Advertisement

அத்தியாயம் பத்து:

வீடு வந்து சேர்ந்த பிறகும் மனதின் சோர்வு ராமை விடவில்லை. அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது வைதேகியின் நினைப்பு. “தான் காரில் போகவேண்டும் என்று சொன்னால் பேசாமல் விடவேண்டியது தானே. அதற்கு எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் செய்யும் அளவிற்கு தன்னை கொண்டுவரவேண்டும்”, என்று.

இருவரும் காரில் வந்து இறங்க மாலதிக்கு ஆச்சர்யம். “எங்கே அண்ணா பைக்”, என்றாள்.

“பின்னால வருது”, என்றான்.

“ஏன் அண்ணா”, என்றாள்.         

“இல்லை கொஞ்சம் மக்கர் பண்ணிச்சு அதான்”, என்று சமாளித்தான் தன் மனைவியை விட்டுக்கொடுக்க முடியாமல்.   வைதேகி அதை பார்த்துக்கொண்டு தானிருந்தாள். “நீ என்னவோ சொல்லிக்கொள்”, என்பது போல தான் இருந்தது அவளின் பாவனை.

அவளின் முன்னிலையில் தேவையில்லாமல் சமாளிக்க வேண்டி இருக்கிறதே என்று அது வேறு கோபம் கோபமாக வந்தது ராமிற்கு. வீட்டில் இருந்தால் இன்னும் மாலதி ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பாள் என்று. “கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்”, என்று மாலதியிடம் சொல்லி சென்றான்.

வைதேகியிடம் சொல்ல வேண்டும் என்று அவனுக்கும் தோன்றவில்லை. வைதேகியும் அதை பெரிதாக நினைக்கவில்லை.

வைதேகிக்கு எட்டு மணிக்கே பசித்தது. மாலதி ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். மனோகர் ஏதோ வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். ராம் எப்போது வருவான் என்றே தெரியவில்லை.

“இந்த லக்ஷ்மி பாட்டி வந்தாலாவது பரவாயில்லை ஏதாவது லொட லொட வென்று பேசும் அதையும் ஆளைக் காணோம்”, என்றிருந்தது வைதேகிக்கு. பாட்டி கல்யாண அலைச்சலில் கை காலெல்லாம் வலிக்குது என்று சீக்கிரமே படுத்துக்கொண்டார் அன்று.

அவர்கள் யாரும் சாப்பிட அமர்வது போல தெரியவில்லை. அவளாகவே போய் சமையல் அறையில் என்ன இருக்கிறது என்று பார்த்தாள். சாதமும் குழம்பும் காயும் இருந்தது. வைதேகிக்கு இரவில் சாதம் எல்லாம் இறங்காது மதியம் ஒரு வேலை மட்டுமே சாதம் உண்பாள்.

பயங்கரமாக பசித்தது. இவள் சமையல் அறையில் நுழைவதை பார்த்த மாலதி கொஞ்ச நேரம் விட்டு வந்தாள். “ஏதாவது வேணுமா அண்ணி”, என்றாள்      

“ம், பசிக்குது”, என்றாள்.

“அண்ணாவைக் காணோமே அண்ணி. நீங்க சாப்பிடறீங்களா”, என்றாள் மாலதி.

“நீ சாப்பிடலை”, என்றாள் வைதேகி.

“அண்ணா வந்ததுக்கு அப்புறம் நாங்க மூணு பேரும் ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்பிடுவோம் அண்ணி”, என்றாள்.

அவளிடம் எப்படி. “நான் முதல்ல சாப்பிடறேன்”, என்று சொல்லுவது என்று வைதேகி தயங்க. “பரவாயில்லை அண்ணி நீங்க பசிச்சா சாப்பிடுங்க”, என்றாள் மாலதி அவளாகவே. 

வைதேகி தயங்கி தயங்கி. “நான் தோசை சுட்டுகட்டுமா”, என்றாள்.

“அதுக்கென்ன அண்ணி நான் சுட்டு தர்றேன்”, என்று மாலதி அதற்கான ஆயத்தங்களில் இறங்க.

“இல்லையில்ல நானே செஞ்சிக்குவேன்”, என்று வைதேகி பிடிவாதமாக மறுத்துவிட்டு அவளே சுட்டு கொண்டாள். சாதத்திற்கு இருந்த குழம்பிலேயே அதனை தொட்டு சாப்பிட்டு விட்டு போய் நைட்டி மாற்றி படுத்தும் கொண்டாள். நேற்றெல்லாம் சரியாக உறக்கம் இல்லாதது படுத்ததும் உறங்கியும் விட்டாள்.

ராம் வீட்டிற்க்கு வந்த போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வைதேகி. “அண்ணி தோசை சாப்பிட்டிட்டு தூங்க போயிட்டாங்க அண்ணா”, என்றாள் மாலதி கேட்காத தகவலாக.

உள்ளே வந்தவன் சற்று நேரம் நின்று வைதேகியின் முகத்தையே பார்த்தான். உறங்கும்போதும் முகத்தில் நன்கு பிடிவாதம் தெரிந்தது. அதையும் மீறி அழகு அவனை ஈர்த்தது. அழகி தான் தனக்கு பிடித்தமான மனைவியாக மட்டும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.

இவ்வளவு நேரமாக மனதை ஆட்கொண்டிருந்த சோர்வு மாறியது.  இவள் மட்டும் திமிர் பிடித்தவளாக. பிடிவாதக்காரியாக. இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவளின் முகத்தை பார்க்கும் போது தோன்றியது.

அவளை பார்க்க பார்க்க ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. அவளின் மேல் ஆசை பெருகியது. அவளின் அருகாமைக்காக மனம் ஏங்கியது. திருமணத்திற்கு முன்பு இப்படியில்லை. திருமணம் ஆனவுடனேயே ராமிற்கு அவளிடம் உரிமை தேவை என்பது போல தோன்ற ஆரம்பித்தது.    

மனைவியை பற்றி ஆயிரம் கற்பனைகள் வைத்திருந்தவன் தான். தோற்றத்தில் அழகை அவன் அதிகம் எதிர்பார்க்கவில்லை என்றாலும் நிறைய அன்பை எதிர்பார்த்தான். இல்லையென்றால் இவளுக்கு முன் பார்த்த மிகவும் சுமாரான பெண்ணிற்கு கூட எப்படி சரி என்றிருப்பான். 

மனைவி என்று ஒருத்தி தனக்கு வந்த பிறகு தனக்கு குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் வேலை இருக்காது. அவள் தன்னையும் குடும்பத்தையும் பார்த்துகொள்வாள் என்று அவன் நினைத்திருக்க. அவனுக்கு வந்திருக்கும் மனைவியோ அவன் வரும்வரையில் கூட விழித்திருக்கவில்லை. அவன் உண்டானா இல்லையா வீட்டில் உள்ளவர்கள் என்ன உண்பார்கள் எதை பற்றியும் கவலைபடாமல் நன்கு உண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மனம் சற்று ஏமாற்றமாக உணர்ந்தது.  உடை மாற்றி வெளியே செல்ல இரவு உணவிற்காக மாலதியும் மனோகரும் காத்திருந்தனர். அங்கே பேச்சற்ற மெளனம் நிலவியது. மூவரும் அமைதியாக உண்டனர். எப்பொழுதும் ஏதாவது பேசியபடி இருப்பர் மூவரும். ஏனோ அன்று அமைதி நிலவியது.

உண்ட பிறகு மாலதிக்கு எல்லாம் எடுத்து வைக்க உதவினான் ராம். முன்பெல்லாம் அவன் மட்டுமே செய்து கொண்டிருந்த வேலை. இப்போது எல்லாம் மாலதி பார்த்துக்கொள்ள அவன் உதவி மட்டுமே. பின்னர் மாலதியும் மனோகரும் உறங்கும் வரை விழித்திருந்தான். அதன் பிறகே உறங்க ரூமினுள் வந்தான்.

எப்பொழுதும் தனியாகவே உறங்கி பழக்கப்பட்ட வைதேகி. உடை முழங்காலுக்கு மேல் ஏறியது கூட தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள். “இதென்னடா இவள் இப்படி உறங்குகிறாள்”, என்று ராமிற்கு இருந்தது. கண்ணும் மனமும் அவள் புறம் முகாமிட. அவளின் உடல் கவர்ச்சியும் அவனை ஈர்க்க கண்ணை மிகவும் சிரமப்பட்டு பிரித்தெடுத்தான். அவளுக்கு தெரியாமல் அப்படி பார்ப்பதை தவறாக உணர்ந்தான்.

எந்த பெண்ணையும் இந்த மாதிரி இவ்வளவு அருகில் பார்த்ததில்லையாதலால் சித்தம் தடுமாறியது.

“டேய் அவள் உன் மனைவிடா”, என்று அவனின் மனசாட்சி ஒரு புறம் கூவியது. அவள் அப்படி நினைக்கவேண்டுமே என்று மனம் அவனை அறியாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றியது.

அந்த உடையை இறக்கிவிட அதை பற்றி இழுக்க. அது நன்றாக கால்களுக்கு அடியில் மாட்டிக்கொண்டு இருந்தது வருவேனா என்றது. சற்று இழுத்துப் பார்த்தான் வரவில்லை. நன்றாக இழுத்தால் அவள் விழித்துக்கொள்வாள் என்ற பயம் வேறு.

அவன் இழுக்கும்போதே விழித்து விட்டாள் வைதேகி. என்ன இது என்று மனம் பதற கண்விழித்து பார்க்க. அவள் கண்விழித்ததை கூட உணராமல் உடையை மெதுவாக இழுத்துவிட முயன்று கொண்டிருந்தான். என்ன தான் செய்கிறான் பார்ப்போம் என்று அவள் மறுபடியும் கண்ணை மூடிக்கொள்ள. இழுத்து இழுத்து பார்த்தவன் அது வராததால் ஒரு போர்வையை எடுத்து அவள் மேல் போட்டு போர்த்திவிட்டான். 

பின்பு எப்பொழுதும் போல படுத்து விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

ராமின் செய்கை வைதேகியின் மனதை தொட்டது. அவளின் மனதை அவனின் செய்கை அசைத்தது. “அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே”, என்று நினைத்தாள்.அந்த நினைவோடே வைதேகி உறக்கத்தை தொடர்ந்தாள்.

அடுத்த நாள் சுந்தரேசன் புது மணத் தம்பதிகளையும் மாலதியையும் மனோகரையும் விருந்துக்கு அழைத்திருந்தார். காலையிலேயே அங்கே எல்லாரும் சென்று விட்டதால் அன்றைய பொழுது நகர ஆரம்பித்தது. அந்த விருந்தை எதிர்பார்த்த முக்கியமான ஆள் மோகன். மாலதியின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.

விருந்தும் உபசரிப்பும் பலமாக இருந்தது சுந்தரேசன் வீட்டில்.  லக்ஷ்மி பாட்டியிடம் அதையும் இதையும் வளவளத்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அதை ராம் ரசனையாக பார்த்திருந்தான். அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அதை ராமின் கண்கள் ஆசையுடன் பார்த்தது. பாட்டியுடன் மட்டும் நன்றாக பேசுகிறாள் என்று நினைத்தபடி அவர்களையே ராம் பார்த்திருக்க. அவனை பேச்சில் இழுத்தார் சுந்தரேசன். 

அவர்கள் இருவரும் பேசுவதை ஆர்வமாக பார்த்திருந்த மற்றொரு ஜீவன் மாலதி. தன்னிடம் இப்படி வைதேகி பேசுவது இல்லையே என்பது போல இருந்தது அவளுக்கு.

ஆனால் அவளை அதிகம் யோசிக்க விடாமல் ரமா அவளிடம் பேசிக்கொண்டு இருந்தாள் அதனால பொழுது ஓடியது. அன்று மோகனும் கல்லூரிக்கு செல்லவில்லை மனோகரும் கல்லூரிக்கு செல்லவில்லை. அடுத்த நாளில் இருந்து தான் கல்லூரிக்கு செல்வது என்று முடிவு செய்திருந்தனர். மாலதியும் அடுத்த நாள் தான் செல்வதாக இருந்தது.

அதனால் மோகன் மாலதி இருக்கும் இடத்திலேயே சுற்றி சுற்றி வந்தான்…… ஆனால் பேசும் சந்தர்ப்பம் தான் கிடைக்க வில்லை. அவனும் ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று பார்த்த சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை.

ராமின் பார்வை தன்னை தழுவுவதும் பின்பு விலகுவதுமாக இருப்பதை வைதேகி உணர்ந்தாள். காலையில் இருந்தே ராம் தன்னை இப்படி தான் பார்க்கிறான் கணவனாக உணர்கிறானோ என்று சந்தேகமாக இருந்தது.  தான் இங்கேயே இருந்தால் அவனை அதிகம் பாதிப்போம் என்று அறிந்தாள். அதனால் நாளையே ஊருக்கு கிளம்பி விட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.

மாலை வரை எல்லாரும் அங்கிருந்து திரும்பினர். திரும்பும் போது சுந்தரேசனிடமும் லீலாவதியிடமும் லக்ஷ்மி பாட்டியிடமும் சொல்லிகொண்டாள் வைதேகி.

“நான் நாளன்னைக்கு காலேஜ் போகலாம்னு இருக்கேன் பெரியப்பா. அதனால நாளைக்கு ஊருக்கு கிளம்பறேன்”, என்றாள்.

“என்னம்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பற. ஒரு பத்து நாலாவது இருந்துட்டு கிளம்பலாம் இல்லை”, என்றார் லீலாவதி.

“இல்லை பெரியம்மா அடுத்த மாசம் செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குது. இப்போவே போனா எனக்கு படிக்க கொஞ்சம் ஈசியா இருக்கும்”, என்றாள்.

“சண்டே லீவ்ல வந்துடும்மா”, என்றார்.

அவளுக்கு வரும் எண்ணம் எல்லாம் இல்லை இருந்தாலும். “சரி பெரியம்மா”, என்றாள் அவருக்காக.

அவள் அங்கே சொல்லும்போது தான் மாலதிக்கும் மனோகருக்கும் விஷயம் தெரிய வந்தது. இருவரும் அவனின் அண்ணன் முகத்தை பார்க்க அவன் வேறெங்கோ பார்த்தான்.

லக்ஷ்மி பாட்டிக்கு தான் மிகுந்த வருத்தம். “என்ன கண்ணு அதுக்குள்ள போகனுமா ஒரு ஒரு வாரமாவது இருந்துட்டு போகலாம் இல்லை”, என்று வற்புறுத்தினார்.

“அப்புறம் வர்றேன் பாட்டி”, என்று அவரிடம் சமாளித்தாள் வைதேகி.

விருந்துக்கு வரும்போது இருந்த சந்தோஷம் திரும்ப போகும்போது யார் மனதிலும் இல்லை.

வீட்டிற்கு வந்தவுடனே எல்லோருக்கும் பொதுவாக, “நான் நாளைக்கு காலையிலேயே கிளம்புறேன்”, என்றாள் தகவலாக.

“ஏன் அண்ணி அதுக்குள்ள”, என்றாள் மனம் தாங்கமாட்டாமல் மாலதியும்.

“எக்ஸாம்க்கு படிக்கணும் மாலதி”, என்று அவளிடமும் அதே பாட்டையே படித்தாள்.

மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் கார் வந்துவிட்டது. இந்த முறை எதுவும் ஆர்ப்பாட்டம் அவள் செய்து விடக்கூடாது என்பதற்காக காலையிலேயே காரை அனுப்பிவிட்டார் சுவாமிநாதன்.

அன்றிலிருந்து அந்த சமையல் பாட்டி வேலைக்கு வந்துவிட்டதால் மாலதி சமைப்பதில் இருந்து விடுபெற்று கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தாள்.

மனோகரை மோகன் வந்து அழைக்க வந்தான். அழைக்க வந்தது என்னமோ மனோகரை என்றாலும் மோகனின் கண்கள் முழுக்க மாலதியையே தேடியது.  மோகன் வந்ததை உணர்ந்து மனோகர் எப்பொழுதும் போல அவன் அண்ணனின் முகம் பார்க்க. “டெய்லி என்னை பார்ப்பியாடா மோகனோடேயே போ”, என்றான் ராம் அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக.

ஒரு வழியாக அவர்கள் கிளம்பிச்சென்றனர். பின்பு மாலதியும் கிளம்பினாள். கிளம்பும் போது வைதேகியின் கைபிடித்து. “அடிக்கடி வாங்க அண்ணி”, என்றாள் உணர்ச்சி வசப்பட்டு.

“நான் தான் வரணும்னு இல்லை. நீயும் என்னை பார்க்க வரணும்”, என்றாள் வைதேகி அவளிடம்.

“சரி”, என்றபடி தலையாட்டி மாலதி கிளம்பினாள்.

தனித்து விடப்பட்டனர் வைதேகியும் ராமும். இருவரும் இன்னும் உண்ணவில்லை. சாப்பிட்ட உடனே அவள் கிளம்பி விடுவாள் என்று ராமிற்கு தெரியும். இருவரும் அன்னியோன்மான தம்பதிகள் இல்லையென்றாலும் மனம் கனத்தது ராமிற்கு. இருவரும் அதிகம் பேசிக்கொள்ள விட்டாலும் கூட என்னவோ தெரியவில்லை ராமிற்கு அதற்குள் கிளம்புகிறாளா என்பது போலத்தான் இருந்தது.

தனக்கு தோன்றுது போல அவளுக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று அவளின் முகத்தை ஆராய்ந்தான் ராம். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. மனம் சோர்ந்தது.    

அப்படி எதுவும் இல்லை வைதேகிக்கு. அவள் வீட்டிற்கு கிளம்பும் எண்ணத்திலேயே இருந்தாள்.

“சாப்பிடலாமா வைதேகி”, என்று ராமே அவளை அழைத்தான்.

“ம், சரி”, என்று அவனுடன் சாப்பிட அமர்ந்தாள்.  அவனுடன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எல்லாம் இருக்கவில்லை வைதேகி. ஒரு தெரிந்தவனை பார்ப்பது போல பார்த்தாள். அவ்வளவே அதை மீறி ஒரு பார்வையும் வைதேகியிடத்தில் இல்லை. ராம் தான் அவளை பார்ப்பதும், பின்பு பார்க்காததும், பின்பு பார்ப்பதும் என்று மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தான். 

இருவரும் அவரவருக்கு வேண்டியதை எடுத்து மெளனமாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்தவுடனேயே. “அப்போ நான் கிளம்பட்டுமா”, என்றாள் வைதேகி.

என்ன சொல்வது என்று ராமிற்கு தெரியவில்லை. அவளை பார்த்த பார்வையை விலக்கவும் இல்லை.  போகவேண்டாம் என்று சொல்ல வேண்டும் போல தோன்றியது இருந்தாலும் சரியென்று தலையசைத்தான்.

ராமை பார்த்த வைதேகிக்கு அவன் பார்வையாலேயே ஏதோ யாசிப்பது போல தோன்றியது. அவனின் பார்வையை சந்திக்க என்னவோ போல இருந்தது.

சட்டென்று, “நான் பக்கத்துக்கு வீட்ல போயி சொல்லிட்டு வந்துடறேன்”, என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.   

மேலும் ஏதாவது பேசுவாள் சொல்வாள் என்று ராம் எதிர்பார்க்க. ஒன்றும் சொல்லாமல் பக்கத்து வீட்டிற்கு சென்று லீலாவதியிடமும் லக்ஷ்மி பாட்டியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள். 

ராம், “என்னடா வாழ்க்கை இது”, என்று நொந்து போனான். இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்து இன்று தன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டாள் என்றிருந்தது.

எனக்கு அவளை பிடிக்கிறதா இல்லையா என்று மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தான். அவள் தன்னை அலட்சியப்படுத்தி பேசும்போது கோபம் வந்தாலும். மாட்டிக் கொண்டேனோ என்று நினைக்க தோன்றினாலும். மற்ற நேரங்களில் பிடித்திருப்பது போலவே தோன்றியது.

இப்போது அவள் செல்வது கஷ்டமாகத் தான் இருந்தது. மறுபடியும் தன்னுடைய வாழ்க்கை ஆரம்பித்த நிலையிலேயே நிற்கிறதா என்று இருந்தது. பழையபடி இனி தாங்கள் மூன்று பேர் மட்டும் இருக்க போகிறோம். அதே பாட்டியின் சமையல். அதே பழைய வாழ்க்கை. திருமணம் தன்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை என்று நினைக்கும் போதே மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

யாருக்காகவும் எதற்க்ககாவும் பார்த்திருக்க கூடாது என்று தோன்றியது. ஒன்று திருமணத்தை மறுத்திருக்க வேண்டும் இல்லையென்றால். வாழ்ந்துவிட வேண்டும் என்றிருந்தது. 

அவனுடைய கஷ்டங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் தந்தை வீடு நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தாள் வைதேகி. 

கிளம்பும் போது அவன் பார்த்த பார்வை ஏதோ செய்தது. ஏன் அப்படி என்னை பார்த்தான். நிச்சயம் அது காதல் பார்வை அல்ல. வேறு ஏதோ என்ன அது, என்ன அது, என்று மூளையை போட்டு கசக்கினாள் தான். ஆனால் ஒன்றும் பிடிபட வில்லை.

“ஒரு வேளை என்னை போகவேண்டாம் என்று சொல்ல நினைத்தானோ”, என்றும் தோன்றியது. “ஆனால் நான் முன்பே அவனை பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன். என் தந்தையுடன் தான் இருப்பேன் என்றும் சொல்லியிருக்கிறேன். அப்புறம் எப்படி நான் அந்த வீட்டில் அவன் மனைவியாக இல்லாததையோ. என் அப்பா வீட்டிற்கு வருவதையோ. அவன் குறை சொல்ல முடியும்”, என்று தோன்றியது.

வைதேகி அவளின் நிலையிலேயே நின்றாள் ராமை நிலை பற்றி யோசிக்கவில்லை.  

ஒரு வாரம் ஓடிவிட்டது. ராமின் வீட்டில் ஒரு திருமணம் நிகழ்ந்தது என்பதை தவிர எந்த வேறுபாடும் இல்லை அவர்களின் வாழ்க்கையில்.

மாலதி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ராமை வைதேகிக்கு போன் பண்ணி தர சொல்லி பேசினாள். அவள் நாங்கள் இருக்கிறோம் என்று வைதேகிக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தாள். வைதேகியாக என்றும் அழைத்தது இல்லை.

அவள் தொலைபேசியில் பேசும் போது தங்கைக்காக ராமும் ஒரு வார்த்தை பேசுவான். “நல்லா இருக்கியா வைதேகி”, என்பான்.

“ம், நல்லா இருக்கேன்”, என்பாள் அதையும் மீறி ஒரு வார்த்தையும் அவனிடம் பேசமாட்டாள்.

“ஏன்? நீங்க நல்லா இருக்கீங்களா”, என்று ஒரு வார்த்தை கேட்டாள் குறைந்தா போய்விடுவாள் என்று ராமிற்கு தோன்றும் தான். ஆனால் என்ன செய்ய முடியும் அமைதியாக இருந்துவிடுவான்.

ஏதாவது ஒரு சாக்கு வைத்து சுவாமிநாதன் ராமிற்கு தினமும் போன் செய்து விடுவார். மறுநாள் விடுமுறை தினம். அன்று ராமையும் வைதேகியையும் அவரின் குல தெய்வம் கோவிலுக்கு அழைத்து செல்லலாம் என்று பிரியப்பட்டார்.

“வைதேகி நாளைக்கு நம்ம குலசாமி கோயிலுக்கு போயிட்டு வரலாம்மா. நீ என்ன சொல்ற”, என்றார்.

“நாளைக்காப்பா”,

“நாளைக்கு தானேம்மா உனக்கு லீவு”,

“சரிப்பா”,

“அப்போ ராம்கு போன் பண்ணி இன்னைக்கு நைட்டே இங்க வந்துட சொல்லு நாம நாளைக்கு விடியக் காலையிலேயே கிளம்பனும்”, என்றார்.

“அவர் கூட வாப்பா வரணும்”, என்றாள்.

“என்ன வைதேகி இப்படி கேட்கற? உங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு தான் கோயிலுக்கே போறோம். அவர் இல்லாமையா”,

“நீங்களே சொல்லிடுங்கப்பா”,

“நீ சொல்லுமா”, என்றார் சற்று கட்டளையிடும் குரலில்.

வேறு வழியில்லாமல் ராமை அழைத்தாள் வைதேகி.

அன்று ராமிற்கு வைதேகியின் நினைவு அதிகமாக இருந்தது. அவன் அழைத்து பேசலாமா என்று எண்ணிக்கொண்டிருந்த நேரம் அவளாக அழைத்தது ராமிற்கு சற்று சந்தோஷமாக இருந்தது. அது உற்சாகத்தை கொடுக்க. அந்த உற்சாகத்துடனேயே  தொலைபேசியை எடுத்தான்.

“சொல்லு வைதேகி”, என்றான் உற்சாகமாக.

எப்போதும் அவன் குரல் இப்படி ஒலிக்காது. அவனின் குரலில் இருந்த உற்சாகத்தை உணர்ந்த வைதேகி அவளையறியாமல், “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க”, என்றாள்.

“பின்ன கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் என் பொண்டாட்டி எனக்கு அவளா முதல் முதலா போன் பண்ணியிருக்கா”, என்றான்.

பொண்டாட்டியா யாரது. என்று நினைத்தாள். சட்டென்று வைதேகிக்கு அவன் தன்னைத்தான் கூறுகிறான் என்று உரைக்கவில்லை. சில நொடிகளுக்கு பின்னேயே அவன் தன்னைத்தான் கூறுகிறான் என்று தெரிந்தது.

அதற்கு பதில் சொல்ல பிரியப்படதவளாக. “நாளைக்கு காலையில குல தெய்வம் கோயிலுக்கு போகணுமாம் அப்பா உங்களை இன்னைக்கே இங்க வர சொன்னார்”, என்றாள்.

“இன்னைக்கேவா.  மாலதியும் மனோகரையும் தனியா விட்டுட்டு வரணுமே. நாளைக்கு காலையிலயே வந்துடறேனே”,

“இருங்க அப்பா கிட்ட கேட்கறேன்”, என்று தன் தந்தையிடம் கேட்டாள்.

“அவங்களையும் கூட்டிட்டு வர சொல்லுமா”, என்றார்.

“அவங்களையும் அப்பா கூட்டிட்டு வர சொல்றார்”, என்றாள்.

“ஏன் நீ கூப்பிட மாட்டியா”,

“நானும் தான் கூப்பிடறேன்”, என்றாள்.

“இரு நீயே மாலதிகிட்ட சொல்லு சந்தோஷப்படுவா”, என்று மாலதியிடம் தொலைபேசியை கொண்டு போய் கொடுத்தான்.  

“யார் அண்ணா? அண்ணியா!”, என்று கேட்டபடியே தொலைபேசியை வாங்கினாள் மாலதி. அவளுக்கு அவளின் அண்ணி அழைத்தது அவ்வளவு சந்தோஷம்.

“சொல்லுங்க அண்ணி”, என்றாள் சந்தோஷமாக.

“நாம் அழைத்தால் இத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்களா”, என்று இருந்தது வைதேகிக்கு.

“நாளைக்கு நாம எல்லாரும் கோயிலுக்கு போறோம். இன்னைக்கு நைட்டே வீட்டுக்கு வந்துடுங்க”, என்றாள் வைதேகி.

“சரி அண்ணி”, என்று சந்தோஷமாக தலையசைத்தாள் மாலதி.

ராமிற்கு மனதுக்கு உற்சாகமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து வைதேகியை பார்க்க போகிறோம் என்றிருந்தது. அதுவும் சுவாமிநாதன் சொல்லாமல் அவளாக சொன்னது மனதுக்கு புது தெம்பை கொடுத்தது.

இன்று காலையில் இருந்து அவளை பார்க்க வேண்டும் என்று இருந்த ஆவல் இன்னும் அதிகரித்தது. எப்போது அவளை பார்ப்போம் என்றிருந்தது.

அவனே ஒரு வாரமாக யோசித்து யோசித்து ஒரு வழியை கண்டுபிடித்து இருந்தான். “மனதில் அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அவள் உன் மனைவி என்ற உரிமையோடு பழகு”, என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

அதை கடை பிடிக்க வேண்டும் என்ற முடிவோடும் இருந்தான். அவன் வாழ்க்கை இது. அவள் எப்படி இருந்தாலும் அதை சீர் செய்ய வேண்டியது தன் கடமை என்றெண்ணி கொண்டான்.  

அவனின் எண்ணத்திற்கு வைதேகி  ஒத்துவருவாளா என்று தான் தெரியவில்லை. அவனால் முடியுமா? அவனுக்கு அது வருமா? என்றும் தெரியவில்லை. ஒரு முயற்சி தான் செய்து பார்ப்போமே என்று முடிவெடுத்துக்கொண்டான்.

வைதேகியின் மனமோ, “நாம் ஒரு போன் தானே செய்தோம். அதற்கு ஏன் இவர்கள் இவ்வளவு உற்சாகமாகிறார்கள். தான் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமா”, என்றிருந்தது.

“ஆனால் எனக்கு தான் அவனை பிடிக்காதே என்று மனதிற்குள் உருபோட்டுக்கொண்டாள்.  உனக்கு பிடிக்காவிட்டாலும் அவன் நல்ல மனிதன். ஒத்துக்கொள்”, என்றும் மனம் சொன்னது.

Advertisement