“உனக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம். விதி யாரை விட்டது.”
விதம் விதமாய் வாயிக்கு வந்தபடி பேசினார்கள். வித்யா துவண்டு தான் போனாள். அவள் நெஞ்சின் பாரம், அவன் உடல் வேதனைக்கு, எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை.
நகரில் புதுப் படம் ரிலீஸானது. அவனுக்கு பிடித்த ஹீரோ. டிக்கெட் ரிசர்வ் செய்து அவனை அழைத்துப் போனாள். மாடி அறையே கதி என்று இருக்கிறானே, ஒரு மாறுதல் தேவை என்று நினைத்து தான் கூட்டிப் போனாள். ஆனால் பிரபுவால் வெகு நேரம் உட்கார முடியவில்லை. துவன்டான் . வாந்தி எடுத்தான். கண் செருக மயக்கமானான். ஏக கலாட்டா ஆகிவிட்டது.
“என்னம்மா இது, இப்படி நோயாளி எல்லாம் அழைச்சிட்டு வந்து உயிரை வாங்கிறீங்க.”
“இப்படி உடம்போட சினிமா பார்க்காட்டி என்ன.?” பலதரப்பட்ட விமர்சனங்களால் மனம் புண்ணாகி விட வீடு வந்து சேர்ந்தாள்.
“என்னால் எவ்வளவு கஷ்டம் வித்யா. இனிமே எனக்கு இந்த கட்டில் போதும். சீக்கிரம் நாலு பேர் தூக்கிற கட்டில்லே போயிட்டா தேவலை.” குழந்தை மாதிரி பிரபு அழ, சீக்கிரம் சரியாயிடும்ங்க.” என்று அவள் தேற்றினாலும், பிரபு புரிந்து கொண்டு விட்டான்..சாவு தன்னை அழைக்கிறது என்று.
சில சமயம் மாத்திரைகளை சாப்பிட மாட்டேன் என்று அவள் முகத்தில் விசிறி அடித்தான். உடம்பின் வேதனை அதிகமாக அதிகமாக ஒரு மூர்க்கத்தனம் அவனுக்கு வந்திவிட்டது. பார்க்க வந்த குழந்தைகளை சமயத்தில் அடித்தான்.
“பாவம் அப்பா.! உடம்பில் எவ்வளவோ வேதனை, அதனால் தான் வலி தாங்காமல் அடிச்சிட்டார். அப்பாவை கோபிச்சுக்காதீங்க..” என்று குழந்தைகளிடம் தன்மையாக பேசினாள். அவர்கள் மிரண்டு ஒதுங்கினர். அவன் அறைக்கு போகவே பயந்தனர்.
“பிள்ளைகளை வரவிடாமல் தடுத்திட்டியா? அப்பா செத்து ஒழிஞ்சிட்டார்ன்னு சொல்லிட்டியா.?” என்று பிரபு அவள் முடியை பற்றி ஒரு முறை உலுக்கினான். இன்னது செய்வதென்பது தெரியாமல் வேதனை மனசை இம்சிக்க வலி தாங்காமல் வித்யா அழுதாள். அவளுக்கு முகம் வாடிவிட்டது.
“முடியை புடிச்சதுக்கே வலி தங்கலை உனக்கு. எனக்கு உடம்பு எல்லாம் வலிக்குதே….” என்று அவன் துடித்த போது, மனசு ரணப்பட்டு துடிதுடித்தாள்.
“எனக்கு ஒரு துளி விஷத்தை குடுத்திடு வித்யா…” என கதறிய போது, தூக்க மாத்திரைகளை கொடுத்து சமாளித்தாள். வலி தெரியாமல் இருக்க மார்பின் கொடுத்தும் பிரயோஜனமில்லை.
அவனை கவனித்து கொள்வது இப்பொழுதெல்லாம் அவ்வளவு சுலபமான காரியமாய் இல்லை. அதற்கு அசுர மன திடம் தேவைப்பட்டது.
பிரபுவின் முடிவு நெருங்கிவிட்டது என்று சொல்லாமலேயே தெரிந்துவிட்டது இம்சை. மனைவி குழந்தைகளை அநாதை ஆக்குகிறோமே என்ற ஆதாங்கத்தின் வெடிப்பு. இத்தனை வலியோடு பிரபுவால் சிரிக்கவா முடியும்.? அன்பை கொட்டவா முடியுமா.? நிதானமாய் இருக்க சாத்தியப்படுமா,? வித்யா இதனை நன்றாக புரிந்து கொண்டாள். மனத்திண்மையோடு எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, தன்னை சேகரம் பண்ணியிருந்தாள்.
கோபாலுக்கு வயதாகி விட்டதால் அவருக்கு பொறுமையே இல்லாமல் போயிற்று. மகனிடம் அன்பும் பாசமும் கொண்டவர் தான் என்றாலும், அவனைக் கவனித்துக் கொள்வது அவருக்கும் சலிப்பு தரும் விஷயமாக போயிற்று. அவள் பொறுப்பையும், சுமையையும் பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லை. பாவம் நீ! என்று அனுதாபப் படக் கூட யாருமில்லை. வித்யா இப்போதே அனாதையாக உணர்ந்தாள்.
டாக்டர் சொன்ன கெடுவுக்கும் மேலாகிவிட்டது. பிரபு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி வந்தான். பாதி நாள் நினைவில்லாமலே கிடந்தான். சாப்பாடு கிட்டத்தட்ட நின்று போனது. மாத்திரைகளை முழுங்க முடியவில்லை. கண் முன்னால் அவன் உதிர்ந்து போவது மனசை பிழிந்து எடுத்தது.
குடும்ப டாக்டர் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு ஊசி போட்டுவிட்டுப் போனார்.
வித்யா செய்வதறியாது துவண்டாள். யாராவது அவளுக்கு உண்மை அன்புடன் வழி காட்ட மாட்டார்களா.? அழுகை நிலையையும் தாண்டி ஒரு வெறுமையான வேதனை அவளை அடியோடு வீழ்த்திவிட்டது. நீங்க படும் கஷ்டம் என் மனசை உலுக்குகிறது பிரபு.. என்று அவள் தினம் தினம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் காலை காப்பி கலக்கும் போது, பிரபு என் செல்வமே போயிட்டியாடா….என்று மாமனார் மாடியிலிருந்து அலறும் சத்தம் கேட்டது. அமைதியான காலை நேரத்தில் இந்த சத்தம் அந்தத் தெரு முழுக்க கேட்டது. வித்யா ஒரு வகை நிம்மதியுடன் ஆற்றிக் கொண்டிருந்த காபியை அப்படியே மேடையில் வைத்தாள். அவள் மனசில் தோன்றிய முதல் உணர்ச்சி அப்பாடா….என்பது தான்.
முடிந்துவிட்டது…..எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஓட்டமில்லை. பரபரப்பு இல்லை. தயங்கி தயங்கி விழிக்க வேண்டியது இல்லை. மிரள மிரள பயம் அடிவயிறு கவ்வ துடிக்க வேண்டியதில்லை. வித்யா நீண்ட பெருமூச்சு விட்டாள். அதில் ஒரு விடுதலை உணர்வு தெரிந்தது. பிரபு உங்க வலிக்கு ஒரு முற்றுப் புள்ளி……
அவளுக்கு அழுகை வரவில்லை. இந்த முடிவை எதிர்பார்த்து ஒரு கர்மவீரனின் பக்குவத்தில் இருந்தாள்.
கணவனுடன் பத்தாண்டுகள் இனிமையாக சிறப்பாக வாழ்ந்தாள். விதி இன்று அவளை தனிமைப் படுத்திவிட்டது. அதுவும் அணு அணுவாக துடிக்க வைத்து தனிமைப்படுத்திவிட்டது.
வித்யா மாடிக்குப் போனாள். பிரபுவை பார்த்தாள். கட்டிலில் அடங்கிப் போயிருந்தான். அடயாளம் தெரியாதபடி உறுமாறி போயிருந்த பரிதாபத்தை மனசு நெகிழப் பார்த்தாள். முகத்தில் காடாய் தாடி,. எலும்புகள் எண்ணி விடலாம் என சொல்ல வைக்கிற மெலிவில் உடம்பு சின்னப் பையனுடய போல் குறுகிவிட்டிருந்தது.
கண்களில் நீர் பெருக்கெடுத்தோட நின்றிருந்த மாமனாரை நோக்கி சொன்னாள். “உங்க மகனுக்கு இத்தோடு வேதனை முடிஞ்சுதேன்னு நினைச்சுக்கோங்க…..ஆக வேண்டியதைப் பார்ப்போம். “
மாமனார் அதிர்ந்தார். ஒரு கத்தலில்லை. கேவவில்லை. கண்ணீரில்லை. கடவுளே இது என்ன மனநிலை.!
இறுதி ஊர்வலத்திற்கு பிரபு தயார்படுத்தப்பட்டு மாலையோடு ஹாலில் கிடத்தப்பட்டிருந்தான். வித்யாதான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று வீடு முழுக்க மனிதர்கள். வித்யா அவதிப்பட்டு, அவதிப்பட்டு வேதனையில் துடித்த சமயமெல்லாம் காணாமல் போனவர்கள், இப்பொழுது திடீரென வந்து சேர்ந்து கொண்டனர்.
“பாரேன்….அவ பாட்டிலே கல்யாண வேலை பார்க்கிற மாதிரியிலே அலைஞ்சிட்டு இருக்கா.”
“ஆபீஸ் வேலை கிடைச்சிரும். அப்புறம் எதுக்கு அழனும்.?”
இப்படியான விமர்சனங்கள் அரசல்புரசலாக கோபாலின் காதில் விழுந்தன. ஸ்டோர் ரூமிற்கு வந்த வித்யாவை மடக்கி நிறுத்தினார்.
“வித்யா….”
“என்ன மாமா.?”
எப்படி சொல்வது என்று அவள் முகம் பார்த்தபடி நின்றார்.
“வித்யா……வந்து எல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ….’
“நான் போய் உட்கார்ந்திட்டு அழனும் அதானே.?”
“வித்யா….உன் துக்கம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நாலு பேர் நாலு விதமா பேசறாங்க. புருஷன் செத்துக் கிடக்கான். அவள் பாட்டிலே கொஞ்சம் கூட கண்ணீர் விட்டுக் கதறாம அலஞ்சிட்டு இருக்கான்னு பேசறாங்க. எதுக்கும்மா நாலு பேர் வாயில் விழுந்து எழுந்திருக்கணும்.? அதான் சொல்ல வந்தேன்.”
மாமனார் ஒரு வழியாகச் சொல்லி முடித்தார்.
“மாமா என் புருஷன் மேலே இருக்கிற அன்பை நான் அழுது தான் வெளிப்படுத்தி, நாலு பேரை திருப்திப் படுத்தணும்னா……அது என்னாலே முடியாது மாமா.”
“சாம்பிரதாயத்துக்கு……”
“எனக்கு முப்பது வயசு தான் ஆகுது. இன்னும் ஒரு இருபது வருஷமாவது நான் குழந்தைகளை சமாளித்து, தனியா நின்னு ஆளாக்கணும். என்னோட இந்த மகத்தான காரியத்துக்கு அந்த நாலு பேர் வந்து தன்னம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்தப் போறதில்லை. இத்தனை நாள் நான் பட்ட வேதனையையும் சிரமங்களையும் பார்த்து ஆறுதல் சொல்ற வகையில் அந்த நாலு பேர் நடந்துக்கலை. இப்போ நான் அழணும்கறதிலே மட்டும் அக்கறை காட்டற, உங்க நாலு பேர் மனம் ஆரோக்கியமானதில்லை. வித்யாவிற்குத் தேவை தன்னம்பிக்கை, தைரியம், இழைப்பை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் தான். இந்த பேச்சுக்களை கண்டு நான் பயப்படப்போவதில்லை.” படபடவென்று வித்யா பொரிந்தாள். மாமானார் அமைதியானார்.
வித்யாவின் வேதனை, ரணம் வெறும் கண்ணீரில் கரைந்து விடக் கூடியதில்லை. கண்ணீரும் மீறிய துக்கம் வித்யாவை ஆட் கொண்டிருந்தது. தான் சிதறி விடாமல் இருக்க அவள் தன்னை பெரும் முயற்சி எடுத்து தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அழ அவள் எந்த மூலையையும் தேடி உட்கார வேண்டியதில்லை.
“வெளியே ஒரு பூப்பந்தல் போட்டுக்கிட்டு, உள்ளே பலவித அக்கிரமங்களை பண்ணற மாதிரி, என் மேலே அனுதாபம் காட்ற மாதிரி ஒரு பாவனை பண்ணிக்கிட்டு, என் திட மனசை அழிக்கிற மாதிரியான விமர்சனங்ககளை செய்யும், அந்த நாலு பேரை நாம் அனுமதிக்கவே கூடாது மாமா. அவங்களுக்கு பயந்து நம்மை போலியா மாத்திக்கறதை விட, நம்மை அவங்க, புரிஞ்சுக்கும் படியா நடந்துக்கணும் மாமா. முடிஞ்சா அவங்ககிட்டே போய் சொல்லுங்க…. வித்யா அழ மாட்டா. அவள் அழுகை வற்றிவிட்டது. அவளை புரிஞ்சுக்கோங்க. கண்ணீர் தான் கணவர் மேல் வச்சிருக்கும் அன்புக்கு அளவு கோல்ன்னு நினச்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.? எல்லா சந்தர்ப்பத்திலும் அந்த நியதி ஒத்து வராது. அவளை அவளா இருக்க விடுங்க. மனசை உடைக்காதீங்க…. சொல்ல முடியுமா உங்களால்.?”
சொல்லிவிட்டு நிதானமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள் வித்யா. பகல் நேரத்திலும் பவுர்ணமி ஜொலிக்கும் என்று அவருக்குத் தோன்றியது. வித்யா அவர் மனசில் உயர்ந்து நிற்கிறாள்.
கோபால் நாலு பேரிடம் இதை விளக்க முடியுமா என்ற யோசனையுடன் சென்றார். அப்படி அந்த நாலு பேர் புரிந்து கொண்டால் ஆரோக்கியமான சமுதாய சூழல் நிச்சயம் அமையும். மற்றவர் உணர்வில் மூக்கை நுழைத்து விமர்சனம் பண்ணாமல் இருக்க அவர்கள் கற்றுக் கொள்வது நல்லது.
“வித்யாவை நான் தான் துக்கம் மறக்க மூலையில் கிடந்து அழ வேண்டாமுன்னு சொன்னேன். கண்ணீர் விடுதல் தான் துயரத்தின் அறிகுறியா என்ன.? மனதிடம் கூட ஒரு வகையில் துயரத்தை வெளிப்படுத்தும் அறிகுறியா இருக்கும். வித்யா கண்ணீர் தாண்டிய துயரத்தில் இருக்கா. ஜஸ்ட் அன்டர்ஸ்டான்ட்.” என்றார் முக்கியமான பிரமுகர் ஒருவரிடம். அது மெள்ள பரவும்.
சம்பிரதாய பூப்பந்தல்கள் தேவை இல்லை என்று உணர்வுபூர்வமாக இந்தக் கூட்டம் உணரட்டும். வித்யா பச்சாதாபத்தில் மூழ்கி காணாமல் போய்விடக் கூடாது. அரணாக அவளுக்கு இருப்பேன் என்று சொல்லிக் கொண்டார்.