Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

“ராமை தனக்கு பிடிக்காதே. இப்போது மட்டும் என்ன”, என்று யோசிக்க தெரிந்த வைதேகிக்கு. அப்போதும் அவனை தனக்கு பிடிக்கிறதா என்று யோசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அவன் தன்னை பாதிக்கிறான் என்ற முடிவிற்கு வந்தாள்.

வைதேகி அவளின் யோசனைகளிலேயே இருக்க. அவளின் யோசனைகளின் நாயகன் அவளை பற்றி சிறிதும் கவலைப்படுபவனாக அவளுக்கு தெரியவில்லை.

ராம் உள்ளுக்குள்ளேயே மிகவும் இறுகி விட்டான். இப்படி ஒரு சூழலில் தான் அவனின் தாய் தந்தை இறந்து அவர்களின் உடலை எப்படி ஹாஸ்பிடலில் இருந்து எடுத்து வருவது என்ற போது இருந்தான்.

அந்த நாளை அவன் மறக்கவில்லை. சுவாமிநாதன் தானாக ஓடி வந்து உதவிய அந்த நாள். அதனாலேயே வைதேகி தன்னை எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் தன் இயல்பையும் மீறி பொருத்துக்கொண்டான்.

இப்போது அதையெல்லாம் கடந்து விட்டான். வைதேகி அவனின் மனைவி என்பதை விட அவரின் மகள் என்பதை நினைவுபடுத்தி கொண்டான். அது அவனையும் மீறி அவளிடம் ஏதாவது பேசிவைக்காமல் இருக்க மிகவும் உதவியது.

அன்றைய பொழுதும் அப்படியே ஓடியது. அன்று இரவும் அவளுக்கு ராமிடம் பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அவள் மாலதிக்கு மருதாணி வைத்துக்கொண்டு இருந்தாள். அதை முடித்து அவளுக்கும் கையில் வைத்துக்கொண்டு வந்து பார்த்தால் அவன் உறங்கி இருந்தான்.

அவன் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறான் என்பது அவளுக்கு தெளிவாக புரிந்து விட்டது. பார்க்கலாம் எவ்வளவு தூரம் தான் போகிறான் என்று அவளின் ராமை பற்றி அலட்சியமாக நினைக்கும் இயற்கை குணம் அவளிடம் தலை தூக்கியது.   

இவளும் பேசாமல் உறங்கி விட்டாள். அதிசயமாக இவள் எழும்முன்னரே அவன் விழித்து வெளியே சென்றிருந்தான்.

அன்று காலையிலேயே சுவாமிநாதன் வந்துவிட்டார். சோர்ந்து தான் தெரிந்தார். அவர் வந்திருப்பதை தெரிந்தவுடனே ராம் வந்துவிட்டான். “எப்படி இருக்கீங்க மாமா, இப்போ பரவாயில்லையா”, என்றான். வைதேகியும் அங்கே தான் இருந்தாள்.

“கொஞ்சம் பரவாயில்லை”,

“இருந்தாலும் ரொம்ப டையர்டா இருக்கிற மாதிரி தெரியறீங்க”,

“அது என்ன பண்ணுது. ஒரொரு நாள் அப்படி இருக்கும். அப்புறம் சரியா போயிடும்”, என்றார் அசால்டாக. 

ராம் அப்போதும் திரும்ப திரும்ப கேட்டான். “எதுக்கும் டாக்டரை பார்த்துவிடலாமா”, என்று. மறுத்துவிட்டார்.

வைதேகியும் சொன்னாள், “அப்பா இங்கே பக்கத்துல இருக்கிற டாக்டர் கிட்டயாவது பார்த்துட்டு வந்துடலாமப்பா”, என்று.

எதற்கும் மசியவில்லை அவர். “நான் நல்லாதான் இருக்கேன்”, என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

அன்று மாலை வரவேற்ப்பு. மறுநாள் திருமணம். மாலை வரவேற்பிற்கு எல்லாரும் தயாராகினர். வைதேகி மிதமான அலங்காரத்தில் ஜொலித்தாள். இருந்தாலும் ராமிற்கு இருந்த கோபம் அவனின் கண்ணை மறைக்க எதுவும் அவன் கண்களுக்கு படவில்லை, முக்கியமாக வைதேகி படவேயில்லை. 

அவன் தன்னை பார்க்க வேண்டும் என்பது போல வைதேகிக்கு தோன்ற. அவளும் ஏழு முறை அவன் இருக்கும் பக்கமாக அந்த புறம் இந்த புறம் என்று நடந்து பார்த்தாள். அவன் திரும்புவது மாதிரி தெரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவளுக்கு சற்று ஏமாற்றமாக தான் இருந்தது.     

என்ன அப்படி நான் செய்துவிட்டேன். வேலை கிடைத்ததை சொல்லவில்லை, அது ஒரு சின்ன விஷயம். அதற்கு எதற்கு இப்படி ஓவராக சீன் போடுகிறான் என்று இருந்தது. அவனின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் கொஞ்சம் அவளுக்கு கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது.

கோபம் இல்லாத சமையத்திலேயே அவனை அலட்சியமாக பேசுபவள் இன்னும் கோபம் வந்தால் எப்படி பேசுவாளோ அவளே அறியாள்.

மாலதியும் திருமணத்திற்கு அழகாக அலங்கரித்துக்கொண்டு இருந்தாள். வைதேகி அவளுக்கு வாங்கின நகையெல்லாம் கொண்டு வந்து கொடுத்திருந்தாள். பெண்களுக்கு அணிமணிகள் அணியும் போது ஒரு அழகு தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். இயற்கை அழகோடு இந்த அழகும் சேர்ந்துகொள்ள மணப்பெண்ணிற்கு சற்றும் குறையாமல் அழகாக மிளிர்ந்தாள் மாலதி. 

அவளின் அண்ணன் திருமணத்தின் போது அவள் நகைகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்த போதே அவளின் மீது இருந்து பார்வையை எடுக்க முடியாதவனாக இருந்தான் மோகன்.

இப்போது இவள் இவ்வளவு நகைகளோடு ஜொலிக்க அவனின் நிலையோ சொல்லவே வேண்டாம். எல்லாரும் சூழ்ந்திருக்கும் போதே யார் கண்ணையும் கவராமல் அருகில் வந்து, “நீ ரொம்ப அழகா இருக்க”, என்று வசனம் பேசி நின்றான்.

மாலதிக்கு மிகுந்த பயமாகப் போயிற்று. யாராவது பார்த்தால் தன்னை தான் தவறாக பேசுவர் என்று தெரிந்தவள். “ப்ளீஸ் என் பின்னாடியே சுத்தாதீங்க, யாராவது பார்த்தா என்னை தான் தப்பா நினைப்பாங்க. வீண்பழி என் மேல தான் வரும். பசங்களை யாரும் எப்பவும் பேசமாட்டாங்க, பொண்ணுங்களை தான் பேசுவாங்க”, என்றாள் டென்ஷனாக.

அவள் நிறைய டென்ஷனாக இருக்கிறாள் என்று புரிந்த மோகன். “ஓகே, இனி பக்கத்துல வரலை. ஆனா தூரமா இருந்து உன்னை தான் பார்ப்பேன். நானே நினைச்சாலும் என்னால பார்க்காம இருக்க முடியலை, இந்த வாக்குறுதியை எவ்வளவு நேரத்துக்கு காப்பாத்துவேன்னும் சொல்ல முடியாது”, என்று சொல்லி போனான்.

அப்போதும் மாலதிக்கு டென்ஷன் இறங்கவில்லை. இவன் என்னடா இப்படி சொல்லுகிறான் என்று இருந்தது. வைதேகி அவளை ராம் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்ததால் இதை எதையும் கவனிக்க வில்லை.

அன்றைய இரவு வரவேற்ப்பு முடிந்து இவர்கள் எல்லாரும் வீடு திரும்பும் போதே மணி பன்னிரெண்டு என்றது.

இனி காலை ஏழரை க்கு முகூர்த்தம். இவர்களை லீலாவதி சீக்கிரம் வரச்சொல்லி இருந்ததால் ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

சுவாமிநாதன் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தான் ராம். அவருக்கு வேண்டியதையெல்லாம் அவனே பார்த்துக்கொண்டான். இரண்டு நாட்களாக என்னை திரும்பியும் பார்க்கவில்லை. என் அப்பாவை எப்படி கவனித்துக்கொள்ளுகிறான் என்று சற்று பொறாமையாக கூட இருந்தது வைதேகிக்கு.

“நீ போம்மா. நான் ராமோட கொஞ்சம் பேசிட்டு அனுப்பறேன்”, என்று அவளை அனுப்பினார்.

அது இன்னும் அவளுக்கு பொறாமையாக இருந்தது.

“ரொம்ப நேரம் ஆகிடுச்சு தூங்குங்க அப்பா”, என்றாள்.

“இல்லைமா, எனக்கு தூக்கம் வரலை, நான் ராமோட பேசிட்டு இருக்கேன்”, என்றார்.

அவள் போனவுடன், “என்ன மாமா”, என்றான்.

“வைதேகிக்கு வேலை கிடைச்சு இருக்காமே ராம் உனக்கு தெரியுமா”, என்றார்.

“ஆமாம் மாமா! சொன்னா!”, என்றான், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை காட்டிக்கொள்ளாமல்.

“நீ என்ன நினைக்கிற, அவ போகட்டும்னா”,

“இதுல நான் நினைக்க என்ன மாமா இருக்கு. அவளுக்கு எப்படி விருப்பமோ செய்யட்டும்”,

“அவளுக்கு வேலைக்கு போகனும்னு ஒரு அவசியமும் இல்லையே ராம்”,

“அவசியம் இருக்கு இல்லைன்றது பேச்சில்லை மாமா. அவளுக்கு கொஞ்ச நாள் போகட்டும்னு ஆசையிருந்தா போகட்டும்”, என்று அவரிடம் அவளை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.

“அவளை நீ அனுசரிச்சு போகறது எனக்கு சந்தோஷம் தான். இருந்தாலும் இனிமேலாவது நீங்க சேர்ந்து இருக்கணும். குழந்தை குட்டிய பெத்து சந்தோஷமா இருக்கணும். நீ இங்கயும் அவ அங்கயும் இனிமேலயும் இருக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. “,

“அவ வேலையை பத்தி சொன்ன போது கூட நான் அதைத்தான் சொன்னேன், சரின்னு தான் என்கிட்ட சொன்னா. அதனால நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வாங்க. ஒண்ணு நீ அங்க வரணும், இல்லைனா அவ இங்க வரணும்”,

“அது ஒண்ணும் பிரச்சனையில்லை மாமா. அவளுக்கு எப்படி பிரியமோ அப்படியே செய்யறேன். இந்த வருஷம் மாலதியும் படிப்பை முடிச்சிடுவா. இப்போ இருந்தே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு தான் இருக்கேன்”,

“மாலதி கல்யாணத்துக்காக நீங்க சேர்ந்து இருக்கறதை திரும்பவும் தள்ளி போடாதீங்க”,

“இல்லை மாமா தள்ளி போடலை. மனோகர் சென்னைக்கு தான் வேலைக்கு வர போறான். மாலதி அங்க இருந்து கூட காலேஜ் வரணும்னா வரலாம். ஏதோ ஒரு நல்ல முடிவா எடுக்கிறோம். நீங்க அதை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க”, என்றான்.

அதன் பிறகும் வெகு நேரம் வைதேகியை பற்றியே ராமிடம் பேசிக்கொண்டு இருந்தார் சுவாமிநாதன்.

“ரொம்ப செல்லமா வளர்ந்துட்டா, அதான் இந்த அடம். அவ எப்படி இருந்தாலும் அவளை நீ விட்டுடக்கூடாது ராம். அவளுக்கு கொஞ்சம் பிடிவாத குணம் ஜாஸ்தி அதான் என் கவலை”, 

“மாமா அவ என் மனைவி மாமா நீங்க இவ்வளவு கவலைப்படறதுக்கு அவசியமே இல்லை” என்று சமாதனப்படுத்தியவன். அவர் எதற்கும் கவலைப்பட வேண்டாம் தான் அவளை நன்றாக பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்தான்.

பிறகு அவனே, “ரொம்ப நேரம் ஆகிடுச்சு தூங்குங்க”, என்று சொல்லி வந்தான்.   

இரவு வைதேகி படுத்த பிறகு தான் ராம் அறைக்குள் வந்தான். படுத்திருந்தாலும் உறங்காமல் காத்திருந்தாள். அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்று. 

அவன் வந்ததும் அவள், “ஏன் ரெண்டு நாளா என்னை பார்த்து ஓடிட்டே இருக்கீங்க”, என்று அவள் ஆரம்பித்தவுடனே.

“தோ பாரு எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. உன்னோட பேசவோ சண்டை போடவோ எனக்கு இப்ப தெம்பில்லை. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம் படு”, என்று சொல்லி அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட கேட்காமல், உடை கூட மாற்றாமல், படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

வைதேகிக்கு நிறைய கோபம் தான். ஆத்திரத்தில் கத்த வேண்டும் போல தோன்றியது. கொஞ்சம் சத்தமாக பேசினாலும் வெளியே கேட்கும் என்பதால் பெரு முயற்சி செய்து ஆத்திரத்தை அடக்கி உறங்க முற்பட்டாள்.

அடுத்த நாள் அதிகாலையில் திருமணத்திற்கு கிளம்பவே சரியாக போயிற்று. யாருக்கும் யாரோடும் பேச நேரமில்லை.

அவனே திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்கிறான், எதற்கு இத்தனை அலங்காரம் அலங்காரம் என்று மனது கேட்க. உடனேயே அவனுக்காகவா நீ அலங்காரம் பண்ணிக்கொள்கிறாய், என்ன பேச்சு இது வைதேகி என்று அதே மனது அடக்கி விட்டது. 

அவளையறியாமல் உள்ளுக்குள் ராமிற்காக போராட்டம் நடந்தது.

திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. பிறகு சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்க ராம் திரும்பியே பார்க்கவில்லை வைதேகியை. அவனுடைய பாராமுகம் எதற்கென்று தெரியாமலேயே ஒரு கோபத்தை அவளுள் கொழுந்து விட்டு எரியச் செய்தது.

திருமணம் முடிந்ததும் சுவாமிநாதன் சுந்தரேசனிடம் பேசினார். “பொண்ணு கல்யாணத்தை சிறப்பா முடிச்சிட்டீங்க அண்ணா”, என்று.

“ஒரு குறையும் இல்லையே”, என்று அவர் கேட்க.

“ஒரு குறையும் இல்லை அண்ணா. அடுத்து பையன் கல்யாணத்தையும் ஜாம் ஜாம்ன்னு முடிச்சிடுங்க”,

“அதுக்கென்ன சுவாமிநாதா செஞ்சிட்டா போச்சு. இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்னு பார்க்கிறேன்”,

“நல்ல வேலைல இருக்கான், கை நிறைய சம்பாறிக்கறான், இன்னும் எதுக்கு தள்ளி போடறீங்க. எனக்கு ஒரு யோசனை இருக்கு சொல்லட்டுமா”, என்றார்.

“என்ன சுவாமிநாதா”,

“நம்ம மோகனுக்கு மாலதியை பார்த்தா என்ன?”,

“என்னப்பா திடீர்ன்னு இப்படி ஒரு யோசனையை சொல்ற”,

“திடீர்ன்னு எல்லாம் சொல்லை. நேத்து இருந்து நானும் பார்க்கிறேன் உன் பையன் கண்ணு பூராவும் மாலதி மேல தான். என்னை நம்பாத. நீயே ஒரு அரை மணிநேரம் கவனி, உனக்கே புரியும்”, என்று விஷயத்தை போட்டு பட்டென்று உடைத்தார்.

“அப்படியா சொல்ற நீ”,

“அப்படித்தான் சொல்றேன்”,

இவர்கள் இருவரும் தன்னை பற்றி தான் பேசிக்கொள்கிறார்கள் என்று அறியாத மோகனும் வழக்கம் போல மாலதி பின்னாலேயே சுற்றினான். அவளும் இவன் இருக்கும் இடத்தை விட்டு அகல. ஏதாவது சாக்கு வைத்து பின்னேயே சென்றான்.

சுவாமிநாதன் சொன்ன பிறகு சுந்தரேசனும் இதை கவனித்து விட்டார். சுவாமிநாதனும் சுந்தரேசனும் மேலும் பேசவிடாமல் கல்யாண வேலைகள் குறுக்கிட்டன.

மதிய விருந்து முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு பொண்ணை அனுப்பி கொடுத்துவிட்டு எல்லாரும் அவரவர் வீட்டிற்கு கொஞ்சம் ஓய்வெடுக்க சென்றனர்.

அப்போதும் வீட்டிற்கு மாலதியும் வைதேகியும் சுவாமிநாதனும் மட்டுமே சென்றனர். ராமிற்க்கும், மோகனுக்கும், மனோகருக்கும் மண்டபத்தை காலி செய்யும் வேலை இருக்க அவர்கள் தங்கி விட்டனர்.          

 வீட்டிற்கு வந்ததும், “எனக்கு களைப்பா இருக்குமா நான் கொஞ்சம் படுக்கிறேன்”, என்று சொல்லி சுவாமிநாதன் உறங்க போய்விட்டார்.

வெகு நேரம் கழித்தே ராமும் மனோகரும் வந்தனர். வேலை செய்து வெகுவாக களைத்து இருந்தான் ராம்.

அவன் ரூமிற்குள் வரவும் வைதேகி அவளின் துணிகளை எல்லாம் அடுக்கிக்கொண்டு இருந்தாள்.

“என்ன பண்ற”, என்றான் அதட்டலாக.

“பார்த்தா தெரியலை. பேக் பண்ணிட்டு இருக்கேன்”, என்றாள் அவளும் எரிச்சலான குரலில்.

“தெரியுது அதுதான் ஏன்னு கேட்கறேன்”,

“அப்பா சாயந்தரம் ஊருக்கு போறாராம், நான் அவரோட போறேன்”, என்றாள் பிடிவாதமான குரலில்.

“உனக்கு எத்தனை சொன்னாலும் புரியாதா, கல்யாணம் முடிஞ்சு நாளைக்கு மறுவீட்டு விருந்தெல்லாம் இருக்கும். நீ இல்லைனா எல்லாரும் என்னை கேட்பாங்க நீ எங்கன்னு.  இப்போ கிளம்பாத ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு போ”,  

“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால இருக்க முடியாது. யார் கேட்டா எனக்கு என்ன?”, என்றாள் ஆத்திரமாக. அவளுக்கு ராம் அவளை சிறிதும் பொருட்படுத்தவில்லை என்ற கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.

அவளின் பேச்சை கேட்ட ராமிற்கும் கோபம் வர ஆரம்பித்தது.  

“யாரிவன் இரண்டு நாட்களாக என்னை பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறான். பெரிய இவன் மாதிரி நடந்து கொள்கிறான். செய்வதை எல்லாம் இவன் செய்துவிட்டு நான் செய்தது என்னவோ பெரிய தப்பு மாதிரி நடந்து கொள்கிறான். இவன் செய்த தவறுக்கு நான் செய்தது எல்லாம் ஒரு ஈடா. இவன் செய்தது என்னை எப்படி பாதித்தது. நான் செய்தது இவனை எந்த வகையில் பாதிக்கிறது”, என்ற வார்த்தைகள் அவளின் மனதுக்குள் ஓட வெளியில் அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கோபம் இருவருக்கும் கண்மண் தெரியாமல் வர. வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. விஷயம் சின்னது, பெருசு என்பது போய் வார்த்தைகளின் சுழற்சியில் சிக்கினர் இருவரும். அதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை சின்னா பின்ன மாகபோவது தெரியாமல். 

“வேலை கிடைச்சதை சொல்லாதது ஒரு சாதாரண விஷயம். அதுக்கு ஏன் இந்தளவு ரியாக்ட் பண்றீங்க. சொன்னா அப்பா விடமாட்டார்ன்னு சொல்லலை. அப்பாகிட்ட சொல்லாததால உங்ககிட்டையும் சொல்லலை, அவ்வளவு தான்.”, என்று தன்னிலை விளக்கதிலேயே ஆரம்பித்தாள்.

“உங்கப்பாகிட்ட நீ சொல்ற சொல்லலை அது வேற விஷயம்.  வேலை கிடைச்சது சொல்லாதது உன்னை பொருத்தவரைக்கும் சின்ன விஷயமா இருக்கலாம் என்னை பொருத்தவரைக்கும் அது பெரிய விஷயம். எல்லோர் கிட்டயும் சொல்ல முடியுது என்கிட்ட சொல்ல முடியலையா.”,

“அப்பாக்கு அப்புறமா தெரியட்டும்னு நீ நினைச்சின்னா நான் சொல்லாம இருந்துட்டு போறேன். உனக்கு என்கிட்ட சொல்லனும்னு தோணியே இருக்காது, அது தான் நிஜம். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.”,

“என்ன? என்ன தெரியும்? உங்களுக்கு என்னை பத்தி”,

“நீ என்னை புருஷனா தான் மதிக்கலைன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ தான் தெரியுது நீ என்னை மனுஷனாவே மதிக்கலைன்னு.”, 

“நீ செய்யற காரியத்துக்கு எல்லாம் நீ உங்கப்பாவோட பொண்ணா இருக்கறதால அவருக்காக பொறுத்து போறேன். இல்லைனா நடக்கறதே வேற”,     

“சும்மா என்ன உங்கப்பாவோட பொண்ணா இல்லைனா நடக்கறதே வேற வேறன்னு சொல்லிட்டு இருக்கீங்க. என்ன செய்வீங்க அதிக பட்சமா அன்னைக்கு செஞ்ச மாதிரி செய்வீங்க அவ்வளவு தானே.”, அவன் தன்னை கட்டாயபடுத்தி உறவு கொண்டதை நினைவு படுத்தி சொன்னாள். 

“அன்னைக்கு செஞ்ச மாதிரியா. அதை பத்தியே பேசாத. அதுக்கே நான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்கேன். இனிமேலும் அந்த மாதிரி செய்வேன்னு நினைக்கிறியா, மாட்டவே மாட்டேன். அன்னைக்கு செஞ்சதுக்காக இன்னும் எத்தனை காலத்துக்கு வருத்தபட போறேனோ. அந்த மாதிரி செஞ்சதையே நான் பெரிய அசிங்கமா நினைக்கிறேன்”,

அவனின் பதில் அவளை முற்றிலுமாக உடைய வைத்தது. தன்னுடன் உறவு கொண்டதையே அசிங்கமாக நினைக்கிறான் என்ற சொல்லை அவளால் தாங்க முடியவில்லை. எனக்கு எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டு அதை இன்று எப்படி சொல்கிறான் என்ற ஆத்திரம் கண்மண் தெரியாமல் வந்தது.

“அசிங்கம் அப்படின்ற வார்த்தையை நான் சொன்னதுக்கு தான் எதுடி அசிங்கம்ன்னு சொல்லி அப்படி செஞ்சிட்டு. இன்னைக்கு நான் செஞ்சதே அசிங்கம்ன்னு சொல்றீங்களா. அந்தளவுக்கு கேவலமா நான் உங்க கண்ணுக்கு தெரியறனா. நியாயமா பார்த்தா அதுக்கு கோபப்பட வேண்டியவ நான். ஆனா நான் உங்களை சும்மா விட்டுடேன் இல்லை. அதனால நீங்க இதுவும் பேசுவீங்க இதுக்கு மேலயும் பேசுவீங்க”,

“ஏய் என்ன சும்மா பூச்சாண்டி காட்டற. என்ன பண்ணியிருப்ப நீ. என்ன பண்ணமுடியும் உன்னால. ஒண்ணும் பண்ண முடியாது. என் புருஷன் என்னை கெடுத்துட்டான்னு ஊரு பூராவும் சொல்லிட்டு திரிஞ்சு இருப்பியா. இல்லை என் புருஷன் என்னை கெடுத்துட்டான்னு போலீஸ் ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பியா. என்னடி பண்ணியிருப்ப”, என்றான் ஆவேசமாக.

அவனின் வார்த்தைகளை கேட்டு மிகுந்த ஆத்திரம் கொண்ட வைதேகி. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், “என்ன பண்ணியிருப்பனா உன்னை விட்டுட்டு போயிருப்பேன். நீ வேண்டாம்னு சொல்லியிருப்பேன். எனக்கு புருஷனே தேவையில்லைன்னு சொல்லியிருப்பேன்”,

அவளுக்கு சற்றும் குறையாத ஆத்திரத்தில் இருந்த ராம் அவளுக்கும் அதிகமாக வார்த்தைகளை விட்டான். “போடி இப்ப மட்டும் என்ன போ. உன்னை யாரும் கையை பிடிச்சி நிறுத்த போறதில்லை. நீ தான் வேணும்னு சொல்ல போறதில்லை. நீ எனக்கு வேண்டவே வேண்டாம் போடி. என்னை பிடிச்ச பீடை ஒழிஞ்சதுன்னு நான் நிம்மதியா இருப்பேன்”,

“நான் உன்னை பிடிச்ச பீடையா. எனக்கு தேவையேயில்லை. இனிமே உன்னோட ஒரு வாழ்க்கை எனக்கு தேவையேயில்லை”,

“இப்போ மட்டும் என்ன நீ என்னோட வாழ்ந்துட்டா இருக்க. என்னவோ நம்ம ஆதர்ஷ தம்பதிகள் மாதிரி டையலாக் எல்லாம் பேசற. நீ கல்யாணம் ஆனதுல இருந்து எப்போடி வாழ்ந்த என்கூட. இப்பவும் சொல்றேன் உங்கப்பாவுக்காக மட்டும் தான் நான் உன்னை பொறுத்துக்கறேன்”,

“யாரும் எங்கப்பாவுக்காக என்னை பொறுத்துக்க வேண்டாம். நான் ஒண்ணும் உனக்காக இங்க ஏங்கிட்டு இருக்கலை. நீ வேண்டாம். எனக்கு நீ வேண்டவே வேண்டாம். இரு நான் எங்கப்பாகிட்டயே சொல்றேன்”,

அவள் அவளின் அப்பாவிடம் சொல்கிறேன் என்றதும் தான் சற்று நிதானத்திற்கு வந்தான். அவருக்கு வேறு அவ்வளவு வாக்குறுதியை கொடுத்தது மனதை தைத்தது. அப்போதும் சொல்ல வேண்டாம் என்று மறுக்கவில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. இனி ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்பதே அவனின் நினைப்பாக இருந்தது. அவள் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

அவள் வேகமாக அவளின் அப்பாவிடம் போனாள். அவர் உட்கார்ந்த வாக்கில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு இருந்தார். அவர் உறங்குவது போல அவளுக்கு தோன்றியது.  அவர் உறங்கினாலும் பரவாயில்லை அவரை எழுப்பி தன்னால் ராமோடு இனி வாழ முடியாது என்று சொல்வதற்காக. அவரை எழுப்புவதற்காக அவரை தொட, ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள்.

உடம்பு சில்லென்று இருந்தது.

“அப்பா”, என்று அவரை உலுக்க. அந்த உடல் சாய்ந்தது. 

அவர் மயக்கமாகி விட்டார் போல என்று பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்து உலுக்கினாள். அப்போதும் அவர் விழிக்கவில்லை என்றவுடன்.

“ராம்! ராம்!”, என்று கத்தினாள்.

ராம் என்னவோ ஏதோவென்று பதறி வந்தான். அவள் கத்திய கத்தலில் மனோகர் மாலதி எல்லாரும் ஓடி வந்தனர்.

வந்து பார்த்தவுடனே அவனுக்கு தெரிந்துவிட்டது அவரின் உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது என்று. அவனே ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த ஒரு நர்சை கூடிக்கொண்டு வந்தான்.

அந்த பெண்மணி பல்சை பார்த்துவிட்டு, “உயிரில்லை”, என்று சொல்லி சென்றார்.

அதிர்ச்சியில் கத்த கூட முடியாமல். கண்களில் நீர் இறங்க தன் தந்தையை வெறித்து பார்த்து நின்றாள் வைதேகி.       

Advertisement