உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ தங்கை படுகுழியில் விழுந்து விட்டாள் எனும் அளவிற்கு அவளை பரிதாபமாக பார்த்தனர்.
கணவனோடு மன வருத்தம் என்ற போதும் தன் பிறந்த வீட்டினர் அவனை பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான்தான் அதற்கு இடமளித்து விட்டோமோ என அவள் மீதே கோவமாக வந்தது.
ராஜ்குமார் ஒரு படி மேலேயே போய், “தருண் பத்தியெல்லாம் கவலைப்படாத, நான் இருக்கேன், அவனை ஆளாக்க வேண்டியது என் பொறுப்பு அம்மு” என்றான்.
மகன் மீது உயிரையே வைத்திருக்கும் ஆனந்த் அவனுக்கு செய்யாமல் போய் விடுவானா? அண்ணா ஏன் இப்படி பேசுகிறான் என மனம் நொந்தாள் தேன்.
அதை விட அண்ணன் அதை சொல்லும் போது அருகிலிருந்த அண்ணியின் முகம் மாறிப் போனதோ என சரியாக தெரியாமலேயே அவளுக்கு கவலை பீடித்தது.
சீராட வருவது வேறு, இப்படி கணவனுடன் பிணக்கு கொண்டு இங்கு இருந்தால் நிம்மதியாகவே இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டாள்.
அப்பாவிடம் வந்து அன்று இரவே ஊருக்கு புறப்படுவதாக சொன்னாள். வீடே அவளை ஒரு மாதிரியாக பார்த்தது.
“இவனுக்கு தடுப்பூசி போட நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஃ பிக்ஸ் பண்ணியிருந்தோம், நான்தான் மறந்திட்டேன், போகணும் ப்பா” என காரணம் கண்டு பிடித்தாள்.
“பத்தாவது மாசத்துல என்னடி தடுப்பூசி? ஏன் உன் வீட்டுக்காரர் வேற ஏதும் பிரச்சனை செய்றாரா?” எனக் கேட்டாள் வினயா.
“இருக்கும், ஆக்கி போட ஆள் இல்லைல, அவரை கட்டி என் பொண்ணு என்ன சுகத்தை கண்டா? நாலு இடம் கூட்டிட்டு போயிருப்பாரா? நகை நட்டுனு வாங்கி போட்ருப்பாரா? அவருக்கு சமையக்காரி, அவர் புள்ளைக்கு ஆயா!” புலம்பினார் கலைவாணி.
“ஒரு பத்து நாள் இங்க இருந்திட்டு போலாம் அம்மு, திருச்சியில கூட நிறைய இடம் இருக்கு, திவ்யாவோட போயிட்டு வா” என்றான் ராஜ்குமார்.
பிறந்த வளர்ந்த ஊரில் அவள் பார்க்காதது என்ன இருக்கிறது? வெளியூர்களுக்கு கணவனோடு செல்ல அவள் ஆசை கொண்டிருப்பதை அம்மா மூலம் அறிந்து, இப்படி சொல்லும் அண்ணனை வெறுமையாக பார்த்தாள்.
“அதான் சொல்றானேடி உன் அண்ணன், இருக்கேன்னு சொல்லு. உனக்கு தருணுக்கு எல்லாம் நல்லதா நாலஞ்சு ட்ரெஸ் எடுத்துக்க, உன் வாய்க்கு பிடிச்சதா செஞ்சு போடுறேன், ரெஸ்ட்டா இரு. உன் புருஷன் வரவு செலவு பத்தியெல்லாம் என்ன ஏதுன்னு கட் அண்ட் ரைட்டா அப்பாவை விட்டு பேச சொல்றேன். அப்புறம் அங்க போறது பத்தி யோசனை பண்ணலாம்” என்றார் கலைவாணி.
“இதான்ப்பா இங்க பிரச்சனை, எங்களுக்குள்ள என்னன்னு கூட நான் அம்மாட்ட சொல்லலை. அதுக்குள்ள… ஷ்ஷ்ஷ்… என்னவோ இயல்பா இருக்க முடியலைப்பா இங்க, அங்கேயே பரவாயில்லை. டிக்கெட் போட்டு தாங்க ப்பா”என தீர்மானமாக சொல்லி விட்டாள் தேன்.
உடன் செல்கிறேன் என்ற மகனை தவிர்த்து விட்டு தானே மகளுக்கு துணையாக புறப்பட்டார் தங்கப்பன்.
விடியற்காலையில் மனைவியும் மகனும் வந்து சேர்வார்கள் என எதிர் பார்த்திராத ஆனந்தின் முகத்தில் இனிய அதிர்ச்சி ரேகைகள்.
மாமனாரை வாங்க என அழைத்தான். தங்கி வருவதாக சொல்லி ஏன் உடனேயே வந்து விட்டாய் என மனைவியிடம் அவனும் கேட்டுக் கொள்ள வில்லை, அவளும் எந்த காரணமும் சொல்லவில்லை.
கணவனும் மனைவியும் ஒன்றும் பேசிக் கொள்ளாமலே அன்றாட வேலைகள் நடந்தன. தருண் உறக்கத்திலிருக்க அவனுடனே படுத்து விட்டார் தங்கப்பன்.
கணவனுக்கான மதிய உணவை பேக் செய்து அதை அவனுடைய அலுவலக பையோடு சேர்த்து உணவு மேசையில் வைத்த தேன், தோசை ஊற்ற ஆரம்பித்தாள்.
தயங்கி தயங்கி அவளருகில் வந்தவன், “எப்படியும் பணம் ரெடி பண்ணிடலாம்னு இருந்திட்டேன், லாஸ்ட் மினிட்ல முடியலை. ஸாரி தேனு” என்றான்.
ஏதாவது ஒன்றுக்காக பணம் வேண்டுமென்றால் என்ன நாடகம் நடத்தியும் இவனை உணர்ச்சி ரீதியாக பிளாக் மெயில் செய்து எப்படியாவது பணத்தை பெற்று விடுவார் ஆனந்தின் அம்மா திரிபுரசுந்தரி. ஒரு முறை கூட என்னால் முடியவில்லை என இவன் சொன்னதே கிடையாது.
ஆகவே இப்போது தன்னால் முடியவில்லை என அவன் சொல்வதை அவளால் ஏற்க முடியவில்லை. ஆயினும் அவனது மனதை வருத்தவும் இயலவில்லை. அலுவலகத்தில் கூட வேலைப் பளு என்கிறானே, நானும் என் பங்குக்கு போட்டு படுத்த கூடாது என நினைத்தவள், “பொரியல், தயிர்லாம் தனி தனியா வச்சிருக்கேன், பார்த்து எடுத்து சாப்பிடுங்க” என்றாள்.
“செலவாகும் பரவாயில்லையா?” வெடுக் என கேட்டு விட்டவள் பின் தன்னையே நொந்த வண்ணம் திரும்பிக் கொண்டாள்.
ஆனத்துக்கும் முகம் சுருங்கி விட்டதுதான், ஆனாலும் மனைவி சொல்லும் குறையில் அர்த்தம் இருப்பதாகவே நினைத்தவன் பர்ஸில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுத்து, “பணம் இங்க வைக்கிறேன், போயிட்டு வாங்க” என்றான்.
தேன் திரும்பி பார்க்க அஞ்சறை பெட்டிக்கு கீழ் பணம் இருந்தது.
“வேணாம், அப்பா நைட் கிளம்பிடுவார், டயர்ட் ஆகும்னு வெளிலலாம் வர மாட்டார், ஒழுங்கா இந்த பணத்தை எடுத்துக்கோங்க” என கோவமாக சொன்னாள்.
கேப் பிடித்து சென்று வரவே ஆயிரம் ஆகிவிடும், மிச்சத்தில் என்ன வாங்கிக் கொடுப்பாளாம் அப்பாவுக்கு, இதே சென்ற முறை இவனது பெற்றோர் வந்து சென்ற போது நாள் முழுதுக்கும் கார் வாடகைக்கு பேசி சென்னையையே சுற்றி வந்தார்கள்.
அடுத்த நாள் பை பையாக துணிமணிகள் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் என வாங்கிக் கொண்டார்கள். சுந்தரிக்கு டம்ளர் ஸ்பூன் கூட ஊரில் நல்லதாக கிடைக்காது, சென்னையில் அதுவும் பெரிய மகனின் காசில் வாங்கினால்தான் திருப்தி அடைவார், எது வாங்கினாலும் அவருக்கு ஒன்று அவரது மகளுக்கு ஒன்று. பேச்சுக்கு கூட உனக்கு வேண்டுமா என மருமகளிடம் கேட்க மாட்டார்.
“உனக்கென்ன கார்டையே கைல கொடுத்து எல்லாம் வாங்கிக்க சொல்லிடுறான். மயிலுக்கு அவ வீட்டுக்காரர் எண்ணி எண்ணித்தான் தருவார், அதுக்கும் கணக்கு சொல்லணும். அப்புனுக்கு நேரமே சரியில்லை, சம்பாத்தியமே வர மாட்டேங்குது” என மனப்பாடம் செய்து வைத்தது போல மறக்காமல் சொல்லிக் காட்டுவார்.
மயில் அவரது மகள் சுபர்ணாவின் செல்லப் பெயர். அப்புனு அவரது பொறுப்பில்லாத கடைக்குட்டி மகன் அமுதனின் செல்லப் பெயர்.
உங்கள் மகன் கொடுப்பது கிரெடிட் கார்ட், அதில் கடனாக வாங்கிக் கொள்ளும் பணத்துக்கு மீண்டும் இவர் பணம் செலுத்த வேண்டும் என எத்தனையோ முறை மாமியாரிடம் இவள் சொல்லியாகி விட்டது.
“எப்படியோ கொடுக்கிறான்தானே, அதிலேயும் பணம் இருக்குதானே?” என்பவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதால் விட்டு விடுவாள்.
இப்போது அந்த கிரெடிட் கார்ட் கூட கொடுக்காமல் எண்ணி எண்ணி கொடுப்பவன் மீது கோவம்தான் வந்தது.
அவன் பணத்தை எடுத்துக் கொள்ளாமல் சாப்பிட சென்றான். தோசைகள் எடுத்து வந்து பரிமாறியவள் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவனது பர்ஸை எடுத்து அவன் கொடுத்த பணத்தை வைத்து விட்டாள்.
ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டான்.
தங்கப்பன் எழுந்ததும் அவரை கவனித்தாள், தருணும் எழுந்து கொண்டான். அவனது தேவைகள் பார்த்து உணவூட்டி முடித்தாள்.
“அவனை பார்க் கூட்டிட்டு போய் வேடிக்கை காட்டுறேன் மா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என சொல்லி பேரனை தூக்கிக் கொண்டு சென்று விட்டார் தங்கப்பன்.
மதிய சமையல் முடிந்தது. ஆகவே அவளும் படுத்துக் கொண்டாள். கண்களை மூடினாலே கணவன் மீதான வருத்தம்தான் முன் வந்தது.
இப்போது யோசித்துப் பார்த்தால் நகைகள், பட்டுபுடவைகள், வெளியூர் பயணங்கள் என கணவனுக்கு பெரிதாக செலவுகள் வைத்ததே இல்லை தேன்.
பிரசவத்தின் போது அவளது தந்தை செலவு செய்தாலும் அவனுடைய நிறுவனத்தில் கிளைம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்பதால் பில் எல்லாம் கேட்டு பெற்றுக் கொண்டான்.
“ஒண்ணு கிளைம் பண்ணாதீங்க, அப்படி செய்தா வர்ற பணத்தை அப்பாகிட்டதான் கொடுக்கணும்” என அப்போது மட்டும் கட்டளையாக சொன்னாள் தேன்.
அவனுடைய பொறுப்பில்லா தம்பிக்கோ பேராசை கொண்ட தமக்கைக்கோ செய்து அழிப்பதை காட்டிலும் தன் குடும்பத்திற்கு செல்லட்டும், அப்பாவுக்கு எந்த வகையிலாவது உபயோக படும், என்னை வைத்துதானே பணம் கிளைம் செய்கிறான் என நினைத்து விட்டாள் தேன்.
ஆனந்த் மறுவார்த்தை பேசவில்லை, பணம் கிளைம் ஆனதும் மாமனாரிடம் கொடுத்தான். பதறிப் போனவர் வாங்கவில்லை, மகளையும் கடிந்து கொண்டார்.
ஆனால் கலைவாணிக்கு மருமகனின் குடும்ப நிலவரம் நன்றாக தெரியும். ஆதலால், “அவரோட பொண்டாட்டிக்கு அவரே செய்யனும்னு ஆசை படுறார், ஏன் வேணாம்ங்கிறீங்க, வாங்கிக்கோங்க” என்றதோடு நில்லாமல் தானே கையில் வாங்கிக் கொண்டார்.
ராஜ்குமாருக்கு திருமணமான புதிது, அவனது மனைவி திவ்யாவுக்கு வீட்டு நிலவரங்கள் பெரிதாக தெரியாது. அவள் தன் நாத்தனாரின் கணவன் பற்றி பெருமையாக தன் பிறந்தகத்தில் சொல்லியிருந்தாள்.
தருணின் பெயர் சூட்டும் விழாவின் போது திவ்யாவின் அம்மா ஆனந்தின் அம்மாவிடம் விஷயத்தை சொல்லி, நீங்கள் உயர்ந்தவர் சிறந்தவர் பெருந்தன்மை கொண்டவர் என புகழ்ந்து பாடி விட்டார்.
சுந்தரிக்கு அதிர்ச்சி, அதெப்படி தலைப்பிரசவம் பெண் வீட்டில்தான் செய்ய வேண்டும், என் மகனை ஏமாற்ற பார்க்குறீர்களா என கலைவாணியிடம் கேட்டு விட்டார்.
கலைவாணி அசரவில்லை, “அதென்ன சட்டமா? உங்க பேரன் வளர்ந்து ஆளாகி எங்களுக்கா செய்ய போறான், உங்க புள்ளையதானே பார்க்க போறான், அவர் செய்யலாம் தப்பில்ல” என பதில் கொடுத்து விட்டார்.
வார்த்தைகள் வளர்ந்து இருவருக்கும் மனத் தாங்கலாகி விட்டது. இப்போது வரை எதுவும் சரியாகவில்லை. தீபாவளி பொங்கல் வரிசைகள் கூட சென்னைக்கு சென்றுதான் கொடுத்து வருகின்றனர் தங்கப்பன் தம்பதியினர்.
பிரசவ செலவுக்கென மாப்பிள்ளையிடம் பெற்றுக் கொண்ட பணத்தை மனைவியின் யோசனை படி பேரனின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக மாற்றி விட்டார் தங்கப்பன்.
“எல்லாத்தையும் அங்கேயே செஞ்சு இவனுக்கு ஒண்ணும் இல்லாம பண்ணிடுவார், அதான் இப்படி செஞ்சிட்டோம். இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லணும்னு இல்லை” எனவும் மகளுக்கு சொல்லித் தர, அவளும் சரியென கேட்டுக் கொண்டாள்.
அம்மாவின் ஆலோசனைகளை அப்படியே ஏற்று மகனின் தடுப்பூசி செலவுகள், இன்னபிற மருத்துவ செலவுகள் என அனைத்தையும் கணவனிடமிருந்தே பெற்றுக் கொள்வாள் தேன்.
தன் வீட்டிலிருக்கும் வரை தன் பொறுப்பு என தங்கப்பன் அனைத்தும் பேரனுக்கு செய்து விடுவார். அம்மாவின் யோசனை படி கணவனிடமிருந்து பெற்ற பணத்தை தனியாக சேமித்துக் கொள்வாள் தேன்.
ஒரு கட்டத்தில் அவளுக்கே கணவனிடம் இப்படி செய்வது பிடிக்காமல் போய் விட்டது. எதற்காக கணவனிடம் கேட்க வேண்டும், நானும் படித்திருக்கிறேன் வேலைக்கு போவேன், மகன் கொஞ்சம் வளரட்டும் என்ற மன நிலைக்கு வந்து விட்டாள்.
ஆனால் கலைவாணி விட்டால்தானே?
“உன் மாமியார் வீட்ல எல்லாரும் சொகுசா இருக்கும் போது நீ மட்டும் ஏன் வேலைக்கு போய் கஷ்ட படணும்? நீ வேலைக்கு போயிட்டா அங்கேயே போயி எல்லாத்தையும் கொட்ட உம் புருஷனுக்கு இன்னும் ஈஸியா போயிடும். புள்ளைய வளர்த்து ஆளாக்கு, உனக்கு வேணுங்கிறத அவர்கிட்ட கேட்டு வாங்கிக்க, செய்யலைனா எங்ககிட்ட சொல்லு, நாங்க பார்த்துக்கிறோம்” என சொல்லி விட்டார் கலைவாணி.