வாழ்க்கையின் மிக பெரிய அதிரிச்சியை வித்யா அந்த வினாடி சந்தித்துக் கொண்டிருந்தாள். வியர்த்து போன முகம் வெளுத்துவிட்டது. இது தானா அவள் யோகம்.!
“ஐ ஆம் ஸாரி மிஸஸ் பிரபாகர்….” அதற்கு மேல் பேசத் தெரியாமல் டாக்டர் கவுதம் மௌனித்தார்.
“எப்படியாவது….வேறு வழியே இல்லையா டாக்டர்.?”
வார்த்தைகள் தனித்தனியாய் அவளிடமிருந்து தெறித்து விழுந்தன. அவற்றின் ஆழமான தாக்குதலால் மனம் நெகிழ்ந்த டாக்டர், நிதான போக்கில் யதார்த்தத்தை மீண்டும் கூறுகிறார்….
“நானே ரொம்ப ஷாக் ஆயிட்டேம்மா. ரொம்ப அன்எக்ஸ்பெக்டட்.! வயிற்றை திறந்து பார்த்தபோது தான், அது ரொம்ப அதிகமா பரவியிருக்குன்னு தெரிஞ்சுது. அப்படியே மூடிட்டோம். தைரியத்தை கைவிடாதீங்க. மிஞ்சிப் போனால் மூன்று மாசம்….”
நெஞ்சைக் கிழிக்கும் விக்கல் அவளிடமிருந்து வந்ததும், டாக்டர் நிறுத்திவிட்டார். கழிவிரக்கத்துடன் அவளைப் பார்த்தார்.
வித்யா முப்பதில் இருந்தாள். மஞ்சள் மினுமினுப்பில் இருபதின் இளமையுடன் பாலாய் தெரிந்தது முகம். காடாய் முதுகு பூராவும் பரந்திருந்தது கூந்தல். கண்கள் முகத்திற்கே தனி களையை தந்திருந்தது. அந்த முகத்தில் இப்பொழுது சோகம் அப்பியிருந்தது. அவளது மாமனார் கோபால் அவளுடன் வந்திருந்தார்.
மருமகள் எதிரில் மனதை தளரவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். டாக்டரை இமைக்காமல் பார்த்து சொன்னார்.
“தப்பா நினைக்கக் கூடாது டாக்டர்…..ஒரு வேளை வேறு பெரிய டாக்டரிடம் எடுத்துச் சென்றால்….” ஆதாங்கத்துடன் வெளிப்பட்டது அவர் வார்த்தைகள். நப்பாசை தான். மகனின் உயிர் முக்கியமில்லையா.? ஏதாவது அதிசயம் நடந்தால் நல்லது தானே.!
“உங்க நினைப்பு தப்பில்லை கோபால் சார். ஆனா நான் உண்மையான நிலைமையை விளக்கிவிட்டேன். வயிற்றில் கான்சர் ரொம்பவே அட்வான்ஸ் ஸ்டெஜில் இருக்கு. அமெரிக்காவுக்கே கொண்டு சென்றாலும் பிரயோஜனமில்லை. பட் ட்ரை பண்ணுவது உங்க ஆப்ஷன். ஆனா….என்னைக் கேட்டால், வீட்டுக்கு கொண்டு போவது நல்லது. இருக்கிறவரை சந்தோஷமா இருக்கட்டும்.”
வித்யா மாமனாரின் கையை பலமாக பற்றிக் கொண்டாள். அப்படியும் கால்கள் நடுங்கி லேசாக சரிந்து விழத் தெரிந்தாள். கோபால் மருமகளை தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
“வித்யா…..உன் புருஷனை சந்தோஷமாக வச்சுக்க. அவன் சுவாசிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு வருஷம் மாதிரி. அந்த நிமிஷங்களை மறக்க முடியாதபடி நிம்மதியா செலவிட உதவி செய். அன்பால் அவனை வர்ஷித்து விடு. ஆதரவாய் தாய் போல் அணச்சுக்க……சொல்றது சுலபம் தான்…..முயற்சி பண்ணு. வித்யா.”
அவர் தன் கண்ணீர் துளிகளை கர்சீப்பால் துடைத்துக் கொண்டார். மனசு அவ்வளவு பாரமாக இருந்தது. மகனுக்கு வாழ்வு மூன்று மாதம் தான்—எந்த தந்தைக்கு தாங்க முடியும்.?
“வித்யா..” மாமனார் கூப்பிட எழுந்தாள்.
“குழந்தைங்க வெளியே இருக்காங்கம்மா. உன் துயரத்தை காமிச்சுக்காதே. அப்பாவை வீட்டுக்கு கூட்டிப் போயிடும்படி டாக்டர் சொல்லிட்டார் என்று சொல்லிவிடு வித்யா….” கோபால் மென்மையாக சொன்னார்.
அவள் மனம் அமைதியிழந்து தவித்தது. சத்தம் போட்டு அழ
வேண்டும் போல் துடித்தது. பத்து வயது கார்திக், எட்டு வயது ஆர்த்தி சந்திக்கப் போகிற வேதனை அவளை ஒரு புரட்டு புரட்டியது.
வித்யா துக்கத்தை அடக்கிக் கொண்டு, முகத்தை சகஜமாக்கிக் கொண்டாள். குழந்தைகளுக்காக அவள் இதை செய்து தான் ஆக வேண்டும். அவளுக்கு வேறு வழி இல்லை. டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்தார்கள்.
தங்க வண்ணத்தில் பிரபுவின் அறை எண் 208 என்று பளபளப்புடன் அறிவித்தது. ரோஸ் நிற டிஸ்டெம்பரில் பளிச்சென்று இருந்தது.
வித்யாவும் தன் அப்பாவும் வருவதைக் கண்டதும் புன்முறுவல் செய்தான் பிரபு. அது மறைந்ததும், நலிந்த அவன் முகத்தில் வேதனையின் ரேகை எட்டிப் பார்த்தது.
“அம்மா….அப்பாவை கூட்டிட்டுப் போலாமுன்னு டாக்டர் சொல்லிட்டாராமா….?” என்று குழந்தைகள் ஆர்வமாய் தாயின் முகம் பார்த்தனர்.
“கார்த்திக்….அப்பாவை தொந்தரவு பண்ணாதே. அவர் உடம்பு தேறனும். அவராலே இப்ப அதிகமாப் பேச முடியாது….”
“அப்பா….பேச முடியாதா உன்னால்.?” என்று தயங்கிபடி கேட்டாள் ஆர்த்தி. அவள் முகம் விழுந்து விட்டது.
“பேச முடியுமே……இதோ பேசறேன் பார். ஆரத்திம்மா எப்படி இருக்கே.?” பிரபு மீண்டும் புன்னகைத்து அன்புடன் சொன்னான்.
“ஏய்….கார்த்திக் பார்த்தியா அப்பா என்கிட்டே தான் பேசினார்.” ஆர்த்தி மகிழ்ச்சியில் துள்ளினாள். கார்த்திக் பொய் கோபத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.
“ரெண்டு பேர் கிட்டவும் பேசுவேன். சண்டை போடக் கூடாது. சரியா.?” என்று சமாதானம் பேசினான்.
குஞ்சுகளா……இன்னும் மூன்று மாசத்துக்கு அப்புறம் நீங்க அப்பா இல்லாத அனாதைகள்.! வித்யாவின் மனக் குரல் நடுங்கிய வண்ணம் சப்தமில்லாமல் சொல்லியது.
“வித்யா….” பிரபு கூப்பிட்டான். உற்சாகத்தை பலவந்தமா ஏற்படுத்திக் கொண்டு, அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் வித்யா. அவள் கையை தன்னில் எடுத்துக் கொண்டான். மெள்ள சிரித்தான்.
“சொல்லு வித்யா……நான் நல்லாயிடுவேன் இல்லயா.? டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்.?”
வித்யா சப்தமாக சிரித்தாள். அது அழுகையை விட மோசமாக இருந்தது. அவன் ஆவலோடு கேட்கிறான்..எப்படி உண்மையை சொல்வது.? அவள் மனம் வலித்தது.
“மூணு மாசத்திலே……” ஏதோ சொல்ல வந்தாள். சுதாரித்துக் கொண்டு “வந்து….பழைய படி நீங்க ஆபீஸ் போலாம்ன்ணு சொன்னார் டாக்டர். ஹாப்பியா.?”
“எஸ்….என் கடைமைகள் இன்னும் பாக்கி இருக்கே. சந்தோஷம் தான்.” தெம்பு பெற்றவனாய் உணர்ந்தான். “என்னோட எத்தனை மாசம் கஷ்டப்பட்டுட்டே நீ.?”
“இது ஒண்ணும் கஷ்டமில்லை பிரபு. நீங்க நல்லாயிட்டீங்களே அதுவே போதும். இதை விட என்ன வேணும் எனக்கு.?”
“சரி….அப்ப எப்ப வீட்டுக்குப் போவோம்.?”
“இன்னிக்கு சயங்காலமே….”
“அப்புறம் நீ என் பக்கத்திலேயே தானே இருப்பே.” சின்னக் குழந்தை மாதிரி சந்தோஷப்பட்டான்.
வித்யா சட்டென்று உள்ளுக்குள் உடைந்து போனாள். “நீங்க தான் என் பக்கத்திலே இல்லாம ஓடிப் போகப் போறீங்க.” இப்படி சொல்லி, அவன் மார்பில் விழுந்து கதற வேண்டும் போல் ஏற்பட்ட தவிப்பை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள். சட்டென்று மாத்திரைகள் எடுக்கும் சாக்கில் கட்டிலை விட்டு இறங்கினாள்.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை என்று மாத்திரைகள், ஒரு கொத்து அவள் கையில் சேர்ந்தது. “மாத்திரைகளே….உங்களால் என் பிரபுவை வாழ வைக்க முடியுமா.? ப்ளீஸ் முயற்சி பண்ணுங்கள்.. என் குழந்தைகளுக்காக.” என்று வேண்டிக் கொண்டாள்.
என்ன அசட்டு எண்ணங்கள்.? சிரமத்துடன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டாள். மாத்திரைகளுடன் அவனை நெருங்கினாள்.
“ஆறு மாசமா மாத்திரையிலேயே உயிர் வாழறேன். போர் அடிச்சுப் போச்சு. வயிறு நிறைய நல்ல சாப்பாடு சாப்பிடணும் போல இருக்கு வித்யா. நாக்கு செத்துப் போச்சு.”
நாக்கு செத்தால் பரவாயில்லை….ஆனா நீங்களே…. அடக்க முடியாமல் அவள் கண்களில் நீர் துளிர்த்தது.
“ஹேய் வித்யா எதுக்கு அழற.? நான் தான் சரியாயிடுவேனே. இன்னும் மூணு மாசத்தில் இந்த கஷ்டமெல்லாம் இருக்காது.”
“அழலை….அது ஒரு நிம்மதி கண்ணீர்.” என்றாள். உலக மகா நடிப்பு இங்கே தேவைபட்டது. பீறிட்ட துக்கம் வெளியே வரமுடியாமல்….என்ன கொடுமை இது.!
“வீட்டுக்குப் போனதும் உங்களுக்கு எண்ணைக் கத்திரிக்காய் குழம்பும். அவியலும் செய்து தரேன்.” என்றாள்.
“வீட்டுக்குப் போனதும் எனக்கு காரமா அடை வேணும் வித்யா.”
“முதல்ல….இப்ப மாத்திரைகளை சாப்பிடுங்க.”
“இப்படி இல்லை….உன் மடியில்..” ஒவ்வொரு மாத்திரையும் உள்ளே போகும் போதும், அவளுக்கு கண்ணீர் வெடித்தது. உள்ளுக்குள் கதறினாள்…பிரபு சாப்பாட்டுப் பிரியன். எதையும் ரசித்து சாப்பிடுவான். ஆறு மாசமாய் அவனது தினசரி உணவு படிப்படியாய் குறைந்து, இப்போது திரவ உணவில் வந்து நிற்கிறது. இந்த இளம் வயதில் இப்படி ஒரு சோதனை.!
அவன் தலையை அன்புடன் வருடினாள். முகம் வாடி பொலிவிழந்து இருந்தும், அவன் அழகாய் இருப்பதாக அவளுக்குப் பட்டது. அன்புடன் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“மாத்திரைகள் சமர்த்தாக சாப்பிட்டதுக்காகவா.?” அவன் குறும்பாக கேட்டான். இந்த வேதனையிலும் அவன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதை புரிந்து கொண்டு, கண்ணீர் மல்க சிரித்தாள் வித்யா.
மாலை வந்தது. வித்யாவும் அவளது மாமனாரும் சாமான்களை கட்டினார்கள். ஒரு கட்டை பையில் அடுக்கிக் கொண்டு இருந்தார் மாமனார். பிளாஸ்க் பத்திரமா இருக்கணும் என்பதால் அதை தனியாக ஒரு பையில் வைத்து விட்டார். எல்லாம் எடுத்து வைத்த பின், அதை கார் டிக்கியில் வைத்து விட்டு வந்தார் கோபால்.
அதற்குள் வித்யாவின் உதவியுடன் பாத்ரூம் சென்று, பின் முகம் கழுவிக் கொண்டு, உடை மாற்றி, தலையை சீவி ஒழுங்கு படுத்தி விட்டு வந்தான் பிரபு. செருப்பில் கால் நுழைத்து, அறை குறை தெம்புடன் அவன் கட்டிலில் உட்காரவும் டாக்டர் வரவும் சரியாக இருந்தது. கவுன்டரில் பணம் கட்டிவிட்டு வந்தார் கோபால்.
பிரபுவை முதுகில் தட்டிக் கொடுத்த டாக்டர் கட்டை விரல் உயர்த்தி சிரித்தார். போலியாக சிரித்து தான் ஆக வேண்டி இருக்கு. நீ சாகப் போறே டா என்றா சொல்ல முடியும்.?
“பிரபு யு லுக் குட். கொஞ்சம் வீக்கா பீல் பண்ணுவேங்க. நல்லா சாப்பிடுங்க. சாப்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை. விரும்பியதை கேட்டு வாங்கி சாப்பிடுங்க. வயிறு கொஞ்சம் புரட்சி செஞ்சா….வெல் காப்சியுல்ஸ் தரேன் போட்டுக்கோங்க. ரைட். எனி குவெஸ்டியன்ஸ்.?” என்றார்.
இல்லை என்று தலையாட்டிய பிரபு ஸ்னேகமுடன் சிரித்தான்.
“தேங்க யு டாக்டர்.” என்றான்.
வீட்டிற்கு வந்தாயிற்று. மாடி அறையில், காற்றோட்டமான ஜன்னல் அருகே பிரபுவின் கட்டில் போடப் பட்டது. வேப்ப மரக் காற்றும், நீலவானமும் அவனுக்கு துணையாக இருந்து ஆசுவாசப்படுத்தியது.
பிரபுவை பார்க்க வருகிற உறவினர், தெரிந்தவர் கூட்டம் நாளுக்கு நாள் கூடியது. வித்யா இவர்களை சமாளிக்க தினறினாள். அறைக்குள் விடாமல் பார்த்து விட்டுப் போகும்படி சொல்லிவிட்டாள்.
அவர்கள் வாய் சும்மா இருக்கவில்லை.
“கான்சர் தானா? நிச்சயமாகிவிட்டதா.? கொடுமையே….”
“சொல்றேன்னு வருத்தப்படாதீங்க வித்யா. இப்பவே நீங்க வேலைக்கு அப்ளை பண்ணிடுங்க. குடும்பத்தை காக்கணுமே.”
“இந்த வயசிலே….ஐ மீன்….தனியா எப்படி மேனேஜ் பண்ணுவீங்க.? இள வயசு இல்லயா உங்களுக்கு?….பாவம்.”
“இப்படியே காலம் பூரா படுக்கையில் இருந்திட்டாக் கூட தேவலை உனக்கு அது ஒரு பலம் தான்.”