Advertisement

அத்தியாயம் பதினேழு:

சொன்ன மாதிரி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ராம் வைதேகியை அழைத்து செல்ல வந்துவிட்டான். அப்போது பார்த்து சுவாமிநாதனுக்கு சற்று உடம்பு வேறு சரியில்லாமல் இருந்தது. வைதேகிக்கு விட்டு செல்ல மனமில்லை. ராமும் கூட இந்த நிலையில் வைதேகியை கூட்டிச் செல்வதா என்று யோசித்தான்.

சுவாமிநாதன் தான் பிடிவாதம் பிடித்து, “நான் எப்படியும் கல்யாணத்துக்கு நாளைன்னைக்கு கிளம்பி வர தானே போறேன். ஒரு ரெண்டு நாள் நான் சமாளிச்சுக்குவேன். முடியலைன்னா உடனே போன் பண்ணிடறேன்”,

“நீ வைதேகியை கூட்டிட்டு போ. இல்லைனா கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. எல்லாரும் என்னை தான் திட்டுவாங்க. கல்யாணம் பண்ணியும் பொண்ணையும் மாப்பிள்ளையையும் பிரிச்சு வெச்சிருக்கேன்னு. நீ கூட்டிட்டு போ ராம்”, என்றார்.

ராம் என்ன செய்வது என்பது போல வைதேகியின் முகம் பார்க்க. அவளின் தந்தை இவ்வளவு சொல்லும்போது அவளால் தட்ட முடியவில்லை. “சரிப்பா போறேன்”, என்றாள்.

அவள் போகிறேன் என்று சொன்ன பிறகு தான் சுவாமிநாதனுக்கு நிம்மதி.

“சரி நான் கூட்டிட்டு போறேன் ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஹாஸ்பிடல் வரணும்”, என்றான் ராம் சுவாமிநாதனை பார்த்து. 

அவரை ஹாஸ்பிடல் அழைத்து சென்று டாக்டரிடம் காட்டி அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்த பிறகு அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

ராமிற்கு அரை மனது தான் இருந்தாலும் வைதேகியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

அங்கே காஞ்சிபுரம் சென்றதும் திருமண வேலைகளில் எல்லாம் மறந்து விட்டது. அங்கே மாலதி உற்சாகமாக அவளை வரவேற்க அதற்கு சற்றும் குறையாத உற்சாகத்துடன்  சுந்தரேசனும் லீலாவதியும் அவளை வரவேற்றனர்.

வைதேகியோடு சேர்ந்து மாலதியும் ரமாவின் வீட்டிற்கு சென்றிருக்க அவளை பார்த்த மோகனின் முகத்தில் பல்பு எரிந்தது. இது லீலாவதியின் கண்களுக்கு தப்பவில்லை.

அவரின் கண்களுக்கு மாட்டினாலும் மகளின் திருமண வேலைகள் இருந்ததால் அதிகம் மகனிடம் கவனம் செலுத்த முடியவில்லை. திருமணம் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிட்டார். 

மாலதியோ வைதேகி எங்கு இருந்தாலும் அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தாள்.

மோகனும் மாலதி எங்கு இருந்தாலும் ஏதாவது சாக்கை வைத்து அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தான். முதலில் வைதேகி கவனிக்கவில்லை. பிறகு தான் இப்படியும் இருக்குமோ என்று யோசிக்க துவங்கினாள். இருவரையும் ஊன்றி கவனிக்க துவங்கினாள்.

லீலாவதியும் வைதேகியும் கவனித்தாலும் கவனிக்க வேண்டியவள் கவனிக்கவில்லை. ஆம், இதை மாலதி கவனிக்கவேயில்லை. அவன் அங்கே இங்கே உலாத்துவதை அவனுக்கு ஏதோ வேலை என்று தான் எடுத்துக்கொண்டாள்.

வைதேகி அதையும் கவனித்தாள். மோகன் மாலதியின் பின்னாலேயே போவது மாலதிக்கு புரியவில்லை என்று.

“என்ன தான் நடக்கிறது பார்ப்போமே”, என்று வேடிக்கை பார்க்க துவங்கினாள் வைதேகி.

இதையறியாத மோகன் மாலதியிடம் நேரடியாக பேசமுடியாமல் ஏதோ தடுக்க  வைதேகியிடம் வந்து பேசினான்.

மனோகர் கூப்பிடுவது போல. “அண்ணி”, என்றழைத்து பேச்சை துவக்க.

“என்னது அண்ணியா? நான் உங்களுக்கு ரமா மாதிரி தான். பேர் சொல்லியே கூப்பிடுங்க அண்ணா”, என்றாள் வைதேகி.

பேர் சொல்லியா என்று மோகன் தயங்க. அந்த பக்கமாய் ஏதோ வேலையாய் வந்த ராமை அழைத்து. “நீங்க சொல்லுங்க”, என்றாள்.

தன் மனைவி அழைத்ததும் மிகவும் சந்தோஷமாகி விட்டது ராமிற்கு. இருந்தாலும் எதை சொல்வது என்று தெரியாமல் அவன் விழிக்க. “நான் இவங்களுக்கு என்ன ஆகணும்”, என்றுமோகனை காட்டினாள். 

“தங்கச்சி முறை ஆகணும்”, என்றான்.

“அதை தான் நான் இந்த அண்ணா கிட்ட சொல்றேன். கேட்க மாட்டேங்கறாங்க. என்னை அண்ணி சொல்றாங்க”,

“பேர் சொல்லியே கூப்பிடு மோகன். அவ உன்னைவிட சின்னவ தான்”, என்று ராமும் சப்போர்டிற்கு வந்தான். 

அதன் பிறகே, “சரி வைதேகி”, என்றான் மோகன்.

அங்கே நிற்க விடாமல் ராமை வேலை அழைக்க. அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 

“எதுக்கு அண்ணா என்னை கூப்பிட்டீங்க”, என்றாள் வைதேகி மோகனிடம். அது ராமின் காதில் விழுந்தது, என்னை தவிர இவள் எல்லோரிடமும் நன்றாக பேசுவாள் என்றெண்ணிக் கொண்டே அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.

“எப்படி எக்ஸாம் பண்ணியிருக்கன்னு கேட்கறதுக்கு கூப்பிட்டேன்”,

“நல்லா பண்ணியிருக்கேன் அண்ணா .”, என்றவள் அருகில் இருந்த மனோகரிடம் “நீ எப்படி பண்ணியிருக்க”, என்றாள்.

“நல்லா பண்ணியிருக்கேன் அண்ணி”, என்றான்.

இவர்கள் பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்திருந்த மாலதி. “மனோ கேம்பஸ் இன்டர்வியூல கூட செலக்ட் ஆகியிருக்கான் அண்ணி”,

“உங்க அண்ணா முன்னாடியே சொன்னது தானே. எந்த கம்பெனி’, என்றவளிடம் அவர்கள் கம்பெனி பெயர் சொல்ல. “அங்கேயா”, என்றாள் ஒரு எக்ஸ்ட்ரா ஆர்வத்தோடு.

“அதுதான் நான் வேலை பார்க்கிற கம்பெனி யும்”, என்றான் மோகன்.

“நீங்களுமா”, என்றாள்.

அவளின் ஆர்வத்தை பார்த்த மோகன். “உனக்கு எதுவும் கேம்பஸ் இன்டர்வ்யூ வரலையா”, 

இந்த கேள்வி கேட்டவுடன் ஒரு நிமிஷம் தடுமாறிய வைதேகி, மிகுந்த யோசனைக்கு பின். “எனக்கும் அங்க தான் கிடைச்சிருக்கு”, என்றாள்.

“என்ன அண்ணி நீங்க செலக்ட் ஆகியிருக்கீங்களா சொல்லவே இல்லை”,

“ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நான் யார்கிட்டயும் சொல்லலை”, என்றாள். “அப்பாக்கு கூட தெரியாது”,

“அண்ணாக்கு”,

“தெரியாது”,

வைதேகி இதை யாரிடமும் இன்னமும் பகிரவில்லை. இப்போது கூட சொல்லும் எண்ணம் இல்லை. மோகன் அதே கம்பனியில் இருக்கிறான். மனோகரும் அதே கம்பெனிக்கு செலக்ட் ஆகியிருக்கிறான் என்பதால் சொன்னாள். அவர்கள் இருவரும் அங்கு இருப்பதால் அவளை மீறி ஒரு உற்சாகத்தில் வார்த்தை வந்துவிட்டது.

சொன்ன பிறகு தான் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று தோன்றியது. ராமிடமோ அப்பாவிடமோ சொல்லாமல் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று தோன்றியது.   

அவளின் அப்பா விடமாட்டார் என்பதாலேயே அவரிடம் அவள் சொல்லவில்லை மறைத்து விட்டாள். அப்பாவிடம் சொல்லாததால் ராமிடமும் சொல்லவில்லை. சொல்வது அவசியம் என்றும் நினைக்கவில்லை. 

இவளின் யோசனைகள் இப்படி ஓடிக்கொண்டிருக்கும்போதே.  ராமை, “அண்ணா இங்கே வாங்க”, என்று ஆர்வமாக கூப்பிட்ட மாலதி. “அண்ணிக்கு வேலை கிடைச்சிருக்காம்”, என்று விஷயத்தை போட்டு உடைத்தாள்.

“என்ன”, என்றான் அதிர்ச்சியாக ராம். எல்லாரும் இருகிறார்கள் என்று உணர்ந்து சட்டென்று முகபாவனையை மாற்றினான். எல்லோரிடமும் சொல்ல முடிகிறது என்னிடம் சொல்ல கூட முடியவில்லையா என்று மனதில் நினைத்த ராமின் முகம் தொங்கிவிட்டது. அதை வைதேகி பார்த்தே இருந்தாள்.

அவன் மனம் காயப்பட்டது. மனம் இறுகியே விட்டான். தன் மனைவியின் விஷயம் தனக்கு முன் எல்லோருக்கும் தெரிகிறது என்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

அவனின் முகத்தை பார்த்தே தான் இப்போது சொன்னது தப்பான சமயம் என்று புரிந்துவிட்டது வைதேகிக்கு.

“உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அண்ணி சொல்லலையாம்ணா.”, என்றாள் மாலதி கள்ளமில்லாமல். 

“ஆமாமாம்! உங்க அண்ணி எனக்கு அப்பப்போ ரொம்ப சர்ப்ரைஸ் கொடுப்பா”, என்றான் முயன்று குரலில் கோபத்தை தவிர்த்தபடி சொல்ல முயன்றாலும் குரல் கரகரத்தது .

“உங்களுக்கு தெரியுமா ராமண்ணா. நாங்க மூணு பேரும் ஒரே கம்பெனி”, என்று பெருமை பேசினான் மோகன்.

“என்ன”, என்றான் ராம்.

“ஆமாம் அண்ணா! உங்களுக்கு தெரிஞ்சது தான். மனோ என்னோட கன்செர்ன்ல தான் செலக்ட் ஆகியிருக்கான்னு உங்களுக்கு தெரியும் தானே. இப்போ தான் வைதேகி சொன்னா அவளும் எங்க கன்செர்ன்ல தான் செலக்ட் ஆகியிருக்கான்னு. நெஜமாவே இது பெரிய சர்ப்ரைஸ் நாங்க மூணு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்க்க போறோம்”,

“நான் மனோகர் செலக்ட் ஆனதை சொன்ன போது கூட இவள் என்னிடம் சொல்லவில்லையே”,. அந்த நிமிடம் ராம் வெறுத்துவிட்டான். எங்கேயாவது இந்த சூழலை விட்டு போகவேண்டும் போல தோன்றியது.

“அப்போ நானும் அண்ணியும் சேர்ந்து தான் ட்ரைனிங் போவோம் போல”, என்றான் மனோகர்.

“ஒஹ் என்னிடம் சொல்லாமல் வெளியூருக்கு ட்ரைனிங் வேறா. இவனெல்லாம் ஒரு ஆள். இவனிடம் எல்லாம் சொல்ல வேண்டுமா என்று நினைத்திருப்பாள்”. மனது கொதித்து.

எல்லோர் முகங்களும் மலர்ந்திருக்க. தான் அதை கெடுக்க வேண்டாம் என்று அந்த இடத்தை விட்டு ஏதோ வேலையிருப்பது போல நகர்ந்து விட்டான் ராம்.

இன்னும் சிறிது நேரம் நால்வரும் பேசிக்கொண்டு தான் இருந்தனர். இவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் வைதேகியின் கண்கள் ராமை தேடின. அதற்கு பிறகு அவனை காணவே காணோம் வைதேகியின் கண்களில் படவேயில்லை.

அப்போது பார்த்து அங்கே வந்த லக்ஷ்மி பாட்டி, “என்ன வைதேகி பரீட்சை எல்லாம் முடிஞ்சிடுச்சு இனிமேலாவது ஏன் பேரனோட ஒழுங்கா குடும்பம் நடத்துவியா. மாட்டியா”, என்றார் எல்லோரையும் வைத்துக்கொண்டே .

வைதேகி மிகுந்த சங்கடத்திற்கு ஆளானாள். என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் மௌனமாக நிற்க.

“இன்னும் தனியா விடாதடிம்மா அவனை. எத்தனை நாள் தான் இதுங்க மூனுமே தனியா ஓரியாடும்”, என்றார். அதற்குள் அவரை யாரோ ஏதோ வேலையாக அழைக்க அந்த இடத்தை விட்டு அகன்றார்.

வைதேகியின் கண்கள் ராமை தேடின, அவனை காணவில்லை.  ஒரு வேளை வீட்டிற்கு சென்றிருப்பானோ என்று  வீட்டிற்கு சென்று பார்த்தாள். வீட்டிலும் இல்லை, அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. தந்தையிடமும் ராமிடமும் பகிராமல் அடுத்தவரிடம் பகிர்ந்தது சிறிது தப்பு போலவே உணர்ந்தாள். 

இவன் வேறு அப்பாவிடம் சொல்லிவிட்டால் அது இன்னும் ப்ரச்சனை ஆகுமே என்று தோன்றியது.

உடனே அவனை தொலைபேசியில் அழைத்தாள் அவன் எடுக்கவே இல்லை. அவன் எடுக்கவே இல்லை என்றதும் தந்தைக்கு அழைத்தாள். அப்போது தான் விஷயம் தெரியும் என்பது போல அவரிடம் பகிர்ந்து கொண்டாள், தனக்கு வேலை கிடைத்திருக்கும் விஷயத்தை.

அவர் அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். “கிடைச்சா கிடைச்சிட்டு போகுது, இருக்கிற பணத்தை செலவு செய்யவே உனக்கு நேரத்தை காணோம். வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் வைதேகி. இனிமேலாவது ராமும் நீயும் சேர்ந்திருக்கிற வழியை பாருங்க.”, என்றார்.

இவருக்கு இதே பேச்சு தான் என்று சலிப்படைந்தவள். “சரிப்பா”, என்று சொல்லி போனை வைத்தாள். 

இரவு வரையிலும் அவளின் கண்களில் ராம் படவேயில்லை.

இரவு உணவு உண்ணும்போது, “எங்க மாலதி உங்க அண்ணனையே காணோம்”, என்றாள்.

“ஏதோ வேலையாம் அண்ணி. வர நேரமாகும் நீங்க சாப்பிட்டிட்டு படுத்துக்கங்கன்னு சொன்னாங்க. உங்ககிட்ட சொல்லலை”,

“ஆமாம் சொன்னாங்க! நான் தான் மறந்துட்டேன்”, என்று சமாளித்தாள். அவனின் இந்த நடவடிக்கைகளில் இருந்தே அவனுக்கு நிறைய கோபம் என்று புரிந்துவிட்டது. தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்தது. கொஞ்சம் தவிப்பாக இருந்தது. ஏன் என்றே தெரியவில்லை.

இரவில் வெகு நேரம் அவனுக்காக காத்திருந்தாள். அவளுக்கே தெரியாமல் உறங்கிவிட்டாள். அவன் எப்போது வந்தானோ தெரியாது. அவள் காலையில் எழும் போது உறங்கிக்கொண்டிருந்தான்.

அவள் ரெடியாகும் வரையிலும் எழுந்திருக்கவில்லை. அவனை எழுப்பி தான் சொல்லாததற்கு காரணத்தை சொல்வோமா என்று நினைத்தாள். ஆனால் என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

அவன் என்ன நினைத்தால் உனக்கென்ன என்று ஒரு பக்கம் மனம் இடித்துரைத்து. நீ எதையெல்லாம் ராமிடம் சொல்லியிருக்கிறாய் இப்போது இதை சொல்லவில்லை என்று தவிப்பதற்கு என்று கேள்வி கேட்டது.

எப்போதிருந்து அவன் நினைப்பதற்காக எல்லாம் நீ கவலைப்பட ஆரம்பித்தாய் என்று சிரித்தது.

அவளின் மனம் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக போய்விட்டாள் திருமண வீட்டிற்கு.

அன்று முழுவதுமே ராம் ஒரு வார்த்தை கூட வைதேகியிடம் பேசவில்லை. அவன் போக்கில் திருமண வீட்டில் வேலைகள் பார்த்திருந்தான். எப்போதும் ஏதாவது சாக்கிட்டு அவளிடம் பேசிவிடுவான். இன்று அதற்கான சிறு முயற்சி கூட எடுக்கவில்லை.

ஒரு பக்கம் வைதேகியின் மனம் அவனிடம் சென்று பேசு சமாதானப்படுத்து என்றிருந்தது. மறுபுறம் அவன் என்ன நினைத்தால் உனக்கென்ன என்று சொன்னது.

இரண்டிற்கும் நடுவில் போராடிக்கொண்டு தான் இருந்தாள். பேச முயற்சி எடுக்கவில்லை. அவனின் பாராமுகம் அவளை வருத்தியது. திருமணம் ஆனதில் இருந்து அவன் இப்படி அவளிடம் நடந்ததே இல்லை. கம்மியாக கூட பேசுவான் ஆனால் பேசாமல் இருந்தது இல்லை.

இதற்கு நடுவில் அவன் தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டான் அது தனக்கு பிடிக்கவில்லை என்பதெல்லாம் அவளின் ஞாபகத்தில் வரவே இல்லை. அவளின் மன சஞ்சலத்தில் மோகன் மாலதியின் பின்னேயே சுற்றுவது கண்ணில் பட்டாலும் கருத்திலோ கவனத்திலோ படவில்லை.

மாலதிக்கு அப்போது தான் கொஞ்சம் உணர்ந்தாள். ஒரு வேளை மோகன் தன்னை தான் கவனிக்கிறானோ என்று. அவன் இருக்கும் இடங்களை அவள் தவிர்க்க ஆரம்பித்தாள். மெதுவாக மோகனும் உணர்ந்தான், மாலதி தான் தொடர்வதை கவனித்து விட்டாள் என்று.     

 எப்போது அவளிடம் பேச தனிமை கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே இருந்தான். லீலாவதி ராமின் வீட்டில் இருந்து ஏதோ எடுத்து வர சொல்ல அதற்காக மாலதி தனியாக செல்வதை பார்த்தவன். அவள் சென்ற கொஞ்சம் நேரத்திற்கு எல்லாம் அவனும் ராமின் வீடு நோக்கி நழுவினான்.

வைதேகியை அவளுடன் செல்ல விடாமல் லக்ஷ்மி பாட்டி அவளிடம் ராமின் புராணங்களை பாடி. அவனுடன் எப்போதிருந்து வந்து இருக்க போகிறாய் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

அங்கே ராம் வீட்டில் லீலாவதி ஏதோ பாத்திரத்தை கேட்டு விட்டிருக்க. அதை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் மாலதி. அது பரண் மேல் இருந்தது. அவள் ஸ்டூலை போட்டு மேலே ஏற முயற்சி செய்துகொண்டிருக்க. அப்போது வந்த மோகன், “நான் எடுத்துக்கொடுக்கவா”, என்றான்.

அமைதியான சூழலில் திடீரென்று அவன் குரல் கேட்கவும் பயந்து விட்டாள் மாலதி. விதிர்த்து திரும்ப. அவளின் பயத்தை பார்த்தவன், “ஈஸி! ஈஸி! எதுக்கு இவ்வளவு பயம், நான் தான்”, என்றான்.

இப்போது சற்று கோபம் வந்தது மாலதிக்கு. அவனை பார்த்து நேரடியாக, “உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு என் பின்னாடியே வந்துட்டு இருக்கீங்க”,

“ஹப்பா ஒரு வழியா நான் உன் பின்னாடி தான் வர்றேன்னு, ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் கண்டுபிடிச்சிட்டியா.”,

“என்ன ரெண்டு வருஷமாவா”,

“ஆமாம்! உங்கண்ணன் கல்யாணத்துல ஆரம்பிச்சேன், என் தங்கச்சி கல்யாணத்துல கண்டுபிடிச்சி இருக்க”,

“எங்கண்ணன்னுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் நாலு மாசம் தான் ஆகுது”, என்றாள்.

மோகனுக்கு சிரிப்பு வந்தது. “அட நீ கணக்குல புலி போல. நான் தான் தப்பா சொல்லிட்டேனோ”, என்றான்.

அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்று மாலதிக்கு புரிந்தது. “பின்னே அவன் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறான். நான் என்ன லூசு மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறேன்”, என்று தோன்றியது.

அவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது. இருந்தாலும் நொடியில் முகபாவனைகளை மாற்றிக்கொண்டாள். அவளின் முக மாற்றங்களை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். நொடியில் எத்தனை பாவங்களை காட்டுகிறது என்று விடாது அதையே பார்த்திருந்தான்.

அவளுக்கு சங்கடமாக போயிற்று.

“என்ன வேணும் உங்களுக்கு”, என்றாள் சீரியசாக.

“நீதான்”, என்றான்.

“என்ன? என்ன உளர்றீங்க?”,

“ஒண்ணும் உளறலை. ஐ லவ் யூ. நான் உன்னை காதலிக்கறேன். உன்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டப்படறேன். உன்கிட்ட சொல்லிட்டு அப்புறமா அப்பா கிட்ட பேசலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற”,

இதை கேட்ட மாலதி சீரியஸ் ஆகிவிட்டாள். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தவள். “இதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. நீங்க எதுவா இருந்தாலும் அண்ணாகிட்ட பேசிக்கங்க. என்னை பத்தி முடிவு எடுக்கறது எல்லாமே அண்ணா தான். இனிமே நீங்க இதைபத்தி என்கிட்ட பேசறதை நான் விரும்பலை”,

“ஆனா நான் உன்னை விரும்பறேனே”,

“நீங்க எதுவா இருந்தாலும் ராம் அண்ணாகிட்ட பேசுங்க”, என்று அந்த இடத்தை விட்டு போகப்போனாள்.

“உன்னை காதலிக்கறதை உன்கிட்ட தான் சொல்லனும். உன் அண்ணாகிட்ட ஏன் சொல்லனும்”,

அவனை பார்த்து முறைத்தாள்.

“சரி, சரி, உங்க அண்ணா கிட்ட சொல்றேன்”, என்று அவளை சமாதானப்படுத்த, அவள் இடத்தை விட்டு போக.

“இரு! அம்மா கேட்டதை எடுத்துட்டு போ”, என்று அந்த பாத்திரத்தை எடுத்துக் கொடுத்தான். அவனின் முகம் பார்க்காமல் வாங்கி சென்றாள்.

மறுக்கவில்லையே, அண்ணாவிடம் தானே பேச சொல்கிறாள். அந்த மட்டிலும் திருப்தியாகி. சமயம் கிடைக்கும் போது அப்பாவிடமும் அம்மாவிடமும் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அப்போது தான் மாலதி எங்கே என்று தேடத் துவங்கினாள் வைதேகி.

“வீட்டுக்கு பாத்திரம் எடுத்துட்டு வர அனுப்பி இருக்கேன்”, என்றார் லீலாவதி.

மாலதியும் சரியாக அந்த நேரம் பார்த்து வந்தாள். வந்தவளின் முகம் சரியில்லை என்பதை நொடியில் உணர்ந்து கொண்டாள் வைதேகி.

“என்னாச்சு மாலதி! ஏன் ஒரு மாதிரி இருக்க”, என்று வைதேகி கேட்பதற்கும் மோகன் வருவதற்கும் சரியாக இருந்தது.

மோகன் அவள் என்ன பதில் சொல்ல போகிறாள், தன்னை காட்டிக்கொடுக்க போகிறாளா என்று பார்த்து இருந்தான்.

“ஒண்ணுமில்லை அண்ணி, லேசா தலைவலி”, என்று விட்டாள். வைதேகியும் அவளுக்கு இருந்த குழப்பத்தில் அதிகமாக அதை கவனத்தில் எடுக்கவில்லை.

“அப்பா என்னை காட்டிக்கொடுக்கலை, கொஞ்சம் நம்ம மேல சாப்ட் கார்னர் இருக்கு தான் போல”, என்று மகிழ்ந்து போனான் மோகன்.

வைதேகி தான் மிகுந்த தவிப்பில் இருந்தாள்.

ராம் அவளை சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை. அவள் பக்கத்திலேயே இருந்தாலும் திரும்பியும் பார்க்கவில்லை.  அவளாலும் வலிய சென்று பேசமுடியவில்லை. ஏதோ தடுத்தது.

நாய் குட்டி போல ராம் அவளின் பின்னேயே சுற்றி வந்த போது ஒன்றும் தெரியவில்லை. அப்போதெல்லாம் அவனை அலட்சியப்படுத்தவும் தோன்றியது.

இப்போது அவனின் இரண்டு நாள் பாராமுகம் கூட அவளுக்கு ஏதோ குறைவது போன்ற உணர்வை கொடுத்தது.

“இது தனது இயல்பில்லையே. என்னவாயிற்று தனக்கு. தனக்கு தான் அவனை பிடிக்காதே. இப்போது மட்டும் என்ன?”, என்று யோசிக்க துவங்கினாள்.

 

Advertisement