Advertisement

அத்தியாயம் – 19
மறு நாள் காலை எட்டரை மணி போல் அவள் வீட்டில் இருந்தாள் மாலினி.  அவள் நேரில் வருகை புரிவாள் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை.  அந்த நேரத்தில் சிதார்த்துடன் வீட்டுப் பக்கத்திலிருந்த பூங்காவிற்குச் சென்றிருந்தார் ராம கிருஷ்ணன்.  முந்தைய இரவு சிவாவை முதலில் கௌரியின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயிருந்து சிவா அவன் வீடுப் போய்ச் சேரும் வரை பின் தொடர்ந்து, சிவாவைப் பத்திரமாக வீட்டில் சேர்ப்பித்ததை மாலினிக்குத் தெரிவித்து விட்டு உறங்கச் சென்றவன் பூனாவிலிருந்து மாலினி சென்னை வந்து சேர்ந்த பின்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.  
வீட்டுப் பெண்கள் மட்டும் சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்தனர். காலை உணவு சாப்பிட தயராகிக் கொண்டிருந்தனர். அவள் பையை சோபாவில் வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தபடி அன்னயாவிற்குப் பால் புகட்டிக் கொண்டிருந்த நித்யாவின் அருகே அமர்ந்தாள் மாலினி.  கௌரியின் முகத்தைப் பார்த்தவுடனேயே அவள் தூங்கவில்லை என்று மாலினிக்குத் தெரிந்தது. 
அவளைக் கண்ட அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர் பெண்கள் மூவரும். அனன்யா மட்டும் ஆர்வத்தோடு மாலினியை நோக்கி கை அசைத்தாள்.  முந்தைய இரவு நடந்த விஷயங்கள் எதுவும் அறிந்திராத நித்யா, அதிர்ச்சியிலிருந்து மீண்டு,
“அண்ணி, நீங்க வரப் போறீங்கண்ணு எனக்குத் தெரியவே தெரியாது..அது தெரிஞ்சு தான் நேத்து இராத்திரி கௌரியும் இங்கே வந்திட்டாளா?” என்று கேட்டாள்.
அதற்குப் பதில் சொல்லாமல்,“நேத்து நைட் மீட்டிங்லே நீ இல்லையே? தூங்கிட்டேயா?” என்று சாவகாசமாக அனன்யாவிற்கு விளையாட்டு காட்டியபடி விசாரித்தாள் மாலினி.
“என்ன மீட்டிங்?..குழந்தைங்க இரண்டு பேரும் சீக்கிரமாத் தூங்கிட்டாங்க நானும் அவங்களோட தூங்கிட்டேன்..அவினாஷ் லேட்டா வந்து படுத்துக்கிட்டாங்க.. இப்போவரை தூங்கிக்கிட்டு இருக்காங்க.”
“நேத்து நான் கொடுத்த கியாரண்டியைக் காப்பாற்ற என் தூக்கத்தைத் தூக்கி எறிஞ்சிட்டு கிளம்பி வந்திட்டேன்.” என்ற மாலினியின் விளக்கத்தில் மேலும் குழம்பிப் போனாள் நித்யா.  அப்போது அனன்யா அழ ஆரம்பிக்க, அனன்யாவை தூக்கி அவள் மடியில் வைத்துக் கொண்டாள் மாலினி.
“பசங்களை யார் பார்த்துப்பாங்க?” என்று கேட்டார் மேகலா.
“நேத்து நைட் ஃபோன் செய்து அவங்க அம்மாவை வரச் சொல்லிட்டார் விட்டல்..நான் திரும்பிப் போகறவரை அவங்க பையனை என் மாமியார் பார்த்திப்பாங்க..அவங்க இரண்டு பேரையும் என் இரண்டு பசங்க பார்த்துப்பாங்க..பசங்களை நம்பி அவங்க இரண்டு பேரை விட்டிட்டு வந்திருக்கேன்.” என்றாள் மாலினி.
“ஆபிஸ்”
“அதை என் கூட அழைச்சிட்டு வந்திருக்கேன்..நேரம் கிடைக்கும் போது வேலை செய்வேன்.”
“அண்ணி, அப்போ கௌரி கல்யாணம் வரை நீங்க இங்கே தானா?” என்று கேட்டாள் நித்யா.
“ம்ம்ம்..முதல்லே கௌரியோட ஸ்டோரி அப்புறம் தான் கல்யாண ஸ்டோரி..கரெக்ட்தானே கௌரி?” என்று கேட்டவுடன்,
அதுவரை மௌனமாக இருந்த கௌரி,”அக்கா” என்று குரலை உயர்த்தி பேச ஆரம்பிக்க,” பூனாலேயா இருக்கேன்…உன் பக்கத்திலே தானே இருக்கேன்..எதுக்கு இவ்வளவு சவுண்ட்.” என்றாள் மாலினி.
“அதானே எதுக்கு இப்போ கத்தற கௌரி?” என்றாள் நித்யாவும் மாலினியுடன் சேர்ந்து கொண்டாள்.
”போங்கக்கா..நேத்து நைட்டும் என்னைப் பேச விடலை..இப்போவும் விட மாட்டேங்கறீங்க..நான் ஆபிஸ்க்குக் கிளம்பறேன்.” என்று எழுந்து கொண்டாள் கௌரி.  
“உட்கார்..இன்னைக்கு லீவு போடு.” என்று ஆர்டர் போட்டாள் மாலினி.
உடனே கட்டளைக்கு அடிபணிந்த கௌரி,“நேத்து ஒரு நாள் லீவு எடுத்தாச்சு..இன்னைக்குக் கண்டிப்பாப் போகணும்.”
“சரி..லீவ் எடுக்க வேணாம்..லேட்டா வருவேன்னு சொல்லு.”
“எப்படிக்கா முடியும்? இப்போ பிரமோஷன் வரப் போகுது..நினைச்ச போது லீவ், லேட் எல்லாம் நல்லா இருக்காது.” என்று விளக்கயவுடன்,
“உன்னோட பதவி உயர்வோட பொறுப்பும் கூடப் போகுது இந்த மாதிரி சூழ் நிலைலே  எப்படி இரண்டு குழந்தைங்க இருக்கற சிவாவைக் கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்ட? அந்த வீட்டிலேர்ந்து தினமும் கரெக்ட் டயத்துக்கு உன்னாலே ஆபிஸ் போக முடியுமா? லீவ் எடுக்காம இருக்க முடியுமா? வீட்டையும் ஆபிஸையும் சரிசமமா சமாளிக்க முடியுமா? நம்ம வீட்லே எத்தனை முறை நாம எல்லாரும் மாறி மாறி அம்மாக்காக ஸ்கூலுக்கு, காலேஜுக்கு, ஆபிஸுக்கு லீவு போட்டிருக்கோம்.” என்று பொரிந்தாள் மாலினி.
அந்தக் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்து மௌனமானாள் கௌரி.
அந்த மௌனத்தை உடைக்க,“அந்த மாதிரி பிரச்சனை வர்றத்துக்கு முதல்லே கல்யாணம் நடக்கணும்..உன் கல்யாணத்திலே என்ன பிரச்சனை?” என்று கேட்டாள் மாலினி.
இதுயென்ன புதுசா என்று வியப்பான நித்யா,“என்ன கௌரி இது? நேத்து தானே சிவாகிட்டே எல்லாம் பேசிட்டு வந்தோம்.” என்றாள்.
“நேத்து காலைலே நாம பேசினோம்..சாயங்காலம் அவங்க அக்கா பேசியிருக்காங்க..இராத்திரி இங்கே அழைச்சுக்கிட்டு வந்து வேற மாதிரி பேசினாங்க..இன்னைக்குக் காலைலே அவங்க வீட்லே யார் பேசினாங்களா?..இனிமே எதை மாற்றிப் பேசுவாங்களோ இல்லை வேற என்னத்தை மாற்றச் சொல்லப் போறாங்களோ?” என்று சிவாவின் நிலையில்லாத மன நிலையை விமர்சித்தாள் கௌரி.
“கௌரி, குடும்பம்னா அப்படித் தான் இருக்கும்..யாராவது ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க..சில சமயம் சில முடிவுகளை மத்தவங்களுக்காக எடுக்க வேண்டி வரும்..முக்கியமான விஷயத்திலே நீங்க இரண்டு பேரும்தான் முடிவு எடுக்கணும்..அதை இப்போலேர்ந்து சிவா செய்யறார்… உன் பெயர்லே தான் புதுக் கடையை வாங்கப் போகறதா சொல்லிடாரே.” என்றார் மேகலா.
“எனக்கு அப்படி தோணலை ஆன் ட்டி.அண்ணன் பணம் கொடுக்கப் போறாங்க அதனாலே கடையை என் பெயர்லே வாங்க முடிவு எடுத்திருக்காங்க.”
“அவங்க வீட்லே அப்படியொரு சூழ் நிலையை உருவாக்கிட்டாங்க கௌரி..அதுக்கு அவர் என்ன செய்ய முடியும்?”
“அந்த மாதிரி சூழ் நிலைகளை உருவாக்கறவங்களை எப்படிச் சொந்தமா நினைக்க முடியுது?.. உறவுகலே இல்லாத என்னாலே அவங்க குடும்பத்தோட எப்படி ஒத்துப் போக முடியும்னு முதலே கேட்டாங்க..இப்போ நடக்கறதையெல்லாம் பார்த்து எனக்கும் அந்தச் சந்தேகம் வருது.” என்று விளக்கிய கௌரியின் குரலில் நடுக்கம் இருந்தது.
“சிவாவை ஏன் உனக்குப் பிடிக்குது?” என்று விசாரணையைத் தொடர்ந்தாள் மாலினி.
ஏன் பிடித்தது என்று யோசித்த கௌரி,“கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துக்கறது தப்பில்லைன்னு சொன்னாங்க….தீபா, சூர்யாவை பார்த்துக்க அவங்க மாமியார் வீட்லேர்ந்து எந்த உதவியும் எதிர்பார்க்கலை…அவங்க குழந்தைங்களுக்குக்காக தான் கல்யாணம்னு குழந்தையோட இருக்கறவங்களைக் கல்யாண செய்துக்க தயாரா இருந்தாங்க..அவங்க மனைவிக்குச் சரியான சிகிச்சை கிடைக்காததுக்கு அவங்கதான் காரணம்னு வருத்தப்பட்டாங்க.. 
இதுவரை என்னைக் கல்யாணம் செய்துக்க நினைச்ச ஆண்களைப் போல இல்லாம இவங்க வேற மாதிரி இருக்காங்க..அதான் அவங்களை எனக்குப் பிடிச்சிடுச்சு..ஆனா இப்போ நிலையான மனசு இல்லாத மாதிரி தெரியுது..அடிக்கடி முடிவை மாத்தறாங்க..நானும் அம்மாவைப் போல இதுவரை யாரும் வேணாம்னு தானே இருக்கேன்.. அதான் இவங்களை, இவங்க குடும்பத்தை நினைச்சா தயக்கமா இருக்கு.” என்று அவள் மனதைத் திறந்தாள்.
கடைசிவரை கணவனையும் உறவுகளையும் ஒதுக்கி வைத்த கல்யாணியின் முடிவு தான் கௌரியின் தயக்கத்திற்குக் காரணமென்று மற்ற மூவருக்கும் புரிந்தது.  குடும்பம் என்ற அமைப்பில் இருக்கும் உறவுகளுக்கு உருவங்கள், முகங்கள் இருந்தாலும் உணர்வுகளால் அவை உயிரோட்டம் பெறுவதால் அதன் அளவை அளப்பதோ அதன் வடிவத்தை யுகிப்பதோ இயலாது. அதன் போக்கில் போய் தான் அந்த உயிரோட்டத்தின் வீர்யத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று எப்படிக் கௌரிக்கு விளக்குவது மேகலாவிற்குத் தெரியவில்லை. கௌரியின் குழப்பத்திற்குத் தெளிவான பதிலும் தயக்கத்திற்கு விளக்கமும் கிடைக்காமல் சிவாவுடனான அவள் கல்யாண விஷயத்தைத் தொடர முடியாது என்று உணர்ந்தார்.  
 சில நொடிகள் கழித்து,
”அம்மா, இன்னைக்கு என்ன டிஃபன்?’ என்று விசாரித்தாள் மாலினி.
“இட்லி.”
“சைட் டிஷ் என்ன?”
“நாலு வகை செய்திருக்கு..தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, சாம்பார், வடகறி..இட்லி ரெடியாகிட்டு இருக்கு.”
ஒரு தட்டை எடுத்து அதில் நான்கு விதமான சைட் டிஷையும் பரிமாறி நித்யாவின் முன் வைத்த மாலினி,”சாப்பிடு நித்யா.” என்றாள்.
“இட்லி வைங்க அண்ணி.” என்றாள் நித்யா.
உடனே கௌரியின் புறம் திரும்பி,”குடும்ப நபர்களெல்லாம் சைட் டிஷ் மாதிரி..தேவை ஆனா யாரும் முக்கியமில்லை..ஒண்ணு இல்லைன்னா இன்னொன்னு…புரிஞ்சிடுச்சா?” என்று கேட்டாள்.
‘புரிஞ்சிடுச்சு’ என்று தலையசைத்த கௌரியிடம்,”இப்போ முக்கியமான கேள்வி? இட்லி யார்?”
உடனே கௌரியை முந்திக் கொண்டு,“அவினாஷ்.” என்று பதில் கொடுத்த நித்யா,”அத்தை தேங்காய்ச் சட்னி, நீங்க காரச் சட்னி, மாமா சாம்பார், கௌரி வடகறி..கொஞ்சம் ஜாஸ்தி வேலை வைக்கும்.” என்றாள்.
“அண்ணி.” என்று மறுபடியும் கத்தினாள் கௌரி.
உடனே மேகலா, மாலினி, நித்யா மூவரும் சிரிக்க அவர்களோடு அனன்யாவும் சேர்ந்து கொண்டாள்.
“கல்யாணி அம்மாக்கு இட்லி பிடிக்காமப் போயிடுச்சு அதனாலே மொத்தமா டிஃபன் தட்டையே ஒதுக்கிட்டாங்க..வேற டிஃபனுக்கு மாறியிருக்கலாம் ஆனா அவங்களுக்கு அதிலே விருப்பம் இருக்கலை..இப்போ கல்யாணி அம்மாவை நினைச்சு நீ வீணா உன் மனசைக் குழப்பிக்காதே..சிவா ரைட் சாய்ஸ்ன்னு உனக்கு தோணுது..அதுதான் முக்கியம்.” என்று கௌரியைத் தெளிவுப்படுத்தினாள் மாலினி.
அப்போது அவர்கள் சிரிப்பு சத்தத்தைக்  கேட்டு அவனறையிலிருந்து எழுந்து வந்தான் அவினாஷ்.  சாப்பாடு மேஜையில் மாலினி அமர்ந்திருப்பதைப் பார்த்து,”நீ எப்போ வந்த?”
“அரைமணி நேரமாச்சு..போய் முகத்தை கழுவிக்கிட்டு வா..உன்னோட பேசணும்.” என்று தம்பிக்கும்,”நீ கிளம்பு கௌரி..உன் ஸ்கூட்டியை விட்டிட்டு டாக்ஸிலே ஆபிஸுக்குப் போ.” என்று தங்கைக்கும் ஆர்டர் போட்டாள் மாலினி.
அன்று மதியத்திற்குள் அவினாஷிடமிருந்து சிவாவைப் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டாள்.  அவளுடைய மதிய உணவை முடித்த பின் சுப்ரமணி ஸரிடமிருந்து சிவாவின் கடை முகவரியைப் பெற்றுக் கொண்டு கௌரியின் ஸ்கூட்டியில் புறப்பட்டாள். 
அன்று காலை விடிந்ததிலிருந்து அவன் கல்யாணத்தைப் பற்றி, கௌரியைப் பற்றி  கேட்டு கேட்டு சிவாவை ஒரு வழியாக்கி விட்டார் ஜமுனா.  குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்ற பின் முதல் வேலையாக மகேஷிற்கு ஃபோன் செய்து அம்மா, அப்பாவை அழைத்துச் செல்லும் படி அவனுக்குக் கட்டளையிட்டு விட்டுக் கடைக்கு வந்து சேர்ந்தான் சிவா.
நேற்றிரவு அவினாஷின் வீட்டில் நடந்ததைப் பலமுறை மனத்தில் ஓட்டிப் பார்த்து விட்டான்.  அவனைப் பொறுத்தவரை சரியாக நடந்து கொண்டதாக தான் அவனுக்குத் தோன்றியது.  இனி கௌரி தான் அவள் முடிவைத் தெரிவிக்க வேண்டும்.  அது எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு அதன்பின் அவன் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தான்.  இதே சிந்தனைகளில் ஊழன்று கொண்டிருந்தவனை கைப்பேசியில் அழைத்தார் அவன் மாமா ராஜேந்திரன்.
அவர் அழைப்பை ஏற்றவுடன்,”என்ன மாப்பிள்ளை, பெரிய இடமாப் பார்த்திருக்க..எங்ககிட்டே சொல்லவே இல்லை.” என்றார்.
‘பெரிய இடமா? எதைப் பற்றி பேசுகிறார்?’ என்று யோசித்தவன்,“புரியலை.” என்றவுடன்,
“வேலைக்குப் போகற..மனேஜரா இருக்கற பொண்ணாப் பார்த்திருக்க?” என்று அவர் சொன்னவுடன், கௌரியைப் பற்றி தான் பேசுகிறார் அவன் அம்மாவின் வேலை என்று புரிந்தது.
“எப்போ கல்யாணம்?” என்று அடுத்த கேள்விக்குத் தாவியவுடன்,
“மாமா..இன்னும் எதுவும் முடிவாகலை..முடிவானவுடனே உங்களுக்குச் சொல்றேன்.”
“மாப்பிள்ளை..இரண்டு குழந்தைங்களை வைச்சுக்கிட்டு கஷ்டப்படற உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோஷம் தான்..இப்போ என் கைலே நமக்கு ஏத்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்கு..நம்ம கடையைப் பார்க்கணும்னு சொல்றாங்க..எப்போ அழைச்சுக்கிட்டு வர்றது?” என்று சிவா கணித்தது போல் கடையை விற்பது பற்றி பேசினார் ராஜேந்திரன்.
“மத்தியானமா அழைச்சுக்கிட்டு வாங்க..கடைலே கஸ்டமர்ஸ் கம்மியா இருப்பாங்க..அப்புறம் உங்களோடு நான் கொஞ்சம் பேசணும்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
எப்போதும் போல் வியாபாரம் மந்தமாக இருந்த அந்த மதிய வேளையில் சிவாவும் மனோகரும் மட்டும் கடையில் இருந்தனர்.  மற்ற இரண்டு டிசைனர்களும் உணவருந்த சென்றிருந்தார்கள். இரண்டு பெரிய பேக்கட்டுகளை மனோகரோடு சேர்ந்து நயிலான் கயிறு வைத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருந்தான் சிவா. கடை வாசலில் ஸ்கூட்டி நின்றவுடன் அவன் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து தலை உயர்த்திய போது அது கௌரியின் ஸ்கூட்டி என்று உடனே அடையாளம் கண்டு கொண்டான். ஸ்கூட்டியிலிருந்து இறங்கியவளைப் பார்த்து சமைந்துப் போனான்.
சிவாவின் கடையினுள் நுழைந்தவள்,”ஹலோ..நான் மாலினி..அவினாஷ், கௌரி.” என்று முடிக்குமுன் சுய நிலைக்கு வந்த சிவா,”அக்கா..தெரியும்..நேத்து நைட் வீடியோவிலே சந்திச்சோம்.” என்றான்.
“யெஸ்.உங்களோட பேசணும்..இப்போ வசதிப்படுமா?”
“இதை டெலிவரிக்கு அனுப்பிட்டு வரேன்.” என்று மாலினி அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் காட்டி விட்டு  பேக்கெட்டுகளை வாசலில் இருந்த டெம்போவில் ஏற்றி மனோகரை அனுப்பிவிட்டு வந்தான்.
உள்ளே நுழைந்தவனிடம்,”இது தான் உங்க கடையா?” என்று கேட்டாள் மாலினி.
“என்னோடது மட்டுமில்லைன்னு கொஞ்ச நாள் முன்னாடி தான் புரிஞ்சது.” என்று மாலினியைச் சுத்த விடாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் சிவா.
“தப்பு உங்க மேலே தான்..முதல்லே பங்கைப் பிரிச்சிருக்கணும் இல்லை தனியா வேற இடத்திலே உங்க உழைப்பை உபயோகப்படுத்தி முன்னேறி இருக்கணும்.” என்று மாலினியும் நேரடியாக பேசினாள்.
“இப்போ முப்பத்தியெட்டு வயசுலே கூட அந்த அளவுக்கு அறிவு இல்லை..இருபது வயசுலே எப்படி இருந்திருபேண்ணு யோசிக்கவே பிடிக்கலை.” என்று சொல்லிவிட்டு மௌனமானான் சிவா.
“வேற ஏதாவது தொழில் செய்ய, ஆரம்பிக்க விருப்பம் இருக்கா?” என்று மௌனத்தைக் கலைத்தாள் மாலினி.
“இல்லைங்க..எனக்கு இதுதான் தெரியும்னு நேத்தே அவினாஷ்கிட்டேயும் கௌரிகிட்டேயும் சொல்லிட்டேன்.”
“சரி..புதுக் கடை எந்த ஏரியா?” என்று பழைய விஷயத்தைப் பேசாமல் புது விஷயத்திற்குத் தாவினாள் மாலினி.
“புதுக் கடையை ஸ்கூல் பக்கத்திலே ஸ்டெஷனரி கடையா ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்..இப்போ அதைச் செயல்படுத்த முடியாது..இந்தக் கடையைத் தான் வேற எங்கேயாவது கொண்டு போகணும்.” என்றான் சிவா.
“உங்க வீடு எங்கே?”
“இங்கேயிருந்து இருபது நிமிஷம்.”
“குழந்தைங்களோட ஸ்கூல் ?”
“அது வீட்லேர்ந்து பத்து நிமிஷம்….என் வீட்லேர்ந்து பதினைஞ்சு நிமிஷ தூரத்திலே என் தம்பியும் அக்காவும் இருக்காங்க…இங்கே தான் புதுக் கடையும் பார்க்கணும்..அதுதான் எனக்கு வசதி.” என்று சிவா சொன்னவுடன் அவனின் கைலாசத்தை வேறு விலாசத்திற்கு மாற்ற வேண்டுமென்ற முடிவிற்கு வந்தாள் மாலினி.

Advertisement