Advertisement

அத்தியாயம் – 16
நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம் வருகிறது.  அதிகமாக வெளிபடுத்தப் படாத காதலும் அன்பும் சந்தேகத்தை, சஞ்சலத்தைக் கிளப்புகிறது.  அது பலமுறை வெளிப்படும் போது ஒவ்வொரு முறையும் அளவில்லா சந்தோஷத்தைக் கொடுக்கிறது.  காதல் கொண்டவர்களின் உலகத்தில் கோபம், மெளனம், சலனம், சிணுங்கல், முனகல், குறும்பு என்று அனைத்திற்கும் ஒரே பொருள் தான்… அன்பு.
அனாஹத நிலையை அடைந்தவுடன் நல்ல விதமாக அதன் பயணம் முடிந்து விட்டது என்று சிவா, கௌரி இருவரின் குண்டலினி திறனும் அதற்கு மேல் இருக்கும் விசுத்தி நிலையை அடைய வேண்டுமென்று தெரியாமல் அறியாமையில் திருப்தியடைந்திருந்தன.
அவனின் உணவு விருப்பத்தைக் கேட்க கௌரி மறந்து விட்டாள் என்பதை அவன் சாப்பிட உட்கார்ந்த நொடி வரை சிவாவும் மறந்திருந்தான்.  ஆனால் அது அவன்  நினைவுக்கு வந்த அந்த நொடியில் அவன் மகள்களுக்காகத் தான் இந்த மறுமணம் என்பதை மறந்து போய் கௌரி மட்டும் பிரதானமாகிப் போனாள். பரோட்டா மடிப்புக்களைப் புடவை மடிப்புடன் ஒப்பிட்டு, அவள் மறந்து போனதை சிவா அவளுக்கு நினைவுப்படுத்திய விதத்தில் அவனின் முதல் திருமணம் மறைந்து போக, தீபாவும் சூர்யாவும் மங்கிப் போக, சிவா மட்டும் பிரகாசமானான்.  
அவனின் செயல்முறை சொற்பொழிவு முடிந்தவுடன் புரிந்ததா? என்று கண்களால் சீண்டியவனுக்கு அவன் உவமையைக் கேட்டு அவள் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது தெரியவில்லை. அப்போது,
“கௌரி, சிவா என்ன கடை வைச்சிருக்கார்?” என்று தங்கையைச் சந்தேகம் கேட்டு கௌரியின் கோபத்திற்கு வடிகால் அமைத்துக் கொடுத்தான் அவினாஷ்.
“டிடிபி கடை அண்ணா…ஆனா இவ்வளவு கவனமாப் பரோட்டா மடிப்பை கவனிக்கணும்னா குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது அந்தக் கடைலே தினமும் செலவழிக்கணும்..அது டீ கடையா இல்லை டாஸ்மாக் கடையாண்ணு எனக்குச் சந்தேகமா இருக்கு.” என்றாள் கௌரி.
“டாஸ்மாக்கா? என்ன சிவா..நீங்க சுப்ரமணி ஸர் சிபாரிசுன்னு சில கேள்விகள் வேணாம்னு நான் ஒதுக்கினேன்..இப்போவே சுப்ரமனி ஸரை அழைச்சுக்கிட்டு வரவா? அவர் முன்னாடி ஒரு நேர்காணல் வைச்சுக்கலாமா? என்று அவினாஷும் கௌரியுடன் சேர்ந்து கொண்டான்.
உடனே அவள் மீது கண்டனப் பார்வையை செலுத்திய சிவாவைக் கண்டு கொள்ளாமல் டேபிளில் அவள் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தாள் கௌரி.  அவளின் குற்றச்சாட்டை அவள் வாபஸ் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்தவன்,“எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் கிடையாது..நான் டீ குடிக்கற இடத்திலே மலபார் பரோட்டா செய்யறாங்க…..டீ குடிச்சுக்கிட்டே அவங்க செய்யறதைப் பார்த்துக்கிட்டு இருப்பேன்..அதை இப்போ அப்படியே சொல்லிட்டேன்.” என்றான்.
“உங்க பக்குவத்தைக் கேட்டு நீங்க பரோட்டா மாஸ்டர்னு அண்ணன் நினைச்சிட்டார்.” என்று சிவாவை வார்த்தையால் வாட்டினாள் கௌரி.
“அப்போ ஸ்பெஷல் டீ எப்படிப் போடறதுண்ணு விளக்கம் கொடுத்தா நான் டீ மாஸ்டராயிடுவேனா? என்று சிவாவும் வாக்குவாதத்திற்குத் தயாரானான்.
அவர்களின் விசுத்தி நிலை வேக்கண்ட்டாக இருந்ததால் இருவருக்கும் மற்றவரின் அன்பின் பரிபாஷை அர்த்தமாகவில்லை. காதல் கணவனாகிப் போன சிவாவைக் கௌரிக்கும், மனைவி என்ற மதம் பிடித்திருந்த கௌரியைச் சிவாவிற்கும் அடையாளம் தெரியவில்லை. சிவாவின் கேலியான பேச்சு அவன் அன்பின் வெளிப்பாடு என்று கௌரிக்குப் புரியவில்லை. அவனின் கேலி பேச்சுக்குக் கௌரியின் கோபம் அவள் அன்பின் வெளிப்பாடு என்று அவனுக்கும் புரியவில்லை.
சிவாவிற்குக் கௌரி பதில் கொடுக்கும் முன்,”கௌரி.” என்று தங்கையைக் கண்டித்தான் அவினாஷ். எப்படி என்று தெரியாமல் திடீரென்று சாப்பாடு மேஜையின் தட்ப வெட்ப நிலை மாறிப் போனது. அதன் விளைவாக அங்கே மௌனம் குடியேறியது. 
அந்த மௌனத்தை,”என் அப்பா, அம்மா இரண்டு பேரும் பேராசிரியர்களா வேலை பார்த்தாங்க அதனாலே எங்க வீட்லே சில விதிமுறைகளை ஸ்ட் ரிக்ட்டா கடைபிடிக்கறோம்..அதிலே முக்கியமானது மனுஷனை பிரிக்கற, வித்தியாசப்படுத்தற எந்தக் கொள்கையையும் கடைபிடிக்கக் கூடாதுங்கறது தான்..அதனால் தான் மராட்டி பேசற விட்டல் மாலினியோட கணவரானார், வேற மதத்தை சேர்ந்த நித்யா என் மனைவியானா.” என்று சிவாவுடன் அவன் வீடு பற்றி பகிர்ந்து கொண்டான் அவினாஷ். அதற்கு சிவாவிடமிருந்து பதில் வரவில்லை.
அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் சோபாவில் அமர்ந்து கொண்டனர். டேபிளை சரிச் செய்து கொண்டிருந்த கௌரியை,”கௌரி..இங்கே வா.” என்று அடுத்த கட்ட ஆலோசனைக்கு அழைத்தான் அவினாஷ். 
“அஞ்சு நிமிஷம்.” என்று அவள் வேலைகளை முடித்து விட்டு வந்தவளை அவனருகே அமர வைத்து,
“கைலே எத்தனை கேஷ் வைச்சிருக்கீங்க?” என்று சிவாவிடம் ஆரம்பித்தான் அவினாஷ்.
“ஒரு லட்சம் இருக்கு.”
“எதுக்கு வைச்சிருக்கீங்க?” 
“சின்னதா இன்னொரு ஃளெக்ஸ் பிரிண்டிங் மெஷின் வாங்கலாம்னு ஐடியா இருக்கு..இப்போ சின்ன விழாவிற்குக்கூட  போஸ்டர் அடிக்கற பழக்கம் வந்திடுச்சு..நிறைய டிமாண்ட்..அதுக்குத் தான் சேர்த்துக்கிட்டு வரேன்.”
“இந்தக் கடையை வித்திட்டு உங்க அப்பாக்கும் தம்பிக்கும் பங்கு கொடுத்த பிறகு உங்க கைலே எவ்வளவு தங்கும்.”
“பன்னிரெண்டு லட்சம் போல இருக்கும்.”
“அதே இடத்திலே வாடகைக்குக் கடை எடுத்தா எத்தனை செலவாகும்?”
“மாச வாடகை பத்தாயிரம்..ஒரு வருஷத்தோட வாடகையை முன் பணமாக் கொடுக்கணும்..வேற யாராவது அதிகமாக் கொடுக்க தயாரா இருந்தா எப்போ வேணும்னாலும் காலி செய்யச் சொல்லிடுவாங்க..உத்தரவாதம் கிடையாது.”
“இப்போ மாசம் எவ்வளவு வருமானம் வருது?”
“எல்லாம் ஸீஸனைப் பொறுத்துத் தான்..கல்யாண ஸீஸன்லே அந்த இன்விடேஷன், போஸ்டர் வேலை நிறைய வரும்..ஸ்கூல், காலேஜ் பரீட்சைக்கு முன்னாடி பிராஜெக்ட் வேலை.. அது முடிஞ்ச பிறகு ரிப்போர்ட் கார்ட் வேலை..நடுவுலே சுப்ரமணி ஸர் போல சில பேருக்கு டூர் ப்ரோக்ரம்..அப்புறம் பிஸ்னஸ் கார்ட், விளம்பர நோட்டீஸ்..இந்த மாதிரி போய்கிட்டு இருக்கும்..பிஸி ஸீஸன்லே இரண்டு மணி நேரத்திலே பத்தாயிரம் சம்பாதிப்பேன்.” என்றான்.
“அப்போ ஒரு மாசத்திலே இரண்டு லட்சம் கூட பார்க்கறீங்க.”
“ஒரு லட்சம் மேலே..மூணு பேரை வேலைக்கு வைச்சிருக்கேன்..சாவித்திரி அம்மா பையன் மனோகரைத் தவிர மற்ற இரண்டு பேரும் டிசைனர்ஸ்..மனோகர் தான் நான் இல்லாத போது கடையைப் பார்த்துக்கறான்..டெலிவரிக்கும் போவான்..சம்பளம், மற்ற செலவுகள், என் அப்பாக்குக் கொடுக்க வேண்டியது எல்லாம் கழிச்சிட்டுப் பார்த்தா ஒரு மாசத்திலே அம்பதாயிரம் ரூபா போல கைலே நிக்கும்.”
“உங்கப்பாக்கு எவ்வளவு கொடுக்கறீங்க?”
“வியாபாரம் எப்படி இருந்தாலும் ஒவ்வொரு மாசமும் அவருக்குப் பத்தாயிரம் ரூபாக் கொடுக்கறேன்…அதான் என்னாலே ஒரு லட்சத்திற்கு மேலே சேர்க்க முடியலை..கொஞ்சம் கடன் வேற இருக்கு..அதையும் அடைச்சுக்கிட்டு வரேன்.”
“எவ்வளவு?”
“இரண்டு லட்சம்.”
“யார்கிட்டே கடன் வாங்கியிருக்கீங்க?”
“என் ஸப்ளையர் ஒருத்தருக்குப் பாக்கி வைச்சிருக்கேன்..காயத்ரி போன பிறகு கொஞ்சம் நாள் கடையைச் சரியாக் கவனிக்க முடியலை..அப்போ சேர்ந்து போனதை இப்போவரை என்னாலே முழுசாத்  திருப்பிக் கொடுக்க முடியலை.”
அவர்கள் இருவரின் உரையாடலை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கௌரி.  கடையை விற்றால் அவனுக்குக் கிடைக்கப் போகும் பங்கில் இரண்டு லட்ச ரூபாய் கடனை அடைத்து, வேலை செய்பவர்களுக்கு ஸெட்டில் செய்த பின் கையில் பத்து லட்சத்திற்குக் குறைவாக தான் மிஞ்சும் என்று கணக்குப் போட்டாள்.  அதை வைத்து புதுக் கடையோ, தொழிலோ ஆரம்பிக்க முடியாது என்று தெளிவாக உணர்ந்தாள்.
கௌரியைப் போலவே சிந்தித்துக் கொண்டிருந்த அவினாஷ் சில நிமிடங்கள் கழித்து அவன் விருப்பத்தை வெளியிட்டான்.  அதற்கு சிவாவிடமிருந்து ஆட்சேபம் எழுந்தது.
“இல்லை..வேணாம்..உங்ககிட்டேயிருந்து ஆலோசனை தான் எதிர்பார்க்கறேன்..பண உதவி இல்லை.” என்றான் சிவா.
“உங்களுக்குப் பணத்தைக் கடனாத் தான் கொடுக்கப் போறேன்.”
“இந்தக் கடைலே இதுக்கு மேலே வியாபாரத்தை எப்படி பெருக்கறதுண்ணு புரியலை.. அதனாலே என்னாலே எப்போ உங்க பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும்னு தெரியலை. ”
“நான் கெடு வைச்சுக் கொடுக்கலையே”
“இல்லை..இது சரி வராது..நீங்க ஏதாவது ஐடியா கொடுங்க..ஏத்துக்கறேன்.” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தான் சிவா.
“சரி அண்ணன்கிட்டே இருந்து வேணாம்னா அப்போ ஐடியா, பணம் இரண்டும் நான் கொடுத்தா ஏத்துப்பீங்களா?” என்று கேட்டாள் கௌரி.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான் சிவா. அவனின் அமைதி கௌரிக்குப் பிடிக்கவில்லை.
”இந்த விஷயம் நம்ம கல்யாணத்துக்குப் பிறகு நடந்திருந்தா இப்படித்தான் என் உதவியை ஏத்துக்கத் தயங்குவீங்களா? “ என்று கோபப்பட்டாள்.
உடனே,“அது வேற.” என்று கோபமாக மறுப்புத் தெரிவித்தான் சிவா.
“எனக்கு வித்தியாசம் தெரியலை..இப்போவும் அப்போவும் நான் இதே போல தான் இருப்பேன்..நீங்களும் இதே போல தான் இருக்கப் போறீங்க.” என்று சிவாவை விமர்சித்தவள், “விடுங்க அண்ணா..அவங்க முடிவை நாம எடுக்க முடியாது.” என்று அவினாஷிடம் விட்டேத்தியாகச் சொன்னாள்.
“எப்படி உன் உதவியை அப்படியே நான் ஏத்துக்க முடியும்? எனக்குத் தப்பாப் படுது” என்றான் சிவா.
“ஓகே..தப்பாத் தெரியறதைச் சரி செய்திடறேன்.” என்று சொல்லி வரவேற்பறை அலமாரியிலிருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து வந்தாள் கௌரி.   அதில் சில வரிகளை எழுதி அவினாஷிடம் படிக்கக் கொடுத்தாள்.  அதைப் படித்தவன்,”என்ன கௌரி இது..சிவாகிட்டே கையொப்பம் வாங்கிக்கிட்டுப் பணத்தைக் கடனாக் கொடுக்கப் போறேயா?”
“ஆமாம்.”
“எவ்வளவு?”
“தெரியாது..என் நகையை உங்ககிட்டே கொடுக்கறேன்..அதை வைச்சுக்கிட்டு நீங்க தான் எனக்குப் பணம் கொடுக்கணும்..அதை நான் அவங்களுக்குக் கொடுக்கணும்..நகையோட மதிப்பு பற்றி எனக்கு ஐடியா இல்லை.”
“என்ன உளறல் இது கௌரி?” என்று கடிந்து கொண்டான் அவினாஷ்.
“உங்ககிட்டேயிருந்து அவங்க நேரடியாப் பணம் வாங்கிக்க விரும்பலை..என்கிட்டேயும் நிறைய ரொக்கம் கிடையாது..அதான் என் நகையை உங்ககிட்டே கொடுக்கறேன்.. அதை வைச்சுக்கிட்டு என் மூலமா நீங்க அவங்களுக்குப் பணம் கொடுங்க..உங்ககிட்டேயிருந்து நான் சும்மா வாங்கிக்கிட்ட மாதிரி இருக்காது..பத்திரம்  நடுவுலே இருக்கறதுனாலே நானும்  அவங்களுக்குச் சும்மா கொடுத்த மாதிரி இருக்காது..” என்று அவினாஷை இக்கட்டில் தள்ளினாள் கௌரி.
“சிவாவும் நீயும் உங்க பிரச்சனையைத் தீர்க்க என்னைப் பிரச்சனைலே மாட்டிவிட பார்க்கறீங்களா? சிவா கேட்கற பணத்தை அப்படியே கொடுத்திடறேன்….இந்த விஷயம் நம்ம வீட்லே தெரிய வந்தா என்னை அடிச்சு துவைச்சிடுவாங்க..உன் நகையை நீயே வைச்சிக்கோ.”
“அது சரி வராது.” என்று சொன்ன கௌரி அவள் படுக்கையறைக்குச் சென்று ஒரு சிறிய பையுடன் திரும்பினாள். அதைத் திறந்து அதன் உள்ளேயிருந்த நகைகளை செண்டர் டேபிளில் கொட்டினாள். முதல் முறை கௌரியின் வீட்டிற்குச் சிவா வந்த போது இதே டேபிளில் பார்த்த அதே நகைகள்.  அதைப் பார்த்தவுடன் அவன் மனத்தில் இவளிடம் மொத்தமே இவ்வளவு நகைகள் தானா என்று தோன்றியது.  நகைகளில் இவளுக்கு ஆர்வமில்லையா? என்று எண்ணிக் கொண்டிருந்தவனைக் கலைத்தது அவினாஷின் மறுப்பு.
“கௌரி, என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ? இதையெல்லாம் எடுத்திட்டுப் போய் உள்ளே வை.”
“என்கிட்டே இருக்கறது எல்லாம் கொண்டு வந்திட்டேன்..வைச்சுக்கோங்க..எவ்வளவு பணம் வேணும்னு முடிவு செய்யலாம்.” என்று அவினாஷின் வாயை மூடப் பார்த்தாள். 
“கல்யாணம் போது போட்டுக்க உனக்கு நகை வேணாமா? உள்ளே கொண்டு போய் பத்திரமா வை…. நான் கொடுக்கற பணத்தை எப்படிச் சிவாகிட்டேயிருந்து வாங்கணும்னு எனக்குத் தெரியும்.” என்று கௌரியை அடக்கினான் அவினாஷ்.
உடனே,
“புதுக் கடை ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும்?” என்று சிவாவைக்  கேட்டாள் கௌரி.
“அது இடத்தைப் பொறுத்து..செய்யப் போற தொழிலைப் பொறுத்து.”
“ஃளெக்ஸ் பிரிண்டிங்கைத் தவிர வேற ஏதாவது ஐடியா இருக்கா?”
சில நிமிடங்கள் யோசித்தவன்,”ஏதாவது ஸ்கூல் பக்கத்திலே சின்னதா ஸ்டேஷனரி கடை வைச்சா பிக் அப் ஆகிடும்..ரெகுலரா கஸ்டமர்ஸ் வருவாங்க.” என்றான்.
“அந்த மாதிரி இடம் ஏதாவது யோசிச்சு வைச்சிருக்கீங்களா?”
“இல்லை..இனிமே தான் தேடணும்..இரண்டு கடையைப் பார்த்துக்கணும்னா பக்கத்து பக்கத்திலே இருந்தா தான் முடியும்..காலைலே ஸ்கூல் திறக்கற போது ஸ்டேஷனரி கடை திறந்திருக்கணும், மத்தியானம் ஸ்கூல் முடியும் போதும் கடை திறந்திருக்கணும்..அப்போ தான் மறந்து போனதையும், மறு நாளைக்குத் தேவையானதையும் வாங்கச் சௌகர்யமா இருக்கும்.” என்ற சிவாவின் விளக்கத்தைக் கேட்டு அவனை மெச்சுதலாகப் பார்த்தான் அவினாஷ்.
“சரி..அந்த மாதிரி இடம் பாருங்க….புதுக் கடைக்கு அண்ணன் பணம் கொடுப்பார்..அது நம்ம கடையா மட்டும் இருக்கும்..உங்க தம்பியை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க சொல்லுங்க..அதுவரை மாசா மாசம் உங்கப்பா போல அவருக்கும் ஒரு பங்குக் கொடுத்திடுங்க.”என்றாள் கௌரி.
“அவனுக்குக் கொடுத்திட்டா வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக்கறது?”
“உங்க பணம் தேவையில்லை..கல்யாணத்திற்கு அப்புறம் என் பணத்திலே வீட்டு செலவைச் செய்யலாம்.” ”  என்ற கௌரி பிரித்துப் பேசியது சிவாவை உசுப்பியது.
“கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பளத்திலே தான் குடும்பம் நடக்கப் போகுதுண்ணு சொல்ல வரேயா? உனக்கு அவ்வளவு தான் என் மேலே நம்பிக்கையா? ” என்று அவளை உசுப்பேற்றினான்.
இருவரும் வார்த்தைகளால் மற்றொருவரைக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களின் குண்டலினி திறன் விசுத்தி நிலையை அடைந்திருந்தால் இந்தக் கருத்து வேறுபாடும் அன்பின் வெளிப்பாடு என்று புரிந்திருக்கும். 
அதற்கு மேல் வாக்குவாதத்தை வளர விடாமல் அவன் அருகில் அமர்ந்திருந்த சிவாவின் கையைப் பற்றி,”ப்ளீஸ் இந்தத் திட்டதிற்கு ஒத்துக்கோங்க..இல்லைன்னா இப்போ எனக்கு உதை விழும்..கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு.” என்று அவினாஷ் கேலி பேச, அதைக் கேட்டு,”அண்ணா.” என்று கௌரி ஆத்திரப்பட, அதைக் கேட்டு படுக்கையறைலிருந்து ஓடி வந்த சிதார்த்தும்,”அப்பா” என்று அவினாஷை அதட்ட, உடனே அவனுக்குப் பின்னால் ஓடி வந்த தீபாவும் சூர்யாவும்,”அப்பா” என்று சிவாவைக் கடிய, அதற்கு மேல் தாமதம் செய்யாமல் சிவா, அவினாஷ் இருவரும் கை குலுக்கி அவர்கள் ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டு வந்தனர்.  
திருமணத்திற்குப் பின்னும் சிவா, கௌரி இருவரின் குண்டலினி திறனும் விசுத்தி நிலையை அடையாததினால் மாறிக் கொண்டே இருந்த தாம்பத்யத்தின் தாத்பரியம் புதுமணம் புரிந்தவளுக்கு விளங்கவில்லை அவளை மறுமணம் செய்து கொண்டவனுக்கு விளக்கத் தெரியவில்லை. 
******************************************************
விசுத்தி சக்கரம் – ஐந்தாவது நிலை.. deals with எண்ணங்கள், உணர்வுகளின் வெளிப்பாடு..கதைலே குண்டலினி திறன் அந்த நிலையை அடையாததினால் கோபமாக, அக்கறையாக, சீண்டலாக, உரிமையாக என்று பலவிதமாக உருமாறி வெளிப்படும் அன்பை இருவருக்கும் அடையாளம் தெரியவில்லை..

Advertisement