மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு. வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக தென்னை மரங்கள் இருந்தன. அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா. கேட்டின் முன்னே ஸ்கூட்டியை கௌரி நிறுத்தியவுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அவினாஷ். அதற்குள் ஸ்கூட்டியிலிருந்து இறங்கி அதை உள்ளே கொண்டு செல்ல கேட்டைத் திறந்தான் சிவா. அவினாஷைத் தொடர்ந்து அவன் ஜாடையில் வந்த வயதானவர் அவன் அப்பா ராம கிருஷ்ணன் என்று புரிந்து கொண்டான் சிவா.
“வாங்க.” என்று சிவாவை அழைத்தவர் நேரே கௌரியின் அருகில் சென்று,”நீ இறங்கு டா..நான் கராஜ்லே நிறுத்திட்டு வரேன்.. ஆன் ட்டி காத்துக்கிட்டு இருக்கா.” என்று கேட்டிற்கு நேரெதிரே வீட்டின் பின்புறத்தில் இருந்த கராஜிற்கு ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றார். மாலை வேளைகளில் அவர்களை சந்திக்க வரும் போது போர்டிக்கோவில் வண்டியை நிறுத்துவது தான் கௌரியின் வழக்கம். இரவு அவர்களுடன் தங்க நேர்ந்தால் தான் வண்டியை கராஜில் விடுவது. இன்று இரவு அங்கே தான் என்று புரிந்து கொண்ட கௌரி அவினாஷைப் பார்க்க அவனும் ஆமாம் என்று அமைதியாக கண்களால் ஆமோதித்தான்.
அவினாஷ், கௌரியுடன் வீட்டினுள் நுழைந்த சிவாவை,”வாங்க .” என்று வரவேற்றார் சோபாவில் அமர்ந்திருந்த மேகலா. இரவு உறக்கத்திற்கு தயாராக இருந்தார்.
“அம்மாவாலே கொஞ்ச நேரம் தான் இருக்க முடியும்..அவங்க மாத்திரை சாப்பிட்டாச்சு..தூங்கப் போகணும்.” என்றான் அவினாஷ்.
“எனக்கு இன்னைக்கே உங்களோட எல்லா விஷயத்தையும் பேசிடணும்னு தோணிச்சு..அதான் என் மனசு மாறற்த்துக்கு முன்னாடி கௌரியையும் அழைச்சுக்கிட்டு வந்திட்டேன்.” என்று சிவா விளக்கம் கொடுக்கும் போது வீட்டிற்குள் நுழைந்தார் ராம கிருஷ்ணன்.
“இதுவரை கௌரி விஷயத்திலே எத்தனை முறை மனசு மாறியிருக்கீங்க?” என்று சிவாவைக் கேட்டுவிட்டு மேகலா அருகில் அமர்ந்து கொண்டார். அந்தக் கேள்வி சிவாவைக் காயப்படுத்தியது.
எதையும் மறைக்கும் நோக்கம் அவனுக்கு இல்லாததால்,”இரண்டு முறை.” என்றான்.
“இனி மாற மாட்டீங்கண்ணு என்ன உத்தரவாதம்?” என்று கேட்டவுடன்,
“இந்த நேரத்திலே இங்கே வந்ததுதான் உத்தரவாதம்.”
“என்ன விஷயமா இத்தனை அவசரமா உங்க வீட்லேர்ந்து கல்யாணம் பேச வர்றத்துக்கு முன்னாடி நீங்க மட்டும் வந்திருக்கீங்க?” என்று ராம கிருஷ்ணன் கேட்டவுடன் சிவாவிற்குத் தயக்கம் ஏற்பட்டது. இன்று காலை கௌரியின் வீட்டில் அவர்கள் எடுத்த அனைத்து முடிவுகளும் இப்போது மறுபரிசீலனைச் செய்ய வேண்டுமென்ற நிலையை எப்படி விளக்குவது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போது,
“கௌரி உங்களைக் கல்யாணம் செய்துக்க விரும்பறா சிவா..அவ விருப்பத்திற்கு மாறா நடக்க எங்களுக்கு விருப்பமில்லை..நீங்க முதல்லே உங்களுக்கு விருப்பமில்லை சொல்லிட்டு இன்னைக்குக் கௌரியைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் அவினாஷ்கிட்டே சொல்லியிருக்கீங்க..அடுத்து உங்களோட அக்காவும் மாமாவும் கல்யாணம் பேச வருவாங்கண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தோம்..இப்போ நீங்க வந்து இருக்கீங்க…என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று அமைதியாகக் கேட்டார் மேகலா.
“காலைலே கௌரி வீட்லே உங்க மகன்கிட்டேயிருந்து பண உதவி ஏத்துக்கறதா சொன்னேன்..இப்போ அதிலே கொஞ்சம் மாற்றம் செய்யணும்..அதை உங்க எல்லார்க்கும் சொல்லிட்டா எங்க வீட்லேர்ந்து கல்யாணம் பேச வரும் போது குழப்பம் ஏதுவும் வராது.. அதான் இப்போ இங்கே வந்திருக்கேன்.”
“சொல்லுங்க என்ன மாற்றம் செய்யணும்?” என்று கேட்டான் அவினாஷ்.
“முதல்லே புதுக் கடை பிக் அப் ஆகறவரை இப்போ இருக்கற கடையையும் நடத்தலாம்னு திட்டம் போட்டிருந்தேன் ஆனா இந்தக் கடையை வித்திடலாம்னு இப்போ முடிவு செய்திருக்கேன்..என் பங்கு ஏழு லட்சம் கிடைக்கும்..கடனை அடைச்சிட்டு அஞ்சு லட்சம் போல கைலே இருக்கும்..அவினாஷ் கொடுக்கறதா சொன்ன பணத்திலே கௌரி பெயர்லே ஒரு கடையை விலைக்கு வாங்கலாம்னு நினைக்கறேன்.” என்றான் சிவா.
“கடைலே அக்காவும் பங்கு வேணும்னு கேட்டுட்டாங்க..என் மாமா ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்லே இருக்கார்.. நல்ல பார்ட்டி கிடைச்ச இப்போ கூட கடையை வாங்க ஆள் அழைச்சுக்கிட்டு வந்திடுவார்..கல்யாணத்திற்குள்ளே கடை வித்துப் போயிடும்னு எனக்குத் தோணுது..என் நினைப்பு தப்பாக்கூட போகலாம்..ஆனா நான் தப்பானவன்னு உங்களுக்கு எண்ணம் வந்திடக் கூடாது..அதான் அப்படி நடந்திட்டா என்ன செய்யலாம்னு யோசனை செய்தேன்..அதைச் செயல்படுத்த இங்கே வந்திட்டேன்.” என்று விளக்கினான் சிவா.
“கௌரி, உனக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று விசாரித்தார் ராம கிருஷ்ணன்.
“இப்போதான் இங்கே வரும் போது சொன்னாங்க.” என்று பதில் சொன்ன கௌரியின் குரலில் தெளிவில்லை.
சிவாவின் வெளிப்படையான பேச்சு, நேர்மையான அணுகுமுறை ராம கிருஷ்ணனிற்குப் பிடித்திருந்தாலும் சொந்த சம்பாத்தியம் இருக்கப் போவதில்லை என்று தெரிந்த பின் எப்படிக் கௌரியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்று யோசனையானார்.
“கடையைக் கௌரி பெயர்லே தான் வாங்குவீங்களா?” என்று அந்தத் தகவலைப் பற்றுக்கோலாக பற்றிக் கொள்ள முயன்றார் மேகலா.
“ஆமாம்….அவ பெயர்லே தான் வாங்கப் போறேன்… நல்ல இடமாத் தேடணும்..நம்ம எல்லார்க்கும் அந்த இடம் பிடிக்கணும்..நம்ம விலைக்குப் படியணும்..இதெல்லாம் கொஞ்சம் டயம் எடுக்கும்.”
“எத்தனை நாளாகும்?” என்று மேகலா கேட்டவுடன்,
“மாசக் கணக்கு ஆகலாம்..இல்லை நாள் கணக்குக்கூட ஆகலாம்..என் மாமாகிட்டேயே சொன்னா வேற இடம் பார்த்துக் கொடுப்பார்.” என்று சொன்ன சிவாவை, ‘நீ நிஜமா?’ என்று ஆச்சரியத்துடன், ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கௌரியினுள் இது அறியாமையா? இவன் அறிவிலியா? என்ற கேள்விகளோடு தயக்கமும் தோன்றியது.
அந்தப் பதிலில் திருப்தியடைந்த மேகலா,“கல்யாணத்தைக் கோவில்லே வைச்சுக்கலாம்னு சொல்லிட்டீங்க… சின்னதா ஒரு ரிஸெப்ஷனாவது வைக்கணும்..எங்களுக்குத் தெரிஞ்சவங்களை..கௌரிகூட வேலை செய்யறவங்களைக் கூப்பிடணும்.” என்று கடை விஷயத்திலிருந்து கல்யாண விஷயத்திற்குத் தாவினார்.
கல்யாண ரிசெப்ஷன் பற்றி யோசிக்கவேயில்லை சிவா. அதனால் அவன் மௌனமாக இருக்க,”அம்மா, இப்போ கடையைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கோம்..அதைப் பற்றி தான் முதல்லே முடிவு செய்யணும்.” என்றான் அவினாஷ்.
“கௌரி, நீ சிவாவைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேண்ணு அவினாஷ் சொன்ன பிறகு உன் விருப்பத்தை மறுக்க முடியலை..சரின்னு சொல்லிட்டேன்..சிவாவை எப்போ கல்யாணம் செய்துக்கணும்னு இப்போ நீ தான் முடிவெடுக்கணும்.” என்றார் ராம கிருஷ்ணன்.
நாளுக்கு நாள் சரிந்து கொண்டிருக்கும் சிவாவின் பொருளாதார நிலையைப் புறக்கணித்து அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பது சரியா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் பெருங்குழப்பத்தில் இருந்தாள் கௌரி. அப்போது கௌரியின் ஃபோனில் வீடியோ அழைப்பு. மாலினி. அந்த அழைப்பைப் புறக்கணிக்க முடியாமல் அதை ஏற்றவுடன்,”ஹாய்..மதியம் உன்கிட்டே பேச முடியலை..சாயந்திரம் அவினாஷ்கிட்டே பேசினேன்…சொல்லு எப்போ கல்யாணம்? “என்று மாறிப் போன சூழ் நிலை தெரியாமல் கௌரியிடம் கேட்டாள் மாலினி.
மாலினியின் கேள்விக்குக் கிடைக்கப் போகும் பதில் தான் அவனிற்கான பதிலும் என்று உணர்ந்த சிவா விழி அகற்றாமல் கௌரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் பார்வையைச் சந்திக்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.
அப்போது கௌரியிடம்,”நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்கேயா? அவினாஷ் சொல்லவேயில்லை.” என்றாள் திரையில் தெரிந்த மாலினி.
உடனே, அவள் ஃபோன் கேமராவைக் கௌரி திருப்பியவுடன் அவள் அப்பா, அம்மா, அவினாஷுடன் சிவாவும் அமர்ந்திருப்பதைக் கண்டாள் மாலினி. அனைவர் முகத்திலும் சந்தோஷத்திற்குப் பதிலாக கவலை குடியிருப்பதைக் கண்டு கொண்டவள்,”வாட் ஹாப்பண்ட்?” என்று கேட்டாள்.
அதற்கு கௌரி பதில் சொல்லுமுன்,”எனக்குத் திடீர்னு சில பிரச்சனைகள் அதனாலே கல்யாணத்தைப் பற்றி முடிவெடுக்க இங்கே வந்திருக்கோம்.” என்று மாலினியின் கேள்விக்குப் பதில் அளித்தான் சிவா.
சில நொடிகள் யோசித்த மாலினி,”நீங்க எல்லாரும் இப்போ போய்த் தூங்குங்க..காலைலே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்..நான் கியாரண்டி.” என்றாள்.
அதைக் கேட்டு “அக்கா.” என்று விளித்த கௌரியிடம்,”போ..போய் நிம்மதியா தூங்கு.. அப்பா, அம்மா நீங்களும்..அவினாஷ், நீ சிவாவை பத்திரமா அவர் வீட்லே கொண்டு போய் விட்டிட்டு எனக்கு மெஸெஜ் அனுப்பு.” என்று கட்டளையிட்டு விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அதன்பின், அவளருகே அமர்ந்திருந்த விட்டலிடம்,”நாளைக்குச் சென்னை போகப் போறேன்.” என்றாள் மாலினி.