Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

ராம் அப்போது தான் தான் வைதேகியிடம் அதிகமாக பேசிவிட்டோம். அந்த பேச்சு முறையான பேச்சும் அல்ல. அது கட்டாயம் அவளை நோக வைத்திருக்கும் என்று அவன் வருந்திக்கொண்டு இருந்தான். அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் வைக்காதே என்று எத்தனை முறை உனக்கு சொல்வது என்று அவனின் மனது அவனை குற்றம் சாட்டியது.

அவள் வேலைக்கு செலக்ட் ஆனதை சொல்லாதது தவறு தான். ஆனால் நீ இன்று பேசியது அதற்கெல்லாம் பல மடங்கு அதிகம். ஏற்கனவே சரி செய்ய முடியாத தவறொன்றை செய்துவிட்டு அதற்கே வருந்திகொண்டிருக்கிறாய். இப்போது தான் அவள் சற்று அதை மறந்தது போல தெரிந்தது. இன்று உன் பேச்சினால் ஆறாத ரணத்தை அவளின் மனதில் உருவாக்கி விட்டாய். புண் ஆறினாலும் அதன் வடு நிச்சயம் மறையாது. என்ன செய்ய போகிறாய்.   

அதுவுமில்லாமல் காலையில் தான் சுவாமிநாதனிடம் வைதேகி எப்படி இருந்தாலும் பார்த்துக்கொள்வேன் என்று சொல்லிவிட்டு, இப்போது அவளிடம் இப்படி பேசிவிட்டாய்.

அதை அவள் தன் தந்தையிடம் சொன்னால் அவர் உன்னை பற்றி என்ன நினைப்பார். இதையெல்லாம் எண்ணி சற்று பதட்டமானான். 

அந்த நேரம் தான், “ராம்”, என்ற வைதேகியின் பதட்டமான அழைப்பு கேட்டு விரைந்து சென்றான்.

அவனுக்கு பார்த்தவுடனே தெரிந்து விட்டது அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார் என்று. எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டான். அவன் அப்படியே சமைந்து நிற்பதை பார்த்த மனோகர், “அண்ணா”, என்று உலுக்க. விரைந்து சென்று பக்கத்தில் இருந்த நர்சை கூப்பிட்டுவர. அவரும் அதையே உறுதி செய்து சென்றார். 

அவனின் பார்வை வைதேகியை நோக்கி செல்ல. அவள் கண்களில் இருந்து நீர் பெருக கல்லாய் சமைந்து நின்றாள்.  

அவளின் அருகில் போக அவனுக்கு தைரியமில்லை. அவளின் நிலை பார்த்து தடுமாறி நின்றான்

ராமுட னான சண்டை .அதை தொடர்ந்த தந்தையின் இறப்பு. வைதேகி வெளியே மட்டுமல்லாமல் உள்ளுக்குள்ளும் நொறுங்கி போனாள். கண்களில் மட்டும் நீர் பெருகிக்கொண்டு இருந்தது மற்றபடி அசைவில்லாமல் நின்ற இடத்திலேயே நின்றாள்.

சுவாமிநாதனை பார்ப்பதை விட எல்லோர் பார்வையும் வைதேகி மேல் தான் இருந்தது.

சரிந்து அமர்ந்துவிட்டாள். இனி அவர் இந்த உலகில் இல்லை. இனி தனக்கு இந்த உலகில் எவரும் இல்லையா. நான் தனியாளா. அப்பா என்னை தனியாக விட்டு விட்டு சென்றுவிட்டாரா. ஏன் இப்படி செய்தார். நினைக்க நினைக்க நெஞ்சு விம்மி வெதும்பியது. 

ஒரு க்ஷணமே தடுமாறி நின்றான் ராம். உடனேயே மேலே செய்ய வேண்டிய காரியங்களை பற்றி கேட்க சுந்தரேசனை பார்க்க ஓடினான்.

அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவருக்கும் அதிர்ச்சியே. அவர் உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் தகவல் சொல்லி. இனி ஆக வேண்டிய சடங்குகளை முடிந்தால் அவர்களையே செய்து கொள்ள சொல்லி. தாங்கள் செய்ய வேண்டியதை பிறகு செய்கிறோம் என்று சொல்லிவிட்டு அவரும் விரைந்து வந்தார்.

உடலை அவர் வாழ்ந்த அவரின் சென்னை வீட்டிற்க்கே கொண்டு செல்வது என்று முடிவு செய்து அவர் வைதேகியிடம் கேட்டார். 

“என்னம்மா? என்ன செய்யலாம்?”, என்று.

அவள் மலங்க மலங்க விழித்தாள்.

“நல்லா வாழ்ந்தவன்மா. உங்க வீட்டுக்கே கொண்டு போயிடலாம்”, என்றார்.

முயன்று மனதை ஒருமைப்படுத்தி அவருக்கு பதில் சொன்னாள்.

“உங்களுக்கு எப்படி எல்லாம் செய்யனும்னு தோணுதோ செய்ங்க பெரியப்பா. எனக்கு தனி அபிப்பிராயமெல்லாம் எதுவும் இல்லை”,   

எல்லோருக்கும் தகவல் சொல்ல ஆரம்பித்தனர். அவரின் உடலையும் அவரின் சென்னை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

மறுநாள் காலை எடுப்பது என்று முடிவானது.

ஒரு வாறன இயந்தரகதியில் இருந்தாள் வைதேகி, துக்கம் நெஞ்சை அழுத்தியது. வருகிறவர்கள் எல்லாம் அவளிடம் தான் துக்கம் விசாரித்தனர். நிம்மதியாக அழ கூட முடியவில்லை.

அவளின் தந்தைக்கு இருக்கும் ஒரே நேரடி உறவு அவள்தான் என்பதால் மாற்றி மாற்றி ஆட்கள் வந்து அவளிடம் துக்கம் விசாரித்தனர். எல்லோருக்கும் பதிலளித்து ஓய்ந்து போனாள். மாலதி அவளை விட்டு க்ஷ்ணமும் அகலவில்லை. அவளிடம் எதுவும் பேசவில்லை, ஆனால் அவளைவிட்டு நகரவில்லை. 

ஏதாவது உண்ண கொடுத்தாலும் வைதேகி உண்ணவில்லை. அவளை கொஞ்சமாக உண்ண வைப்பதற்கு உள்ளாகவே மாலதிக்கு மிகுந்த சிரமம் ஆகிவிட்டது.

அங்கே ராமால் எதுவும் செய்யமுடியவில்லை.  

இரவு முழுவதும் அனைவரும் விழித்தே இருந்தனர், யாரும் உறங்கவில்லை.

ராமால் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளனாகவே பார்க்க முடிந்தது. விட்ட வார்த்தைகள் அவனை வைதேகியை நெருங்க விடாமல் தடுத்தன. வைதேகியும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சொல்ல வேண்டிய ஒன்றிரண்டு வார்த்தைகள் மாலதியின் மூலமாகவே சென்றது.

அவருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை ராமே செய்வது என்று முடிவு செய்து வைதேகியிடம் கேட்க. அவளுமே சரியென்று தான் சொன்னாள். ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. அவளுக்கு தெரியும் ராமை தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவன் தான் தனது தந்தையின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று.

அதனால் ராம் செய்வதா அவரின் பங்காளிகள் செய்வதா என்ற கேள்வி எழுந்தபோது ராம் தான் என்று சொல்லிவிட்டாள்.

அந்த மட்டிலும் ராமிற்கு நிறைய நிம்மதி.

சிறப்பாக அவளின் தந்தையை வழியனுப்பி கொடுத்தார்கள். ராம் சடங்குகளில் சமப்ரதாயங்களில் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்தான்.  யாரும் குறை என்று ஒரு சொல் சொல்லும்படி எதுவுமில்லை. திருமண வீட்டிலும் துக்கம் நிகழ்ந்த வீட்டிலும் தான் அது இது நொட்டை நொள்ளை என்று ஆயிரம் பேச்சுகள் எழும். அதற்கெல்லாம் சிறிதும் இடம் கொடுக்காமல் எல்லா காரியங்களும் நடந்தன. சுந்தரேசன் எல்லாவற்றையும் மேற் பார்வை பார்த்துக்கொண்டார்.

எல்லாம்  முடிந்து எல்லாரும் ஆய்ந்து ஒய்ந்தனர்.

சொந்தங்கள் எல்லாம் அவரவர் வீடு நோக்கி சென்றுவிட. எஞ்சியிருந்தது ராம், மாலதி, மனோகர் மட்டுமே வைதேகியுடன்.

யாரோடும் யாரும் பேசிக்கொள்ளாத மெளனம் நிலவியது. மனோகரும் மாலதியும் கூட அமைதியாகவே இருந்தனர். அவசியமான ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினர்.

ஒரு வாரம் இப்படியே ஓடியது. வைதேகியின் பேச்சு மாலதியிடம் மட்டுமே என்று சுருங்கி விட்டது. 

ராம் அவளுக்கு சமாதானம் சொல்ல வேண்டும். தான் நடந்து கொண்டதற்கு பேசியதற்கு எல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்க தயாராக தான் இருந்தான். வைதேகி அதற்கு இடமே கொடுக்கவில்லை.

அவளுடைய ரூமிற்கு கூட இரவில் அவனை விடவில்லை. அவனுக்கு முன்னமேயே சென்று உறங்குவதற்கு தாளிட்டு கொள்வாள். மறுபடியும் வலுக்கட்டாயமாக எந்த செயலையும் செய்வதற்கு ராமின் மனம் இடம் கொடுக்கவில்லை.

அவன் ஹாலிலேயே படுத்துக்கொண்டான். மாலதியும் மனோகரும் உறங்கிய பின் உறங்குவான். அவர்கள் எழுவதற்கு முன் எழுந்துக்கொள்வான்.

அவனின் மனம் அவன் செய்த எல்லாவற்றிற்கும் அவனை சாடிக்கொண்டு இருந்தது. அவன் மறுபடியும் ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிக்கொண்டு இருந்தான். அவளின் தந்தையிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்து அதை கடைபிடிக்க முடியாமல் பொறுமையை இழந்து வாய் விட்டு விட்டோமே என்றிருந்தது.

தான் ஒரு நல்ல கணவன் இல்லையோ என்று தோன்றியது. அவனவன் மனைவிக்காக எவ்வளவு செய்கிறார்கள், என்னால் அவளை பொறுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று இருந்தது.  

சாதாரணமாகவே தன்னை விலக்கி வைக்கும் வைதேகி, இந்த தன் வார்த்தைகளுக்கு பிறகு தன்னிடம் சரியாக நடந்து கொள்வாள் என்பதில் அவனுக்கு நம்பிக்கையேயில்லை. இப்போது அவனின் பெரிய கவலை எல்லாம் அவள் தன்னை விட்டு பிரிய எந்த முடிவும் எடுத்துவிடக்கூடாது என்பது தான்.       

இந்த ஒரு வாரமும் வைதேகி சுய அலசலில் தான் ஈடுபட்டு இருந்தாள். என்ன யோசித்தாலும் அவளை பொறுத்தவரை அவளின் செய்கைகள் சிறிது தப்பாக அவளுக்கு தோன்றியது தான், ஆனால் மன்னிக்க முடியாத பெரிய தப்பாக தெரியவில்லை. திருமணத்திற்கு முன்பே அவள் தெளிவாக உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று தான் சொல்லியிருக்கிறாள். தான் ஒண்ணும் அவனை பிடிக்கிறது என்று சொல்லி ஒன்றும் செய்யவில்லையே என்றே யோசித்தது.

யாரிடமும் பகிரவும் முடியவில்லை. யாரிடமும் பகிரவும் பிடிக்கவில்லை. அவளை பொறுத்தவரை தன்னுடைய வாழ்க்கை சரியில்லை என்று சொல்வது அவளுக்கே கேவலமாக தோன்றும் ஒரு விஷயம். மனம் சொன்னது உன்னால் உன்னுடைய வாழ்கையை சரி படுத்துக்கொள்ள முடியாதா என்று.

ஏன் வைதேகி அவனை அனுசரித்து போய்விட்டேன். இப்போதைக்கு அவனை விட்டால் இந்த உலகத்தில் உனக்கு யாரும் இல்லை என்ற உண்மையையும் முன் வைத்தது.

முடியும் தான். அவள் மனதுவைத்தாள் அவளின் வாழ்க்கையை நிமிடத்தில் சரி பண்ண முடியும் தான். ஆனால் பிடிக்கவில்லை. ஏன் நான் என்னுடைய வாழ்கையை சரிபடுத்த வேண்டும் என்ற வீம்பு இருந்தது. எனக்கு இது தேவையில்லை என்று சொல்லிக்கொண்டாள்.

சில சமயம் நாம் செய்வது தவறு என்று நமக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் செய்வோம். அதற்காக வருத்தப்படவும் மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலையில் இருந்தாள் வைதேகி.

ராம் அவளிடம் பேச வரும்போதெல்லாம் அவனை தவிர்த்துவிடுவாள். அவன் தன்னிடம் நிச்சயமாக சமாதானம் பேசுவான் என்பது அவளுக்கு தெரியும். அதை கேட்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை.

அவள் ஈடுபட்ட சுய அலசலில் அவளுக்கு கிடைத்த முடிவு. அவள் செய்தது, செய்வது, சரியோ! தவறோ! எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், அவளுக்கு ராமுடன் வாழ்வதில் இப்போதைக்கு விருப்பம் இல்லை.

இது தான் உன் நிரந்தர முடிவா, உன்னால் தனியாகவே வாழ்க்கையை ஒட்டிவிட முடியுமா. முடியாதென்றால் அப்போது இவனை விட்டு பிரிந்து நீ இன்னொரு திருமணம் செய்து கொள்வாயா என்று தயவு தாட்சண்யமின்றி, மனம் கேட்க, அதற்கும் அவளிடம் பதில் இல்லை. 

ஒரு திருமணத்தினால் நான் பட்டுக்கொண்டிருக்கும் மனவுளைச்சலே போதும். மறுபடியும் ஒரு திருமணமா என்று அவளின் மனமே அவளுக்கு அதிர்ச்சியை காட்டியது.

இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவிலும் நினைக்காதே என்று அவளின் மனதை அவளே சாடினாள். இப்படி குழப்பம், குழப்பம், குழப்பம், என்று மனம் முழுக்க குழப்பம் இருந்தாலும் அவள் தெளிவாக இருந்த ஒரு விஷயம் ராமை பிரிவது தான்.

என்ன வார்த்தை பேசிவிட்டான். என் அப்பாவிற்காக தான் என்னை பொருத்துக்கொண்டானா. நான் இவனை பொருத்துக்கொள்வது போய் இவன் என்னை பொருத்துக்கொண்டனா. என்ன திமிர்.

அதுவும் என்னோடு. என்னோடு. என்னை என்னவெல்லாம் செய்துவிட்டு. இவன் என்னவோ நல்லவன் மாதிரி பேசுகிறான். கண்களில் அவளையறியாமல் நீர் தளும்பியது.

அழக்கூடாது நீ எதற்கும் அழக்கூடாது வைதேகி என்று அழுகையோடே சொல்லிகொண்டாள். ஏன் எனக்கு மட்டும் இப்படிஎல்லாம் நடந்தது.

அன்றே நான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அன்று தவறியதால் இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. இப்போது மட்டும் என்ன அவன் எனக்கு வேண்டாம்.   முடிவு எடுத்து விட்டாள்.

ஆனால் எப்படி செயல்படுத்துவது என்று தான் தெரியவில்லை. நான் உன்னுடன் தான் இருப்பேன் என்று அவன் சொன்னால் என்ன செய்வது? அவன் பாட்டிற்க்கு இங்கேயே இருந்தால் என்ன செய்வது. அப்போது நான் இந்த வீட்டை விட்டு போவதா? எங்கு போவது?

அப்படி அவன் தன் வார்த்தையை கேட்டு பிரிந்து சென்றாலும் தான் மட்டும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது என்பது நடக்காத காரியம். என்ன செய்வது என்று மனதை போட்டு கசக்கி கொண்டிருந்தாள்.

அதற்கு ஒரு முடிவும் கண்டுபிடித்தாள். எந்தளவு அது சாத்தியம் என்பது அவளுக்கே தெரியவில்லை. இருந்தாலும் அந்த முடிவிற்கு வந்திருந்தால். முடிவு எடுத்த பிறகு தான் சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.

அவள் எடுத்த முடிவு ஏதாவது லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக்கொள்வது, இப்போதைக்கு வேலைக்கு செல்வது, பிறகு என்னசெய்வது என்று பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

அவளின் முடிவில் அவள் ஸ்திரமாக இருக்க வேண்டும். அதிலிருந்து யார் சொன்னாலும் மாறக்கூடாது என்று மனதிற்குள் உரு போட்டுக்கொண்டாள்.

ராமிற்கு அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருந்தது. அவளுக்கு ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்ல முடியவில்லையே என்று மனம் அடித்துக்கொண்டது. அவள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்தது. அவனின் பேச்சிற்கு இன்னும் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும் சரியாக தோன்றவில்லை.

அன்று இரவு அவள் அவளின் ரூமிற்கு போகும் முன்பே அவன் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

எப்போதும் போல உறங்குவதற்காக வந்த வைதேகி அவனை பார்த்ததும் சற்று அதிர்ந்தாள். இவன் எதற்கு இங்கே இருக்கிறான் என்று நினைத்தவள் அதை வாய்விட்டு கேட்கவில்லை. அந்த இடத்தை விட்டு அமைதியாக போகப்போனாள்.

“இரு வைதேகி நான் உன்கிட்ட பேசணும்”, என்றான்.

அவள் நிற்காமல் போகப்போக. இவன் அவளை நிறுத்துவதற்காக வேகமாக அவளின் முன்னே போய் ரூமின் வாயிலில் நின்று கொண்டான்.

“ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் பேசறதை கேளு”, என்றான்.

அவளுக்கும் அவளின் முடிவை சொல்ல வேண்டி இருந்ததால் வேறு வழியில்லாமல் நின்றாள்.

“நான் அன்னைக்கு பேசினது பெரிய தப்பு தான் வைதேகி. என்னை மன்னிச்சிடு, ப்ளீஸ் அதை மனசுல வச்சிகாத”,

அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது பேசக்கூடாது என்று அவள் உரு போட்டு வைத்திருந்தது எல்லாம் நிமிடத்தில் காற்றில் பறக்க. “எப்போ பார்த்தாலும் செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு. அப்புறம் மன்னிப்பு கேட்டா நான் மன்னிச்சிடனுமா.”, என்று எதிர் கேள்வி கேட்டாள்.

“அதுவும் என்னோடது ஒரு தப்பு தான் வைதேகி”, என்றான் ராம்.

சட்டென்று மனதை அடக்கி நிதானத்திற்கு வந்தாள். வைதேகியிடம் ஆவேசமில்லை, ஒன்றுமில்லை, உணர்வுப்பூர்வமாக பேசினாள், “எங்கே தப்புன்னு எனக்கு தெரியலை, உங்ககிட்டயா இல்லை என்கிட்டயா. இனிமே அதை பற்றியே பேசிட்டு இருக்கிறதுளையும் பிரயோஜனம் இல்லை”, என்று நிறுத்தியவள். சிறிது இடைவெளி விட்டு.  

“இனிமே நானும் நீங்களும் சேர்ந்து வாழறது என்னை பொருத்தவரைக்கும் முடியாத காரியம்”, என்றாள்.

இதை கேட்ட ராம் அதிர்ந்தான். இப்படி அவள் சொல்லிவிடக்கூடாதே என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்க அந்த மாதிரியே சொல்லிவிட்டாள்.

ராம் மறுத்து பேச வர.

அவனை தடுத்தவள், “நீங்களும் நல்லவரா இருக்கலாம், நானும் நல்லவளா இருக்கலாம், ஆனா உங்களுக்கு என்னை பிடிக்கனும்னோ எனக்கு உங்களை பிடிக்கனும்னோ எந்த அவசியமும் இல்லை”.

“சில விஷயங்களை வளைக்க முடியாது. வளைக்க நினைச்சா உடைஞ்சிடும். நானும் அப்படி தான், என்னை உங்க இஷ்டத்துக்கு வளைக்கனும்னு நீங்க நினைச்சீங்க, நான் உடைஞ்சே போயிட்டேன்”, என்றாள் கண்களில் நீர் தளும்ப.

ராமிற்கு அவளை பார்க்கவே புதிதாக தெரிந்தாள். எப்போதும் வரும் ஆவேசமான அலட்சியமான பேச்சு இல்லை. நிதானமாக உணர்ந்து பேசினாள். ஆனால் அவள் பேசியதை தான் ஒத்துக்கொள்ள முடியவில்லை. 

“என்னால இப்போதைக்கு உங்களோட சேர்ந்து வாழமுடியும்னு தோணலை. இவ்வளவு நாளா மட்டும் சேர்ந்தா வாழ்ந்தோம்னு நீங்க கேட்கலாம். நான் அந்த சேர்ந்து வாழறதை சொல்லலை. ஒரே வீட்ல கூட என்னால இருக்க முடியாது”,

“உங்களை பார்க்கும்போதெல்லாம் நீங்க செஞ்சதும் உங்க வார்த்தைகளும் தான் ஞாபகத்துக்கு வருது. அது. அது. எனக்கு மூச்சு முட்டுது. எப்படி சொல்றதுன்னு தெரியலை. அந்த நேரம் நான் என்னையே ரொம்ப கீழ்த்தரமா உணர்றேன்”.

பதிலே பேசமுடியவில்லை ராமால்.

“எங்கப்பாக்காக தானே என்னை பொருத்துக்கிட்டீங்க. இனிமே உங்களுக்கு அந்த கஷ்டம் தேவையேயில்லை. ஏன்னா எங்கப்பாவே இல்லை. தெரியலை நான் எடுக்கற இந்த முடிவு தப்பா கூட இருக்கலாம். ஆனா இதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்லை”,

இப்படி பேசுபவளிடம் என்ன சொல்லி சமதானபடுத்துவது என்று ராமிற்கு சுத்தமாக தெரியவில்லை. “உங்கப்பாவுக்காக இல்லை, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு வைதேகி”, என்று அந்த நிமிடத்தில் கத்த வேண்டும் போல தோன்றியது, ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

ஒரே நிமிடத்தில் மந்திரக்கோல் மாறிவிட்டது போல தோன்றியது, அனைத்தையும் மாற்றிவிட்டது. எல்லா தப்பும் அவன் மேல் என்பது போல வந்துவிட்டது. அவனால் அதை ஜீரணிக்கவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

வாய் மூடி மௌனியாகிவிட்டான். ஆத்திரத்தில் கோபத்தில் பேசிய வார்த்தைகள் பிரிவு வரை கொண்டுவந்து விட்டதா.

சிறிது நேரம் என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறியவன். “நம்ம சேர்ந்து வாழ ஒரு முயற்சி எடுத்து பார்ப்போம் வைதேகி”, என்றான்.

“எனக்கு அதுல இஷ்டமில்லை”, என்றுவிட்டாள் முடிவாக.

“நான் உங்கப்பாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன், உன்னை எப்பவும் விடமாட்டேன்னு”,

“ஆக, இப்பவும் எங்கப்பாவுக்கு கொடுத்த வாக்குக்காக தான் சேர்ந்து வாழறதுக்கு சொல்றீங்களா”,

“அது அப்படி இல்லை வைதேகி”, என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவனிற்கு விளங்கவேயில்லை.

“நான் ஹாஸ்டல் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்”, என்றாள்.

இதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவளின் பேச்சை கேட்டவுடன் அவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, வெலவெலத்துப் போனான். “என்ன ஹாஸ்டலுக்கு போவதா? இவ்வளவு சொத்து பத்தை வைத்துக்கொண்டு, கணவன் என்று சொல்லிக்கொள்ள தன்னையும் வைத்துக்கொண்டு, யாருமில்லாதவள் போல ஹாஸ்டலுக்கு போவதா”.

“தன்னுடைய அப்பா அம்மா இறந்த போது தங்கள் மூன்று பேரையும் ஓடி வந்து ஆதரித்த சுவாமிநாதனின் மகள். அவர் இறந்ததும் ஹாஸ்டலுக்கு போவதா. அது மட்டும் நடந்தால் கடவுள் தன்னை என்றும் மன்னிக்க மாட்டார்”. அவன் மனதிற்குள் மாபெரும் பிரளயமே உருவாகியது.    

“நாம பிரியறதுக்கும் நீ ஹாஸ்டல் போறதுக்கும் என்ன சம்பந்தம் வைதேகி”,

“நான் இந்த வீட்ல எப்படி தனியா இருப்பேன்”,

“நீ ஏன் தனியா இருக்க. பிரச்சினை உனக்கும் எனக்கும் தானே. மாலதி உன்னோட இருக்கட்டும். இங்க இருந்து காலேஜ் போயிட்டு வரட்டும்”, என்று சுலபமாக ஒரு வழி கண்டுபிடித்தான்.” நான் இங்க வரவேயில்லை”, அவன் குரலில் அவள் ஹாஸ்டல் போவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. 

“நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்கிறது சாத்தியமில்லை”,

“அப்போ மனோகர் உங்க கூட இருக்கட்டும். அவனுக்கு சென்னையில தானே வேலை”,

“இதெல்லாம் சரிவராது”,

“எல்லாம் சரி வரும். உனக்கு என்னோட தானே பிரச்சனை. நான் இங்க கண்டிப்பா வரமாட்டேன். என்னை நம்பு அதுக்காகவெல்லாம் உன்னை தனியா என்னால விடமுடியாது. இந்த யோசனை உனக்கு சரின்னா ஒத்துக்கோ. இல்லைனா நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். நானும் போகமாட்டேன், உன்னையும் போக விடமாட்டேன்.”, என்றான் கறாராக.

அவன் குரலில் சொன்னதை செய்யும் உறுதி தெரிந்தது.

எப்படியும் தன்னுடைய பேச்சை ராம் தட்டி பேசுவான் என்று எதிர்பார்த்தாள் தான். ஆனால் இப்படி யோசனைகளோடு வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

இதை ஒத்துக்கொள்வதா வேண்டாமா என்று தெரியவில்லை மறுபடியும் குழம்ப ஆரம்பித்தாள்.

ராமிற்கு அவள் ஹாஸ்டல் போவதை இப்போதைக்கு எப்படியாவது தடுத்தே ஆகவேண்டும். அதனாலேயே நான் இங்கே வரவே மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தான். சொல்லப்போனால் வைதேகியை விடும் எண்ணம் எல்லாம் அவனுக்கு கொஞ்சம்மும் இல்லை.

மறுத்து ஏதாவது பேசி அவள் டைவர்ஸ் அது இது என்று ஏதாவது ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்று அவள் போக்கிலேயே அப்போதைக்கு போக முயற்சி செய்தான்.

சமையபுரம் மாரியம்மனுக்கு அவள் டைவர்ஸ் பற்றி பேசாமல் இருந்தால் வந்து மொட்டை போடுவதாக வேண்டுதல் வேறு வைத்தான். மனதிற்குள் அவ்வளவு பயந்து கொண்டிருந்தான் வைதேகி எதுவும் பேசிவிடக்கூடாதே என்று.

Advertisement