Advertisement

அத்தியாயம் பதினாறு:

ராம் ஹாஸ்பிடலில் இருந்து வர இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இருந்த இரண்டு நாட்களும் அவன் பார்வைகள் அவளையே தொடர்ந்தன. தொடர்ந்து யாசித்தன. மன்னிப்பையா அவளின் அன்பையா. அவனுக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை.

வைதேகிக்கு அவன் பார்வைகள் புரிந்தும் புரியாமல் இருந்தது. ராமை பார்த்தால் சற்று பாவமாக தான் இருந்தது. இருந்தாலும் மனது இளகுவேனா என்றது.

வேண்டிய மட்டிலும் வைதேகியிடம் மன்னிப்பு கேட்டாகி விட்டது. இனி அதை செயலால் தான் உணர்த்த வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான் ராம்.

வந்ததும் காஞ்சீபுரம் சென்றுவிட்டான். அவனுக்கு பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.

சுவாமிநாதன் அவனை காஞ்சிபுரத்திற்கு அனுப்பவே மாட்டேன் என்றார். “இன்னும் கொஞ்சம் உடம்பு தேறட்டும். அப்புறம் போகலாம்”, என்றார்.

“இப்போ உடம்பு கொஞ்சம் பரவாயில்லை மாமா. ஒரு ரெண்டு இடத்துல வசூல் நிக்குது. இன்னைக்கு நாளைக்கு தர்றேன்னு சொல்லியிருக்காங்க. விட்டா வாங்க முடியாது. அதான்”, என்று காரணம் சொல்லி கிளம்பிவிட்டான்.

அவன் செய்த தவறு அவனுக்கு யோசிக்க வேண்டும் என்றது. அதனாலேயே ஊருக்கு போக முடிவெடுத்து போனான்.

மனதின் ஓரத்தில் ஒரு சின்ன ஆசை. வைதேகி தன்னை இரு என்று சொல்வாளோ என்று. ஆனால் அவள் அப்படி எதுவும் சொல்லவில்லை. மனதில் ஏமாற்றம் அழுத்தியது.

அவளுடைய குணத்திற்கு தன்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகம் என்று தெரியும் இருந்தாலும் அவனின் மனது எதிர்பார்த்தது. தான் அவளிடம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்ததனால் தான் இப்படியாகிவிட்டது என்று மனது எடுத்துரைத்தது.

“உனக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் போல அவளுக்கும் வரும் கணவனிடம் இருந்தனவோ என்னவோ. அதனால் தான் அவளால் உன்னுடன்  ஒன்ற முடியவில்லையோ”, என்று வைதேகிக்கு சாதகமாக யோசித்தது.

ஊரில் வேலைகளை பார்க்க ஆரம்பித்தவுடன் மனதின் கவனம் சற்று வைதேகியிடம் இருந்து திரும்பியது. ரமாவுக்கு திருமணம் என்பதால் அந்த வேலைகளில் சுந்தரேசனுக்கு உதவியாக இருந்தான். 

வைதேகி, ராம் இப்படி செய்வான் என்று சிறிது கூட  நினைத்து பார்த்திருக்கவேயில்லை. அவளை மனதளவில் நிறைய பாதித்திருந்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. ஆடை விலகியபோது கூட  போர்த்திவிடும் குணம் கொண்டவன் தான் ராம்.

தன்னை மனைவி என்ற உரிமையோடு பார்த்திருப்பானா என்று கூட தெரியவில்லை. ஏன் இப்படி செய்தான் என்று ஆராய்ந்தது. ஆராய்ந்தாலும் தான் அதற்கு காரணமாக இருந்திருப்போம் என்பதை நினைக்க மறுத்தது. 

எப்போதும் தான் அவனுடன் இரண்டு வாரத்தை பேசிவிட மாட்டேனா என்று தான் பார்த்துக்கொண்டிருப்பான். அவன் போய் இப்படி செய்துவிட்டானே என்று இருந்தது.

என்ன செய்வது என்றே புரியவில்லை. நிறைய குழப்பத்தில் இருந்தாள். முதல் உறவு அவளையும் மீறி நடந்து விட்டது. கணவன் தானே என்று அவளால் சமாதானப்படுத்திக்கொள்ள  முடியவில்லை. வெளியிலும் காட்டமுடியவில்லை.

நடந்து முடிந்தவுடனே அவனுக்கு காய்ச்சல் வேறு வந்துவிட்டது. பாதிக்கப்பட்டது நான். காய்ச்சல் அவனுக்கா. இப்போது நினைத்தால் கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது.

இந்த குழந்தைகள் தவறு செய்துவிட்டு பெற்றோர் அடிக்கும் முன்னரே அழ ஆரம்பித்துவிடுவார்களே. அந்த மாதிரி செய்துவிட்டானே. இடியட். என்று அவன் தப்பித்த விதத்திற்கு சிரிப்பும் வந்தது. அவன் செய்ததற்க்கு கோபமும் வந்தது. கண்மண் தெரியாத கோபம். ஆனால் வெறுப்பு இல்லை.

எதற்கும் அழுது புலம்பும் ரகமில்லை வைதேகி. அன்று வந்த அழுகையுடன் சரி. அதற்கு பிறகு அழுகை எல்லாம் இல்லை.  நடந்த நிகழ்வை பல முறை அசைபோட்டு விட்டாள். நடந்ததென்னவோ ஒரு முறை தான். ஆனால் இவள் நினைத்தது என்னவோ பலமுறை.  

இன்னும் நடந்த நிகழ்வுகளை அதிகம் போட்டு உழப்பிக்கொள்ள நேரம் இல்லாமல் அவளின் பரீட்ச்சைகள் நெருங்கி வந்தன. நினைவுகளை ஒதுக்கிவிட்டு பரீட்ச்சைக்கு படிக்க மூழ்கினாள்.

ராமிற்கு வைதேகியை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. மனசு தடுமாறியது. தன் நிலைமை அவனுக்கே பிடிக்கவில்லை. ஒரு செயலை செய்துவிட்டு அது எப்படி என்னை பாடாய் படுத்துகிறது என்றிருந்தது. அடுத்த ஐந்து நாட்களிலேயே தொழிலை காரணம் காட்டி சென்னை வந்தான்.  அவள் தன்னை எப்படி வரவேற்பாளோ என்று டென்ஷனாக வந்தான்.

வைதேகியின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. “வாங்க”, என்று எப்போதும் போல சொல்லிவிட்டு அவளின் ரூமிற்கு படிக்க சென்று விட்டாள்.

சுவாமிநாதனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவன். வைதேகியை தேடி அவளின் ரூமிற்க்கே சென்றான்.

“எப்போ எக்ஸாம் வைதேகி”, என்று பேச்சை ஆரம்பித்தான். அவனுக்கு தெரியும் அப்போது தானே மனோகருக்கும் ஆரம்பிக்கிறது. 

“நாளன்னைக்கு”,

“படிச்சிட்டியா”,

“படிச்சிட்டே இருக்கேன்”,

“சரி படி”, என்று அவளை பார்த்துக்கொண்டே அங்கேயே அமர்ந்து கொண்டான்.

நீ இப்படி உட்கார்ந்தா நான் படிச்சு கிழிச்ச மாதிரி தான் என்று மனதிற்குள் நினைத்தவள், அதை வெளியிலும் சொன்னாள். “நீங்க இப்படி உட்கார்ந்தா நான் எப்படி படிப்பேன்”, என்றாள் சலிப்பாக

“சரி, நான் திரும்பி உட்காரவா.”, என்று திரும்பி அமர போக.

“ஐயே, இது ஜோக்கா. நான் சிரிச்சிட்டேன்.”, என்று சிரிப்பது மாதிரி வாயை இழுத்து பிடித்தவள். “ப்ளீஸ் நான் படிக்கணும். நோ டென்ஷன்.”, என்றாள்.

அவள் சொன்ன விதம் அவனுக்கு சிரிப்பு வந்தது. வாய்விட்டு சிரித்தான்.

அவன் எப்போது சிரித்து முடிப்பான் என்பது போல பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவளை பார்த்தவன். “என்னோட சேர்ந்து வெளில தான் வரமாட்ட. அட்லீஸ்ட் இங்கயாவது என்னோட சேர்ந்து ஒரு காபி சாப்பிடு. அப்புறம் நான் என் வேலையை பார்க்க போயிடுவேன்.”,

அவனை முறைத்து பார்த்தாள்.

அவள் முறைப்பதை பார்த்தவன். “நிஜமா. உண்மையா. சத்தியமா  நான் போயிடுவேன்”, என்று பில்ட் அப் வேறு கொடுத்தான். 

அவனின் மலர்ச்சி மாறாத முகம் கண்டு, “இருங்க காபி எடுத்துட்டு வர்றேன்”, என்று. போனாள்.

அவளின் பின்னாலேயே சமையல் அறை சென்றவன். அவள் காபி கலக்கும் வரை சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான். அவள் செய்வதையே விடாமல் பார்த்துகொண்டிருந்ததாலா இல்லை அவளையே விடாமல் பார்த்துக்கொண்டு இருந்தததாலா. ஏதோ ஒன்று பயங்கர ரெஸ்ட் லெஸ் ஆகிவிட்டாள் வைதேகி.

அவளுக்கு டம்ளரில் பால் விடவே தடுமாறியது.  அதை பார்த்துக்கொண்டு இருந்தவன் ஒரு சின்ன சிரிப்போடு, அவளின் பின்புறம் போய் நின்றான். என்ன செய்யப்போகிறானோ என்று அவளுக்கு படபடப்பாக இருந்தது. நின்றவன்.  தடுமாறும் அவளின் கைகளை பிடித்து பாலை அவள் கைகளை கொண்டே ஊற்றினான்.    

அவனின் உடம்பு அவளின் மேல் முழுதாக உராய்ந்தது.

படபடப்பு அதிகமாகியது வைதேகிக்கு. “ஏய் நீ என்ன பண்ற, விடு, விடு”, என்று விலக போனாள் வைதேகி.

“இரு பேபி. பால் கொட்டிடும். அவசரப்படாத”, என்று மெதுவாக அவளின் கையை பிடித்துக்கொண்டே  பாலை ஊற்றினான் ராம். பல்லை கடித்துக்கொண்டு நின்றாள் வைதேகி. உடலில் ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்வது போல தோன்றியது.  

இவனுக்கு நிறைய தைரியம் வந்துவிட்டது. என்னவெல்லாம் பண்ணுகிறான் இவன் என்று அவஸ்தையாய் உணர்ந்தாள் வைதேகி.

அவன் ஊற்றியதுமே அவனை எதிர்த்து விலகினாள் வைதேகி.  

“நீ பண்றது எதுவுமே எனக்கு பிடிக்கலை. அனாவசியமா என்னை தொடற வேலையெல்லாம் வெச்சிக்காத.”, என்றாள் காட்டமாக.

“அனாவசியமா எங்க தொட்டேன். அவசியமா தானே தொட்டேன். இல்லைனா நீ பாலை கொட்டியிருப்ப பேபி.”, 

“ஏதோ ஒண்ணு. எனக்கு பிடிக்கலை. தொடாத.”,

“ஆனா எனக்கு பிடிச்சிருக்கே”,

“என்ன விளையாடறியா. ஒழுங்கா படிச்சிட்டு இருந்தவளை கூட்டிட்டு வந்து இப்போ டிஸ்டர்ப் பண்ற நீ. என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ”,

“உன்னை தான்”,

“என்ன ரைமிங்கா. என்னை படிக்க விடக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கியா.”,

“ஆமாமில்லை நீ எக்ஸாம்க்கு படிக்கணும் இல்லை. இப்போ கிளம்பிடறேன் அந்த காபியை கலக்கு.”, என்றான். வாய் தான் கிளம்பறேன் என்று சொன்னதே தவிர செயல் அதற்கு எதிர்மறையாக இருந்தது.

அவன் சுவாதீனமாக மறுபடியும் சமையல் திட்டில் ஏறி உட்கார்ந்தான். வைதேகி நான் கலக்க மாட்டேன் என்பது போல கையை கட்டி நிற்க.

“காபி வேணாம். விருந்தே சமைச்சு போடுறேன்னு சொல்றியா. சரி, எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை”, என்று அவள் போல அவனும் கையை கட்ட .

இதுதான் சாக்கென்று அவன் இங்கேயே தங்கிவிடுவானோ என்று பயந்தவள் மளமளவென்று காபியை கலக்கினாள்.

புன்னகையோடு பார்த்திருந்தவன் கைகளில் காபி டம்ளரை திணித்தாள்.

“உனக்கு”, என்றான்.

“நான் அப்புறம் சாப்பிடறேன்”,

“நான் கலக்கி தர்றேன்.”, என்று ராம் இறங்கப் போக.

“வேண்டாம், வேண்டாம், நானே கலக்கறேன்”, என்று அவசரமாக அவளுக்கும் கலந்தாள்.   

“சாப்பிடு”, என்றான்.

“என்னடா இவனோடு பெரிய இம்சையாக இருக்கிறது.”, என்று இருந்தது வைதேகிக்கு. அவன் செய்த இம்சையில் அவளுக்கு காபி பிடிக்காது ஹார்லிக்ஸ் தான் குடிப்பாள் என்பதே மறந்து போனது. வாயில் வைத்த பிறகு தான் காபியின் கசப்பை உணர்ந்தாள்.

அவளின் முகம் தானாகவே கசப்பை வெளிப்படுத்தியது.

அவனிடம் எரிந்து விழுந்தாள். “லூசு! உன்னால நான் காபி குடிக்க மாட்டேன்றதே எனக்கு மறந்து போச்சு. இப்போ இது வேஸ்ட்.”, என்று அதை ஆத்திரத்தில் கீழே கொட்ட போனாள்.

“இரு, இரு”, என்று அவள் கையில் இருந்து அதை பிடிங்கி அவன் குடித்தான். “ரொம்ப டேஸ்ட்”,  என்று அனுபவித்து குடித்தான். அவள் பருகியதை தான் அப்படி சொல்கிறான் என்று அவளுக்கு புரிய. கோபத்தில் வந்து அவன் தோளில் ஒரு அடி அடித்தாள்.

“என்னடா வந்து இவ்வளவு நேரம் ஆச்சே. அடியை காணோமேன்னு நினைச்சேன்.”, என்றான் லகுவாக.

அதை கேட்டவள் இன்னும் அடிக்க.

“இரு, இரு, இந்த காபியை வச்சிடறேன் கொட்டிடும்”, என்று அவன் சொல்ல.

“போடா”, என்றபடி அந்த இடத்தை விட்டு கிளம்ப போனாள்.

“இரு, இரு”, என்றவன் அவசரமாக குடித்து அவளுடனே வந்தான். அவன் பின்னேயே வருவதை பார்த்தவள். “என்ன? என்னை படிக்க விடற மாதிரி இல்லையா.”,

அவனுக்கு செல்லவே மனமில்லை. இருந்தாலும் அவள் படிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து. “எப்போ எக்ஸாம் முடியுது.”, என்று கேட்டான். 

அவள் தேதியை சொல்ல. “அதுக்கு பத்து நாட்களுக்கு மேல் இருக்கே”, என்று அவனையறியாமல் பெருமூச்சு வெளியேறியது. அவளின் படிக்கிற சமையத்தில் அவளை வீணாக படுத்த வேண்டாம் என்று நினைத்தவன் சுவாமிநாதனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

“சரி நான் கிளம்பறேன்”, என்று திரும்பி திரும்பி பார்த்தபடி செல்ல.

“இவன் என்னடா இப்படி செய்கிறான். நம்மை இனியும் ஒரு வழி செய்யாமல் விட மாட்டான் போல இருக்கிறதே.”, என்று யோசித்தபடியே இருந்தவள் கஷ்டப்பட்டு அவனின் நினைவுகளை ஒதுக்கி. படிப்பில் கவனத்தை செலுத்தினாள். 

“ஏண்டா படிக்கற பொண்ணை இப்படி பண்ற”, என்று அவனுக்கு அவனே கடிந்துகொண்டு வேலையை பார்க்க கிளம்பினான். வைதேகியோடு சிறிது நேரம் இருந்தது மனதுக்கு இதமாக இருந்தது.

அந்த நினைவுகளோடே பத்து நாட்களுக்கும் மேல் அவளை பார்க்காமல் ஓட்டிவிட்டான். அவளின் பரீட்சை முடிந்தது என்று தெரிந்தவுடனே சென்னைக்கு கிளம்பிவிட்டான். இத்தனை நாட்களாக சுவாமிநாதனின் தொழிலை பார்க்க கூட வரவில்லை.

“எப்போ பரிட்சை முடியும்னு பார்த்துட்டே இருந்திருப்பான் போல. உடனே வந்துட்டான்”, என்று அவனை பார்த்தவுடனே நினைத்தாள் வைதேகி.

அவளின் முக பாவனைகளில் இருந்தே அவளின் மனதை படித்தவன். “ஆமாம்! எப்போ பரீட்சை முடியும்னு பார்த்துட்டே இருந்தேன்., வந்துட்டேன்.”,  என்றான்.

வைதேகி முகத்தில் அவளை மீறி மெல்லிய சிரிப்பு உதித்தது. அதை மறைக்க முயன்றாள். அவள் மறைக்க முயன்ற சிரிப்பு ராமின் கண்களுக்கு தப்பவில்லை.

அவனுக்கு அவளுடன் வாயடிக்க இன்னும் உற்சாகம் வந்தது.    

ரமாவின் திருமணம் அடுத்த வாரம் இருந்தது அதை சாக்காக வைத்து வைதேகியிடம் பேச்சுக் கொடுத்தான். உற்சாகமாக தான் ஆரம்பித்தான் ஆனாலும்.

“அடுத்த வாரம் ரமாவுக்கு கல்யாணம் வைதேகி. நீ எப்போ வர்ற”,

“அப்பா வரும்போது வர்றேன்.”, என்றாள் சற்றும் யோசிக்காமல்.

“அப்பா வரும்போதா”, என்றான். அவள் சற்றும் யோசிக்காமல் பேசியதை கேட்டு அவனுக்கு சற்று கோபம் வந்தது.

“அங்க இருக்கறதும் உன் வீடு தான் வைதேகி. நீ கல்யாண சமையத்துல கரக்டா வந்து நின்னா, என்னால கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இவ்வளவு நாளா நீ படிச்சிட்டு இருக்கிற. மாமாவுக்கு உடம்பு சரியில்லை அப்படின்னு சொல்லிட்டேன். இனியும் அதையே சொல்லிட்டு இருக்க முடியாது.”, 

“இப்போ உன் பரீட்சையும் முடிஞ்சிடுச்சு. அதுவுமில்லாம கல்யாண சமையத்துல கூட நீ இப்படி வந்தா என்னவோ ஏதோன்னு பேசுவாங்க. என்னால எல்லார் கேட்கற கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது”,

“நீங்க பதில் சொல்றது உங்க பிரச்சினை. அதுக்கு நான் என்ன செய்யமுடியும்”,

“இப்படி அலட்சியமா பேசி தான் என்னை நீ கோபப்படுத்துற”,

“கோபம் வந்தா என்ன செய்வீங்க? அன்னைக்கு செஞ்ச மாதிரி செய்வீங்களா”,

ராம் நொந்தே விட்டான்.

“நீ வாயை அடக்கவே மாட்டியா. ஏண்டி. ஏண்டி இப்படி பண்ற”, என்றான் மனம் ஆறமாட்டாமல்.

நான் இப்படித்தான் என்பது போல அதே அலட்சியத்தோடு நின்றிருந்தாள்.

“நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துடற. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் இருந்துட்டு தான் வர்ற. என்னால எல்லார் முன்னாடியும் பொண்டாட்டி கூட இல்லைன்னு அசிங்கப்பட முடியாது.”,

“என்ன நீ வர்றியா இல்லை நீ வரமாட்டேன்னு சொல்றேன்னு மாமா கிட்ட பேசவா”,

“ஒண்ணும் வேண்டாம் வர்றேன்”, என்றாள் வேண்டா வெறுப்பாக.

எப்படியோ அவள் வந்தாள் போதும். அவள் வெறுப்பாக சொன்னால் என்ன சந்தோஷமாக சொன்னால் என்ன என்று விட்டுவிட்டான்.

அதை ஒதுக்கிவிட்டு. விடாமல் கஜினி முகமது மாதிரி படையெடுத்தான்.  “இந்தா உனக்கு கல்யாணத்துக்கு மாலதி உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி புடவை எடுத்திருக்கா. உன்கிட்ட குடுக்க சொன்னா. ப்ளௌஸ் தச்சிக்கறதாம்”, என்று கொடுத்தான்.

அவள் அதை கைகளில் வாங்கி அப்படியே வைத்திருந்தாள்.

“பிரிச்சு பாரு”, என்றான் ஆவலாக.

அவள் பார்பேனா என்று நிற்க.

“இரு, மாலதிகிட்ட அண்ணிக்கு புடவை பிடிக்கலைன்னு சொல்லிடறேன்”, என்று அவன் அவன் போனை எடுக்க. இவள் அவசரமாக அதை பிரித்தாள். அழகான பச்சை பட்டு அதிக வேலைப்பாடுகள் இல்லாமல் அளவான வேலைப்பாட்டில். செல்ப் பார்டரில் நன்றாக இருந்தது.

“எப்படி இருக்கு”, என்றான்.

அவன் இருமுறை கேட்டதை வைத்தே அது இவன் செலக்ஷன் என்று புரிந்துகொண்டவள். “நல்லா இல்லை. சுமாராத்தான் இருக்கு. இப்படி ஏதாவது சொல்வோமா”, என்று யோசித்தாள்.

ஆவலாக அவன் இவள் முகம் பார்த்துக்கொண்டிருப்பது புரிய. வாய் தானாக. “நல்லா இருக்கு”, என்று முணுமுணுத்தது.

அவள் மெதுவாக சொன்னாலும் அவன் செவிகளில் அது நன்றாக விழுந்தது. “நான் தான் செலக்ட் பண்ணினேன்”, என்றான் பெருமையாக.

“ஆமா! புடவை கடைக்காரர் ஒரு புடவை செலக்ட் பண்றது பெரிய விஷயம்.”, என்று அலட்சியமாக மறுபடியும் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அதுவும் அவனின் காதுக்குள் நன்றாக விழுந்தது அதை பற்றியெல்லாம் அவன் கண்டுகொள்ளவேயில்லை. அவன் தான் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவளின் வாய்துடுக்கை வெளியில் கொண்டு வந்தது.

“எப்படி செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு. ஒண்ணுமே தெரியாத மாதிரி. ஒரு லவர் பாய் மாதிரி நடிக்கற”,

“ஏய்! நடிக்கற கிடிக்கறன்ன தொலைச்சிடுவேன்”,

“என்னடி பண்ணினேன்! புருஷனும் பொண்டாட்டியும் பண்றதை தானே பண்ணினேன்! இன்னும் எத்தனை நாள் அதை பிடிச்சிட்டு தொங்குவ! சும்மா எனக்கு அதை ஞாபகபடுத்திட்டே இருக்காத. நானே அதை மறக்கணும்னு நினைக்கிறேன். நீ ஞாபகப்படுதிட்டே இருந்தன்னா அப்புறம் திரும்ப திரும்ப அதை மனசு வேணும்னு தான் கேட்கும். உனக்கு பரவாயில்லைனா எனக்கு ஒண்ணுமில்லை”, என்றான்.

அவன் சொன்ன விதத்தில் பயந்தே போனாள். “என்ன மறுபடியுமா”, என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

“நானா சொல்றேன். நீதான் அதை சொல்லிட்டே இருக்கே. அப்போ உனக்கு தானே தேவைன்னு அர்த்தம்”,

“டேய்! உன்னை.”, என்று ஆரம்பித்தவளுக்கு. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மறுபடியும் அடிக்க துவங்கினாள்.

“இன்னைக்கு கோட்டாவ ஆரம்பிச்சிட்டியா. இரு உட்கார்ந்துக்கறேன். உனக்கு அடிக்க வசதியா இருக்கும்.”, என்று அவன் அவளின் கைகளை விலக்கி அமர்வதற்கும் சுவாமிநாதன் வருவதற்கும் சரியாக இருந்தது. 

அவர் வந்ததும் இருவரும் முகத்தை இயல்பாக வைத்து சண்டையை முடித்துக்கொண்டனர்.

இவர்களின் பூசல்களை அறியாத அங்கே வந்த சுவாமிநாதன். “இப்போ தான் எக்ஸாம் முடிஞ்சிடுச்சே வைதேகி. ராமும் நீயும் எங்கயாவது வெளில போயிட்டு வாங்க.”, என்றார்.

“நேத்து தானேப்பா எக்ஸாம் முடிஞ்சது டயர்டா இருக்குப்பா”, என்றாள் வைதேகி.

“நீ என்னம்மா நடந்தா போகபோற. கார்ல போகபோற. போ. அதுகென்ன. போ, போ. போய் ரெடியாகு”, என்று மறுபேச்சு பேசமுடியாதபடி சொன்னார்.

ராமிற்கு இருந்த மனநிலையில் அவளோடு வெளியே சென்று மீண்டும் சண்டை போடுவதற்கு வீட்டிலேயே சண்டை போடலாம் என்று இருந்தது.

“அவளுக்கு டயர்டா இருந்தா இன்னொரு நாள் போறோம் மாமா”, என்றான்.

“என்ன பெரிய டயர்ட். ஏதாவது கோவிலுக்காவது போயிட்டு வாங்க”, என்றார். அவர் அவர்கள் செல்லும்வரை விடமாட்டார் என்று அவரின் பேச்சிலேயே தெரிந்தது.

வேறு வழியில்லாமல் இருவரும் கிளம்பினர்.

காரில் ஏறியதும், “எங்க போகலாம்”, என்றான் வரவழைத்த உற்சாகத்துடன்.   

“எங்கே வேணும்னாலும் போகலாம்”, என்றாள் அசிரத்தையாக.

அவள் அப்படி சொன்னவுடனே ராமின் முகம் விழுந்துவிட்டது. சட்டென்று இறுகிவிட்டான்.

வைதேகியின் கண்களுக்கு அது தப்பவில்லை. முதல் முறையாக தான் அவனை நிறைய படுத்துகிறோமோ என்று இருந்தது. திரும்ப பேசவோ சமாதனப்படுத்தவோ ஈகோ இடம் கொடுக்க வில்லை.

ராம் மேலே எதுவும் கேட்கவில்லை.

நேரே வடபழனி முருகன் சன்னதிக்கு விட்டான். அவளை எதுவும் கேட்கவில்லை. இறுகிய முகத்துடனே அர்ச்சனைக்கு தட்டை வாங்கி உள்ளே சென்றான். அவளிடம் எதுவும் கேட்கவில்லை.  அவன் பின்னேயே சென்றாள் வைதேகி. அவளும் எதுவும் அவனோடு பேசவில்லை.

ஆனால் அவன் செய்வதை போலவே அவளும் செய்தாள். அவன் பிரகாரத்தை சுற்றி வந்தால், அவளும் சுற்றி வந்தாள். எங்கேயாவது நின்று வணங்கினால், அவளும் நின்று வணங்கினாள். அவன் அங்கே நின்று எழுதி வைத்திருந்த போர்டை படிக்க. அவன் படித்து முடிக்கும் வரை பொறுமையாக நின்றிருந்தாள்.

“இது என்ன அதிசயமாக இருக்கிறதே. நான் செய்கிற மாதிரியெல்லாம் செய்கிறாளே. என்னவாயிற்று இவளுக்கு”,  என்று அவளின் முகம் பார்க்க. இவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

பின்னர் முருகன் சன்னதிக்கு இருவரும் ஒருமித்தே சென்றனர். “யார் பேருக்கு அர்ச்சனை”, என்று ஐயர் கேட்கவும். ராம் வைதேகியின் முகம் பார்த்தான். “சாமி பேருக்கு”, என்றாள்.  

எப்பொழுதும் போல இருவருக்கும் ஒரே வேண்டுதல் தான். ஆனால் இருவரும் தனித்தனியாக வேண்டினர். “என்னுடைய வாழ்க்கையை சரியாக்கிவிடு கடவுளே”, என்று மனமுருக அவன் சன்னிதியில் நின்றனர்.

“அது என்னுடைய கைகளிலா இருக்கிறது. உங்களுடைய கைகளில் தான் இருக்கிறது”, என்று கடவுள் சிரித்தார்.  

Advertisement