Advertisement

  அத்தியாயம் மூன்று:

தன் தாய்மாமாவின் வீட்டிற்கு சென்று வந்தவுடனே சுவாமிநாதனிடம் தொலைபேசியில் நடந்ததனைத்தும் கூறினான். அவர் சுவாமிநாதனை திட்டியதை மட்டும் கூறவில்லை. அதை விடுத்து வேறு எல்லாவற்றையும் கூறியவன் நாளை மறுநாள் பெண் பார்க்க போவதை கூறினான்.

அதுவும் ஒரு வகையில்,”சரி”, என்று சுந்தரேசனை ஒட்டியே பேசினார் சுவாமிநாதன். “நான் இதை யோசிக்காம விட்டுடேன். கல்யாணம் நடக்கணும்……… அவங்க பொண்ணு குடுக்கணும்…….. இப்படி தான் யோசிச்சிட்டு இருந்ததுல பொண்ணு எப்படி…… குணம் எப்படி……….. இதெல்லாம் நான் முன்னிருத்தவே இல்லை. பரவாயில்லை……. அண்ணா விவரமா தான் இருக்காப்டி. அவர் என்ன சொல்றாரோ அப்படியே செய்யி ராம்”, என்றார் அவர் எந்த கல்மிஷமும் இல்லாமல்….

“அவங்க நாள் குறிச்சு பத்திரிகை அடிக்கறது வரை பேசறாங்க. இன்னைக்கே பத்திரிக்கை எப்ப அடிக்க குடுக்கலாம்னு போன் பண்றாங்க” என்றான் ராம்.

 “அவர் எப்படி சொல்றாரோ செய். என்னைவிட அதிகம் அவருக்கு எல்லாரும் பழக்கம். என்னை விட உலக நடப்பும் அதிகம் அவருக்கு தெரியும்”,

“சரி மாமா”, என்று போனை வைத்தான்.

சுந்தரேசன் சுவாமிநாதனை விட வயதில் மூத்தவர். அவர் ராம் குடும்பத்துடன் நடந்த விதம் பிடிக்காவிட்டாலும்………. அவர் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தார் சுவாமிநாதன். ஏனென்றால் அவர் ஊருக்குள் பெரிய மனிதர். நன்கு வசதியானவர். அவர்களுடைய இனத்திலும் பெரிய மனிதர். அவருக்கு மற்றவர்களிடத்திலும் நல்ல மரியாதை இருந்தது.

ராம் சொத்திற்கு பங்கிற்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தான் ராம் குடும்பத்திடம் இருந்து சுந்தரேசன் தள்ளி இருக்கிறார் என்று சுவாமிநாதன் நன்கு தெரிந்தவர். எல்லோருக்கும் ஏதாவது தடைகள் இருக்கும் என்று தெரிந்தவர். “நான் மட்டும் என்ன செய்கிறேன். என் மனைவிக்கு தெரியாமல் தான் செய்கிறேன். அதுபோல அவரிடமும் ஏதோ குறை”, என்று அனுசரிக்க தெரிந்தவர். அதனால் அவரிடம் எந்த விரோதமும் இவர் பாராட்ட மாட்டார்.

ராமின் விஷயத்தை விடுத்து பார்த்தால் சுவாமிநாதனுக்கும் சுந்தரேசனுக்கும் நல்ல உறவு இருந்தது. அவர் அருகில் இருப்பதால் தான் அந்த குழந்தைகள் வேறு எந்த பிரச்சனையும் அவர்களை அண்டாமல் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தெரியும்.      

“என்ன அண்ணா இது”, என்றாள் மாலதி. அவளுக்கு ஏற்கனவே பெண்ணின் புகைப்படத்தை பார்த்ததிலிருந்து அரை மனது தான். ஆனால் அவளின் அண்ணன் சரி என்று சொல்லிவிட்டானே அதனால் அமைதியாக ஒன்றும் பேசாமல் இருந்தாள்.  

இப்போது பெண்ணை நேரில் பார்க்கலாம் என்று சொன்ன பிறகு சற்று அவளுக்கு திருப்தி தான். “பார்க்கலாம் மாமா என்ன சொல்லுகிறார்”, என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

சுவாமிநாதன் சுந்தரேசன் என்ன சொல்கிறாரோ அதை செய் என்று விட்டதால் சரி அவர் சொல்படியே கேட்போம் என்று ராமும் விட்டுவிட்டான்.

அடுத்த நாள் காலையில் தங்கை கல்லூரிக்கு கிளம்பிவிட்டிருக்க…………. தம்பி கிளம்பி கொண்டிருக்க……….. அன்றைய கொள்முதலை பார்க்கலாம் என்று ராம் அரக்க பறக்க கிளம்பிக்கொண்டிருந்தான் . ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது தொழிலை பார்த்து அப்போது பார்த்து மோகன் வந்து சொன்னான்………. “உங்களை அப்பா கூப்பிடுறார். அந்த பொண்ணு போட்டோவையும் உங்க ஜாதகத்தையும் பொண்ணு ஜாதகத்தையும்  எடுத்துட்டு வர சொன்னார்”, என்றான்.

என்னவென்று ஆராயாமல் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

புதிதாக முளைத்த சொந்தம் மோகனை மனோகரிடத்தில்……….. “நான் பைக்ல தான் போறேன். என்னோட இன்னைக்கு வர்றையா”, என்று கேட்க வைத்தது.

இருவரும் ஒரே கல்லூரி தான். மோகன் நான்காம் வருடம். மனோகர் மூன்றாம் வருடம். பார்க்கும் போது என்ன ஏதென்று பட்டும் படாமல் பேசிக்கொள்வர். இன்று தான் உரிமையாக மோகன் மனோவை கூப்பிடுகிறான். மோகன் எப்போதும் பைக்கில் போவான். மனோ பஸ்சில் தான் செல்வான்.

இன்று அவன் கூப்பிட்டதும் அண்ணனை பார்க்க………. அண்ணன் சரி என்பது போல் சிறு தலையசைப்பு…….. சந்தோஷமாக கிளம்பினான். அவன் அண்ணனிடம் பைக் கேட்க வேண்டும், கேட்க வேண்டும், என்று எண்ணுவான் தான். ஒரு முறை கேட்க கூட செய்தான் மனோ………. ராம் தான், “படிப்பு முடியட்டும். நீ எங்க வேலைக்கு போற, என்ன? ஏது? எல்லாம் பார்த்து அப்புறம் வாங்கிக்கலாம். அது வரை ஏதாவது தேவைன்னா என்னோட பைக் எடுத்துக்கோ. நான் பஸ்ல போய்க்குவேன்”, என்றான்.

ராமிற்கு கொள்முதளுக்கு நிறைய அலைய வேண்டும் என்று மனோவிற்க்கு தெரியும். அதனாலேயே அவனிடம் பைக் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டான்.

இந்த புறம் இவர்கள் கல்லூரிக்கு கிளம்ப……….. ராம் அவன் மாமாவின் வீட்டுக்கு கிளம்பினான். ரமா முன்புறம் இருந்தவள்……… இவனை பார்த்ததும், “வாங்க”, என்ற ஒற்றை சொல்லோடு உள்ளே விரைந்து விட்டாள். ரமாவை அவன் அதிகம் பார்த்தது கூட கிடையாது. பக்கத்துக்கு வீடு என்றாலும் நேருக்கு நேர் பார்ப்பது அபூர்வம். மாலதி ரமாவோடு பேசுவாள் என்று தெரியும்.

இன்று தான் ரமாவை இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறான்.  ரமா அழகாக இருந்தாள். ராமிற்கு அவளை பார்த்ததுமே அவனுக்கு அவன் திருமணத்திற்கு பார்த்திருக்கும் பெண்ணோடு ஒப்பிட தோன்றியது. இதில் பாதி கூட தேறமாட்டாள் அவள். அவனையறியாமல் பெருமூச்சு எழுந்தது.

ரமா போய் சொல்லியிருப்பாள் போல………….. வெளியே வந்த லீலாவதி…………………. “வா ராம். உள்ள வா….. உட்காருப்பா. இப்போ வந்திடுவார்”, என்று அவனை அமரவைத்து உள்ளே சென்றார்.

அவன் ஹாலிலேயே அமர்ந்து காத்திருக்க…………. அவனை அதிகம் காத்திருக்க வைக்காமல் எங்கோ செல்ல கிளம்பி தயாராகி வந்தார் சுந்தரேசன்.

இவனை பார்த்ததும், “உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா”, என்றார்.

வேலை இருந்தாலும்……… “இல்லை மாமா சொல்லுங்க”, என்றான்.

“நான் சுவாமிநாதனை பார்க்க போகலாம்னு இருக்கேன். வர்றியா?”, என்றார்.

“அதுக்கென்ன மாமா போகலாம்”, என்று ராம் சொன்னவன்…….. போட்டோவையும் ஜாதகத்தையும் கொடுத்தான்.

போட்டோவை வாங்கி பார்த்தவர் முகத்தில் திருப்தியில்லை. அவர் வாய்விட்டு எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் என்பது அவர் நினைவில் இருந்தது.

அமைதியாக போட்டோவை லீலாவதியிடம் காட்ட……… அதனை பார்த்த லீலாவதி வாய் விட்டே சொன்னார்…………. “பொண்ணு ரொம்ப ரொம்ப சுமாரா இருக்கே. ரொம்ப குண்டா வேற இருக்கு”. 

அவனை பார்வையால் அளந்தார். “இவனுக்கு என்ன குறை நன்றாகத்தானே இருக்கிறான். நல்ல உயரமாக இருக்கிறான். மாநிறம். கலையான முகம். கச்சிதமான உடம்பு. நன்றாக இருக்கும் இவன் இந்த பெண்ணிற்கு எப்படி சரி என்றான் வேறு பெண்ணா கிடைக்காது எதற்கு அவசரம்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தார்.     

பின்பு ராமின் ஜாதகத்தை பார்த்த சுந்தரேசன்…………. “சிம்ம ராசி. மகம் நட்சத்திரம்”, என்றார் லீலாவிடம்.

“ஓ”, என்றவர் குரலில் என்ன இருந்தது…………. ஏமாற்றமா?……… ராமிற்கு அப்படி தான் தோன்றியது. அவர் முகத்தை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை.        

லீலாவதியை பார்த்து……… “நாங்க அப்படியே நம்ம ஜோசியக்காரரை பார்த்துட்டு, ஜாதகப் பொருத்தமெல்லாம் சரிதானா பார்த்துட்டு…………. அப்புறம் பொண்ணு வீட்டோட பேசலாம். நான் சுவாமிநாதனை பார்த்துட்டு வந்துடறேன்”, என்று சொல்லி கிளம்பினார் சுந்தரேசன். 

அவனையும் அவரையும் ஏற்றிக்கொண்டு அவரது டாட்டா சுமோ பறந்தது. அவர் வண்டி ஓட்டும் லாவகத்தை பார்த்து வியந்தான்.

அவனின் பார்வையை பார்த்தவர் என்னவோ அவன் சொல்ல வருகிறான் என்று நினைத்து, “என்ன ராம்”, என்றார்.

“நீங்க வண்டி நல்லா ஓட்டறீங்க மாமா”, என்றான்.

“எல்லாமே பழக்கம் தான். நீ எப்போ பெரிய வண்டி வாங்கபோற?”

“நானா!……… காரா?………”, என்று  இழுத்தான்.

“ஏம்பா இழுக்கற. உனக்கு இப்போ வர்ற வருமானத்துக்கு ஒன்னுக்கு ரெண்டு கார் வாங்கலாம்னு எனக்கு தெரியும்”, என்றார்.

“தம்பி தங்கச்சி எல்லாம் ஃலைப்ல செட்டில் ஆகட்டும் மாமா. அப்புறம் பார்க்கலாம்”, என்றான்.

“அப்படி கிடையாது ராம். நம்ம வசதிய ரொம்பவும் மறைச்சு வைக்க கூடாது. அப்புறம் எப்படி உன் தங்கச்சிக்கு தம்பிக்கு எல்லாம் வசதியான இடமா பார்ப்ப சொல்லு. நான் உன்னை இத்தனை நாளா கவனிச்சிருக்கேன். நீ தொழில் பண்ற இடமெல்லாம் எனக்கு தெரியும். அதனால உன் வசதி வாய்ப்பு தெரியும். புதுசா பார்க்கறவனுக்கு என்ன தெரியும்”, என்றார்.

என்ன? இத்தனை நாளாக இவர் நம்மை கவனித்து வந்திருக்கிறாரா. இதுவே ராமிற்கு புதிய செய்தி. பதில் பேசாமல் அமைதியாக வந்தான்.

அவன் யோசனை செய்கிறான் என்றுனர்ந்தவர்………… “ரொம்ப ஆடம்பரமா இருக்க வேண்டாம். அதுக்காக ரொம்ப சிக்கனமாவும் இருக்க வேண்டாம். செலவு செய்யற இடத்துல செஞ்சு தான் ஆகணும். அதுதான் நமக்கு கௌரவம்”, என்றார்.

“இனிமே பார்க்கிறேன் மாமா”, என்று சொன்னான்.  அது வாய் வார்த்தை தான். பணத்தை செலவு செய்யும் எண்ணம் எல்லாம் அவனுக்கு சிறிதும் இல்லை. அதற்காக சிரமப்பட்ட தினங்கள் எல்லாம் மறக்காது.  

“பணம்”,……………… இந்த உலகத்தில் வாழ்வதற்கு தற்போதைய  ஜீவ நாடி அதுதான் என்று நன்கு உணர்ந்தவன் ராம். பண விஷயத்தில் யார் எது சொன்னாலும் கேட்பதாக இல்லை ராம். இருந்தாலும் புதிப்பிக்கப்பட உறவு, அதனால் அவர் எது சொன்னாலும் பதில் பேசாமல் அமைதி காத்தான்.  

ஓரிடத்தில் வண்டி நிறுத்தி அருகே இருந்த வீட்டிற்கு கூட்டிச்சென்றார் சுந்தரேசன். அது அவர்கள் ஜோசியம் பார்க்கும் இடம் என்று புரிந்து கொண்டான் ராம்.

அங்கே நிறைய பேர் காத்திருந்தாலும்………. இவரை பார்த்ததுமே உள்ளே விட்டனர்.

“வாங்கய்யா…….. கூப்பிட்டு விட்டிருந்தா நானே வந்திருப்பேன் இல்ல”, என்றார் அந்த ஜோதிடர்.

“இல்லைங்க சாமி, அவசரம்…… அதான் நானே வந்துட்டேன்”, என்றார். 

ஜோதிடர்………. அந்த பெண்ணின் ஜாதகத்தையும் ராமின் ஜாதகத்தையும் பார்த்தார்.  பார்த்தவர்………….., “பையன் ஜாதகம் அருமையா இருக்கு. ஆரம்பத்தில சிரமப்படிருந்தாலும், இனி பையனுக்கு எல்லாம் ஏறுமுகம் தான்”.  

“பொண்ணு ஜாதகம் சுமார் தாங்கய்யா. ஒண்ணும் ஆஹான்னு சொல்ற மாதிரி இல்லை. கல்யாணத்துக்கு பொருத்தம்னு பார்த்தா………. ஏழு பொருத்தம் இருக்கு. கல்யாணத்துக்கு இது போதும் தான். இருந்தாலும் முக்கியமான பொருத்தமான வசிய பொருத்தம் இல்லை. அதனால பொண்ணுக்கும் பையனுக்கும் எப்படி ஒத்துபோகும்னு சொல்ல முடியாது”, என்றார்.

“அதனால கல்யாணம் செய்யறது உங்க விருப்பம் தான்”, என்று முடித்தார்.

“எங்க விருப்பம் இருக்கட்டும். நீங்க என்ன சொல்றிங்க. எதா இருந்தாலும் ஓடைச்சு  சொல்லுங்க, தயக்கம் வேண்டாம்”.

“ஓடைச்சு கேக்கறதால சொல்றேன். மத்தவங்க சொல்லலாம் கல்யாணம் பண்ணலாம்னு. என்னை கேட்டா வேற இடம் பார்க்கலாம்னு சொல்லுவேன். ஏன்னா பையன் ஜாதகம் அருமையா இருக்கு. பொண்ணு ஜாதகத்தோட இணைச்சு அதை முடக்க வேண்டாம்”, என்றார் பளிச்சென்று.

அவர்தான் சுந்தரேசனின் ஆஸ்தான ஜோதிடர். அவர் சொல்வது தான் சுந்தரேசனுக்கு வேத வாக்கு. அதை மீற மாட்டார்.

“என்னடா இவர் இப்படி சொல்கிறார்”, என்று ராம் யோசனையாய் இருக்க…….  சுந்தரேசனும் எதையோ யோசித்தவர்……… பின்பு சிறிது நேரம் ராமை வெளியே இருக்க சொன்னவர்………….. அவர் மட்டும் ஜோதிடரிடம் தனியாக பேசி வந்தார்.

பிறகு வந்தவர் அவனிடம்………. “போகலாம் ராம்”, என்று வண்டியை சென்னை நோக்கி திருப்பினார் சுவாமிநாதனை பார்க்க………… வண்டிக்குள் ஒரு ஆழ்ந்த மெளனம் நிலவியது. எதையோ யோசித்த படியே வந்தார்  சுந்தரேசன். ராமும் எதுவும் பேசவில்லை அமைதியாகவே வந்தான்.

“இனி என்ன செய்வது………… சுவாமிநாதன் மாமா பார்த்த சம்பந்தம். அவரிடம் என்ன சொல்வது. பெண் வீட்டினரிடம் என்ன சொல்வது”, என்று ஒரே யோசனையாக ஓடிக்கொண்டிருந்தது ராமின் மூளைக்குள்.  அதை விடுத்து வேறு ஒன்றும் தோன்றவில்லை அவனுக்கு.

அவர்கள் சுவாமிநாதன் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் ஒரு காரும், போலீஸ் ஜீப்பும் நின்று கொண்டிருந்தது.

இவர்கள்……….. எதற்கு நிற்கிறது என்று புரியாமல் குழம்பினர். ராம் வேகமாக காரை விட்டிறங்கி வீட்டுக்குள் போனான். பின்னேயே சுந்தரேசனும் போனார். அங்கே சென்று பார்த்தால் போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருந்தனர். அவரோடு வேறு இரண்டு பேரும் இருந்தனர்.

சுவாமிநாதன் களைபாய் சோபாவில் அமர்ந்திருந்தார்.         

ராமையும் சுந்தரேசனையும் பார்த்தவர்…………. ஆச்சர்யமானார். இருந்தாலும் எதையும் காட்டிகொல்லாமல் “வாங்கண்ணா, வா ராம்”, என்றார்.

இருவரும், “என்ன விஷயம்”, என்பது போல பார்க்க……….

சுவாமிநாதன் விஷயத்தை சுந்தரேசனிடம் சொன்னார். “நம்ம வைதேகியோட ஒரு பொண்ணு படிச்சதான் அண்ணா. அந்த பொண்ணை காணோமாம். நம்ம வைதேகியோட அந்த பொண்ணுக்கு ரொம்ப சிநேகிதம் போல………… அதான் விசாரிக்க வந்திருக்காங்க. வைதேகி இப்போ தான் கடைக்கு போனா………. வர்ற நேரம் தான்”, என்றார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே வைதேகி வந்துவிட்டாள். அவளுக்கும் போலிசை பார்த்ததும் அதிர்ச்சி. அந்த களேபாரத்தில் அங்கிருந்த ராமையும் அவரோடு இருந்தவரையும் கவனித்தாள் தான். ஆனால் அவர்களை வரவேற்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.

தன் தந்தையின் அருகில் சென்று நின்று கொண்டார். சுந்தரேசன் பார்வையால் அவளை அளந்தார். நல்ல அழகான பெண் என்று தோன்றியது.

“அம்மா, உன்னோட படிக்கற சாந்தியை காணோமாம். உனக்கு ஃப்ரன்ட் தானே, உனக்கு ஏதாவது தெரியுமான்னு விசாரிக்க வந்திருக்காங்க”,

“எனக்கு தெரியாதுப்பா”, என்றாள்.

கூட வந்திருந்தவர்களில் ஒருவன் குரல் உயர்த்தி பேசினான். “நான் அவளோட அண்ணன். நீ தான் அவளோட க்ளோஸ் பிரண்டுன்னு காலேஜ்ல எல்லாரும் சொல்றாங்க. உனக்கு தெரியாம இருக்காது. எங்க போயிருக்கா சொல்லு”, என்றான் மிரட்டுவது போல………..

அந்த குரலில் ராமும் சுந்தரேசனும் டென்ஷன் ஆனார்கள். இருந்தாலும் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று அமைதி காத்தார்கள். சுவாமிநாதனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.   

“எனக்கு தெரியாதுங்க”, என்றாள் மறுபடியும்.

“உனக்கு தெரியாம அவ எங்க போயிருப்பா”,

“எனக்கு நிஜமாவே தெரியாதுங்க. நான் அப்பாக்கு உடம்பு சரியில்லாம காலேஜ் போயே பத்து நாள் இருக்கும். எனக்கு எந்த விவரமும் தெரியாது. போன்ல கூட பேசலை”, என்றாள் தெளிவாகவே.

“அவளுக்கு யாரோடவாவது லவ் இருந்துச்சா”, என்றார் கூட வந்த போலீஸ்காரர்.

“எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. சமீபமா ஒரு பையன் தான் அவளை காலேஜ்ல ட்ராப் பண்ணுவான். திரும்ப வந்து கூட்டிட்டு போவான். யார்ன்னு கேட்டதுக்கு சொந்தக்காரப் பையன்னு சொன்னா. வேற ஒண்ணும் சொன்னதில்லை”,

“அந்த பையன்னு யாரு என்னன்னு தெரியாதா”,

“தெரியாதுங்க சர்”,

அவளோடு எந்த விவரமும் பிடிபடாததால்………. “அவளை பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சா, உடனே எங்ககிட்ட சொல்லனும்”, என்றனர்.

“சரி”, என்பது போல தலையசைத்தாள்,

அவளின் அண்ணன் மறுபடியும், “உனக்கு தெரியாம இருக்காது. உனக்கு தான் அவ ரொம்ப க்ளோஸ்ன்னு எல்லாரும் சொன்னாங்க. உனக்கு தெரிஞ்சிருக்கும் நீ பொய் சொல்ற”.

“இல்லை சர். எனக்கு நிஜமாவே தெரியாது. நான் காலேஜ்கே பத்து நாளா போகலை. எனக்கு அவளுக்கும் ஒரு தொடர்புமில்லை. எனக்கு தெரியாது! தெரியாது!”.

“நிஜமா தெரியாது”, என்று குரல் அந்த பெண்ணின் அண்ணன் குரல் உயர்த்த………..

அதுவரை அமைதியாக இருந்த சுந்தரேசன், “என்ன தம்பி பொண்ணு தான் தெரியாது சொல்லுதில்லை. சும்மா மிரட்ற மாதிரியே பேசறீங்க. முதல்ல இதுக்காக போலீஸ் ஜீப்ல வீட்டுக்கு வந்ததே தப்பு. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க. தனியா மப்டில வரணும்னு தெரியாது. வந்ததும் இல்லாம மிரட்ட வேற செய்யறீங்க. இதோட விட்டுடுங்க, கிளம்புங்க”, என்றார் தைரியமாக.

“என்ன சர் குரலுயர்தறீங்க”, என்றார் ஒரு போலீஸ் காரர்.

“பின்ன என்ன சர். பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியாம ஓட விட்டுட்டு, இங்க வந்து அடுத்த வீட்டு பொண்ணை ஏதோ குற்றவாளியை விசாரிக்கற மாதிரி  விசாரிக்கறீங்க. என்ன நடக்குது. அந்த பொண்ணை எவனோ கூட்டிட்டு போயிட்டு கொண்டு வந்துவிட்டுருக்கான்னு நம்ம பொண்ணு சொல்லுது. அப்ப ஊரே பார்த்திருக்கும். உங்களுக்கு மட்டும் தெரியாம போச்சு. நீங்க பொண்ணை அந்த லட்சணத்துல கவனிச்சிருகீங்க, இதுல இங்க வந்து மிரட்டல்”, என்றார்.

“சர்! வாங்க போகலாம்! பேச்சை வளர்க்க வேணாம். அந்த பொண்ணும் தான் ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லுது இல்லை”, என்று அவருடன் வந்த மற்ற போலீஸ் ஒருத்தர்…………. “கிளம்புங்க சர்”, என்று மற்றவர்களை கூட்டிச் சென்றார்.

பின்பு அவரே வந்து………… “தகவல் தெரிஞ்சா சொல்லும்மா. உனக்கு தெரியாம இருக்காது…………. அவங்கப்பா மந்திரி. அதனால எங்களுக்கு பிரஷர் அதிகம். அதான் இந்த விசாரணை சர்”, என்று சுந்தரேசன் புறமும் திரும்பி சொல்லி சென்றார்.

“என்ன சுவாமிநாதா நடக்குது. அவங்களை எதுக்கு வீட்டுக்குள்ள எல்லாம் விட்ட. வாசல்லயே நிறுத்த தெரிய வேண்டாமா”, என்று சுவாமிநாதனை யும் கடிந்தார்.

“யார் இவர்”, என்பது போல வைதேகி பார்க்க…………. அவளையரிந்த அவள் தந்தை, “உனக்கு பெரியப்பாம்மா”, என்றார்.

“எல்லாம் சின்ன வயசுல பார்த்தது. பொண்ணுக்கு எப்படி தெரியும். அடிக்கடி வந்து போனா தெரியும். எங்க நீ ஊர்பக்கம் வர்றதே பெரிய விஷயம். நீ என்னைக்கு குடும்பத்தை கூட்டிட்டு வந்திருக்க”, என்று அதற்கும் கடிந்தார்.

“என்னம்மா படிக்கற”, என்றார்.

“பி.இ (ஐ டி), மூணாவது வருஷம் படிக்கறேன் பெரியப்பா”, 

“என்னம்மா சிநேகித புள்ளைங்க பார்த்து பழகறது இல்லையா. இப்படியா இருக்கிறது அரசியல்வாதிங்க கிட்ட எல்லாம் கொஞ்சம் ஜாக்கிதையா பழகனும்மா”, என்றார்.

“சரி பெரியப்பா”, என்று வாய்விட்டே சொன்னாள். 

எல்லாவற்றையும் ராம் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தான். ஏதும் பேசவில்லை. பெரியவர்கள் பேசும் போது குறுக்கே பேசுவது மரியாதையல்ல என்று அமைதியாகவே இருந்தான். 

வைதேகி அவன் புறம் திரும்பி பார்த்தது போல கூட அவனுக்கு தெரியவில்லை. அது அவனுக்கு சற்று கஷ்டமாக இருந்தது. ஹாஸ்பிடலில் ஒரு வாரம் கூட இருந்திருக்கிறான். தெரிந்த மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை. ஒரு சிநேகமான புன்னகைக்கு கூடவா பஞ்சம் என்று தோன்றியது. மறுபடியும் அவள் அம்மா போல அலட்சியமாக தன்னை நினைக்கிறாளோ என்றே எண்ணத் தோன்றியது.

அவனுக்கு தெரியவில்லை. அவள் போலீஸ் விசாரித்துப்போன தன் தோழியை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று.  அவனையறியாமல் அவளை பற்றி ஒரு எதிர்மறையான கருத்தையே தனக்குள் விதைத்துக் கொண்டிருந்தான் ராம்.

“பெரியப்பாக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாம்மா”, என்று சுவாமிநாதன் சொல்ல உள்ளே சென்றாள் வைதேகி.

“என்ன சுவாமிநாதா உடம்பு எப்படி இருக்கு”,

“பரவாயில்லைன்னா”,

 “கொஞ்சம் எனக்கும் உடம்பு சரியில்லை. அதான் ஹாஸ்பிடல் வரலை. உடம்பெல்லாம் ஜாக்கிதையா பார்த்துக்க வேண்டாமா. இப்படியா அஜாக்ரதையா இருக்கிறது”, என்றார் அக்கறையாக.

“என்ன அண்ணா செய்யறது. எதிர்பார்க்கலை வந்துடுச்சு. இப்போ ரெண்டு நாளா என் கவலையெல்லாம் பொண்ணுக்கு சீக்கிரம் ஒரு நல்லது பண்ணனுன்றதுதான்”.

“அதுக்கென்ன பண்ணிடலாம். எந்த மாதிரி மாப்பிள்ளை எதிர்பார்க்கிற”,

“வீட்டோட மாப்பிள்ளைன்னா பரவாயில்லைன்னு நினைக்கிறேன்”.

“இந்த காலத்துல எங்க சுவாமிநாதா வீட்டோட மாப்பிள்ளை கிடைப்பான். அவனவன் அவங்க அப்பா அம்மா கூடவே இருக்கறதில்லை…………… பார்ப்போம்”, என்றார்.

“என்ன ராம் கல்யாண வேலையெல்லாம் எப்படி இருக்கு”, என்றார் சுவாமிநாதன்.

“அதை பத்தி தான் பேச வந்தோம்”, என்றார் சுந்தரேசன்.

“இப்போ தான் நான் எப்பவும் ஜோசியம் பார்பேனே………… ஒரு ஜோசியக்காரர் உனக்கு தெரியும் தானே”,

“தெரியும் அண்ணா”,

“அவர்கிட்ட இப்போ தான் போய் பார்த்துட்டு வந்தேன். அவர் வேற நல்ல இடமா பார்த்தா பரவாயில்லைன்னு சொல்றார்”,

“அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் பார்த்த இடத்துல சொல்லாம விட்டுட்டான்”,

ராம் இவர்கள் பேசுவதையே பார்த்துகொண்டிருக்க………….

என்ன நினைத்தாரோ சுந்தரேசன்………… “ராம் நான் சுவாமிநாதனோ ட கொஞ்சம் தனியா பேசணும்”, என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே………. வைதேகி காபியோடு வந்தாள்.

“இரு இந்த காப்பிய சாப்பிட்டிட்டு போ”, என்றார்.

காபி கொடுத்தவுடன் வைதேகி உள்ளே சென்று விட்டாள். காபி குடிக்கும் வரை அங்கே மௌனமான சூழலே நிலவியது.

காபி குடித்து………. அவன் போர்டிகோ நோக்கி நடந்தான். வந்தவன் அங்கே இருந்த சேரில் அமர்ந்துகொண்டான். ஏதோ பேசவேண்டும் போல என்று தான் நினைத்தான். அதில் அவனுக்கு ஒன்றும் தப்பாக தோன்றவில்லை. அவனை பற்றி தான் பேசப் போகிறார்கள் என்று அவனுக்கு தோன்றவேயில்லை.   

உள்ளே இருந்த சுந்தரேசன் சுவாமிநாதனிடம் பேச்சை ஆரம்பித்தார். “ராம் தான் ஹாஸ்பிடல்ல உன்னை பார்த்துகிட்டான் போல”,

“ஆமா அண்ணா, நல்லா பார்த்துகிட்டான். அவன் இல்லைன்னா ரொம்ப சிரமப்பட்டிருப்பேன்”,.

“எனக்கு சுத்தி வளைச்சு பேச எல்லாம் தெரியாது. நம்ம ராமையே உன் பொண்ணுக்கு பார்த்தா என்ன, ஏன் வெண்ணைய வெச்சிகிட்டு நெய்க்கு அலையற”, என்றார்.

சுவாமிநாதன் அந்த கோணத்தில் இருந்து பார்த்ததேயில்லை. என்னசொல்வது என்று தடுமாறினார்.                   

 

Advertisement