Advertisement

அத்தியாயம் ஒன்று:

இனிய காலைப் பொழுது…….. ஆனால் எல்லோருக்கும் இனிய காலைப்பொழுதா………… சந்தேகமே. அவரவர் எண்ணங்கள் பொழுதை இனிமையாக மாற்றும் வல்லமை உடையது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்வோம் சமாளிப்போம் என்று நினைப்பவர்கள் சமாளிக்கத்தான் செய்வார்கள். என்னால் முடியாது என்று நினைப்பவர்கள் முடியாது என்றே திணறுவார்கள். நான் சமாளிப்பேன் என்று நினைத்தவாறே எழுந்தாள் வைதேகி.

“கடவுளே எனக்கு பிரச்சனையை கொடுக்காதே என்று நான் கேட்கவில்லை……. அதை சமாளிக்கும் திறமையை கொடு என்று தான் கேட்கிறேன்”, என்று எண்ணியவாறே படுக்கையை விட்டு எழுந்தாள். அவள் அன்னை இறந்த பிறகு அவள் கடவுளிடம் கேட்கும் வாசகங்கள் ஆகிப்போகின. எழுந்தாள்……… வீடு அமைதியாக இருந்தது.

வீடென்று சொல்ல முடியாது. அது மிகப்பெரிய பங்களா என்றும் சொல்ல முடியாது. அது வீட்டிற்கும் சேராமல் பங்களாவுக்கும் சேராமல் இருந்த ஒரு குட்டி பங்களா. அவளும், சமையல் செய்யும் கண்ணியம்மாவும் மட்டுமே வீட்டில். கன்னியம்மா வைதேகிக்கு துணையாக நேற்று அங்கேயே தங்கிக்கொண்டாள். இருவர் மட்டுமே அந்த வீட்டில் தற்போது உள்ளனர். வாயிலில் ஒரு காவலாளி.

வீட்டின் எஜமானர் சுவாமிநாதன் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கிறார். நேற்று முன்தினம் திடீரென்று லேசான மாரடைப்பின் அறிகுறிகள் தோன்ற…………. அவசரமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். உடனே தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட நிலைமையின் தீவிரம் முற்றிலும் குறைந்து அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்ற வார்த்தையை மருத்துவர்கள் உரைத்தனர்.

எண்ணங்கள் முற்றுகையிட்டாலும் அதை ஒதுக்கி அவசரமாக, கன்னியம்மாவை வீட்டை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு………… தனது ஸ்கூட்டியை கிளப்பி,  ஹாஸ்பிடல் கிளம்பி சென்றாள் வைதேகி. அப்பா இருந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நிற்க……….. அவனை காணவில்லை.

அவன்……….. நேற்று தான் புதிதாக அவள் பார்த்த உறவினன். அவன் பெயர் கூட தெரியாது. நேற்று இரவு தந்தைக்காக அவள் அங்கே நிற்க போக…….. “நான் இருக்கேன் நீ வீட்டுக்கு போ”, என்றான்.

“இல்லை நானே இருக்கேன்” என்ற அவள் மறுப்பு எதுவும் எடுபடவில்லை. சுற்றி நின்ற உறவுகளும் அவளை விடுவதாக தெரியவில்லை. அவள் வீட்டுக்கு போக ஒத்துக்கொண்ட பிறகே அகன்றனர்.

முதல் நாள் அந்த தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே அவள் ஒற்றை ஆளாக அவள் மாட்டுமே இருந்தாள். அவளும் நாள் முழுவதும் தூங்காததால் மிகவும் அயர்ச்சியாக உணர மனதை சமாதானப்படுத்தி கிளம்பி விட்டாள்.

மறுபடியும் இப்போது காலை தான் வருகிறாள். அவள் அங்கே இருந்த இருக்கையில் அமர……. தன் நீளமான கால்களை வேகமாக எட்டு போட்டபடி வந்தான்.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா” என்றான்.

“இல்லை இப்போ தான் வந்தேன்”.

“ஒண்ணும் பயமில்லை. அபாய கட்டத்தை தாண்டிட்டார்ன்னு இன்னைக்கு காலைல கூட சொன்னாங்க”,

“சரி”, என்பது போல தலையை அசைத்தவள், “நீங்க உள்ள போய் பார்த்தீங்களா”, என்றாள்.

“இல்லை யாரையும் உள்ள கூப்பிடலை”, என்றான்.                    

“அப்பா தான் அபாய கட்டத்தை தாண்டிட்டார். ஆனால் நான்………….”, பெருமூச்சு வெளியேறியது வைதேகிக்கு.  அபாய கட்டத்தை வைதேகி தாண்டவில்லை. திடீரென்று வந்து குவிந்த உறவுகளால். வைதேகிக்கு அவள் அம்மா இருந்தவரை அவரே உலகம். அவளுக்கு மட்டுமல்ல அந்த வீட்டுக்குமே வைதேகியின் அம்மா வைத்தது தான் எழுதப்படாத சட்டம். அவள் அம்மா இருந்தவரை யாரும் வந்ததில்லை.

வைதேகியின் அம்மா போனவருடம் தான் இறந்தார். ஏதோ எஸ்.எல்.ஈ என்றார்கள். ஆட்டோ இம்யுன் டிஸ்ஆர்டர் என்றார்கள். நிறைய சிகிச்சைகள். இரண்டு வருடங்கள், ஆனவரை அவளின் அம்மா தன் மகளை தனியே விட்டுப்போக மனமில்லாமல் போராடிப் பார்த்தார். முடியவில்லை……… எதுவும் பலனின்றி இறந்து போனார். மிக மிக செல்லமாக வளர்த்தார் வைதேகியை. அவரின் இழப்பு……… அதற்கு பின் தான் வாழ்கையை உணர்ந்தாள் வைதேகி.  

அவருக்கு சிகிச்சை அளிக்கும்போதே கூட சென்று கூட சென்று சிகிச்சை முறைகளை பார்த்து ஓய்ந்திருந்த வைதேகிக்கு திடீரென்று தந்தைக்கு உடம்பு முடியவில்லை என்றவுடனே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவளுடைய இந்த இருபத்தி ஒரு வயதுக்கு என்றும் பயந்திராத அளவிற்கு பயந்து போனாள்.

அவள் அம்மா இறந்த போதே நிறைய சிரமப்பட்டு விட்டாள். அவர் படும் உடல் உபாதைகளின் சித்ரவதைகள்………. அதை கண்கூடாக பார்த்த பிறகு அவர் இறந்து போவதே மேல் என்று வைதேகிக்கு தோன்ற வைத்திருந்ததால்…………. அவர் இறந்த போது முயன்று சற்று சமாளித்துக் கொண்டாள்.  

எப்படி தகவல் தெரியும் என்று தெரியவில்லை, வைதேகியின் தந்தை  ஹாஸ்பிடலில் சேர்த்த அடுத்த நாள் உறவு என்று சொல்லி ஒரு படையே இறங்கிற்று. அவளுக்கு அதில் அதிகம் பேரை தெரியவில்லை. சிலரை தெரிந்தாலும் உறவு முறை தெரியவில்லை……….. தடுமாறினாள். எல்லாரும் இரவு வரை இருந்தவர்கள், அதில் ஒருவனை மட்டும் விட்டு…….. இரண்டு மூன்று நாட்கள் கழித்து கிளம்பி வருவதாக கூறிச்சென்றனர்.

தந்தைக்காக அவளால் கவலைப்படக்கூட முடியாதா அளவிற்கு அவர்கள் கேள்விகள் இருந்தது. “ஏங்கண்ணு……………. திடீர்ன்னு அப்பாக்கு இந்த மாதிரி ஏன் ஆச்சு நல்லாதானே இருந்தாங்க”,

அவளுக்கு மட்டும் என்ன தெரியும். அப்பா எப்போதும் பிசினெஸ் விஷயங்களை வீட்டில் பேசியதே இல்லை. அவர் பட்டு நூல் வியாபாரம் செய்கிறார் என்று தெரியும். எங்கே செய்கிறார், என்ன ஏதென்று தெரியும். மற்றபடி வியாபார விஷயங்கள், லாப நஷ்டங்கள் தெரியாது.   

“வியாபாரம் எல்லாம் நல்லாதானே கண்ணு போகுது”.

“யாருக்கு தெரியும்”, மனதிற்குள் நினைத்தவள் வெளியில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

பல கேள்விகள் அவளை துளைத்தெடுத்தன. அவளுக்கு தந்தையை பற்றி அதிக விவரமே தெரியவில்லை. ஒற்றை பெண் என்றாலும் அவளுக்கும் அப்பாவுக்கும் அதிக ஒட்டுதல் கிடையாது. அன்னையின் வாயிலாகவே எல்லா கேள்வி பதில்களும். அவள் தந்தையும் கிராமத்து ஆள்தான். அன்னையை திருமணம் செய்த பிறகு தான் நகர வாசம். அவர் வளர்ப்பின் தாக்கமோ என்னவோ பெண் குழந்தை என்பதினால் சற்று தள்ளியே இருப்பார். இப்போது அம்மா இறந்த பிறகு தான் இருவரும் சகஜமாக சற்று பேச ஆரம்பித்ததே.

அவள் அன்னையும் தந்தையும் ஆதர்ஷ தம்பதிகள். அவர்களைப்போல் ஒருமையான தம்பதிகளை பார்ப்பது அபூர்வமே. கணவன் மனைவிக்குள் எங்கேயாவது சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்குமா? அவர்களுக்குள் சண்டை என்பதே கிடையாது. வைதேகியின் அன்னையே உலகம் என்று வாழ்ந்து விட்டார் அவள் தந்தை. அதனாலேயே அதிகமான உறவுகள் கூட அவர்களின் வீட்டை அண்டியதில்லை, ஏனென்றால் அவளின் அன்னைக்கு உறவுகள் அதிகம் பிடிக்காது.

உறவுகள் எல்லாம் கிராமத்து மக்கள், வைதேகியின் வீட்டை விட செல்வத்தில் செல்வாக்கில் எல்லாவற்றிலும் குறைந்தவர்கள். வைதேகியின் அன்னையோ பிறப்பிலேயே செல்வம் படைத்த வர்க்கத்தை சேர்ந்தவர். அதனால் சாதாரணமாக இருந்த தனது கணவரின் உறவுகள் அவருக்கு பிடிக்காது. 

நாளை பணம் காசென்று எதற்காவது அண்டி விட்டால்……… ஏன் வம்பென்று சொந்த பந்தங்களை சேர்த்துக் கொள்ளவே இல்லை. தந்தையின் உறவுகள் தான் அப்படி என்றால் அன்னையின் உறவுகளையும் அதிகம் கண்டதில்லை. அபூர்வமாக வருவர் போவர். அவளின் அன்னை இறந்தபோது தான் அவளுக்கு தங்களுக்கு இத்தனை உறவுகள் இருப்பதே தெரியும்.

அவர்களும் தங்களை அண்ட விடாதவர்கள் வீடென்று வித்தியாசம் பாராமல் அவள் அம்மா இறந்தபோது எல்லாவற்றையும் வந்து எடுத்துக்கட்டி செய்தனர்.   ஆனால் அப்போது கூட இந்த புதியவனை பார்த்த மாதிரி வைதேகிக்கு நினைவில்லை. இருந்திருப்பானாயிருக்கும் அன்னை இறந்த போது அவள் கண்களுக்கு தெரிந்தவர்கள் தான் யார். அப்போது அவள் இருந்த மனநிலையில் யாருமே அவள் கண்களுக்கு தெரிந்ததில்லை. அன்றும் பிறகு சில நாட்களும் மட்டுமே வந்த உறவுகள் பின்பு இன்று தான் வந்தனர். இவனை விட்டு சென்றனர். இவன் யாராயிருக்கும்.

வைதேகியின் யோசனையை தடை செய்ய உள்ளே இருந்து வந்த சிஸ்டர், “உங்கப்பா உங்களை பார்க்கணும்னு சொல்றார்மா………. வாங்க”, என்று அழைத்தாள்.

உள்ளே நுழைந்தவள்………… அவரை சுற்றி வைத்திருந்த உபகரணங்களை பார்த்தவுடனே அவளையறியாமல் கண்களில் நீர் திரண்டது உள்ளிழுக்க முயன்றாள், முடியாமல் கண்களை துடைத்தாள்.

தன் தந்தையின் அருகில் சென்றவள், “பரவாயில்லையாம்பா சீக்கிரம் ரூமுக்கு மாத்திடுவாங்க”, என்றாள் அவரை தேற்றும் விதமாக.

“தனியாவம்மா இருக்க, யார் இருக்கா கூட”, என்றார்.

“இல்லைப்பா, நேத்து உங்க ஊர்ல இருந்து வந்திருந்தாங்க, அதுல ஒருத்தர் இருக்கார்”, என்றாள்.

“பணத்துக்கு என்னம்மா பண்ணின”

“என் கிட்ட கொஞ்சம் இருந்தது………… உங்க பீரோல இருந்து கொஞ்சம் எடுத்தேம்பா”

“பத்தாதே”,

“நான் பார்த்துக்கறேன் பா. நீங்க முதல்ல எதை பத்தியும் கவலைபடாம சரியாகுங்க”, என்று அவரிடம் சமாளித்தாள். 

“வெளிய யார் இருக்கா கூப்பிடுமா”, என்று சொல்ல……….. அவள் வெளியே இருந்தவனை அழைக்க செல்ல………… சிஸ்டர் அவளிடம்……….. “ரொம்ப நேரம் பேசாதீங்க”, என்றார்.

அவர் சொல் பணிந்தவள்…………. “வெளிய இருக்கிறவர பார்க்கணும்னு சொல்றார், கூட்டிட்டு வரவா”, என்று அனுமதி கேட்டாள்.

“சரி சீக்கிரம் பார்த்துட்டு போய்டுங்க”, என்று அவர் அனுமதி கொடுக்க…………….. வெளியே இருந்தவனை அழைக்க சென்றாள்.

வெளியே வந்தவளுக்கு எதிர்புறம் அவன் திரும்பி நிற்க அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல்……… “அண்ணா அப்பா கூப்பிடுறாங்க”, என்றாள்.

அவள் குரலில் திரும்பியவன்…………. “என்ன அண்ணாவா”, என்று அவளை பார்த்தான்.

“என்னையா கூப்பிட்ட”, என்றான்………….. “ஆமாம்”, என்றவளின் தலையாட்டலுக்கு, “பரவாயில்லை சொந்தக்காரங்க முன்னாடி கூப்பிடாம போன, இல்லைன்னா எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. நான் உனக்கு அண்ணா எல்லாம் இல்லை…………. மாமா முறையாகணும். மாமான்னு கூப்பிடலன்னா கூட பரவாயில்லை………. அண்ணான்னு கூப்பிட்டு வைக்காத”, என்றான் அதட்டலாக.

அவனுடைய அதட்டல் தொனி வைதேகிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“மாமனாம் மாமன்……… என்ன இது லூசு மாதிரி உளருது”, என்றே வைதேகிக்கு தோன்றியது. “ஹலோ மிஸ்டர்! என்ன முறையோ………. அப்பா கூப்பிடுறாங்க”, என்றாள் இந்த முறை சற்று மிடுக்காக.

“அண்ணாக்கு இது பரவாயில்ல”, என்று அவளோடு நடந்தான் அவன்.  

உள்ளே நுழைந்தவர்கள் சுவாமிநாதனை பார்க்க……….. அவனை பார்த்ததும் அவர் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.

“எப்போ வந்தப்பா”, என்றார் அவனை பார்த்ததும்.

“நேத்தே வந்துட்டேன் மாமா”

“வைதேகி தனியா இருப்பா பார்த்துக்கோ”, என்றார்.

“நான் பார்த்துக்கறேன் மாமா……….. நீங்க கவலைபடாதீங்க. உங்களை வீடு கொண்டு போய் சேர்த்துட்டு தான் நான் என் வேலையை பார்க்க போவேன்”, என்றான்.

அதற்குள் அங்கே இருந்த சிஸ்டர் போதும் பேசினது என்று குரல் கொடுக்க………… “நீங்க கவலைபடாதீங்க, நான் எல்லாம் பார்த்துக்கறேன்”, என்று மறுபடியும் சொல்லி வந்தான். அவன் வெளியே செல்ல, என்ன செய்வது என்றறியாத வைதேகியும் அவனை பின்தொடர்ந்தாள்.

அவர்கள் வெளியே வரவும் சிஸ்டர் வாங்கி வரவேண்டிய மருந்துகளின் லிஸ்ட் கொடுக்க………. அதை வாங்கிக்கொண்டு மருந்து வாங்க சென்றான். அவன் பின்னோடு அவசரமாக சென்ற வைதேகி……… “பணம்……”, என்று கேட்க……….

“என்கிட்ட இருக்கு”, என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி, அவன் பாட்டிற்கு நிற்காமல் சென்றான்.

“இருங்க நான் தர்றேன்”, என்றவளின் வார்த்தைகள் அவன் செவியை எட்டியதா இல்லையா தெரியவில்லை. வேகமாக எட்டு வைத்து சென்றுவிட்டான். 

“யார் இவன் அதிகப்ரசிங்கித்தனமா எல்லாமே செய்யறான். எங்கப்பாவுக்கு இவன் ஏன் மருந்து செலவு பண்ணனும்”, என்று எரிச்சலாக வந்தது. உதவி செய்ய வந்த நல்ல உள்ளமாக எடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு வைதேகிக்கு தோன்றவில்லை. அவனை பார்த்ததும் எரிச்சலாக வந்தது. 

யாரோடும் ஒட்டாமல் தனியே வாழ பழக்கபடுத்தப்பட்ட வைதேகிக்கு…………. யாரிடமும் அவர் நற்குணங்கள் முன்னே தெரியாது………. அவரின் குறைகள் தான் தெரியும். அது அவள் இயல்பு. அவள் தோழிகள் கூட சொல்லுவர், “எப்படி வைதேகி மனுஷங்களை பார்த்தவுடனே அவங்க குறையை மட்டும் பட்டியல் போடுற”, என்று.

அது அவளோடு ஊறிப்போன விஷயம். அதற்காக எல்லோரிடமும் சண்டை சச்சரவு என்று ஈடுபடமாட்டாள், ஆனால் அதிகம் ஓட்ட மாட்டாள். தனிமை என்ற ஒன்றே அவளுக்கு பிடித்தமானதாக செய்யப்பட்டு விட்டது அவள் அன்னையினாள்.

அந்த, அவளின் குணங்கள் தலைதூக்க…………… இப்போது ஹாஸ்பிடலில் அவன் செய்யும் உதவிகள் அவளுக்கு தேவையற்றதாக தோன்றின. அவளை மீறி யார் நடந்தாலும் எரிச்சல் மண்ட ஆரம்பித்து விடும். அன்னையின் குணமா அல்லது தனியாய் ஒரே பெண்ணாய் வளர்ந்த வளர்ப்பா ஏதோ ஒன்று அவளை பிடிவாதத்துக்கு பெயர் போக வைத்தது. அன்னையும் அவளும் மட்டுமே அதிகமாக இருந்ததினால் எதுவும் அதிகம் தெரிவிக்கவில்லை. இனி ? வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது.

அதற்குள் எண்ணங்களை தடைபோட………….. அவள் சிறிதும் எரிச்சல்  படத்தேவையில்லாத, ஆனால் பட்டுகொண்டிருக்கிற எரிச்சலின் நாயகன் அவன் வந்துகொண்டிருந்தான்.

 நேரே ஐ சீ யு வின் உள்ளே சென்று மருந்துகளை கொடுத்து வந்தான்.

வந்தவன்………… “சாப்பிட போகலாமா” என்று உரிமையாக வைதேகியிடத்தில் கேக்க……. இவன் என்ன கேட்கிறான் என்பது போல புரியாத பார்வை பார்த்தாள் வைதேகி.

“சாப்பிட தானே கூப்பிட்டேன்…….. அதுக்கு ஏண்டா இவ இந்த லுக்கு விடறா”, என்று மனசுக்குள் அவனுக்கு அவனே கேட்டுகொண்டவன்………….. “வா, சாப்பிடலாம். கொஞ்ச நேரம் போனா டாக்டர்ஸ் ரௌண்ட்ஸ் வருவாங்க”, என்றான்.

“எனக்கு வேணாம்! நீங்க போங்க!”, என்றாள் வார்த்தையால்.

“அதெப்டி உன்னை விட்டுட்டு நான் மட்டும் தனியா போய் சாப்பிட முடியுமா……….. எழுந்து வா நேரமாகுது………. டாக்டர் ரௌண்ட்ஸ் வந்துடப் போறார்”, என்றான் சற்று அதிகாரமாக……….

“என்ன அதிகராம் தூள் பறக்குது”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தவள்………. அதை வெளியில் கட்டாமல்…… “எனக்கு பசிக்களை நீங்க போங்க”, என்றாள்.

“பசிக்கலைன்னாலும் பரவாயில்லை…….. கொஞ்சமா சாப்பிடு”, என்றான் சத்தமான குரலில். 

“யாராவது கேட்டால் என்ன நினைப்பர்” என்று தடுமாறியவள்…….. “இவன் என்னடா உயிரை எடுக்கிறான்”, என்று எண்ணியவாறே எழுந்து………….. “போகலாம்”, என்பது போல நின்றாள்.

அவன் முன்னே நடக்க………… அவன் பின்னே போவது……….. அவளின் எரிச்சலை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

சென்றவள் என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் நிற்க……………. “எனக்கு பிடிச்சதையே நீயும் சாப்பிடுறியா”, என்று அவன் கேட்க……….

மிக அவசரமாக அவனை முறைத்தவள், “இட்லி”, என்றாள்.

ஏதோ ஒன்று வாயைதிறந்தாளே என்று அவனும் அதையே வாங்கினான்………….. அவனுக்கும் அதையே வாங்கினான்.

அமைதியாக ஒரு மேஜையின் புறம் வைதேகி அமர……. அவளின் எதிர்புறம் அமர்ந்தான்.

இவனை பார்த்துக்கொண்டு சாப்பிடும் கொடுமை வேறா என்று நினைத்துக்கொண்டே சாப்பிட புரையேரியது………. அதைப்பார்த்தவன் அவசரமாக போய் அங்கே இருந்த தண்ணீர் கேனில் ஒரு டம்ளர் தண்ணீர் பிடித்து வந்து கொடுக்க…….. அதை வேண்டாம் என்பது போல தளையாட்டிய வைதேகி…………… அவன் ஏன், என்ன, என்று கேட்குமுன்னரே……….. பார்க்கும்முன்னரே……… அங்கே இருந்த பிசிலறி வாட்டர் பாட்டிலை சைய்கையால் காட்ட………. மறுபேச்சு பேசமால் அதை வாங்கி வந்து கொடுத்தான்.

 அதனை எடுத்துக் குடித்தவள்………….. “தேங்க்ஸ்”, என்றாள். அதை ஏற்கும் விதமாக ஒரு சிறிய தலையைசைப்பு மட்டுமே அவனிடம்.

“இதெல்லாம் எனக்கு தேவையா”, என்று வைதேகி நொந்து கொண்டவள்…………. அவன் தனக்கு என்ன வகையில் உறவாக வேண்டும் என்று அறிந்து கொள்ள ஆர்வம் பிறக்க………… எப்படி கேட்பது என்று தடுமாறினாள்.

அவளை பார்க்காமல் சாப்பிட்டு கொண்டிருந்தவன் திடீரென்று தலையை தூக்கி…….. “என்ன ஏதாவது கேட்கணுமா” என்க………….. மீண்டும் வைதேகிக்கு புரையேரியது.

தலையை தட்ட அவன் கை தானாக உயர………அவள் புரைஎரிகொண்டிருப்பதையும் மீறி கண்கள் விரித்தாள். அவள் பார்வை விரிவதையும் பொருட்படுத்தாது அவள் தலையை தட்டினான்.

தட்டியவன்…….. “சாப்பிடும் போது அதையும் இதையும் நினைக்காம, பேசாம சாப்பிடு”, என்றான். புரையேருவது நின்றுவிட்டாலும் ஒருமாதிரி அதிர்ச்சியில் இருந்தாள் வைதேகி. தன் தலையை ஆண்மகன் ஒருவன் தட்டுவதா. யார் கொடுத்தது அந்த உரிமையை. அவளுக்குள் கோபம் உதித்தது.

ஆனால் அவளாகவே இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்பாமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டது போல விட்டுவிட்டாள்.  அவன் ஒரு முன்பின் தெரியாத ஒரு பெண் பிள்ளையின் தலையை தட்டியது போலவே தெரியவில்லை சாதாரணமாக இருந்தான்.

அவன் என்னவோ ஒரு உரிமையோடு தன்னிடம் நடப்பது போலவே தோன்றியது வைதேகிக்கு. அப்படிதானா இல்லை அவள் நினைப்பா அவளுக்கே புரியவில்லை. மெதுவாக அவனிடம்…………. “நீங்க எப்படி எங்களுக்கு உறவாகனும், ஐ மீன் நீங்க அப்பாவுக்கு என்ன வேணும்”, என்றாள்.

“எங்க யாரைப் பத்தியாவது தெரியுமா”, என்றான்.

“யாரையெல்லாம் கேக்கறீங்க”,

“நேத்து வந்தவங்க”,

“அதுல கொஞ்ச பேர் தெரியும். ஆனா எப்படி உறவுன்னு தெரியாது”,

“இப்போ திடீர்ன்னு சொன்னா எல்லாம் புரியாது. நான் உங்கப்பாக்கு ஒண்ணுவிட்ட அக்கா பையன்”,

“இந்த ஒண்ணுவிட்டன்னா என்ன”, என்று கேட்கவேண்டும் போல அவளுக்கு தோன்றியது. இருந்தாலும் தனக்கு ஒன்றுமே தெரியாத அசமஞ்சம் என்று நினைத்து விட்டால் என்ன செய்வது என்று தோன்ற……. எல்லாம் தெரிந்த மாதிரி தலையை தலையை ஆட்டி வைத்தாள்.

வேறு ஏதோ சொல்ல வாய்திறந்தவன் அப்படியே அமைதியாகி விட்டான்.  வைதேகி அதை கவனித்தாலும் பெரிதாக எண்ணவில்லை. 

“உங்க பேரு”, என்றாள்.

சற்று தயங்கியவன், தன் முழு பெயரையும் சொன்னான், “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி” என்று.

“என்னது, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியா. இவ்வளோ ஓல்ட் பேஷன் நேமா. இதுல ரொம்ப சின்ன பேர் வேற”, என்று நக்கலாக எண்ணங்கள் அவள் மனதுக்குள் தான் ஓடின.

அவள் தன் பேரை பற்றி தான் ஏதோ நினைக்கிறாள் என்று அவள் முகத்தை பார்த்தவுடனே ராமிற்கு புரிந்தது. அவனும் எதுவும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் மறுபடியும் ஐ சீ யு வாயிலுக்கு வந்தபோது டாக்டர்கள் ரௌண்ட்ஸ்ஸில் இருந்தனர்.

வெளியே வந்த டாக்டர், “அவர் இப்போ நல்லயிருக்கார். நாளைக்கு ரூம்க்கு மாத்திடலாம். ஒரு ஆறு மாசம் ரொம்ப ஜாக்ரதையா பார்த்துக்கணும். இல்லைனா மறுபடியும் வர நிறைய வாய்ப்பிருக்கு”, என்று சென்றார்.

மறுபடியும் இருவரும் ஐ சீ யு வாயிலில் அமர்ந்து கொண்டனர். தேவை என்றபோது இரண்டொரு வார்த்தை…………. மற்றபடி அதிக பேச்சில்லாமல் தான் இருந்தனர். ராம் அனாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் இவளை கண்டுகொண்ட மாதிரி கூட தெரியவில்லை. இவளுக்கு தான் புதிதாய் ஒரு ஆண்மகனுடன் அமர்ந்திருப்பது சற்று லஜ்ஜையை கொடுக்க அவனை என்ன செய்கிறான் என்று கவனிப்பதும் திரும்பி பார்ப்பதுமாய் இருந்தாள்.

இப்படியே அந்த நாள் கடக்க……. இரவு மறுபடியும் வைதேகியை வீட்டுக்கு அனுப்பினான். அனுப்பும் முன்னர், “யார் கூட இருக்கிறார்கள்”, என்ற விவரம் கேட்டவன்…………… “வீடு வரை துணைக்கு வரவேண்டுமா”, என்றும் கேட்டான்.

“எதற்கு இந்த அதிகப்படியான அக்கறை”, என்று யோசித்தபடியே வீடு சென்றாள் வைதேகி. யாரும் அவள் அன்னை தந்தையை தவிர அவளிடம் இந்த மாதிரி எல்லாம் கேட்டதில்லை என்பதால் சாதாரண விஷயம் கூட அதிகப்படியான அக்கறையாக தெரிந்தது. 

மறுநாள் டாக்டர் ரௌண்ட்ஸ் வந்ததுமே சுவாமிநாதனை தனி ரூமிற்கு மாற்ற சொல்லிவிட்டார். தனி ரூம் மாற்றிய பிறகு அவரை கவனிக்கும் பொறுப்பு வைதேகி மேல் விழ………… அதற்கு அவசியமில்லாமல் அவனே பார்த்துகொண்டான்.

அவர் தனி ரூம் வந்தபிறகு யாராவது அவரை பார்க்க வந்துகொண்டே இருந்தனர். யாரையும் வைதேகிக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் ராமிற்கு எல்லோரையும் தெரிந்தது.

ராமும் அவள் தந்தையுமே அதிகம் பேசவில்லை. இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு பற்றுதல் தெரிந்தது.

வைதேகிக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இவன். எங்கிருந்து வந்தான். இப்போது எல்லாம் இவன் சொல்படி நடக்கிறது. எல்லா செலவையும் அவனே செய்கிறான், என்று அதே எண்ணமாக இருந்தது.

ஒரு சமயம் அவன் வெளியே போயிருக்க……….. “யார் அப்பா அவங்க,  எல்லா செலவையும் அவங்களே செய்றாங்க”, என்றாள்.

“நமக்கு சொந்தம் தாம்மா, எல்லாத்தையும் அப்புறம் திரும்ப கொடுத்துடலாம்……. வீட்ல போய் விவரமா சொல்றேன்”, என்றார்.

“என்ன வேலை பார்க்கறாங்க, இங்க உங்க கூடவே இருக்கறாங்க”, என்று கேட்டாள்.

“பட்டு சேலை நெய்யரதுக்கு கொடுத்து வாங்கறான்மா………. அப்புறம் அதை கடைகளுக்கு சப்ளை செய்வாப்பிடி. நல்ல பையன் எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்”.

“நம்ம வீட்டுக்கு வந்ததே இல்லையேப்பா”,

“அம்மாக்கு அவ்வளவா பிடிக்காததும்மா. அதனால வந்ததில்லை. ஆனா நான் அடிக்கடி பார்ப்பேன், எனக்கு தெரியும்”, என்றார்.

“ஏன் இப்போ உங்க கூடவே இருக்காங்க”,

“சின்ன வயசுல இருந்து நான் அவங்களுக்கு நிறைய உதவி பண்ணியிருக்கேன்மா. அதனாலயா இருக்கும்.  யாராவது ஒருத்தர் தேவை தானேம்மா”, என்று என்று அவர் பேசிகொண்டிருக்கும் போதே ராம் வர……. பேச்சை முடித்துக்கொண்டனர்.

அவனோடு சில உறவினர்களும் வந்தனர். வந்தவர்கள் எல்லாரும் உடல் நலத்தை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு எல்லாரும் அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் வைதேகியின் திருமணத்தில் தான் வந்து நின்றனர். “உடம்பு சரியான உடனே பொண்ணுக்கு ஒரு நல்ல இடமா பார்த்து முடிச்சிடு சுவாமிநாதா”, என்றார்கள் எல்லாரும் ஒன்று போல………

“படிச்சிட்டு இருக்குற பொண்ணாச்சே”, என்று அவர் தயங்க……..

“அதெல்லாம் பார்த்தா ஆகுமா, கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும். நமக்கு தெரிஞ்ச தரகர் இருக்கார். என்ன மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொன்னா………… அதெல்லாம் கச்சிதமா கொண்டுவந்திடுவார். நல்லா இருக்கும் போதே சீக்கிரம் சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடுப்பா”, என்று அவரை விட வயதில் மூத்தவர்கள் உரிமையாக சொல்லி சென்றனர்.  

தந்தையும் யோசிக்க துவங்குவது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது. வைதேகி இப்போது தான் பி.இ மூன்றாவது வருடம் படித்துகொண்டிருந்தாள். வேலைக்கு அனுப்பும் எண்ணமெல்லாம் இல்லை. நன்றாக படிக்கும் பெண் அவள் இஷ்டப்பட்டது படிக்கட்டும் என்று தான் விட்டார்.

அதுவுமில்லாமல் வைதேகியை திருமணம் செய்து வேறு வீட்டுக்கு அனுப்பும் எண்ணமெல்லாம் அவள் தந்தைக்கு இல்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவருக்கு. இல்லையென்றால் பிற்காலத்தில் அவர் தனியாளாகிவிடுவார் என்ற பயம் அவருக்கு.   

அவளின் தாய் இறந்தது அவளுக்கு மிகப்பெரிய துக்கம். அவளின் தாயின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டாள். அவர் சென்ற பிறகு அதிலிருந்து தேரிக்கொள்ளவே நேரம் போய் விட்டது. இப்போது தான் படிப்பிலேயே சற்று அக்கறை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறாள். அதற்குள் திருமணமா என்று எண்ணியது வைதேகியின் நெஞ்சம்.

உடம்பு சற்று தேறட்டும் தந்தைக்கு பிறகு சொல்லலாம் என்று எண்ணினாள். தந்தை ராமிடம் பேசிக்கொண்டிருக்க அதை செவிமடுக்க துவங்கினாள்.

“எப்படி ராம் போகுது வியாபரமெல்லாம்”.

“நல்லா போகுது மாமா”

“தம்பி தங்கச்சி படிப்பு”

“நல்லா படிக்கறாங்க”.

“நீயும் படிச்சிருக்கலாம்………. நான் எவ்வளவோ சொல்லியும் பண்ணண்டாவது ஓட நிறுத்திட்ட…….”,

“ஒஹ்! இவன் படிக்கவில்லையா”, என்று மனதுக்குள் நினைத்த வைதேகி அவன் முகத்தை ஆராய்ந்தாள்.

அதற்கு பதில் இல்லை. அவன் முகத்தில் ஒரு புன்னகையே தோன்றியது. அது என்ன மாதிரி புன்னகை என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டாள் வைதேகி.     

“நீ இங்க வந்து இருந்துட்டியே, அங்க தம்பி தங்கச்சியெல்லாம் இருந்துக்கும்மா”,

“எங்க பாட்டியை இருக்க சொல்லியிருக்கேன்”.

“யாரு பெரியம்மாவையா………..”,

“ஆமாம்”, என்ற அவனின் தலையைசைப்புக்கு………. “எப்படி மகன் வீட்டை விட்டு இறங்காதே”,

“உங்களுக்கு உடம்பு சரியில்லை……….. நான் நீங்க வீட்டுக்கு போற வரைக்கும் துணையிருக்கேன்னு சொன்னேன். சரின்னு சொல்லிட்டாங்க”.

 “பின்ன உங்கம்மாவும் அப்பாவும் காலமானப்ப உங்களோட இருக்க சொல்லி எவ்வளவு கேட்டேன். முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சு. மகன் மேல அவ்வளவு பாசம்”,

இந்த பேச்சை கேட்டுகொண்டிருந்த வைதேகிக்கு……….. “இவனுக்கு அப்பா அம்மா இல்லையா….. நிறைய உடன் பிறந்தோறா. அய்யோ பாவம்”, என்று அவளையும் மீறி தோன்றியது.

“என்ன பண்றது மாமா. உறவுகள் வேணும்னா எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும். என்ன பண்றது”, என்றான் சிறு புன்னகையுடன்.

“உனக்கு பொண்ணு பார்க்கிற வேலையெல்லாம் எப்படி போகுது”,

“தரகர் நிறைய ஜாதகத்தை கொண்டு வர்றார் மாமா……….. எனக்கு தான் எதுவும் திருப்தியா இருக்க மாட்டேங்குது……….. எங்க  குடும்பத்தை பிரிக்காத பொண்ணா வேணும் மாமா………… என்னை விட்டா என் தம்பி தங்கச்சிக்கு யாரும் இல்லை…….. இப்போ தான் ஒரு வரன் தகையற மாதிரி இருக்கு, நீங்க முன்ன நின்னிங்கலே அந்த வரன் தான் மாமா”.

“எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்………. நல்லதே நினை”,

“சரி மாமா என்பது போல தலையாட்டினான்”.  

 “எதுக்கும் உங்க தாய்மாமனை கலந்துக்கோ. இன்னும் நானும் ஓடியாடி திரிய முடியாது. உன் தாய் மாமன் கொஞ்சம் முறைச்சுப்பான்…………. இருந்தாலும் அவனை வைச்சே எல்லா வேலையும் செஞ்சுக்கோ. கௌரவம் பார்த்து ரொம்ப தள்ளி நிக்காத”.

“சரிங்க மாமா”, என்றான்.

“எனக்காக சொல்லாத ராம். அவனோட நிறைய பிரச்சனையை வளர்த்துக்காத. அவன் பிரச்சனையான ஆள்”.  

“சரிங்க மாமா”, என்றான்.

“எங்க வாய் தான் சொல்லுது……. இருந்தாலும் அவனோட பிரச்சனைகள் வளர்ந்துட்டு தானே இருக்கு”,

“அது நான் பண்றது இல்லை மாமா………. அவரே பண்றது நான் என்ன செய்யட்டும். நானா விலகிப்போனா கூட அவர் புதுசா ஏதாவது ஒன்னை இழுத்து சண்டை பண்றார். வீடு வேற பக்கம் பக்கமா போயிடிச்சி. என்ன பண்ணினாலும் ஏதாவது அதட்டி உருடிட்டே தான் இருக்கார். இருந்தாலும் நான் எதுவும் பண்றதில்லை. அவரா சத்தம் போட்டுட்டு போவார்”.

“அது ஒண்ணுமில்லைபா. அவனுக்கு பயம்……………. நீ எங்க உங்கம்மா பங்குன்னு சொத்தை கேட்டுடுவியோன்னு. அதான் வேற ஒண்ணுமில்லை. ஊர்ல நாலு பேரை வச்சு கேக்கலாம்னதுக்கு நீதான் பிடிவாதமா வேண்டாம்னுட்டே”.

“அப்புறம் நாங்க உயிர் வாழ்றதே அவர் தயவுல தான்னு பேசிட்டு திரிவார். வேண்டாம் மாமா”, என்றான்.

“ஒஹ்! இவர்கள் வீட்டில் நிறைய பிரச்சினை இருக்கிறதா”, என்று நினைத்தாள் வைதேகி.

“எப்படி அப்பாவுக்கு எல்லாம் தெரிகிறது. அம்மா இருந்தவரை யாரும் வீட்டுப்பக்கம் வந்ததில்லை. ஆனால் அப்பா இவனோடு இவ்வளவு உரிமையாக பேசுகிறார். எல்லாம் அவருக்கு தெரிந்திருக்கிறது எப்படி?”, என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டாள்.

தாங்கள் பேசுவதை ஒரு ஆராய்ச்சி பார்வையோடு வைதேகி கவனிப்பதை ராம் உணர்ந்தே இருந்தான். இவள் இவளின் அன்னையின் வளர்ப்பு தானே……………. உறவுகள் வேண்டாம் என்று இருப்பாளாயிருக்கும். உறவுகளின் அருமை பெருமை தெரியாதவர்கள். அது தான் தான் இவளின் தந்தையோடு பேசுவதை கூட பொறுக்க முடியாமல் பார்க்கிறாள் என்று ராம் எண்ணிக்கொண்டான்.     

     

 

Advertisement