Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயே ராமிடம் மாலதியை அழைத்துக் கொண்டு வந்தாள் வைதேகி.

“மாலதி கிட்ட டிரெஸ் எதுவுமே நல்லா இல்லை, அவளுக்கு கொஞ்சம் டிரெஸ் எடுத்தா பரவாயில்லை”, என்றாள் ஒரு முறைப்போடு.

“அதுக்கு ஏண்டா இவ நம்மளை பார்த்து முறைக்கிறா”, என்றிருந்தது ராமிற்கு. எதையும் காட்டிகொள்லாமல் , “என்ன பண்ணனும்”, என்றான்.

“கடைக்கு போயி டிரெஸ் எடுக்கணும்”, என்றாள்.

“சரி போகலாம்”, 

அவன் சரியென்று சொன்ன உடனேயே மாலதிக்கு டிரெஸ் எல்லாம் பர்ச்சேஸ் செய்ய அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் வைதேகி. சுவாமிநாதன் சின்னவர்களை அனுப்பி விட்டு தனக்கு ஒரு மாதிரி இருக்கிறது என்று வீட்டிலேயே இருந்து கொண்டார்.

மாலதிக்கு போதும் போதும் என்ற மட்டிலும் உடைகளை வாங்கினாள் வைதேகி. “இவ்வளவா தேவையா”, என்றிருந்தது ராமிற்கு.

அவனின் பார்வையை பார்த்தே அவனின் எண்ணப் போக்கை உணர்ந்து கொண்டாளோ என்னமோ. வைதேகி ராமை பார்த்து. “காலேஜ் போற பொண்ணு ரெண்டு மூணு டிரெஸ்ஸையேவா மாத்தி மாத்தி போட்டுட்டு போவா. அதுவும் நல்ல சோளக்கொல்லை பொம்மை மாதிரி இருக்கு”, என்றாள் அவனிடம்.

ராம் வாயே திறக்கவில்லை. அவள் செய்யும் செலவிற்கு பணம் மட்டும் அவனே கொடுத்தான்.

“நான் தானே கூட்டிட்டு வந்தேன், நான் தான் செலவு செய்வேன். என் கிட்ட இருக்கு”, என்று வைதேகி சொன்னதற்கு கூட. “என்கிட்டயும் இருக்கு. நான் தான் கொடுப்பேன்”, என்றான் கறாராக ராம். பிறகு வைதேகி எதுவும் பேசவில்லை.

மாலதிக்கு எடுத்த பிறகு. வைதேகியை பார்த்து. “நீயும் எடுத்துக்கோ வைதேகி”, என்றான் ராம்.

“இல்லை என் கிட்ட இருக்கு”, என்றாள் வைதேகி. என்றாள் கடினமாக.

அவளின் பதிலில் ராமிற்கு கோபம் வந்தது. எப்போதும் கோபத்தை அடக்கியே பழக்கப்பட்டவன் ராம். வெகு சில சமயமே அவனை மீறி கோபம் வந்துவிடும். இப்போது வைதேகியின் பதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தது.

“உன்கிட்ட இல்லைனா நான் எடுக்க சொல்றேன்”, என்றான் அவனையறியாமல் திருப்பி கோபமாக.

“நான் தான் என்கிட்ட இருக்குன்னு சொல்றேனே”,

“ஏன் உனக்கு டிரெஸ் எடுத்துக் கொடுக்கற அளவுக்கு கூட எனக்கு வக்கில்லைன்னு நினைக்கிறியா”, என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அடிக்குரலில். 

“நான் அப்படி சொல்லலை. நீங்க தான் சொல்லிக்கிறீங்க. எனக்கு என்ன தெரியும்”, என்றாள் தெனாவெட்டாக.

அவனையும் மீறி கர்ஜித்தான் ராம். “இப்படி என்கிட்ட பேசாத வைதேகி”, என்று.

அவனின் குரல் சற்று பயம் கொடுத்தது தான் வைதேகிக்கு. இருந்தாலும் அவனிடம் பதிலுக்கு முறைக்க ஆரம்பித்தாள் வைதேகி. திருப்பி ஏதாவது சொல்ல வேண்டும் போல ஆத்திரமாக வந்தது வைதேகிக்கு.

அவர்கள் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும். பேச்சு வேறு திசையில் போவதையும் அறிந்து மாலதி தான் வைதேகியை சமாதானப்படுத்தும் பொருட்டு பேசினாள்.

“உங்ககிட்ட இருந்தாலும் பரவாயில்லை அண்ணி. எங்களுக்காக எடுத்துக்கோங்க அண்ணி.”, என்று மாலதி கட்டாயப்படுத்தின பிறகு. மாலதிக்காக அவளும் இரண்டு செட் எடுத்துக் கொண்டாள்.

அதன் பிறகே ராமின் கோபம் சற்று மட்டுப்பட்டது.

“பணம் நான் தான் கொடுப்பேன்”, என்று கலாட்டா செய்யலாமா என்று நினைத்தாள் தான். மாலதியின் மலர்ந்த திருப்தியான முகத்தை பார்த்து அமைதியாகி விட்டாள் வைதேகி. இருந்தாலும் முகம் சற்று கோபத்தை காட்டியது.

ராமிற்கு வைதேகியை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை.

சீக்கிரம் மாலதிக்கு நகைகளும் வாங்க வேண்டும் என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டான் ராம்.   

ஒரு வழியாக எல்லாவற்றையும் வாங்கின பிறகு. காஞ்சீபுரத்திற்கு கிளம்பி வந்தவர்களை தினப்படி வாழ்க்கை அணைத்துக் கொண்டது.

ராமும் மாலதியும் மனோகரும் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். மாலதியும் மனோகரும் எப்போதும் போல காலேஜ் போக. ராம் தொழிலை பார்க்க கிளம்பினான்.

மாலதியின் சோளக்கொல்லை பொம்மை போன்ற உடையிலேயே அவளை பார்த்து மயங்கியவன் மோகன். இப்போது வைதேகியின் கைவண்ணத்தில் புது புது உடையில் நன்கு பளிச்சென்று மிளிர்ந்த மாலதியை பார்த்து இன்னும் மயங்கித்தான் போனான்.

அவளிடம் எப்படி பேச்சு கொடுப்பது என்று தான் தெரியவில்லை. அவளும் தன்னை கவனிப்பதாக தெரியவில்லை. எப்படியாவது அவளை அணுகியே ஆக வேண்டும் என்று பயங்கரமாக மூளையை போட்டு குழப்பிக் கொண்டான். வழி தான் தெரியவில்லை.    

அவன் வந்து இரண்டு மூன்று தினங்களிலேயே சுவாமிநாதன் அவனை அழைத்தார். “என் தொழில் அப்படியே இருக்கு ராம். வாடிக்கையாளர் எல்லாம் நூலுக்கு போன் பண்ணிட்டே இருக்காங்க. என்னால எதையும் பார்த்துக்க முடியும்னு தோணலை. நீ எப்போ இருந்து பார்த்துக்க போற”, என்றார். குரலும் சோர்வாகவே ஒலித்தது. 

அவரை ஹாஸ்பிடல் அழைத்துப் போக வேண்டும் என்ற ஞாபகமும் வர. “நாளைக்கு நான் அங்க வர்றேன் மாமா”, என்றான்.

அன்று வேறு கோபமாக வைதேகியிடம் பேசிவிட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு. வைதேகியிடம் பேச ஒரு சாக்கு கிடைத்தது. அவளை அழைத்தான். “வைதேகி நாளைக்கு மாமாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். நீ ஒரு போன் பண்ணி அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறியா”,

“ஆனா எனக்கு நாளைக்கு இன்டர்னல் எக்ஸாம் இருக்கு. என்னால வர முடியாதே”,

“பிரச்சனையில்லை, நான் பார்த்துக்கறேன்”,

“இன்னொரு நாள் போனா, நானும் வருவேன்”,

“போன்லயே அவர் குரல் சோர்வா ஒலிக்குது, நேர்ல எப்படி இருக்கார்”,

அவர் உற்சாகமாக இல்லை சோர்ந்து தான் காணப்படுகிறார் என்று வைதேகியும் கவனித்தே இருந்தாள். “கொஞ்சம் சோர்வா தான் தெரியறார்” என்றாள் ராமிடம். 

“அப்போ நாள் தள்ளி போட வேண்டாம். நானே நாளைக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்.”, 

“சரி! நான் அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு சொல்லறேன்”, என்று போனையும் உடனே வைத்துவிட்டாள்.

“ரெண்டு வார்த்தை பேசினா என்ன குறைஞ்சா போயிடுவா”, என்று தோன்றியது ராமிற்கு. வழக்கமாக தோன்றுவது தான் இருந்தாலும் என்ன பிரயோஜனம்.

சிறிது நேரத்தில் அவளே போன் செய்தாள். “நாளைக்கு காலையில பத்து மணிக்கு வர சொல்லியிருக்காங்க”, என்றாள். 

“சரி! அப்போ நான் காலையில சீக்கிரம் வந்துடறேன்”,

“சரி”, என்றவள். “மாலதி இருக்காளா”, என்றாள்.

மாலதியிடம் போனை கொடுத்தான்.

“என்ன பண்றே மாலதி”,

“படிச்சிட்டு இருந்தேன் அண்ணி”,

“மனோ என்ன பண்றான்”,

“அவன் இன்னும் வீட்டுக்கே வரலை. ஃபிரிண்ட்ஸ் ஓட ட்ரீட். வர லேட் ஆகும்னு சொல்லிட்டு தான் போனான். இப்போ தான் அவனுக்கு புதுசா ஒரு ஃபிரின்ட் கிடைச்சிருக்காங்க இல்லை. அதான் இப்படி”,

“யார் அது மாலதி”,

“அதான் அண்ணி சுந்தரேசன் மாமாவோட பையன் மோகன். அவங்க கூட சேர்ந்ததுல இருந்து ஊர் சுத்துறது அதிகம் ஆகிடுச்சு. இன்னைக்கு தான் அவனை ராமண்ணா  கிட்ட சொல்லி கண்டிக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்றீங்க அண்ணி”,

“நாளைக்கு எனக்கு இன்டர்னல் எக்ஸாம். அதுக்கு படிச்சிட்டு இருக்கேன்”,

“இது தான் ஃபர்ஸ்ட் எக்ஸாம்மா.”,

“இல்லை முடியப்போகுது.”,

“அப்புறம் ஸ்டடி லீவ். அப்புறம் செமஸ்டர் எக்ஸாம் தான்”,

“அப்போ லீவ்க்கு ஊருக்கு வர்றீங்களா அண்ணி.”, என்றாள் ஆர்வமாக மாலதி.

“இல்லை வரலை”, என்று சொல்ல மனம் வராமல். “கொஞ்சம் நல்லா படிச்சிட்டேன்னா வர்றேன்”, என்றவள். “மனோவுக்கும் தானே இப்போ செமஸ்டர் வரும். அவன் ஏன் படிக்காம சுத்திட்டு இருக்கான்”,

“அவன் எப்பவுமே அப்படிதான் அண்ணி. கடைசி நிமிஷத்துல தான் உட்கார்ந்து உரு போடுவான். அதுக்குள்ள எங்க எல்லோரையும் டென்ஷன் பண்ணி விட்டுடுவான்”,

“உன் டிரெஸ் எல்லாம் உனக்கு கரெக்டா பிட் ஆகுதா”,

“எல்லாம் நல்லா இருக்கு அண்ணி. என் பிரிண்ட்ஸ் எல்லாம் நான் ஆளே மாறிட்டேன்னு சொல்றாங்க. அவ்வளவு நல்லா இருக்காம்.”, என்றாள் சந்தோஷமாக. 

இவர்கள் பேசுவதை பொறாமையோடு பார்த்துக்கொண்டு இருந்தான் ராம். “எல்லோரிடமும் பேசமுடிகிறது, என்னை தவிர”, என்று மனதிற்குள்ளேயே வருந்திக் கொண்டான். இருந்தாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை.

அடுத்த நாள் காலை  வைதேகி எட்டு மணிக்கெல்லாம் காலேஜ் சென்றுவிடுவாள். அவள் சென்று விடும்முன் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டான் ராம்.

வைதேகி தான் வந்து கதவையே திறந்தாள். இவனை பார்த்தவள் ஒரு மெல்லிய புன்னகையோடு, “வாங்க”, என்றாள்.

அதற்கே காற்றில் பறந்தான் ராம். அவளை பார்த்து பதிலுக்கு புன்னகைக்க.

“உட்காருங்க, அப்பா இப்போ வந்துடுவாங்க”, என்று சொல்லி சென்றாள். “ஏதாவது சாப்பிடறீங்களா”, என்ற உபசரிப்பானா வார்த்தைகள் ஒன்றும் இல்லை. 

இவள் என்னாடா அசல் மனிதரை உபசரிப்பது போல உபசரிக்கிறாள் என்றிருந்தது ராமிற்கு.

இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.  ஏழரை மணியை தொட்ட போது தான் சுவாமிநாதன் வந்தார்.

“வா ராம், வந்து ரொம்ப நேரம் ஆச்சா. என்னால் வேகமா வேலைகளை செய்ய முடியலை”, என்றார் அயர்வோடு.

பார்த்தாலே மிகவும் களைப்பாக தெரிந்தார்.

“என்ன பண்ணுது மாமா”, என்றான் அக்கறையாக.

“சொல்ல தெரியலை ராம். ஏதோ பண்ணுது ரொம்ப களைப்பா இருக்கு. கொஞ்ச வேலை செஞ்சாலே மூச்சு வாங்குது”,

“இன்னைக்கு டாக்டர் கிட்ட இதையெல்லாம் சொல்லுங்க”, என்றான் சற்று கவலையோடு.

வைதேகி ரெடியாகி காலேஜிற்கு கிளம்பும் அவசரத்தோடு வந்தாள்.

அவளின் நேர்த்தியான உடையலங்காரத்தை பார்த்து ரசித்தான் ராம்.

“ராம்க்கு டிபன் வெச்சிட்டு போம்மா”, என்றார் சுவாமிநாதன்.

அவள் கையை திருப்பி அவளின் வாட்சை பார்க்க அவளுக்கு நேரமாகி விட்டதை உணர்ந்து ராம். “அவளுக்கு லேட் ஆகும். அவ போகட்டும் மாமா. நான் உங்களோட சாப்பிட்டுக்கறேன்”, என்றான்.

வைதேகி தான் மட்டும் எப்படி சாப்பிடுவது. அப்பா திட்டுவாரே. என்று அப்படியே கிளம்பப் போக.

“நீயும் சாப்பிடாம போவியா. போ போய் சாப்பிடு”, என்றான் ராம்.

வேகமாக சென்று சமையல் அம்மா செய்து வைத்திருந்த இட்லியை எடுத்து வாய்க்குள் திணித்தாள் வைதேகி. தொண்டையை அடைத்தது. அவள் மறுபடியும் தண்ணீருக்காக எழும்போதே. அவளின் தேவையை உணர்ந்து தண்ணீரை எடுத்து வந்தான் ராம்.

“என்னையே பார்த்துட்டு இருப்பானோ இவன்”, என்று எரிச்சலாக வந்தது வைதேகிக்கு. அதை மறையாது கேட்டாள். “என்னையே பார்த்துட்டு இருப்பீங்களா”, என்று.

“ஆம்”, என்றும் ராம் சொல்லவில்லை, “இல்லை”, என்றும் சொல்லவில்லை. அமைதிகாத்தான் ராம்.

“வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்கான். கேட்டா கேட்டதுக்கு பதில் சொல்றது இல்லை.”, என்று முனகிக்கொண்டே எழுந்து சென்றாள் வைதேகி.   

அவளின் முனகல் ராமின் காதில் நன்கு விழுந்தது.” வாயை மூடுராளா இவ. இதுல என்னை வேற வாய் பேசலைன்னு சொல்றா”, என்றான் மனதிற்குள்ளேயே வழக்கம் போல.

அவள் சாப்பிட்டிவிட்டு அரக்க பறக்க கிளம்புவதை பார்த்தான் ராம். அவனுக்கு தெரியும் அவள்காலேஜ் பஸ் ஏறுவதற்கு மெயின் ரோடிற்கு சற்று தூரம் ஒரு ஐந்து நிமிட நடை நடக்க வேண்டும் என்று.

அவள் ஒத்துகொள்ள மாட்டாள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டுத் தான் பார்ப்போமே என்ற ஆசையில். “நான் வேணும்னா பஸ் ஸ்டாப்பிங்க்கு கொண்டு போய் விடட்டா”, என்றான்.

“இல்லை, வேண்டாம்”, என்றாள் வெடுக்கென்று முகத்தை கடுமையாக வைத்து.

ராமின் முகம் என்ன முயன்றும் சுருங்கி விட்டது. அதையே கொஞ்சம் தன்மையாக சொல்லியிருக்கலாம், எதற்கு இப்படி வெடுக்கென்று பேசுகிறாள் என்றிருந்தது ராமிற்கு. நான் தழைந்து போனால். இவள் தன்னை இளக்காரமாக நினைக்கிறாளோ என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவளிடம் தெரிந்து தெரிந்து கேட்டதற்கு தனக்கு தானே கீழிரக்கமாக உணர்ந்தான்.

தான் இணக்கமாக போக வேண்டும் என்ற நினைபெல்லாம் தவிடு பொடியாகும் போலத் தோன்றியது.   

வைதேகிக்கும் அதே நினைப்பு தான். “நான் வேண்டாம் என்று அமைதியாக மறுத்து இருக்கலாமோ. ஏன் வள்ளேன்று விழுந்தேன். அவனின் முகம் விழுந்து விட்டது”, என்றிருந்தது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம். “நான் தான் அவனை பிடிக்கவில்லை என்கிறேனே, அப்புறம் ஏன் என்னிடமே வருகிறான்”, என்றிருந்தது.

“நீ அவனின் மனைவி. உன்னிடம் வராமல் வேறு யாரிடம் வருவான்”, என்று இன்னொரு மனம் எடுத்துரைக்க. நிதர்சனத்தை ஒத்துக்கொள்ள பிடிக்காமல், “உன் வேலையை பார்”, என்று தன் மனதிடமும் வள்லென்று விழுந்தாள்.

சுவாமிநாதனை ஹாஸ்பிடல் அழைத்துப் போனான். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிலைமை சற்று மோசம் என்றே சொன்னார்கள். “சர்ஜெரி யை தாங்கும் அளவிற்கு அவரின் உடல் நிலை இல்லை. இஜெச்சன் பிராக்சன் கம்மியாக இருக்கிறது. அதனால் மருந்து மாத்திரைகள் மூலம் எவ்வளவு நாளைக்கு இழுக்க முடியுமோ. அவ்வளவு நாளைக்கு இழுக்கலாம்”, என்றார்கள்.

கேட்ட ராம் அதிர்ந்தான். இப்படி ஒரு சூழ்நிலையை அவன் எதிர்பார்க்கவில்லை. சுவாமிநாதனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டான். 

“எப்படி டாக்டர் அவர் ரெகுலரா ட்ரீட்மென்ட்ல தானே இருக்கிறார்”,

“யாரோ ஒருத்தருக்கு ட்ரீட்மென்ட் ரெஸ்பான்ஸ் ஆகாம கண்டிஷன் மோசமாக ஆரம்பிக்கும். இவருக்கு அப்படி இருக்கு என்ன பண்றது.”,

“வேற வழியேயில்லையா டாக்டர்”,

“மருந்து மாத்திரையை கரக்டா சாப்பிட்டு. ஓரளவுக்கு எதுக்கும் டென்ஷன் ஆகாம இருந்தார்னா. அதுவே இன்னும் சில வருஷ வாழ்கையை கொடுக்கலாம்”, என்று பேச்சை முடித்துக் கொண்டனர்.  

சுவாமிநாதனிடம் அது பற்றி எல்லாம் ராம் பேசிக்கொள்ளவில்லை. இருக்கும் கொஞ்ச காலத்திற்கும் அவர் நிம்மதியாக இருக்கட்டும் அவரை கலங்கடிக்க வேண்டாம் என்று மறைத்துவிட்டான்.

ஹாஸ்பிடலில் இருந்து வரும்போதே சுவாமிநாதன் அவரின் வீடுகள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கள் இடங்கள் என்று அனைத்தையும் அவனுக்கு காட்டிக் கொண்டு தான் வந்தார்.

அவர்களிடமெல்லாம். “இனிமேல் இவர் தான் உரிமையாளர். இவரிடம் தான் இனி நீங்கள் வாடகைகள் எல்லாம் கொடுக்க வேண்டும்”, என்று சொன்னார்.

பின்பும் அவனிடம் அவரின் தொழில் பற்றி கொடுக்கல், வாங்கல் பற்றி எல்லாம் சொன்னார். முன்பே சொன்னது தான் இருந்தாலும் மறுபடியும் சொன்னார்.

“தொழிலை நீ ஏற்று நடத்து”, என்றார்.

“நீங்க அதிகம் பேசவேண்டாம் மாமா. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்”, என்று அவன் இரண்டு மூன்று முறை வற்புறுத்தி சொன்ன பிறகே அமைதியானார்.

வீட்டிற்கு அவர்கள் வந்த போது வைதேகியும் வந்திருந்தாள். “என்ன சொன்னாங்க டாக்டர்”, என்று சுவாமிநாதன் முன்னிலையிலேயே கேட்க. அவரின் முன் எதுவும் சொல்ல முடியாதவனாக. “நல்லா இருக்கார், மருந்து மாத்திரை எல்லாம் குடுத்திருக்காங்க”, என்றான்.

ராமிற்கு வைதேகியிடம் உண்மையை சொல்லுவதா வேண்டாமா என்று தெரியவில்லை. அவனின் வாய் பதில் சொன்னாலும் முகம் குழப்பத்தையே காட்டியது.

வைதேகியும் அதை உணர்ந்தாள்.

அவன், “நான் கிளம்புகிறேன்  மாமா”, என்று சொன்னதற்கு. “சாப்பிடாமல் கிளம்பக் கூடாது”, என்று சொல்லிவிட்டு. “நான் கொஞ்சம் படுத்திருக்கிறேன்”, என்று சொல்லி சென்றார்.

“என்ன சொன்னாங்க அப்பாக்கு”, என்றாள் வைதேகி அவர் சென்ற பிறகு.

“சர்ஜெரி முடியாதுன்னு சொல்லிட்டாங்க. மருந்து மாத்திரை குடுத்திருக்காங்க. ஜாக்கிரதையா பார்த்துக்க சொன்னாங்க”, என்றான்.

“அப்படின்னா”, என்றாள் கலவரமாக வைதேகி.

“அவர் உடம்பு கண்டிஷன் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லை. கொஞ்சம் சீரியஸா தான் இருக்கார். சர்ஜெரி எல்லாம் உடம்பு தாங்கதுன்னு சொல்லிட்டாங்க. இப்போதைக்கு பயம் இல்லை. மருந்து மாத்திரை மூலமா அவருக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை குடுக்கறது மூலமா. அவரோட வாழ்நாளை நம்மளால இழுக்க முடியும்னு சொல்லிட்டாங்க”, என்றான்.

கேட்ட வைதேகிக்கு கண்களில் நீர் திரண்டது.

அதைப் பார்த்த ராம். “நீ ரொம்ப கவனமா இருக்கணும் வைதேகி. அவர் முன்னாடி நீ இப்படி உணர்ச்சி வசப்படக்கூடாது. அப்புறம் அதுவே அவருக்கு ரொம்ப பெரிய கவலையை கொடுத்துடும். உன் சந்தோஷம் தான் அவர் சந்தோஷம். நீ அவருக்கு உடம்பு சரியில்லைன்ற மாதிரி காட்டி கொடுத்துட்டா. அது அவரோட வாழ்நாளையும் குறைச்சிடும்”, என்றான் ஒரு சிறு பெண்ணிற்கு சொல்வது போல தன்மையாக.

அவன் சொன்ன விதத்தில் அவளையறியாமல் தலையாட்டினாள்.

“வேற யாராவது எக்ஸ்பெர்ட் ஒபினியன் வாங்குவோமா”, என்றாள்.

“இவங்களே எக்ஸ்பெர்ட் தான். இருந்தாலும் இன்னும் ஒண்ணு ரெண்டு பேரை பார்க்கலாம். உடனே பார்க்க வேண்டாம் அவருக்கு சந்தேகம் வரும் மெதுவா பார்க்கலாம்”, என்றான்.

அவளின் கலங்கிய முகத்தை பார்க்க பார்க்க அவனுள் ஏதோ அசைந்தது. அவளை அணைத்து தேற்ற வேண்டும் போல கையும் மனமும் பரபரத்தது.

அவள் கைகளை முயன்று தைரியமாக பற்றினான். அதை தன் கைகளுக்குள் அடக்கினான்.

“உனக்கு நான் இருக்கேன். எப்பவும். நான் இருக்கிற வரைக்கும்.”, என்று சொல்லி அவளின் கைகளை விட்டு. “நான் கிளம்பறேன்”, என்றான்.

அவனின், “நான் இருக்கிற வரைக்கும்”, என்ற பேச்சில் எரிச்சல் ஆனால் வைதேகி. “இருக்கிற பிரச்சினை போதாதுன்னு நீங்க வேற ஏன் அபசகுனமா பேசறீங்க”, என்றாள் பட்டென்று அதட்டலாக.

அவளின் அதட்டல் ராமிற்கு அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. “நான் கிளம்பவா”, என்றான்.  

“சாப்பிட்டு போங்க. அப்பா கேட்பார்”, என்றாள் கரகரத்த குரலில்.

பதில் பேசாமல் வந்து டைனிங் டேபிள் முன் அமர்ந்தான். ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது. இருவருக்குமே அது தேவையாக இருந்தது.

அமைதியாக அவனுக்கு பரிமாறினாள். என்ன வேண்டும் என்று கூட கேட்கவில்லை. அவளின் இஷ்டத்திற்கு பரிமாறினாள். ராம் எதுவும் சொல்லாமல் அவள் வைத்ததையெல்லாம் உண்டு விட்டு ஒரு தலையசைப்போடு கிளம்பினான்.

இருவருக்குமே மனம் கனத்தது.

இங்கேயே இருங்கள் என்று அவள் சொன்னாள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ராமின் மனம் ஏங்கியது. அவளோடே இருக்க வேண்டும் என்று தோன்றிய ஆசை கொண்ட மனதை அடக்கினான்.  மாலதியும் மனோகரும் ஞாபகத்தில் வரவும் நேரமாகிவிட்டதே என்று அவசரமாக கிளம்பினான்.

சாதாரணமாகவே வைதேகி ராமை கண்டுகொள்ள மாட்டாள். இப்போது தந்தையின் உடல் நலம் அவளின் முன் நின்று பயமுறுத்த ராமை பின்னுக்கு தள்ளினாள்.  

Advertisement