Advertisement

                                                           

 கண்மணி நீ வரக் காத்திருந்தேன்….1…..

31-12-2001

ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத  உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக் காகிதத் தோரணங்கள், வகை வகையான  சிற்றுண்டிகள், காபி, டீ ,குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், எல்லாவற்றுக்கும் சிறப்பான ஏற்பாடுகள்செய்யப் பட்டிருந்தன.

 

ஆனால் அந்த ஊர் பதட்டத்திற்கான அறிகுறிகளையும், போராட்டத்திற்கான மூல நபர்களையும், கலவரம் உருவாவதற்கு முகாந்திரமான  அனைத்து காரணிகளையும் தன்னகத்தே அடக்கி வைத்திருந்தது.இரண்டு நாட்களாக அங்கே மாவட்ட ஆட்சித் தலைவர் முகாமிட்டிருந்தார்.

 

இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது புனித அந்தோணியார் கோயில் திருவிழா வருகிற மார்ச் மாதம் நடக்க இருந்தது. அதில் கலந்து கொள்ள அரசு சில பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அந்நியமங்களை உள்ளூர் மீனவர்கள் ஏற்க மறுத்தனர். குடும்பம் குடும்பமாக மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர்களும் திருவிழாவிற்கான தமது உரிமைகளையும் திருப்பலி செலுத்துவதில் திருவிழா நிற்பதற்கு முன்னர் பங்கெடுத்த தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்களுக்கே முன்னுரிமை வேண்டுமென்று சிறு சிறு குழுக்களாகக் கூடி கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

அதை அறிந்த மாநில உள்துறை அமைச்சகம் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு பொறுப்பைத் தந்திருந்தது. மாவட்டம் முழுவதும் ஓர் ஆய்வு நடத்தி அந்த மாவட்டத்தில் இருந்து 10 பேரை மட்டும் வடிகட்டி வருகிற திருவிழாவிற்கு அனுப்ப வேண்டியது. செல்லுகிற மக்கள் இந்திய நாட்டின் சார்பாக அங்குள்ள மக்களுடன் அளவளாவி திருவிழாவைக் கொனண்டாடிவிட்டுத் திரும்ப வர வேண்டியது… இந்த ஏற்பாடுகள் சற்றே பிசகினாலும் இரு அண்டை நாடுகளுக்கான நல்லுறவு, வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம்….அது மட்டுமன்றி அந்த அண்டை நாட்டின் ஒத்துழைப்பு இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு புறக் கடல் எல்லைகளை ஆக்கிரமித்து போர் முரசு கொட்டப் போதுமானது.

 

 மத்திய அரசு சொல்வதை மாநில அரசால் ஏற்க முடியாது..மாநில அரசு சொல்வதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை…எல்லார்க்கும் எல்லாவற்றையும் புரிய வைக்க முடிவதில்லையே…இவையனைத்தையும் விட முக்கியமாக இங்கிருக்கும் மக்கள் இராம நாத புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிக் குப்பன் படையாச்சி கட்டியதுதான் கச்சத் தீவின் அந்த அந்தோணியார் கோவில் என்பதையும், தங்கள் உரிமையைப் பறைசாற்றும் கச்சத் தீவு இராம நாத புரம் மாவட்ட வருவாய்த் துறை எல்லைக்குட்பட்ட்து என்பன போன்ற ஆவணங்களையும், மறப்பதாக இல்லை என்பதுதான் பெரும் சவாலாக அரசின் முன் இருந்தது. அரசு இயந்திரம் பழுதின்றிச் செயல்படுவதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிலை மாவட்ட ஆட்சியருக்கு….

 

அருகிலுள்ள சிற்றூர்களின் முக்கியப் புள்ளிகளை இங்கு சந்திக்க ஒழுங்கு செய்யப் பட்டிருந்த்து. காலை அதைச் செவ்வனே செய்து முடித்த மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த காவல் துறை, தீயணைப்புத் துறை, கடலோரக் காவல் படை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பைத் தொடர்ந்த மாவட்ட ஆட்சியர் முக்கிய சில முடிவுகளை எடுத்த பின் கூட்டத்தை முடித்து வைத்தார்.

 

ஆட்சியர் உறங்கச் சென்றாலும் அவருடன் அந்த மீட்டிங்கில் பங்கேற்ற அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் அந்த புத்தாண்டின் இரவில் உறங்கச் செல்லவில்லை. ரோந்துப் பணி ஏற்பாடுகள், கோவில்கள், சர்ச்சுகள் என புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள், அதையொத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்ன பிற பணிகளில் மூழ்கி மிகுந்த களைப்புக்காளான அவர்கள் உறங்கச் சென்றிருந்த ஆண்டின் முதல் நாள் பின்னிரவு நேரம்…

 

முந்தைய தினத்தின் சந்தடிக்கும் சலசலப்புக்கும் கூட்டத்திற்கும் சற்றும் சம்பந்தமின்றி அமைதியைப் போர்த்தியிருந்த அந்த ஓய்வில்லத்திற்குள் மழை வரும் அறிகுறிகளுடன் கூடிய இரவின் கருமையை ஒத்த கரும்போர்வையைப் போர்த்தியிருந்த அந்த உருவம் சுற்றுச் சுவர் வழியே உள்ளே குதித்தது. முதல் மாடியிலுள்ள ஒரு குறிப்பிட்ட அறைக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மூக்கில் மயக்க மருந்து தெளிக்கப் பட்ட கைக் குட்டையை வைத்து மயங்கச் செய்து தோளில் தூக்கியவாறே அருகிலிருந்த மரக் கிளையின் உதவியுடன் அம்மரத்தில் ஏறிக் கயிறு கட்டி வெளியில் குதித்தது.

 

கிளைகளின் சலசலப்பினால் கண்விழித்த செண்ட்ரி (ஆட்சியரின் வருகை முகாந்திரமாக ஓய்வு இல்லப் பாதுகாப்பிற்காக அமர்த்தப் பட்டிருந்த காவலர்) ஒரு உருவம் உள்ளே இருந்து வெளியில் குதித்ததைப் பார்த்து அவசரமாக கையிலிருந்த வயர்லெஸில் தகவல் கொடுத்தவாறே பின் தொடர்ந்து ஓடத் தொடங்கினார்.

 

 

“சார்..! நான் 402…இங்கே கலெக்டர் தங்கியிருக்கற ட்ராவலர்ஸ் பங்களால இருந்து யாரோ வெளியில ஓடறாங்க…எப்போ எப்படி உள்ள போனாங்கன்னு தெரியலை…”

 

 

“……………………………………………………………………….”

 

 

“நானும் பின்னாடி ஓடிட்டுதான் இருக்கேன் சார்…ஒரே ஆளுதான்…ஆனால் நல்ல தாட்டியா இருக்கான்…கையில எதுவும் இல்லை போல…இருந்தாலும் வலது கையை மட்டும்தான் வீசி வீசி ஓடறாப்போல இருக்கு….”

 

 

“……………………………………………………………………………..”

 

 

“இருட்டில எப்படி சார் பார்க்க….?”

 

“சரி சார்…நான் காலில சுட்டுடறேன்..நீங்க கொஞ்சம் பேட்ரோல் வண்டியை சீக்கிரம் வரச் சொல்லுங்க சார்….”

 

வயர்லெஸ் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கும் அவனை நோக்கிச் சுட்டார். தடுமாற்றத்துடன் ஓடத் தொடங்கிய அவனை இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்த ஒரு ஆட்டோ ஏற்றிச் சென்றது.

 

 

ஆட்டோவில் ஏறியதும் ஓட்டிக் கொண்டிருந்த அவன் கேட்டான்…”என்னடா..முகமே சரியில்லை..?”

 

“பின்னே,,,நமக்குப் பிடிக்கற காரியமா நாம செய்துட்டிருக்கோம்… எல்லாம் பித்தலாட்டம்..இதுல அந்த செண்ட்ரி காலில சுட்டுட்டாண்டா…வலி உயிர் போகுது…”

 

“ஐயோ…காலைக் கீழே வைக்காதே…சீட் மேலே தூக்கி வை..கொஞ்சம் பொறுத்துக்கோடா….இப்போ கைமாத்திறலாம்..”

“நான் பிள்ளையத் தூக்கினது தெரிஞ்சிருக்காதுன்னு தாண்டா நினைக்கிறேன்…. பிள்ளை எவ்வளவு அழகுடா..தங்க விக்கிரகம் மாதிரி..”

 

     சற்றுத் தொலைவில் பேட்ரோல் வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்டவன் சட்டேன்று அருகிலிருந்த கடற்கரைச் சாலைக்குள் புகுந்தான்..

 

 

“மச்சான்.. எப்படியும் குண்டடி பட்ட உன் காலிலிருந்து சொட்டற ரத்தத்தை வெச்சு மோப்ப நாய் உதவியுடன்  உன்னைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வாங்க….அப்போ நீ கடலுக்குள்ள இருந்தியானா கண்டுபிடிக்கறது கஷ்டம்…வாக்கி தாக்கி வெச்சிருக்கேதானே..நாங்க உன்னை இன்னும் ரெண்டு மணி நேரத்தில் காண்டாக்ட் பண்றோம்..” என்று நடக்கப் போவதை அறியாமல் சொன்னவன் முடிந்தவரை படகின் அருகில் ஆட்டோவைக் கொண்டு சென்று அங்கிருந்த ஒரு படகில் அவனைத் தூக்கி ஏற்றிப் பிள்ளையையும் அதில் ஏற்றினான். ஆட்டோவில் இருந்து டீஸல் கேனையும் படகினுள் வைத்தவன் “கிளம்புடா…இந்நேரம் அந்த செண்டரி ஆட்டோ பத்தித் தகவல் குடுத்திருப்பான்…உன்னை எல்லாரும் ரோட்டுப் பக்கம்தான் தேடிட்டு இருப்பாங்க…நான் தயாராகிப் போகணும்” என்று விடை கொடுத்தவன் அந்தப் படகு கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்துவிட்டு ஆட்டோவிலிருந்த நீரை எடுத்து நம்பர் பிளேட்டில் படிந்திருந்த சகதியையும் உள்ளே சிந்தியிருந்த ரத்தத்தையும் துடைத்துவிட்டுக் கொஞ்சம் புகையிலையைத் தூவி சீட்டின் ஓரத்தில் ஒரு பான்பராக் பொட்டலத்தைப் பிரித்துக் கொட்டியவன் திருப்தியாகி வந்த வழியே செல்லாமல் வேறு சில சந்துகளின் உதவியோடு அவனது வீட்டை அடைந்தான்.

 

 

அங்கே ஓய்வு இல்லத்தில்…உள்ளே இருந்து வெளியில் ஒருவன் ஏறிக் குதித்தது அப்போதுதான் தெரிந்து பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. ஒய்வு இல்லத்தினுள் கேட்ட பலவகையான சப்தங்களைக் கேட்டு மொட்டை மாடியினின்று இறங்கி வந்த கலெக்டர் நடந்ததைக் கேட்டு மனைவியை அறையினுள் அனுப்பிவிட்டு அந்தப் பகுதி காவல் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். இல்லத்தினுள் காணாமல் போனவை எதுவுமல்ல….கடுந்தவம் புரிந்து அவர்கள் பெற்றெடுத்த மழலைச் செல்வத்தைத் தவிர…

 

அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த காவல் துறை அதிகாரிகள் புறவழிச் சாலைக் கண்காணிப்பையும் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளையும், உடன் அழைத்து வந்திருந்த வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்களைத் துரிதப் படுத்திக் கொண்டிருந்தனர். பிள்ளையின் புகைப் படம் எல்லா இடத்துக்கும் FAX மூலம் அனுப்பப் பட்டது.வீட்டுக்குள் இருந்த அனைவரது கைரேகையும் எடுக்கப் பட்டது.இல்லத்தில் இருந்து வெளியில் ஓடியவனைத் துரத்திய செண்டரியை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை தொடங்கியது.

 

“ஓடினவன் கையில எதுவும் வைத்திருந்தானா…? எப்படி இருந்தான்…? எவ்வளவு உயரம் இருந்தான்? என்ன எடை..? எந்தத் திசையில் ஓடினான்..? அவன் வீட்டுக்குள் எப்போது வந்தான்? வீட்டுக்குள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணியாளர்கள் நேர்மையானவர்களா? முன்பே அங்கே வேளை செய்பவர்களா? என்பன போன்ற கேள்விக்கணைகள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் சற்று அதிகமாகவே அவரைத் தாக்கத் தொடங்கின.

அவர் சொன்ன திசையைச் சுற்றிலும் காவல்துறை வாகனங்களை அனுப்பியவர்கள் வெடுகுண்டு நிபுணர்களின் இல்லை என்ற பதிலில் திருப்தியானவர்கள் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். செண்டரியிடம் இருந்து அவர்களுக்குச் சாதகமான பதில் எதுவும் வரவில்லை…அவனுக்குக் குண்டடி பட்டிருந்தது..அத்துடன் ஒரு ஆட்டோவில் ஏறினான் என்பதைத் தவிர…

 

மோப்ப நாய்களை அழைத்து வரச் செய்தவர்கள் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் உரிமையாளர்களையும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடனடியாகக் கூடச் செய்தனர். சிந்திய ரத்தத்தை முகர்ந்த மோப்ப நாய்கள் கடற்கரைக்குச் சென்று கடலருகில் தயங்கி நின்றன.

 

கலெக்டர் தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரர்: மக்கள் உபகாரி: நியாய தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்:சுய நலமில்லாதவர்:  வார்த்தை தவறாதவர் என்பன போன்ற பல சிறப்புகளை உடையவர்.. ஆதலால் காவல் அதிகாரிகள் சிக்கலின் நுனி பிடிபடாமல் குழம்பினர்.

 

புயல் சின்னம் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை என்பதால் கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை இருந்தபோதிலும் அது அன்று சற்று நேரத்திற்கு முன்னர் மட்டுமே அனுப்பப் பட்டதால் அவர்கள் கடலுக்குள் பிள்ளையை அழைத்துச் சென்றிருப்பர் என்ற கோணத்தை ஒதுக்கினர்.குண்டடி பட்ட காலுடன் அவனால் கடலில் கால் நனைத்திருக்க இயலாது என்பதால் அவனது உடைகளை மாற்றி அவன் கடலில் எறிந்திருக்கக் கூடும் என நினைத்தனர்.

 

 

விரைந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அடைந்து இன்னும் இருள் பிரிந்திருக்காத அந்த அதிகாலை வேளையில் கூடியிருந்த ஆட்டோ ஒட்டுனர்களிடமும் உரிமையாளர்களிடமும் தனித் தனியே விசாரணையைத் துவக்கினர்.

 

 

ஏற்கெனவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து சந்தேகப் படும் விதமாக யாரும் இல்லை எனத் தகவல் வந்தபடியால் சாலைக் கண்காணிப்பு அதிகமிருந்தது. உள்நாட்டுப் படகுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த படியால் அந்த வழியில் யாரும் யோசிக்கவில்லை..புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்த அந்த நேரத்தில் கடற்பகுதியில் கண்காணிப்பு அதிகமிருக்கும் என்றெண்ணினர். மேலும் கடற்படைப் பாதுகாப்பு எல்லைகளுக்குள் காவல்துறைக்கு பெருமதிப்பிருக்காது என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்…

 

ஆனால் புயல் எச்சரிக்கை விடப்பட்ட அந்நேரத்தில் அப்பகுதியில் உட்செல்லும் கப்பல்கள் வெளியேறும் கப்பல்களுக்குமான பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளைச் செய்ய தயார் நிலைப் படுத்தவேண்டும்..மேலும் அவை பயணம் செய்யத் தகுந்த வானிலை மாற்றம் ஏற்படும்வரை அவை தங்கிச் செல்லவோ அல்லது வரும் கப்பல்களில் பழுது இருப்பின் அவற்றைச் சரிபார்த்து அனுப்பவோ அதுவரை அக்கப்பல்களை நிறுத்தவும், அவற்றின் பாதுகாப்புக்குப் பொறுப்பெடுப்பதும் போன்ற ஏற்பாடுகளைத் துறைமுகத்தைத் தொடர்பு கொண்டு செய்ய வேண்டிய கடமைகளும் கடற்படைக்கு உண்டு என்பதையும் பரந்துவிரிந்த வங்கக் கடலின் சிறு சிறு போட் ஜெட்டி எனப்படும் படகு நிறுத்துமிடங்களைக் காவல் காப்பது அதுவும் அங்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த இயலக் கூடிய கடற்படைக் கப்பல்களின் வாயிலாக என்பது அவர்கள் அறிவுக்கு அப்பாற்பட்ட காரியமாகத் தோன்றியதோ அல்லது கலெக்டர் வீட்டுப் பிள்ளையைக் காப்பாற்ற இயலாவிட்டால் அரசு இயந்திரத்தின் சுழற்சியில் பணிமாற்றம் நிச்சயம் என்ற பதற்றம் அவர்களைச் சிந்திக்க விடாமல் செய்ததோ…?

 

ஒய்வு இல்லத்தில் அந்நேரத்தில் சிறு பிள்ளையைத் தனியே விட்டுவிட்டு மழை வரும் அறிகுறிகளை ரசிக்க மழைக்கு முன்னதான காற்றுக்கு மயங்கி மணாளனுடன் மாடிக்குப் போன தன்னுடைய எண்ணப் பிழையை கண நேரமும் மன்னிக்க முடியாமல் குற்றவுணர்வுடனும் பரிதவிப்புடனும் தவித்துக் கொண்டிருந்தாள் பிள்ளையின் தாய்…ஆட்சியரின் மனைவி என்ற கட்டுப்பாடு அவளுக்கிருந்தது…அவளால் பிறரைப் போலத் தன் கண்ணீரையோ தன் உணர்வுகளையோ வெளிக் காட்ட அவள் உரிமை மறுக்கப் பட்டவள்…அருகில் அவள் கணவனிருந்தும் அவன் அப்போது மாவட்ட ஆட்சியராக மற்றவருக்கு உயர் அதிகாரியாக இருக்கும்போது அவர்கள் கணவன் மனைவியாக இறுக்கம் தளர்ந்திருக்க இயலாது. அடிக்கும் ஒவ்வொரு தொலைபேசி மணிக்கும் ஒலிக்கும் ஒவ்வொரு வாக்கிடாக்கி அறிவிப்புக்கும் மட்டுமே அவள் மனம் இறைவன் திருவடியினின்று இவ்வுலகம் வந்தது. நேரம்தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அவள் பிள்ளையைப் பற்றிய தகவல் எதுவும் வந்து சேர வில்லை,.

 

 

பொழுது விடியத் துவங்கிய வேளையிலே அவர்களது பிள்ளையைப் பற்றிய தகவல் வந்தது….அது அவர்கள் எண்ணிப் பார்க்க இயலாத நிபந்தனைகளைத் தாங்கியதாக இருந்தது..கதைகளிலும் திரைப்படங்களிலும் வருவது போல அவர்கள் பணத்தையோ அல்லது யாரேனும் தீவிரவாதிகளின் விடுதலையையோ தப்பிச் செல்ல வாகனங்களையோ கேட்கவில்லை… மாறாக அவர்கள் கேட்டது அவர்களது உரிமையை அல்லது உரிமையாக அவர்கள் நினைத்ததை…

     கச்சத் தீவுத் திருவிழாவுக்கு செல்வதற்கான நபர்களை அதிகப் படுத்தி, அங்கு செல்வதற்காக அரசு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்…அங்கு செல்ல தற்போது குறிப்பிட்ட வகைப் படகுகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை மாறி அனைத்துப் படகுகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்… முன்பு போலவே தங்கச்சி மடத்தைச் சார்ந்த பாதிரிமார்களுக்கு திருப்பலி செலுத்த அனுமதி வழங்கப் பட வேண்டும்…திருப்பலி தமிழில் மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள்…

 

     அவற்றைக் கேட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் பிள்ளையின் தாய்க்கும் தெரிந்துவிட்டது இனி என்ன நடக்குமென்பது… அவர்கள் விதித்த நிபந்தனைகள் யாவுமே இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப் படாதவை….மதச் சார்பற்ற நாடாக இந்தியா தன்னை உலக நாடுகள் மத்தியில் நிலைநிறுத்த விரும்பி அதை உலக அரங்கில் முன்னெடுக்கத் துணியும்போது மதச் சார்பான கோட்பாடுகள் ஒப்பந்தங்களில் இடம்பெறாதிருப்பதும்…அது காலப் போக்கில் தன் வாழ்விற்கான களப் போராட்டத்தில் மக்கள் மனதினின்றும் நீங்கி விடுவதும் வழமையன்றோ…? அவ்வாறிருக்க இதில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப் படப் போவதில்லை என்பது திண்ணமாகத் தெரிந்தது அவர்களுக்கு..

 

எனினும் அவர்களது கடமையை நிறைவேற்றும்

வண்ணமாக அவர்களது நிபந்தனைகளை மாநில மற்றும் மத்தியப் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் தெரிவித்தனர். ஆட்சியரின் கருத்தைக் கேட்ட அவர்களிடம் அப்பிள்ளையின் தந்தை  ஒரு ஆட்சியராகவே “என் பிள்ளையை நான் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன் சார்…பிள்ளை வளர்ந்து நாட்டைக் காக்க ராணுவத்தில் சேர்ந்து உயிர்த்தியாகம் செய்திருந்தால்..அந்தப் பிள்ளைகளைப் பெற்றவரின் மன வழியை உணர இறைவன் எனக்குத் தந்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன்..இருந்தாலும் நீங்கள் அதிகாரிகளுடனும் அந்த நாட்டுத் தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு சிறப்பாக ஏதேனும் செய்ய முடிந்தால் எங்களுக்காக் அதைச் செய்ய முயலுங்கள் சார் ப்ளீஸ்.” என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்.

 

வெறித்த பார்வையுடன் அவரை முறைத்ததைத் தவிர வேறோன்றும் செய்யாமல் இறையடியை நாடினார் அவர் மனைவி…அவருக்கு ஆறுதல் தர வேண்டி அனைவரையும் அங்கிருந்து அனுப்பியவர் தாங்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர்.

 

 

 

 

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…

–2–

படகை விரைந்து செலுத்திக் கொண்டிருந்த அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒலித்த வாக்கிடாக்கியின் மூலம் வந்த செய்தியைக் கேட்டு நிதானமடைந்தான்.

 

“இல்லை…இன்னும் மழை வர ஆரம்பிக்கலை…”

 

“———————————————————————————-“

 

“ஆமாம்…பிள்ளைக்கு இன்னும் மயக்கம் தெளியலை.. .வேகமாத்தான் போறேன்…கோட்டைப்பட்டினம் இன்னும் 1௦ நிமிஷத்தில வந்துடும்…அப்படியா? இல்லை ..ரோந்துக் கப்பல் ஏதும் நான் இன்னும் பார்க்கலை…நாம ரோட்டில வந்தா இந்த ஊருக்கு வர இரண்டரை மணி நேரம் ஆகும்…”

 

“——————————————————————————————–“

 

“அப்போ அவங்க ரோட்டிலையும் ரயில்லயும் மட்டும்தான் தேடறாங்களா? கடலைப் பத்தி யோசிக்கலியா..? இப்போ சரி..ஆனால் இங்கே புயல் எச்சரிக்கை இருக்குன்னா இந்த போட்ல அவ்வளவு தூரம் போக முடியாது…கருக்கல் விடியறதுக்குள்ள முத்துப் பேட்டை போனாலும் விடியுமுன்னே காட்டுக்குள்ளே போக முடியாது…இன்னும் கோட்டைப்பட்டினம் மாதிரி கொஞ்சம் பெரிய ஊருக்குள்ள போனாலும் தேட வாய்ப்பு இருக்கு….”

 

“இப்போ எங்கே இருக்கே…?”

 

“மீமிசல்ன்னு ஒரு ஊரு…சின்ன ஊர்தான்…ஜாஸ்தி வெளியூர் ஆட்கள் புழக்கம் இருக்காது..ரோட்டுப் பக்கமா வந்தா 125 கிலோமீட்டர் இருக்கும்…பொதுவா உள்ளுரில இருக்கற ஜனங்களையும் திருவிழாவுக்குப் போக பெயர்ப் பட்டியலில் இடம் குடுத்தவங்களையும்தான் அதிகம் விசாரிப்பாங்க….அதில என்னைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லை….”

 

“—————————————————————————–“

 

“சரி..நான் பிள்ளையை எடுத்துட்டுப் போய்த் தங்க இடம் பார்க்கிறேன்…காலுக்கு இந்த ஊரில குண்டு எடுக்க முடியுமான்னு தெரியலை…ஏற்பாடு பண்றீங்களா….”

 

“——————————————————————————-“

 

“எனக்குக் கணுக்காலுக்கு மேலே கொஞ்ச தூரத்திலதான் குண்டு பட்டிருக்கு…கீழே தொங்கப் போட்டால் ரத்தம் வருது… என்னால படகிலிருந்து இறங்க முடியாத நிலைமை…நீங்க சொன்ன மாதிரி முத்துப் பேட்டை வரை என்கூட வர வேண்டிய ஆள் கோட்டைப்பட்டினத்தில காத்திருக்குதானே.. …பிள்ளை இன்னும் எந்திரிக்கலை…பேசாம நான் அங்கேயே பிள்ளையைக் கூட்டிட்டுப் போயிரவா…?

 

“நீ காலில அடிபட்டதால புத்தியக் கழட்டிட்டுப் பேசிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாத் தெரியுது…இப்போ புயல் அறிவிப்பு வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுது…அதனால வெளிநாட்டுக் கப்பல் லிஸ்ட், அடுத்து கண்டெய்னர் கப்பல் நிலவரத்தைப் பார்த்திட்டு அடுத்து மீனவங்க சங்கத்தைத் தொடர்பு கொண்டு கடலுக்குப் போனவங்க போட் லிஸ்ட் எடுப்பாங்க…அது மட்டும் இல்லை… போட்டுக்கு சொந்தக்காரன் போட்டைக் காணோம்னு போன அடுத்த நிமிஷம் கடற்கரைகளில காவலை அதிகப் படுத்திருவாங்க…ஒரு பழைய போட்டில வெறும் 5 லிட்டர் டீசலோட 4 வயசுப் பிள்ளையோடயும் அடிபட்ட காலோடயும் இந்த ஊதக் காத்தில எவ்வளவு நேரம் உன்னால கடலுக்குள்ள இருக்க முடியும்? இந்நேரம் கடற்கரைக்கு வர அத்தனை செக்போஸ்ட்டையும் அலர்ட் பண்ணிருப்பாங்க…நாமளே பிள்ளையைத் தூக்கிட்டு நேரே ஊருக்குள்ள போக முடியாது…”

 

“இதில இவ்வளவு விஷயம் இருக்கறது எனக்குத் தெரியலைண்ணே…சிக்கலுன்னா கடலுப் பக்கம் போக சொன்னதை நான் அவசரப் பட்டு செஞ்சிட்டேனா? நாம முதல்ல யோசிச்சாப் போல பிள்ளையை எங்க வீட்டுக்கு எடுத்துப் போயி சாப்பாட்டுக்குப் பதிலா குளுகோஸ் ஏத்திட்டு முழு மயக்கத்திலேயே 2–3 நாள் வெச்சு அனுப்பிருந் திருக்கலாம் அண்ணே…காலில் குண்டு பட்டதும் இரத்தக் காயத்தோட கடல்பக்கம் போனாத்தான் பாதுகாப்புன்னு இப்படி பண்ணிட்டேனே..மன்னிச்சிடுங்க…”

 

“சரி..விடு…போட்டை மெதுவா ஓரமாவே ஓட்டிட்டுப் போ…போட் ஜெட்டிக்குக் கொஞ்ச தூரம் தள்ளியே இரு..நான் பிள்ளையைக் கூட்டிட்டு வர ஏற்பாடு பண்றேன்…உன்னைத் தொலைவில இருந்து துணியை வீசி 3 முறை ஆட்டிக் காட்டுவாங்க…அவங்ககிட்டே பிள்ளையைக் குடுத்திட்டு நீ கொஞ்சம் தூரம் போட்டிலையே போய்க் கோட்டைப்பட்டினம் பீச்சுக்கு அரை மைல் முன்னாடி நிக்கற நம்ம சுலைமான் பாய் கூடப் போய் அவர் வீட்டில தங்கிக்கோ…”

 

மிகுந்த மகிழ்ச்சியுடனும் அண்ணனுக்கு என் மேல எவ்வளவு அன்பு என்று பூரிக்கும் அடிமட்டத் தொண்டனின் மனநிலையுடனும் ஒப்புக் கொண்டு படகை மெதுவே செலுத்திக் கொண்டிருந்த அவனுக்குத் தெரியாது..அவன் செய்யப் போகும் காரியத்தின் வீரியம்…”

 

               மீனவர் குப்பம் – மீமிசல்

 

          மீனவர் குப்பம் என்கிற வார்த்தையை ஒழிக்க நினைக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆட்சி அமைத்ததும் தங்களுக்கு வசதியாக மறந்து போகும் ஒரு வழக்கு முறைச் சொல்…அவர்கள் அமைக்கும் சட்டங்களில் காட்டப்படும் குப்பங்களை ஒழிக்கும் நடவடிக்கை என்பது குடிசை மாற்று வாரியத்தின் மூலமாகவோ அல்லது வீட்டு வசதி வாரியத்தின் மூலமாகவோ குடிசைகளுக்குப் பதிலாக வழங்கப்படும் வீடுகள் என்பன அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றும்பொழுது வீடின்றித் தவிப்பவர்கள்… அல்லது சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அரசு நிலம் கையகப் படுத்தும்பொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்ற ஆணை மூலம் மாற்றிடம் வழங்க வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றவர்கள்….மாநில, தேசியக் கட்சித் தொண்டர்கள் ஆகியவர்கள் வீடுகள் பெற அரசு ஏற்படுத்தும் வாய்ப்புகள் மட்டுமே…. ஆனால் மீனவர் குப்பம் என்பது அதில் எந்த வகையும் சாராமல் அலுவகம் அருகில் வீடு என்ற அடிப்படைத் தேவையை முன்னிறுத்தி கடலை ஒட்டி அதை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட குடியிருப்புகள் அமைந்த பகுதி…

 

     இருள் பிரியாத அதே நேரத்தில் அப்பகுதியின் ஒரு ஒட்டு வீட்டில் தாயும் மகனும் கிளம்பிக் கொண்டிருந்தனர். மாடத்தில் ஏற்றிய விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியைத் தூண்டிவிட்டு தூக்கில் சூடான கடுந்தேநீரும் குடிக்க நீருடனும் உண்ண இலகுவான உணவுவகைகளையும் எடுத்து வைத்தவள் கையில் கூடைகளுடன் தனது 1௦ வயது மகனை மழை வரும் அறிகுறியுடன் கூடிய குளிர் காற்றுக்கு இதமாக ஒரு மப்ளரைச் சுற்றி அழைத்துக் கொண்டு கதவை வெறுமனே சாற்றித் தாளிட்டு வெளியே விரைந்து கடலை அடைந்தாள்.

 

     சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த மோட்டார் போட்டைக் கண்டு மகிழ்ச்சியான மகன் வலது கையை உயரே தூக்கிக் கையசைத்தான். அந்த மோட்டார் போட்டிலிருந்த உருவம் வா என்பது போலப் பதிலுக்குக்  கையசைத்தது..

 

“அம்மா…நான் போட்டுக்குப் போறேன்” என்று கையிலிருந்த மப்ளரைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடிய மகன் எறிந்த மப்ளரைக் காற்றைத் துரத்தி கடலுக்குள் செல்வதற்குமுன்   எடுப்பதில் முனைந்தாள் அந்தப் பொறுப்பான தாய்…

 

சற்றே கரையை ஒட்டினாற்போல அவன் நடந்து வரும் தூரத்தில் வேகத்தைக் குறைத்துக் கொண்டே “கையைக் கொஞ்சம் ஏந்தினார்போலக் காட்டு ராசா…” என்று சொல்லிக்கொண்டே அவன் முகம் சற்றே போட்டிலிருந்த அறிமுகமில்லாத உருவத்தின் முகத்தையும் போட்டிற்குள் சிந்தியிருந்த ரத்தத்தையும் பார்த்துத் திகைத்ததைக் கவனிக்காமல் அவன் கையில் மயங்கியிருந்த பிள்ளையைக் கிடத்திவிட்டு “யாரிது?” என்ற அவனது கேள்விக்குப் பதிலாக “அண்ணன் குடுக்கச் சொன்னார்…நான் டாக்டர்ட்ட போறேன்..” என்று சொல்லிவிட்டு போட்டைக் கிளப்பிக் கொண்டு விரைந்து சென்றான்.

 

“கடலைக் கண்டாலே இவனுக்குக் கண்ணுமண்ணு தெரியாது…இதில அப்பாவைக் கண்டா இன்னும் சுத்தம்…” பெருமையுடன் கூடிய முனகலுடனே மப்ளரைத் துரத்தி எடுத்திருந்தவள் நிமிரும்பொழுது கண்டவள்…மகன் ஒரு சிறுமியைக் கையிலேந்திக் கொண்டு வருவது தெரிந்து திகைத்தாள்…” யாருடா இது…? கடல் கன்னி கணக்கா இவ்ளோ அழகா இருக்கு…” என்று மகன் மனதில் அபெண்ணின் உருவத்தைத் தன்னையறியாமல் புகுத்தியவள் மகனும் அச்சிறுமியின் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்திருப்பதைக் கண்டு சற்றே நிதானித்தாள்…

 

“நம்ம போட்டுதான்ம்மா…ஆனால் அப்பாவும் சுடலை அண்ணனும் அதில இல்லை…வேற ஒரு மாமா…காயம் பட்டிருக்கும் போல..நம்ம முக்கு வீட்டு முத்து மாமாவுக்குப் பட்ட குண்டடிக் காயம் போல இருந்துச்சு..போட்டில ரத்தம்..அண்ணன் குடுக்கச் சொன்னாருன்னு நம்ம அப்பா பேரைச் சொல்லிப் பாப்பாவைக் கையில குடுத்துட்டுக் கிளம்பிட்டார்…பாப்பா நல்ல அழகா தங்கம் கலந்த வெள்ளை கலர்ல இருக்குல்லம்மா…புருவ முடியைப் பாருங்களேன்.. நல்ல அடர்த்தி…அழுத்தமான ஆளா இருக்கும் போல… இந்த மாதிரிதானேம்மா சினிமால வர பாப்பால்லாம் முடி வெட்டியிருக்கும்…ஆனா நல்ல தூங்குமூஞ்சி…இன்னும் போட்டில இருக்கறது போலவே எப்படித் தூங்கறா பாருங்க…எது எப்படியோ நம்ம வீட்டிலயும் இதைப் போல ஒரு பாப்பா எப்பவும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்…?”

 

நிர்மலமாக உறங்கும் இச்சிறுமி யாராக இருக்கும் என நினைவடுக்குகளில் பதிந்த முகங்களை ஒத்துப் பார்க்க முற்பட்டவாறே மகன் பேசிய முற்பாதியையும் பிற்பாதியையும் மட்டுமே கேட்டவள் அச்சிறுமியின் கன்னத்தைத் தட்டி எழுப்ப முயன்றாள்.  

 

“சரிதான்…வழக்கம் போல உங்கப்பா குண்டடி பட்ட ஆளைக் கண்டதும் போட்டைக் கொடுத்திட்டு இவர் தோழங்க கூடச் சேர்ந்துகிட்டாரா…? இன்னைக்கு வந்திடுவேன்னு சொல்லிட்டுத்தானே போனாரு…லைட் ஹவுசில கொடி வேறே ஏத்திருக்காங்களாமே..? கண்ணில படாமலா போயிருக்கும்…? எப்பவும் அடி பட்ட ஆளைக் கூடக் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாம வர மாட்டாரே…? இந்த முறை ஏன் இப்படித் தனியா அனுப்பினாரு…அதுவும் சின்னப் பிள்ளையோட…? கடலுக்குள்ள இவ்ளோ சின்னப் பிள்ளைக்கு அதுவும் பொட்டப் பிள்ளைக்கு என்ன வேலையா இருக்கும்? ஒரு வேளை யாரும் இல்லாத ஆளுங்களோ…? பிள்ளையைப் பார்த்தா செழிப்பா இருக்கு…காதில கழுத்திலல்லாம் தங்கம் தொங்குது…இப்படியா விவரங்கெட்டத்தனமா பிள்ளையோட கடலுக்குப் போவாங்க…அதென்னமோ ஒரு வகையில சரிதான்… ஊருக்குள்ளதான் பொட்டப் பிள்ளைக துணையில்லாம நகை நட்டோட நடமாட முடியாது. நம்ம கடலில எல்லைப் பிரச்சினை அதிகம் இருக்கறதால கொள்ளைக் காரங்க தொல்லை இருக்காது…பாவம் அந்த அண்ணன்… யாருன்னு தெரியலையே…? ஒழுங்காப் பார்த்திருந்தா துணைக்கு இவனையாச்சும் அனுப்பிருக்கலாம்…ரத்தம் அதிகமாய்ப் போய் மயக்கம் எதுவும் வந்திரக் கூடாதே” என அங்கலாய்த்தவாறே அவசரமாக பெண்களின் தாய்மை உணர்வோடு கடவுளிடமும் கடலைன்னையிடமும் அந்த அண்ணனின் பாதுகாப்புக்கு மனு போட்டது அந்த ஏழை மீனவளின் பரந்த உள்ளம்…   

 

 கன்னத்தில் தட்டியதன் அடையாளமாக கன்னம் சிவக்கத் தொடங்கியதே தவிர பிள்ளை எழுவதாக இல்லை என்றதும் அவளது கவலையும் கவனமும் சிறுமியிடத்தில் குவியத் தொடங்கியது. அவளை அங்கு கரையோரமாக நகர்த்தி நிறுத்தப் பட்டிருந்த போட்டுகளில் ஒன்றில் படுக்க வைத்தவள் கையோடு கொண்டு வந்திருந்த நன்னீரை முகத்தில் தெளித்தவள்  மகனைக் கொஞ்சம் கடல் நீரைச் சேந்தி வரச் செய்து நாவில் அவன் விரலால் தடவினாள். சிறுமி முகம் சுளித்துக் கொண்டே சிணுங்கியதும் சூடான தேநீரைப் பருகத் தந்தவள் சிறுமி தன்னுணர்வுக்கு வந்ததும் நிம்மதியுற்றாள்.

கண் விழித்த சிறுமியிடம் விவரம் கேட்கலாம் என மீனாட்சி நினைக்க இன்னமும் இரவு பிரிந்திராதபோதும் கடலைக் கண்டு கொண்டவள் “நல்ல பிள்ளையாத் தூங்தினா தாலைல தலுவேன்னு அம்மா சொன்ன சல்ப்லைசா…?ட்லைவல் அங்தில் என்தே” எனக் கேட்ட சிறுமியைப் பார்த்துத் திகைத்தாள்.  சிறுமி பேசியதை அவளால் சட்டென்று கிரகித்துக் கொள்ள முடிய வில்லை..இந்தப் பிள்ளை ஒரு வேளை ஸ்ரீலங்காப் பிள்ளையா இருக்கும் போலயே…பேசறதைப் பார்த்தா தமிழ் மாதிரியும் இருக்கு..இல்லாத மாதிரியும் இருக்கு…என எண்ணிப் பயந்தவள் உடனே அச்சிறுமியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முனைந்தாள்.

 

“என் கூட வீட்டுக்கு வா..அம்மா கோவிலுக்குப் போயிருக்காங்க..நல்ல வெளிச்சம் வந்ததும் இவனோட வந்து கடலில விளையாடுவியாம்…” என்றவளை ஏறெடுத்த சிறுமியின் முகம் அருகில் கனிந்து மலர்ந்து வியப்புடன் தன்னை நோக்கியிருந்த அந்த முகத்தில் கூடுதலாக வெளிப்பட்ட நேசமோ, சிநேகத்தன்மையோ ஏதோ ஒன்று அவனிடம் ஈர்த்தது. அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் இல்லத்தை நோக்கிச் செல்லத் தூண்டியது. 

 

அந்த ஒற்றையறை மாளிகைக்குள் நுழைந்த அச்சிறுமியை மழைக்காற்றின் காரணமாக உள்ளே எடுத்துப் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அமரவைத்த மீனாட்சி சூடான இடியாப்பங்களைத் தேங்காய்ச் சீனியுடன் பரிமாறினாள்.சிறுமியின் பசியோ, களைப்போ, பாதுகாப்பான உணர்வோ, எல்லாவற்றிற்கும் மேலாக அவளது விருப்பமான உணவு வகை என்பதோ அவளை வயிறார உண்ண வைத்தது.

 

கொட்டாவி விட்ட சிறுமியை கட்டிலில் மடியில் படுக்க வைத்து அவளை மெல்லத் தட்டிக் கொடுத்தாவாறே, “உனக்கு உங்க அப்பாவை ரொம்பப் பிடிக்குமா..அம்மாவை ரொம்பப் பிடிக்குமா?” என்று கேட்டாள்.

 

“லெண்டுபேலையும்”

 

“உங்க அப்பா பேரென்ன..?”

 

“தண்டாதலன்”

 

“உங்க அம்மா பேரென்ன…?”

 

“பந்தயம்”

 

உறக்கத்தின் பிடியில் இளைப்பாறத் துவங்கிய சிறுமியின் உறக்கம் கலையாத படி தட்டிக் கொடுத்த அவளுக்குத் அது உறக்கத்தின் மிச்சம் அல்ல என்பது தெரியவில்லை. புயல் சின்னம் அறிவிக்கப் பட்டிருக்கும் இவ்வேளையில் நேற்று மாலை அல்லது இன்று அதிகாலை கடலிலிருந்து திரும்பி மீன்களுடன் வந்திருக்க வேண்டிய கணவனைப் பற்றிய கவலையும் அவளுக்கிருந்தது.

 

சிறுமி கூறிய எதுவும் அவளது சிற்றறிவுக்கு எட்டவில்லை. அவளது தந்தையின் பெயரை வைத்தும் அவள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய தமிழின் அழகை வைத்தும் அவள் சிங்களப் பிள்ளை போலும் என எண்ணி அஞ்சியவள் அடுத்து முன்னெடுக்க வேண்டிய காரியங்களைக் குறித்தும் அவற்றைச் செயல்படுத்தும் வேளையில் சிறுமியின் பாதுகாப்பு குறித்தும் அவளுக்குள் தாய்மையின் சுமை எழுந்தது.

 

அவ்வப்பொழுது அண்டை நாட்டில் நிலவும் சூழல் காரணமாக இங்கிருந்து செல்லும் மீனவர்களில் சிலர் இனமான உணர்வு காரணமாகவோ அல்லது பணத்திற்காகவோ சிலரை அழைத்து வருவதுண்டு. அப்படி அழைத்து வரும்போது இவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே காரணம் அவர்கள் வேறேதோ படகில் வந்து கொண்டிருந்தபொழுது விபத்துக் குள்ளாகி இவர்கள் அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்ததாகவே சொல்லுவர்.

 

காப்பாற்றப் பட்டவர்கள் தரும் செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவர்கள் மீதான உள்நாட்டு வெளிநாட்டு விசாரணைகள் முடிந்து அவர்கள் அகதிகள் முகாமிற்கோ அல்லது  வேறு நாட்டிற்கோ இங்கிருந்து செல்லும்பொழுது ஒப்படைப்பர்.அதற்காகக் குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகப் பெற்றுக் கொள்ளும் வழக்கமும் உண்டு. கடலில் நடைபெறும் விபத்துக்களுக்கு சாட்சிகள் கிடைக்காது என்பதும் வருங்காலத்தின் அவர்கள் சந்ததியின் நிம்மதியைத் தேடி உயிரைப் பணயம் வைத்து வரும் அவர்களுக்கு உதவ இவர்களால் மட்டும் இயன்றதற்குக் காரணம் மீனவ மக்களின் ஒற்றுமை மட்டுமே… 

 

இவளது எண்ணவோட்டத்தின்படி அச்சிறுமி வேற்று நாட்டுக் குடிமகளாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக இவர்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்..அவர்கள் வந்து இப்படிப் படகில் வரும் மக்களை அழைத்துச் சென்று விசாரிப்பர். அவளின் தமிழுக்குக் காரணம் அவர்கள் வீட்டில் பள்ளி மற்றும் பழகும் சமூகம் காரணமாக ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பது மீனாட்சியால் யூகிக்க முடியாததாக இருந்தது.   

 

எதுவாக இருப்பினும் அச்சிறுமி வந்தது கணவனின் போட் என்பதுடன் கணவனின் நண்பன் விட்டுச் சென்றான்..அவனுக்கு அடிபட்டிருந்தது..கணவன் இன்னும் வரவில்லை..எனவே அவள் கணவனது வருகைக்காக அல்லது அவனது தகவலுக்காகக் காத்திருந்தவள் மகனிடத்தில் இந்தப் பாப்பாவை நம்ம வீட்டை விட்டு வெளியல கூட்டிட்டுப் போகாதே என்ற எச்சரிக்கையைக் கொடுத்து அவனையும் உறங்கவைத்து விட்டு விடியலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

 

 

 

Advertisement