Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

வைதேகியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு ராம் சற்று குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்தான். இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது

பிரிய வேண்டும் என்று அவள் சொல்லி தன்னை விலக்கி வைத்தபிறகு மனதில் அவனுக்கு நிம்மதி என்பதே இல்லாமல் இருந்தது. அவளுடன் சேர்ந்து வாழ்வோமா இல்லையா என்று இருந்தது. இப்போது அவள் அவனுடன் பேசிய பிறகு தான் அவனுக்கு  நம்பிக்கை அதிகமாகியது நான் அவளுடன் சேர்ந்து வாழ்வேன் என்று.

மாலதி தன்னிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே. இப்போது அவர்கள் ஒரு வேளை கேட்டால் என்ன பதில் சொல்வது. அவள் தான் உனக்கு எப்படி தோன்றுகிறதோ சொல் என்று விட்டாளே. மோகன் நல்ல பையன், நல்ல வேலையில் இருக்கிறான், சொத்து பத்தும் இருக்கிறது, சொந்தமும் இருக்கிறது, அவர்களாக கேட்டால் சரி என்று சொல்லிவிடுவோம் என்று நினைத்தான்.

உடனேயே நீயும் வைதேகியும் படுவது போதாதா மாலதியிடம் தெளிவாக கேட்டுவிடு அப்புறமே உன் முடிவை சொல் என்று மனது கட்டளை இட்டது. அவர்களாக வரட்டும் பிறகு எதுவாகினும் பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். 

அந்த வார இறுதியில் வீட்டிற்கு வந்த மோகன் தன் தந்தையிடமும் தாயிடமும் பேசினான்.  

“எனக்கு மாலதியை பிடிச்சு இருக்குப்பா, அவளை கல்யாணம் பண்ணிக்க இஷ்டப்படறேன்”, என்று பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்தான்.

சுவாமிநாதன் முன்பே சொல்லி இருந்ததால் இவரும் மோகனின் பார்வைகள் மாலதியை தொடர்வதை பார்த்திருந்ததால் ஒரு வாறு இதை எதிர்ப்பார்த்திருந்தார். லீலாவதியிடமும் சொல்லியிருந்தார், அதனால் இருவரிடத்திலும் அவன் எதிர்பார்த்த  அதிர்ச்சி ஒன்றும் பெரிதாக இல்லை.

அவர்களின் முக பாவனைகளை வைத்தே அவர்களுக்கு விஷயம் தெரியும் என்று யூகித்து கொண்டான்.

“உங்களுக்கு முன்னமே தெரியுமாப்பா”,

“தெரியும்”,

“எப்படி”,. ஒரு வேளை மாலதி இதை எல்லோரிடமும் சொல்லிவிட்டாளோ என்ற எண்ணத்தில் கேட்டான்.

“ஏண்டா வயசுப்பைய்யனை வெச்சிகிட்டு கண்ணை மூடிட்டா திரிவோம். நீதான் ரமா கல்யாணத்துல அந்த பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருந்தியே”,

தான் அப்படி எல்லோருக்கும் தெரியும்படியாகவா அவளின் பின்னால் சுற்றினோம் அவனுக்கு கூச்சமாக போய்விட்டது.

“அது வந்து. வந்து. அப்பா”, என்று அவன் உளறினான். 

“அதான் வந்துட்டியே அப்புறம் என்ன? அவ்வளவு தைரியமா சொன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு. இப்போ எங்களுக்கு தெரியும்னா ஏண்டா தடுமார்றே”,

அவன் முகத்தில் அசடு வழிந்தது.

“சரி எப்போ பொண்ணு பார்க்க போகலாம்”, என்று அவனின் வயிற்றில் பாலை வார்த்தார்.

“ஏங்க ஜாதகம் பார்க்க வேண்டாமா”, என்று லீலாவதி கேட்க.

“வேண்டாம்”, என்றார் சுந்தரேசன். “இவனுக்கு பிடிச்சிருச்சு இனி ஜாதகத்தை பார்த்து அது சரிவரலைனா அப்புறம் பண்ண முடியாது. அதுக்கு பார்க்காமயே இருந்துறலாம்”,

“அதெப்படிங்க ஜாதகம் பார்க்காம பொண்ணும் பையனும் நல்லா வாழ வேண்டாமா”,

“வாழாம என்ன? நம்மளா பார்த்தா தான் ஜாதகம் பார்த்து பொருத்தம் எல்லாம் பார்க்கணும். இங்க நம்ம பையனுக்கு பிடிச்சிடுச்சு. அதுக்கப்புறம் ஜாதகம் பார்த்து என்ன பண்ண போற. பத்து பொருத்தமும் சரியா இருந்து பண்ற கல்யாணம் மட்டும் பிரியாம இருக்காங்களா என்ன? எல்லாம் அவங்க தலையெழுத்து. சாமி மேல பாரத்தை போட்டு ஆரம்பி. எல்லாம் நல்ல படியா நடக்கும். பொண்ணும் பையனும் அமோகமா வாழ்வாங்க”, 

“ராம் ஒத்துக்கணுமே”,

“அதெல்லாம் என் பேச்சை தட்ட மாட்டான், நான் பேசிக்கறேன்”, என்றார்.

“எப்போ அப்பா பொண்ணு பார்க்க போகலாம்”,

“அவசரப்படாதடா”,

“முதல்ல நான் ராம் கிட்ட பேசறேன். அவங்க விருப்பத்தையும் கேட்கனும் இல்லை”,

“ஒரு வேளை அவங்க வேண்டாம்னு சொன்னா”,

“என் பையனை எவண்டா வேண்டாம்னு சொல்லுவாங்க. அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. நீ இதை பத்தி எல்லாம் கவலை படாம சாயந்தரம் ஊருக்கு போ. இன்னைக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை நான் நாளைக்கு பேசறேன்”,

“இப்போ தானே பா ஜாதகம் பார்க்கவேண்டாம்னு சொன்னீங்க”,

“அது வேற இது வேற டா, நான் பார்த்துக்கறேன்”, என்றார் அன்புள்ள தந்தையாக.

“தேங்க்ஸ் பா”, என்று அவரை அப்படியே கட்டி கொண்டான் மோகன்.

இதை பார்த்ததும் லீலாவதிக்கு சிரிப்பு பொங்கியது.

மறுநாள் ராமிடம் பேசினார்.

“என்ன ராம் என் பையனுக்கு உன் தங்கச்சியை கட்டி கொடுக்கறியா”,

“நீங்க கேட்டது ரொம்ப சந்தோஷம் மாமா, இருந்தாலும் மாலதி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடறேன்”,

“நம்மளை மீறியா நம்ம வீட்டு பொண்ணு போகும்”,

“அது அப்படியில்லை மாமா. அவ கட்டாயம் போக மாட்டா. இருந்தாலும் அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டா எனக்கு திருப்தி”,

“சரி கேட்டு சொல்லு”,

“சாயந்தரமே சொல்றேன் மாமா”, என்றான்.

அவனுக்கும் வைதேகியிடம் பேச ஒரு சாக்கு, வைதேகிக்கு அழைத்தான்.

“மாமா, என் கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினார் வைதேகி”, என்றான்.

“நீங்க என்ன சொன்னீங்க”, என்றாள் ஆவலாக.

“நான் மாலதிகிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்”,

“ஏன் அப்படி சொன்னிங்க, நான் தான் அவளுக்கு இஷ்டம் இருக்கிற மாதிரி தான் தெரியுதுன்னு சொன்னேனே”,

“இருந்தாலும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்டுடறது பரவாயில்லை. அப்புறம் நம்ம வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சுன்னா”, என்றான்.

அவன் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவனை மீறி அந்த வார்த்தைகள் வந்துவிட்டன. 

நன்றாக பேசிக்கொண்டிருந்த வைதேகி அமைதியாகிவிட்டாள். அப்போது தான் மறுபடியும் தேவையில்லாமல் தான் பேசிவிட்டோம் என்றுணர்ந்த ராம். “சாரி வைதேகி, மறுபடியும் மறுபடியும் பேசி ஏதாவது சொதப்பிடறேன்”,

“விடுங்க உண்மையை தானே சொன்னீங்க”, என்றாள் வருத்தமான குரலில். 

“இருங்க மாலதிகிட்ட கொடுக்கறேன்”, என்று உடனே தொலை பேசியை மாலதியிடம் கொடுத்துவிட்டாள்.

வைதேகி ஏதாவது தப்பாக எடுத்துக்கொண்டாளோ என்று மனது மறுபடியும் சஞ்சலமாக போய்விட்டது ராமிற்கு. இருந்தாலும் தங்கையின் வேலைகள் முன்னிற்க எண்ணங்களை பின்னுக்கு தள்ளினான்.

“மாலதி உன்னை மோகனுக்கு பெண் கேட்கறாங்க, என்ன சொல்லட்டும்மா”,

“நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்னா”,

“எனக்காக சொல்லாத மாலதி, உன் விருப்பத்தை மறைக்கமா சொல்லு”,

“நீங்க சொன்னா சரி அண்ணா”,

“உறுதியா தான் சொல்றீயா”,

“உறுதியா தான் சொல்றேன் அண்ணா”,

“சரி, அண்ணிகிட்ட கொடு”,

வைதேகியிடம் மாலதி கொடுக்க.

“என்கிட்ட சரின்னு தான் சொல்றா. எதுக்கும் நீ நல்லா கேட்டு சொல்றியா வைதேகி”, என்றான்.

“சரி”, என்றாள் ஒற்றைவார்த்தையாக.

“கோபமா”,

“இல்லையில்லை அதெல்லாம் எதுவும் இல்லை. நான் கேட்டு சொல்றேன்”, என்றாள் வைதேகி. நிஜமாகவே அவளுக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்லை.   

மனதில்லாமலேயே போனை வைத்தான்.

வைதேகி சிறிது நேரத்திற்கெல்லாம் அழைத்தவள், “சரின்னு சொல்லிடுங்க, அவளுக்கு இஷ்டம்தான்”, என்றாள்.

“உனக்கு கோபமில்லை யே வைதேகி”, என்றான் மறுபடியும்.

வைதேகி அமைதியாக இருக்க. 

“நம்ம ரெண்டு பேருமே நிறைய பேசறோம்னு நினைக்கிறேன். அதான் நமக்குள்ளே பிரச்சனை அதிகமாயிடுச்சு. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடேன், நான் பேசினது ரொம்ப தப்புதான்”.

“நான் அப்போவே இதை விடுங்கன்னு சொன்னேன். ஏன்? அதையே பிடிச்சி தொங்கிட்டு இருக்கீங்க. அதுக்காக தானே நமக்குள்ளே இந்த பிரிவு. அப்புறம் இனிமே ஃபீல் பண்ணி என்ன பண்றது. சரி, நான் வச்சிடறேன்”, என்று சொல்லி உடனே வைத்துவிட்டாள்.

ராமிற்கு என்னவோ போல ஆகிவிட்டது. “இப்போ தான் அவ இறங்கி வந்து கொஞ்சம் பேசினா. அதுக்குள்ள இப்படி சொதப்பிட்டியே ராம். அவளை நினைச்சு நினைச்சு அவளை மாதிரியே உனக்கும் ரொம்ப வாய் ஆகிடுச்சு”, என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்.

திட்டி என்ன பயன் அங்கே வைதேகி இதே யோசனையில் அல்லவோ இருந்தாள். “நம் வாழ்க்கை போல ஆகிவிட்டால் இவனே சொல்லுகிறான் என்றால் அடுத்தவர் சொல்ல மாட்டாரா. என்னுடைய வாழ்க்கை அடுத்தவர்கள் பரிகசிப்பது போல ஆகிவிட்டதா”,

இந்த மாதிரி நடக்கவேண்டாம் என்று மற்றவர்கள் நினைப்பது மாதிரி இருக்கா என்று மிகுந்த வருத்தத்தில் இருந்தாள். ஆனால் ராம் மேல் அதற்காக கோபம் எல்லாம் வரவில்லை. ஏதோ ஒரு விரக்தி அவளை சூழ்ந்தது. இப்படி வாழ்வதா வாழ்க்கை என்ற வார்த்தை அவளை வாட்டியது.

ராம் சுந்தரேசனிடம் நல்ல செய்தி சொல்ல போனான்.

“எங்களுக்கு பரிபூரண சம்மதம் மாமா”, என்றான்.

“அதானே என் பையனை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா”, என்றார் இறுமாப்புடன், “இந்த ஞாயத்துக் கிழமையே நல்லா இருக்கு, அன்னைக்கே பொண்ணு பார்க்கறத்தை வெச்சிக்கலாம்”, என்றார்.

“ஆனா இன்னும் அவ படிப்பு முடியலையே மாமா”,

“என்ன கடைசி வருசம் தானே படிக்கறா. எப்படியும் நாம கல்யாணம் பேசி நடக்க ஒரு ஆறுமாசம் ஆகிடும். அதுக்கப்புறம் ஒரு ஆறு மாசம்  தானே பார்த்துக்கலாம்”,

அவர் சொன்னதற்கு தலையை தலையை ஆட்டினான்

அதற்கு பிறகு தான் முக்கியமாக விஷயத்திற்கு வந்தார்.

“நான் நகை தொகை எதுவும் பெருசா எதிர்பார்க்கலை. நீ என்ன உன் தங்கச்சிக்கு கம்மியாவா செஞ்சிடப்போற என்று அந்த இடத்தில் வார்த்தைகளையும் கோர்த்தவர், ஆனா எனக்கு இந்த கல்யாணத்துக்கு ஒரு நிபந்தனை இருக்கு”, என்றார்.

“என்ன மாமா?”,

“நீயும் உன் பொஞ்சாதியும் சேர்ந்து கல்யாணத்தை நல்ல படியா முடிச்சி கொடுக்கணும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்யனும். ஏன்னா உங்க கல்யாணத்தையே நான் தான் நடத்தி வெச்சேன். அதுல ஒரு பிரிவு வர்றது என்னால ஏத்துக்க முடியாது என்ன சொல்ற?”, என்றார்.

ஒரு பெருமூச்சு அவனிடத்தில் எழுந்தது, பிரிவு என்ன அவன் எடுத்த முடிவா, அவளின் முடிவு. ஆனால் அதை சொல்வதில் அவனுக்கு அவ்வளவு இஷ்டமில்லை. தன்னுடைய மனைவியை மாமாவாகினும், அவனின் நலனில் அக்கறை உள்ளவராகினும் அவரிடத்தில் விட்டு கொடுக்க இஷ்டமில்லை.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. வைதேகி இதற்கு ஒத்துக்கொள்வாளா என்றும் தெரியவில்லை. அவன் அமைதியாகவே அமர்திருக்க. “நீ வைதேகி பொண்ணுக்கு இப்போவே ஒரு போனை போட்டு குடு”, என்றார்.

அவரின் வார்த்தையை தட்ட முடியாமல் அவளிடம் என்ன பேசப்போகிறாரோ என்ற கவலையிலேயே போனில் அவளை அழைத்தான்.

அவள் எடுத்ததுமே, “சுந்தரேசன் மாமா உன்கிட்ட பேசனும்னு சொல்றார்”, என்றான்.

“என்கிட்டயா எதுக்கு”,

“தெரியலை, அவர்கிட்டயே கொடுக்கறேன். பக்கத்தில் தான் இருக்கிறார்”, என்று அவரிடத்தில் கொடுத்தான்.

அவரிடம் கொடுத்ததுமே, “வணக்கம் பெரியப்பா”, என்றாள்.

“எப்படி இருக்க வைதேகி”, என்றார்.

“நல்லா இருக்கேன் பெரியப்பா”,

“மாலதியை மோகனுக்கு பொண்ணு கேட்டோம். உன் புருஷன் ஏதாவது அதை பத்தி உன்கிட்டா சொன்னானா”,

“சொன்னார் பெரியப்பா”,

உனக்கு சம்மதமாம்மா

“பரிபூரண சம்மதம் பெரியப்பா. உங்க வீட்டு சம்மந்தத்தை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா”, என்று அவரின் நாடி அறிந்து பேசினாள்.

அவருக்கு சந்தோஷமாகி விட்டது பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்தார். “சரியா சொன்ன மகளே”, என்று.

பின்பு அவரே ராமிடம் சொன்னதை அப்படியே ரீ டெலி காஸ்ட் செய்தார். “எனக்கு நகை தொகை எதுவும் பிரச்சனையில்லை. நீங்க உங்க பொண்ணுக்கு என்ன கம்மியாவா செஞ்சிடப் போறீங்க. ஆனா எனக்கு கல்யாணம் சிறப்பா நடக்கணும். நீயும் ராமும் முன்ன நின்னு தான் எல்லாம் செய்யனும்”,

“ஒஹ்! இவர் இப்படி வருகிறாரா”, என்றிருந்தது. இருந்தாலும் வாய் யோசிக்காமல் வாக்குறுதி கொடுத்தது. “அதுக்கென்ன பெரியப்பா செஞ்சிட்டா போச்சு”, என்றாள்.

“ரெண்டு பேரும் நல்லா தான் பேசறீங்க. ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கிற மாதிரி தெரியலை. அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கறீங்க”, என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“புருஷன் பொஞ்சாதின்னா சண்டை சச்சரவு எல்லாம் வர்றது தாம்மா. ஆனா அதுக்கெல்லாம் பிரிவு ஒரு தீர்வாயிடாது. விட்டு கொடுத்து போறது தாம்மா வாழ்க்கை, இது உனக்கு மட்டுமல்ல ராமுக்கும் சேர்த்து தான் சொல்றேன். அப்படி என்ன உங்களுக்குள்ள பிரச்சனை. இவனை கேட்டா இவன் பதிலே சொல்ல மாட்டேங்கறான்”,

பிரச்சனையை பற்றி பேசாமல், “பெருசா ஒண்ணுமில்லை பெரியப்பா”, என்றாள்.

“பெருசா ஒண்ணும் இல்லைங்கற, அப்புறம் எதுக்கும்மா உங்களுக்குள்ள இந்த பிரிவு”,

ராம் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.

“எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் அனுசரிச்சு போங்கம்மா. உங்கப்பா இருந்தா உங்களை இப்படி விட்டிருப்பாரா. என்னை தான் நிக்க வெச்சு கேள்வி கேட்டிருப்பான். நீ சொன்ன எல்லாம் சரிவரும்னு தானே கல்யாணத்தை பண்ணி வெச்சேன். இப்போ ரெண்டும் இப்படி தனித்தனியா நிக்குதேன்னு, என்னை தான் மா கேள்வி கேட்பான். எனக்கு தூங்கறதுக்கு கூட பயமா இருக்கும்மா, எங்க கனவுல உங்க அப்பா வந்து என்னை கேள்வி கேட்பானோன்னு”,

இதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரின் பேச்சை கேட்டு சிரிப்பு வந்தது. “எங்கப்பா என் கனவுலயே வரலை, உங்க கனவுல எப்படி பெரியப்பா வருவார்”, என்று கேட்க வேண்டும் போல ஆசை பொங்கியது.

நேரில் இருந்தால் அவளின் முகச் சிரிப்பு, அந்த சீரியஸ் சிச்சுவேஷனை காமெடி ஆக்கியிருக்கும். போன் என்பதால் தப்பித்தது.

அவர் மேலும் அட்வைஸ் மழை பொழிய. “சரி! பெரியப்பா! சரி! பெரியப்பா!”, என்று எல்லாவற்றிற்கும் சொல்லி வைத்தாள்,

கடைசியாக அவர், “இந்த ஞாயத்துக்கிழமை பொண்ணு பார்க்க வரலாம்னு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் முன்ன நின்னு தான் இந்த கல்யாணத்தை நடத்தனும். நீங்களும் ஒத்துமையா இருக்கணும். இனிமே பிரிவை பத்தி நினைக்கவோ பேசவோ கூடாது. உனக்கு இதுல ஏதாவது ஆட்சேபனை இருந்தா சொல்லிடு கல்யாணத்தை நிறுத்திடலாம்”, என்றார்.

“சரி”, என்று சொல்லுவதை தவிர வைதேகிக்கு வேறு வழியில்லை. 

“ஏன் பெரியப்பா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அபசகுனமா பேசறீங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும் பெரியப்பா”, என்றாள்.

“உன் பேச்சை நான் நம்பறேன்மா”, என்று சொல்லியபடியே போனை வைத்தார். இங்கு ராமிடம் நான் ஒரு  மாதிரியா வைதேகியை சமாதானப்படுத்தி வெச்சிருக்கேன். அவ கல்யாணம் முடியறவரைக்கும் உன்னோட சுமுகமா தான் போவா. அதுக்குள்ள  இனிமே அவளோட சேர்ந்து பொழைக்க வேண்டியது உன் திறமை”, என்று பேச்சை முடித்தார்.  

வைதேகி சனிக்கிழமை மாலையே மனோகருடனும் மாலதியுடனும் காஞ்சிபுரம் வந்துவிட்டாள். அவளுக்கே புரிந்தது தான் ராமை பார்க்க சற்று ஆர்வமாக இருப்பது. எங்கிருந்து வந்தது இந்த உணர்வு என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே வீடு வந்துவிட்டது. 

மூவரும் ஒருங்கே வந்தாலும் தங்கையையும் தமையனையும் கண்ணால் ஒரு க்ஷணத்தில் வரவேற்ற ராமின் பார்வை. அதன் பிறகு வைதேகியை விட்டு அகலவேயில்லை.

வைதேகிக்கும் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல மனநிலையில் அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைப்பது ஒரு விதமான படபடப்பை கொடுத்தது.

அவனின் பார்வை வீச்சை தாங்காமல் அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தாள் வைதேகி. அவனை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் அவன் விடாமல் பார்ப்பது அவளுக்கு கூச்சத்தை கொடுக்க அவன் பார்வையை தவிர்த்தாள். 

அண்ணன் அண்ணியையே பார்ப்பதை உணர்ந்த மாலதியும் மனோகரும் அந்த இடத்தை விட்டு நொடியில் அகன்றுவிட்டனர்.

வைதேகியின் அருகில் வந்தான் ராம். ஏனோ வைதேகி இன்னும் அதிக படபடப்பாக உணர்ந்தாள். சுற்றிலும் கண்களை சுழல விட அங்கே ராமையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.

“எப்படி இருக்க வைதேகி”,

“நல்லாயிருக்கேன்”, என்பது போல தலையாட்டினாள்.

அது போதவில்லை ராமிற்கு

“பதில் சொல்ல மாட்டியா”, என்றான்.

“நல்லாயிருக்கேன்”, என்றாள் வாயை திறந்து.

சிறிது மணித்துளிகள் அமைதியில் கழிய. “என்னை எப்படி இருக்கீங்கன்னு கேட்கமாட்டியா”, என்றான் ஆழ்ந்த குரலில்.

“எப்படி இருக்கீங்க”,

“நல்லாவேயில்லை. நீ இல்லாம நான் நல்லாவே இல்லை”, என்றான்.

முகத்தில் மெல்லிய புன்னகை அவளையறியாமல் உட்கார்ந்தது.

“இல்லையே பார்க்க நல்லா தானே இருக்கீங்க”, என்று சொல்ல வேண்டும் போல தோன்றியது. இருந்தாலும் அமைதியாகவே நின்றிருந்தாள்.

அவளையே விடாமல் பார்த்தவாறு நின்றிருந்தான் ராம்.

“இவன் என்ன இப்படி என்னை இதுவரை பார்த்தே இராதது போல பார்க்கிறான்”,  வைதேகிக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. இது நமக்கு தாங்காது என்று நினைத்தவள், தலையை உலுக்கி. “இன்னும் என்னை எவ்வளவு நேரம் பார்க்கிற மாதிரி உத்தேசம்”, என்றாள்.  

“எவ்வளவு நேரம்னாலும் பார்ப்பேன்”,

அவனின் பார்வை அவனின் பேச்சு எல்லாம் புதிதாக தெரிந்தது வைதேகிக்கு. 

அவனின் முகத்தை சரியாக பார்க்கவிடாமல் ஏதோ கூச்சம் தடுத்தது. புன்னகை இப்போது சிரிப்பாக விரிந்தது.

“என்ன இது டையலாக்”,

“ஏன் நல்லாயில்லை”,

“நல்லாயிருக்கு”, என்ற வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கினாள். பதிலுக்கு “நீங்க இப்படி எல்லாம் என்கிட்ட பேசினது இல்லையே”, என்றாள்.

“அதனால தான் நீ என்னை விட்டுட்டு போயிட்டியா”, என்றான்.

“நான் போகலை நீங்க தான் என்னை போக வெச்சீங்க”,

புன்னகை அவள் முகத்தை விட்டு மறையவில்லை என்றாலும் வார்த்தையில் சிறு அனல் அடித்தது.

பேச்சின் போக்கு மாறுவதை உணர்ந்த ராம், “மறுபடியும் சொதப்பறனா”, என்றான். 

“நிச்சயமா சொதப்பல் மன்னன் தான் நீங்க”,

இப்போது அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது.

அவர்கள் பேச்சை மேலும் தொடர விடாமல் லக்ஷ்மி பாட்டி வந்தார்.

“ஒருவழியா புருஷன் வீட்டுக்கு வந்துட்டியா வைதேகி”, என்றபடியே வந்தார்.

“நான் எங்க பாட்டி வந்தேன், நீங்க எல்லாம் தானே வரவைச்சீங்க”, 

“நாங்களா?  நாங்க என்னடிம்மா பண்ணினோம்”,

“பின்ன நீங்க தானே மாலதியை பொண்ணு பார்க்க வரபோறீங்க, அதான் சொன்னேன்”,

“ஒஹ்! நீ அதை சொன்னியா, நான் நீ சொல்லவும் ஏதோ இருக்குன்னு நினைச்சேன்’,

“என்ன இருக்குன்னு நினைச்சீங்க”,

“யம்மா! நீ எனக்கும் மேல வாய் பேசற, என்னால உன்கிட்ட வாய் கொடுக்க முடியாது, என்னை விட்டுடி அம்மா”,

“சரி, சரி, பொழைச்சு போங்க”,

அங்கிருந்த எல்லோர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.      

இரவு ராம் அவளை அவனின் ரூமிலேயே தங்க சொன்னான்.

“நான் மாலதி ரூம்ல படுத்துக்கவா”, என்றாள் வைதேகி.

இன்னும் அவள் அவனை தன்னுடைய ரூமிற்குள் அனுமதிக்க மறுக்கிறாள் என்று புரிந்த ராம். “நீ இங்கேயே படுத்துக்கோ வைதேகி. நான் வெளில படுத்துக்கறேன்”, என்றான்.

“இல்லை, உங்களுக்கு.’, என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “எனக்கு ஒரு சிரமமும் இல்லை. நீ இங்கேயே படுத்துக்கோ”, என்று சொல்லி அவன் தலையணை போர்வை எடுத்து வெளியே சென்றுவிட்டான்.

மேலும் மறுக்க முடியாமல் அங்கேயே படுத்துக்கொண்டாள் வைதேகி.

படுத்து விட்டாள் தான் தூக்கம் தான் வருவேனா என்றது. 

எழுந்து அங்கே இங்கே உலாத்தினாள். பின்பு அங்கே இருந்ததை எல்லாம் நோட்டம் விட்டாள். அவள் ஆர்வமாக பார்த்தது ராமின் பொருட்கள்.

எழுந்து அலமாரியை குடைந்தாள். அவனுடைய உடைகள் இருந்தது, கொஞ்சம் பணம் இருந்தது, பிறகு ஒரு டைரி இருந்தது. அதை பிரித்து பார்த்தாள். எல்லா பக்கங்களும் காலியாக தான் இருந்தன. ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் ஒரு கவிதை இருந்தது.

படித்த வைதேகியை அந்த கவிதை வெகுவாக அசைத்தது. அவனின் அவளை குறித்த எண்ணங்கள்.

ராமின் மனநிலையை அந்த கவிதை அப்படியே படம் போட்டுக் காட்டியது.

அவன் உணர்வுகள் அவளின் நெஞ்சின் ஆழம் வரை சென்று தொட்டது.

அவளுக்காக அவன் எவ்வளவு ஏங்குகிறான் என்று படம் போட்டு காட்டியது.     

மீண்டும் மீண்டும் அந்த கவிதையை வாசித்துக்கொண்டே இருந்தாள்.

 நீ பேசத்துவங்கும்போதே,
புரிந்துபோய்விடுகிறது !
அதன் முடிவினில் நான்,
கேவலப்படுத்தப்படுவேன் என்பது !
என்றாலும் முடிந்த அளவுக்கு,
‘ம்’ கொட்டியே,
வார்த்தைகளை விழுங்குகிறேன் !
ஆனாலும் !
விடுகிறாயா நீ?
தூண்டிவிட்டு அல்லவா தூபம் ஏற்றுகிறாய் !
ஆயிரம்முறை பரிகாசித்து,
அநேகம் துரத்திவிட்டாய் !
இப்போது நீ பெண் நான் ஆண்,
என்ற உறவுமட்டுமே நமக்குள் !
இருந்தாலும் !
என்னை சிதைக்காமல் விடுவதாயில்லை நீ !
சரி நான் கேட்கிறேன்?

ஆமாம் !
உன் வெறுப்பு தாங்காமல்,
காத தூரம் ஓடியவன் நான் !
சொல் !
செத்த பாம்பை இன்னும்,
எத்தனைமுறை அடிப்பாயடி நீ?

ஆனால் இப்போதோ

உடலின் காயங்களை விட
மனதின் காயங்கள் வலிக்கிறதே
உடன் வருவாய் வாழ்க்கை துணையென
என எண்ணியிருந்தேன்
விலகி செல்கிறாய் வாழ்க்கையே வேணாமென
என் வார்த்தையின் தாக்கத்தால் !!!

உனக்காக விரும்புகிறேன் உன்னை – என
சொல்ல துணிவில்லை எனக்கு
உனக்காக விலகுகிறேன் நான் – என
சொல்ல துணிவுண்டு எனக்கு!!!

வார்த்தையால் சுட்டேன் உன்னையே
வருந்துகிறேன் தனிமையில் என்னையே!

என் வார்த்தையினை
மறந்து வா என்று சொல்ல மாட்டேன்
மன்னித்து வா என்று உணர்ந்து சொல்வேன்

மீண்டும் வருவாய் என்றே நம்புகிறேன் – என்னையே
மீட்ட வருவாய் என்றும் நம்புகிறேன்!!!

வைதேகியின் கண்களில் மெல்லிய நீர் படலம் திரையிட்டது.

Advertisement