Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு:

ராமின் கவிதையை படித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனதை எதுவோ பிசைந்தது……

என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை. இருந்தாலும் மனதை ஏதோ ஒரு உணர்ச்சி அழுத்தியது. வெகுவாக வைதேகியை யோசிக்க வைத்தது. ராமை பார்க்க வேண்டும் போல தோன்றியது.

கதவை திறந்து பார்த்தாள் ராமும் உறங்காமல் விட்டத்தை வெறித்து படுத்திருந்தான்.

இவள் கதவை திறக்கும் சத்தம் கேட்டு எழுந்தான், “என்ன வைதேகி”,

“தண்ணி……… தண்ணி குடிக்க வந்தேன்”, என்று தடுமாறினாள். அவள் என்னவோ பார்க்க வந்தது  அவனை தான்…….. கவிதையை படித்ததும் அவனை பார்க்க வேண்டும் என்ற ஒரு உந்துதலினால் தான் வந்தாள், ராம் கேள்வி கேட்கவும் தடுமாறினாள்.

“உள்ள இருக்குமே”,

“நான் சரியா கவனிக்கலை”,

“இரு, நான் எடுத்துட்டு வர்றேன்”, என்று சமையலரையில் போய் எடுத்துவந்தான்.

தொண்டை வறண்ட மாதிரி தான் இருந்தது வைதேகிக்கு……..

அவன் கொண்டு வந்ததை ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

“இன்னும் கொஞ்சம் கொண்டுவரவா”, என்று அவன் வினவ…….

“இல்லை போதும்”, என்றாள்.

பிறகும் அவள் தயங்கி தயங்கி நிற்க, “என்ன வைதேகி, தூக்கம் வரலையா”, என்றான்.

“இல்லை”, என்பது போல தலையசைத்தாள்.

“உட்காறேன் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்”, என்று அவன் சொன்ன உடனேயே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அவளின் அருகேயே சற்று இடைவெளி விட்டு ராம் அமர்ந்தான்.

அவள் அருகில் அமர்ந்ததற்கு ஏதாவது தவறாக எடுத்துகொள்வாளோ என்று அவளின் முகத்தை பார்த்தான். அப்படி பிடிக்காத பாவனை எதுவும் தெரியவில்லை. அதை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சற்று நிம்மதியை கொடுத்தது அவனுக்கு… அவளின் முகத்தை பார்த்தும் பார்க்காமல்  பார்த்துக்கொண்டிருந்தான்.   

இருவரும் அமர்ந்து கொண்டனர் தான். இருந்தாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஒரு ஆழ்ந்த அமைதி நிலவ………. அது பிடிக்காமல் அங்கிருந்த டீ வீ யை உயிர்பித்தாள்……

அங்கேயும் அவளுக்கு பார்பதற்க்கு எதுவும் இருப்பது போல் தோன்றவில்லை. மேலிருந்து கீழ் வரை சேனல்களை மாற்றினாள்……… பிறகு கீழிருந்து மேல்வரை சேனல்களை மாற்றினாள்.

பார்த்துக்கொண்டிருந்த ராம் அமைதியாக தான் அமர்ந்திருந்தானே தவிர அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்றுணர்ந்து எதுவும் பேசவில்லை.

“எனக்கு ஒண்ணும் பார்க்க இல்லை, நீங்க பாருங்க”, என்று அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிய அவனும் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்த ஒரு சேனலுக்கு மாற்றினான்.

அவன் மாற்றிய நேரம் ஒரு பாடல் துவங்க அது இருவரையுமே கட்டி போட்டது……..

வரிகள் அவளுக்ககாவே எழுதியது போல ஒரு மாயத்தோற்றம் அவளுக்கு……. காட்சியமைப்பும், அதிலிருந்த சில நிகழ்வுகளும், ஒரே பாடலில் தோன்றிய காதலும்…. திருமணமும்……… குழந்தையும்…… அவளை மயக்கின என்றே சொல்ல வேண்டும். 

அந்த பாடலில் வருவது போல, “எதற்காக தடை இனி”, என்று அந்த நிமிடம் அந்த நொடியில் தோன்றியது………

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே…..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே….)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே…..)  

பாடல் முடிந்ததும் கூட ஒருவித மயக்கத்திலேயே இருந்தாள். அந்த மாதிரி தன் வாழ்விலும் ராமோடு காதல் திருமணம் குழந்தை என்று வந்துவிடாதா என்றிருந்தது….

அந்த க்ஷணத்தில் ராமை பிடிக்காது என்றெல்லாம் தோன்றவில்லை……. ராமை தான் மனதில் வைத்து பார்த்தது.

ஒரு வகையான நெகிழ்ச்சியில் இருந்தாள். ராம் பாடலையும் அவளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்…… அவளின் கண்களில் இருந்த ஏக்கத்தையும் நன்றாக படித்தான்…….

இன்னும் சற்று நெருங்கி அமர்ந்தான்….. எழுந்து போய் விடுவாளோ என்று பார்க்க அவள் எழவே இல்லை……. அவனுக்கு அந்த வாய்ப்பை விட மனமே இல்லை…….

மெதுவாக அவளின் முகத்தை பற்றி திருப்பினான்…… அவன் முகத்தை பார்க்காமல் அவளின் இமைகள் தாழ்ந்து வேறெங்கோ பார்த்தது….

“எதற்காக தடை இனி”, என்ற வார்த்தை அவனையும் அசைக்க……… அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்தினான். அவள் திமிருவாளா என்று பார்க்க அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. அவளுடைய சிப்பி இதழ்களில் தனது முத்த கவிதையை ஆவலுடன் எழுத ஆரம்பித்தான்.

வைதேகி ஒத்துழைத்தாள் என்று சொல்ல முடியாது. ஆனால் எந்த எதிர்ப்பும் இல்லை. கண்மூடி இருந்த வாக்கிலேயே இருந்தாள்……. நீண்ட நேரத்திற்கு பிறகு விடிவிக்க மனமில்லாமல் விடுவித்தான்…….

கலாட்டா செய்ய போகிறாள் வைதேகி என்று நினைத்து அவளை சற்று பயத்துடன் பார்த்தான். அவள் முகம் சிவந்து இருந்தது. அது வெட்கத்தில் சிவந்து இருக்க, அதற்கு காரணம் கோபமா என்று ராம் ஆராய முற்பட்டான்.  அவள் ஒரு மாதிரி கிளர்ச்சியில் இருக்க ராம் தயக்கத்தில் இருந்தான்.

இருவருக்குமே முதன் முதலில் அவர்கள் அறிந்து தெரிந்த மிக நீண்ட முத்தம்….. மேலும் முன்னேறி இருந்தாலும் வைதேகி எதுவும் சொல்லியிருக்க மாட்டாளோ என்னவோ……. இருந்தாலும் ராம் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை…..

இனி அவர்களின் உறவு அவர்கள் இருவரின் மனமும் ஒப்பி தான் நடக்க வேண்டும் என்று விரும்பினான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வைதேகி இளகிவிட்டு மீண்டும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வருவதை அவன் விரும்பவில்லை.

வைதேகிக்கு இந்த உணர்வு புதிது. அவன் முகத்தை பார்க்க விடாமல் கூச்சம் தடுக்க எழுந்து உறங்க போனாள். அவள் எழுந்து போகவும் ராமும் பின்னோடு போனான்.

அவளை தொடர்ந்து ரூமிற்குள் நுழைந்தவனை வைதேகி, “என்ன”, என்பது போல பார்க்க………….. “நான் இங்கேயே படுத்துக்கட்டுமா”, என்று அனுமதி கேட்டான்.

வைதேகி தயங்க……. “ஒண்ணுமே பண்ண மாட்டேன், படுக்க மட்டும் தான் செய்வேன்”, என்றான்.

இந்த வார்த்தைகளை கேட்ட வைதேகிக்கு சிரிப்பு வரும் போல இருந்தது…… அதை மறையாது புன்னகைத்தவள், “சரி”, என்பதாக தலையசைக்க…… எங்கே அவள் மறுபடியும் வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று நினைத்து ராம் வேகமாக சென்று படுத்துக்கொண்டான்.  

முகத்தில் ஒரு புன்னகையோடே வைதேகியை உறக்கம் தழுவியது.         

காலை பரபரப்பாக விடிந்தது. புதிதாக ஒரு வெட்கம் முளைத்திருந்தது வைதேகியிடம்.  அது கொடுத்த பரவசத்துடனே குளிக்க சென்றாள். ராம் உறங்கிக்கொண்டு இருந்தான். குளித்து வந்து பார்க்கும்போதும் உறங்கிக்கொண்டு தான் இருந்தான்.

சரி. அவன் எழும்முன் உடை மாற்றி விடலாம் என்று நினைத்தவள் ராமின் மறுபுறம் நின்று உடை மாற்ற ஆரம்பித்தாள். ராமின் எதிரே கண்ணாடி இருப்பதை அவள் வழக்கம் போல கவனிக்கவில்லை .

அவள் உடை மாற்ற ஆரம்பிக்கும்போதே ராமிற்கு விழிப்பு வந்து விட்டது. அவனுக்கு அது கண்கொள்ளா காட்சி தான் இருந்தாலும் அவளுக்கு தெரியாமல் அதை திருட்டு தனமாக செய்ய மனம் ஒப்பவில்லை. இப்போது தான் உறவு சற்று சீர்பெற்று வருகிறது, அதை கெடுக்க அவனுக்கு மனமில்லை.

படுத்த வாக்கில்லேயே குரல் கொடுத்தான், “நான் முழிச்சிட்டு தான் இருக்கேன். ஆனா ஒண்ணும் பார்க்கலை கண்ணை மூடிட்டேன்”, என்றான்.

வைதேகி விதிர்த்து திரும்பினாள்………. எப்படி அவன் அந்த புறம் திரும்பி படுத்து இருக்கானே எப்படி பார்க்க முடியும் என்று அவளின் பார்வை ஆராய எதிரே இருந்த கண்ணாடி தெரிந்தது.

அப்படியே இருந்த நைட்டியில் தன்னை போர்த்திக்கொண்டவள் தலையில் அடித்துக்கொண்டாள்.

“மெதுவா வலிக்க போகுது”, என்று ராம் குரல் கொடுக்க வந்து அவனை மொத்த ஆரம்பித்தாள்.

“இப்போ கண்ணை தொறக்கட்டுமா வேண்டாமா”, என்று ராம் கேட்க……

“கண்ணை தொறந்துட்டே கண்ணை தொறக்கட்டுமான்னு புளுகறியா நீ, எழுந்து மொதல்ல கதவை சாத்திட்டு வெளியே போடா”, என்று கத்தினாள்.

“கத்தாத வைதேகி வெளியே கேட்கும்”, என்றான் அவசரமாக ராம்.

“எழுந்து கதவை சாத்திட்டு வெளியே போடா”, என்று அதையே மெதுவாக மறுபடியும் சொன்னாள்.

ராமிற்கு வெளியே போக மனமேயில்லை இருந்தாலும் உள்ளதை கெடுத்துக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான்……..

வைதேகிக்கும் இந்த நிகழ்வில் கோபம் எல்லாம் வரவில்லை….. சற்று லஜ்ஜை தான் வந்தது……. அவன் போனது அவசரமாக உடை மாற்றினாள். புது பட்டுபுடவை ஒன்றை எடுத்து வைத்திருந்தாள். அது கட்டினாலும் மடிப்பு நிற்க மாட்டேனா என்றது. அவள் அதோடு போராடிக்கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் ஆகிவிட்டது அவள் உடை மாற்றி இருப்பாள் என்ற எண்ணத்தில் ராம் கதவை திறந்து உள்ளே வந்தான். இன்னும் அவள் புடவை மடிப்பை சரி செய்து கொண்டிருப்பதை பார்த்து உள்ளே வரவா இல்லை வெளியே போகவா என்று தடுமாற………

அவன் வந்ததை பார்த்த வைதேகி மெதுவாக, “இதை கொஞ்சம் பிடிக்கறீங்களா”, என்றாள். அவள் கேட்டதை அவனால் நம்பவே முடியவில்லை. என்னிடமா பேசினாய் என்பது போல வாயைத்திறந்து பார்த்துக்கொண்டிருக்க……

“உங்ககிட்ட தான் பேசறேன். எதுக்கு இப்படி வாயை தொறந்து பார்த்துட்டு நிக்கறீங்க. நான் சீக்கிரம் ரெடியானா தான் மாலதியை ரெடி பண்ண முடியும்”, என்று ஒரு அதட்டல் போட்டாள்.

“என்ன பண்ணனும்”, என்றபடி அருகில் வந்தான்.

“கீழ உட்கார்ந்து இந்த மடிப்பை இப்படி பிடிச்சிக்கோங்க”, என்று காட்டி கொடுத்தாள். இது ஒரு புது அனுபவம் ராமிற்கு கர்ம சிரத்தையாக அவள் சொன்னதை செய்தான்.

இடுப்பில் புடவையை சொருகியவுடன், “இப்போ விட்டுடுங்க”, என்றாள். பிறகு கண்ணாடி முன் போய் நின்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள்……

பார்த்தவளுக்கு திடீரென்று சந்தேகம்…….. “நான் இங்க இருக்கும்போது எப்பவும் இப்படி தான் டிரெஸ் மாத்துவேன், எத்தனை நாளா பார்த்துட்டு இருக்கீங்க”, என்றாள்.

“இல்லையில்லை”, என்று அவசரமாக மறுத்தவன்…… “இன்னைக்கு தான்”, என்றான் சோகமாக……… பின்னே எத்தனை நாட்கள் மிஸ் செய்துவிட்டோம் என்ற அவனின் வருத்தம் அவனுக்கு.

அதற்கு ஏன் இவ்வளவு சோகமாக இவன் பதிலளிக்கிறான் என்பது போல வைதேகி பார்க்க……… “நெறைய நாள் மிஸ் பண்ணிட்டேன் போல”, என்றான் மனதை மறையாது…..

பக்கத்தில் வந்தவள் வழக்கம் போல அவனை அடிக்க ஆரம்பித்தாள்……முன்பெல்லாம் கோபத்தில் அடித்த அடி இப்பொது வெட்கத்தில் அடிக்கும் அடியாக மாறியிருந்தது….

அவன் வாகாக அவள் அடிப்பதற்கு தக்கவாறு நிற்க……… அவனிடம் இருந்து ஒரு ரியாக்ஷன்னும் இல்லாமல் இருக்க, அடியை நிறுத்தியவள், “நீ போடா”, என்று சொல்லியபடி வெளியே போனாள்…….. இந்த நிகழ்வுகள் எதிலும் வைதேகிக்கு அவளுக்கே அதிசயமாக தோன்றும்படி கோபமே வரவில்லை.

ராமின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை……. அவள் இப்படி அவனிடம் சகஜமாக நடப்பது அவனை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.

அவன் ரெடியாகி வந்த போது மாலதியும் மனோகரும் கூட தயாராகி இருந்தனர். மாலதி வைதேகியின் கைவண்ணத்தில் மிளிர்ந்தாள். திருமணம் என்றதும் பெண்களுக்கு ஒரு அழகு தானாகவே வந்து ஒட்டிக்கொள்வதாக ராமிற்கு தோன்றியது.

அவனின் தந்தை வழி உறவுகள் சிலரும் வந்திருந்தனர். வைதேகி எல்லோரையும் உபசரித்துக்கொண்டிருந்தாள், ராமும் அவளோடு போய் சேர்ந்து நின்று கொண்டான். வைதேகி எல்லோரிடமும் சகஜமாக நன்றாக பேசினாள்.

பெருமாள் கோவிலில் வைத்து பெண் பார்ப்பது என்பது போல முடிவாகி இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் தான்….. மாப்பிள்ளை வீட்டார் போய் சேர்ந்த பிறகு பெண் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகே இவர்கள் உறவுகளோடு மாலதியை அழைத்துக்கொண்டு கிளம்பினர். அங்கே மோகன் இவர்களின் வரவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.

மிகவும் ஆர்ப்பாட்டமாய் எல்லோரையும் வரவேற்றார் சுந்தரேசன்.

மாலதி அவனை பார்த்தும் பார்க்காமல் அவளின் அண்ணியோடு நடந்து வந்தாள். விழா நாயகனும் நாயகியும் மோகனும் மாலதியும் என்பதால் எல்லோரின் கண்களும் அவர்களையே மொய்த்தன.  

உறவுகளின் சலசலப்பு ஒரே சத்தமாக இருந்தது. ஆளாளுக்கு ஒன்று பேசினர். ஒரு வழியாக பெண் பார்க்கும் படலம் முடிந்தது. எப்போது திருமணம் என்று நாள் குறித்து விடலாம் என்று அங்கேயே முடிவு செய்து அதற்காக ஜோசியரை அழைத்து வர ஆள் அனுப்பி இருந்தனர்.

மோகன் தன் தந்தையிடம் முன்பே சொல்லிவிட்டான்……… திருமணத்தை இரண்டு மாதத்திற்குள் வைக்குமாறு. தனக்கு வெளிநாடு போக ஒரு வாய்ப்பு அலுவலகத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் அதனால் திருமணத்தை தள்ளி போடவேண்டாம் என்று….

அதனை ஒட்டி சுந்தரேசன் பேச, “இவ்வளவு சீக்கிரம் திருமணமா”, என்றிருந்தது ராமிற்கு…… அவன் யோசித்தான்.

அவன் முகத்தில் யோசனையை பார்த்த வைதேகி, “என்ன யோசனை”, என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில்.

“கல்யாணத்தை சீக்கிரமா வெச்சா சமாளிக்கனுமே, மாமா வேற அவர் கௌரவத்துக்கு குறையில்லாம சீர் எதிர்பார்ப்பார்”, என்றான் பொறுப்புள்ள அண்ணனாக.

யாருடைய கவனத்தையும் கவராமல் அவனை தனியே தள்ளிக்கொண்டு வந்தாள் வைதேகி…… “என்ன சமாளிக்க முடியாது, எல்லாம் சமாளிக்கலாம். நீங்க ஏதாவது தள்ளி போடலாம்னு பேசி வைக்காதீங்க”, என்றாள்.

“அவளோட படிப்பு வேற இருக்கே”,

“அதுக்கென்ன கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும், நானெல்லாம் படிக்கலை”,

“நீ என்ன புருஷனோட குடும்பம் நடத்திட்டா படிச்ச”, என்ற வார்த்தைகள் ராமின் வாய்வரை வந்துவிட்டது……….. ஆனால் இந்த முறை புத்திசாலித்தனமாக அதை வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டான், அவளை சீண்டவில்லை.

“அவங்க எது சொன்னாலும் சரின்னு சொல்லுங்க, ஒண்ணும் பிரச்சனையில்லை பார்த்துக்கலாம்”, என்றாள்.

இப்போது தான் சற்று இளகி வருகிறாள்……… அவளின் வார்த்தையை மீற முடியாமல் “சரி”, என்று தலையை தலையை ஆட்டினான்.

 அதன் பிறகு சுந்தரேசன் சொன்னதற்கு எல்லாம் அவன் சரி சரி என்று சொன்னதால்   வேலைகள் மளமளவென்று நடந்து……….. திருமணம் இன்னும் ஒன்றரை மாதத்தில் என்று நாள் குறிக்கப்பட்டது. 

அன்று இரவே ஊர் திரும்பி விட்டனர் வைதேகியும் மனோகரும் மாலதியும்…. இந்த முறை மிகவும் நல்ல முறையிலேயே விடைபெற்றாள் வைதேகி. “நீங்க எப்போ வருவீங்க”, என்று ராமிடம் கேட்க வேண்டும் போல மனது உந்தியது…… இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்க அமைதியாகவே இருந்துவிட்டாள்……

ராமும் அவள் ஏதாவது பேசுவாளா பேசுவாளா என்று அவளின் முகத்தை முகத்தை பார்த்தான். அவள் ஒன்றும் பேசுவது மாதிரி தெரியவில்லை. அவளாக பேசட்டும் நானாக ஏதாவது பேசி உள்ளதையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மிகவும் ஜாக்கிரதையாக இருந்தான்.

அவன் எதாவது கேட்டால் பதில் சொல்லாம் என்று வைதேகியிருக்க…. அவள் பேசட்டும் என்று ராம் இருக்க…….. இருவருமே எதுவும் பேசாமல் வைதேகி சென்னைக்கு கிளம்பி விட்டாள்.

திருமண வேலைகள் ராமை அழுத்த அவன் அதில் மிகவும் மும்முரமாகி விட்டான். எந்த குறையும் யார் வாயில் இருந்தும் கேட்காமல் எல்லாவற்றையும் நிறைவாக செய்ய வேண்டும் என்பதே அவனின் எண்ணம்.

எத்தனை வேலைகள் இருந்தாலும் வைதேகியின் ஞாபகம் அவனை அழுத்தியது…… அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது…. “இப்போது உன்னிடம் அவள் நன்றாக தானே இருக்கிறாள் போடா”, என்று மனம் சொன்னது……

அவளை பார்த்த பின்பு அவளை விட்டு மீண்டும் மீண்டும் விலகி வருவது சுலபம் போல தோன்றவில்லை, அதுவும் அந்த முத்தத்திற்கு பிறகு அவளை தொட வேண்டும், அவளை ஆள வேண்டும் என்ற எண்ணம், ஆசை, சிந்தனை அதிகமாக இருந்தது. அவனுக்கு அவனே கடிவாளமிட்டு அவளை பார்க்காமல் இருந்தான். 

வைதேகிக்கும் ராமின் நினைவுகள் அதிகமா வந்தன தான். அந்த அவனின் முத்தம்  நிறைய மாற்றங்களை அவளுள் செய்திருந்தது……… அவனுடைய ஆளுமை செய்யாத மாற்றத்தை அது செய்திருந்தது. அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தினாலும் ஏதோ தடுத்தது. இவ்வளவு நாட்கள் அவனை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தீடீரென்று அவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

எப்போதிருந்து அவளுக்குள் இந்த மாற்றம் என்று அவளுக்கே தெரியவில்லை…….. அவனை தன் மனது தேடும் மாற்றத்தை அவள் உணர்ந்தாள் தான்……. இருந்தாலும் அதை அவனிடம் சொல்ல ஏதோ தயக்கம் ஆட்கொண்டது.    

ராமிற்கு திருமண வேலைகள் முக்கியத்துவம் பெற……..

அதன் பொருட்டு ஒரு நாளைக்கு பலமுறை வைதேகியிடம் பேசினான்….. எதுவும் அவளை கேட்காமல் செய்யவில்லை. மாலதிக்கு நகைகள் வாங்கியாகிவிட்டது, இன்னும் சீர் பொருட்கள் துணிமணிகள் வாங்க வேண்டிய வேலை பாக்கி நின்றது.

அதற்காக திருமணத்திற்கு இருபது நாட்களே இருந்த நிலையில் ராம் சென்னை வந்தான். கிட்ட தட்ட ஒரு மாதமாக வரவில்லை………. இவர்களும் செல்லவில்லை.

அவர்களுக்குள் ஒரு சுமுகமான பேச்சு வார்த்தை நடந்த பிறகு தொலைபேசியில் ஒரு நாளைக்கு பலமுறை பேசினாலும் நேரில் பார்ப்பது இப்போது தான் முதல் முறை. இந்த சந்திப்பை ராம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தான். அதற்கு சற்றும் குறையாத எதிர்பார்ப்பு வைதேகியிடம் இருந்தாலும் அவள் அதை சற்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கண்கள் மட்டும் அவன் பாராத போது முகம் பார்க்க விழைந்தது.  அவர்களுக்குள் இப்போது ஒரு நேரடியான கண்ணாமூச்சி ஆட்டம்…….. ராம் நேராகவே அவள் முகம் பார்த்தான். அவன் பார்க்கிறான் என்று தெரிந்து அவன் பார்க்கும் போது வைதேகி பார்க்கவில்லை.       

தான் பார்க்கும் வரை அவள் பார்க்க மாட்டாள் என்றறிந்த ராம் பார்வையை வேறு புறம் திருப்ப……. அவள் அவனை பார்த்தாள். இந்த ஆட்டம் இருவருக்குமே பிடிக்க சற்று நேரம் இது தொடர்ந்தது.

அதற்குள் மாலதி அங்கே வர ஆட்டம் முடிவுக்கு வந்தது. மூவரும் கடைக்கு சென்று வேண்டியதை எல்லாம் வாங்கி வீடு திரும்பும் போது இரவு எட்டு மணியாகி விட்டது.

வந்தவுடனே காஞ்சிபுரம் கிளம்பினான் ராம்…….

“இந்த நேரத்துல எதுக்கு கிளம்பறீங்க காலையில போகலாம்”, என்றாள் வைதேகி.

அவள் சொன்னது ராமிற்கு சந்தோஷம் என்றாலும்…….. “இல்லை வைதேகி, வேலையிருக்கு”, என்று பிடிவாதமாக கிளம்பினான் ராம். வைதேகிக்கு அதில் மிகுந்த கோபம்.

எப்போதும் மாலதியும் மனோகரும் ராமிற்கும் வைதேகிக்கும் தனிமை கொடுத்து ஒதுங்கிக்கொள்வர்….. இப்போதும் அப்படியே ஒதுங்கிக்கொண்டனர்.

அருகில் யாரும் இல்லாது இருக்க……… “நான் தான் காலையில போகலாம்னு சொல்றேனே, அப்படி என்ன என் பேச்சை கேட்க்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா”, என்றாள் கோபமான குரலில்.

அவளின் கோபமான குரலில் அவளை நேர்பார்வை பார்த்தவன், “இங்க என்னால இருக்க முடியாது வைதேகி புரிஞ்சிக்கோ”, என்றான்.

வைதேகி புரியாமல் பார்க்க…….. “முன்ன மாதிரி என்னால ஹால்ல படுக்க முடியாது, உன் பக்கத்துல தான் படுப்பேன்”,

“அதற்கென்ன”, என்பது போல வைதேகி பார்க்க……. “பக்கத்துல படுத்துட்டு என்னால உன்னை சும்மா பார்த்துட்டு மட்டுமே என்னால தூங்க முடியாது வைதேகி…….        புரிஞ்சிக்கோ………. இனிமேலும் உன்னை பக்கத்துல வெச்சிட்டு  என்னால் விலகி விலகி இருக்க முடியாது. அதனால தள்ளியே இருந்துக்கறேன்…….. எனக்கு நீ என் மனைவியா வேணும்……”,

“இது உடல் தேவை மட்டும் இல்லை…….. உள்ளத் தேவை…….. என் மனசு உன்கிட்ட நிறைய பேசணும் நினைக்குது. ஆனா உனக்கு எந்த விஷயத்துல கோபம் வரும்னு தெரியாம தவிக்குது. நீ என் பக்கத்துலயே இருக்கனும்னு நினைக்குது…….. ஆனா உனக்கு அதுல இஷ்டமா இல்லையான்னு தெரியலை…. நீ என்னோட மனைவின்னு உரிமை கொண்டாடனும் எல்லா வகையிலையும் நினைக்குது”,

“நான் உன்னை இப்போ எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன் வைதேகி……. இப்போ எல்லாம் என்னவோ தனியா இருக்குற மாதிரியே ஃபீல் பண்றேன். உன்னை பார்த்து பார்த்து தவிச்சிட்டு இருக்க முடியாது…… அதான் கொஞ்சம் தள்ளி போறேன்”, என்றான் மனதை மறையாது.

அவனின் உணர்ச்சிகரமான பேச்சை கேட்டு மனதில் ஏதோ பிசைந்தது….. அவனை அணைத்து ஆறுதல் சொல்ல இதயம் தவித்தது…… “நான் இருக்கேன் உங்களுக்கு”, என்று சொல்ல வேண்டும் போல தோன்றியது. ஏதோ தடுத்தது…..

இருந்தாலும் அவனின் பேச்சிற்கு என்ன பதில் சொல்வது என்றே வைதேகிக்கு தெரியவில்லை………..   அமைதியாகவே நின்றாள்……… நிஜமாகவே அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

ராமின் மீது இருந்த உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்ற தோற்றம் எல்லாம் அவளுக்கு இப்போது இல்லை, ஆனால் என்ன மாதிரி அவனுக்கு பதிலளிப்பது என்று தெரியவில்லை.

அவளாக அவனிடம், “நான் உன்னோடு வாழ இஷ்டப்படுகிறேன்”, என்று சொல்ல மனம் தடுத்தது. அவள் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதே அவன் கிளம்பிவிட்டான்.

“இல்லை போகாதீங்க….. என்னோடவே இருந்திடுங்க”, என்றாள் வைதேகி வெளியில் அல்ல மனதிற்குள். வெளியில் சொல்ல முடியவில்லை. அவளாக சொல்ல அவளால் முடியவில்லை அவனாக சொல்ல மாட்டானா என்று மனம் ஏங்கியது.     

கண்கள் அந்த ஏக்கத்தை நன்கு பிரதிபலித்தது……… ராம் போகும்போது ஒரு முறை திரும்பி பார்த்திருந்தால் அவளின் மனதை படித்திருப்பான்……. அவனின் நேரம் அங்கே ஆட்சி செய்ய அவன் திரும்பவில்லை.

ஏக்கத்தோடு அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள் வைதேகி. ஒரு மெல்லிய திரையே இருவருக்குள்ளும்……….

எதற்காக தடை இனி என்ற வரிகளே இருவருக்குள்ளும் ஓடியது.

Advertisement