Advertisement

அத்தியாயம் இருபது:

ராமின் வேண்டுதல் வீண் போகவில்லை, சமையபுரம் மாரியம்மனுக்கு அவனை கைவிடும் எண்ணம் எல்லாம் இல்லை.வைதேகி பிரிய வேண்டும், அது, இது, என்று பேசினாலும் டைவர்ஸ் என்ற வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை.

உண்மையை சொல்லவேண்டும் வைதேகிக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றவேயில்லை. அவளுக்கு தற்போதைக்கு இருக்கும் எண்ணம் அவனை விட்டு பிரிய வேண்டும் என்பது தான்.

அதற்கு காரணம் அவளின் வீண் பிடிவாதம். அவளாக அவனை பிடிக்கவில்லை என்று கற்பித்து கொண்ட காரணம். அவனின் பேச்சால் அவன் மேல் ஏற்பட்ட கோபம் இப்படி பல காரணங்கள். இதைவிட எல்லாம் மிக முக்கிய காரணம் “உங்கப்பாவுக்காக தான் நான் உன்னை பொறுத்துக்கறேன்”, என்ற ராமின் வார்த்தைகள். எங்கப்பாவுக்காக யாரும் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டாம் என்ற அவளின் வீம்பே அவர்கள் பிரிவதற்கு முக்கிய காரணம்.

இல்லையென்றால் அவன் அவளை அவளின் இஷ்டமில்லாமல் அடைந்த போது கூட பிரிவு என்றதை பற்றி அவள் யோசிக்கவே இல்லை.  

ஆனால் எத்தனை காரணம் இருந்தாலும் அவனை விட்டு நிரந்தரமாக அவளை பிரிக்கும் டைவர்ஸ் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு வரவேயில்லை.

ராம் அவளிடம் நான் இங்கே வரமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டான் தான், ஆனால் அதை நிறைவேற்றும் எண்ணம் கொஞ்சமும் இல்லை, அவனாவது வைதேகியை பார்க்காமல் இருப்பதாவது.

எப்படியும் சுவாமிநாதனின் தொழில்கள் குறித்தோ வாடகை பணங்களை குறித்தோ அவளிடம் பேசிதான் ஆகவேண்டும். அதனால் எப்படியும் அவளுடனான பேச்சு தொடர்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

அதனை நினைவில் வைத்துக்கொண்டே வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டு இருந்தான், “இங்கே வரமாட்டேன்”, என்று.

எது இருந்தாலும் அவளை தனியாக விடும் எண்ணம் எல்லாம் ராமிற்கு இல்லை. அந்த உறுதி அவன் பேச்சிலும் தெரிந்தது கண்களிலும் தெரிந்தது.

வைதேகி அவனிடம், “இங்க இருந்து எப்படி மாலதி காலேஜ் போவா”, என்றாள்.

“இங்கிருந்து அவ காலேஜ் ஒரு மணிநேரம் தான், அவளுக்கு அது ஒண்ணும் பிரச்சனையா இருக்காது, பஸ்ல போயிடுவா.

அவனின் ஏற்பாட்டிற்கு சரி என்று அரை மனதாக தலையாட்டினாள் வைதேகி.

அவனுக்கு அதுவே பெருத்த நிம்மதியாக இருந்தது.

மெதுவாக அவளின் அருகில் வந்தான், “இன்னும் ஒரு வேண்டுகோள்”, என்றான்.

“என்ன”, என்பது போல பார்த்தால் வைதேகி.

“அது. அது.”, என்று இழுத்தான்.

வைதேகி அவனே சொல்லட்டும் என்பது போல அவனின் முகத்தை பார்த்து அமைதியாக நின்றாள்.

முயன்று வரவழைத்த துணிச்சலுடன், “நம்ம ஒரு நாள் உறவுக்கு அடையாளமா குழந்தை ஏதாவது உண்டானா அதை நீ எதுவும் செய்ய கூடாது”, என்றான்.

அவனின் பேச்சை கேட்டவள் அவனை வெறித்து நோக்கினாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் இந்த மாதிரி நினைத்து பார்த்ததேயில்லை. கேட்டவுடன் கல்லாய் சமைந்து விட்டாள். 

“ப்ளீஸ், சரின்னு சொல்லு”, என்றான் மன்றாடிய குரலில்.

அவள் அப்படியே நிற்கவும், “வைதேகி”, என்று அவளின் தோளை தொட்டான். உணர்வுக்கு வந்தவள் விலகி. “அப்படி எதுவும் இல்லை”, என்றாள் ஒரு பெருமூச்சை வெளியேற்றி.

ராமின் முகத்தில் பெருத்த ஏமாற்றம். “அதுக்குள்ள எப்படி தெரியும்”, என்றான்.

அவளுக்கு பீரியட்ஸ் ஆகிவிட்டது, அதை அவனிடம் அவளால் சொல்ல முடியவில்லை. “இல்லை எனக்கு நல்லா தெரியும், அதுக்கு வாய்ப்பில்லை”, என்றாள்.

அவன் சொன்னதை கேட்டதும் தான் இப்படி கூட இருந்திருக்கலாமே என்று நினைத்தாள். வைதேகிக்கும் பெரிய ஏமாற்றமே. அப்படி ஏதாவது இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நினைவு அவளையறியாமல் உதித்தது.

தன்னுடைய தனிமையாவது தீர்ந்திருக்கும், தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆதாரம் கிடைத்திருக்கும் என்றே தோன்றியது. 

மீண்டும் அவள் ரூமை விட்டு வெளியே போகப் போக. “நீ தூங்கு, நான் போறேன்”, என்று சொல்லி சென்றான்.

அன்றைய இரவு தூங்கா இரவாக இருவருக்கும் ஆகிப்போனது. வைதேகி அவனிடம் பிரிவதை பற்றி பேசிவிட்டாலும், அதை சொன்ன பிறகு ஒரு சந்தோஷமோ திருப்தியோ அவளுக்கு இல்லவே இல்லை. மனம் கனத்தது.

“அவன் சொன்ன மாதிரி நமக்கு ஏன் குழந்தை வரவில்லை”, என்று ஏக்கமாக இருந்தது.

ராம், காலையில் மாலதியிடமும் மனோகரிடமும் பேசினான்.

“எனக்கு வேலை அங்கன்றதால நான் காஞ்சிபுரம் போறேன். வைதேகிக்கும் மனோகருக்கும் இங்கே தானே வேலை. அவங்க இங்கே இருக்கட்டும். மாலதி நீயும் அண்ணிக்கு துணையாய் இங்கே இருந்துக்கோ”, என்றான்.

மாலதிக்கோ மனோகருக்கோ இங்கே இருப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. ஆனால் அவன் காஞ்சிபுரம் செல்வதில் அவர்களுக்கு உடன் பாடு இல்லை.

“நீயும் இங்கேயே இருந்துக்கோ அண்ணா, அப்பப்ப காஞ்சிபுரம் போயிட்டு வரலாம்”, என்றான் மனோகர்.

“உங்ககிட்ட இன்னும் மறைக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் உங்க அண்ணிக்கும் கொஞ்சம் பிரச்சினை. அதனால ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு பிரிஞ்சு இருக்கலாம்னு முடிவெடுத்து இருக்கோம்”, என்றான்.

கேட்டவுடன் சின்னவர்கள் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி. அங்கே ஒரு மயான அமைதி நிலவியது. ராமின் குரலை வைத்தே அவன் விளையாட்டுக்கு சொல்லவில்லை என்று இருவருக்கும் புரிந்தது.

மேலே பேசுவதற்கு வார்த்தையே வரவில்லை.

சிறிது நேர அமைதிக்கு பின், “என்ன அண்ணா அப்படி பிரியற அளவுக்கு பிரச்சினை”,

தங்கள் பிரச்சனையை சொல்ல ராமிற்கு இஷ்டமில்லை. வைதேகியும் அதை விரும்ப மாட்டாள் என்று தெரியும். ஏனென்றால் நடந்த எதையும் அவள் யாரிடமும் பகிரவில்லை. தான் காய்ச்சல் வந்து உளறிக்கொண்டு இருந்த போது கூட தன்னை யாரும் அண்ட விடவில்லை என்று அவனுக்கும் தெரியும்.

ராம் அமைதியாக நின்றதை வைத்தே அவனுக்கு சொல்ல விருப்பமில்லை என்று மனோகருகும் மாலதிக்கும் புரிந்து போனது.

அவர்கள் அதற்கு மேலும் துருவவில்லை. 

அவனின் அண்ணன் பொறுப்பானவன், அவன் மேல் தவறு இருப்பதற்கு வாய்ப்புகள் கம்மி போலவே இருவருக்கும் தோன்றியது.

“நாங்க ரெண்டு பேரும் வேணா அண்ணி கிட்ட பேசிப்பார்க்கவா”, என்றனர்.

“வேண்டாம், வேண்டாம்”, என்றான் அவசரமாக. அவர்களோடு அவள் இருப்பதற்கு சம்மதித்ததே பெரிய விஷயம், இதில் இவர்கள் இருவரும் பேசி அவர்கள் மேல் கோபம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று மறுத்துவிட்டான்.

“எனக்கும் அவளுக்கும் தான் பிரச்சினை. அதை உங்ககிட்ட அவ எப்பவுமே காட்டினதில்லை நல்லாதான் நடந்துக்கறா. அதை கெடுக்க வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் எதுவும் அவகிட்ட காட்டிக்காதீங்க”, என்றான் புரிந்து கொள்ளுங்கள் என்ற பாவனையில்.

“என்ன அவகிட்ட எதுவும் கேட்க மாட்டீங்க தானே”, என்று அவன் உறுதி படுத்திக்கொள்ள கேட்க.

“சரி”, என்பதாக இருவருமே தலையாட்டினர்.

“எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு, அது முடிஞ்சதுன்னா நான் இன்னைக்கே கிளம்பினாலும் கிளம்பிடுவேன்.”,

“நீங்க இல்லாம நாங்க ரெண்டு பேர் மட்டும் அண்ணி கூட எப்படி அண்ணா இருக்க முடியும்”, என்றான் மனோகர்.

“பழகிடும் மனோ, இப்போ அவளை தனியா விடறது சரியில்லை, அவங்கப்பா மட்டும் நம்ம அப்பா அம்மா இறந்தப்போ ஆதரிச்சி இருக்கலைன்னா நாம தெருவுல தான் நின்னிருப்போம். நீ எனக்காக கூட பார்க்காத அதை நினைச்சி பார்”,

“அதுமில்லாம நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்கிறது மறைமுகமா எனக்கு அவளுக்கும் ஒரு தொடர்பு, நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்கன்னா எனக்கும் அவளுக்கும் தொடர்பே இல்லாம போயிடும்”,

“எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க முடியும் அண்ணா”,

“கொஞ்ச நாளைக்கு தான், அதுக்குள்ள எனக்கும் அவளுக்கும் இருக்கிற பிரச்சினை சரியாகிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு”, என்றான்.

இருவரும் சரி என்று தலையாட்டினாலும் இருவரும் கலங்கி இருக்கிறார்கள் என்பது முகத்தில் இருந்தே தெரிந்தது.

அவர்களின் கலக்கம் ராமை தாக்க. “எல்லாம் சரியாகிடும்,” என்றான் இருவரையும் பார்த்து. அது அவர்களுக்கு மட்டுமல்ல தனக்கு சேர்த்து சொல்லிக் கொண்டான்.

நம்பிக்கை தானே வாழ்க்கை.

வைதேகியிடம் சென்றவன் தான் இன்றைக்கு ஊருக்கு கிளம்புவதாக கூறினான்.

“நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன் வைதேகி, எப்படியும் தொழில் விஷயமா வாடகை பணம் வசூல் பண்ணினா அது விஷயமா எல்லாம் உன்கிட்ட பேச வேண்டி இருக்கும். எப்படி பேசறது?”, என்று கேட்டான்.

“மாலதிகிட்ட சொல்லி சொல்லுங்களேன்”, என்றாள்.

“எதுக்காவது உன்கிட்ட தான் பேசனும்னு இருந்தா”,

“போன் பண்ணுங்க”, என்று அனுமதி கொடுத்தாள்.

“அப்போ நான் போகவா”, என்று நின்று கொண்டே இருந்தான்.

“ம், சரி”, என்றாள்.

மனம் பாரமான மாதிரி ஒரு உணர்வு அவனுக்கு. நான் செல்வதில் சிறிது கூட அவளுக்கு வருத்தம் இல்லையா என்று அவளின் முகத்தை ஆராய. அதில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உணர்ச்சிகள் அற்று இருந்தது அந்த முகம்.

இன்னும் அவளிடம் பேசவேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருந்தது ராமிற்கு. பேசி இப்போது இருப்பதையும் அவள் ஏதாவது வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அந்த பயத்திலேயே ஒன்றும் பேசாமல் திரும்ப சென்றான்.

அவன் கிளம்பும் போது மாலதி ஒரே அழுகை. “என்ன அண்ணா இப்படி சொல்லிட்டு போற”, என்று.

“நீ தைரியமான பொண்ணு மாலதி, இப்படி எல்லாம் அழக்கூடாது”, என்று சமாதானப்படுத்தி சென்றான்.

வைதேகி ரூமை விட்டு வெளியே வரவேயில்லை.

ராமும் அவள் வெளியே வருவாளா, வருவாளா என்று கண்கள் பூக்க பார்த்திருக்க அவள் வெளியே வரவேயில்லை.

ராம் சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. மாலதியும் மனோகரும் வைதேகியுடனான வாழ்க்கைக்கு பழகி விட்டனர். அந்த வகையில் வைதேகி அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களின் வீடு போலவே உணரவைத்தாள்.

வைதேகி அவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து மாலதியும் மனோகரும் குழம்பினர். இவ்வளவு நன்றாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள் இவர்களாக அண்ணனிடம் பிரச்சினை வளர்த்திருப்பார்கள் என்று தோன்றவில்லையே என்று இருந்தது.

இந்த ஒரு மாதத்தில் ராம் வரவும் இல்லை வைதேகியிடம் பேசவும் இல்லை. கணக்கு வழக்குகள் எல்லாம் மாலதியின் மூலமாவே சொன்னான்.

மாலதி தான் ராமிடம், “அண்ணா வந்துட்டு போண்ணா. எனக்கு உன்னை பார்க்கணும் போலவே இருக்கு”, என்று ராமிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

இது ஒரு பக்கம் என்றால் அங்கே சுந்தரேசன் கேட்கும் கேள்விகளுக்கும் ராமால் பதில் சொல்ல முடியவில்லை.

“என்ன பிரச்சினை ஏன் அவங்களை விட்டுட்டு நீ இங்க இருக்க”, என்று.

என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை ராமிற்கு. மழுப்பலாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.

இங்கே வீட்டில் மாலதியும் மனோகரும் அவர்களுக்குள் அடிக்கடி பேசிக்கொள்வது ராமை பற்றி தான். சாப்பாட்டில் ஒரு காய்கறியை பார்த்தால் கூட இது ராம் அண்ணாக்கு பிடிக்கும் என்பர்.

எப்போதும் அவர்கள் பேச்சில், “அண்ணா, இப்படி, அப்படி”, என்று ராமை பற்றி அதிகம் பேசுவதை வைதேகி கேட்க நேர்ந்தது. சில சமயம் வைதேகியிடமே நேரடியாக ராமை பற்றி பேசுவர்.

“அண்ணா எங்களுக்காக பார்த்து பார்த்து செய்வார். அதுவும் அம்மா இறந்த போது எனக்கு ஏழு வயசு. மனோவுக்கு ஒம்போது. அண்ணாக்கு பதினஞ்சு. நா அம்மாவை நினைச்சு எப்பவும் அழுதுட்டே இருப்பேன். அண்ணா தான் என்னை தூக்கி வெச்சிட்டே இருப்பாங்க, கீழயே விடமாட்டாங்க. மனோ சாப்பிடறதுக்கு அவ்வளவு அடம் பண்ணுவான், அண்ணா தான் ஊட்டி விடுவாங்க அண்ணாக்கு எங்களை ரெண்டு பேரை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிடும்.”,

ஒரு பதினைந்து வயதே ஆன பையனுக்கு இந்த பொறுப்புக்கள் அதிகமே என்று  வைதேகிக்கு தோன்றியது. அவனுக்கும் தானே அப்பா அம்மா இறந்திருகிறார்கள். அதை பற்றி நினைத்து அழக்கூட நேரமில்லாமல் இருந்திருப்பான் என்று அவனை நினைத்து மனம் வருததப்பட்டது.  

“ஆனா நாங்க எவ்வளவு குறும்பு பண்ணினாலும் எங்களை இதுவரைக்கும் அண்ணா அடிச்சதோ திட்டுனதோ கிடையாது. ரொம்ப பொறுமை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போயிடுவார். பணம் வந்தா அவருக்கு முதல்ல எதுவும் வாங்க மாட்டார், எங்களுக்கு வாங்கி கொடுத்துட்டு அப்புறம் மீதி இருந்தா தான் வாங்குவார்.  அப்புறம் எங்களுக்கு விவரம் புரியாத வயசுலயே அண்ணாக்காக பார்த்து பார்த்து எங்க குறும்பு அடம் எல்லாத்தையும் குறைச்சிகிட்டோம்”. 

“எப்பவும் சொல்லுவார் அண்ணி உங்க அப்பானால தான் நாங்க சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்படாம தப்பிச்சிட்டோமாம். உங்க அப்பா இல்லைனா நாங்க எந்த நிலைமைல இருந்திருப்போம்னு தெரியாதும்பார்.”,

தன் தந்தைக்கு மனதினில் உயர்ந்த இடம் வைத்திருக்கிறான் என்று புரிந்தது. 

“அண்ணாக்கு படிக்கனும்னு ரொம்ப ஆசை. ரொம்ப நல்லா படிப்பாங்க.  உங்கப்பா கூட அவரை படி, நீ படிப்பு முடிக்கற வரைக்கும் நான் பார்த்துக்கறேன்னு சொன்னார். ஆனா அண்ணா தான் என்னவோ வேண்டாம்னு சொல்லிடுச்சு. இன்னும் அவரை சிரமப்படுத்த வேண்டாம்னு நினைச்சிருக்கும்”.     

இப்படி அவன் பேச்சு இல்லமால் அவர்கள் பேச்சே இருக்காது.

“ஒஹ்! குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு அவனுக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. படிக்க ஆசையிருந்தும் அவனால் படிக்க முடியவில்லை.”, மனம் அவனுக்காக பரிதாபப்பட்டது.     

அவர்கள் இப்படி ராம் நினைவை வைதேகிக்குள் பதித்துக் கொண்டே இருந்தனர். சிறு வயதில் அவன் செய்தது. அவன் பட்ட கஷ்டங்கள். சுவாமிநாதன் அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவி செய்தது. பின்பு ராமே தனியாக ஒரு தொழிலை உருவாக்கிக்கொண்டது. என்று ராமின் பேச்சே தான்.

அவர்களின் பேச்சுக்களை கேட்க கேட்க வைதேகிக்கு இப்போதெல்லாம் ராமின் நினைவு அடிக்கடி வந்தது. அவளாக நினைக்க கூடாது என்றாலும் அடிக்கடி வந்தது. நிறைய சிரமங்களை அவன் அனுபவித்து இருக்கிறான். கடுமையான உழைப்பாளி என்று அவர்களின் பேச்சில் இருந்து நன்றாக தெரிந்தது.

தானும் அவனை சிரமப்படுத்துகிறோமோ என்ற எண்ணம் அவளுள் எழாமல் இல்லை.

அவன் படிக்கவில்லை என்பதை தவிர வேறு என்ன குறை அவனுக்கு. தனக்கு ஏன் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பது நானாக உருப்போட்டுக்கொண்டதா.

அவனை பார்க்க வேண்டும் போலவும் இருந்தது. வேண்டாம் என்பது போலவும் இருந்தது. அவ்வப்போது இந்த மாதிரி தவிப்பு எழுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. 

இப்படிப்பட்ட நினைவுகள் அவளை சூழ்ந்ததால் உற்சாகம் குறைந்து ஒரு விதமான யோசனையிலேயே சுழன்று கொண்டிருந்தாள்.

மாலதியும் மனோகரும் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று அண்ணனை பார்த்து வந்தனர்.

ராம் சொன்னதையும் மீறி, “நீங்களும் வாங்களேன் அண்ணி”, என்று கூப்பிட்டாள் மாலதி. வரவில்லை என்று மறுத்துவிட்டாள் வைதேகி. 

ஊரில் ஒரு கலகலப்பு உற்சாகம் எதுவும் அவர்களின் அண்ணனிடத்தில் அவர்களால் காண முடியவில்லை. எல்லாம் குறைந்தோ மறைந்தோ காணப்பட்டது. எப்போதும் அமைதியானவன் தான் ராம். இப்போது அதையும் மீறி ஏதோ குறைவதாக தெரிந்தது.

இவர்களுக்காக கூட ராமால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. அவர்களுக்கு புரியவில்லை அங்கே வைதேகியும் அப்படி ஒன்றும் சந்தோஷமாக இல்லை. எப்போதும் ஒரு ஆழ்ந்த அமைதியிலேயே இருந்தாள். இங்கே ராமும் அப்படி தான் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தான்.

அப்புறம் எதற்காக அவர்களுக்குள் இந்த பிரிவு, எங்கே தவறு.   

ராமிற்கு வைதேகியை பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதில் நிறைய இருந்தபோதும் அவளுக்கு கொடுத்த வாக்கை உடனே உடைக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்.

சுந்தரேசன் வேறு என்ன நினைத்தாறோ, “நான் போய் வைதேகியிடம் பேசுகிறேன்”, என்று வேறு அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தார். 

இதற்குள் மனோகரும் வைதேகியும் வேலையில் சேரும் நாளும் வந்தது.  புதிதாக வேலைக்கு போகும் பதட்டம் இருவருக்குமே இருந்தது.

மோகன் அங்கேயே இருப்பது இருவருக்குமே சற்று தைரியமாக இருந்தது.

வேலைக்கு போகிறேன் என்று ராமிடம் சொல்லலாமா வேண்டாமா என்று வைதேகிக்கு ஒரே யோசனை. அவனிடம் சொல்ல வேண்டும் போல தோன்றினாலும் ஏதோ ஒன்று தடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.

மனோகரிடம் பேச்சுக்கொடுத்தாள், “உங்க அண்ணாகிட்ட வேலைக்கு எப்போ ஜாயின் பண்ண போறோம்னு சொல்லியாச்சா”,

“சொல்லியாச்சு அண்ணி”,

“நானும் பண்றது தெரியுமா”,

“நம்ம ரெண்டு பேரும் பண்றோம்னு அண்ணனுக்கு தெரியும் அண்ணி.”,

“எப்படியோ அவனுக்கு விஷயம் தெரியும்”, என்று விட்டுவிட்டாள். மனம் அவனுக்கு தெரிய வேண்டும் என்று நினைத்துது என்பது தான் உண்மை.

முதல் மூன்று மாதம் ட்ரைனிங் என்றனர். வைதேகி வேறு பேட்ச். மனோகர் வேறு பேட்ச். வைதேகிக்கு அவளுடன் அவளின் கல்லூரியில் பயின்ற இன்னும் சிலரும் தேர்வாகி இருந்ததால் அவள் வேலை செய்யும் இடத்தில் அதிகமாக தனிமையை உணரவில்லை. சற்று கலகலப்பாகவே சென்றது.

வைதேகியும் மனோகரும் மோகனின் கன்சர்னில் இருப்பதால் அதை சாக்காக வைத்து மோகன் வைதேகியின் வீட்டிற்கு மாலதியை பார்க்க வந்தான்.

ஆனால் தனியாக ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. எப்போதும் மனோகர் இருந்ததால் பேசும் வழியறியாது தவித்தான். மாலதியும் அப்படி ஒரு சூழ்நிலை வருவதற்க்கு விடவில்லை. கண்ணால் மட்டுமே பார்த்து திருப்தி பட்டுக்க வேண்டியிருந்தது. அப்பாவிடம் இதை பற்றி இந்த வாரமே பேசவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான் மோகன்.

இப்போது இவர்களின் கண்ணாமூச்சி வைதேகிக்கு நன்கு தெரிந்தது.

மோகனின் பார்வைகள் மாலதியையே தொடர்ந்து கொண்டிருக்க. அவள் அவனை தவிர்ப்பது நன்கு புரிந்தது. என்ன நடக்கிறது, ஏதோ நடக்கிறது என்று வைதேகிக்கு புரிந்தது.

மோகன் சென்ற பிறகு வைதேகி மாலதியை நேரடியாகவே  கேட்டாள், “என்ன நடக்குது மாலதி”, என்று.

மாலதி புரியாமல் பார்க்க. “உனக்கும் மோகன் அண்ணாக்கும் நடுவுல என்ன நடக்குது”,

“அண்ணி, அது வந்து.”, என்று மாலதி இழுக்க.

“சொல்ல இஷ்டம் இல்லைனா வேண்டாம்”,

“அது அவங்க என்னை காதலிக்கறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு சொன்னாங்க”, என்று விஷயத்தை போட்டு உடைத்தாள்.

சற்று ஆச்சர்யமாக இருந்தது. “எப்போ”,

“ரமா கல்யாணத்தப்போ”,

“நீ என்ன சொன்ன”,

“அண்ணா கிட்ட பேச சொல்லிட்டேன்”,

“ஏன்? உனக்கு இஷ்டமிருந்தா இஷ்டமிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. இதென்ன பதில் அண்ணா கிட்ட கேட்க சொல்றது, உனக்கு இஷ்டமிருந்தா தானே அண்ணாகிட்ட பேச சொல்லனும், இல்லைன்னா ஏன் சொல்லனும்”,

“எனக்கு கல்யாணத்துல தனி இஷ்டம்ன்னு எதுவும் இல்லை அண்ணி. அண்ணா என்ன சொல்றாங்களோ அது தான்”,

“யார் உன்கிட்ட கேட்டாலும் இப்படி தான் சொல்லுவியா”,

“அதெப்படி அண்ணி”, என்றாள்.

“பின்ன மோகன் அண்ணாகிட்ட மட்டும் அப்படி சொல்லியிருக்க”,

“அவங்க கிட்ட அப்படி சொல்லனும்னு தோணிச்சு, அதான் சொன்னேன்”, என்றாள் தயக்கமாக.

“அப்போ உனக்கும் இஷ்டம்னு சொல்லு, அதான் அண்ணாகிட்ட பேச சொல்லி இருக்க”,

“ஐயோ அண்ணி அப்படியெல்லாம் எதுவும் இல்லை”, என்று பதறினாள் மாலதி. “கல்யாணம் முடியற செகண்ட் வரைக்கும் நான் யாரையுமே மனசுல நினைக்க மாட்டேன், எங்கண்ணா எங்களை எப்படி வளர்த்தார். அவருக்கு இஷ்டமில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன்”, என்றாள் உறுதியாக.

மாலதிக்கு மோகன் மீது நல்ல அப்பிராயம் இருக்க போய் தான் அவளின் அண்ணனிடம் பேச சொல்லியிருக்கிறாள் என்று வைதேகிக்கு புரிந்தது.

“சரி! நீ இதை ஏன் உங்க அண்ணாகிட்ட சொல்லலை”,

“அவங்களே தானே வந்தாங்க. வேணும்னா அவங்களே சொல்லட்டும்”, என்று முறுக்கினாள் மாலதி.

வைதேகிக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் பொறுப்புள்ள அண்ணியாக இந்த விஷயத்தை ராமிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.

அவளுக்கு உடனே அதை ராமிடம் பகிர வேண்டும் என்று தோன்றியது.

அன்று இரவு உறங்கும் போது ராமிற்கு தொலைபேசியில் அழைத்தாள். வெகு சில மாதங்களுக்கு பிறகு அழைக்கிறாள்.

அவளுக்கே புரியவில்லை ராமிடம் பேசவேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அவளின் உள்மனது இதை ஒரு சாக்காக வைத்து அவனை அழைக்கிறது என்று.

வைதேகியின் அழைப்பு என்றவுடன் என்ன்னவோ ஏதோ என்று அவசரமாக எடுத்தான் ராம்.

எடுத்துவிட்டாலும் பேச மனம் வரவில்லை, எதுவாக அவள் பேசட்டும் என்று அவன் காத்திருக்க. அவன் பேசட்டும் என்று வைதேகி காத்திருந்தாள். இப்படியே ஒரு நீண்ட அரை நிமிஷம் கழிந்தது. 

அவன் பேசப்போவதில்லை என்று தெரிந்த வைதேகி.

“போனை வெச்சிடட்டுமா”, என்றாள்.

“பேசேன். கேட்கறேன்”, என்றான் சலுகையாக ராம்.

“ஏன்? நான் போன் பண்ணினா. நான் தான் பேசணுமா. நீங்க பேசக்கூடாதா”,

“ஏதாவது விஷயமில்லாம நீ போன் பண்ணியிருக்க மாட்ட. இதுல அசட்டுத்தனமா நான் ஏதாவது பேசி. நீ போனை வெச்சிட்டா. அப்புறம் உன்கிட்ட பேசற சந்தர்ப்பம் மிஸ் ஆகிடுமே”, என்றான் நீளமாக, அதே சமயம் ஆர்வமாக. 

“யப்பா! என்னமா யோசிக்கறான் இவன்”, என்றிருந்தது வைதேகிக்கு. இருந்தாலும் மறுத்து ஒன்றும் பேசவில்லை.

“சொல்லு வைதேகி”, என்றான் குரலில் அன்பையெல்லாம் தேக்கி. அது அவளை அசைத்தது. 

“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்னு தான் போன் பண்ணினேன். மோகன் அண்ணா இருக்காங்க இல்லை அவங்க மாலதிகிட்ட.”, என்று ஆரம்பித்து அவர்களுக்குள் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.

“அவ உங்ககிட்ட பேச  சொன்னாளாம். உங்ககிட்ட ஏதாவது பேசினாங்களா”,

“இல்லையே பேபி”, என்றான், பேபி என்ற வார்த்தை சொன்னால் அவள் ஏதாவது முறுக்கி கொள்கிறாளா என்று பார்க்க. அப்படி எல்லாம் எதுவுமில்லை. அவனுக்கு சந்தோஷமாகிவிட்டது. 

“என்ன பண்ணலாம்”, என்று வைதேகி ராமிடம் கேட்க. ராம் வைதேகியிடம் திரும்ப அப்படியே கேட்டான், “என்ன பண்ணலாம்”, என்று. சற்று யோசித்தவள் “அவங்களா வரட்டும் நம்மளா அவசரப்பட்டு போகவேண்டாம்”, என்றாள் பெரிய மனுஷியாக.

“சரி”, என்றான். பதிலுக்கு “அப்போ நான் வைக்கட்டுமா”, என்றாள். 

“ம்”, என்றான் அரை மனதாக. இன்னும் பேசவேண்டும் போல தோன்றியது. ஆனால் வார்த்தையை வளர்க்க அவனுக்கும் தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. இருவரும் பேசிய திருப்தியோடு. இன்னும் பேசமுடியாத ஏமாற்றத்தோடு தொலை பேசியை வைத்தனர். 

 ஆனால் வெகுநாட்களாக இல்லாத நல்ல நிம்மதியான உறக்கம் அவனை தழுவியது. அவளையும் தழுவியது.   

Advertisement