெரியுமாறு செய்தார் அவரின் திருப்திக்காக.

இவர்கள் எல்லாம் பேசி முடிக்கும்வரை வைதேகி வெளியே வரவேயில்லை.

இவர்கள் கிளம்பும் சமயம் சுவாமிநாதன் அவளை வெளியே கூப்பிட. வந்தாள்.

“நான் கிளம்பறேன்மா”, என்ற சுந்தரேசன். “அப்பாவை பார்த்துக்கோமா”, என்றார் ஒப்புக்காக.

“சரி”, என்பது போல வைதேகி தலையாட்டினாலும். “என் அப்பாவை பார்த்துக்க நீங்க என்ன சொல்றது”, என்ற எண்ணம் தான் அவளின் மனதில் உடனே உதித்தது.

ராம், “இப்போ கூட என்னை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை. என்ன திமிர் இந்த பெண்ணிற்கு”, என்று நினைத்தான்.

கிளம்பும் போது. “எனக்கு எதுவும் தெரியாது அண்ணா நீங்களும் அண்ணியும் முன்ன நின்னு தான் எல்லாம் செஞ்சி கொடுக்கணும், நீங்க தான் எனக்கு எல்லாம்”, என்றார் சுவாமிநாதன்.

கேட்டதும் சுந்தரேசன் பயங்கர குஷியாகி விட்டார்.

“அதுக்கென்ன சுவாமிநாதா ஜமாய்ச்சிடலாம்”, என்றார் சுந்தரேசன் சந்தோஷமாக.

திருமண விஷயம் என்பது ராமிற்கும் புரிந்தது வைதேகிக்கும் புரிந்தது யாருக்கென்று தான் இருவருக்கும் புரியவில்லை. அவர்கள் இருவருக்கும் தான் என்பது தெரியவில்லை. 

சுந்தரேசனும் ராமும் வந்தது போலவே ஒருங்கே சென்றனர். சுந்தரேசன் அமைதியாக வந்ததால் ராமும் அமைதியாக வந்தான்.

மறுபடியும் அவர்கள அந்த ஜோசியரின் வீட்டிற்கு செல்ல இப்போது எதற்கு என்பது போல பார்த்திருந்தான் ராம்.

“நீயும் வா ராம்”, என்று சுந்தரேசன் அவனையும் உடன் அழைத்து சென்றார்.

இவர் எதற்கு நம்மையும் கூட்டிச் செல்கிறார் என்பது போல ராம் நினைக்க. உள்ளே செல்லவும் தான் விஷயம் தெரிந்தது. அவர் அவனின் ஜாதகத்தையும் வைதேகியின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்க்கிறார் என்று

மறுக்க வேண்டும் என்று தோன்றியது. சற்று பதட்டம் கூட ஆகிவிட்டான். “என்ன அந்த திமிர்பிடித்த பெண்ணுடன் எனக்கு திருமணமா. முடியவே முடியாது.”, ஆனால் எப்படி மறுப்பது என்று தெரியாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான். ஏனென்றால் பார்ப்பது அவனின் தாய்மாமன். ரொம்ப நாள் கழித்து சேர்ந்த உறவு விட முடியாது. பார்த்துக்கொண்டிருப்பது சுவாமிநாதன் மாமாவின் மகளை. அவர்கள் இப்போது கௌரவமாக வாழ காரணமானவர்.

மனம் ஊஞ்சலாட ஆரம்பித்தது.

ஜாதக பொருத்தங்களையும் ஜாதகங்களையும் ஆராய்ந்த ஜோசியர்  “எல்லாம் நல்லா பேஷா பொருந்தியிருக்கு. பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்கு. பையன் ஜாதகமும் அமோகமா இருக்கு. பொண்ணு ஜாதகமும் அமோகமா இருக்கு. கண்ணை மூடின்ட்டு கொண்டுவராலாம்”, என்று நல்ல வார்த்தை சொன்னார்.

சுந்தரேசன் முகம் பளிச்சென்று புன்னகையில் மலர. ராமின் முகம் இருட்டடித்தது.

வைதேகி அவனுக்கு சரிவருவாள் என்று சற்றும் அவனுக்கு தோன்றவில்லை. இதை எப்படி சுந்தரேசனிடம் சொல்வது என்று அவன் தயங்கிக்கொண்டிருக்க.

அவன் தயக்கம் அவருக்கு சற்றும் புரியாமல் அவனிடமும் எதுவும் கேட்காமல் சுவாமிநாதனுக்கு உடனே போன் செய்த சுந்தரேசன், “ஜாதகம் நல்லா பொருந்தி வருது. நல்ல படியா கல்யாணம் பண்ணலாம்னு எங்க ஜோசியர் சொல்றார்”,

“நீயும் யாரையாவது பார்க்கணும்னா பார்த்துக்கோ. நேரடியா  நிச்சயம், கல்யாணம்னு போயிடலாம். பொண்ணு பார்க்கற நிகழ்ச்சி எல்லாம் கூட தேவையில்லை. அதான் பொண்ணும் பையனும் பார்த்துட்டாங்க இல்லை”, என்று எல்லாவற்றையும் அவரே முடிவெடுத்தார். 

“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி அண்ணா. எதுக்கும் பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடறேன் அண்ணா”, என்றார்

“கேக்கறது என்ன கேக்கறது. இதுதான்னு சொல்லு சுவாமிநாதா. இந்த காலத்து பசங்க அதையும் இதையும் சொல்லுவாங்க. நமக்கு தெரியாத நல்லது கெட்டதா அவங்களுக்கு தெரியப்போகுது. ஏற்கனவே பாரு கூட படிக்கற பொண்ணு ஓடிப்போயிடுச்சுன்னு அவனவன் வந்து கேள்வி கேட்கறான். நம்ம பொண்ணு அப்படியெல்லாம் செய்யதுன்ற நம்பிக்கை இருந்தாலும். நம்ம இருக்கிற ஜாக்கிரதைல இருக்கனும்.”, என்று சுவாமிநாதனை நன்கு பிரைன் வாஷ் செய்தார்.

எப்பொழுதும் எடுத்த காரியத்தை முடித்தே ஆகவேண்டும் சுந்தரேசனுக்கு. சுருக்கமாக சொன்னால் விடாக்கொண்டர். அவர் மனதில் ராமிற்கும் வைதேகிக்கும் முடிச்சு போட்டு விட்டார். ஏன் போட்டார் எதற்கு போட்டார் அவருக்கே வெளிச்சம்.  ராம் அவரே எல்லாம் என்று சொல்லிவிட்டனல்லவா. அதனால் அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்க கங்கணம் கட்டிகொண்டார். எப்படியாவது அதை இப்போது நடத்தியே ஆக வேண்டும் அவருக்கு.    

அவ்வளவு அக்கறையாக சுந்தரேசன் சொல்லவும். அவரின் வார்த்தைகளில் சுவாமிநாதன் விழுந்தே விட்டார். விழுந்தவர் எடுத்த முடிவு ராம் தான் அவரின் மாப்பிள்ளை என்பது வைதேகியை கேட்காமலேயே.    

எல்லாம் ராம் கேட்டே இருந்தான் அவரை எதிர்த்து எப்படி பேசுவது என்பது தெரியவில்லை. புதிதாக முளைத்த சொந்தம் என்பது ஒரு புறம். மற்றொரு புறம் அவர் திருமணத்திற்கு பேசுவது சுவாமிநாதனின் மகளை. அவர் இல்லை இன்று இவனும் இவன் தம்பியும் தங்கையும் எந்த நிலையில் இருந்து இருப்பார்கள் என்று கூட தெரியாது.

கட்டாயம் அவரின் மகளை அவனால் மறுக்க முடியாது. ஆனால் அதே சமயம் அவளை திருமணம் செய்து கொள்ளவும் பிடிக்கவில்லை என்பது தான் உண்மை.  வைதேகியின் அழகு முகம் மனக் கண்ணில் தெரிந்தது. அப்போது கூட அவன் மனம் அசையவில்லை. இதற்கு முன்னாள் பார்த்த அந்த குண்டுப் பெண்ணே பரவாயில்லை என்பது போல தோன்றியது.  

என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான். சுவாமிநாதன் மாமாவின் பெண்ணை மறுக்க முடியாது. நன்றி உணர்ச்சி ஒரு பக்கம். தன் மனம் ஒரு பக்கம் என்று தத்தளித்தான். தான் சூழ்நிலை கைதியானது அவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது.

சுந்தரேசன் இதையெல்லாம் அறியாதவராக. “என்ன ராம் இப்போவே நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டு போயிடலாமா”, என்றார்.

இவர் என்ன முன்னால் பார்த்த பெண் வீட்டை விட இவ்வளவு அவசரப்படுகிறார் என்று நினைத்தவன். அதை வெளியே சொல்ல முடியாமல், “உங்க இஷ்டம் மாமா”, என்றான்.

“இரு உங்க அத்தையையும் கேட்டுட்டு. சுவாமிநாதனையும் இன்னொரு முறை கேட்டுட்டு. நாளைக்கு வந்து குறிச்சிக்கிறேன். நாளைக்கும் நல்ல நாள் தான்”, என்றார் அவராகவே அவ்வளவு உற்சாகமாக. 

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தான் ராம்.

அங்கே வைதேகியின் நிலைமை அதற்கு மேலே. அவளை அழைத்த அவளின் தந்தை. “ராம் தான்மா நான் உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை”, என்றார்.

அவர் சொன்னவுடனே வைதேகிக்கு இவர் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.

இதுவரை சுவாமிநாதன் அவளிடம் அவளின் திருமணத்தை பற்றியே பேசியதில்லை. இதில் திடீரென்று வந்து இவன் தான் உன் மாப்பிள்ளை என்று சொல்கிறார். அவன் வேறு படிக்காதவன். என்னிடம் பேசும்போதே அதட்டி உருட்டி மிரட்டுகிறான். நான் எப்படி அவனை திருமணம் செய்து கொள்வது. எனக்கு அவனை பிடிக்க வேண்டாமா என்றிருந்தது.

கொஞ்சம் தைரியமான பெண் தான் வைதேகி, தந்தையிடம் மரியாதை கலந்த ஒதுக்கமே தான் தவிர பயமெல்லாம் கிடையாது, அவளின் அன்னை அவளை தைரியமான பெண்ணாகத் தான் வளர்திருந்தார். தந்தையிடம், “முடியாது”, என்று சொல்வது என்று முடிவெடுத்துக்கொண்டாள். 

“அப்பா எனக்கு இப்போ எதுக்குப்பா கல்யாணம். படிப்பை முடிச்சிடறேன்பா”, என்றாள் முதலில் அதை தள்ளி போடும் விதமாக.

“இல்லை ம்மா எனக்கும் உடம்பு கெட்டுடுச்சி. நாளைக்கு உங்கம்மா மாதிரி எனக்கும் ஏதாவது ஆகிட்டா உன்னோட நிலைமை”,

“ஏம்ப்பா இப்படி எல்லாம் பேசறீங்க”, என்றாள் அவளையறியாமலேயே அவளின் அம்மா ஞாபகத்தில் அவளின் குரல் தழுதழுத்தது.

“உண்மையை சொல்லி தானேம்மா ஆகணும். எனக்கு ராமை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லா சம்பாறிக்கிற பையன். என் கண்முன்னால வளர்ந்த பையன். ரொம்ப நல்ல பையன் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான்.

“ஆனா படிக்கலையேப்பா”, என்று தைரியமாக சொல்லிவிட்டாள்.

“படிக்கறது எதுக்கும்மா சம்பாரிக்கத் தானே. அதைத்தான் அவன் நல்லா செய்யறானே. அப்புறம் என்னம்மா. அதில்லாம நீ தான் பெரிய படிப்பு படிக்கறையே அப்புறம் என்ன.”,  என்றார் இதெல்லாம் ஒரு விஷயமா என்பதுபோல.

“நானெல்லாம் மட்டும் படிச்சிருக்கிறனா என்ன? ஆனா சம்பாறிக்கலை. அவனும் நல்லா சம்பாறிப்பான். அருமையான தொழில் இருக்கு. நான் முடிவு பண்ணிடேன்மா . அவன் தான் உன் மாப்பிள்ளை”, என்று ஒற்றை வரியில் இதுதான் என் முடிவு என்பது போல சொன்னார்.

வைதேகிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவர் தன் மீது இந்த திருமணத்தை திணிப்பது போல தோன்றவே. “அதெல்லாம் முடியாதுப்பா. என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவர் படிக்கவேயில்லை அதுமட்டுமில்லாம எனக்கு அவரை பிடிக்கலை.”, என்றாள் தைரியமாக

அதற்கெல்லாம் அசருபவராக சுவாமிநாதன் இல்லை.

“உனக்கு என்ன தெரியும் ராமை பத்தி. எனக்கு தெரிஞ்சதைவிடவா உனக்கு தெரியும். அவன் ரொம்ப நல்ல பையன். அவனை மாதிரி எல்லாம் மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்காது. நீ சொல்ற காரணம் படிக்கலைங்கறது எல்லாம் ஒரு விஷயமே இல்லை”,

“எனக்கு அவரை பிடிக்கலைப்பா”,

“ஏன்மா இன்ன காரணம்னு சொல்லு. நான் ஒத்துக்கறேன்”,

என்ன காரணம் சொல்வாள். அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. படிப்பை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது

“எனக்கு சொல்ல தெரியலைப்பா. ஆனா எனக்கு பிடிக்கலை”, என்றாள் பிடிவாதமாக.

“எந்த காரணமும் இல்லாம நீ பிடிக்கலைன்னு சொல்றது எல்லாம் ஒத்துக்க முடியாதும்மா. சும்மா நீ சொல்றதுக்காக எல்லாம் ஒரு நல்ல வரனை விடமுடியாது.”,

வைதேகி எழுந்த ஆதங்கத்தில் அமைதியாக நிற்க. “நான் முடிவு பண்ணிடேன்மா என் மாப்பிள்ளை ராம் தான். அப்பா பேச்சை நீ மதிக்கற மாதிரி இருந்தா இந்த பேச்சை தட்டாத”, என்று கண்டிப்பாக கூறி பேச்சு முடிந்தது என்பது போல சென்றுவிட்டார்.

அவளுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ராமை பிடிக்கவில்லை. ஒரு வேளை இவனைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு கட்டாயம் இருப்பதினாலேயே என்னவோ அவளுக்கு ராமை பிடிக்கவில்லை.

அவளுக்கு எப்பொழுதும் யாராவது இதை செய்கிறாயா என்று கேட்டால் செய்வாள். இதை செய் என்று யாராவது சொன்னால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவளின் தந்தை நீ ராமை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டிருந்தால் கூட யோசித்திருப்பாள். இவன் தான் மாப்பிள்ளை என்று நிச்சயமாக சொன்னவுடனே மனம் சுணங்கிக் கொண்டது.     

முதலில் அவள் மனம் திருமணத்திற்கு தயாராகவே இல்லை. அவள் அம்மா இருந்தவரை எல்லாம் அவளிஷ்டம் தான். அவளின் அம்மா அவளை அத்தனை செல்லமாக் தன் வளர்த்தார்.

அவர் இறந்த பிறகும் அவளின் இஷ்டத்திற்கு தான் இருந்தாள். அவளின் தந்தை எதிலும் தலையிட்டது இல்லை. ஆனால் அவளின் வாழ்க்கையின் முக்கிய முடிவான திருமணத்தை அவளை கேட்காமலேயே எடுப்பார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் சித்தம் கலங்கினாள். சித்தம் கலங்கினால் என்றே சொல்ல வேண்டும். அவளால் ராமை அவளின் கணவனாக நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

அவளுக்கு தெரிந்தவரை அவனுடைய குணாதிசயங்களை நினைத்துப்பார்த்தாள். தோற்றத்தை பொருத்தவரை அவனை குறை சொல்ல முடியாது. நன்றாகவே இருந்தான். உயரமாக கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான். ஆனால் அவனின் குணம். அவன் இங்கே அவளுடைய அப்பாவை பார்த்துக்கொள்ள இருந்தவரை எல்லா முடிவும் தனிச்சையாக தான் எடுத்தான். இவளை எதற்கும் கேட்டுக்கொள்ள மாட்டான். எல்லா விஷயமும் ஒரு தகவலாகவே இவளிடம் சொல்வான். டாக்டர் இப்படி சொல்கிறார்கள் செய்யலாமா வேண்டாமா என்று கூட கேட்க மாட்டான்.

இவளை பெண்ணாக ஒரு பார்வை பார்த்தது கூட கிடையாது. அந்த பார்வையில் சிறிதும் ஆர்வத்தை அவள் பார்த்தது இல்லை. ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல தான் பார்த்து வைத்தான்.

ஏன் இன்று வந்த போது கூட தன்னை அதிகப்படியாக ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. தான் மணப்பெண் என்று அவனுக்கு தெரியுமா. அவனை பார்த்தும் அவளுக்கு சாதரணமாக தோன்றும் சிநேகம் கூட தோன்றவில்லை. இதற்கு அவர்கள் ஒருவாரம் பழகியிருக்கிறார்கள்.   

என்ன செய்வது கல்யாணத்தை எப்படி தடுப்பது என்று இருந்தது. அவளின் அப்பாவை பற்றி அவளுக்கு நன்கு தெரியும் ஒரு முறை சொன்னால் சொன்னதுதான் மாற்ற மாட்டார். அவள் அம்மா இருந்த போதே அப்படித்தான். இப்போது அம்மா வேறு இல்லை.     

ஏதாவது செய்தாக வேண்டுமே என்ன செய்வது என்றறியாமல் தவித்தாள். தந்தை மட்டுமே உள்ளார். தந்தையிடம் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியாகிவிட்டது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.

பேசாமல் அந்த ராமிடம் பேசிப்பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. அவன் இங்கே அவளின் தந்தையோடு ஹாஸ்பிடலில் இருந்ததினால் அவனின் நம்பர் அவளிடம் இருந்தது.

எதையும் யோசிக்காமல் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் அவனை அழைத்தாள். அது வைதேகியின் நம்பர் என்று ராமிற்கும் தெரியும் அவள் அழைத்தவுடனே, “இவள் எதுக்குடா நம்மை கூப்பிடுகிறாள். வீட்டிற்கு போன போது வாங்க என்று சொல்ல கூட வாயை திறக்கவில்லை”, எடுப்பதா வேண்டாமா என்று போராடியவன்.

ஒரு முறை அடித்து நின்று மறுமுறையும் அடிக்கவும் ஒரு வேளை சுவாமிநாதன் மாமாவுக்கு எதுவுமோ என்று எடுத்தான்.

அனிச்சையாக, “ஹலோ”, என்றது குரல்

“நான் வைதேகி”, என்றாள் எதிர்புறத்தில் வைதேகி.

“தெரியுது சொல்லு”, என்றான்.

அவளுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. தயங்கினாள். நொடிகள் கரைந்தன.

“என்ன போன் பண்ணிட்டு ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம்”, என்றான் அதட்டலாக.

அவனின் அதட்டல் அவளுக்கு எரிச்சலை கொடுத்தது. இருந்தாலும் காரியம் ஆகவேண்டுமே என்று பொறுமையை கடைப்பிடித்து. “உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பேசறாங்க. உங்களுக்கு தெரியுமா”, என்றாள்.

“தெரியும்”, என்றான் அலட்சியமாக. அவளிடம் பேசும் அது தானாக வந்தது.

அவனுடைய அலட்சியமான பாவனை அவளுக்குள் இருந்த பொறுமையை பறக்க விட “எனக்கு இதுல இஷ்டமில்லை”, என்றாள்.

“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்”, என்றான். மனதிற்குள், “எனக்கு மட்டும் என்ன இஷ்டமா”, என்று நினைத்துக்கொண்டே.

“இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடுங்க”,

“தோ பார் உனக்கு வேணாம்னா நீ தான் சொல்லனும். அதைவிட்டுட்டு என்னை வந்து வேண்டாம்னு சொல்லுங்கன்னு சொல்ல கூடாது”, என்றான். அவனின் அடக்கப்பட்ட இயலாமையோடு கூடிய கோபம் அவளிடம் வெளிப்பட்டது.   

“நான் சொல்லிட்டேன் எங்கப்பா கேட்க மாட்டேங்கறார்.”,

“என்ன இந்த பெண் பிடிக்கவில்லை என்று சொல்லியும் அவர் கேட்கவில்லையா ஐயோ”, என்றிருந்தது அவனுக்கு.

இதை கேள்விப்பட்டபிறகு. “அதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற”, என்று அவளிடம் எறிந்து விழுந்தான்.               

“எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைன்னு சொல்றேன். என்னை என்ன செய்ய சொல்றன்னு கேட்டா”, என்று அவளும் எகிறினாள்.

“இதோ பாரு என்னால ஒண்ணும் செய்யமுடியாது. முடிஞ்சா நீயே ஏதாவது செஞ்சு நிறுத்திக்கோ”, என்றான் கறாராக.

இவனிடம் பேசுவதில் பிரயோஜனமில்லை என்று எண்ணியவள் போனை பட்டென்று வைத்தாள்.

“பாரு மரியாதை தெரியாத பொண்ணா இருக்கா. அவ அப்பாகிட்டயே என்னை பிடிக்கலைன்னு தைரியமா சொல்லியிருக்கா. அதை அவர் கேட்க மாட்டேன்னு சொன்னவுடனே. எனக்கு போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்து உன்னை எனக்கு பிடிக்கலைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றா. என்னவோ நான் இவளை கல்யாணம் பண்ணிக்க அலையற மாதிரி. கொஞ்சம் கூட உறவுகளோட அருமை தெரியாத. மரியாதையை தெரியாத பொண்ணு. என்ன தைரியம்.”, என்று அவளின் மேல் இருந்த வேண்டாத எண்ணங்கள் வலுப்பெற்றன. 

Advertisement