Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வைதேகியும் மாலதியும் காஞ்சிபுரம் வந்துவிட்டனர்……. வைதேகி மிகவும் சிரமப்பட்டு லீவ் வாங்கியிருந்தாள், அதனால் மனோகர் லீவ் எடுக்கவில்லை……… திருமணத்திற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவன் வருவது என்று முடிவாகிற்று.

இவர்கள் வந்ததற்கு அடுத்த நாள் மாலதிக்கு தாய்மாமன் முறை செய்வது என்று நாள் குறித்து இருந்தது. மாப்பிள்ளை வீட்டாராய் இருந்தாலும் மாலதிக்கு தாய்மாமன் சுந்தரேசன்தானே அதனால் அவர் வீட்டிலேயே நலுங்கு வைப்பது என்று முடிவானது.

வந்ததில் இருந்து வைதேகியும் கவனித்துக்கொண்டு தானிருந்தாள்…… ராம் முடிந்த அளவு அவளிடம் இருந்து விலகியே இருந்தான். இதை உணர்ந்த வைதேகிக்கு ராமின் மீது கோபமாக வந்தது.

“நீ எனக்கு மனைவியாக வேண்டும் என்கிறான் ஆனால் என்னை பார்த்தாலே காத தூரம் ஓடுகிறான் இவனை என்ன செய்ய”, என்று யோசிக்க ஆரம்பித்தாள் வைதேகி.

இவளாக வலிய பேச்சு கொடுக்க, அவன் கேட்பதற்கு பதில் சொல்வதோடு சரி அவனாக எதுவும் பேசவில்லை.

வைதேகிக்கு அழுகையே வரும் போல இருத்தது. அங்கே அவளுக்கோ மாலதிக்கோ எந்த வேலையும் இல்லை. இருவரும் ராம் வேலைகளை செய்வதை தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். அவனோ பரபரப்பாக அந்த வேலையும் இந்த வேலையும் செய்து கொண்டிருந்தான் இவளை கவனித்தாகவே தெரியவில்லை.

வைதேகியின் கோபம் எல்லை மீற ஆரம்பித்தது. இரவு உணவு உண்ணலாம் என்று மாலதி வந்தபோது, “நீ சாப்பிடு மாலதி……. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்”, என்று விட்டாள்.

வெளியே சென்று விட்டு அப்போது தான் வீட்டிற்கு வந்த ராமிடம் இதை சொல்லிவிட்டு மாலதி உறங்க சென்றுவிட்டாள்.

ராமின் கண்கள் வைதேகியை தேட…… அவள் ரூமிற்குள் படுத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. 

அவள் அருகில் சென்றவன், “என்ன வைதேகி இன்னும் சாப்பிடலையா”, என்றான்.

வைதேகியிடமிருந்து பதிலே இல்லை………

கண்விழித்து தான் இருந்தாள் இருந்தாலும் பேசவில்லை.

“எழுந்துரு சாப்பிடலாம்”, என்றான்.

அதற்கும் அமைதியாக இருந்தாள்.

“பேசமாட்டியா”, என்றான்.

படுத்துக்கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்து…… “நீங்க தானே என்னை பார்த்து ஏதோ பேயை பார்த்த மாதிரி ஓடிட்டு இருந்தீங்க……… இப்போ என்ன பெருசா வந்து சாப்பிடலையான்னு என்ன அக்கறை”, என்று பொறிந்தாள்.  

அவன் பேசாதது அவளுக்கு வருத்தம் என்பது அவளின் பேச்சிலேயே தெரிய…….. அவளின் மனமும் தன்னை தேடுவதை உணர்ந்த ராம் சிறகில்லாமல் பறந்தான்.

“அது”, என்று ராம் சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும்போதே…….

“நீ எதுவும் சொல்லாத…….. என்ன சொல்லுவ நீ…….. உன்னை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது….. பேசிட்டு இருக்க முடியாது………. என் மனசு நீ வேணும்னு சொல்லுது……….. அது சொல்லுது……… இது சொல்லுது……… நான் இப்படி நினைச்சேன்………. அப்படி நினைச்சேன்……… நீ என் மனைவியா வேணும்…… அது வேணும்…… இது வேணும்ன்னு……. எந்த கதையும் சொல்லாத, எந்த கதையும் கேட்கற மூட்ல நான் இல்லை……… யூ ஜஸ்ட் ஷட் அப், அண்ட் கெட் அவுட்………”, என்றாள் படபடவென்று.

காலையிலிருந்து அவனின் பாராமுகத்தை பார்த்தவளுக்கு ஆவேசம் அடங்க வில்லை.

அவளின் பேச்சை கேட்டவனுக்கு முகம் புன்னகையில் மலர்ந்தது.

“என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு, நான் என்ன இங்க டான்சா ஆடறேன்”,

“ஆடேன்………. அதையும் தான் பார்க்கறேன்”,

“டேய்! நீ என்கிட்ட உத வாங்காம போக மாட்ட போல”,

“அதுக்கென்ன புதுசாவா வாங்கறேன், எனக்கு உன்கிட்ட அடி வாங்கி வாங்கி நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ஆகிடுச்சு”,

“உன்னை”, என்று ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த தலையணையை தூக்கி வீசினாள்.

அதை லாவகமாக பிடித்தவன் அவளை நெருங்கினான்……

“பக்கத்துல வந்த அடிதாண்டா உனக்கு”,

அவன் எதையும் சட்டை செய்யாமல் அருகில் வந்தவன்……. அமர்ந்திருந்த அவளை அப்படியே இரு கைகளாலும் தூக்கினான்.

“ரொம்ப பசிக்குது பேபி, நம்ம சண்டையை சாப்பிட்டிட்டு தெம்பா தொடரலாம்”, என்று ஹாலுக்கு தூக்கி வந்தான்.

“விடு, விடு,” என்று அவள் திமிர முற்பட…..

“ஷ்! கத்தாத பேபி, மாலதி எழுந்துக்க போறா”, என்று அடக்கினான்.

அது சற்று வேலை செய்தது…… அவனை முறைத்துக்கொண்டே அவன் கைகளில் சுகமாக வந்தாள்.

டைனிங் டேபிள் மேல் அவளை அமர வைத்தான்.

“நான் சாப்பிட மாட்டேன்”, என்றாள் பிடிவாதமாக….

“நீ சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன்”, என்றான் ராம்.

“என்ன ப்ளாக் மெயில் பண்றியா”,

“ப்ளாக் மெயிலும் பண்ணலை….. வைட் மெயிலும் பண்ணலை…. இது ராம் மெயில்”, என்றான்.

“சகிக்கலை ஜோக்”, என்றாள் சிரிக்காமல் முகத்தை சுழித்து.

அவள் செய்வது எல்லாமே ராமிற்கு புன்னகையை வரவைத்தது.

“பேபி, ப்ளீஸ் ரொம்ப பசிக்குது சாப்பிடலாம் வா”,

“நான் தான் உனக்கு வேணும்னா நீ கொட்டிக்கோ தான்னு சொல்லறேன்”, எரிச்சலாக.

“எதுக்கு பேபி இப்போ கோபப்படற, பேசாம இருந்ததுக்கு சாரி…. சாரி… சாரி…. போதுமா”,

“எனக்கு உன் சாரி எல்லாம் வேண்டாம்”,

“சரி வேற என்ன வேணும் சொல்லு”, என்று டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி அவளை நெருங்கினான்.

“ஏய்! என்ன பண்ண போற”, என்று கத்தினாள்.

“கத்தாத மாலதி எழுந்துக்குவா”, என்று அவன் அவளை அடக்க,

அதையே மெதுவாக, “ஏய்! என்ன பண்ண போற”, என்றாள்.

“ம்! ரொமான்ஸ் பண்ண போறேன்”, என்றான் புன்னகையோடு.

“அதெல்லாம் முடியாது, போ! போ!”, என்றாள்.

“இதென்னடி காக்காவை விரட்ற மாதிரி விரட்ற, என் ரொமான்ஸ் மூடே போச்சு”,

“அய்யே!”, என்று அவள் பழிப்பு காட்ட…..

பழிப்பு காட்டிய அவளின் இதழ்களை ஆவலோடு சிறை செய்தான்…….. வைதேகி திமிர முயன்றாள்…… அவளை அசைய விடாமல் அவனின் கைகள் அவளை அணைத்து பிடித்திருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு திமிறல் நின்று அவனுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.

நீண்ட நேரத்திற்கு பிறகே விடுவித்தான்.

அவனின் தொடுகையை வைதேகி அனுபவித்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல்……..  

“நீ என்ன இப்போல்லாம் அடிக்கடி இப்படி பண்ற”, என்று அதற்கும் சண்டை போட்டாள்.

அவள் வேண்டுமென்றே வம்பு வளர்கிறாள் என்று புரிந்த ராம்……. “இதெல்லாம் அடிக்கடி தான் பண்ணனும்”, என்று ராம் நக்கல் அடித்தான். 

வைதேகியின் முகம் சிவந்தது…… அதை மறைப்பதற்காக, “உன்கிட்ட எல்லாம் பேசவே முடியாது”, என்றபடி டைனிங் டேபிளில் இருந்து குதித்து இறங்க, மறுபடியும் அவளை அணைத்து தூக்கினான்.

“ஏய்! நீ என்ன ரொமான்ஸ் மூடே போச்சுன்னு இப்படி பண்ணிட்டு இருக்க”,

“ரொமான்ஸ் மூட் இல்லாததுக்கே இப்படின்னா, இன்னும் இருந்தா என்ன பண்ணுவேன்னு யோசி”, என்றான்.

இந்த முறை வைதேகியால் அவளின் முகச்சிவப்பை மறைக்கவே முடியவில்லை…. சிவந்த முகத்தோடே அவனிடம் தழைந்து, “ப்ளீஸ்! இறக்கி விடுங்க”, என்றாள்.

“அப்போ டிஃபன் சாப்பிடறியா”,

“ம்ம்”,

“ரொம்ப தாங்க்ஸ்”,

“எதுக்கு”, என்பது போல அவள் பார்க்க…..

“இவ்வளவு லேட் ஆ டிஃபன் சாப்பிட ஒத்துக்கிட்டது”, என்று கூறிக்கொண்டே உடல் முழுவதும் அவன் மேல் உராயும்படி மெதுவாக இறக்கினான்.

வைதேகியினுள் ஏதேதோ மாற்றங்கள். 

அவனின் செய்கையை அனுபவித்துக்கொண்டே , “அம்மாடி இவன் இவ்வளவு பேசுவானா”, என்பது போல கண்ணை விரித்து வைதேகி பார்க்க……

“எதுக்கு இப்போ ஆளை முழுங்கற மாதிரி பார்க்கிற”,

“ம்ம்! சைட் அடிச்சேன்…….. உங்களை……”, என்றாள் வைதேகியும் நக்கலாக.

“நம்பிட்டேன்……. பிட்டேன்……… ட்டேன்…… டேன்……….. ன்.ன்.ன்……..”, என்று அவனின் வழக்கமாக ராகம் பிடித்தான் ராம்.

கேட்ட வைதேகிக்கு சிரிப்பு அடங்காமல் வர…….. வாய்விட்டு சிரித்தாள். ராமும் அவளோடு இணைந்து சிரித்தான்.

அவளை அப்படியே தோளோடு அணைத்து, “ஐ லவ் யூ பேபி, நான் என்ன பண்ணியிருந்தாலும் பேசியிருந்தாலும் அதை மன்னிச்சிடேன்”, என்றான் உருக்கமாக.

அவனின் குரல் அவளை மேலும் உருக்கியது.

“நான் மறக்க நினைக்கற விஷயத்தை நீங்க தான் அடிக்கடி ஞாபகப்படுத்தறீங்க”,

“சரி ஞாபகப்படுத்தலை, ஆனா நீ அதை மறந்துடனும்”, என்றான் பிடிவாதமான குரலில்.

“முயற்சி பண்றேன்”, என்றாள் சுமுகமாகவே.

பிறகு இருவரும் உண்டு முடித்து உறங்கினர். வைதேகி அவன் புறம் இளகி இருக்கிறாள், அவன் நெருங்கினாலும் தடை சொல்ல மாட்டாள் என்று ராமிற்கு தெரியும். இருந்தாலும் அவன் முன் செய்த செயலின் தாக்கம் அவளை நெருங்க விடாமல் ஒரு பயத்தை கொடுத்தது.

அவன் அதே யோசனையில் அந்த புறமும் இந்த புறமும் புரள……. “நான் தூங்கறதா வேண்டாமா, எதுக்கு இப்படி புரண்டுட்டே இருக்கீங்க, தூங்குங்க”, என்று வைதேகி ஒரு அதட்டல் போட…….. யோசனைகளை எல்லாம் ஒதுக்கி உறங்க முற்பட்டான். 

அடுத்த நாள் விடியற் காலையிலேயே மாலதியை நலுங்கு வைக்க அழைக்க உறவுகள் வந்துவிட்டனர்.

“இவ்வளவு சீக்கிரமா வருவீங்கன்னு தெரியாது பெரியம்மா, நான் இன்னும் குளிக்கவேயில்லையே”, என்றாள் வைதேகி.

“நான் ராம் கிட்ட நேத்தே சொன்னனே மாலதியை எங்க வீட்ல தான் எண்ணெய் வச்சு குளிப்பாட்டி நலங்கு வைப்போம்னு ராம் சொல்லலையா”,

ராம் நேற்று நடந்த நிகழ்வுகளில் அதை சொல்ல மறந்திருந்தான்….

அவன் அசடு வழிய, “மறந்துட்டேன்”, என்றான் வைதேகியிடம்.

“நல்ல பையன் போ நீ”, என்று கூட வந்த லக்ஷ்மி பாட்டியும் அவனை கடிய….

ராமை காப்பாற்றும் பொருட்டு, “அதுக்கென்ன பாட்டி  நீங்க அவளை அழைச்சிட்டு போங்க, நாங்க ஒரு கால் மணிநேரத்துல அங்க இருப்போம்”, என்றாள் வைதேகி.

“சரி, சீக்கிரம் வந்துடுங்க இப்பவே எல்லாரும் வந்துட்டாங்க”, என்று அவர்கள் மாலதியை அழைத்துக்கொண்டு கிளம்ப……. அவர்களின் பின்னாலேயே மின்னல் வேகத்தில் குளித்து தயாராகி ராமும் வைதேகியும் சென்றனர். இருந்தாலும் சற்று நேரமாகி விட்டது.

அங்கே உறவுகள் கூடியிருக்க இவர்கள் இருவரும் வருவதற்காக தான் எல்லாரும் காத்து இருந்தனர்.

இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் எல்லோர் கண்களும் இவர்கள் மேல்.

அங்கே இருந்த உறவுப்பெண் ஒரு அம்மா பக்கத்தில் இருந்த இன்னொருவரிடம் முணுமுணுத்தார்………. “இந்த பொண்ணு வர்றதுக்கு தான் இவ்வளவு நேரமா நம்மையெல்லாம் காக்க வெச்சிட்டு ஆரம்பிக்காம இருக்காங்களா…….. இது எப்போ புருஷனோட வந்து சேர்ந்துச்சு”,

“அது ஒரு ரெண்டு நாளு இருக்கும், அப்புறம் மாசமா வராது. ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒரு தரம் வரும்”, என்று பக்கத்தில் இருந்தவர் பதிலுக்கு கமெண்ட் அடித்தார். 

“இப்படி புருஷனோட சேர்ந்து பொழைக்க தெரியாதவளுக்கு எவ்வளவு மரியாதை பாரேன்……….. அவ வர்ற வரைக்கும் எல்லாரும் காத்து இருக்காங்க, கலி காலம் முத்தி போச்சு…….. இப்போ எல்லாம் பணத்துக்கு தான் மதிப்பு, நடத்தைக்கு இல்லை. எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரமா போச்சு……… இதே நம்ம மாதிரி சாதாரணப்பட்டவங்க வீட்ல இந்த மாதிரி புருஷனோட சேர்ந்து பொழைக்காம எப்போ ஒரு தடவை இந்த மாதிரி தேவைக்கு வந்துட்டு போனா, என்ன பேச்சு பேசுவாங்க இவங்க எல்லாம்……”, என்றார் அந்த பெண்மணி.

அவர் சொன்னது மெதுவாக என்றாலும் அங்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் காதிலும் விழுந்தது.  

சிறு சலசலப்பு எழுந்தது. சிலர் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். வீட்டு ஆட்கள் இதையெல்லாம் கவனிக்கவில்லை. அவர்கள் தலைக்கு எண்ணெய் வைக்க ஐந்து சுமங்கலிகளை அழைத்து…… அதை நல்லபடியாக முடித்து…… மாலதியை குளித்து தயாராக அனுப்பிக்கொண்டு இருந்தனர்.

அவள் தயாராகி வரும்வரை அங்கே இருந்தவர்களுக்கு என்ன வேலை? கதை பேச ஆரம்பிக்க…….. ஒரு பெண்மணி ஆரம்பித்து வைத்தது பலரின் வாயில் அவலாக மாறியிருந்தது.

மெல்ல ஆரம்பித்தனர். ஏன் ராமும் வைதேகியும் சேர்ந்து வசிப்பதில்லை என்பதே பலரின் பேச்சாக இருந்தது……. சிலர் அவர்களின் மேல் இருந்த அக்கறையோடு பேச…… சில துவேஷத்தோடு பேச………. சிலர் எந்த காரணமும் இல்லாமல் பேச…… ஆனால் ஏதோ ஒரு வகையில் பலரின் பேச்சுக்கு ஆளானாள் வைதேகி.

இதை எதுவும் உணராமல் ராமோடு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்ட சந்தோஷத்தில் முகம் நிறைய பூரிப்போடு நின்று கொண்டிருந்தாள் வைதேகி.

மாலதி குளித்து வந்ததும், அவளை தயார் செய்வதற்காக வைதேகி ரூமினுள் சென்றாள்.

அவள் அகன்றதும் அங்கே இருந்த லீலாவதியிடம் அந்த பெண்மணி…… “எதுக்கு அந்த பொண்ணை முன்னாடி முன்னாடி எல்லாத்துக்கும் இழுத்து விடற….. அதுவே புருஷனோட சேர்ந்து இருக்க மாட்டேங்குது……… அப்பப்போ வருது அப்பப்போ போகுது…… இதுவரைக்கு வயத்துல ஒரு புழு பூச்சி இல்லை”, என்றார்.

அவர் இப்படி பேசவும் லீலாவதி அதிர்ந்து விட்டார்.

“என்ன அண்ணி இப்படி பேசறீங்க……… இவ்வளவு நாளா அவ படிச்சிட்டு இருந்தா புருஷனோட சேர்ந்து இருக்க முடியலை, அதுவுமில்லாம கல்யாணம் ஆகி ஒன்னரை வருஷம் தான் ஆகப்போகுது……. அதுக்குள்ள குழந்தை இல்லைன்னு சொன்னா எப்படி”, என்று வைதேகிக்கு பரிந்து பேசினார்.

எதற்கோ வெளியே வந்த வைதேகியின் காதுகளில் அந்த பெண்மணியின் பேச்சும் லீலாவதியின் பதில்களும் காதில் விழுந்தது. அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அந்த பெண்மணி அதோடு நிறுத்தவில்லை……… “என்னமோம்மா என் மனசுல பட்டதை தான் சொல்றேன்…….. கல்யாணம் ஆனதும் மாலதியை அவகிட்ட அதிகம் பழக விடாத…….. அப்புறம் அவளும்இவமாதிரி உன் பையனோட  இருக்காம அங்கயும் இங்கயும் மாத்தி மாத்தி அவ அண்ணி மாதிரி ஆகிடபோறா”, என்றார் ஒரு மாதிரி குரலில்.

“ச்சே! ச்சே! நல்ல பொண்ணு அவ, அவளை பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்க”, என்று லீலாவதி வைதேகிக்கு பரிந்து சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் இந்த பெண்மணி பேசியதற்கு இடம் கொடுக்காமல் சென்றதில் அந்த பெண்மணிக்கு கோபம் வர…… பக்கத்தில் இருந்தவரிடம் வைதேகியை பற்றி இன்னும் அதிகமாக பேச ஆரம்பித்தார்.

“பாரேன் நல்லது சொன்னா அதுக்கு காலமில்லை…….. ராம் நல்ல பையன், அந்த சுவாமிநாதன் அவனுக்கு உதவி செய்யற மாதிரி செஞ்சி அவர் பொண்ணை அவன் தலையில கட்டிட்டார். இவ என்னடான்னா அவன் கூட சேர்ந்து இருக்காம அந்த பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டு இருக்கா…….”,

“இவன் கிட்ட மட்டும் இப்போ வசதியில்லையா என்ன? வேற பொண்ணை கல்யாணம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருப்பான். இந்த பொண்ணை கட்டிக்கிட்டு எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டு போறான். புருஷனோடவே சேர்ந்து இருக்கலை அதுக்கு என்ன மரியாதை பாரேன்”, என்று நொடித்தார்.

தன்னை பற்றி இந்த பேச்சுக்கள் எல்லாம் உலவிக்கொண்டு இருக்கிறதா என்று வைதேகி கலங்கினாள்…….. அது கண்ணில் மெல்லிய நீர் படலத்தை வரவழைத்தது……

தான் ராமின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என்ற வார்த்தையை அவளால் தாங்க முடியவில்லை…….. விட்டால் எல்லோர் முன்னாடியும் அழுதுவிடுவோம் என்று நினைத்த வைதேகி மாலதியிடம், “இதோ வந்துவிடுகிறேன்”, என்று சொல்லி அவசரமாக வீட்டுக்கு போனாள்.

ஹாலிலேயே முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அப்போது ஏதோ எடுப்பதற்காக வீட்டிற்குள் இருந்தான் ராம்…… வெளியே வந்து பார்த்தால் ஹாலில் வைதேகி அழுதுக்கொண்டு இருப்பது தெரிந்தது. பார்த்ததும் பதறி விட்டான், “என்ன வைதேகி? என்ன? என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

அவனின் குரல் கேட்டதும் ஓடி வந்து அவனை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அப்படி ஒரு அழுகை, அவன் சட்டையெல்லாம் அவளின் கண்ணீரால் ஈரமாக ஆரம்பித்தது. ராமும் அவளை விலக்கி அவளின் முகம் பார்க்க முயற்சிக்க….. விடுவேனா என்று அவனை இறுக்கமாக அணைத்து அழுதுகொண்டிருந்தாள்.

“என்ன வைதேகி? சொன்னா தானே தெரியும், முதல்ல அழாத, அழுகையை நிறுத்து. எதுக்கு இப்படி ஒரு அழுகை”, என்று அவன் தவிக்க…… அவளின் அழுகை ஓய்வதாகவே தெரியவில்லை.

அந்த பெண்மணியின் வார்த்தைகள் ஒருபுறம், ஏற்கனவே அவளுள் இருந்த ராமின் கவிதையை படித்த தாக்கம் மறுபுறம்……… அதனால் வந்த குற்ற உணர்ச்சி என்று எல்லாமுமாக சேர்ந்து ஒரு கலவையாக அவளை அழ வைத்தது.     

என்ன சொன்னாலும் அவன் மார்பில் இருந்து அவள் முகத்தை விலக்குவதாக தெரியவில்லை. அப்படி பிழிந்து பிழிந்து அழுது கொண்டிருந்தாள். அழும்வரை அழட்டும் என்று அவளை அணைத்தவாறே நின்றுவிட்டான் ராம்.

அதற்குள் அவனின் போன் அடித்தது, “எங்கே ராம் உன்னையும் காணோம் வைதேகியையும் காணோம்”, என்று சுந்தரேசன் போன் செய்திருந்தார்.

“இங்க வீட்டுக்கு தான் வந்தோம் மாமா. ஒரு அஞ்சு நிமிஷம் வந்துடறோம்”, என்றான்.

பிறகு வலுக்கட்டாயமாக வைதேகியை தன்னிடம் இருந்து பிரித்தான். “எல்லாரும் நமக்காக தான் காத்து இருக்காங்க, அங்க போகணும் முதல்ல கண்ணை துடை”, என்று மெதுவாக ஒரு அதட்டல் போட்டான்.

அது சற்று வேலை செய்தது, அழுகை நின்று தேம்பல் இருந்தது.

அவளின் முகத்தை துடைத்து விட்டவன்…… “எதுக்கு இந்த அழுகை”, என்றான் அனுசரனையாக.

தேம்பிக்கொண்டே, “நான் தான் உங்க வாழ்க்கையை கெடுக்கறேனாம், நீங்க என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நல்லா இருந்திருபீங்கலாம்”,

“யார் இந்த மாதிரி எல்லாம் உளர்றது”, என்றான் சற்று கோபமாக.

“எனக்கு யாருன்னு எல்லாம் தெரியலை, ஆனா இன்னும் என்ன என்னவோ பேசினாங்க……. எங்கப்பா உங்களுக்கு உதவி செய்யற மாதிரி செஞ்சி, என்னை உங்க தலையில கட்டிட்டாங்கலாம் “,

“ப்ச்! இதுக்கா இப்படி அழுத, யாரோ ஏதோ பேசினா அழறதா…….. முதல்ல முகத்தை கழுவிட்டு வா! அழுது அழுது முகமே சிவந்து போச்சு! சீக்கிரம் அங்க போகணும், இல்லைன்னா என்ன்னவோ ஏதோன்னு மறுபடியும் பேசுவாங்க வா”, என்றான்.

“இல்லை! நான் வரலை”, என்றாள் வைதேகி.

“நீ வராம இருந்தா அதுக்கும் பேசுவாங்க, அவங்க பேசறதுக்கு எல்லாம் பதில் பேச முடியாது……. நம்ம நல்லா வாழ்ந்துக்காட்டி அவங்க பேசறது எல்லாம் பொய்ன்னு நிரூபிக்க வேண்டாமா…….. அதை விட்டு இப்படியா அழுவ”,

“நீ எங்க? அவங்க எங்க? உனக்கு முன்னாடி அவங்க எங்கயுமே நிக்க மாட்டாங்க…… அவங்க பேசுனாங்கன்னு நீ அழுவியா”,

“நான் நிஜமாவே உன் வாழ்க்கையை கெடுக்கறனா”,

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை……. நீ என் வாழ்க்கையில வந்த தேவதை”, என்று டைலாக் பேசினான்.

அவன் பேசின விதம் வைதேகியை சற்று ஆசுவாசப்படுத்த, “நீ பொய் தானே சொல்ற”, என்றாள் கிண்டலாக.

“அச்சோ! கண்டுபிடிச்சிட்டியா”, என்றான் பதிலுக்கு ராமும் கிண்டலாக…. 

இந்த பேச்சு சற்று வைதேகியை லகுவாகியது. “உன்னை…….”, என்றவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

“என்னடா இன்னைக்கு கோட்டாவ காணோம்னு நினைச்சேன்”,

அதை கேட்டவள், “எனக்கு அந்த லேடியை அடிக்கணும் போல ஆத்திரமா வந்துச்சு”,

“அய்யோயோ! அப்படி எல்லாம் அதுவும் பண்ணிடாத! அவங்க பேசினா நீயும் பேச தான் செய்யனும். உன்கிட்ட அடிவாங்கற ரைட்ஸ் இருக்கிற ஒரே ஆளு நான் தான்”, என்றான் சீரியசாக.

“இதை இப்படியே என்ன்னால விட முடியாது, யார் அவங்க என்னை பத்தி பேசறதுக்கு”, அவளை என்று கோபமாக பல்லை கடித்தாள்……

“இதை விட்டுடு வைதேகி! நாய்ன்னு இருந்தா குலைக்க தான் செய்யும். அது அதோட குணம். அதுக்காக நாம அதை பார்த்து திருப்பி குரைப்போமா என்ன?…… இதுக்கு ரியாக்ட் பண்ணினா இன்னும் எல்லோருக்கும் விஷயம் தான் பரவும்……. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் அப்படியே அமிக்கிடனும். இதையெல்லாம் இக்னோர் பண்ணிடு. மாமா நமக்காக காத்திருப்பார்……. வா!”, என்று அவளை சமாதனபடுத்தி அழைத்து போனான்.

அப்போதும் வரமாட்டேன் வரமாட்டேன் என்று தான் சொன்னாள். கட்டாயப்படுத்தி அழைத்து போனான்.

அழைத்துப்போனவன் பெண்கள் இருந்த பகுதிக்கே விடாமல் தன்னுடனே வைத்துக்கொண்டான். வைதேகி முகம் கழுவி இருந்தாலும் அவள் அழுததை முகம் வீங்கி நன்றாக காட்டிக்கொடுத்தது. அங்கே மாலதியை நலங்கு வைக்க அமர்த்தி இருந்தனர்.

மாலதியின் கண்கள் வைதேகியை தான் தேடிக்கொண்டு இருந்தது……. அவளை பார்த்ததும் கண்களால் அழைத்தாள்.

“என்ன அண்ணி? எங்க போனீங்க?”, என்றாள்.

“வீட்டுக்கு தான், ஒரு சின்ன வேலை, அதான்”,

“ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு”,

“தலைவலி”, என்று சமாளித்தாள்.

“இல்லையே, அழுத மாதிரி தெரியுதே”,

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீ வீணா எதையாவது நினைச்சுக்காத. இப்போ நடக்கபோறதை பாரு….. நான் உங்க அண்ணாவோட இருக்கேன்”, என்று சொல்லி மறுபடியும் ராமின் பக்கத்திலேயே சென்று நின்று கொண்டாள்.

அவனை விட்டு விலகவே இல்லை…….

நலுங்கு வைப்பதற்கு கூட இருவரும் அடுத்தடுத்து வைத்தனர்.

சாப்பிடும் போது அருகே அமர்ந்து தான் சாப்பிட்டனர். ராம் வைதேகியை தனித்து விடவில்லை, வைதேகியும் ராமை விட்டு அகலவில்லை. லீலாவதியும் வைதேகியின் முகம் பார்த்து ஏதோ சரியில்லை என்று உணர்ந்தார். அனேகமாக இவர்கள் பேசியதை அவள் கேட்டிருக்க வேண்டும் என்று உணர்ந்து வைதேகிக்கு எந்த வேலையும் வைக்காமல் ராமுடனே இருக்க விட்டார்.

இப்போது வம்பு பேசிய பெண்மணியிடம் பக்கத்தில் இருந்த பெண்மணி கேட்டார், “என்ன அக்கா காலையில அந்த பொண்ணு புருஷனோட சேர்ந்து வாழறதுயில்லைன்னு  பேசினீங்க…….. அது என்னடான்னா புருஷனை விட்டு அந்த பக்கம் இந்த பக்கம் போகாம அவனோடையே சுத்துது…….. விட்டா அவன் இடுப்புல ஏறி உட்கார்ந்துக்கும் போல”, என்றார் நக்கலாக. 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று வம்பு பேசிய பெண்மணிக்கு தெரியவில்லை.

வாயை மூடிக்கொண்டார்.

ராமை ஒட்டிக்கொண்டே அலைந்தாள் வைதேகி. அந்த பெண்மணியை பார்த்து அவ்வப்போது முறைக்கவும் தயங்கவில்லை.

இவளை தனியாக விட்டால் ஏதாவது பிரச்சினை செய்துவிடுவாள் என்று ராமும் அவளை தனியே விடாமல் பார்த்துக்கொண்டான்.    

அவர்கள் இருவரும் சேர்ந்தே இருப்பது எல்லோர் கண்களையுமே கவர்ந்தது.            

Advertisement