Advertisement

அத்தியாயம் பதினொன்று:

வைதேகியின் தந்தை அவளிடம் தெளிவாக சொல்லிவிட்டார். அவர்கள் வரும்போது அவர்களின் உபச்சாரத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்று.

“அன்னைக்கு மாதிரி உன் ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்க கூடாது வைதேகி. ராம் மட்டும்ன்னா நான் ஏதாவது பேசி கூட சமாளிப்பேன். ஆனா மாலதியும் மனோகரும் கூட வர்றாங்க. நல்லா அவங்களை கவனிச்சு பார்த்துக்கோ”, என்றார்.

“சரிப்பா”, என்றாள்.

மறுபடியும். “சரியா கவனிக்காம விட்டுடாதம்மா. அம்மா அப்பா இல்லாம வளர்ந்த குழந்தைங்க. நம்ம வீட்ல அவங்களுக்கு எந்த மனக்கஷ்டமும் வந்துடக்கூடாது”,  என்றார்.

“நான் பார்த்துக்கறேன்பா”, என்று வாக்குறுதி கொடுத்தாள்.  

சமையல் அம்மா மாலை ஆறரை மணிக்கே கிளம்பி விடுவார்கள். அந்த அம்மாவிடம், “இரண்டு மூன்று வகைகள் செய்துவிட்டு செல்லுங்கள்”, என்றாள்.

“நேரமாயிடும்”, என்று அவர்கள் சொன்னதற்கு. “நான் கூட இருந்து ஒத்தாசை செய்கிறேன்”, என்று சொன்னாள். அதே மாதிரி செய்யவும் செய்தாள்.

அவர்கள் வீட்டிற்கு அதிகமாக உணவுக்கு என்று யாரும் வந்ததே கிடையாது. முதல் முறையாக இவர்கள் குடும்பத்தோடு வருவதால். அதுவும் அன்று தன் சமையலை ரசித்து  சாப்பிட்டதால் கொஞ்சம் பார்த்து பார்த்து செய்தாள்.

ராம், தன் தம்பி தங்கையோடு வீட்டிற்கு வந்தபோது இரவு மணி ஏழரையை தொட்டு இருந்தது.

“வா மாலதி, வா மனோகர்”, என்று அவர்களை நல்ல விதமாகவே வரவேற்றாள் வைதேகி.

மாலதி அவளை பார்த்தவுடன் வாஞ்சையுடன் வந்து கைகளை பற்றிக்கொண்டாள்.  “எப்படி இருக்கீங்க அண்ணி”,

“நான் நல்லா இருக்கேன். நீ.”, என்றாள் வைதேகி. அவள் அவ்வளவு வாஞ்சையுடன் தான் கைகளை பிடித்தது வைதேகியை சற்று நெகிழ்தியது.

“நல்லாயிருக்கேன் அண்ணி”, என்று இருவரும் பேசிக்கொள்ள.

ராம் தன்னிடமும் ஏதாவது சொல்லுவாள். வரவேற்பாள். என்று பார்க்க அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை.

“உன்னை வேற்று ஆளாக அவள் நினைக்க வில்லையடா”, என்று அவனையே அவன் சமாதானப்படுத்திக் கொண்டான்.

மனம் சுனங்கினாலும். அவன் எடுத்த முடிவுப்படி முகத்தை மலர்ச்சியாகவே வைத்துக்கொள்ள பெருமளவு முயற்சித்தான்.

மாலதியின் உடையை பார்த்த வைதேகிக்கு பிடிக்கவேயில்லை. மாலதி தொள புள என்று ஒரு சுரிதாரை மாட்டி இருந்தாள். அவளின் இயற்கையான அழகை கூட மட்டுபடுத்திக் காட்டியது. என்ன உடை எடுத்துக்கொடுக்கிறான் தங்கைக்கு என்று ராமின் மேல் தான் கோபம் வந்தது.

பெண்களின் உடை பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் நினைக்க தோன்றவில்லை வைதேகிக்கு. அவனே லட்சனமாக உடை அணிகிறான் என்று அவனையும் சேர்த்து பரிகசித்தது மனம்.

எப்போதும் மிக நேர்த்தியாக உடை அணிவாள் வைதேகி. சிறு வயதில் இருந்தே அவளின் அம்மா அவளுக்கு கற்றுக்கொடுத்த பழக்கம். அதனால் இப்போது மாலதியின் உடையை பார்த்ததுமே ஒரு மாதிரி இருந்தது. இதை மாற்ற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.   

மனோகரையும் மாலதியையும் அழைத்துக்கொண்டு போய் அவர்கள் தங்குவதற்கு ரூமை காட்டினாள்.

எல்லாவற்றையும் பார்வையிட்டபடி அமர்ந்திருந்தான் ராம். சுவாமிநாதன் அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாளும் அவனின் கவனம் முழுக்கவே வைதேகி என்ன பண்ணுகிறாள் என்பதில் தான் இருந்தது.

வைதேகியும் ராம் விடாமல் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தாள். “என்ன பண்றான் இவன். யாராவது கவனிச்சா”, என்று நினைத்து   சற்று கோபமாக வந்தது.

சிறிது நேரத்தில் எல்லாரும் சாப்பிட அமர்ந்தனர். நல்ல சுவையான விருந்து. மாலதியும் மனோகரும் சரியாக உண்ணத் தயங்க. அவர்கள் வீட்டில் அவர்கள் உண்பதை பார்த்திருந்தவள் வைதேகி. ஆகையால் அவர்கள் சரியாக உண்ணும் வரை விடவில்லை. அவர்களை பார்த்து பார்த்து உபசரித்தாள்.

தன் பெண்ணின் செய்கையில் சுவாமிநாதனுக்கு பயங்கர திருப்தி.  

வைதேகி தன்னிடம் எப்படி நடந்து கொண்டாலும் அவளின் இந்த செய்கை ராமிற்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது. அது கொடுத்த திருப்தியில் வைதேகி தன்னை கவனிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை அவன் நன்றாகவே உண்டான்.

ஒரு வழியாக உண்டு முடிக்க. சீக்கிரமே உறங்க சென்றனர் அனைவரும்.

எல்லோரிடமும் காலை ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றார் சுவாமிநாதன். வைதேகியிடம், “காலையில எழுந்து கொஞ்சம் சர்க்கரை பொங்கல் செஞ்சிடும்மா. மற்ற தேங்காய் பழம் பூஜை சாமான்கள் எல்லாம் காலையில வழில வாங்கிக்கலாம். அபிஷேகத்துக்கு சாமான் எல்லாம் பூசாரி கிட்டயே சொல்லிட்டேன்”, என்று சொல்லி கொண்டு அவர் உறங்க சென்றுவிட்டார்.

மாலதியும் மனோகரும் உறங்க சென்றனர்.

வைதேகி அழைக்காமல் எப்படி அவளின் அறைக்குள் செல்வது என்று ராமிற்கு தயக்கமாக இருந்தது. முன்பு வந்த போது அவளின் அறைக்கு சென்றிருக்கிறான் தான். இப்போது அவளாக கூப்பிடாமல் செல்ல கால் வரவில்லை.

அவன் இன்னும் சோபாவிலேயே அமர்ந்திருந்தான். வைதேகி அவள் பாட்டிற்கு உறங்க முதலில் சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்தும் ராம் வராது போகவே வந்து மேலேயிருந்து எட்டி பார்க்க. ராம் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான்.

“இவன் ஏன் இப்படி மேலே வராம கீழேயே உட்கார்ந்திருக்கிறான். ஒஹ்! துரையை வாங்க வாங்கன்னு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமோ. அப்பா பார்த்தா என்ன ஆகிறது. அப்புறம் நான் சரியா கவனிக்கலைன்னு திட்டு வாங்கறதுக்கா”, என்று கோபம் வந்தது.

அவன் கீழேயே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. இவ்வளவு நாளாக அழைக்கும் சந்தர்ப்பமும் வரவில்லை.

“ஸ்ரீ ராமச்சந்தர மூர்த்தி”, என்று நீட்டி முழக்கி அழைக்கலாமா என்று இருந்தது. இல்லை. “என்னங்க”, என்று அழைக்க வேண்டுமோ என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே. ராம் தலையை மேலே தூக்கி பார்க்க. அழைக்கும் அவசியமே இல்லாமல் “மேலே வா”, என்பது போல கையசைத்தாள்.

அவன் மெதுவாக அவனின் பையை தூக்கிக் கொண்டு வர.  இருந்த கடுப்பில் “ஏன் கூப்பிட்டா தான் வருவீங்களோ இல்லைனா வரமாடீங்களோ”, என்று பொறிந்தாள்.

ராமிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“நானென்ன நீங்க கூப்பிட்டா உங்க ரூமிற்கு வந்தேன். சும்மா எல்லார் முன்னாடியும் சீன் போடக்கூடாது. நான் எல்லாத்தையும் சொல்லனும்னு எதிர்பார்க்க கூடாது. என்ன புரியுதா?”, என்றாள்.

ராமிற்கு மனதிற்குள், “எல்லாம் நேரம்டா”, என்று தோன்றினாலும். தலை தானாக, “சரி”, என்பது போல ஆடியது. அவளை எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவளை ரசிக்கத்தான் தோன்றியது.

அவளையே ரசித்துப் பார்க்க. அது இன்னும் அவளுக்கு கோபத்தை கொடுத்தது.

“எப்போ பார்த்தாலும் இவன் என்னை பார்க்கிறான். அன்னைக்கு நான் ஊருக்கு கிளம்பும் போது கூட இப்படி தான் என்னை புரியாம பார்த்தான். என்ன தான் நினைக்கிறான் இவன்”,

“முதல்ல இவன் என்னை இப்படி பார்க்கறதை நிறுத்தணும்”, என்று நினைத்தவள் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து. “நீங்க ஏன் என்னை அடிக்கடி முறைச்சு முறைச்சு பார்க்கறீங்க. எனக்கு அது பிடிக்கவேயில்லை”, என்றாள்.

“என்னை தான் பிடிக்கலை. நான் பார்க்கறதுமா பிடிக்கலை. என்ன பண்ணலாம். ஒண்ணும் பண்ண முடியாது.”, என்றான் வெளியில் அல்ல மனதிற்குள் தான். வெளியில் அதை அவளிடம் சொல்லும் அளவிற்கு உண்மையை சொன்னால், அவனுக்கு தைரியம் போதவில்லை. வில்லை. ல்லை.லை.

இது அவனின் மனதின் சோக கீதம் தான்.

இதெல்லாம் தெரியாத வைதேகி அவனை உருத்து விழித்துக்கொண்டு இருந்தாள். 

“இப்படி முட்டை கண்ணை போட்டு பார்த்தா. நான் என்ன ஆவேன். சும்மாவே இவகிட்ட என்னால ஒண்ணும் சொல்ல முடியலை. இது வேறயா. ஷ்! ஹப்படா”, என்றிருந்தது ராமிற்கு.

“நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன். நீங்க பதிலே சொல்லலைன்னா எப்படி”, என்றாள் அதிகாரமாக.

“டேய் ராம்! அவ எப்படி அதிகாரமா கேட்கறா. இப்படி நீ வாயை மூடிட்டு சும்மா இருக்கிறியே.”, என்று அவனின் மனசாட்சி அவனை உசுப்பேற்ற. முயன்று தைரியமாக. “நான் பார்க்கறதே அப்படித்தான்”, என்றான்.

“என்ன பார்க்கறதே அப்படிதான்னா! என்ன திமிரா”, என்றாள்.

“யம்மா என்னமா வாயடிக்கிறாள் இவள்”, என்றிருந்தது ராமிற்கு.

“இல்லையே நான் சீறியஸா சொல்றேன்”, என்றான் பவ்யமாக.

“என்ன சீறீயஸோ. நீங்க அப்படி பார்க்கறது எனக்கு பிடிக்கலை. மாத்திக்கோங்க. சரியா”, என்றாள்.

“சரி”, என்பது போல மண்டையை உருட்டினான் ராம்.

இத்தனை கேள்விகளையும் அவனை ரூமிற்கு வெளியே நிற்கவைத்து கேட்டாள். அதற்கு பிறகே அவனை உள்ளே விட்டாள் வைதேகி.

“இதுதான் நிற்க வைத்து கேள்வி கேட்பதோ”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டான் ராம்.

இவன் மனதிற்குள் கேட்கும் கேள்விகளை தைரியமாக வெளியே கேட்டால். ஒரு வேளை வைதேகிக்கு இவனை பிடித்திருக்குமோ என்னவோ.

உள்ளே வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. கட்டில். அது வைதேகி மட்டும் படுத்துகொண்டிருந்ததால் ஒருவர் தாராளமாய் படுக்கும் கட்டில். இருவர் தூரமாய் தள்ளி படுக்கும் அளவிற்கு பெரிதில்லை.

வைதேகிக்கு முதல் முறையாக திருமணதிற்கு பிறகு அவனை பார்த்து பயம் வந்தது.  அவன் வீட்டில் அப்பா வாங்கிக்கொடுத்திருக்கும் பெரிய கட்டிலிலேயே என் அருகே வந்து படுத்துக்கொள்வான். இனி இதில் பக்கத்தில் படுத்தால் மேலேயே ஏறி படுத்துக்கொள்வானோ. என்றிருந்தது.

சோபாவும் சிறிய சோபாவே. படுக்க முடியாது. “நீங்க கீழே படுத்துகறீங்களா”, என்றாள்.

“ஏன், நம்ம வீட்ல எல்லாம் மேல தானே படுப்போம்”, என்றான் ராம்.

“இது சின்ன கட்டில். இடம் பத்தாது. எனக்கு கீழே தூங்கி பழக்கம் இல்லை. அதனால நீங்க கீழ தூங்குங்க.”, என்றாள், இதை தான் நீ செய்ய வேண்டும் என்ற செய்தியை தாங்கிய குரலோடு.

என்னமாய் யோசிக்கிறாள். சேர்ந்து படுக்க வழியேயில்லையா என்பது போல ராம் ரூமை ஆராய. அவள் கையை கட்டிக்கொண்டு அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.

அவள் நிற்கின்ற ஸ்டைல் அவனை ஈர்த்தது. மறுபடியும் அவளை ரசனையோடு பார்த்தான்.

“ஹலோ! என்ன பண்றீங்க”, என்றாள்.

“என்ன ஹலோ வா! அவ்வளவு தான் உனக்கு மரியாதை ராம். பேசாமல் கீழேயே படுடா”, என்று மனதிற்குள் சொல்லிகொண்டவன். “கீழேயே படுக்கிறேன்”, என்றான்.

“இந்த ஒரு பதிலை வாங்குறதுக்கு இவ்வளவு நேரமா”, என்று நினைத்து நொந்துபோனாள் வைதேகி. “இன்னும் லேட் பண்ணினா இன்னும் முறைச்சு முறைச்சு பார்ப்பான்”, என்று நினைத்தவள். வேகமாக அவனுக்கு கீழே படுக்கையை விரித்துக்கொடுத்தாள்.

அவளின் வேகம் ராமிற்கு சிரிப்பை கொடுத்தது. இருந்தாலும் அடக்கி கொண்டான்.

அவளிடம் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் உடை மாற்றி படுத்தான். அதற்குள் படுத்து கண்களை மூடியிருந்தாள் வைதேகி.

“எவ்வளவு பிடிவாதம் இவளுக்கு”, என்று நினைத்தபடியே உறங்க முற்பட்டான்.

புது இடம் என்பதால் உறக்கம் வராமல் வெகு நேரம் கழித்தே உறங்கினான் ராம்.

காலையில் பொங்கல் செய்வதற்காக வெகு சீக்கிரமே விழித்துவிட்டாள் வைதேகி. அவள் எழும்போதே சுவாமிநாதனும் விழித்துக்கொண்டார்.

“பொங்கல் மட்டும் செய்மா. பூஜை முடிச்சு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்”, என்று விட்டார்.

அவள் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருக்கும் போது மாலதியும் மனோகரும் கூட விழித்துவிட்டனர். மாலதி விழித்தவுடனே அவள் அணிவதற்கு வைதேகி அவளின் புது சுரிதார் ஒன்றைக் கொண்டுபோய் கொடுத்தாள்.

மாலதி அணிவதற்கு வெகுவாக தயங்க அவளை வற்புறுத்தி வாங்க வைத்தாள்.

மாலதி அணிந்து கொண்டு வந்து அவள் அண்ணியிடம் காட்ட. அவளுக்கு அது சிருங்காரமாக இருந்தது. புது உடை அணிந்ததும் மாலதி முகத்தில் இருந்த மலர்ச்சி அவளை அழகியாக காட்டியது. 

அணிந்து கொள்ள அவளின் தங்க வளையலையும் முத்து மாலையும் கொடுத்தாள் வைதேகி.

மாலதி வேண்டவே வேண்டாம் என்று மறுக்க. “அப்போ நீ என்னை உங்க ஆளா நினைக்கலியா”, என்று அவளை மிரட்டி வாங்க வைத்தாள்.

ராம் இன்னும் விழிக்கவேயில்லை.

“போம்மா போ! கிளம்ப நேரம் ஆகிடப்போகுது. முதல் பூஜையே கோயில்ல நம்மளது தான். ராமை எழுப்பு”, என்று அனுப்பினார் சுவாமிநாதன்.

அவனை எழுப்பவும் யாரையும் அனுப்ப முடியாது. ஏனென்றால் அவன் கீழே படுத்துக்கொண்டிருக்கிறான். இனி இந்த தொல்லை வேறா என்று சலித்துக்கொண்டே வந்தாள். வந்து அவனை எழுப்பினால் அவன் எழுந்திருப்பேனா என்றான்.

இருந்த அவசரத்தில் தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள். பதறி எழுந்தான் ராம்.

“எழுப்புனா எழுந்திருக்க மாட்டேனா. தண்ணியைவா ஊத்துவ”, என்று அவளிடம் சற்று எரிச்சலோடு கேட்க. “பக்கெட்ல ஊத்தாம தண்ணியை தெளிச்சனேன்னு சந்தோஷப்படுங்க”, என்று அவனிடம் கத்தி சென்றாள்.

ராமின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “குட்டி பிசாசு”, என்று செல்லமாக திட்டியபடி மளமளவென்று ரெடியாகி கிளம்பினர்.

கிளம்பி கீழே வந்தவனை மாலதியின் தோற்ற மாற்றம் வெகுவாக கவனத்தில் பதிந்தது. நம்ம மாலதியா இது என்று தோன்றியது.

அவளின் உடை நகை எல்லாம் பார்த்தவன், “ஏது இது”, என்றான்.

“அண்ணி கொடுத்தாங்க”, என்றாள்.

வைதேகி மாலதியை கவனிக்கிறாள் என்பதே ராமிற்கு சந்தோஷத்தை கொடுத்தது.

மனோகர் கூட மாலதியிடம். “உனக்கு இந்த டிரெஸ் நல்லா இருக்கு மாலதி. இனிமே அண்ணிகிட்ட கேட்டே எப்படி டிரெஸ் எடுக்கறதுன்னு கத்துக்கோ”, என்றான்.  

காரில் வேறு இடம் பற்றுவேனா என்றது. முன்புறம் டிரைவரும் சுவாமிநாதனும் அமர்ந்து கொள்ள. பின்புறம் இவர்கள் நால்வரும் அமர வேண்டி வந்தது.

நெருக்கியடித்து உட்கார்ந்து வந்தனர். அப்போதும் ராமின் பக்கத்தில் அமரவில்லை வைதேகி. மாலதியும் மனோகரும் நடுவில் அமர்ந்துகொள்ள ராமும் வைதேகியும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து கொண்டனர்.

“ஒரு  கார் கூடவா ஓட்டத் தெரியாது”, என்று ராமை பற்றின நினைவிலேயே வந்த வைதேகி. சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு கோவில் வந்து இறங்கியதுமே. அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக. “கார் கூடவா ஓட்டத் தெரியாது”, என்றாள்.

“இல்லை”, என்றான் பரிதாபமாக ராம்.

“இதுவரைக்கும் தெரியலைன்னா பரவாயில்லை. இனிமேலாவது கத்துக்கோங்க”, என்றாள் அதட்டலாக.

அவள் அதட்டலாக சொல்லிகொண்டிருக்க. ஏதோ அவர்கள் ரகசியம் பேசுகிறார்கள் என்று சுவாமிநாதனும் மாலதியும் மகிழ்ந்தனர்.

ராமே நினைத்துக்கொண்டிருந்தது தான் இப்போது வைதேகி சொல்லவும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. சரி என்று மண்டையை மண்டையை உருட்டினான்.

அது ஒரு சிவன் சன்னதி.

பூஜைக்கு வேண்டியதை எல்லாம் வைதேகி எடுத்து வைக்க. எல்லாவற்றையும் ராமையும் வைதேகியையும் சேர்ந்தே செய்ய வைத்தார் சுவாமிநாதன்.

இருவரும் ஒருமித்தே எல்லாம் செய்தனர். இருவரையும் தனியாக விடவேயில்லை சுவாமிநாதன். அவரின் மகளின் வாழ்வு ராமோடு சிறக்க நிறைய வேண்டுதல்களை இறைவனிடம் வைத்தார் சுவாமிநாதன்.  

சிவனுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகும் வரை. கோயிலில் ராமும் வைதேகியும் அருகிலேயே தான் அமர்ந்திருந்தனர்.

வைதேகிக்கு கடவுள் பக்தி கொஞ்சம் அதிகம் தான். ராமிற்கு அவ்வளவு என்று சொல்லமுடியாது.  இருந்தாலும் இப்போது பூஜை முடியும் வரை கடவுளிடம் மனமுருக வேண்டிக்கொண்டு இருந்தான். “வைதேகிக்கு என்னை பிடிக்க வேண்டும் கடவுளே”, என்று. 

ராமிற்கு தன் வாழ்க்கை வைதேகியோடு சிறக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருக்க. வைதேகிக்கு என்ன வேண்டுவது என்றே தெரியவில்லை.

“நான் உன்னை உண்மையாக தானே கும்பிட்டேன். நீ எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்தாய்.”, என்ற கேள்வியை இறைவன் முன் வைத்தாள்.  “இதுதான் நீ எனக்கு இட்ட வாழ்க்கையோ”, என்றும் இருந்தது.

“இறுதியாக நீயே எனக்கு துணை இறைவா. நீ பார்த்து எனக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்துகொள்”, என்று வேண்டுதல் வைத்தாள். இருந்தாலும் மனது சஞ்சலமாகவே இருந்தது.

சிவன் அவளின் வேண்டுதலை கேட்டு சிரித்தாறோ என்னவோ. கூடவே நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி வைத்தது போல அவளுக்கு தோன்றியது. இறைவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் வைதேகி.

ஏனோ அழுகையாக வந்தது. இப்படி ஒரு வாழ்கையை நான் எதிர்பார்க்கவேயில்லையே. அப்புறம் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை. எனக்கு அவனை பிடிக்குமா என்றிருந்தது. அதையே எண்ணி திரும்பி ராமை பார்த்தாள். அவன் கண்மூடி அமர்ந்திருந்தான்

இவனை எனக்கு பிடிக்குமா இந்த நினைப்பு. அவளை அதிகமாக அப்போது தாக்கியது. திருமணம் ஆகிவிட்டது இனி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இருந்து தானே ஆகவேண்டும் என்று உடனே தோன்றியது. சிறு பெண் தானே அவள். கடவுளின் சன்னதியில் அழுகையாக வந்தது சிரமப்பட்டு அடக்கி கொண்டாள்.

அவள் கண்களில் நீர் போல ராமிற்கு தோன்ற. “அழறியா வைதேகி. என்ன ஆச்சு”, என்றான் கவலையாக.

“உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு தான்”, என்ற வார்த்தை வாய் வரை வந்தது வைதேகிக்கு. இருந்தாலும் ஆலயம் என்பதால் அமைதி காத்தாள்.

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் பதிலே பேசவில்லை. 

அவள் அவனின் கேள்விக்கு பதிலே சொல்லாமல் இருந்தது என்னவோ மாதிரி தான் ராமிற்கு இருந்தது. இருந்தாலும் அவளையே பார்த்திருந்தான்.

அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டப்பட இருவரும் ஒருவித மோன நிலையிலேயே அதை கண்களில் நிறைத்தனர்.

வைதேகி அமைதியாக இருந்ததை பார்த்து மாலதியும் அமைதியாகவே இருந்தாள். அவளுக்கு வைதேகியிடம் என்ன பேச்சு கொடுப்பது என்று தெரியவில்லை. வைதேகியும் அவளாக பேசுவது போல தெரியவில்லை. அவளின் முகமும் சற்று கடுமையாக இருந்தது. நேற்றெல்லாம் நன்றாக தானே பேசினார்கள் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்றிருந்தது மாலதிக்கு. 

தன்னையே தான் எல்லாரும் கவனிக்கிறார்கள் என்றுணர்ந்த வைதேகி முகத்தை சற்று மலர்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சித்தாள்.

அவளின் முகம் சற்று மலர்ந்து இருந்ததை பார்த்த பிறகே மாலதி அவளை நெருங்கி வந்து பேச்சுக் கொடுத்தாள்.

அந்த சிறு பெண் தன்னிடம் பேசுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதை உணர்ந்த வைதேகியும் அவளிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தாள்.

ராமும் பார்த்தான். முன்பு அவளின் கண்கள் கலங்கி இருந்ததையும் இப்போது அவள் சற்று தேறிக்கொண்டதையும். எப்படி இந்த பெண்ணை சமாளிக்க போகிறோமோ. அவளாக பேசினால் பேசுகிறாள் நானாக பேசினால் ஒரு வார்த்தை கூட பதில் கொடுக்க மாட்டேன் என்கிறாள். இவளை எதில் சேர்ப்பது என்று குழம்பி போனான்.

அவனாகவே நன்றாக பேச்சு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவனாலும் முடியவில்லை. எல்லாரும் அவரவர் யோசனையில் இருந்தனர். 

கோவிலில் தரிசனம் முடிந்து சீக்கிரம் கிளம்ப யாரும் ஆர்வம் காட்டவில்லை. சுவாமிநாதன் தான் வீட்டிற்கு பெரியவராக எல்லோருக்கும் பசிக்கும் என்பதற்காக கிளம்பலாம் என்று அனைவரையும் கிளப்பினார்.    

ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றனர். அந்த மாதிரி ஹோட்டலுக்கு வருவது மாலதிக்கு அது தான் முதல் முறை. அவளின் அண்ணன் அவர்களை வெளியே அதிகமாக அழைத்து சென்றது இல்லை. அங்கிருந்த அமைப்பும் அந்த பேரர்களும் எல்லாம் புதிதாக தெரிந்தது மாலதிக்கு.

உட்கார்ந்த உடன் அவரவர்க்கு வேண்டியதை சொல்லுங்கள் என்று சுவாமிநாதன் சொல்ல. பக்கத்தில் இருக்கும் டேபிளில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்வையை ஓட்டினாள் மாலதி.

அங்கே ஒருவர் இட்லியை ஸ்பூனில் சாப்பிட்டு கொண்டிருந்தார். மாலதி பக்கத்தில் பார்ப்பதை பார்த்த வைதேகி. “என்ன மாலதி”, என்றாள்.

“இட்லியை ஸ்பூன்ல சாப்பிடறாங்க. அதான் பார்த்தேன்”, என்றாள்.

உடனே மனோகர், “அப்போ தோசையை எதுல சாப்பிடுவாங்க”, என்றான்.

“கைல தான்”, என்றாள் வைதேகி. அவள் சொல்லுவதற்கும் அந்த இட்லி சாப்பிட்டு கொண்டிருந்தவர் மேஜைக்கு ஒரு தோசை வரவும். அவர் ஸ்பூனை விடுத்து கையில் சாப்பிட. பார்த்துக்கொண்டிருந்த மூவருக்கும் ஒரே சிரிப்பு. அவரை பார்த்து சிரிக்க.

ராமிற்கு தான் டென்ஷன் ஆகிவிட்டது. அந்த மனிதர் ஏதாவது இவர்கள் அவரை பரிகசிப்பதை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று.

“ஷ்! அமைதியா இருங்க”, என்று மூவரையும் பார்த்து ஒரு அதட்டல் போட்டான்.

அப்போதும் சிரிப்பு விடுவேனா என்றது. மூவருக்கும் ஒரு வழியாக அவர்கள் ஆர்டர் செய்தது வர. இவர்கள் இட்லியிலும் ஸ்பூன் இருந்தது.  

“நான் ஸ்பூனில் சாப்பிடுகிறேன்”, என்று மாலதி சாம்பாரை அங்கும் இங்கும் சிந்திக்கொண்டும். இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை இரண்டு இட்லிகளோடு மட்டுமே போராடிக்கொண்டு இருந்தாள்.

“எதுக்கு மாலதி உனக்கு இந்த வேண்டாத வேலை. சாப்பாட்டையே உனக்கு ஸ்பூன்ல சாப்பிட தெரியாது. இதுல இட்லியை சாப்பிட்டு எதுக்கு வீண் பந்தா”, என்றான் மனோகர். 

மனோகர் கிண்டலடிபதை பற்றி கொஞ்சமும் கவலை படாமல் தன்னுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தாள் மாலதி. ஒரு இட்லி பீஸ் டேபிளை விட்டு கீழே தெறித்து விழுந்தது.

சின்னவர்களின் கலாட்டாவை சுவாமிநாதன் எதுவும் கண்டு கொள்ள வில்லை.

“ஏண்டி மானத்தை வாங்கற” என்றான் மனோகர். 

அவனை பார்த்து, “போடா”, என்றாள் மாலதி.

அவள் செய்யும் கலாட்டாவை பார்த்து மனோகர் கிண்டலடித்து கொண்டிருந்தான்.

“ஒழுங்கா சாப்பிடு மாலதி”, என்று அவளின் அண்ணன் ராம் அதட்ட . மாலதியின் முகம் சுருங்கிற்று.

அவளின் முகம் சுருங்கியது பொறுக்காத வைதேகி. “உங்களுக்கு லேட் ஆனா நீங்க போங்க. நாங்க மெதுவா தான் வருவோம்”, என்று அவனிடம் பதில் பேசியபடி. “நீ சாப்பிடு மாலதி”, என்று அவளுக்கு சப்போர்டிற்கு வந்தாள்.

அண்ணி அவளுக்கு சப்போர்டிற்கு வரவும் மாலதிக்கு மிகவும் குஷியாகி விட்டது. அவளின் அண்ணனை பார்த்தபடி பழிப்பு காட்டியபடி உண்டாள். 

வைதேகிக்கு அவளின் சந்தோஷத்தை பார்க்க சந்தோஷமாக இருந்தது. ராமை தனக்கு பிடிக்காது. மாலதி அவனின் தங்கை என்பதெல்லாம் மறந்து போனது. 

மாலதியை இவ்வளவு சந்தோஷமாக எல்லாம் பார்த்திராத ராம் அமைதி காத்தான். அவனின் தம்பி தங்கையின் சந்தோஷத்தை பார்த்தவன் வைதேகி  தன்னிடம் எப்படி நடந்து கொண்டாள் என்ன? அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறாள் என்பதே பெருத்த நிம்மதியை கொடுத்தது. இவர்களின் சந்தோஷத்திற்காக எதையும் பொறுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. 

Advertisement