Advertisement

அத்தியாயம் – 15
அவினாஷின் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சிவாவைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடி வந்த சித்தார்த்,”இந்தாங்க.” என்று அவன் கையிலிருந்த சின்ன பையைக் கௌரியிடம் கொடுத்தான்.  அதனுள்ளே பிரபலமான பேஸ்ட் ரி கடையின் பெட்டி இருந்தது.  சிவாவின் குழந்தைகளுக்கு என்று புரிந்து கொண்ட கௌரி அதை பிரிஜில் வைக்கச் சென்றாள். அவள் பின்னோடு வந்த சிதார்த்திடம்,”பெட் ரூம்லே தீபாவும் சூர்யாவும் இருக்காங்க.” என்று சொன்னவுடன் படுக்கையறை கதவை பலமாக உதைத்து உள்ளே சென்றான் சிதார்த். அப்போது வீட்டினுள் நுழைந்த அவினாஷ்,
“என்ன சிவா? இப்படிச் செய்திட்டீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.
‘அவன் பிரச்சனைகளைக் கௌரியிடம் பகிர்ந்து கொண்டதைப் பற்றி கோபப்படுகிறானா? இல்லை அவன் வாழ்க்கையைக் கௌரியுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்ததைப் பற்றி கோபப்படுகிறானா? அவன் எடுத்த முடிவு கௌரிக்கே சற்று முன் தான் தீபாவின் மூலம் தெரிய வந்தது அதனால் அதைப் பற்றி அவினாஷிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவனுடைய  பணப் பிரச்சனையில் கௌரியை இழுத்து விட்டிருக்கக்கூடாதோ என்று பலவாறு நினைத்துக் கொண்டிருந்தவனிடம்,
“மேகலா யாருன்னு தெரிஞ்சுக்க அடுத்த நாள் காலைலே உங்ககிட்டேயிருந்து ஃபோன் எதிர்பார்த்தேன்.. இப்போ வரை அந்த ஃபோன் கால் வரலை.” என்றான் கடுப்புடன் அவினாஷ்.
மேகலா பற்றி விசாரிக்கவில்லை என்று இவன் ஏன் கடுப்பாக வேண்டும்? என்று அவினாஷைக் குழப்பத்துடன் பார்த்தான் சிவா.  அப்போது அனன்யாவுடன் உள்ளே நுழைந்த நித்யா,
“நீங்க கண்டிப்பா ஃபோன் செய்வீங்கண்ணு என்கிட்டே பந்தயம் கட்டி தோத்துப் போயிட்டார்..அதான் அந்த ஏமாற்றம் உங்க மேலே கோபமா மாறிடுச்சு மேகலா மகனுக்கு.” என்று அவினாஷை அறிமுகப்படுத்தி வைத்தாள் நித்யா.
உடனே,“நித்யமல்லி..” என்று அவினாஷ் கத்த,”என்ன?” என்று நித்யா பயந்து போக,”கட்டின புருஷனைக் காட்டிக் கொடுக்கலாமா?..நியாயமா?” என்று கேட்டான் அவினாஷ்.
“ஐயோ சிவா.. உங்களுக்கு இந்த விஷயம் இன்னும் தெரியாதா?  உங்களைச் சந்திக்க இங்கே வரப் போறோம்னு நேத்து நைட் சொன்னாரு..அதான் உங்களுக்கு எல்லாமும் தெரிஞ்சிருக்கும்னு நான் நினைச்சேன்.” என்றாள் நித்யா.
“நீங்க தான் மேகலாவோட பையனா?” என்று சிவா கேட்க,
“யெஸ்.. ராம கிருஷ்ணன், மேகலாவோட மகன் அவினாஷ் , இவங்க அவங்களோட மருமக நித்யா ஜாஸ்மின், எனக்கு ஒரு மகன் சிதார்த் ஸ்டீவன்ஸ், மக அனன்யா ஜாஸ்மின்…மேகலாவோட மக, என் அக்கா மாலினி பூனாலே இருக்காங்க..அவங்க கணவர் விட்டல் நாயக்..அவங்களுக்கு இரண்டு மகன்கள்..சுமித், வினித்.” என்று அவர்கள் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, கௌரியின் அருகில் சென்று அவள் தோள்களில் கையைப் போட்டு,”இது கௌரி..கல்யாணி அம்மா மக..” என்றான்.
உடனே,”அவங்களுக்குக் கல்யாணி அம்மாவைப் பற்றி தெரியாது.” என்றாள் கௌரி.
“என்னோட சின்ன வயசுலேர்ந்து எங்க வீட்லே வேலை செய்தாங்க..கௌரிக்குப் பதினொரு வயசு இருக்கும் போது எங்க வீட்டோட வந்திட்டாங்க.. எங்க வீட்லே மட்டும் வேலை பார்த்தாங்க.. அப்படியே எங்களோட ஒண்ணாயிட்டாங்க..எங்க குடும்பத்திற்குக் கல்யாணி அம்மா ரொம்ப ஸ்பெஷல் அப்போ அவங்க மக கௌரி எங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்ன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.” என்றான் அவினாஷ்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த சிவாவிற்குப் பதிலாக,”நேத்திலேர்ந்து தான் அம்மாவைப் பற்றி அவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்கிட்டு வரேன்..அது அவங்களுக்குப் போய்ச் சேருதான்னு கூட எனக்குத் தெரியலை.” என்று அவள் சந்தேகத்தைப் பொதுவில் வெளியிட்டாள் கௌரி.
அதைக் கேட்டவுடன் அவள் அம்மாவைப் பற்றி கௌரி சொன்னதை கோத்துப் பார்த்தவனுக்கு அவளுடைய பின்னணி இடி போல் இறங்கியது.  கௌரியின் இன்றைய நிலை அவளுடைய உழைப்பு மட்டும் என்று புரிந்தது. உடனே,
“நேத்தும் இன்னைக்கும் அவங்க அம்மாவைப் பற்றி சில விஷயங்கள் சொன்னா ஆனா என்னோட கவலைகள் நடுவுலே என் கருத்திலே அது சரியாப் பதியலை.”
“உங்க கவலைகளுக்கு அப்புறம் வரேன்..இப்போ என்னோட கவலைகளை நீங்க தீர்க்கணும்.” என்று சொன்னவன் கௌரியை அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தபின் சிவாவுடன் இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டவன்,”நித்யா, நீ குழந்தைகங்களோடு இரு.” என்று அவளைப் படுக்கையறைக்கு அனுப்பி வைத்தான்.
“இன்னைக்கு நான் உங்ககிட்டே எல்லாம் பேசிடணும்னு ஒரு முடிவோட வந்திருக்கேன்…எங்க வீட்லே மாலினி அக்கா, நான், கௌரி மூணு பேரும் உடன்பிறப்பு போல அழுது, சிரிச்சு, சண்டை போட்டு சமாதானமாகி ஒண்ணா வளந்திருக்கோம் ..கல்யாணி அம்மாவோட கடைசி காரியத்தை விட்டல்  தான் செய்தார்..கௌரியோட கல்யாணம் என்னோட பொறுப்புண்ணு எங்கம்மா சொன்ன போது நித்யா ஒரு வார்த்தை மறுத்துப் பேசலை..விட்டல், நித்யா இரண்டு பேரும் கௌரியை வேறயா பார்க்கலை.. 
என்னையும் மாலினியையும் நீங்களும் வேறயா பார்க்கக்கூடாது..நானும் மாலினி அக்காவும் கௌரி வாழ்க்கைலே எப்போதும் இருப்போம்..அதனாலே கௌரிக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லைங்கற எண்ணம், பேச்சு எப்போதும் எங்கேயும் வரக்கூடாது..அந்த மாதிரி வர வாய்ப்பிருக்குண்ணு நினைச்சா இப்போவே சொல்லிடுங்க.. நீங்க கௌரியோட பொருந்த மாட்டீங்க…எங்க குடும்பத்துக்கு ஒத்துவர மாட்டீங்க.” என்று தெளிவாக அவர்கள் குடும்பத்தில் கௌரியின் நிலையையும் அவன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பையும் சிவாவிற்குத் தெரியப்படுத்தினான் அவினாஷ்.
நேற்றே அவன் வீட்டினருக்கு அவளைப் பற்றித் தெரிவித்தவன் இப்போது அவினாஷிற்கு என்ன பதில் கொடுக்கப் போகிறானென்று சிவாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.  
சில நிமிடங்கள் மௌனமாக இருந்த சிவா,”முதல்லே கௌரியைப் பற்றி சொல்லும் போது அவளோட அம்மா சமீபத்திலே தவறிப் போயிட்டாங்க..வேற யாருமில்லைன்னு சுப்ரமணி ஸர் சொன்னார்.” என்றான்.
“கல்யாணி அம்மா எங்க வீட்டுக்குப் பின்னாடி இரண்டு தெரு தள்ளி குடியிருந்தாங்க. அந்த வீடு கௌரியோட ஆயாவோடது.  தூரத்து சொந்தம்.  அவங்க மூலமா தான் கௌரியோட அப்பாக்கு ஊர்லே இரண்டாவது குடும்பம் இருக்குண்ணு கல்யாணி அம்மாக்கு தெரிய வந்திச்சு..அவங்களோட சொந்த தங்கையைக் கல்யாணம் செய்துகிட்டதை இரண்டு குடும்பமும் கல்யாணி அம்மாகிட்டேயிருந்து மறைச்சிட்டாங்க..அன்னைக்கு யாரும் வேணாம்னு தனியா வந்தவங்க கடைசிவரை அவர் கணவரோட, குடும்ப நபர்களோட உறவு வைச்சுக்கலை…
கௌரிக்குக் கல்யாணம் செய்ய முயற்சி எடுத்த போது சில பேர் அவக் கல்யாணத்திலே அவளோட அப்பா கலந்துக்கணும்னு சொன்னாங்க..அதுக்கு கல்யாணி அம்மா உடன்படலை…..எங்க வீட்லே எங்களோட இருந்தவரை கௌரிக்குப் பார்த்த நிறைய வரன்கள் அவங்க எங்க வீட்லே வேலை செய்தவங்கண்ணு தெரிஞ்சவுடனே விலகிப் போயிட்டாங்க..
சில பேருக்குக் கௌரியைப் பிடிச்சிருந்தாலும் வேலைக்காரிங்கற கல்யாணி  அம்மாவோட அடையாளம் அவக் கல்யாணத்துக்கு தடையா இருந்திச்சு..அந்தத் தடையைத் தாண்ட சுப்ரமணி ஸர் மூலம் கௌரியை இந்த ஃபிளாட்டை வாங்கிக் குடி வைச்சோம்..அப்போ இன்னொரு பிரச்சனை வந்திச்சு..இந்தத் தடவை கௌரியாலே..கல்யாணத்துக்குப் பிறகு அவ அம்மாவை அவக்கூட வைச்சுக்கணும்னு ஆசைப்பட்டா அதுக்கு எந்த மாப்பிள்ளையும் ஒத்துக்கலை….இப்போ அவங்க உயிரோட இல்லைங்கறதும் பிரச்சனையா இருக்கு..கௌரிக்கு யாருமில்லைன்னு அவளைக் கல்யாணம் செய்துக்க தயங்கறாங்க..
இந்தச் சூழ் நிலைலே தான் அவ இரண்டாம் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்திருக்கா..எங்க யாருக்கும் அந்த விஷயம் தெரியவே தெரியாது..உங்களை மால்லே சந்திச்சப் பிறகு தான் தெரிய வந்திச்சு..எனக்கு முதல்லே இஷ்டமில்லை ஆனா கௌரிக்கு விருப்பமிருக்குண்ணு தெரிஞ்சவுடனே என் மனசை மாத்திக்கிட்டேன்..என் அப்பாக்கு இப்போவரை இஷ்டம் கிடையாது ஆனா அவரும் கௌரிக்காக ஒத்துப்பாரு..அம்மா மட்டும் உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க ரெடியா இருந்தாங்க..ஆனா நீங்க வேணாம்னு சொன்னதைக் கேட்டிட்டு இனி கௌரி இங்கே இருக்க வேணாம்னு முடிவெடுத்து அவளைப் பூனாக்கு அனுப்ப ஏற்பாடு செய்தாங்க..மாலினி அக்காக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது..கௌரியைப் பூனாலே எதிர்பார்த்திட்டிருக்கா..இப்போ கௌரியைப் பற்றி எல்லாம் தெரிஞ்சிடுச்சு..உங்க முடிவு என்ன?..இனி இந்த விஷயத்திலே எந்தக் குழப்பமும் வேணாம்னுதான் நேரடியா கேட்கறேன்.” என்றான் அவினாஷ்.
கௌரியின் வாழ்க்கை கதையை அவினாஷின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை நேரமும் அவனெதிரே அமர்ந்திருந்த கௌரியைத் தான் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.  கௌரியும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவன் பார்வையிலிருந்து அவன் மனதை அறிய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.  ஆனால் அது பலனளிக்கவில்லை.
   
“நேத்து நைட் என் அப்பா, அம்மாகிட்டே கௌரியைப் பற்றி சொல்லிட்டேன்..கல்யாணம் பேச என் அக்காவும் மாமவும் உங்க வீட்டுக்கு வருவாங்க..ஒரு நல்ல நாள்லே கோவில்லே ஸிம்பிலா கல்யாணத்தை வைச்சுக்கலாம்னு நினைக்கறேன்..இரண்டாவது திருமணம்னு நினைச்சுக்கிட்டு இதைச் சொல்லலை..என்கிட்டே கல்யாணத்துக்குச் செலவழிக்க பணம் கிடையாது..அந்தக் காரணத்திற்காக கௌரியைக் காத்திருக்க வைக்க விருப்பமில்லை.” என்று தெளிவாக அவன் முடிவை வெளியிட்டான் சிவா.
அதைக் கேட்டு கௌரிக்கு மனது நிறைந்து போனது. உடனே அங்கேயிருந்து எழுந்த கொண்டு,”அண்ணா, நீங்க பேசிட்டு இருங்க..நான் குழந்தைங்களைப் பார்த்திட்டு வரேன்.” என்று படுக்கையறைக்குச் சென்றாள்.
கௌரி படுக்கையறையிலிருந்து திரும்பி வந்த போது வாசல் கதவருகில் நின்று அவினாஷுடன் பேசிக் கொண்டிருந்தான் சிவா.  உடனே,
“எங்கே கிளம்பிட்டீங்க? என்று கௌரி கேட்க,
“ஆபிஸ், ஸுகூல் தான் இன்னைக்கு லீவு..கடைக்கு லீவு கிடையாது..ஒரு மணி நேரம் போயிட்டு வந்திடறேன்.” என்று தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.
அவன் திரும்பி வர இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.  குழந்தைகளோடு நித்யாவும் கௌரியும் சாப்பிட்டு முடித்திருந்தனர். சிவாவிற்காகக் காத்திருந்தான் அவினாஷ்.
சிவா வீட்டினுள் நுழைந்தவுடன்,”உங்களுக்காக தான் அண்ணன் காத்திருக்காங்க..வாங்க சாப்பிடலாம்.” என்று அழைத்தாள் கௌரி.
சாப்பாட்டு மேஜையில் அவினாஷுடன் அமர்ந்து கொண்டான் சிவா.  சிம்பிலாக குழந்தைகள் விரும்பிய படி வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, அப்பளம் தயார் செய்திருந்தாள்.  அவினாஷ் வாங்கி வந்திருந்த கேக்குடன் மதிய சாப்பாட்டை முடித்தனர் குழந்தைகள்.
அவன் தட்டில் பிரியாணியைப் பரிமாறியவுடன் கௌரியை நிமிர்ந்து பார்த்த சிவா,”இந்தச் சமையல் யாரோட விருப்பம்.” என்று கேட்டான்.
“குழந்தைங்களோடது..புலாவ், பிரியாணிலே..பிரியாணி தான் ஜெயிச்சது.” என்றான் அவினாஷ்.
அப்போது தான் முந்தையை இரவு சிவாவின் விருப்பத்தைக் கேட்டது கௌரியின் நினைவுக்கு வந்தது.  அவளுக்காக அவன் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான் ஆனால் அவள் தான் அவன் விருப்பத்தைக் கேட்க மறந்து விட்டாள் என்று உணர்ந்து அவனிடம் மன்னிப்புக் கேட்க நினைத்தப் போது, 
”கொஞ்சம் மைதா மாவு அதிலே கொஞ்சம் போல உப்பு, சக்கரை, சோடா சேர்க்கணும்..அப்புறம் ஒரு ஸ்பூன் எண்ணெய், வேணுங்கற அளவுலே தண்ணீர் போட்டு ஸாஃப்டா பந்து போல பிசைஞ்சு ஈரத் துணியை போட்டு மூடி வைக்கணும்..கொஞ்ச நேரம் கழிச்சுத் திரும்ப கொஞ்சம் எண்ணெய் போட்டு பிசையணும்..இது போல கொஞ்சம் கொஞ்சமா எண்ணெய் போட்டு ஜவ்வு மாதிரி பிசைஞ்ச பிறகு கொஞ்சம் போல எடுத்து அதைச் சின்ன பந்து போல உருட்டிக்கணும்..அப்புறம் எண்ணெய் தடவின இடத்திலே சப்பாத்தி கட்டையை வைச்சு மெல்லிசாத் தேய்க்கணும்..அதை ஒரு புறத்திலிருந்து நீள வாக்கிலே புடவை பிளீட் போல மடிச்சுக்கிட்டு வரணும்..மொத்தம் மடிச்ச பிறகு அந்த மடிப்புக் கலையாம உருட்டி கொஞ்ச நேரம் ஈரத் துணி போட்டு மூடி வைச்சிடணும்..தோசை கல்லே நல்லா சூடு செய்திட்டு உருட்டி வைச்சதை மடிப்பு கலையாம சின்ன சின்ன வட்டமா செய்திட்டு அதை அப்படியே கல்லுலே போட்டு எண்ணெய் விட்டிட்டு ஹீட்டை குறைச்சு  பொன்னிறமா இரண்டு புறமும் ஆன பிறகு அதைச் சூடச் சூட அப்படியே தட்டிலே போட்டுக்கிட்டு குர்மாவோட சாப்பிடணும்.” என்று அவன் விருப்பத்தை விரிவாக விளக்கினான் சிவா.
“எதைச் சாப்பிடணும்.” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டான் அவினாஷ்.
“மலபார் பரோட்டா.” என்று பதில் சொன்னவன் சிலையாகிப் போன கௌரியிடம், “புரிஞ்சதா? என்று கண்களால் வினவினான்.
தன்னுடைய இடதுப் பாகத்தை உமையவளுக்குக் கொடுத்த சிவனில்லை இவன் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பவன் என்று வருங்காலக் கணவனை சரியாகப் புரிந்து கொண்டு உஷாரானாள்  வருங்கால மனைவி. 

Advertisement