Advertisement

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 4:
       “ இங்கே கொஞ்சம் பாரும்மா “ என்று தன்  மனைவியிடம் அந்தத் தமிழ்த் தினசரியைக் காட்டினான் அண்ணாதுரை.
       “இந்தப் பிள்ளையோட போட்டோதானே இது? போட்டோவை விட நேர்ல இன்னும் அழகா இருக்காள்ல…” என்றவாறே செய்தியைப் படித்தவள் அதிர்ந்தாள்.
       “ஐயோ..கடத்திக் கொண்டு வந்திருக்காங்களா? வாங்க முதலில போலீஸ்ல சொல்லுவோம்…”
       “யோசிக்காமப் பேசாதே மீனாட்சி……இரண்டு நாடுங்க சம்பந்தப்பட்ட விஷயம்…பிள்ளையை நாமதான் கடத்தினோம்னு சொன்னா அவங்களுக்கு சாதகமின்னு அப்படிப் பண்ணிட்டாங்கன்னா…அதும் கடல் வழியாக் கடத்தறதுல்லாம் சின்ன விஷயமில்லை…இந்தியாவில இப்போல்லாம் உள்  நாட்டுக் கடல் வழிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்குல்ல…இப்போ போலிஸ் ஸ்டேஷனுக்குத் தானே போயிட்டு வரேன்…அங்கே நமக்குக்கிடைக்கற மரியாதையைப் பார்த்துட்டுதானே வரேன்… நாமல்லாம் படிக்காதவங்க… பணமில்லாதவங்க.. விவரமில்லாதவங்க..யோசிச்சுதான் செயல்படனும்…”
       “ஆமா…எங்க தாத்தால்லாம் டெய்லி சிலோனுக்குக் கப்பல்ல தனுஷ்கோடியிலிருந்து தினமும் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வருவாரு..ஆனா இப்போ…”
        “அந்தக் கலெக்டர் ரொம்ப நல்லவருன்னு பேசிட்டு இருந்தாங்க…இந்தப் பிள்ளையை அவங்க வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டா என்ன..?”
       “அவர் இப்போ எங்கே இருக்காரோ என்னவோ..? நாம நினைச்சாப்புல கலெக்டரை நேர்ல பார்க்க முடியுமா என்ன…?”
       “பிள்ளை இங்கேயே இருக்கட்டும்…பிள்ளையை வெளில கூட்டிட்டுப் போகவேணாம்..பொம்பளைப் பிள்ளை வேறே…வேண்டாதவங்க கண்ணில பட்டா கஷ்டம்..பேப்பர்ல போட்டிருக்கறதைப் பார்த்தா அரசாங்கம் ஒண்ணும்  செய்யாது போலத் தோணுது.. நீ வீட்டுக்குள்ள வெச்சுப் பத்திரமாப் பார்த்துக்க…அதுதான் நம்ம அரசு கூட நல்லா  விளையாடுதே..நான் மட்டும் நேர்ல போய் எப்படியாச்சும் எந்நேரமானாலும் பார்த்திட்டு வரேன்…”
       “சரி…குளிச்சு சாப்பிட்டுட்டுக் கிளம்பிப் போங்க…”
       “நீ பிள்ளைகிட்டே பேசிப் பார்க்கலையா..?”
       “பேசிப் பார்த்தேங்க..ஆனா பேசினது ஒண்ணும் புரியலை…இப்போ யோசிச்சுப் பார்த்தா அதுக்கு “க”  “ற/ர” இரண்டு எழுத்தும் வரலை போல இருக்குங்க… அது சொன்னது சிங்களம் மாதிரி இருந்துச்சு எனக்கு…நான் ஸ்ரீ லங்காப் பிள்ளையை நீங்க கடல்ல காப்பாத்திக் கூட்டிட்டு வந்திருக்கிங்கன்னு நினைச்சேன்…”
       “நல்ல நனைஞ்ச விறகுக் கட்டைடி நீ” என்றவாறே குளிக்கப் போன கணவனைப்  பார்த்து  அவன் பாராட்டுவதாக நினைத்துச் சிரித்த அவளது அப்பாவித்தனத்தில் அவனுக்கும் புன்னகை மலர்ந்தது.
       அந்த நாளிதழை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள் பிள்ளையின் குடும்ப விவரங்களைக் கண்டு  தந்தையின் பெயர் கங்காதரன்.. ராமநாத புரம் மாவட்டக் கலெக்டர்… தாயார் பெயர் பங்கஜ வர்த்தினி… இல்லத்தரசி…தாத்தா பெயர் தாமோதரன்…ஒய்வு பெற்ற இராணுவ மேஜர்.. அந்த மழலையின் பெயர் தென்றலரசி…நல்ல வேளை அவள் பெயரை அவள் சொல்லலை என அவள் வாய்மொழியை ஒப்பிட்டுச் சிரித்தாள்.
இராமநாத புரம் கலெக்டர் இல்லம்:
       முன் மதிய நேரத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டாலும் அண்ணாதுரையும் உடன் வந்த முத்துவேலனும்  முன் இரவு நேரத்தில் மட்டுமே கலெக்டரின் தந்தையைச் சந்திக்க முடிந்தது.
       அவரிடம் கலெக்டர் மகள் தன வீட்டில் இருப்பதைச் சொன்னதும் அனைவரும் ஆசுவாசம டைந்தனர். பங்கஜம் கடவுளுக்கு நன்றி செலுத்த பூஜையறைக்கு ஓடினார். கலெக்டரும் அவர் தந்தையும் யோசனையில் ஆழ்ந்தனர்.
“கங்காதரா…நீ இப்போ நேர்ல போக வேண்டாம்..நான் போய் தேனுவைக் கூட்டிட்டு வரேன்…தென்றல் கிடைச்சதை வெளியில் சொல்லலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணி வை” என்று சொன்ன தாமோதரன் முத்துவேலனுடன் கிளம்பினார்.
“அப்பா…கவர்ன்மென்ட் வண்டியில போங்கப்பா…நம்ம கார்ல வேண்டாம்…தேனு கிடைச்சதை வெளியில சொல்லலாமா வேண்டாமா இல்லை எப்போ சொல்லன்னு முடிவெடுக்கற வரை அவ கிடைச்சது யாருக்கும் தெரிய வேண்டாம்…” என்றவாறே தாமோதரனின் கண்களை நோக்கினார் கங்காதரன்.
மின்னல் வேகத்தில் நடந்த பார்வைப் பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக தாமோதரனும் முத்துவும் தேனுவை அழைத்து வரக் கிளம்பினர். அண்ணாதுரை கங்காதரனுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அரசாங்க வாகனத்தின் சைரன் அவர்களது போக்குவரத்தை விரைவுபடுத்திற்று. அந்தக் கடற்கரைக் குப்பத்தின் அதிசயமாக அன்று முழுவதும் அடைக்கப்பட்டிருந்த அந்த ஓட்டு வீட்டிற்குள் இருந்த அவர்களது மாளிகையின் இளவரசி அவரைக் கண்டதும் உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அவரிடம் இழுத்து வந்தாள்.
“தாத்தா…இது என் பிலண்டு…அலை…இது அவங்தம்மா…”
“சரிம்மா…நல்லா விளையாடினியா…வா..நாமம் வீட்டுக்கு அம்மா அப்பாட்டே போலாம்”என அவளை அள்ளி எடுத்தவர் சில வினாடிகளில் அவளையும் அந்த ஓட்டு வீட்டையும் அளவிட்டார்.
“இன்னித்து  இங்தேயே இலுந்து அலை தூட விளையாடிட்டு நாளைத்து ஊலுக்குப் போதும்போது நான் வலேன்னு சொல்லிடுந்த…” 
அங்கிருந்து அவள் வர மறுப்பாள் என எதிர்பார்க்காத தாமோதரன் மீனாட்சியைப் பார்த்தார். அவள் சற்றே சங்கடமடைந்தவளாய் மகனைப் பார்த்து அவளை அவங்க வீட்டிற்குக் கிளப்பி விடு அரசு..என்று சொன்னாள்.
“அவள் மட்டுமில்லை…நீங்களும் உங்க மகனும் எங்க கூட வாங்க….உங்க வீட்டுக்காரர் அங்கே இருக்காரில்லையா..அவருடன் கூட வந்திடுங்க..” என அழைத்த தாமோதரனிடம் அலையின் ஆர்வமிகு முகத்தைப் பார்த்துவிட்டு சம்மதமாகத் தலையசைத்தாள் மீனாட்சி.
       அலைஅரசன் அவனும் உடன் வருவதாகச் சொல்லி அவளது கையில் அவளுக்குப் பிடித்த கிளிஞ்சல்களையும் ஒற்றை வலம்புரிச் சங்கையும் கொடுத்தபின்பே அவள் கிளம்பத் தொடங்கினாள்.
       உபசரித்த மீனாட்சியின் டீயைக் குடித்துவிட்டு ஆவலுடன் தென்றலையும் அலையையும் அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் கிளம்பினார்.
       திடீரென்று அரசாங்கத்தின் காரை அங்கு பார்த்த மக்கள் நலத் திட்ட உதவிகளுக்காகவோ அல்லது ஓட்டுக் கேட்கவோ அரசு சார்பாக யாரோ வழக்கம் போல் வந்திருப்பதாக எண்ணி அண்ணாதுரையின் வீட்டு வாசலில் குழுமத் தொடங்கினர். அவர்களுக்குத் தற்காலிகமாக உண்மையைச் சொல்லாமல் சமாதானப் படுத்தும் பொறுப்பை முத்துவிடம் ஒப்படைத்தார்.
——————————————————————————————————-
ராமநாதபுரம் கலெக்டர் இல்லம்:
       பங்களா வாசலில் நின்ற காரிலிருந்து இறங்குமுன்னே பின் சீட்டில் அமர்ந்திருந்த மீனாட்சியின் மடியில் உரிமையாய் உறங்கிக் கொண்டிருந்த தேனுவையும் அவளைத் தட்டி எழுப்ப முற்பட்டுக் கொண்டிருந்த அரசுவையும் பார்த்தவாறே புன்முறுவலைப் பூசிக்கொண்டு இறங்கினார் தாமோதரன்.
       அன்று கண்ட மேனி அழியாமல் விளையாடிய களைப்புடன் திருத்தமாக வாரப்பட்ட தலையுடன் தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்த மகளைக் கண்ட கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. கணவனை நிம்மதியுடன் பார்த்தன. விழிகளாலேயே மனைவியை அமைதிப் படுத்திய கங்காதரனின் பனித்த கண்கள் வெளியே தெரியாமல் அவரது கண்ணாடி காப்பாற்றியது.
       “அம்மா..” என அருகில் தன் புதிய தோழனுடன் ஆசையாக ஓடி வந்த தென்றல் அவனைத் தன் அன்னைக்கு அறிமுகப் படுத்திவிட்டு “அம்மா..நானும் அலையும் என் ரூமிலே போய் விளையாடலாமா…?” என்று கேட்ட மகளிடம் “நீ வந்து குளிச்சிட்டு அப்புறமா அலை கூட விளையாடலாம்..இப்போ உன் ரூமுக்கு ஆன்ட்டியைக் கூட்டிட்டு வா“ எனக் கூறி மகளை மீனாட்சியுடன் அவளது அறைக்கு அனுப்பிய பங்கஜம் அலையை அங்கிருந்த சோபாக்களில் ஒன்றில் அமரச் செய்து “இந்த புக்கைப் படிச்சிட்டு இருப்பா…தேனு குளிச்சிட்டு வரட்டும்” எனக் கூறியவாறே அவனிடம் ஒரு டிங்கில் புக்கைத் தந்து விட்டு அவர்களுக்குக் குடிக்க டீ காபி காம்ப்ளான் கலக்கச் சென்றார்.
       அலைக்கு அந்த சூழல் அனைத்தும் புதிதாக இருந்தது. இரு வருடங்கள் மட்டுமே பழகிய ஒரு புதிய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தில் அவனது கவனம் செல்வதற்குப் பதிலாக அங்கிருந்தவர்கள் பேச்சில் பதிந்தது.
“நீ அமைச்சர்கிட்டே பேசு..இப்படிக் கடல் வழி பாதுகாப்பில்லாமக் கிடந்தா நம்ம நாட்டை ஒட்டு மொத்தமா அழிக்கறது ரொம்ப ஈசி…யார் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் ஊடுருவலாம்…”
“நானும் அதேதான்ப்பா நினைச்சேன்…” என்று சொன்னவர் தொலைபேசியில் உள்துறை அமைச்சரின் செயலாளரைத் தொடர்பு கொண்டார். அவரிடம் பேசிவிட்டு வைத்தவர் “அமைச்சர்கிட்டே பேசிட்டேன்ப்பா…அவர் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தேவையான காரியங்களை செய்யறேன்னு சொல்லியிருக்காரு…”
அருகிலமர்ந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணாதுரை “அது அப்படித்தான் சொல்லுவாங்க..ஆனா செய்யறது சுலபமில்லிங்க…எப்படி விவசாயிங்க அளவுக்கு நமக்கு வெயில் மழை காத்து நிலவரம் தெரியாதோ அந்த மாதிரி கடல் நிலவரம் பார்முலா வெச்சுப் பார்த்தா தெரியாதுங்க… உள்ளே போய்ப் பார்த்தாதான் தெரியும்…அலையைக் கணிக்கற வித்தை கரையிலி ருக்கறவனை விட அதோட ஒன்றிப் போய்க் கடலுக்குள்ள இருக்கறவனுக்குத் தான் தெரியும்…”
“அப்போ மீனவன்களுக்குத்தான் கடலைப் பத்தித் தெரியும்னா எதுக்கு இவங்க சுற்றுச் சூழலியல்.. தட்பவெப்பம்.. காலநிலை…மரைன் இஞ்சினியரிங் பத்தி எல்லாம் படிச்சிட்டு வரணும்…?”
“படிச்சவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்கர அர்த்தத்தில இல்லை சார்..மீனை விட இயல்பா யாராலையும் நீந்த முடியாதுல்ல… தண்ணி போற போக்கில போய் நீந்தற கலை அதுங்களுக்குத்தான் பிறப்பிலேயே இருக்கு…அதுனாலத்தானே நாம நீச்சலுக்கு மீனை உசத்திப் பேசறோம்… பிறப்பிலேயே கூட வர திறமையை மட்டும்தான் யாராலையும் அழிக்கவோ மாற்றவோ முடியாதுன்ற அர்த்தத்தில சொல்றேன் சார்…” என்று தாமோதரனுடன் பேசிக்கொண்டிருந்தார் அண்ணாதுரை.
“அப்போ உங்க மீனவங்களும் படிச்சுட்டுக் கடலுக்குள்ள வந்தா கடலோட சேர்ந்து நாடும் உங்க வீடுகளும்  செழிக்கும்ன்னு சொல்லுங்க…” என்றவராய்த் தாமோதரன் மேலும் பல காரியங்களைப் பற்றி அண்ணாதுரையுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். அவற்றில் நாட்டமில் லாதவனாய் அவனுள் பதிந்த விதைகளின் வீரியமறியாதவனாய் சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான் அலைஅரசன்.
      
       அடுத்த அறையில் தனது உதவியாளரிடம் உடனடியாக துறைமுகக் கண்காணிப்பாளர், கோஸ்ட் கார்ட் சூப்பரிண்டென்ட்ன்ட், ரோந்துக் கப்பல் கேப்டன், சுங்கத் துறை கண்காணிப்பாளர், காவல்துறைக் கமிஷனர் ஆகியோரை அழைத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு மீட்டிங்கிற்கு அமைச்சர் உத்தரவின்படி ஏற்பாடு செய்யச் சொன்னவர் தேவையான இன்னும் சில விஷயங்களை அவரிடம் கூறி அவரை அனுப்பிவிட்டு அலையை அழைத்துவந்து அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்.
       தேனு வந்து அவனை விளையாட அழைக்கும்வரை அவனிடம் பேசிக் கொண்டிருந்தவர் அண்ணாதுரை மற்றும் தாமோதரனை அணுகினார்.
        கேள்வியாக அவரை ஏறிட்ட தாமோதரனிடம் “இவங்க நமக்கு நல்லது பண்ணியிருக்காங்கப்பா..நான் இவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறேன்…இவரும் தங்கச்சியும் இன்னிக்கு இங்கேயே சாப்பிட்டுட்டு தங்கட்டும்..நான் அரசுவையும் தேனுவையும்  பங்கஜத்தோட கூட்டிட்டுப் போறேன்.. அவங்க ரெண்டு பேரையும் மீதிப் பேர் நெருங்க விடாம என் மனைவி பார்த்துப்பாங்க…உங்க போட்டை உங்க மகனுக்கு அடையாளம் தெரியும்தானே…?” என அண்ணாதுரையிடம்  தெளிவுபடுத்திக் கொண்டவர் மனைவி மகளுடன் அலை அரசனையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினார் கங்காதரன்.
       மீனாட்சிக்கு மகனைக் கலெக்டர் அழைத்துப் போகிறார் என்பது மட்டுமே மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. முதல் நாளின் பின்னிரவில் தன்னுடைய தொழில் ஆதாரமான போட்டில் இருந்து தன மகனது கரங்களில் வைக்கப்பட்ட அப்பெண் பிள்ளை மற்றும் அவளைச் சார்ந்த சூழ்ந்த பலவும் தன் மகன் வாழ்வில் மௌன சாட்சியாகுமா அல்லது அவன் வாழ்வைக் குற்றப் படுத்திக் காட்சிப் பொருளாக்குமா என்ற மிகப் பெரிய கேள்வி அண்ணாதுரையினுள் எழுந்தது.
       தன் வாழ்வைப் புரட்டிப் போடக் கூடியதான நிகழ்வுகளைக் காலம் தனக்குத் தரக் காத்திருக்கிறது  தெரியாமல்    கலெக்டர் அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தான் அலைஅரசன்.

Advertisement