பூத்தது ஆனந்த முல்லை -19

அத்தியாயம் -19

தம்பியின் திருமணத்தில் அண்ணனாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான் ஆனந்த். ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது திருமணம்.

“எப்பட்றீ இவ்ளோ வசதியான இடத்துல உள்ளவங்க இந்த பயலுக்கு பொண்ணு கொடுக்கிறாங்க? அறிவு மங்கி போய் பொண்ணு காதலிச்சா பெத்தவங்களும் கண்ண மூடிகிட்டு பொண்ண கட்டி தந்திடுவாங்களா? உன் மாமியா சொல்ற மாதிரி இந்த பயலுக்கு ராஜயோகம்தான். ஹ்ம்ம்… என்னவோ இதுக்கப்புறமாவது உன் புருஷங்கிட்டருந்து புடுங்கி கொட்டிக்காம இருந்தா சரிதான், எங்க… உன் வீட்டுக்காரர்தான்  வாலண்டியரா வந்து அள்ளி கொடுக்கிற ஆளாச்சே!” என மகளிடம் அங்கலாய்த்தார் கலைவாணி.

“அமைதியா இரேன்மா” என கடிந்து கொண்டாள் தேன்.

கலைவாணியை போலவேதான் மண்டபத்தில் இருந்த பெரும்பான்மையான மக்கள் அகிலனுக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டதாக நினைத்துக் கொண்டனர்.

வீட்டை ஆனந்தின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டுத்தான் பூர்வீக இடத்துக்கு உண்டான பணத்தை பெற்று மனைவியிடம் கொடுத்திருந்தார் வேதாச்சலம். கையில் பணம் இருக்கிறதே என தாம்தூம் என செலவு செய்திருந்தார் சுந்தரி.

தனக்கு ஒரு பங்கு வேண்டும் என சுபர்ணா கேட்ட போது கூட, “இவ்ளோ கொட்டி எல்லாம் செய்றதே நாளைக்கு திரும்பி வாங்கதான். அவன் நல்லா செல்வாக்கா ஆனதுக்கப்புறம்  உன் அக்கா அவ பங்க விட்டு உனக்கு கொடுத்து கல்யாணத்த நடத்தி வச்சாடான்னு நான் சொன்னா, உனக்கு உன் புள்ளைங்களுக்கு பத்து மடங்கா திரும்ப செய்வான்” என சொல்லி அவளுக்கு ஆசை காட்டி வைத்திருந்தார் சுந்தரி.

சுபர்ணா தன் அம்மா சொன்னதையே தன் கணவனிடமும் சொல்லி வைக்க, எதிர்காலத்தில் சின்ன மச்சானிடம் நிறைய அடைந்து கொள்ளலாம் என நப்பாசையில் இருந்தான் பாஸ்கர்.

இப்படியாக யாரின் எதிர்ப்பும் இன்றி பணத்தை பெற்று ஜாம் ஜாம் என திருமணத்தை முடித்துக் கொண்டான் அகிலன்.

இரண்டு நாட்கள் மனைவியோடு ஊரில்தான் இருந்தான் ஆனந்த். என்னதான் சின்ன மகன் பெரிய இடத்து மாப்பிள்ளையாகி விட்டாலும் பெரிய மகனின் ஆதரவும் தேவை என நினைத்த சுந்தரி, வீட்டை உன் பெயருக்கே மாற்றிக் கொண்டாய், கல்யாணத்துக்கு பணம் தரவில்லை என்றெல்லாம் அவனிடம் குத்தி காட்டி பேசவில்லை. மகனிடம் நல்ல முறையிலேயே நடந்து கொண்டார்.

மருமகள் நகை கொடுக்க ஒத்துழைத்து, பணம் கொடுக்கவும் ஆனந்திடம் சிபாரிசு செய்திருந்தால் வீடு தன் பெயரிலும் இருந்திருக்குமே என்ற எண்ணத்தில் தேனிடம் மட்டும் சரியாக பேசாமல் அவளிடமிருந்து விலகியே நின்றார்.

நீங்கள் பேசா விட்டால் எனக்கு என்ன நட்டம்? என அலட்டிக் கொள்ளவே இல்லை தேன்.

அங்கிருந்த படியே தேன் சென்னைக்கும் ஆனந்த் பெங்களூருக்கும் செல்வதாக பயணத் திட்டம்.

எல்லாம் சரியாக நடக்க ஆரம்பித்தும் இந்த பிரிவு அவர்களை கவலை படுத்தியது. ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக கிளம்பி சென்றனர்.

ஆனால் இந்த பிரிவு கூட அவர்களை அவர்களின் துணையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள உதவி செய்தது.

தங்கும் விடுதிக்கு வந்த பிறகு ஆனந்துக்கு பெரிதான வேலைகள் இல்லை, பேசவும் அவனுக்கு அங்கே நண்பர்களும் இல்லை. ஆகவே பெரும்பான்மையான நேரம் மனைவிக்கு அழைத்து பேசினான். அவனுடைய இயல்பை மீறி அதிகமாகவே பேசினான், அலுவலக விஷயங்கள் பற்றி கூட மேலோட்டமாக ஏதாவது சொல்கிறான்.

தேனும் அவனிடமிருந்து நிறைய வார்த்தைகளை செல்லமான வலுக் கட்டாயத்தோடு பறித்துக் கொண்டாள். அவளும் மனம் திறந்தாள். போன வாரம்தான் காதலிக்க ஆரம்பித்த புதிய காதலர்கள் போல, பேச்சை முடித்துக் கொள்ளவே பிரியப் படாமல் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தார்கள்.

“இதென்னடா போன்லேயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்களா ரெண்டு பேரும்?” என தங்கப்பன் வாய் விட்டும் புலம்பும் அளவுக்கு பேசினார்கள்.

தருண் அவனது தாத்தாவின் வசம் என்றாகி விட, அவனை பற்றிய கவலை இல்லாமல் கணவனை ஏதாவது கிண்டல் செய்து கேலி பேசி வம்புக்கு இழுத்து என  அவனையும் பதிலுக்கு கிண்டல் பேச வைத்தாள். அந்த நேரம் அவனை சின்ன பையனாகவே மாற்றி வைத்தாள் எனதான் சொல்ல வேண்டும்.

காலம் இனிமையாக நகர, வார நாட்களிலேயே ஒரு நாள் திடீரென வந்து நின்று மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.

“ரொம்ப மிஸ் பண்ணினேன் தேனு, ரெண்டு நாளைக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிட்டு வந்திருக்கேன். அப்புறம் வீக் எண்ட் வந்திடும், சேர்ந்தா போல நாலு நாள் இங்க இருப்பேன்.  நீயும் லீவ் போடுறியா?” என கேட்டவனை முறைத்தாள்.

“விளையாடுறீங்களா? நீங்க லீவ் போடாம வீட்ல இருந்து வேலை பார்ப்பீங்க, நான் மட்டும் லீவ் போட்டுட்டு நீங்க லேப்டாப் கூட விளையாடிட்டு இருக்கிறதை வேடிக்கை பார்க்கணுமா?”

“இடையிடைல பிரேக் விடுவேன் தேனு. பதினோரு மணிக்கு லாக் இன் பண்ணினா ஒன்றரை மணிக்கு லஞ்ச் பிரேக் வரும், ஒரு மணி நேரம் ஃப்ரீயா இருப்பேன். அப்பப்ப நானாவும் பிரேக் எடுத்துப்பேன், ப்ளீஸ் தேனு…” என அவன் கெஞ்சவும் அவளும் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

பதினோரு மணிக்கு வேலை செய்ய ஆரம்பித்தவனுக்கு இடைவேளை என்பது அத்தனை எளிதாக கிடைக்கவே இல்லை.

தேநீர், நொறுக்கு தீனி என இடையிடையே கணவனுக்கு கொண்டு வந்து கொடுத்த தேன்,  “நல்லா எடுத்தீங்க பிரேக்!” என சின்ன கோவத்தோடு  சொல்லி செல்ல, அவனால் விழிக்க மட்டுமே முடிந்தது.

இன்றைக்கென பார்த்து முக்கிய பிராஜக்ட்டில் ஏதோ கோளாறு உண்டாக, அதை சரி செய்ய மற்றவர்களை வழி நடத்தி, மீண்டும் அதை சரி பார்க்கவென தலை நிமிர கூட நேரம் கிடைக்கவில்லை அவனுக்கு.

கணவனிடம் அப்படி கோவமாக சொன்னாலும் அவளின் மனதிற்குள் நிறைவே. குறுகிய காலம் என்ற போதும் சரியான வேலை இன்றி அவன் தவித்த போது இவளுக்கும்தான் எத்தனை பயம் இருந்தது.

இனி தடையாக எங்கள் வாழ்வில் எதுவும் வந்து விட வேண்டாம் கடவுளே என பிரார்த்தனை செய்து கொண்டே மதிய சமையலை பார்த்தாள்.

நேரமானாலும் பரவாயில்லை மாப்பிள்ளை வரட்டும் என சாப்பிடாமல் காத்திருந்தார் தங்கப்பன். மூன்று மணி போல பிராஜக்ட்டில் நிகழ்ந்த தவறும் சரி செய்யப் பட்டிருக்க  ஆனந்தும் வந்து சேர்ந்தான்.

கால தாமதத்திற்கு பார்வையாலேயே மனைவியிடம் மன்னிப்பு வேண்டி, கெஞ்சும் முக பாவத்தோடே உணவு மேசையில் அமர்ந்தான்.

“அட ரொம்பத்தான் மாப்பிள்ளய கோச்சுக்கிற ம்மா நீ, அவர் என்ன வேணும்னா வரலை” என மகளை கடிந்த தங்கப்பன், “நீங்க சாப்பிடுங்க மாப்ள”என ஆனந்திடம்  சொன்னார்.

“அவளை எதுவும் சொல்லாதீங்க மாமா, லீவ் போட சொல்லிட்டு  நான் லேட்டா வந்தா கோவம் வர்றது நியாயம்தானே” என்றான் ஆனந்த்.

“உங்களுக்கு போய் சப்போர்ட் பேசினேன் பாருங்க மாப்ள, என்னை சொல்லணும்” என சலித்தாலும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தார் தங்கப்பன்.

 மூவரும் சேர்ந்துதான் சாப்பிட்டனர். முன்னரே சாப்பிடிருந்த தருண் உறங்கி விட்டான்.

உரக்கடை வைத்திருக்கும் தங்கப்பனின் நண்பர் இவரையும் கடைக்கு அழைக்கிறாராம், கணக்கு வழக்கு பார்த்துக் கொள்ள அவருக்கு நம்பகமான ஆள் தேவையாம்.

“இந்த சந்தர்ப்பத்தை விட்டா அவன் வேற ஆள் போட்டுக்குவான், நான் நல்லாத்தானே இருக்கேன், வீட்ல சும்மாவே இருக்கவும் முடியலை. அவன் கடைன்னா எனக்கு ரொம்ப வசதி மாப்ள” என சொல்லி நிறுத்தினார் தங்கப்பன்.

தேனிடமே இன்னும் அவர் சொல்லியிருக்கவில்லை. ஏன் என அவளும் கேட்டாள்.

“நீ தனியா இருக்கையில எப்படிம்மா சொல்றது? என்ன முடிவெடுக்கன்னு குழம்புவ, மாப்ள கூட இருக்கும் போது சொன்னாதான் சரியா இருக்கும்னு தோணிச்சு, எப்படியும் இந்த வாரக் கடைசி இல்லைனா அடுத்த வாரக் கடைசி வருவார், அப்ப சொல்லலாம்னு இருந்தேன்” என்றார்.

கணவன் மனைவி இருவரும் என்ன செய்வது என ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்களும் ஏன் பிரிஞ்சே இருக்கணும்? உங்கள விடுங்க, குழந்தையை நினைச்சி பாருங்க, அப்பா அம்மா ரெண்டு பேரும் அவன் கூடவே இருக்கிற வாய்ப்பு இருந்தும் அவனை தவிக்க விடுறது சரி கிடையாது” என அவர் சொல்ல, ஆமோதிப்பது போல தலையாட்டிக் கொண்டான் ஆனந்த்.

“எனக்கு வேலைய விடுறது சரியான்னு தோணுதுப்பா. பெங்களூருல நல்ல வேலை கிடைக்கிற வரை கூட இருங்களேன் ப்பா” என  அவள் கேட்கவும், அவரும் அரை மனதாக சரிம்மா என்றார்.

“வேணாம் மாமா, உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலை கிடைக்கும் போது இவளுக்காக அந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க” என மாமனாரிடம் சொன்னவன், “நான் என் அப்பாவை வர சொல்லட்டுமா?” என மனைவியிடம் கேட்டான்.

வேதாச்சலம் தங்கப்பனை போல கிடையாது, சமய சந்தர்ப்பம் புரியாமல் தொல்லை செய்வார். அதற்காக அப்பாவுக்கு சிரமம் தர வேண்டாம் என நினைத்தவளும் சரியென்றாள்.

அவளது முக மாற்றத்தை கவனித்திருந்தவன், “வேணாம், அதுவும் சரியா வராது, யோசிச்சு வேற முடிவு செய்யலாம்” என்றான்.

உங்கள் அப்பாவை வரவழைப்பதே நல்ல யோசனைதான் என்றார் தங்கப்பன்.

மனைவியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே, “தேனுக்கு இஷ்டம் இல்லை மாமா, இனி எல்லாமே அவ இஷ்ட படிதான்” என்றான்.

“இவ எப்ப இஷ்டம் இல்லைனு சொன்னா மாப்ள?” எனக் கேட்டார்.

“இப்பதான் மாமா” என்றான் ஆனந்த்.

“அதுசரி, வயசாக வயசாக எனக்குதான் காது சரியா வேலை செய்யல போல” என கிண்டலாக சொன்னவர், “என்னம்மா என் காதா, கண்ணா எது ஒழுங்கா வேலை செய்யலம்மா?” என மகளிடம் கேட்டார்.

“ஆமாம், ரொம்பதான் என் கண்ண வச்சு எல்லாம் தெரிஞ்சுக்கிறவர் இவர்,  நீங்கதான் உங்க மாப்பிள்ளைய மெச்சிக்கணும் ப்பா” என பொய்யான வருத்தத்தோடு சொன்னாள் தேன்.

இரவு உறங்கும் போது, “என்ன தேனு, உன்னை எனக்கு தெரியாதா? அதென்ன அப்படி சொல்லிட்ட? உன் பார்வை வச்சே எல்லாம் தெரியும் எனக்கு. உனக்குத்தான் என்னை புரிஞ்சுக்க தெரியாம, நான் பேசவே மாட்டேங்குறேன், உன்கிட்டேருந்து நிறைய மறைச்சிட்டேன்னு குறை சொல்வ” என்றான் ஆனந்த்.

“அப்படியா! உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு என்னென்ன செலவு பண்ணுனீங்க எவ்ளோ பண்ணுனீங்க இதெல்லாம் கூட உங்க மூஞ்ச பார்த்து தெரிஞ்சுக்கலாமா? நகை அடமானம் வச்சது,  வேலை போன விஷயம் இதெல்லாம் கூட…” அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே இரு கைகளையும் குவித்து பெரிய கும்பிடாக போட்டான்.

“மூஞ்ச பார்த்து புரிஞ்சிக்கிறதாம் கண்ண வச்சு படிக்கிறதாம், யாரை ஏமாத்த பார்க்குறீங்க” என்றாள்.

“தேனு… வாயேன் மொட்டை மாடிக்கு போய் ஸ்டார்ஸ் எண்ணிட்டு வரலாம்” என்றான்.

“என்னத்துக்கு, அத எண்ணி என்னாக போகுது?”

“அப்பவாவது பழைய பேச்சை விட்டுட்டு நல்ல ரொமாண்டிக் மூடுக்கு நீ வருவியான்னுதான் சொல்றேன்” என ஏக்கமாக சொன்னான்.

அவனது நெஞ்சில் தலை வைத்து படுத்துக் கொண்டவள், “ஸ்டார்ஸ் எண்ணிட்டே இருக்கும் போது கொட்டாவி வரும், அப்புறம் அங்கேயே படுத்து தூங்க வேண்டியதுதான். ஏதோ உங்க பையன் அவன் தாத்தாவோட படுத்திட்டான். சான்ஸை யூஸ் பண்ணுங்க நல்லவரே” என்றாள்.

வாய்ப்பை தவற விடாமல் மிக சரியாகவே உபயோக படுத்திக் கொண்டான் ஆனந்த்.

அந்த இரவில் அவர்களுக்குள் ஆனந்தம் பூத்தது.