Advertisement

அத்தியாயம் – 13
அன்று இரவும் சிவசங்கருக்குத் தூங்கா இரவாகிப் போனது.  எப்படி அத்தனை பணத்திற்கு ஏற்பாடு செய்யப் போகிறோம்? யாரிடம் கேட்பது என்ற கவலையில் விடிந்த பின்னும் விழித்திருந்தான். அந்த எண்ணமே அவனுக்கு மனச் சோர்வை ஏற்படுத்த சாவித்திரியம்மாவிற்காக வாசல் கதவைத் திறந்து விட்டு வந்தவன் மறுபடியும் படுக்கையறையில் முடங்கிக் கொண்டான்.
குழந்தைகள் இருவரையும் எழுப்பி பள்ளிக்குத் தயார் செய்ய அறையினுள் வந்த சாவித்திரி அம்மா இன்னுமும் படுக்கையில் படுத்துக் கிடந்த சிவாவிடம்,”என்ன தம்பி? உடம்பு சரியில்லையா? இன்னும் படுத்திருக்கீங்க? என்று விசாரித்தார்.
“ஒரு மாதிரி இருக்கு..இன்னைக்குக் கடைக்கு லேட்டாப் போகலாம்னு நினைக்கறேன்.” என்றவன் அன்று மட்டுமில்லை அதற்கு அடுத்து வந்த நாள்களிலும் இரவு சரியாகத் தூங்க முடியாததினால் கடைக்குத் தாமதமாகச் செல்வது வழக்கமானது.  
காசைப் பற்றிய கவலை கல்யாணத்தைப் பற்றிய கவலையைப் பின்னுக்குத் தள்ளியது. இவனின் மாறிய மன நிலையை அறியாது அவன் நினைவில் சந்தோஷமான மன நிலையில் இருந்தாள் கௌரி.  இரண்டு நாள்கள் அவனின் ஃபோன் காலுக்குக் காத்திருந்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,”அண்ணா, நான் என் வீட்டுக்குப் போறேன்.” என்றாள் அவினாஷிடம்.
“அவசரப்படாதே..கொஞ்சம் பொறுமையா இரு..சிவா ஃபோன் செய்வார்..வேற ஏதாவது முக்கிய வேலை வந்திருக்கும்.”
“அவங்களுக்கு அந்த முக்கிய வேலை முடிஞ்ச பிறகு என் ஞாபகம் வந்திச்சுன்னா உங்களுக்கு ஃபோன் செய்வாங்க..அப்போ நான் என் வீட்லே தான் இருக்கேன்னு அவங்களுக்குத் தகவல் சொல்லிடுங்க.” என்று அவினாஷிடம் சொல்லி விட்டு அவள் வீட்டுக்கு வந்த சேர்ந்த கௌரி ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். சிவாவுடன் அவளின் அடுத்த சந்திப்பு அவர்களின் உறவை நிர்ணயிக்க போகிற கடைசி சந்திப்புயென்று. ஒரு ஸ்திரமான முடிவிற்கு அவனும் வராமல் அவள் முடிவையும் ஸ்திரமாக ஏற்றுக் கொள்ளாமல் அவளையும் அவனோடு அல்லாட வைப்பவனை நினைத்து அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.
என்ன செய்து கடையின் வருமானத்தை பெருக்குவது? என்று ஓயாமல் கடையைப் பற்றிய எண்ணங்களில் ஊழன்று கொண்டிருந்தான் சிவா.  அதன் விளைவாக ஸ்வாதிஷ்டானத்தில் இருந்த அவன் குண்டலினி திறன் அடுத்த நிலையான மணிபூரகத்தை அடைந்தது. ஆனால் அந்த நிலையை சிவாவிற்குச் சாதகமாக மாற்றக்கூடிய சக்தி அதனிடமில்லை.  அதனால் கடையை மாற்றி அமைக்கலாமா? இல்லை கடையை லீஸிற்கு விடலாமா? விற்று விடலாமா? என்று  எப்போதும் மனக்குழப்பத்திலிருந்தான்.
அடுத்து வந்த நாள்களில் காசு விஷயத்தில் ஒரு முடிவிற்கு வர முடியாதவன் கல்யாண விஷயத்தில், கௌரி விஷயத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.  புதைகுழியாக மாறிவிட்ட அவன் வாழ்க்கையில் அவளையும் உள்ளே இழுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் இனி அவளுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாதென்று முடிவு செய்திருந்தான்.
இதை அறியாத கௌரி, அவளையோ அவினாஷையோ அவன் தொடர்புக் கொள்வான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய் எரிச்சல் அடைந்திருந்தாள். அதே மன நிலையில் சில நாள்கள் கழித்து ஒரு மாலை வேளையில் சுப்ரமணியன் ஸரின் மனைவியைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
“அவ வேற வீட்லே வேலைக்குச் சேர்ந்திட்டா கௌரி.” என்று கௌரிக்கு அவள் வேலைக்காரி பற்றி தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார் திருமதி சுப்ரமணி.
“என்னோட ஃபோன் அழைப்பை அவ எடுக்கலை அதான் காரணத்தை தெரிஞ்சுக்கலாம்னு உங்களைப் பார்க்க வந்தேன்..எனக்கு இப்போ கொஞ்ச நாளைக்கு வெளியூர் பயணங்கள் போக வேண்டிய கட்டாயம் அதனாலே வீட்டு வேலைகளைச் செய்ய நேரமில்லை…வேற ஆள் பார்த்துக் கொடுக்க முடியுமா?”
“இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு பூனா போகப் போற. அப்புறம் எதுக்கு வீணா ஆள் போட்டு காசு செலவழிச்சு அதைப் பார்த்துக்கற?
“இங்கே இருக்கும் போது மெயிண்டெயின் செய்யணும்.” 
“சிவா விசாரிச்ச போது நீ மேகலா வீட்டுக்குப் போயிட்டேண்ணு சொன்னேன்.” என்றார்.
“அங்கேயும் கொஞ்ச சாமான் வைச்சிருக்கேன்..இங்கேயும் அங்கேயும் இருப்பேன்.”ன்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.
“ஸர் தான்.” என்று சொல்லி விட்டு வாசல் கதவைத் திறக்கச் சென்றார்.  வாசலில் சுப்ரமணி ஸருடன் சிவா நின்று கொண்டிருந்தான். அவன் கையில் இரண்டு கனமான பாக்கெட்டுகள்.
“உள்ளே வா சிவா..அப்படியே கதவுக்குப் பின்னாலே வைச்சிடு.” என்று அவனுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் சுப்ரமணி. அந்தப் பாக்கெட்டுக்களை அவர் சொன்னபடி கதவிற்குப் பின்னே வைத்துவிட்டு நிமிரிந்தவனின் கண்களில் வீட்டின் உள்புறத்தில் அமர்ந்திருந்த கௌரி தென்பட்டாள்.
இருவரும் ஒருவரையொருவரை உற்றுப் பார்த்தனர்.  கௌரிக்கு சிவாவின் தோற்றம் அதிர்ச்சி அளித்தது.  ஏற்கனவே அவன் உடை விஷயத்தில் கவனமில்லாமல் இருப்பவன் அன்று அவள் கண்களுக்கு மிக மோசமாகத் தெரிந்தான்.  மங்கிய பழுப்பு நிறத்தில் முழுக்கைச் சட்டையும் அதே நிறத்தில்  வேட்டியும் உடுத்தியிருந்தான். கண்களின் அதீத சோர்வு, முகத்தில் தெரிந்த களைப்பு, கவலை எல்லாம் சேர்ந்த கலவை அவனை வியாதிக்காரனாகக் காட்டியது.  என்ன ஆயிற்று இவனுக்கு என்று கவலையானாள் கௌரி. 
கௌரியின் தோற்றமும் உடையும் அவள் மன ஊளைச்சலுக்கு மாறாகத் பிரகாசமாக, தெளிவாக இருந்தது.  கறுப்பு வெள்ளையில் காட்டன் குர்த்தியும் கறுப்பு நிற காட்டன் யோகா பேண்ட்டும் அணிந்திருந்தாள். மாலை நேர நடை பயிற்சியை முடித்துக் கொண்டு திருமதி சுப்ரமணியத்தைச் சந்திக்க வந்திருந்தாள்.  அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு  நல்ல வேளை நல்ல நேரத்தில் இவள் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொண்டோமென்று தோன்றியது. அதே சமயம் கௌரிக்கும் நல்லவேளை இன்றைக்கு இவனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று தோன்றியது.
“ஓர் ஆட்டோவும் மீட்டர் போட ரெடியா இல்லை..அரைமணி நேரம் காத்திருந்தேன்..இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருங்க நானே பைக்லே கொண்டு விடறேன்னு சிவா சொன்னான்..அதான் லேட்டாயிடுச்சு.” என்று சிவாவுடன் வந்ததற்கான காரணத்தை விளக்கினார் சுப்ரமணி.
“எல்லாம் சரியா இருக்கான்னு இன்னொரு முறை செக் செய்திடுங்க ஸர்…நான் வரேன்.” என்று சொல்லிப் புறப்பட இருந்தவனை சுப்ரமணி தடை செய்யுமுன்,”நானும் கிளம்பிட்டேன்..வீட்டுக்கு வந்திட்டுப் போங்க சிவா..நான் இப்போ இங்கே தான் இருக்கேன்.” என்று தகவல் கொடுத்து எந்தவித தயக்கமுமில்லாமல் அவனை அவள் வீட்டிற்கு அழைத்தாள் கௌரி.
உடனே,”இல்லை..நான் கிளம்பறேன்.” என்று மறுத்தான் சிவா.
இவனிடம் கெஞ்ச முடியாது என்று முடிவுக்கு வந்த கௌரி,”என்னைப் பார்க்க நீங்க இரண்டு முறை வீட்டுக்கு வந்தீங்கன்னு அவினாஷ் அண்ணன் சொன்னார்..நான் இங்கே வந்தவுடனே நீங்க விசாரிச்சீங்கண்ணு ஆன் ட்டியும் சொன்னாங்க..அதான் உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டேன்.” என்றாள் கௌரி.
கௌரியைச் சந்திக்க அவள் வீட்டிற்கு இரண்டு முறை வந்தது, ஒரு முறை இங்கே வந்து விசாரித்தது, அதன் பின் அவினாஷிற்கு, அவளுக்கு ஃபோன் செய்தது, அவளைப் பற்றிய விவரத்தை அவன் வீட்டினருக்குத் தெரியப்படுத்த நினைத்தது என்று அத்தனை நிகழ்வும்  நினைவுக்கு வந்து அவனை வதைத்தது. 
இப்போது அவள் அழைப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமென்று யோசித்துக் கொண்டிருந்தவனிடம்,”இப்போ போகலைன்னா இதுக்காக இன்னொரு நாள் இவ்வளவு தூரம் வரணும்..அவ வீட்டுக்குப் போயிட்டுப் போ.” என்று கட்டளை போல் சொன்னார் சுப்ரமணி.  அவருக்கும் சிவாவை நினைத்துக் கவலையாக இருந்தது.  என்ன பிரச்சனை என்று அவரிடம் அவன் பகிர்ந்து கொள்ளவில்லை.  ஒருவேளை அந்தப் பிரச்சனை கௌரியைச் சார்ந்ததோ என்ற சந்தேகத்தில் தான் அவனைக் கௌரி வீட்டிற்குச் செல்லக் கட்டாயப்படுத்தினார்.  இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி ஒரு முடிவிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று என்று அவருக்கும் தோன்றியது.
சுப்ரமணி ஸரை மறுத்துப் பேச மனமில்லாமல்,“சரி.” என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டான் சிவா.
“நான் பைக்லே வரேன்.” என்று சொல்லி அவன் பைக் வைத்திருந்த இடத்திற்கு சென்றான் சிவா.  அவள் பிளாக்கின் முன்னால் ஐந்து நிமிடம் போல் அவன் காத்திருந்த பின் வந்து சேர்ந்தாள் கௌரி.  இருவரும் மௌனமாக மின் தூக்கியில் பயணம் செய்து அவள் ஃபிளாட்டை அடைந்தனர்.  வீட்டினுள் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் எந்தவித தடுமாற்றமுமின்றி கௌரியைத் தொடர்ந்து உள்ளே வந்த சிவா சோபாவில் அமர்ந்து கொண்டான்.  
அவன் அமர்ந்தவுடன் அவனெதிரே தண்ணீர்க் கிளாஸை நீட்டினாள் கௌரி.  அதை வாங்கிக் குடித்தவுடன் சிறிது தெம்பாக உணர்ந்தான்.  
அவனெதிரே அமர்ந்து,“என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான்.
இவன் வாயைத் திறக்கப் போவதில்லையென்று உணர்ந்தவள் அதை வலுக்கட்டாயமாகத் திறக்க அவள் வாயை வாய்க்கால் ஆக்கினாள்.
“முதல்லே ஒத்து வராதுன்னு முகத்துக்கு நேரே சொல்ல வேண்டியது..அப்புறம் வீட்டுக்கு வந்து நேரடியா சந்திச்சு ஏன் ஒத்து வரமாட்டேண்ணு பட்டியல் போட வேண்டியது..அதுக்கு அப்புறம் நான் என்ன அ ந் நியனான்னு வீட்டுக்கு வந்து சண்டை போட வேண்டியது..நான் என் வீட்லே இல்லாத போது என்னைத் தான் பார்க்க வந்தேன்னு ஊர் பூரா சொல்ல வேண்டியது..அர்த்தராத்திரி ஃபோன் செய்து தகவல் சொல்லாம எப்படிப் போவேன்னு கட்டின புருஷனாட்டாம் கேள்விக் கேட்க வேண்டியது..அப்புறம் சுவடே இல்லாமக் காணாம போக வேண்டியது..கடைசியா கண்ணுலே பட்டவுடனே சம்மந்தமில்லாத மாதிரி கழண்டுக்கப் பார்க்க வேண்டியது.. நீங்க உங்க மனசுலே என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? “ என்று கத்தி தீர்த்தாள் கௌரி.
அவள் சொன்ன அனைத்தும் உண்மை என்று உணர்ந்தவன் அமைதியாக,”ஸாரி.” என்றான்.
அவனின் ஸாரி அவளுக்குத் தேவையில்லை.  அவன் செய்கைக்கான காரணம் தான் அவளுக்குத் தேவை.  
அதனால்,”என்ன நடக்குது?” என்று மறுபடியும் விசாரித்தாள்.
“ஒண்ணுமில்லை.”
“பொய்ச் சொல்லாதீங்க..உங்களை நீங்க கண்ணாடிலே பார்த்துக்கிட்டீங்களா..நோயாளியாட்டம் இருக்கீங்க..உடம்பு சரியில்லையா உங்களுக்கு? இல்லை வேற ஏதாச்சும் பிரச்சனையா?” என்று அவளே யுகிக்க,
அதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தவன் மேல் கோபம் பொங்க,”எழுந்திருங்க.” என்று கூச்சல் போட்டாள் கௌரி.
உடனே அவனும் எழுந்து கொள்ள, கதவருகே சென்று அவளுடைய செருப்பை அணிந்தபடி,”எனக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேணாம்..சுப்ரமணி ஸர்கிட்டே போகலாம்….நீங்க செய்ததை அவர்கிட்டே சொல்றேன் அவரே இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும்..அவர் எதிர்லே உங்களுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிடுங்க இரண்டு பேரும் விலகிடலாம்….
உங்ககிட்டே எல்லாத்தையும் வெளிப்படையாதானே சொன்னேன்..உங்களாலே ஏன் என்கூட அப்படி இருக்க முடியலை..ஏன் என்னோட கண்ணாமூச்சி விளையாடறீங்க? நீங்க என்னோட ஃபோன்லே பேசுவீங்க..என்னைப் பார்க்க வீட்டுக்கு வருவீங்கண்ணு எதிர்பார்த்து எதிர்பார்த்து எனக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு.. உங்களோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி வேற யாராவது கிடைச்சிட்டாங்களா? சொல்லித் தொலைங்க.” என்று கோபமாகக் கத்தி விட்டு திரும்பியவளின் கண்களில் கண்ணீருடன் நின்றிருந்த சிவா விழுந்தான்.  உடனே பதைபதைப்புடன் அவனருகே வந்தவள்,
“என்ன ஆயிடுச்சு உங்களுக்கு? என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்க,
“கௌரி, தீபாவையும் சூர்யாவையும் உனக்குத் தத்துக் கொடுத்திடறேன்….என்னோட கல்யாணமெல்லாம் வேணாம்.” என்று அவன் சொன்னவுடன்,
‘என்ன இவங்க இப்படி உளறிக்கிட்டு இருக்காங்க? கொஞ்ச நாள் முன்னாடி தான் பெத்த அப்பன் நான் இருக்கேன்னு சொன்னாங்க..இப்போ எனக்குத் தத்து கொடுக்கறேன்னு சொல்றாங்க.’ என்று யோசித்தபடி மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கௌரியின் கைகளை இறுகப் பற்றியவன்,
“நீ வேணாம்னு சொல்லிட்டா அவங்களை அனாதை ஆஸ்ரமத்திலே தான் சேர்க்கணும்..”என்று அவன் மேலே பேசுமுன் அவன் உளறலைக் ஒரு முடிவிற்குக் கொண்டு வர நினைத்து,
“என்கிட்டே அவங்க வந்த அப்புறம் எனக்கும் ஏதாவது ஆயிடுச்சுன்னா கண்டிப்பா அங்கே தான் சேர்க்கணும்..அதனாலே இப்போவே நீங்க உயிரோட இருக்கறப்ப உங்க கையாலே அந்த நல்ல காரியத்தைச் செய்திடுங்க.” என்று வெகுண்டாள் கௌரி.  
அதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்த சிவா,”இனி என்னாலே மறுமணத்தைப் பற்றி யோசிக்க முடியாது..அவங்களை என்னாலே தனியா பார்த்துக்க முடியலைன்னா வேற என்ன செய்யறது கௌரி? “ என்று பிரச்சனையை சொல்லாமல் அவளிடம் தீரவைக் கேட்டவனை மறுபடியும் சோபாவில் உட்கார்த்தி வைத்து விட்டு அவனருகே அமர்ந்தவள்,
“நீங்க சொல்ற இந்தக் கதை நம்ம நாட்லே இருக்கற கோடிக்கணக்கான பெண்களோட கதை..வீட்டு வேலைக்கு வர்ற முக்காவாசி பெண்களோட நிலை..விதவை, கல்யாணம் செய்துக்காம ஏமாற்றப்பட்டவங்க, வேற கல்யாணம் செய்துகிட்டதுனாலே ஏமாற்றமடைந்தவங்க, கல்யாணமே செய்யாம குடித்தனம் செய்யறவங்க….இந்த மாதிரி குடும்ப அமைப்புலே இருக்கறவங்க அவங்க குழந்தைகளை அனாதை ஆஸ்ரமத்திலே விடறாங்களா? சொந்த கால்லே நின்னு கிடைக்கற பணத்திலே குழந்தைங்களுக்குச் சோறு போடறதில்லே?..படிக்க வைக்கறதில்லே? தைரியமா வாழ்க்கையை நடத்தறதில்லே..
எங்கம்மாவும் அந்தக் கோடிலே ஒருத்தியா இருந்தாங்க.. என்னை அனாதை ஆஸ்ரமத்திலே விட்டாங்களா? அவங்கக்கூட வைச்சுக்கலே..நாங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கலே.” என்று  குமுறினாள் கௌரி.
அதற்கு சிவாவிடம் எந்த எதிரொலியும் இல்லை. அதனால் அவள் அம்மாவைப் பற்றி அவள் சொன்னது அவனைச் சென்றடைந்ததா என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவள் கோபத்தை, வேகத்தைக் குறைத்துக் கொண்டு,
“என்ன ஆயிடுச்சு? ஏன் இப்படி ஓய்ஞ்சு போய் இருக்கீங்க?’ என்று மீண்டும் விசாரிக்க, இப்போது சிறிது இயல்பாயிருந்த சிவா,
“எல்லாத்தையும் சமாளிக்கறேன் ஆனா எதையுமே சரியாச் செய்ய முயற்சி செய்யறதில்லை..காயத் ரியை இன்னும் நல்ல ஆஸ்பத்திரிலே சேர்த்து வைத்தியம் பார்த்திருக்கணும்..நான் அந்த நேரத்திலே அசிரத்தையா இருந்ததுனாலே தான் இப்போ என் குழந்தைங்க அம்மா இல்லாம கஷ்டப்படறாங்க..நான் தான் சரியில்லை..என்னாலே தான் பிரச்சனையாகுது.” என்றான் மணிப்பூரகச் சக்கரத்தைச் சரியான திசையில் சுழற்றாத குண்டலினி திறனால் அவனுடைய சுயமரியாதையை, சுய மதிப்பை தொலைத்துக் கோழையாகியிருந்தவன். 
அவன் சொன்னதைக் கேட்டு ஏதோ பெரிய பிரச்சனை சிவாவிற்கு என்று உணர்ந்த கௌரி,
“நீங்க தானே கொஞ்ச நாள் முன்னாடி பெத்த அப்பா நீங்க இருக்கும் போது வேற யார் என் குழந்தைகளைப் பார்த்துக்கணும்னு கேட்டீங்க? இப்போ திடீர்னு ஏன் உங்க மேலே நீங்களே இப்படிச் சந்தேகப்படறீங்க?”
“நல்ல அப்பாவா இருந்தா காயத்ரியோட வீட்டுக்கு போய் பணம் கேட்டிருப்பேன்..இல்லை என்னாலே என் பொண்ணுங்களைப் பார்த்துக்க முடியலை நீங்களே பார்த்துக்கோங்கன்னு அவங்ககிட்டேயே ஒப்படைச்சிருப்பேன்..எதுவுமே செய்யாம ஒரு கடையை வைச்சுக்கிட்டு அதுலே வர்ற வருமானதில்லே இன்னொரு கல்யாணம் செய்துக்க நினைக்கறது, அந்தக் குடும்பத்தையும் பராமரிக்க நினைக்கறது பிரச்சனையில்லாம வேற என்ன? என் குடும்பத்தைப் பார்த்துக்க முடியாத நான் எதுக்கு மறுபடியும் கல்யாணம் செய்துகிட்டு இன்னொரு குடும்பத்தை என் பிரச்சனைலே இழுக்கணும்?” என்று அவனைப் புதுமணம் செய்து கொள்ள விரும்பியவளிடமே கேட்டான் சிவா.
“உங்க பொருளாதார நிலையைச் சொல்லித்தானே நீங்க கல்யாணம் பேசினீங்க? அதைப் புரிஞ்சுகிட்டவங்க தானே உங்களைக் கல்யாணம் செய்துக்க போறாங்க..இதுலே என்ன பிரச்சனை?”
“அது அப்போ..இப்போ இல்லை.”
“இப்போ என்ன மாறிப் போயிடுச்சு.. சொல்லுங்க.”
“கடையை விற்கப் போறேன்.”
“ விற்கப் போறீங்களா?  வித்திட்டு என்ன செய்யப் போறீங்க?”
“வேற வழி இல்லை..என்ன செய்யப் போறேண்ணு தெரியலை..வேற எதுவும் தெரியாது.”
“அப்போ எதுக்கு விக்கறீங்க? வியாபாரம்னா முன்னே பின்னே தானே இருக்கும்..சமாளிக்க முடியாதா?”
“வியாபாரம் நிதானமா தான் இருக்கு..வருமானமும்.. அதுதான் பிரச்சனையா இருக்கு.”
“வேற ஏதாவது செய்து வருமானத்தைப் பெருக்கப் பாருங்க..அதுக்கு எதுக்குக் கடையை விக்கணும்?”
“வேற எப்படி அப்பாக்கும் மகேஷுக்கும் பங்கு கொடுக்க முடியும்?”
இவனிடம் பங்கு கேட்கிறார்களா? மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளோடு போராடிக் கொண்டிருக்கும் இவனிடம் கடையில் பங்கு கேட்கிறார்களா? என்று ஆச்சர்யமானாள் கௌரி.

Advertisement