Pooththathu Aanantha Mullai 5 2 694 சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது. “திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும் சொல்லாம இப்ப என்ன இதுக்கு கூப்பிடுறாராம். உன்னைத்தான் சொல்லணும், நீதான் இடம் தந்திட்ட, ஆரம்பத்திலேயே கண்டிச்சு விட்ருந்தா இந்த நிலைமை ஆகியிருக்காது” பொரிய ஆரம்பித்து விட்டார் கலைவாணி. “தொந்தரவு பண்ணாம நீ இருக்கேன்னா நான் இங்க இருக்கேன்மா, இல்லைனா…” “இல்லைனா இல்லைனா எங்க போவ? அவர்கிட்டேயே போறேங்குறியா? இவ்ளோ பட்டும் திருந்தலையா நீ? போ போ… இதோ கழுத்துல காதுல போட்ருக்கியே அதையும் பிடுங்கிட்டு பச்ச புள்ள அர்ணாகொடி வரைக்கும் உருவிட்டு உங்களை மொட்டையா வுடுற வரை ஓய மாட்டார் அந்த மனுஷன். பெத்தவங்க அருமை அப்போதான் புரியும் உனக்கு” உச்சஸ்தாயில் பேசினார் கலைவாணி. “இந்த பேச்சை கேட்டுகிட்டே இருந்தேன்னா சீக்கிரம் என் புத்தி பேதலிச்சு போயிடும். எனக்கு படிப்பிருக்கு, என்னை நானே பார்த்துப்பேன், என் மகனையும் நல்லா வளர்த்துப்பேன். யார் ஆதரவும் தேவையில்லை எனக்கு” கண்ணீரும் கோவமுமாக சொன்ன தேன் மகனை தேடிக் கொண்டு ஹால் வந்தாள். தருணோடு இருந்த திவ்யா அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். வினயா நேற்றே சென்னையிலிருந்து நேராக அவளது வீட்டுக்கு சென்றிருந்தாள். “அத்தைய பத்தி தெரியாதா அண்ணி உங்களுக்கு? போங்க என் ரூம்ல போய் படுங்க. அப்புறமா பேசலாம்” என்றாள் திவ்யா. அம்மாவிடம் கோவமாக பேசி விட்டு வந்த தேனுக்கும் கைக்குழந்தையோடு எங்கே செல்வது என யோசனையாக, தன் முட்டாள் தனத்தை நொந்த படி அண்ணியின் அறைக்கு சென்று விட்டாள். படுத்தவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. கணவனோடு வாய்த்த நல்ல தருணங்களை நினைவுக்கு கொண்டு வந்து கணவனின் செயலில் சமாதானம் அடைய முயன்றாள். ஆனால் எதுவும் அவளை சமாதானம் செய்யவில்லை. அதிகம் பேசாத குணம் என்றாலும் பேசவே மாட்டாதவன் என்று இல்லையே. வீட்டுப் பத்திரம் அடகில் இருப்பது தெரிந்த போதே இப்படி என சொல்லியிருக்கலாம்தானே? அவனது குடும்பத்தினரது தவறுகளை என்னிடமிருந்து மறைக்க முயன்றிருக்கிறான். நேற்று கூட விஷயம் வெளியில் வரா விட்டால் வேலை போனதையும் மறைத்து இன்னுமின்னும் சிக்கல்களை உருவாக்கியிருப்பான். பல விதங்களில் அனுசரித்து போய்தானே வாழ்ந்தேன். நான் ஒன்றுமே இல்லையா அவனுக்கு? வாய் விட்டு புலம்ப முடியாமல் மனதிற்குள்ளேயே புலம்பினாள். இரவெல்லாம் தூங்காததும் சரியாக சாப்பிடாததும் சேர்ந்து அவளுக்கு என்னவோ போலானது. சில நிமிடங்களில் கொஞ்சம் போல சாப்பிட்டதையும் வாந்தி எடுத்து விட்டாள். திவ்யாதான் அவளின் உதவிக்கு ஓடி வந்தது. அடிக்கடி வாந்தி என இருந்தவள் மயக்கமடைந்தே விட்டாள். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. திவ்யாவும் கலைவாணியும் சேர்ந்தே தேனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டனர். தேன் கர்ப்பமாக இருப்பதாகவும் கரு குழாயில் தரித்திருப்பதாகவும் சொல்லப் பட்டது. உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி விட்டனர். சற்று நேரத்தில் ராஜ்குமாரும் தங்கப்பனும் வந்து சேர்ந்தனர். ஏதோ ஊசி போட்டிருப்பதாகவும் சரிவரவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய நேரிடலாம் எனவும் கூறினார் மருத்துவர். “என் பொண்ணு இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமோ?” என அழ ஆரம்பித்து விட்டார் கலைவாணி. தங்கைக்கு எதுவும் ஆகிவிடாது, சரியாகி விடுவாள் என சொல்லி அம்மாவை தேற்றினான் ராஜ்குமார். “ஏங்க… அண்ணிய பத்தி ஆனந்த் அண்ணனுக்கு தெரிய படுத்தணும்ல? ஒரு வார்த்தை சொல்லிடுங்க” என்றாள் திவ்யா. “அந்தாளுகிட்ட என்ன சொல்லணும், அவர்தான் என் தங்கச்சியோட இந்த நிலைக்கு காரணம். நேர்ல பார்த்தேன் அந்த ஆளை உண்டு இல்லைனு பண்ணிடுவேன்” என கோவப்பட்டான் ராஜ்குமார். திவ்யா நகர்ந்து கொண்டாள். மாப்பிள்ளையின் மீது தங்கப்பனுக்கும் கோவம்தான் என்ற போதும் வெட்டி விடும் உறவல்ல எனும் நிதர்சனத்தை புரிந்தே இருந்தார். ஆகவே, ஆனந்துக்கு அழைத்து விவரம் பகிரந்தார். பதறிப் போய் விட்டான் அவன். உடனடியாக புறப்பட்டு வருவதாக சொன்னவன் தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் வருவதாக சொன்னார்கள். தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க வேண்டி அவர்களை வரவேண்டாம் என சொல்லி அவன் மட்டும் பயணப்பட்டான். ஏற்கனவே தேனுக்கு சிசேரியனால் இருக்கும் வலியே இன்னும் முழுதாக தீரவில்லை. இப்போது இது வேறா என அவன் உள்ளம் முழுதும் கவலை. அவன் திருச்சி வந்து சேர்ந்த போது அதிகாலையாகி இருந்தது. தேனுடன் அவளது அம்மாவும் அண்ணனும் இருந்தனர். தருணை திவ்யா தன்னுடன் வீட்டில் வைத்திருந்தாள். தேன் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஆனந்த் வருவது பற்றி அவளுக்கோ அவளது அம்மா அண்ணனுக்கோ தெரியாது. கலைவாணியும் ராஜ்குமாரும் ஆனந்தை அவனது மனைவியை காண அனுமதிக்கவில்லை. “ஏன்… இருக்காளா செத்துட்டாளான்னு பார்க்க வந்திருக்கீங்களா?” என குதர்க்கமாக கேட்டார் கலைவாணி. “உங்க கோவம் புரியுது, பேச இதுவா நேரம்? அவளை பார்க்க விடுங்க” என்றான் ஆனந்த். “இனி எப்பவும் பார்க்க வராத, அம்முவுக்கு கொஞ்சமும் தகுதியே இல்லாத உன்னைப் போய் கட்டி வச்சு அவளுக்கு பெரிய அநியாயம் செஞ்சிட்டோம். உன்னால எங்க அம்மு பட்டதெல்லாம் போதும். நாங்க பண்ணின தப்பை நாங்களே சரி செஞ்சுக்கிறதா இருக்கோம்” என்றான் ராஜ்குமார். அவனது ஏக வசனத்தில் குன்றிப் போனாலும் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொள்ள முயன்றான் ஆனந்த். “சீக்கிரம் சட்டப்படி எல்லாத்தையும் செய்றோம். நாங்க அவளுக்கு போட்ட நகையை மட்டும் ஒழுங்கா திருப்பி தந்திட்டு நீ என்னமோ ஆகு, எங்கேயோ போ. என் தங்கச்சிய இனியாவது நிம்மதியா வாழ விடு” என ராஜ்குமார் சொல்ல, ஒட்டு மொத்தமாக அதிர்ந்து விட்டான் ஆனந்த். தங்கைக்கு மணமான ஆரம்பத்தில் இருந்தே ராஜ்குமாருக்கு அவளின் மண வாழ்க்கை மீது மிகுந்த அதிருப்தி. தான் அண்ணனாக இருந்தும் சரியாக விசாரிக்காமல் சரியில்லாத இடத்தில் அவளை கொடுத்து விட்டோம் என எப்போதுமே அவனுக்கு குற்ற உணர்வு உண்டு. ஆண் என்பவன்தான் பொருளாதார ரீதியாக மனைவிக்கு அனைத்தையும் செய்து தர வேண்டும், என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும் மனைவியை வருத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தேனின் நகைகளை அவளுக்கே தெரியாமல் அடகு வைத்ததை மாபாதகம் என்பது போலதான் பார்த்தான். தேன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதிலிருந்து கலைவாணியும் அவர் பங்குக்கு ஆன்ந்தை பற்றி குறைகளாக சொல்லி, மகள் நரகத்தில் வாழ்ந்து வருவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார். ஆதலால் தங்கைக்கு இந்த மண வாழ்க்கையில் இருந்து விலக்கு வாங்கித் தருவதுதான் நல்லது என முடிவு செய்து விட்டான் ராஜ்குமார். மகனின் பேச்சில் கலைவாணிக்கு அதிர்ச்சிதான் என்றாலும் மகன் என்ன சொன்னாலும் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவனை தடுக்கவே இல்லை. “நாங்க சேர்ந்து இருக்கிறதும் பிரிய போறதையும் நீங்க முடிவு பண்ணக்கூடாது, தேனை பார்க்க விடுங்க, நான் அவகிட்ட பேசிக்கிறேன்” என்றான் ஆனந்த். “இப்போ உன்னை பார்த்தா அவ பிபி ஏறிப் போய் ரொம்ப முடியாம போயிடும். கோர்ட்ல பார்த்துக்கலாம், கிளம்பு” என்றான் ராஜ்குமார். “என்னை தடுக்கிற உரிமை உங்க யாருக்கும் இல்லை, நான் பார்ப்பேன் அவளை” என சொல்லி ஓரடி எடுத்து வைத்தான் ஆனந்த். “ஆமாம் ஆமாம் பொல்லாத உரிமை. ஆஸ்பத்திரியில இப்ப வரைக்கும் எவ்ளோ செலவாகியிருக்கு தெரியுமா? எல்லாம் என் பையந்தான் பார்க்கிறான். ஏன் உரிமை உள்ள நீங்க பணம் கட்டி பாருங்களேன்” என இகழ்ச்சியாக சொன்னார் கலைவாணி. ஆனந்த் இருக்கும் நிலையில் மருத்துவமனை செலவெல்லாம் அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவன் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுக்கு கூட கடந்த மாதமே பணம் செலுத்தியிருக்க வேண்டும். அவனுக்கிருந்த பண நெருக்கடியால் ஒரு மாத கால அவகாசம் கேட்டிருந்தான். “ஒரு மாசம் கிரேஸ் பீரியட் இருக்கு, ஆனா அந்த ஒரு மாசத்துல எந்த மெடி கிளைமும் நீங்க செய்ய முடியாது” என அப்போதே காப்பீட்டு நிறுவனத்தில் சொல்லியிருந்தனர். எல்லாமுமே காலை வாரி விடும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை அவன். உலர்ந்து போன தொண்டையை செருமிக் கொண்ட ஆனந்த், “நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள தேனு ட்ரீட்மெண்ட்டுக்கு ஆன பணத்தை கட்டிடுறேன்” என்றான். “பார்த்தியாடா உன் தங்கச்சி நிலைய? இதே இவரு அக்காவுக்கு சீரு செய்யணும்னா மட்டும் அடுத்த நிமிஷம் பணத்த ரெடி பண்ணிடுவாரு. நல்ல வேளைக்கு இவ நம்ம வீட்ல இருந்தா, இதோ இவர் கூட இருந்திருந்தா… செலவு பண்ண பணம் இல்லைனு இந்நேரம் என் பொண்ணை… ஐயோ நினைக்கவே என் கொல நடுங்குதே!” நெஞ்சில் கை வைத்து பதறினார் கலைவாணி. “ஏங்க ஏதேதோ பேசுறீங்க? அப்படியா அவளை விட்…” ஆனந்த் பேசி முடிக்கும் முன் அவனது கையை பற்றி இழுத்துக் கொண்டு மருத்துவமனையின் வாயிலை நோக்கி நடந்தான் ராஜ்குமார். பாதியிலேயே அவனது கையை உதறி விட்டு கோவமாக பார்த்தான் ஆனந்த். “பொண்டாட்டின்னா புள்ள கொடுக்க மட்டும்தான்னு நினைக்கிற நீ என் தங்கச்சி கூட வாழ தகுதியே இல்லாதவன். ஒழுங்கா போயிடு, உனக்கு அவ்ளோதான் மரியாதை” என எச்சரிக்கை போல சொல்லி சென்றான் ராஜ்குமார். அவமானத்தில் கன்றிச் சிவந்து விட்ட முகத்தோடு நின்றிருந்தான் ஆனந்த்.