Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு (2):

அவள் அப்படியே படுக்க போக……. “நகையெல்லாம் கழட்டலை”, என்றவன் அதை      கழட்டுவதற்காக அவளின் சங்குக் கழுத்தில் கை வைத்தான். அவளின் உடல் சூடாக இருக்க இவனின் கைகள் சில்லென்று இருக்க வைதேகியின் உடல் சிலிர்த்து அடங்கியது. ஆர்வமாக வைதேகியின் முகம் பார்த்தான். வைதேகியின்  பார்வை ராமை பார்க்காமல் தாழ்ந்தது. முகத்தின் செம்மை அவனுக்கு எதையோ உணர்த்த……  

அவனின் கைகள் கட்டுப்பாடு இல்லாமலேயே அவளின் கழுத்தில் அலைய  துவங்கியது.  மறுபடியும் வைதேகியின் உடல் சிலிர்க்க துவங்கியது. முயன்று அவன் மேல் சாயத் துடித்த மனதையும் உடலையும் அடக்கினாள்.

முன்பு அவர்களுக்குள் நடந்தது எதுவுமே அவர்கள் இருவருக்குமே நினைவிற்கு வரவில்லை. 

அவளின் போராட்டத்தை உணர்ந்தானோ என்னவோ மீண்டும் மீண்டும் அவளை சிலிர்க்க வைத்தான். இந்த முறை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் அவன் மேல் சாய்ந்து அவனை கட்டிக்கொண்டாள்.

அதன் பிறகு யார் யாரை வசியப்படுத்தினர் என்றே தெரியவில்லை. இருவருக்குள்ளும் ஒரு மோகத்தீ பற்றிக்கொள்ள அதை அணைக்காமல் இருவரும் கொழுந்து விட்டு எரியச் செய்தனர்.  வெகு வேகமாக அந்த மோகத்தீ அவர்களை ஆக்ரமித்தது. அதில் எரிந்து போக இருவருமே ஆர்வமாய் இருந்தனர். 

இரவு அவர்களுக்கு சீக்கிரமாய் முடிந்து போய் விடியல் வந்துவிட …….அதற்குள் விடிந்துவிட்டதா என்று இருவருக்குமே இருந்தது.

வைதேகி ராமின் முகம் பார்க்கவே வெட்கினாள். ராமும் அவளின் நிலை உணர்ந்து நடந்து கொண்டான்.

“நம்ம அவங்களை மறுவீட்டு விருந்துக்கு கூப்பிட போகணும் வைதேகி”, என்று அவளிடம் பேச்சை ஆரம்பித்து ராம் அவளை சகஜமாக்க முயன்றான். அதன் பின்னும் அதையும் இதையும் பேசி அவளை சற்று சகஜமாக்கியே விட்டான்.

பின் மோகனையும் மாலதியையும் போய் மறுவீட்டு விருந்துக்கு அழைத்து வந்தனர். இன்னும் சில உறவுகளையும்   அழைத்து இருந்தனர்…… அதனால் வேலைகள் அவர்களை சூழ்ந்துகொள்ள உபசரிக்கவும் விருந்து பரிமாறவுமே நேரம் சரியாக இருந்தது. அவர்களுக்கு பேசவே நேரம் இல்லை.

மாலதியை நன்றாக கவனித்துக்கொண்டாள்.

அதன் பிறகு மாலதியை அணைத்து விடை கொடுத்தாள். இந்த குடும்பத்தில் இருந்து ஆரம்பத்தில் அவளை விலக விடாமல் பார்த்துக்கொண்டது மாலதி அல்லவோ அவளின் அன்பு அல்லவோ.

அவளிடம் ஒரு ஒட்டுதல் இல்லாவிட்டால் ராமின் அன்பை புரிந்து கொள்ள கூட சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்று வைதேகிக்கு தெரியும்.

அதனால் கண்கள் கலங்க அவளுக்கு விடை கொடுத்தாள்.

மாலதியும் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.

பார்த்த லக்ஷ்மி பாட்டி கூட கிண்டல் அடித்தார்……. “என்னவோ அமெரிக்காவுக்கு போற மாதிரி பிரியறீங்க………. ரெண்டு பேரும் ஒரே ஊர்ல இருக்க போறீங்க. அதுக்கு என்ன?”, என்று அவரின் வாய் சொன்னாலும் இருவரையும் திருஷ்டி எடுக்க மறக்கவில்லை.   

எல்லோரையும் ஒருவழியாக அனுப்பிய பின்னேயே ராமும் வைதேகியும் ஆசுவாசமாக உட்கார்ந்தனர்.

வைதேகியை நெருங்கி அமர்ந்து கொண்ட ராம்…….. “உனக்கு என்மேல எதுவும் கோபம் இல்லையே”, என்றான்.

அவன் எதற்கு கேட்கிறான் என்று தெரிந்த போதும் ஒன்றுமே தெரியாதவள் மாதிரி “எதுக்கு”, என்றாள் இமைகொட்டி.

அவள் கேட்ட விதமே அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது, வேண்டுமென்றே கேட்கிறாள்  என்று ராமிற்கு எடுத்துணர்த்த……….

“உனக்கு புரியலையா சரி புரிய வெச்சிடுவோம்”, என்றவன்  அவளை தன் வசப்படுத்த துவங்கினான்.

“அய்யோ! சாயந்தர நேரம்! யாராவது வந்துடபோறாங்க!”, என்ற வைதேகியின் மறுப்பு எதுவுமே வேலை செய்யவில்லை…….. அவளை தன்னுடையவளாக்கியே விட்டான்.

“சரி! இப்போ சொல்லு கோபம் எதுவும் இல்லையே”,

தன் முகச்சிவப்பை மறைக்க முடியாமல், “இல்லை”, என்று தலையாட்டினாள்.

அவளின் முகத்தையே பார்த்தவன், “நீ ரொம்ப அழகு பேபி”, என்றான்.

“ரொம்ப சீக்கிரமா கண்டுபிடிச்சிடீங்க”, என்று நக்கல் அடித்தாள்.

“எனக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் உன்கிட்ட சொல்ல எனக்கு ரொம்ப பயம்”, என்றான் உண்மையாக.

“ஒஹ்! நான் உங்களை ரொம்ப படுத்தி எடுத்துட்டேனோ”,

“நீயும் ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட போல”, என்று அவளை மாதிரியே நக்கல் அடித்தான்.

“அது நான் சொல்ற பேச்சை கேக்கலைனா அப்படிதான்”,

“என்ன பேச்சு நான் கேக்கலை”,

“நான் தான் உங்களை பிடிக்கலை……. கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே…. நீங்க கேட்கலையே……..”,

“உண்மையை சொல்லனும்னா இந்த கல்யாணத்தையே உங்க அப்பாவுக்காக தான் பண்ணிகிட்டேன். அதுக்கு காரணம் எனக்கே தெரியும்…….. நான் உனக்கு பொருத்தமில்லைன்னு நினைச்சது தான். உங்கப்பாவை நம்பி பொழைச்சவங்க நாங்க…… அவர் பொண்ணை நான் கல்யாணம் பண்றதான்னு ஒரு எண்ணம்…… நீ எங்க பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப் போவியான்னு இன்னொரு எண்ணம்”.

“இதெல்லாம் உன்னோட என் கல்யாணத்தை யோசிக்க வச்சது. நீ என்னை பிடிக்கலைன்னு சொல்லியும் மறுக்காம உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு காரணம் உங்கப்பா. வேற எந்த காரணமும் இல்லை”.

“ஆனா உன்னை கல்யாணம் பண்ணின பிறகு தான் நீ ரொம்ப அழகுன்னே என் கண்ணில பட்டது…… முதல்ல கவர்ந்தது அதுதான்……. அதுக்கப்புறம் உன்கிட்ட என்ன பிடிச்சதுன்னு…… என்னன்னு எல்லாம் தெரியாது. ஆனா உன்னை மட்டுமே ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு……. நீ என்ன பண்ணினாலும் நீ எனக்கு வேணும்னு தான் என் மனசு சொல்லிச்சு”,

“அந்த எண்ணமெல்லாம் எனக்குள்ளயே ஒரு தீ மாதிரி பரவிக்கிட்டே இருந்தது. அதுதான் நீ அதை கொஞ்சம் ஊதிவிட்டவிடனே உன்னையே அன்னைக்கு வலுக்கட்டாயமா எடுத்துக்கிட்டேன்”,

“அப்புறம் அதுக்காக நிறைய நாள் வருத்தபட்டு இருக்கேன். நீ என்னை விட்டு போயிடுவியோன்னு எவ்வளவு பயந்து இருக்கேன்……… கடவுள் தான் அப்படியெல்லாம் எதுவும் நடக்காம என்னை காப்பாத்தி இருக்கார்”, என்றான் நெகிழ்ந்து.

“உனக்கு என்னை பிடிக்குதா”, என்றான் ராம்.

“இப்போ நம்ம ரெண்டு பேரும் இருக்கிற நிலைமையில இந்த கேள்வி பையிதியக்காரத்தனமா தோணலை”, என்றாள். ஆடைகள் அலங்கிய நிலையில் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் படர்ந்து இருந்தனர்.

அவளின் வாய் பொத்தி…….. “சத்தம் போட்டு பேசாத பேபி…. எனக்கு வெக்க வெக்கமா வருது”, என்று கிண்டல் செய்தான்.

“உன்னை”, என்று அவனை இரண்டு மொத்தியவள்…. “பீ சீரியஸ்”, என்றாள்.

“புரியற விஷயங்கள் சில சமயம் அவங்களே சொல்லி தெரிஞ்சிக்கிட்டா சந்தோஷமா இருக்கும்”, என்று வார்த்தைகளில் விளையாடினான் ராம்.

அதற்கு சற்றும் குறையாமல் வைதேகி பதிலளித்தாள்……… “சில சமயம் நமக்கு பிடிக்கணும்னு நினைப்போம் ஆனா பிடிக்கவே பிடிக்காது………. சில சமயம் நாம வெறுக்கனும்னு நினைப்போம் ஆனா வெறுக்கவே முடியாது”,

“முதல்ல உங்களை பிடிக்கணும்னு நினைச்சேன்……… பிடிக்கவேயில்லை…… இப்போ நானே உங்களை வெறுக்கனும்னு நினைச்சாக்கூட வெறுக்க முடியாது……..”, என்றாள் தீர்மானமாக. 

“ஏன்? உனக்கு என்னை பிடிக்கலை”, என்று வெகு நாளாய் தன் மனதை அரித்துக்கொண்டு இருந்த கேள்வியை கேட்டான். 

“பெருசா காரணம் எல்லாம் எதுவும் கிடையாது. நல்ல படிச்சவனா பெரிய வேலையில் இருக்கிறவனா வரணும்னு நினைச்சேன். நீங்க படிக்கலைன்றது ஒரு குறை…….. நான் வேண்டாம்னு சொல்லியும் அப்பா என்னை கட்டாயப்படுத்தறாரேன்னு இன்னொரு குறை. எல்லாம் சேர்ந்து உங்களை எனக்கு பிடிக்கலைன்னு நானே சொல்லி சொல்லி அதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தேன்”.  

“எனக்கே எப்போ இருந்து உங்களை பிடிச்சதுன்னு சொல்ல தெரியலை, ஆனா கொஞ்சம் நாளைக்கு முன்னாடியே உங்க மேல என் மனசு சாய ஆரம்பிச்சிடுச்சு….. அதுக்கப்புறம் உங்க செய்கை என்னை கொஞ்சம் தள்ளி போக வெச்சது”,

“அப்புறம் அதை மறந்து பக்கத்துல வர நினைக்கும்போது……. உங்கப்பாவுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்ற வார்த்தை என்னை ரொம்ப காயப்படுத்திடுச்சு. அப்படி நீங்க எனக்கு தேவையில்லைன்னு நினைச்சு விலக ஆரம்பிச்சேன்”,

“ஐயோ! என் வாயால நானே கெட்டனா”, என்று ராம் வருத்தப்பட்டான்.

“விலகி நின்னாலும் என் மனசு உங்களை ரொம்ப தேடிச்சி……… ஆனா எனக்கு அதை ஒத்துக்க தான் மனசில்லை”, என்று தன் மனதை திறந்து உண்மையை பேசினாள்.

அதன் பிறகும் ராம் மனம்விட்டு நிறைய பேசினான்…….. சிறிது நேரம், “உம்”, கொட்டிகொண்டிருந்தாள் வைதேகி. பிறகு எந்த சத்தத்தையும் காணோம்………. ராம் அவளை தன் மீது புரட்டிப்பார்த்தால் உறங்கி இருந்தாள். நேற்று இரவு முழுவதும் உறங்காதது, இன்று காலையில் இருந்து செய்த அதிகப்படியான வேலைகள் எல்லாம் அவளுக்கு களைப்பை கொடுத்திருக்க உறங்கியிருந்தாள்.

ராமிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. “அச்சோ என் அழகே”, என்று அவளை வர்ணித்தப்படியே அவளை தூக்கிப் போய் படுக்கையில் கிடத்தினான். எதற்கும் அவள் துயில் கலையவில்லை. 

ராமிற்கு மனதிற்கு மிகவும் நிறைவாய் இருந்தது. சாபமாகிவிடுமோ என்று அவன் நினைத்த அவனின் வாழ்க்கை வரமாய் மாறிய அதிசயம் அவன் வாழ்வில் நடந்தே விட்டது. 

அந்த உணர்வை நிச்சயம் வைதேகிக்கும் கொடுக்க வேண்டும் அவள் வாழ்வில் என்றும் தன்னால் வசந்தம் மட்டுமே வீச வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

அவன் முடிவை ஆமோதிக்கும் பொருட்டோ என்னவோ அந்த தூக்கத்திலும் லேசாக விழித்தவள், “நீயும் தூங்கு”, என்று அவனை இழுத்தாள்.

“நீ தூங்கு பேபி, நான் இங்கே தான் இருக்கேன்”, என்று அவளின் பக்கத்தில் அமர்ந்தவன் கண்ணிமைக்காமல் அவளை பார்க்கத் துவங்கினான். அவன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் அல்லவா. 

தன் வாழ்க்கையில் கடவுள் மந்திரக்கோலை சுழற்றி எல்லாவற்றையும் சீர் செய்துவிட்டதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.

சில வருடங்களுக்கு பிறகு,

இப்போது வைதேகியும் ராமும் சென்னை வாசிகள். ஆம், வைதேகியின் பொருட்டு ராம் சென்னைக்கே அவன் தொழிலை மாற்றிக்கொண்டு வந்துவிட்டான்.

வைதேகிக்கு வேலைக்கு செல்ல மிகுந்த இஷ்டம் இருந்ததால் ராம் சென்னை வர தயங்கவில்லை. மனோகர் அவனின் கம்பெனியில் அவனை யு எஸ் சிற்கு அனுப்ப தயங்காமல் சென்றான்.

 ஏனென்றால் அங்கே தானே மாலதியும் மோகனும் இருந்தனர். அதனால் தங்கையுடன் சில வருடங்கள் இருக்கலாம் என்று மனோகர் அங்கே சென்று விட்டான்.

அவனுக்கும் பெண் பார்த்துக்கொண்டு இருந்தனர். 

வைதேகிக்கும் ராமிற்கும் வாழ்க்கையில் வந்த புது வரவு ஆருஷ். அவர்களின் செல்ல புதல்வன்.        

 “உங்க பையன் பண்ற அட்டகாசம் தாங்கலை…… நீங்க அவனை கேட்பீங்களா மாட்டீங்களா……..”, என்று குறை பட்டுக்கொண்டே வந்தாள் வைதேகி…….

“என்ன பண்றான்”, என்று ராம் பஞ்சாயத்து பண்ண எழுந்தான்.

ஆமாம்! அவனுக்கு இருக்கும் வேலைகளிலேயே தலையாய வேலை தன் மகனுக்கும் மனைவிக்கும் பஞ்சாயத்து செய்வது தான். அவர்களின் புதல்வன் மூன்று வருட ஆருஷ் செய்யும் அளவில்லா குறும்புகள் காரணம்.

“டேய்! ஆருஷ்”, என்று வைதேகி ஒரு கத்து கத்த ஓடி வந்து நின்றான் அவளின் செல்ல  புதல்வன்.

“என்ன கண்ணா பண்ணின”, என்று ராம் செல்லம் கொஞ்ச…….

“என்ன, என்ன கண்ணா பண்ணினன்னு கொஞ்சல்ஸ்”, என்று பல்லை கடித்தாள் வைதேகி.

“டென்ஷன் ஆகாத வைதேகி”, என்று அவளை சமாதனப்படுத்தியவன்…….

குழந்தையை கையில் தூக்கி…… “என்ன பண்ணின”,

“விளையாண்டேன்”,

“என்ன விளையாண்ட”,

“தண்ணி வெச்சு”,

“அதுக்கு ஏன் வைதேகி திட்டுற”,

“நல்லா இருக்கு நீங்க பஞ்சாயத்து பண்ற லட்சணம்……… எதையும் முழுசா கேட்காம”, என்று அவனின் தோளில் ஒரு தட்டு தட்டினாள்.

“நீ எப்போ தான் என்னை அடிக்கறதை விட போற”,

“அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது…… நீங்க பேச்சை மாத்தாம உங்க பையனை கண்டீங்க”,

“என்ன பண்ணினான்னு நீயும் சொல்ல மாட்டேங்கற……… அவனும் சொல்ல மாட்டேங்கறான்….. என்னத்தடி பண்ணினான்”,

“ம்! டைனிங் டேபிள் மேல இருந்த கொழம்பு, சாதம், ரசம், பொறியல்ன்னு ஒண்ணு விடாம எல்லாத்துலையும் தண்ணிய ஊத்தி வெச்சிருக்கான்……. எதுவுமே சாப்பிட ஆகாது அவ்வளவு தண்ணி………”,

“டேய், குட்டி பையா! அம்மா சொல்றது நிஜமா!”, என்று ராம் கேட்க…….

“நிஜம்”, என்பது போலதலையாட்டினான் ஆருஷ்.

“என்ன கண்ணா? இப்படி பண்ணிட்ட……… தப்புதானே”, என்று மகனுக்கு புரிய வைக்க முயன்றான்.

அவன் தன் தந்தை சொல்லியதற்கு எல்லாம் தலையை தலையை ஆட்டினான்.

“நான் உங்கம்மாகிட்ட ஆட்டுறதை விட நீ என்கிட்ட தலையை ஜோரா ஆட்றடா”, என்று தன் மகனை உச்சி முகர்ந்தான். 

“எல்லாம் வேஸ்ட்…….. இப்போ எனக்கு பசிக்குது……. என்ன செய்யறது?”,

“இவ்வளவு தானே வா ஹோட்டல் போகலாம்”,

“பிரச்சனைக்கு தீர்வு அப்புறம் கண்டுபிடிக்கலாம்…. முதல்ல பிரச்சினை பண்ணினவை கண்டீங்க”,

“என்ன ரைமிங்கா பேசற பேபி நீ”,

“இந்த பசப்பற வேலையெல்லாம் வேணாம்…….. அவனை ஒரு அடியாவது கொடுங்க”,

“அவ்வளவு தானே”, என்று அவனின் கை கூட உணராத ஒரு அடி அடித்தான்.

“உங்களை”, என்று வைதேகி அவனை அடிக்க வர…….. “ஆருஷ் வா! எஸ்கேப்!”, என்று சொல்லியபடி அப்பாவும் மகனும் அந்த இடத்தை விட்டு ஓடினர்.

சிறிது தூரம் அவர்களின் பின்னே ஓடிய வைதேகி காலை பிடித்துக்கொண்டு……. “ஐயோ”, என்றமர்ந்து விட ……..

தந்தையும் மகனும் பதறி அன்னையிடம் வந்தனர்.

“மாட்டினீங்களாடா”, என்று இருவருக்கும் செல்லமாக ஒரு அடி வைக்க….

மறுபடியும், “எஸ்கேப்”, என்று இந்த முறை ஆருஷ் சொல்ல……. ராமும் அவனின் சொல் பணிந்து ஆருஷிற்கு ஈடு கொடுத்து ஓடினான்.

அங்கே அவர்களின் இல்லறம் ஆட்டமும் பாட்டமுமாக சந்தோஷமாக விளங்கியது.

முதலில் ராமை பிடிக்காது பிடிக்காது என்று சொல்லிய பூவையின் நெஞ்சம் இப்போது ராமை தவிர வேறு எதையும் பிடிக்காது பிடிக்காது என்று சொல்லியது.

வைதேகி நெஞ்சத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கொலுவீற்று அமர்ந்திருந்தான்.  

                        நிறைவுற்றது.

Advertisement