கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் குழலி. அவருக்கு தேனிடம் தனியாக பேச வேண்டுமாம். 

தேனை தனியே விட்டு செல்ல ரமாவுக்கு விருப்பமில்லை, இவரும் ஏதேனும் சொல்லி நோகடித்து விடுவாரோ என்ற பயம். ஆகவே, “நான் போயே ஆகணுமா?” எனக் கேட்டார். 

அவர் கேட்ட விதமே போக மாட்டேன் என்பது போலிருந்தது. வம்பு பேசுபவர் அல்ல ரமா, ஆகவே அவரும் இருந்தால் தன் மகளின் பிரச்சனை கூட தீர்க்கப் படலாம் என கருதி அவரின் முன்னிலையிலேயே தேனிடம் பேசினார் குழலி. 

தேன் கணவனோடு மனஸ்தாபம் கொண்டு பிறந்த வீடு வந்த பிறகு ராஜ்குமார் மனைவியிடம் வித்தியாசமாக நடந்து கொள்கிறானாம். தங்கையின் வாழ்க்கை மீதுள்ள கவலையில் இருக்கிறான் என திவ்யாவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள். 

தங்கை வேலைக்கு போக வேண்டும், அவளுக்கு வேறு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், அது வரை நமக்கு குழந்தை வேண்டாம் என முடிவாக அவன் சொல்லவும் திவ்யாவுக்கு கோவம். அப்போதும் அமைதியாகவே நாம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் அண்ணியின் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என எடுத்து சொல்லியிருக்கிறாள். 

தனக்கென குழந்தை வந்து விட்டால் தங்கையின் வாழ்க்கையை செட்டில் செய்வதில் தனக்கு தீவிரம் குறைந்து விடும் என அவன் சொல்ல, குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் திவ்யாவால்  அதை ஏற்க முடியவில்லை. 

 அவனது பிடிவாதத்தில் பொறுமை இழந்து சண்டையிட்டிருக்கிறாள். பதிலுக்கு அவனும் என் தங்கை மீது அக்கறையில்லை, நீ சுயநலவாதி என மனைவியை திட்ட அபண்டாமான குற்ற சாட்டில் அவளுக்கு மனம் விட்டு போய் விட்டது. 

அடுத்த நாளே பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். முதலில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள் குழலி வற்புறுத்தி கேட்ட பிறகுதான் சொல்லியிருக்கிறாள். 

அண்ணனின் செய்கையில் தேனுக்கும் உடன்பாடில்லை. கவலையும் சங்கடமுமாக குழலியை பார்த்தாள். 

“இதுல உன் தப்பு எதுவுமில்லைனு எனக்கு தெரியும்மா. மாப்ள பேசுறதுதான் சரி கிடையாது. உன் வீட்டுக்காரர் அவரோட அக்கா, தம்பி, பெத்தவங்கன்னு பார்த்து பார்த்து பணம் காச அழிச்சார்னா, உன் அண்ணன் அவர் தங்கச்சிக்காகன்னு என் பொண்ணு சந்தோஷத்தை குலைக்கிறார். இப்ப பேசி சரி பண்ணி திவ்யாவை அங்க அனுப்பி வச்சாலும் உன் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கிடைக்காம அவங்க சந்தோஷமா குடும்பம் பண்ணவே மாட்டாங்க” என்றார் குழலி. 

தேனின் கண்கள் இரண்டிலும் கண்ணீர். 

“என்னங்க நீங்க இப்படியா மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசுவீங்க?” என கடிந்து கொண்டார் ரமா. 

“ஹையோ இந்த பொண்ண அழ வைக்கணும்னு சத்தியமா நினைக்கலங்க. ஆனந்த் தம்பி என்ன குணம் கெட்டவரா கெட்ட பழக்க வழக்கம் உள்ளவரா? எடுத்து பேசி புரிய வச்சு சேர்த்து வைக்கிறத விட்டுட்டு இன்னொரு கல்யாணம்னு பிரச்சனைய ரொம்ப பெருசாக்கினா என் பொண்ணு வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்குதே” என்றார் குழலி. 

“ஒரு பிரச்சனைனா பொண்ணுங்க பிறந்த வீடு வரத்தான் செய்வாங்க. இவகிட்ட என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு நாம சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏன்னா நமக்கு அந்த உரிமை இல்லைங்க” என தன்னையும் சேர்த்து பேசி குழலிக்கு கொட்டு வைத்தார் ரமா. 

“நானும் பொறந்த பொண்ணு அது வீட்டுக்கு வந்து போக இருக்க கூடாதுன்னு எல்லாம் சொல்லலை. எம்பொண்ணு வாழ்க்கை எனக்கு பெருசாச்சே. தேனோட அண்ணன் மாதிரியே என் பையனும் தங்கச்சிக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறேன்னு சொன்னா…” என குழலி சொல்லும் போதே, அதிர்ந்து போய் பார்த்தாள் தேன். 

“சொன்னா கேட்டுட்டு இருப்போமா நாங்க, எடுத்து சொல்லி மாப்ளயோடதான் சேர்த்து வாழ வைப்போம். அதைத்தான் தேனுக்கும் சொன்னேன், மத்தபடி தப்பான எண்ணம்லாம் இல்லிங்க எனக்கு” என சொல்லி எழுந்து சென்று விட்டார் குழலி.

“ஏன் அத்தை, அண்ணன் இப்படி செய்யுது? திவ்யா அண்ணி ரொம்ப நல்லவங்க, நான் செவனேனு அவர்கிட்டேயே போறேன்” என்றாள். 

“உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்காத அம்மு.  நம்ம வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் இரேன்” என்றார் ரமா. 

தேன் யோசனையாக பார்க்க, “ஸ்கூல் லீவ் அப்போல்லாம் எத்தனை நாள் வந்து தங்கியிருக்க, என்னவோ புது இடம் மாறி ரொம்ப யோசிக்கிற” என்றார் ரமா. 

“இல்லத்த, இப்ப வந்து தங்கினா அப்பாக்கு ஃபீல் ஆகும். எவ்ளோ கோவம்னாலும்என் வீட்டுக்காரரை விட்டுட்டு இருக்க முடியும்னு தோணல அத்தை. இப்பவும் என்ன கஷ்ட படுறாரோன்னு தான் கவலையா இருக்கு. நான் கூட இல்லாம இன்னும் பெருசு பெருசா இழுத்து விட்டுப்பாரோன்னு பயமாவும் இருக்கு. அண்ணியோட அம்மா பேசினதுக்கு அப்புறம் முடிவு பண்ணிட்டேன், சென்னைக்கே போறேன் அத்தை” என்றாள். 

“வேலை இல்லாம இருக்காரே, இப்ப எப்படி குடும்பம் நடத்துவீங்க?” கவலையாக கேட்டார் ரமா. 

“அங்க போய் பார்த்துக்கிறேன் அத்தை. தருண் பேர்ல பணம் கிடக்கு, நானும் வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டா சமாளிச்சிடலாம்” என்றாள். 

அவளின் கையை வாஞ்சையாக பிடித்துக்கொண்டவர், “பொண்டாட்டி முடியாம படுக்கிறப்ப புருஷனோட பவிசு தெரியும், புருஷன் காசில்லாம நிக்கும் போது பொண்டாட்டி குணம் புரியும்னு சொல்வாங்க அம்மு” என்றார். 

“அத்தை போதும்! அவர் தேவையில்லாம இழுத்து விட்டுகிட்ட பிரச்சனை, என் இடத்துல நான் இல்லாம வேறொருத்தின்னா திரும்ப போகவே மாட்டா” என கணவன் மீதுள்ள கோவத்தை பேச்சில் காட்டினாள். 

“அப்ப போகாத போடி” 

“அம்மாகிட்ட இருக்கிறதுக்கு அங்கேயே போலாம். பேசி பேசி கொல்ற அம்மாக்கு எதுவும் பேசாம கடுப்பேத்துற அவர் பரவாயில்லை” 

“குழம்பாம தெளிவா இதுதான்னு உறுதியா இருந்தா தாராளமா போ. ஆனா சண்டை போடணும், நடந்ததுக்கு விளக்கம் கேட்டு உண்டு இல்லைனு பண்ணனும்லாம் நினைச்சிட்டு போகாத. ஓடி ஆடி ஓஞ்ச பிறகு அப்பாம்மா புள்ளைக்குட்டிங்கன்னு யாரும் துணையா இருக்க மாட்டாங்க. புருஷனுக்கு பொண்டாட்டி தான், பொண்டாட்டிக்கு புருஷனந்தான்.  இப்ப நல்லா பட்டுட்டாரே ஆனந்த் தம்பி, சரியாகிடுவாரு. இல்லைனாலும் உன் வாழ்க்கைய நீயே சரி பண்ணிக்க” என்றார் ரமா அத்தை. 

“எப்படி பார்த்தாலும் பொண்ணுங்கதான் இறங்கி போக வேண்டியதா இருக்குல்ல அத்தை?” சோர்வாக கேட்டாள் தேன். 

“உங்களுக்குள்ள வேற என்னென்ன பிரச்சனைன்னு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லலை நீ. அவரை ரொம்ப பிடிக்கும்தானே உனக்கு? சரியாகுதான்னு கடைசியா ஒரு முயற்சிய போடு தேனு, அப்பவும் பிரயோஜனம் இல்லைனு தோணிடுச்சுன்னா…” என அவர் சொல்லும் போதே, திடுக்கிட்டு போய் பார்த்தாள் தேன். 

சிரித்தவர், “அப்படிலாம் ஆகாது, நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க” என்றார்.

தலையாட்டிக் கொண்டாள் தேன். 

உடனடியாக தம்பியை தனியே வரவழைத்த ரமா, “அம்முவை அவ வீட்டுக்காரர் கிட்ட கொண்டு போய் விடு. அவர் பண்ணினது எல்லாம் தப்புதான், அதுக்காக அவரே பார்க்கட்டும்னு அப்படியே கை கழுவி விட வேணாம். உன்னால முடிஞ்ச உதவிய அவருக்கு செய் தம்பி” என்றார். 

“அம்முவுக்கு இன்னும் கொஞ்சம் உடம்பு தேறட்டும், யோசிச்சு என்ன செய்யலாம்னு இருந்தேன் அக்கா” என்றார் தங்கப்பன். 

“தனியா சும்மா இருக்கிறதும் உன் பொண்டாட்டி இடிச்சு பேசுறத கேட்டுகிட்டு இருக்கிறதும் அவளுக்கு நல்லது இல்லை. அந்த தம்பி அடிச்சு கொடுமை பண்ணவா போகுது, கொண்டு போய் விடு. அப்புறம் நீ எந்த உதவி செய்றதா இருந்தாலும் உன் பையனுக்கும் கலைக்கும் தெரியாம செய்” என்றார் ரமா. 

தங்கப்பனும் சரி என சம்மதித்தார். 

வீடு வந்த பிறகு தேனை சென்னைக்கு அழைத்து செல்கிறேன் என தங்கப்பன் சொல்ல, அவரின் மனைவியும் மகனும் குறுக்கே விழுந்து தடுத்தனர். 

தேன் இதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டாள் என தங்கப்பனிடம் தர்க்கம் செய்தனர். 

மகளை அழைத்த தங்கப்பன், “நீயே உன் வாயால சொல்லும்மா” என்றார். 

நாங்கள் சொல்வதை எதிர்த்து பேசுவாயா என்பது போல அவளை பார்த்து நின்றனர் கலைவாணியும் ராஜ்குமாரும். 

“நான் சென்னைக்கு அவர்கிட்டேயே போறேன்” என சின்ன குரல் என்றாலும் தீர்மானமாக சொன்னாள் தேன். 

“எங்கள மீறி போயிட்டு, அதுக்கப்புறம் எதுக்காகவும் எங்ககிட்ட வந்து நிக்க கூடாது” என கலைவாணி சொல்ல, ஆமோதிப்பது போல பார்த்தான் ராஜ்குமார். 

தேன் கலக்கமாக தன் தந்தையை பார்த்தாள். 

“இவங்க கெடக்குறாங்கடா, என் கடைசி மூச்சு வரைக்கும் நான் உனக்கு இருக்கேன்டா தங்கம், உன் விருப்ப படி செய் நீ” என தங்கப்பன் கூற, கண்கள் கலங்க தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள் தேன்முல்லை.