பூத்தது ஆனந்த முல்லை -7

அத்தியாயம் -7

தேன்முல்லை பிறந்த வீட்டில்தான் இருந்தாள். ஊசியிலேயே கருக் கலைப்பு முழுதாகி விட்டதாகவும் இனி பயமில்லை எனவும் மருத்துவர் சொல்லியிருக்க அவளின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். 

கலைவாணிதான், “ஜாக்கிரதையா இல்லாம இப்படி உடம்ப கெடுத்துகிட்டியே” என மகளிடம் அவ்வப்போது புலம்புவார். 

“அப்பவே இவரை வேணாம்னு நீ சொல்லியிருக்கணும், என்னத்த கண்டு மயங்குனியோ இவரையே கட்டிக்கிறேன்னு சொல்லிட்ட, இல்லன்னா நல்ல பையனா பார்த்திருக்கலாம்” என்பார். 

“நடக்கிற எதையும் அவர் சொல்லாட்டா என்ன, கேட்டு தெரிஞ்சுக்கிற சாமர்த்தியம் உனக்கு இல்லை. இதுல புள்ளைக்கு ஒரு வயசு ஆகங்காட்டியும் அபார்ஷன் வேற” என அவளையும் குறை கூறுவார்.

 எதற்கும் பதிலே சொல்ல மாட்டாள் தேன். 

தங்கப்பன் வீட்டில் இருந்தால் மனைவியை கண்டித்து அடக்குவார், அவர் இல்லாத சமயங்களில் கலைவாணி பேசுவதை யாராலேயும் தடுக்க முடியாது.

ராஜ்குமார் அவன் பங்குக்கு மேலே இது படி, அது படி, அந்த வேலைக்கு போ, இந்த செர்டிஃபிகேஷன் கோர்ஸ் போகிறாயா என தங்கையிடம் கேட்டுக் கொண்டே இருப்பான். 

அவளுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என உறுதியாக தோன்றி விட்டதுதான். ஆனால் சஞ்சலம் அகன்ற தெளிவான மன நிலைக்கு வந்த பின்னர் தானே எந்த வேலை என்பது பற்றியெல்லாம் அவளால் சிந்திக்க முடியும்?

 இன்னும் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ முற்றிலும் குணமடையாதவளிடம் அதற்கான நேரத்தை கொடுப்பேனா என அவசர கதியில் செயல்பட்டான் ராஜ்குமார். அவனுக்கும் சரியான பதிலை அவளால் சொல்ல முடியவில்லை. 

தங்கை மீது அக்கறை என்றாலும் அவளை சரியாக புரிந்து கொள்ளாமல், அவளின் அமைதியில் நேரடியாகவே எரிச்சல் பட்டுக் கொள்ளவும் ஆரம்பித்தான். 

தேன்முல்லை ஒருவிதமான மன இறுக்கத்தில் இருந்தாள். 

அத்தனை சிரத்தையாக அவளையும் கவனித்துக் கொள்வதில்லை, தருணை திவ்யா நன்றாக பார்த்துக் கொண்டதால் அவனையும் கவனிக்கவில்லை. 

கணவன் சொல்லி சென்றது போல் அவனோடு அலைபேசியில் பேசுவதில்லை, அவனாக அழைத்தாலும் தவிர்த்து விட்டாள். 

ஆனாலும் அலுவலக கடனை எப்படி அடைப்பான் எனும் கேள்வி மட்டும் அடிக்கடி அவளுள் எழுகிறது. எப்படியோ போகட்டும் என அவனது நினைவுகளை உதறி விட முடியவில்லை.  தன் வாழ்க்கை, மகனின் எதிர்காலம் என அதிகமாக பயப்படுகிறாள். 

இப்படியே ஒரு மாதம் கடந்து விட்டது. 

இப்படியான சூழலில் ஒரு நாள் காலையில் அழுது வீங்கிய முகத்தோடு காணப்பட்டாள் திவ்யா.  ராஜ்குமாரும் வெளியில் சென்று விட்டான். என்ன என எவ்வளவு விசாரித்தும் எதுவும் சொல்லாத திவ்யா, அம்மா வீட்டுக்கு செல்கிறேன் என புறப்பட்டு சென்று விட்டாள். 

மாலை போல வந்த மகனிடம் கோவப்பட்டார் தங்கப்பன். வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு அப்படி என்ன மருமகளிடம் மோசமாக நடந்து கொண்டாய் என மகனை கேட்டார். 

“ம்ம்… என்ன குறை இங்க அவளுக்கு? கொழுப்பு கூடிப் போச்சு,  அதான் கிளம்பி போயிட்டா. தானா வருவா” என்றானே தவிர அதற்கு மேல் ஏதும் சொல்லவில்லை ராஜ்குமார். 

கணவன் மனைவி பிரச்சனைக்குள் நாம் அதிகம் தலை கொடுக்க கூடாது, அதுதான் அவளே வருவாள் என்கிறானே, விட்டு விடுங்கள் என கணவரிடம் சொன்னார் கலைவாணி. 

“அம்முவோட வாழ்க்கைல மட்டும் வேணுங்கிற அளவுக்கு தலை கொடுக்கிற, மகன் விஷயம்னா தள்ளி நின்னுக்குவியா? உன் மகன் மேலதான் தப்பு இருக்கும், என்ன ஏதுன்னு விசாரிச்சு, திவ்யாவை சமாதானம் செஞ்சு அழைச்சிட்டு வர சொல்லு” என்றார் தங்கப்பன். 

“எல்லாம் அவனுக்கு தெரியும், உங்க மகளோட புகுந்த வீடு மாதிரியா இங்க இருக்கு? இவ வாழ்க்கையும் அவ வாழ்க்கையும் ஒண்ணு இல்லை” என சொல்லி சென்று விட்டார் கலைவாணி. 

தங்கப்பன்தான் மருமகளுக்கு அழைத்து ஆறுதலாக பேசி, சம்பந்தியிடமும் எல்லாம் சீக்கிரம் சரியாகும், பயப்படாதீர்கள் என நல்ல முறையில் பேசி விட்டு வைத்தார். 

திவ்யா அவளது பிறந்த வீட்டிலும் என்ன பிரச்சனை என்பதை சொல்லவில்லையாம். தேனுக்கு தன்னால் ஏதும் சண்டையாகி இருக்குமோ என சந்தேகமாக இருந்தது. அம்மாவிடம் கேட்கவும் செய்தாள். அவரோ மறுத்தார். 

தேனும் அவள் பாட்டுக்கும் ஒதுங்கியே இருப்பதால் இது வேறு ஏதோ சண்டை என சமாதானம் செய்து கொண்டாள். 

பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்து விட்ட ஆனந்த், அலுவலகத்தில் பணத்தை செலுத்த, அவனுக்கு தெரிந்தவர்களையும் கடனாக கிடைக்கும் என அவர்கள் சொன்னவர்களையும் பார்க்க அலைந்து திரிந்து கொண்டிருந்தான். வேலையில்லாத இவனை நம்பி யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை. 

வீட்டு பத்திரத்தை வைத்து அகிலனுக்கு முன்னர் கடன் கொடுத்தவர் இப்போதும் கொடுக்க தயாராக இருப்பதாக சொன்னான் அகிலன். அந்த ஆளிடம் சென்றால் வீட்டை மறந்து விட வேண்டியதுதான் என்பதால் அந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ளவில்லை ஆனந்த். 

வீட்டை விற்று விடலாமா என வேதாச்சலம் யோசனை சொல்ல, சுந்தரி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

அலுவலகத்தில் தனக்கு தெரிந்த உயரதிகாரிகள் வைத்து பணம் செலுத்த ஒரு மாதமாக இருந்த காலக் கெடுவை இரண்டு மாதங்களாக நீட்டித்துக் கொண்டான் ஆனந்த். 

உறவினர் வீட்டு திருமணம் ஒன்றுக்கு தங்கப்பன் தம்பதிகள் கிளம்பினார்கள். மகள் எங்குமே செல்லாமல் இருக்கிறாள் என்பதால் வற்புறுத்தி தேனையும் பேரனையும் உடன் அழைத்து சென்றனர். 

திவ்யாவின் பெற்றோரும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர். மகளின் மாமியாரோடுதான் கலைவாணி ஏட்டிக்கு போட்டி நிற்பார், மகனின் மாமியாரிடம் நல்ல முறையில்தான் நடந்து கொள்வார். 

திவ்யாவின் பெற்றோரும் அடாவடி பேர்வழிகள் அல்ல. 

மகளை பற்றி மருமகள் சொல்லாமலா இருந்திருப்பாள் என்ற நினைவு கலைவாணிக்கு. ஆகவே தேனின் தற்போதைய நிலை பற்றி ஒளிவு மறைவில்லாமல் திவ்யாவின் அம்மா  குழலியிடம் சொன்னார். 

“உடம்பு கொஞ்சம் தேறினதும் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யணும், இனிமே அங்க போய் வாழறது எல்லாம் இவளுக்கு சரிபடாது. வேற வாழ்க்கை அமைச்சு தரணும்” என கலைவாணி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவ்விடம் விட்டு சென்று விட்டாள் தேன். 

தேனை கவனித்த குழலி இதில் தேனுக்கு விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டார். கலைவாணியின் குணம் தெரிந்ததால் அவரிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“திவ்யா என்ன சொல்றா, எப்ப வரப் போறாளாம், அவ இல்லாம வீடு வீடாவே இல்லை” என கலைவாணி சொன்னதற்கும் அமைதியான சிரிப்புதான் குழலியின் பதில். 

மகளின் பிரச்சனையில் யாரை எங்கே சரி செய்ய வேண்டும் என்பது குழலிக்கு புரிய, வீணாக சக்தியை செலவழிக்கவில்லை அவர்.

தேனுக்கு அவளின் அத்தை ரமா என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் போய் அமர்ந்து கொண்டாள். ரமாவின் மகள் தருணை ஆசையாக தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

தேனை பற்றி ரமா விசாரிக்க, மலர்ச்சியே இல்லாமல்  பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். துணுக்குற்றவர், “என்னடி, உனக்கும் உன் புருஷனுக்கும் இடைல எல்லாம் நல்லபடியா போகுதுதானே?” என அவளின் கன்னம் வருடி கேட்கவும் அவளுக்கு அழுகை வந்து விட்டது. 

உடனடியாக தன் தம்பியின் மகளை அறை ஒன்றுக்கு அழைத்து சென்று விட்டார் ரமா. 

அத்தையின் மடியில் தலை வைத்து நன்றாக அழுது விட்டாள் தேன். ஐந்து நிமிடங்களில் சுருக்கமாக தற்போதைய தன் நிலையையும் சொல்லி விட்டாள். 

“உன் அம்மா சொல்றது இருக்கட்டும், நீ என்ன நினைக்கிற?” எனக் கேட்டார் ரமா. 

“அவர் மேல கோவம்தான் அத்தை, அதுக்காக அவரை பிரியணும்னுலாம் நான் நினைக்கல. இப்போ உடனே அவர் கூட போகவும் தோணல” என்றாள் தேன். 

உடலளவிலும் மனதளவிலும் நொந்து போனவளுக்கு ஆசுவாசம் அடைய தனிமையும் அமைதியும் தேவை. அதற்குள் கணவனை பிரிந்து விடு, மேலே படி என அவளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டார்.