Advertisement

அத்தியாயம் இரண்டு:

வைதேகி அவள் அன்னையை கொண்டு இருப்பாள் என்று ராமின் மனதில் எண்ணங்கள் ஓடும்போதே அவனை அவனே கடிந்து கொண்டான். உனக்கு தேவையில்லாதது. “ஒரு வளர்ந்த பெண்ணை பற்றி நீ நினைப்பது உனக்கு அழகல்ல”, என்று அவனை அவனே கடிந்து கொண்டவன்……….. வைதேகியின் நினைப்பினை தூர ஒதுக்கினான்.

சுவாமிநாதனை கவனிக்கும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டான்.

வைதேகிக்கு அது பெருத்த நிம்மதியை கொடுத்தது. இல்லையென்றால் தடுமாறி இருப்பாள். எப்படி இப்படி பொறுமையாக ஒரு ஆண்மகன் இருக்கின்றான் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கென்ன தெரியும் அவன் வாழ்க்கை பாதையில் அவன் நடந்து வந்த வழிகள் அவனுக்கு பொறுமையை போதித்து இருக்கிறது என்று.

அவளின் தந்தைக்கு ஒரு மகன் இருந்தால் கூட இவ்வளவு பொறுமையாக அவரை பார்த்துகொண்டிருப்பானா என்பது சந்தேகமே. அந்த வகையில் ராம் அவளை சற்று அசைத்திருந்தான்.     

இன்னும் மூன்று நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்து பிறகு……….. சுவாமிநாதனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் விட்ட பிறகு…………. அவருக்கு பலமுறை ஜாக்கிரதை சொல்லி, தொழிலை கவனித்து சிரமப்படுத்திகொள்ள வேண்டாம் என்று கூறினான்………

சுவாமிநாதன் அவன் செலவு செய்த பணத்தை வாங்கிக்கொள்ள சொல்லியும்………… அப்புறம் வாங்கிக்கொள்கிறேன் என்று விட்டான். எவ்வளவு வற்புறுத்தியும் வாங்கவில்லை. கல்யாண செலவு தலைக்கு மேல் இருக்கிறது என்று சொல்லியும் வாங்கவில்லை. ஏதாவது தேவையென்றால் தன்னை அழைக்குமாறு கூறி……….. அவன் ஊரான காஞ்சிபுரத்திற்கு சென்றான்.

ஆம், காஞ்சிபுரம் தான் அவன் தற்போது இருக்கும் ஊர். ராமின் அன்னையும் தந்தையும் இருக்கும்போது பக்கத்தில் உள்ள கிராமத்தில் பட்டு சேலை நெசவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு விபத்தில் இருவரும் இறந்து போக…….. அப்போது பழக்கமானவர் தான் சுவாமிநாதன் அவனுக்கு.

அம்மாவுக்கு சின்னம்மாவின் மகன். வீட்டிற்கு அதிகம் வந்ததில்லை. இருந்தாலும் ராம் அவரை பார்த்திருக்கிறான். அப்போது அவனுக்கு பதினைந்து வயது இருக்கும். விவரம் புரிந்த வயது தான். ராமின் சொந்த தாய்மாமா தனது தங்கையின் இறப்புக்கு செய்யாததை அவர் செய்தார். அவன் அன்னை இருந்தபோதே அவருக்கும் அவரின் அண்ணனான ராமின் தாய்மாமாவிற்கும் சொத்து தகராறு.

அதனால் அவர் அதிகமாக எதிலும் கலந்து கொள்ளவில்லை. வந்து இருந்தார் தான்………… ஒரு வேளை ராம் போய் கேட்டிருந்தால் செய்திருப்பாறோ என்னவோ?. அந்த சமயத்தில் என்ன செய்வது என்று புரியாத ராம் அழுகையுடன் தடுமாறி நிற்க……………. விஷயம் அறிந்த சுவாமிநாதன் உடனே செயல்பட்டு, அவனை அதிகம் தவிக்க விடாமல்……….. அவர்களின் உடல்களை கவெர்மென்ட் ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்து வந்து ஈமகாரியங்கள் யாவும் செய்ய உதவி செய்தார்.

இல்லையென்றால் அன்றைய நிலைமைக்கு ராம் என்ன செய்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது.

இதுவே அவனுக்கும் அவனுடைய தாய்மாமாவிற்கும் இருந்த விரிசலை அதிகப்படுத்தி விட்டது.

நிறைய சொந்தபந்தங்கள் இருந்தனர் தான். ஆனால் அவர்கள் எல்லாரும் வேலை மட்டுமே செய்ய முடியும். பணம் செலவழிக்க முடியாத நிலையில் இருந்தனர். சுவாமிநாதன் தான் எந்த கணக்கும் பார்க்காமல் பணத்தை தண்ணீராய் செலவழித்து எல்லா காரியங்களும் செய்தார்.

ராமும், அவன் தம்பி மனோகரனும், தங்கை மாலதியும் தனித்து நின்ற போது அவர்………. அவன் அன்னையின் அம்மாவான………….. சுவாமிநாதனுக்கு பெரியம்மா ஆகவேண்டிய…………. லக்ஷ்மி பாட்டியை அந்த குழந்தைகளுடன் வந்து இருக்க சொல்லி கேட்ட போது, அவர் மகனை மீறி வரமுடியாமல் மறுத்துவிட்டார்.

அப்படியும் விடாமல் அவர்களின் தாய்மாமா வீட்டிற்கு பக்கத்தில் சுவாமிநாதன், அவருக்கு இருந்த இடத்தில் ராமையும் அவனின் தம்பி தங்கையையும் குடி வைத்தார். ஒரு பாதுகாப்பாகவாவது இருக்கட்டும் என்று. அவ்வளவாக ஒட்டுதல் இல்லை என்றாலும் அவர் பக்கத்தில் இருக்கும் பயத்தில் வேறு யாரும் இவர்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்தார்.

அவரால் வேறு செய்ய முடியாது. ஏனென்றால் இதெல்லாம் அவர் மனைவிக்கு தெரியாமல் தானே செய்து கொண்டிருந்தார். அவர் மனைவிக்கு தெரிந்தால் நிச்சயம் விடமாட்டார் என்று தெரியும். அதனால் எல்லாவற்றையும் தெரியாமல் தான் செய்தார். 

அவர் அவர்களை அங்கே காஞ்சிபுரத்தில் குடி வைத்த போது ராம் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அவனின் தம்பி நான்காம் வகுப்பிலும், தங்கை இரெண்டாம் வகுப்பிலும் இருந்தாள். அவனோடு ஒப்பிட்டால் இருவரும் மிக சிறிய குழந்தைகள். ராமிற்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. மனதளவில் மிகவும் தைரியமானவன் என்பதால் சமாளித்துக் கொண்டான்.

மாதா மாதம் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி…….. ஒரு பாட்டியை தினமும் வந்து அவர்களுக்கு சமைத்து போட ஏற்பாடு செய்து………….. என்று அத்துணை உதவியையும்  சுவாமிநாதன் தன் வீட்டிற்கு தெரியாமல் செய்துகொண்டிருந்தார்.

அவரின் உதவியை தங்களுடைய இயலாமையால் ஏற்றுக்கொண்டாலும்……… அதில் ராம் என்றும் வெட்கப்பட்டது கிடையாது. சந்தர்ப்பம் கிடைக்கும் திரும்ப செய்துவிடலாம் என்று தான் இருந்தான். அப்படி எண்ணித்தான் அவன் பன்னிரெண்டாவது வரை படித்ததே.

இரண்டு வருடங்கள் இப்படியே ஓடியது……….

ஒரு சமயம் ஏதோ ஒரு அவசர தேவைக்காக சுவாமிநாதனின் வீட்டிற்கு செல்ல………. அங்கே அவர் அவனை அதிகம் தெரிந்தது போலக் கூட காட்டிக்கொள்ளவில்லை. அதிலும் அவரின் மனைவி தன்னை அலட்சியமாக பார்த்த பார்வை என்றும் ராமின் நினைவில் நிற்கும்.

பிறகு தான் ராமிற்கு புரிந்தது அவர் வீட்டிற்கு தெரியாமல் தான் தங்களுக்கு எல்லா உதவிகளும் செய்கிறார் என்று. அதற்கு பிறகு அந்த உதவிகளை  ஏற்க அவன் மனம் முரண்டியது.

பன்னிரெண்டாவது படிப்பை முடித்தவுடனே அவன் படிப்பை விட்டான். அவன் அன்னையும் தந்தையும் இருந்த தொழிலுக்கே வந்தான். அதைப்பற்றி எல்லாம் சுவாமிநாதனிடம் ஒன்றும் சொல்லவில்லை. தனக்கு எதையும் தெரிந்தது போல கூட காட்டிக்கொள்ளவில்லை.

அப்போது பார்த்து அவன் அன்னையும் தந்தையும் இறந்தது பணம் வர……. அந்த பணத்தைக் கொண்டு சுவாமிநாதன் அவர்களுக்கு இருக்க விட்டிருந்த இடத்தை அவர்களுக்கே கிரையம் செய்தது கொடுத்தார். கொஞ்சம் பணம் மீதி இருக்க அதைக்கொண்டு தொழிலை பெருக்கி கொண்டான் ராம்.

அதன் பிறகு சுவாமிநாதனிடம் வாங்கும் உதவிகள் படிப்படியாக குறைந்து போக………….. ராம் அவன் மற்றும் அவன் தம்பி தங்கைகளின் வாழ்க்கையை அவனே பார்த்துகொண்டான். பணம் அதிகம் சேர்ந்துவிட்டாலும் மிகவும் சிக்கனம் பார்த்தே செலவு செய்வான் ராம்.

அவன் வீட்டு அமைப்பிலோ அவன் உடைகளிலோ இல்லை அவன் உபயோகிக்கும் பொருளிலோ அவன் வசதி தெரியாது. சிரமப்பட்ட நாட்களை அவன் மறக்கவில்லை. தம்பி தங்கை ஏதாவது கேட்டாலும் யோசித்தே வாங்கி கொடுப்பான். அவர்களுக்காவது யோசித்து வாங்கி கொடுப்பான். அவனுக்கு அதுவும் கிடையாது. மிக மிக அவசியமென்றால் ஒழிய வாங்க மாட்டான்.       

இப்போது அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க முன்னின்று கொண்டிருப்பதும் சுவாமிநாதன் தான்.

நன்றியை என்றும் மறப்பவன் அல்ல ராம். அதனால் தான் அவருக்கு உடம்பு முடியவில்லை என்று கேள்விப்பட்டவுடனே தனது தம்பி தங்கையை கூட விட்டு வந்துவிட்டான். அவரை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டான்.

இதில் மட்டுமல்ல அவருக்கு எந்தெந்த சமயத்தில் உதவி தேவைப்படுமோ………. அந்தந்த சமையத்தில் அதை செய்திட அவன் உறுதி எடுத்துக்கொண்டிருந்தான். 

வீட்டிற்கு வந்தவுடன் முதலில் அந்த ஆஸ்பத்திரி வாடை எல்லாம் போக நன்றாக குளித்தான். அவன் குளித்து முடித்து வெளியே வரவும் தங்கை மாலதி வரவும் சரியாக இருந்தது. அப்போது தான் பி எஸ் ஸீ கம்ப்யூட்டர் சயன்ஸ் முதல் வருடம் சேர்ந்திருந்தாள்.

“அண்ணா வந்துட்டியா! இப்ப எப்படி இருக்காங்க மாமா”,

“நல்லயிருக்கார். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு தான் வந்தேன். எங்க பாட்டியை காணோம்”.

“அவங்க ராத்திரி படுக்க மட்டும் தான் வருவாங்க”,

“நான் அவ்வளவு சொல்லிட்டு போயும், இப்படி தான் செய்யுதா கிழவி வரட்டும்”,

“விடண்ணா…….. நீ வேற வச பாடாத. ஏற்கனவே மாமாகிட்ட வேற நல்ல வசவு வாங்கியிருக்கும் போல, இதென்ன புது பழக்கம்னு. அவங்க பையனை மீறி நமக்காக வந்து ராத்திரி படுத்துக்குது. ஒண்ணும் சொல்லாத”, என்றாள் பாட்டிக்கு பரிந்து.

உடனே மறு பேச்சு பேசாமல் அவள் சொல்லுக்கு பணிந்தவன்……. “சரி சாப்பிட என்ன இருக்கு பாரு”,

“ஒண்ணுமில்லை சமையல்கார ஆயாவுக்கு உடம்பு சரியில்லை. ரெண்டு நாளா வரலை”,

“அப்போ சாப்பாடு”,

“நானும் மனோ அண்ணாவும் தான் காலைல ஏதாவது செஞ்சு சாப்பிட்டுட்டு எடுத்துட்டு போறோம்”, என்றாள்.

“அச்சோ! எனக்கு பயங்கரமா பசிக்குதே! மாவு இருந்தா தோசையாவது ஊத்துவோம்”, என்றபடி அவன் பிரிட்ஜ்ஜய் திறந்து மாவை எடுக்க……….

அவசரமாக முகம் கை கால் கழுவி சட்டினி ஆட்டினாள் மாலதி. அதற்குள் தோசை சுட்டு முடித்திருந்த ராம், சாப்பிட்ட பிறகே நிமிர்ந்தான்.

ராம் பசி தாங்க மாட்டான். அதனாலேயே சுவாமிநாதன் மேல் இன்னும் நன்றிக்கடன் அதிகம். தன்னை பசிக்கும் நிலைமைக்கு அவர் விடவில்லை என்று. பிறகு அவன் மாலதிக்கு தோசை வார்க்கும் போது அவன் லக்ஷ்மி பாட்டி வந்தார்.

“என்ன ராமா? இதெல்லாம் நீ பண்ணிட்டு இருக்க. பொட்டப்புள்ளையா லட்சணமா நீ செய்ய மாட்ட”, என்று மாலதியை கடிய……..

“இப்போ தானே பாட்டி அவ வந்தா அவ சாப்பிடட்டும் விடு. சாப்பிடும் போது ஒண்ணும் சொல்லாத”,

“தங்கச்சிய ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டியே. பார்க்கறேன் நாளைக்கு பொண்டாட்டி வந்தா என்ன பண்ணுவன்னு”.

“அவ பண்ணுனா பார்க்கிறேன்……… இல்லை, அவளுக்கும் சேர்த்து பண்ணிடறேன்”, என்றான் விளையாட்டு போல………

“கிழிஞ்சதுடா நீ குடும்ப நடத்துற லட்சணம்”, என்று நொடித்தார் லக்ஷ்மி பாட்டி.

“என்ன கிழிஞ்சது”, என்று கேட்டுகொண்டே மனோகரன் உள்ளே நுழைந்தான்.

“நீயே கண்டுபிடியேன் மனோ”, என்றாள் மாலதி.

அதற்கும் திட்டு விழுந்தது பாட்டியிடமிருந்து…………. “ஏண்டியம்மா, ராமை எவ்வளவு அழகா அண்ணான்னு கூப்பிடுற. இவனை மட்டும் என்னடி பேர் சொல்லி மனோங்கற”,

அதற்குள், “கண்டுபிடிச்சிட்டேன்”, என்று கத்தினான் மனோ.

“என்ன”, என்பது போல எல்லாரும் பார்க்க……..

“என்ன கிழிஞ்சதுன்னு கண்டுபிடிச்சிட்டேன்”,

“பாட்டி எல்லோரையும் பேச்சுல கிழி கிழின்னு கிழிக்குது”, என்றான். ராமிற்கும் மாலதிக்கும் சிரிப்பு வந்தது. 

“போடா எடுபட்ட பயலே, வந்துட்டான் நாட்டாமை பண்ண. உனக்கு போய் நான் பேசினேன் பாரு”,

“அய்யே நீ பேசிட்டாலும் தான். எதுக்கும் மெதுவா பேசு. உன் பையன் காதுல விழப்போகுது”, என்றான் மனோ.

“எனக்கென்ன அவனை பார்த்து பயமாடா”, என்று பாட்டி கேட்க……..

“இரு நாளைக்கு காலைல உன் பையன் உட்கார்ந்து பேப்பர் படிக்கும் போது…….. நான் மாலதியை விட்டு கேட்க சொல்றேன்”, என்றான் மனோ.

அந்த வீட்டிலேயே அவர்களின் தாய் மாமாவுடன் பேசும் ஒரே ஜீவன் மாலதி தான்.

“வயசான காலத்துல என்னைய அவன் கிட்ட திட்டு வாங்க வைக்க போறியா”, என்று அழுவது போல லக்ஷ்மி பாட்டி கேட்க………

“ஏய் கிழவி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா………. கண்ணை கசக்குவியா நீ. அப்புறம் எங்கம்மாவை நான் மட்டும் தான் அழ வைப்பேன்……… நீங்க யாருடா அழ வைக்கன்னு உன் பையன் வந்துடப்போறாறு”, என்று மறுபடியும் தன் தாய் மாமனை மனோ நக்கலடிக்க……. லக்ஷ்மி பாட்டிக்கே சிரிப்பு எட்டி பார்த்தது. 

“போதும் விடு மனோ”, என்று அவன் அண்ணன் அதட்டல் போட்ட பிறகே விட்டான் மனோ. அண்ணன் சொல் கேட்டு நடக்கும் தம்பி.  அண்ணன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மறு பேச்சு என்பது கிடையாது மனோகரனிடம். ஆனால் மாலதி நன்றாக அண்ணனிடம் வாயடிப்பாள். தனக்கு சரி என்று படுவதை தைரியமாக பேசுவாள்.

அதனால் தான் அவள் மட்டும் தன் தாய்மாமாவுடன் பேசுவாள். ஆண் மக்கள் இருவரும் தவிர்த்து விடுவர். ஊருக்குள் பெரிய மனிதர். அவரின் சொந்தம் என்பதே ஒரு மரியாதையை ஏற்படுத்தி……….. இவர்கள் மூவரும் தனியாக இருந்தாலும் ஒரு பாதுகாப்பை கொடுத்தது.

இத்துணை முஸ்தீபுகளையும் தாங்கிய அவர்களின் தாய்மாமா சுந்தரேசன் நல்லவரே. ஆனால் ரொம்ப நல்லவர் இல்லை. ஏனென்றால் சற்று அதிகமாக சுயநலம் பிடித்தவர். தான்………. தனது……. தன்னுடைய…….. இவையே அவரின் தாரக மந்திரம். அதிலிருந்து இம்மியும் பிசக மாட்டார்.

ஆனால் யாராவது அவரிடம், “நீங்க தாங்க எல்லாமே” என்று அஹா, ஓஹோ, என்று அவரை புகழ்ந்தாலோ……………. இல்லை………….. “உங்களை நம்பி தாங்க இருக்கேன்”, என்று அவரே சரணாகதி என்று சொன்னாலோ அப்படியே மனம் இளகி விடுவார். அவருடைய முரட்டுத் தோற்றம் இந்த ரகசியங்களையெல்லாம் வெளியே தெரியாமல் காப்பாற்றி கொண்டிருந்தது.        

ராமையும் அவனின் தம்பி தங்கையையும்……….. “பிடிக்கும்”, என்ற வட்டத்துக்குள் கொண்டு வர மாட்டார். அதே சமயம் “வெறுப்பும்”, இல்லை. தன் தாய் இறந்த போது ராம் அவரிடம் உதவி கேட்டிருந்தால் செய்திருப்பாறோ என்னவோ.

அவன் கேட்க அவசியமில்லாமல் சுவாமிநாதன் எல்லாவற்றையும் செய்துவிட ……….. நிறைய கௌரவம் பார்க்கும் இவர்………… விட்டது தொல்லை என்று ஒதுங்கிகொண்டார்.

“நீங்க தான் மாமா எங்களுக்கு எல்லாம்”, என்று ராம் அவரின் கால்களில் விழுந்திருந்தால் நிலைமையே வேறாகி இருந்திருக்கும். ராம் அப்படி எல்லாம் செய்யாததால் அவர் அவர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்களை காணும் நேரமெல்லாம் ஏதாவது அதட்டி உருட்டி மிரட்டி கொண்டிருப்பார், நான் தான் பெரியவன் என்று காட்டிக்கொள்ள.

ராமிற்கும், மனோகரனுக்கும், மாலதிக்கும் அவரின் ஒதுக்கமும் அவரின் பேச்சும் பழகி விட்டதால் பெரிதாக அவர்களிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்காது.  அவர்களுக்கு பழகி விட்டது. ராம் அவரிடம் போய் நின்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். இவன் நிற்காததால் இவனுக்கும் தெரியவில்லை.

சுந்தரேசன்னுக்கு இரண்டு மக்கள். பெண் ரமா திருமண வயதில் தான் இருந்தாள். அவளுக்கும் ஒரு வயது மூத்தவன் மோகன் பி.இ கடைசி வருடத்தில் இருந்தான். மனோகர் படிக்கும் அதே கல்லூரியில் படித்துகொண்டிருந்தான்.

ரமா கல்லூரிப் படிப்பு படிக்கவில்லை. அவளுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. பன்னிரண்டாவதுடன் அவளை நிறுத்தி விட்டார் அவள் தந்தை. அவளுக்கு திருமணத்திற்கு பார்த்துகொண்டிருந்தார் சுந்தரேசன். அவர் மனைவி லீலாவதி கணவர் சொல்லே மந்திரம் என்று பழக்கப்டுத்தப்பட்டவர். அதை மீறி அவரிடம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.

அவர்கள் மூவரும் உண்டு பேசிகொண்டிருக்கும் போதே பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. இந்த வரன் சற்று தகையும் போல ராமிற்கு தோன்றியது. சரி என்று சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் யோசனையில் இருக்கும் போதே பெண் வீட்டில்  அவசரப்பட்டனர் ,“பத்திரிகை அடிக்க எப்போது கொடுக்கலாம்”, என்று.

“என்னது சரின்னு மட்டும் தான் சொல்லியிருக்கேன். இன்னும் பொண்ணை கூட பார்க்கலை. அதுக்குள்ள பொண்ணு வீட்ல நாள் குறிக்கக்கறாங்களா. எதுக்கு இப்படி அவசரப்படறாங்க. சுவாமிநாதன் மாமாவுக்கு வேற உடம்பு சரியில்லை. யார்கிட்ட கேட்கலாம்” என்று ராமின் யோசனைகள் ஓட………..  

ராம் யாரிடம் கேட்பது என்று யோசிக்கும் போதே லக்ஷ்மி பாட்டி ஒரு அதட்டல் போட்டார்.

“கல்யாண வேலை உனக்கு அதிகமா தெரியாது. நீ தடுமாறுணியன்னா பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இளப்பமா போய்டும். அப்புறம் சீரையெல்லாம் கொறைச்சிரப்போராணுங்க. நீ உங்க மாமாகிட்ட போய் எல்லாம் முன்ன நின்னு நீங்க தான் பண்ணிகொடுக்கனும்னு கேளு”, என்று தன் மகனிடம் கேட்க சொல்லி ஊக்கினார்.

ராமும் யோசனை செய்தான். சுவாமிநாதனும் அதையே சொல்லி அனுப்பி இருந்ததால் ஒரு முறை கேட்போம்………… செய்தால் செய்யட்டும், இல்லையென்றாலும் பரவாயில்லை………… என்று நினைத்தவன்……….. “சரி வா கிழவி”, என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

“அப்பவும் உனக்கு குசும்பு போகலை…………. என்னை கிழவிங்கற”,

“பின்ன நீ என்ன குமரியா”, என்றான் மனோ.

“டேய் நீ சும்மாயிருடா”, என்று அவனை அதட்டிய ராம்………… “அதெல்லாம் செல்லமா சொல்றது பாட்டி………. கண்டுக்காத வீட்ல மாமா இருப்பாறா”,

“இருப்பான் அதெல்லாம்”, என்று பாட்டி சொல்ல

“நீயும் வா மாலதி”, என்று அவளை துணைக்கழைத்துக் கொண்டு கிளம்பினான்.

தனது மாமாவின் வீட்டிற்குள் பாட்டியோடும் மாலதியோடும் நுழைந்தான். பெரிய மீசை வைத்து ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருந்த சுந்தரேசன்………. ஹாலிலேயே உட்கார்ந்து நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார் . இவர்களை பார்த்ததும் ஆச்சர்யமானவர்………..

“எதுக்கு வந்திருக்கீங்க”, என்பது போல ஒரு பார்வையை வீசினார்.

அதற்குள் வெளியே வந்த லீலாவதி……….. “வா ராம், வா மாலதி”, என்றவர் தன் கணவன் அவர்களை வரவேற்கவில்லையா என்பது போல பார்க்க………… “வாப்பா, வாம்மா”, என்றார்.

“எப்படியிருக்க ராம்”, என்று லீலாவதி விசாரிக்க………

“சுவாமிநாதன் எப்படி இருக்கான்”, என்று என்று சுந்தரேசன் கேட்டார்.

“நல்லயிருக்கார் மாமா”, என்றான்.

பிறகு அவர் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க… இவனும் மெளனமாக அமர்ந்திருந்தான்.

அதற்குள் டீ எடுத்து வந்தார் லீலாவதி. மாலதி ரமாவை பார்க்க உள்ளே சென்றாள்.

முயன்று பேச்சை ஆரம்பித்தான் ராம். “அது மாமா……….. எனக்கு கல்யாணம் நிச்சயமாகற சூழ்நிலையில் இருக்கு”, என்றான்.

மேலே சொல்லு என்பது போல பார்வையை மட்டுமே பார்த்திருந்தார்.

“சுவாமிநாதன் மாமா தான் முன்ன நிப்பாங்க……….. இருந்தாலும் நீங்க சொல்லாம எப்படி சரின்னு சொல்றதுன்னு உங்ககிட்ட கேட்கலாம்னு வந்தேன்”, என்றான் நைச்சியமாக.

“இதுவரைக்கும் என்கிட்ட கேட்டு தான் எல்லாம் செஞ்ஜீங்களோ”, என்றார் அவனை பார்த்து காரமாக………

பொறுமையாக அவரை கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்த ராம்……… “தப்பு தான் மாமா  மன்னிச்சிக்கங்க. அப்போ நான் சின்ன பையன் எதுவும் தெரியாம செஞ்சிருக்கலாம். இப்போதான் விவரம் புரிஞ்சது. புரிஞ்சதுக்கு அப்புறம் எங்க வீட்ல வர்ற முதல் நிகழ்வு. உங்களை கேட்காம எதுவும் செய்ய கூடாதுன்னு……….. அதான் மாமா உங்களை தேடி வந்துட்டேன்”, என்றான் மிகவும் பணிவாக…

இவ்வளவு பணிவாக தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டு பேசும் பையனிடம் என்ன பேசுவது என்று புரியாதவராக…….. “யார் பொண்ணு வீடு”, என்று விசாரித்தார்……….. விவரம் சொன்னான்.

“பொண்ணு பார்த்தாச்சா…………”,

“போட்டோல பார்த்தது தான். நேர்ல இன்னும் பார்க்கலை”. ராம் நிஜமாகவே நேரில் பார்க்கவில்லை. குடும்பம் சரிவரும் போல தோன்ற சரியென்று விட்டான். பெண்ணும் மிக அழகு என்று சொல்ல முடியாது. பார்ப்பதற்கு சுமாராக இருந்தது. 

ராமிற்கு ஒரு பெண்ணின் தோற்றத்தை வைத்து வேண்டாம் என்று சொல்வதா. தங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் தங்களுக்கு எப்படி வலிக்கும் என்று பெண்ணின் கோணத்தில் இருந்து பார்த்து சரியென்று விட்டான். 

அதுவுமில்லாமல் பெண்ணின் அழகு அவனுக்கு முக்கியமில்லை. அவள் தங்கள் குடும்பத்தோடு ஒத்துப்போக வேண்டும். தன்னையும் தன் தம்பி தங்கையையும் பிரித்துவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்தான். அது சரி என்று தான் சொன்னான் இன்னும் வேறு எதுவும் பேசவில்லை அதற்குள் அவர்கள் திருமணத்திற்கு அவசரப்படுவதை பார்த்தால் என்னவோ மாதிரி இருந்தது.

சுமாராக இருக்கும் பெண்கள் குடும்பத்தை பிரிக்க மாட்டார்கள் என்று அவனுக்கு யார் சொன்னார் என்று தெரியவில்லை.      

“நேர்ல பார்க்காம மேல பேசவே முடியாது. முதல்ல பொண்ணை பார்க்கலாம். என்ன சரியா?”, என்றார் சுந்தரேசன். 

“நீங்க எப்படி சொன்னாலும் சரி மாமா”,

“சரி, எனக்கு போன் போட்டு குடு பேசறேன்”, என்றார்.

அவருக்கு போன் செய்து கொடுத்தான்.  

பெண்ணினுடைய அப்பாவினடத்தில் பேசியவர்…………… பெண் பார்ப்பதை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டார்.

“என்னங்க பத்திரிகை அடிக்க கொடுக்கலாம்னு இருக்கோம். நீங்க இப்போ போய் பொண்ணு பார்க்கறதை பத்தி பேசறீங்க”,

“ஒரு நிமிஷம் இருங்க”, என்றவர்……….. “என்னப்பா பத்திரிக்கை அடிக்கறதை பத்தி பேசறாங்க….. எல்லாமே முடிவாயிடுச்சா……… தேதி எல்லாம் குறிச்சாச்சா”,

“எனக்கு தெரியலை மாமா……… நான் இது சரிவரும் போல சம்மதம்னு தான் சொன்னேன். அதுக்குள்ள அவங்க பத்திரிகை அடிக்கறதை பத்தி பேசறாங்க, சுவாமிநாதன் மாமா தான் முன்ன நின்னார் ”, என்றான். 

“அவன் கிடக்கிறான் சொந்தக்கராங்களை அண்ட விடாத பய. அவனுக்கு என்ன தெரியும் முறைமை எல்லாம். ஏதோ பொண்டாட்டி போனதுக்கு அப்புறம் தான் ஊர்பக்கம் அடிக்கடி வந்து போறான். அவன் பேச்சை பேசாத”, என்றார் சுள்ளென்று.

மனம் வருந்தினாலும் எதிர்த்து பேசினால் இன்னும் தான் பேசுவார் என்றுணர்ந்து அமைதியை கடைபிடித்தான்.

பிறகு அவனை விடுத்து போனில் பேசியவர்…………. “பொண்ணை ஒரு தரம் பார்க்கறதுல என்னங்க இருக்கு. சொந்த பந்தம் எல்லாம் பார்க்கணும்னு சொல்றாங்க”, என்றார்.

எதிர் முனையில் இருந்தவர் சற்று யோசித்து……… “நீங்களே சொல்லுங்க”, என்றார்.

பிறகு நாளை மறுநாள் பெண் பார்ப்பது……….. பின்பு எல்லாம் முடிவு செய்வது என்று முடிவானது.

சிறிது தொழிலை பற்றி விசாரித்து பேச்சு வளர்த்தார் அவன் மாமா. அவன் தாய் தந்தை போன பிறகு மிகவும் சகஜமாக பேசுவது இப்போதுதான். ராம் அதை உணர்ந்தான். அவர் இவ்வளவு சகஜமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

புதிதாக புதுபிக்கபட்ட உறவு. அது தந்த உற்சாகம், அவர் சொல்வது அனைத்திற்கும் ராமை தலையாட்ட வைத்தது.

மாலதி வந்து சைய்கையால், “போகலாம் அண்ணா”, என்று சமிஞ்சிகை காட்டிய பிறகு………. “நாங்க கிளம்பறோம் மாமா”, என்று எழுந்தான் ராம்.

இத்தனை நேரமாக வாய் திறவாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மி பாட்டி……….. அவன் எழுவதற்காக காத்திருந்தது போல………… “நல்ல விஷயம் பேசியிருக்கீங்க……… அத்தை கிட்டயும் மாமா கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு போப்பா”, என்று சொன்னார்.

வேறு வழியில்லாமல் அவர்கள் இருவரையும் நிற்க வைத்து காலில் விழுந்து இவன் வணங்க……….. அந்த செய்கையில் இவன் மாமா கொஞ்சம் இவன் புறம் மனதால் விழுந்தார்.

எழுந்தவன்…………. “நீங்க தான் மாமா முன்ன நின்னு எல்லாம் செய்யனும். நீங்க தான் மாமா எங்களுக்கு எல்லாம். இத்தனை நாளா அதை உணராம இருந்துட்டோம்…………. மன்னிச்சிடுங்க ”, என்று சொன்னவுடனே இன்னும் விழுந்தார். அவர்களுக்குள் இருந்து வந்த பனித்திரை விலகியது.

“அதுக்கென்ன ராம்………… ஜோரா செஞ்சிடலாம்”, என்று விடைகொடுத்தார்.

இவர்கள் பேசியது அனைத்தையும் மோகன், ரமா, லீலாவதி எல்லாரும் வாயைத்திறந்து பார்த்திருந்தனர். அவர்களோடு அதிகம் பேசுவதைக்கூட விரும்பாத தந்தையா இப்படி என்று வாயை பிளந்து பார்த்திருந்தனர்.   

மாலதிக்கு கேட்கவே வேண்டாம், மயக்கம் போடாத குறை.             

 

Advertisement