Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு (1):

அவர்கள் ஒட்டிக்கொண்டு சுற்றியது திருமணம் வரையுமே தொடர்ந்தது……… நலுங்கு வைக்கும்போது பேசியவர்கள் அத்தனை பேர் வாயும் அடைப்பட்டு விட்டன.

ராமும் வைதேகியும் புதிதாக திருமணமானவர்கள் போல ஒருவரை ஒருவர் பிரியவேயில்லை….. சின்ன சின்ன தொடுகைகள், சந்தோஷங்கள், பேச்சுக்கள் என்று நாட்கள் வேகமாக சென்றது. ஆனால் அதற்கு மேல் ராம் முன்னேறவில்லை.

அவனுக்கு அவனுடைய பழைய, அவளை அடைந்த செய்கையை நினைத்து தயக்கம். ஆவலாக தொடுகிறான், சீண்டுகிறான், முத்தமிடுகிறான். ஆனால் அதையும் மீறி எதுவும் செய்வதில்லையே ஏன் என்ற கேள்வி வைதேகிக்குள்ளும் எழ ஆரம்பித்தது.

கல்யாண வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால் அவளும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவளின் நிலை குறித்து அவளுக்கு மிகுந்த ஆச்சர்யம். எப்போதிருந்து தனது மனது ராமை தேட ஆரம்பித்தது என்று அவளுக்கே புரியவில்லை. இதற்கு பெயர் தான் காதலா என்றது மனது. சதா சர்வ காலமும் அவனின் நினைவாகவே இருந்தது மனது. எனக்கு கூட காதல் வந்துவிட்டது போலவே என்று ஆனந்தக்கூதாடியது மனது.

அது கொடுத்த சந்தோஷம் பூரிப்பு முகத்தில் தனி தேஜசை அழகை கொடுத்தது வைதேகிக்கு. சாதாரணமாகவே அவள் மேல் பித்தாகிக் கிடக்கும் ராம் இன்னும் பித்தானான்.     

வைதேகிக்கு அவனை பிடிக்கவில்லை என்று சொன்னது அவனோடு சண்டையிட்டது எல்லாம் முன்ஜென்ம நிகழ்வாக தோன்றியது. வைதேகியின் இயல்பு கொஞ்சி பேசுவதோ பணிந்து போவதோ கிடையாது. ஆனால் ராமுடன் ஏற்பட்ட அன்யோன்யம் அவளுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுத்தது, புதிதாக ஒரு சிணுங்கல் கூட முளைத்திருந்தது.

அவனிடம் நிறைய சலுகைகள் எடுத்துக் கொள்ள பழகியிருந்தாள். முன்பும் ராம் அவளிடம் பணிந்து தான் போவான், அப்போது மிஞ்சும் வைதேகிக்கும்…….. இப்போது பணிந்து போகும் ராமிடம் மிஞ்சும் வைதேகிக்கும் நிறைய வித்தியாசங்கள்.  முன்பு கோபத்தில் மிஞ்ச, இப்போது கொஞ்ஜலில் மிஞ்சினாள்.

முன்பு அவனை காயப்படுத்திய வைதேகி இப்போது அவனிடம் ஆறுதலை தேடுகிறாள். அந்த பெண்மணி பேசியதற்கு லேசாக கண்கலங்கிய வைதேகி ராமை பார்த்ததும் ஆறுதல் தேடும் கன்றாக அவனின் மடியை நாடினாள். அவன் என்ன என்று கேட்டதும் அடக்கமுடியாமல் பொங்கி அழுதுட்டாள்.  

ஏதோ ஒரு வகையில் நிறைவாகவே உணர்ந்தாள். அதுவும் அந்த பெண்மணி சொல்லிய இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற வார்த்தை அடிக்கடி அவளின் மனதில் ரீங்காரமிட ஆரம்பித்தது.

அதை பற்றி ராமிடம் பேச அவளுள் இருந்த வெட்கமும் தயக்கமும் இடம் கொடுக்கவில்லை.

திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. ராம் எதிலும் எந்த குறையும் வைக்கவில்லை. எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக செய்தான். சீர் வரிசைகளை குவித்துவிட்டான் என்றே சொல்ல வேண்டும். வைதேகி அவனை விடவில்லை. பணத்திற்கு ராமை தடுமாறவும் விடவில்லை.

ராம் வைதேகியிடமிருந்து பணம் வாங்க யோசிக்க…… “இப்போ இதை வாங்கலைன்னா, நான் இந்த கல்யாணத்துலயே இருக்க மாட்டேன். ஊருக்கு போயிடுவேன். மறுபடியும் உங்களோடவும் சேர மாட்டேன்”, என்று சிறுபிள்ளை போல அடம்பிடித்து அவனை பணம் வாங்க வைத்தாள்.

சுந்தரேசனுக்கு சீர் வரிசைகளை பார்த்து பரம திருப்தி. லீலாவதியும் லக்ஷ்மி பாட்டியும் கூட மிகுந்த திருப்தியில் இருந்தனர். ராமால் இதெல்லாம் தனியாக முடிந்திருக்காது, வைதேகியின் கைங்கர்யம் தான் இது என்று அவர்கள் எல்லோருக்குமே புரிந்தது.

மாலதியின் அண்ணன் செய்வதை செய்யட்டும், நமக்கு என்ன என்று இருக்காமல் மாலதிக்காக பார்த்து பார்த்து செய்த வைதேகியின் குணம் அங்கே எல்லோரையும் கவர்ந்து விட்டது.

வம்பு பேசிய பெண்மணியிடம் லீலாவதி வலிய போய் சொன்னார், “அன்னைக்கு என்னமோ பேசினீங்களே அண்ணி, இன்னைக்கு அவங்க கொண்டு வந்து இறக்கியிருக்கற சீர் வரிசையை பாருங்க…….. இது நாங்க எங்க ரமாக்கு செஞ்சிருக்கிறத விட அதிகம். அப்பா அம்மா இருந்து செய்யறது வேற… அண்ணன் அண்ணியெல்லாம் இவ்வளவு செய்யனும்றது அவசியமேயில்லை, நல்ல மனசு இருக்கவும் தான் செய்யறாங்க”, என்று சொல்லி சென்றார்.

“இதோ பார்றா நல்ல மனசு இருக்கவும் செய்யறாங்களாம்….. பணம் இருக்கவும் செய்யராங்கன்றது தான் நிஜம். இது ஒரு பெரிய விஷயமா பேசறாங்க”, என்று அதற்கும் புரணி பேசினார் அந்த பெண்மணி.

சிலரின் வாயையெல்லாம் என்ன செய்தாலும் அடைக்கவே முடியாது.

மாலதியை முதலிரவிற்காக அலங்கரிக்கும் பொறுப்பு வைதேகிக்கே வந்தது. திருமணம் முடிந்து மாலதியின் முகத்தில் அவ்வளவு செம்மை, அவ்வளவு பூரிப்பு, ஏதோ கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

இதையெல்லாம் பார்த்த வைதேகிக்கு தான் இந்த மாதிரியெல்லாம் இருக்கவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. மாலதியிருக்கும் இடத்திற்கே ஏதாவது சாக்கு வைத்து மோகன் அந்த புறமும் இந்த புறமும் நடந்து கொண்டிருந்தான்.

இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்டனர் சீண்டிக்கொண்டனர். இது நேற்றிலிருந்து நடந்து கொண்டு தான் இருந்தது. வைதேகியின் கண்களுக்கு அது தப்பவில்லை.  இப்படியெல்லாம் தனக்குள்ளும் ராமுக்குள்ளும் எதுவும் நடக்கவில்லையே என்றிருந்தது.

திருமணம் முடிந்து சில மணித்துளிகளிலேயே இருவருக்குள்ளும் என்ன புரிதல். தனக்கும் ராமிற்கும் இவ்வளவு புரிதல் இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தாள். மனது தான் நிறைய இழந்து விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்தது.

எங்கே தான் அவனை எப்போது புரிந்து கொள்ள முயற்சி செய்தோம்…… தான் தான் அவனை பிடிக்கவில்லை என்பதிலேயே நின்று கொண்டு இருந்தோமே. அதில் என்ன தப்பு. நான் தான் அவனை பிடிக்கவில்லை என்று சொன்னேனே என்று அவளை சமாதானப்படுத்தியது அவளின் மனது.

இப்போதும் அப்படியா இருக்கிறது என்று பதிலுக்கு மனது மற்றொருபுறம் கேட்க…. இப்போதெல்லாம் தனக்கு அப்படி தோன்றுவதில்லை. அவன் சிறிது நேரம் தன்னுடன் இல்லையென்றாலும் தன் மனது அவனை தேடுகிறது என்றறிந்திருந்தாள். நான் தான் இப்போது அவனை காதலிக்கிறேனே என்று சொல்லிக்கொண்டாள். அந்த வார்த்தையே அவளுக்கு இனித்தது.

அப்போது பார்த்து ராம் எதற்கோ கூப்பிட…….. “இப்போது வந்துவிடுகிறேன்”, என்று மாலதியை தனியாக விட்டு சென்றாள்.

அவள் சென்ற அடுத்த நிமிடம் ஏதோ சாக்கு வைத்து ரூமிற்குள் நுழைந்த மோகன், மாலதியை பார்த்து, அவளின் அலங்காரத்தை பார்த்து மெலிதாக விசிலடித்தான்.

“அச்சோ! யாருமே இல்லையா! வார்றே வா!”, என்றபடி அவளை நெருங்கினான்.

“என்ன பண்றீங்க? அண்ணி வந்துடுவாங்க”, என்று மாலதி பதற……

“அதெல்லாம் வரமாட்டாங்க! கல்யாணத்துக்கு முன்னாடி தான் என்னை பார்க்கவே மாட்ட……… இப்போ என்ன? எனக்கு புல் ரைட்ஸ் இருக்கு”, என்று சொல்லியபடி அவளை அணைத்து இதழோடு இதழ் பதிக்க துவங்கினான்.

சிறிது நேரம் கழித்து வைதேகி வந்துவிட இருவரும் அவசரமாக விலகினர். வைதேகிக்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

அவசரமாக திரும்பி அவள் வெளியே போகப்போக……..

“நான் போறேன் வைதேகி”, என்று அசடு  வழிந்தபடி மோகன் போக……. மாலதிக்கு வெட்கம் பிடிங்கி தின்றது, முகத்தில் மேக் அப்பையும் மீறி ஒரு செம்மை தெரிந்தது.  

வைதேகிக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது…… தனக்கு கிடைக்காத இந்த மாதிரியான பிடித்த திருமணம் மாலதிக்கு அமைந்ததில் மிகுந்த சந்தோஷம் வைதேகிக்கு.

வைதேகி போய் மாலதிக்கு திருஷ்டி கழிக்க……. “போங்க அண்ணி”, என்று அழகாக வெட்கப்பட்டாள் மாலதி.    

சிறிது நேரம் கழித்து என்னவோ எதற்கென்று தெரியாமலேயே மனது ஏங்க ஆரம்பித்தது வைதேகிக்கு. இந்த மாதிரியான சந்தோஷங்களை எல்லாம் தான் தன் திருமணத்தின் போது அனுபவிக்க வில்லையே என்று எண்ணினாள். அவளின் முகம் விழுந்து விட்டது.

அடிக்கடி அந்த பக்கம் நடந்து கொண்டிருந்த மோகனுக்கு கண்களாலேயே மாலதி பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும் வைதேகியை கவனிக்க தவறவில்லை.

“என்ன அண்ணி ஒரு மாதிரி இருக்கறீங்க “,

மாலதி கேட்டதும் விழித்தாள் வைதேகி……… “இல்லையே! நான் நல்லா தான் இருக்கிறேன்”, என்றாள்.

“எனக்கு நீங்க எதுவோ டல்லா இருக்கிற மாதிரி தோணுது”,

“சரியா தூங்கலை, அதனால இருக்கும்”, என்று சமாளித்தாள்.

அதற்குள் வைதேகியை உணவருந்த அழைக்க வந்தார் லக்ஷ்மி பாட்டி, “நீ இன்னும் சாப்பிடலை தானே வந்து சாப்பிடு”, என்றார்.

“அவர் சாப்பிட்டிட்டாறா பாட்டி”, என்றாள் வைதேகி.

“இல்லை நீ வர்றதுக்கு தான் ராமும் மனோகரும் இன்னும் சாப்பிடாமா காத்துட்டு இருக்காங்க”,

“இதோ வந்துட்டேன்”, என்று சொன்னவள் மாலதியின் அலங்காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு……. அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு கிளம்பினாள்.

அவளின் இந்த செய்கையில் மாலதிக்கு கண்கள் கலங்கியது.

“தேங்க்ஸ் அண்ணி”, என்றாள்.

“நீ உதை வாங்க போற…… உங்கம்மா இருந்தா இப்படி தான் சொல்லுவியா”, என்றாள் வைதேகி.

உடனே, “சாரி அண்ணி”, என்றாள் மாலதி.

“தேங்க்சும் வேண்டாம்…….. சாரியும் வேண்டாம்……. நாங்க சாப்பிட்டிட்டு கிளம்பறோம்”, என்று அவளிடம் சொல்லி கிளம்பினாள்.

இதையெல்லாம் பார்த்த லக்ஷ்மி பாட்டி…… இவர்கள் உறவு எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்று இறைவனிடம் மனதார வேண்டிக்கொண்டார்.  

அவள் சாப்பிடும் இடத்திற்கு வந்தவுடனேயே அவளை பார்த்த ராமிற்கு தெரிந்துவிட்டது அவளின் முகமே சரியில்லை என்று…..

“என்னவாகிற்று தெரியவில்லையே……. மறுபடியும் யாரும் எதுவும் பேசிவிட்டார்களா, என் இப்படி இருக்கிறாள்”, என்று அவனின் மனம் பதைத்தது. அதே சமயத்தில் அவன் முகம் கோபத்தில் இறுகிவிட்டது.

“என்ன வைதேகி”, என்றான் அருகில் வந்து மெதுவாக……

“என்ன, என்ன?”, என்றாள் புரியாமல் வைதேகி.

“உன் முகமே சரியில்லை, மறுபடியும் யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா என்ன? இவங்களுக்கு இதே வேலையாபோச்சு………  யாரு என்னன்னு சொல்லு…. அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”, என்றான் கோபமாக .

அவனுடைய அந்த கோபம் வைதேகிக்கு பிடித்தது. அவள் இருந்த மனநிலையில் மிகுந்த ஆறுதலை கொடுத்தது. தனக்கு ஒன்றென்றால் தான் கணவன் இருக்கிறான் என்பது தனி தெம்பை கொடுத்தது. 

மனதளவில் அவனுடைய கோபத்தால் மிகவும் நெகிழ்ந்தாள் வைதேகி.

“யாரும் எதுவும் சொல்லலை, ஒண்ணுமில்லை விடுங்க, எல்லாரும் நம்மையே பாக்கறாங்க”, என்று அவனை அடக்கினாள். அவனை சமாதானப்படுத்தி விட்டாலும் அவள் மனது சமாதானமாகவில்லை.

பிறகு அருகருகே அமர்ந்து சாப்பிட்டனர். உணவு உள்ளே இறங்குவேனா என்றது வைதேகிக்கு….. அவளால் உணவு உண்ணவே முடியவில்லை….. என்னவென்று தெரியாமலேயே ஒரு துக்க பந்து தொண்டையை அடைத்தது. உணவை அளந்து கொண்டு இருந்தாள்.

அவளின் கவனம் சாப்பிடுவதில் இல்லை என்று கவனித்த ராம், “சாப்பிடு வைதேகி”, என்று அவளின் கவனத்தை திருப்பினான். “ம்ம்”, என்றாளே தவிர சாப்பாடு இறங்கவில்லை.

இன்னும் கட்டாயப்படுத்தினால் எல்லோர் கவனத்தையும் கவரும் என்று நினைத்த ராம் அவளை அப்படியே விட்டு விட்டான்.

அவள் சரியாக சாப்பிடாமல் அவனுக்கு சாப்பிட மனது வராமல் சீக்கிரமே எழுந்து கொண்டான். அவள் நல்லநிலையில் இருந்திருந்தால் தான் சாப்பிடாததை கவனித்து இருப்பாள். ஏதோ சரியில்லை என்று நிச்சயமாகிப்போனது ராமிற்கு.

அதனால் அவளை அங்கே அதிக நேரம் இருக்க வைக்காமல் சாப்பிட்ட உடனே மனோகரையும் வைதேகியையும் அழைத்துக்கொண்டு ராம் கிளம்பிவிட்டான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே எதுவும் பேசாமல் ரூமிற்குள் போய் புகுந்து கொண்டாள். அவள் பின்னே செல்ல ராமின் கால்கள் பரபரத்தன, தானும் உடனே சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்து சிறிது நேரம் மனோகரிடம் பேசியிருந்துவிட்டு அவனை கதவை பூட்டச்சொல்லி ராம் அவனின் ரூமினுள் சென்றான்.

வைதேகி கண்மூடி படுத்திருந்தாள். அவளின் கண்மூடியிருந்தாலும் உறங்கவில்லை என்று நன்கு தெரிந்தது ராமிற்கு. உடை கூட மாற்றவில்லை. நகைகளை கழட்டவில்லை. உள்ளே வந்தவள் அப்படியே படுத்துக்கொண்டாள் என்று தெரிந்தது.   

அவளின் அருகில் சென்று அமர்ந்தவன், “என்ன பேபி, என்ன பிரச்சினை”, என்றான்.

கண்ணை திறந்தவள், “ஒன்றும் இல்லை”, என்றாள். கண்கள் கலங்கியிருப்பது போல தோன்றியது.

“இன்னைக்கும் யாராவது ஏதாவது சொன்னாங்களா என்ன?”,

“இல்லை”, என்று தலையசைத்தாள்.

“அழுதியா பேபி”,           

“அதற்கும் இல்லை”, என்று தலையசைத்தாள்.

“பொய் சொல்லாத……. கண்ணெல்லாம் கலங்கின மாதிரி இருக்கு…… என்ன ஆச்சு?”, என்றான்.

“தெரியலை”, என்றாள் வைதேகி.

“என்ன தெரியலையா”,

“ஆமாம்! என்னன்னு தெரியலை, என்னமோ மாதிரி இருக்கு”, என்றாள் மனதை மறையாமல்.

இதற்கு என்ன சொல்வது என்றே ராமிற்கு தெரியவில்லை.

“என்ன யாராவது ஏதாவது சொன்னாங்களா……… என்கிட்ட நீ மறைக்கறியா”, என்றான் .

“இல்லையில்லை…… யாரும் எதுவும் சொல்லலை”, என்று மறுத்தாள்.

“அப்புறம் என்ன?”. என்று ராம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே அவனின் மொபைல் அடித்தது, மனோகர் தான் அழைத்துக்கொண்டு இருந்தான்….. இவன் எதற்கு ஒரே வீட்டில் இருந்து கொண்டு போன் அடிக்கிறான் என்று யோசித்துக்கொண்டே ராம் போனை எடுக்க……

“அண்ணா நாளைக்கு நான் கிளம்பறேன். அண்ணி ஊருக்கு எப்போ வர்றாங்கன்னு  நான் கேட்க மறந்துட்டேன்”, என்றான்.

“அவன் எப்போ ஊருக்கு வர்றேன்னு கேட்கறான்”,

“என்ன ராமை விட்டு ஊருக்கு போவதா…….. மறுபடியும் தனிமையான வாழ்க்கையா”, பதில் சொல்ல முடியாமல் கண்களில் நீர் கட்டியது.

அவளின் கண்களில் நீரை பார்த்தவன், “அப்புறம் சொல்றாலாம்”, என்று அவனே சொல்லி போனை வைத்தான். அவனை பிரிவதற்கா இந்த அழுகை ஏதோ ஒரு வகையில் தான் தான் அவளை பாதித்து விட்டோமோ என்று நினைத்தவன்…..

அவளை எழுப்பி அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான். “நான் ஏதாவது எனக்கு தெரியாமையே பண்ணிடனா பேபி”, என்று கேட்டது தான் தாமதம்……… அவனின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். அவனால் அவளை விலக்கவே முடியவில்லை.

“என்ன பேபி இப்படி அழ ஆரம்பிச்சிட்ட ………. எவ்வளவு ஸ்ட்ராங் நீ…… உனக்கு நான் பெரிய கொடுமையை செஞ்சப்போ கூட அழலை……… என்னை தான் அடிச்ச…. இப்போ ஆ ஊ ன்னா அழ ஆரம்பிச்சிடற, என்னன்னு சொன்னா தானே தெரியும்”.

என்னவென்று சொல்வாள்…….. நான்கடந்து போன நாட்களுக்காக ஏங்குகிறேன் என்றா……… இல்லை எல்லோர் வாழ்க்கையையும் போல என் வாழ்கையை நன்றாக அமைத்துக்கொள்ளாமல் நானும் வருந்தி உன்னையும் வருத்துகிறேன் என்றா…..

என்னவென்று அவளுக்கு சொல்லத்தெரியவில்லை. வெகு நேரம் அவனை கட்டிக்கொண்டு அழுதாள். ராமால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவன் அவளுக்கு செய்த கொடுமையை ஞாபகப்படுத்திய போது கூட அவளுக்கு அதன் தாக்கம் சிறிதும் இல்லை.

ராமிற்காக தான் மனம் ஏங்கியது. அதை சொல்லவும் விடாமல் ஏதோ தடுத்தது. ஒரு வழியாய் அழுகை சற்று குறைந்தவுடன் அவனை விட்டு விலகினாள்.

“என்னன்னு என்கிட்ட சொல்ல மாட்டியா”, என்றான் ராம்.

“சொல்ற மாதிரி ஒண்ணுமே இல்லை”, என்றாள் தேம்பிக்கொண்டே.

என்ன விஷயம் என்று சத்தியமாய் ராமிற்கு புரியவில்லை. சரி நாளை கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவன்………. “சரி தூங்கு”, என்று அவளின் முகம் பார்க்க….. அவளின் ஏக்கப் பார்வை தான் அவனுக்கு பதிலாக கிடைத்தது.

அந்த பார்வை அவனை தாக்க……… இவள் தனக்காக அழுகிறாளா என்று சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது.   

Advertisement