Advertisement

புதுமணம் : மறுமணம் – எபிலாக்
சில வருடங்கள் கழித்து,
சென்னை விமான நிலையம்,
புறப்பாடு பகுதியில், வரிசையாக இருந்த நாற்காலிகளில், கௌரி, நித்யா, தீபா, சூர்யா, அனன்யா அமர்ந்திருந்தனர்.  கௌரியின் கைப்பேசியில் பிஸியாக இருந்தாள் தீபா. சூர்யா, அனன்யா இருவரும் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நேரெதிர் வரிசையில் அமர்ந்திருந்தார் ராமகிருஷ்ணன்.
இரண்டு வரிசைகளுக்கு இடையே இருந்த இடைவெளியில், சிதார்த், அவினாஷுடன் விளையாடிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். கௌரிசங்கரின் மகன்.
வேக, வேகமாக ராம கிருஷ்ணன் இருக்குமிடம் நடந்து சென்றவன், அவர் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.  அவன் பின்னே வந்த சிதார்த் அவனைத் தூக்கியவுடன், தலையைத் தூக்கிச் சிரித்தான். 
சற்று தள்ளி கண்ணாடி சாளரத்தின் வழியே, வெளியே தெரிந்த விமானங்களைப் வேடிக்கை பார்த்தபடி, மனோகருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான் சிவா.
“அப்பா, இவன் உங்களைத் தேட மாட்டானா?” என்று கார்த்திக்கை காட்டிக் கேட்டான் அவினாஷ்.
“தேடுவான் டா.”
அப்போது அவரருகில் வந்தமர்ந்த சூர்யா,”தாத்தா, இந்தப் புக்லே, நாம டிவிலே சிம்பான்ஸி பார்த்தோமே அதோட படம் போட்டு, எல்லா விவரமும் கொடுத்திருக்காங்க.” என்றாள். 
அந்தப் புத்தகத்தை அவன் கடையிலிருந்து எடுத்து வந்திருந்தான் சிவா.  கோச்சிங்கிற்கு வந்த மாணவர்களின் கோரிக்கையின் பேரில், இப்போது, அவன் கடையில் பொது அறிவுப் புத்தங்களை விற்க ஆரம்பித்திருந்தான். அதே போல், அந்தக் கோச்சிங் நிலையத்தார்க்குக் காண்ட் ராக்ட் அடிப்படையில் புத்தகம் அச்சடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறான். அவன் கடைக்கு வரும் எல்லா விதமான வேலைகளையும் ஏற்றுக் கொண்டு, புது கலைகளைக் கற்றுக் கொண்டு, ஒரே கடையில் பலவிதமான தொழில்கள் செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.
தினமும், ,காலையில் சிவாவுடன் சில மணி நேரம் அவன் கடையில் செலவழித்து விட்டு, மதியம் போல் வீடு திரும்புவார் ராம கிருஷ்ணன். அதன் பின் கௌரி ஆபிஸ்லிருந்து வரும் வரை, தீபா, சூர்யா இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பது, மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து பார்க் போவது, டி வி பார்ப்பது என்று பொழுதைப் போக்குவார்.
“அப்பா, இவ ஒத்துக்கிட்டாளா?” சூர்யாவைக் காட்டிக் கேட்டான் அவினாஷ்.
“இல்லை டா.”
அப்போது அங்கே வந்த தீபா,”தாத்தா, நீங்க பூனாலே டூ டேஸ் தான் இருக்க போறீங்கண்ணு பெரியம்மாக்கு மெசெஜ் அனுப்பிட்டேன்.” என்றாள்.
“உன்னோட பெரியம்மா ஒத்துக்க மாட்டா..சண்டைக்கு வருவா..அவளும் உங்கம்மாவும் சேர்ந்து என்னோட எல்லாத்துக்கும் சண்டை போடுவாங்க.” என்று தீபாவிற்குத் தெரிவித்தான் அவினாஷ்.
“பெரிம்மாவோட சண்டை வேணாம்னா அதை ஃபோர் டேஸ் ஆக்கிடுங்க மாமா.” என்றாள் தீபா.
‘நான் எதற்கு அதை நான்கு நாள்கள் ஆக்க வேண்டும்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான் அவினாஷ்.
அப்போது அங்கே வந்த சிவாவிடம்,”தாத்தா, நம்ம வீட்லே தான் இருக்கப் போறாங்க..டூ டேஸ் மட்டும் தான் பூனாலே..மாமாவும் ஒத்துக்கிட்டா நாலு நாள் இருக்கட்டும்.” என்றாள்.
“என்னை விட்டிடு..நீ ஆச்சு,உன் மாமா ஆச்சு, உன் பெரியம்மா ஆச்சு.” என்றான் சிவா.
அப்போது தான் தீபாவின் முழுத் திட்டம் அவினாஷிற்குப் புரிந்தது.
“என்னோட இரண்டு நாள் கோட்டாவை நீ பெரிம்மாக்கு அலாட் செய்திட்டேயா?” என்று தீபாவிடம் சண்டைக்கு வந்தான் அவினாஷ்.
“ம்ம்..தாத்தா எப்போதும் போல எங்களோட அஞ்சு டேஸ் இருப்பாங்க..உங்க வீட்லே ஸடர்டே, ஸ்னடே மட்டும்..பூனாலேர்ந்து திரும்பி வந்த பிறகு எங்களோட ஒரு வாரம் முழுக்க இருக்கணும்..ஏன்னா உங்க டூ டேஸ் பெரிம்மா வீட்லே போயிடும்.” என்று அவினாஷிற்கு விளக்கியவள், ராம கிருஷ்ணனின் கையைப் பிட்டித்துக் கொண்டு,”கணக்கு கரெக்ட் தானே தாத்தா?” என்று உறுதி செய்து கொண்டாள்.
தீபாவை அணைத்து,”கரெக்ட்..அண்ட் உன் ஐடியா தான் பெஸ்ட் டா..மாமாவும், பெரியம்மாவும் சண்டை போட்டுக்கட்டும்.” என்றார். அந்த நேரத்தில் தீபா, சூர்யா, கார்த்திக் மூவரும் ராம கிருஷ்ணனை சூழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்தக் குழந்தைங்களின் தாத்தா, தாத்தா என்று அன்பு தான் அவன் அம்மாவின் பிரிவிலிருந்து அவரை மீட்டிருக்கிறது. கார்த்திக் பிறந்த சில மாதங்களில், உறக்கத்திலேயே, அவர்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்தார் மேகலா.  அந்த நேரத்தில் கௌரியும் சிவாவும் தான் ராம கிருஷ்ணனுக்குத் துணையாக இருந்தனர்.  இப்போதும் துணையாக இருக்கின்றனர்.  அவன் இந்தியா திரும்பிச் சில மாதங்கள் தான் ஆகிறது. அவனுடன் அவன் அப்பாவை அனுப்பி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர் தீபாவும் சூர்யாவும்.  வார இறுதியில் அவனைச் சந்திப்பதற்கு அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுக் கொண்டு தான் அவர்களுடைய வீட்டிற்கு வருக்கிறார் ராம கிருஷ்ணன். 
போன முறை அவர்கள் அனைவரும் ஒன்றாக விடுமுறையைக் கழித்த போது, மேகலாவும் இருந்தார். அதன் பின் இப்போது தான் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.  முதலில் பூனாவிற்குப் பயணம்.  அதன் பின் அங்கேயிருந்து எங்கே என்று இதுவரை தெரியவில்லை.  அதை இரகசியமாக வைத்திருக்கிறாள் மாலினி.  இடத்தை தெரிவிக்காமல் பணத்தை ம்ட்டும் சிவாவிடமிருந்து கறந்து விட்டாள். இது சிவாவினுடைய டிரீட்.  அவினாஷிற்குத் திருப்பித் தர வேண்டிய தொகையில் பாக்கி இருந்தாலும், இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று கௌரியும் மாலினியும் போர்க் கொடித் தூக்கியிருந்தார்கள். 
கல்யாணமான முதல் வருடத்தைக் கொண்டாட, அவன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற, குடும்பத்துடன் மலபார் சென்று வந்தான் சிவா.  அதே வருடத்தில் தான் கார்த்திக்கின் வரவு.  அதன் பின் அவன் முதல் பிறந்த நாள் என்று இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இப்போது தான் அவன் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிவாவும் அவினாஷும் அவரவர் யோசனையில் இருந்த போது,
“அம்மா” என்று அழைத்து, கௌரி இருக்குமிடம் ஓடிச் சென்றான் கார்த்திக்.  
அதைப் பார்த்து,“அப்பா, செம ஃபாஸ்ட்டா நடக்கறான்.” என்றான் சிதார்த்.
“நடக்கலை டா..ஓடறான்.” என்று அவினாஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கௌரியை அடையும் முன், வழுக்கி தரையில் விழுந்தான் கார்த்திக்.  உடனே, அஞ்சு பெரியவர்களும், நாலு சிறியவர்களும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். அத்தனை பேரையும் பார்த்து, அழாமல், அழகாகச் சிரித்தான் கார்த்திக்.
“இவனுக்குக் கூட்டம் பிடிக்குது.” என்றான் அவினாஷ்.
பிறந்ததிலிருந்து உற்றார், உறவினர் கூட்டத்தின் நடுவே தான் வளர்ந்து வருகிறான் கார்த்திக்.  எப்போதும் அவனுடன் இருக்கும் சாவித்திரி அம்மாவைத் தவிர மாலினி, சாந்தி, திருமதி சுப்ரமணி என்று ஒவ்வொருவரும் முறை வைத்துக் கொண்டு அவனைக் காண வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.  அவர்களோடு அவர்களின் குழந்தைங்களும் சேர்ந்து கொண்டால், அவனுக்குக் கொண்டாட்டம் தான்.
அவனுக்குக் கார்த்திகேயன் என்று பெயர் வைத்ததே சுப்ரமணி ஸர் தான்.  அதில் ஜமுனாவிற்கு ஏகப்பட்ட வருத்தம்.  அவர் கணித்தபடி விஜிக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை.  மாறாக, குறை இருக்கக்கூடும் என்று குறை சொன்ன மருமகளுக்குத் தான் அவர்கள் குலத்தின் வாரிசு உண்டானது.  மகேஷ், விஜியுடன் நிரந்தரமாக இருக்க வேண்டிய கட்டாயத்தை அவராகவே ஏற்படுத்திக் கொண்டு விட்டார் என்று காலம் கடந்து  உணர்ந்த போது, ஒரே பேரன் என்று அவர் உரிமை கொண்டாட முடியாதபடி மூத்த மகனின் குடும்பம் விலகி போயிருந்ததையும் உணர்ந்தார். 
கீழே விழுந்த கார்த்திக்கை கௌரி தூக்கிக் கொண்டவுடன், அவளை அணைத்து, அவள் தோளில் முகம் புதைத்துக் கொண்டான் கார்த்திக்.
“அவன் தூங்கட்டும் கௌரி..இங்கே வந்ததிலிருந்து ஓடி ஓடி என்னை பெண்டு நிமித்திட்டான்.” என்றான் அவினாஷ்.
“இதுக்கே இப்படிச் சொல்றீங்க..போகற இடத்திலே நீங்க தான் அவனைப் பார்த்துக்கணும்..நாங்க மூணு பேரும் எதுவும் செய்யப் போகறதில்லை.” என்றாள் நித்யா.
அதில் லேசாக கலவரமான அவினாஷ்,”எங்கே போறோம் சிவா..கடல் மணல்லே இவன் பின்னாடி என்னை ஓட வைச்சுடாதீங்க.” என்றான்.
அதைக் கேட்டு,”கடலா?” என்று அதிர்ந்தான் சிவா.
“உங்களுக்கு இன்னும் கௌரியைப் பற்றி விவரம் பத்தலை..கடலைத் தாண்டி இவளும், இவ அக்காவும் யோசிக்கவே மாட்டாங்க..அவங்க இரண்டு பேரைத் தாண்டி நீங்களும், விட்டலும் யோசிக்க மாட்டீங்க..அதனாலே இந்தமுறையும் கடற்கரை தான்னு நினைக்கறேன்.” என்றான்.
“அவினாஷ் சொல்றது நிஜமா?” என்று கௌரியைக் கேட்டான் சிவா.
அவன் கண்களைச் சந்திக்காமல் போக்குக் காட்டினாள் கௌரி.  அதைப் பார்த்து, அவன் கணிப்பு நிஜம் என்று உணர்ந்த அவினாஷ்,”உங்களையும் விட்டலையும் வைச்சுக்கிட்டு நான் என்ன செய்ய? எத்தனை ஆவலா இருந்தேன்..கடைசிலே மறுபடியும் கடலா?” என்று கடுப்பானான்.
“சரி..நானும், விட்டலும் தான் வேஸ்ட்..நீங்க திறமைசாலி..அடுத்த டி ரீட் உங்களோடது..என்ன கௌரி, நான் சொன்னது சரி தானே.” என்று அடுத்த விடுமுறையை அவினாஷின் பொறுப்பு என்று அறிவித்த சிவா, அவன் மனைவியின் அபிப்பிராயத்தைக் கேட்டான்.
அதற்கு, கௌரி பதில் சொல்லுமுன்,”நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் மாப்பிள்ளை..இவன் திறமையைச் சோதிச்சுப் பார்க்கற நேரம் வந்திடுச்சு..இவன் எத்தனை பேரைத் தாண்டி யோசிக்கறான்னு பார்க்கலாம்.” என்று சிவாவிற்கு ஆதரவாகப் பேசினார் ராம கிருஷ்ணன்.
“அப்பா?” என்று அலறினான் அவினாஷ்.
“என்னைக் கடலுக்கு அழைச்சிட்டுப் போகணும்னு நான்தான் டா சொன்னேன்..என் இரண்டு பொண்ணுங்களை ஏதாவது சொன்ன, உன்னைத் தொலைச்சிடுவேன்.” என்று போலியாக மிரட்டினார் ராம கிருஷ்ணன்.  
“உங்களை எப்படிப் அப்பா மறந்து போனேன்.” என்று அவன் மண்டியில் அடித்துக் கொண்டான் அவினாஷ்.
அதைக் கேட்டு குழந்தைகளும், பெரியவர்களும் சிரித்தனர். அதுவரை அவன் அம்மாவின் தோளில் சாய்ந்திருந்த கார்த்திக்கும், கை கொட்டிச் சிரித்தான். அதைப் பார்த்து, அந்தப் புறப்பாடு வாயிலருகே அமர்ந்திருந்த அனைவரின்  முகத்திலும் புன்சிரிப்பு குடியேறியது.
அந்த நொடி,  அவர்கள் மகனுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அவன் மனைவி, கௌரி லக்ஷ்மி, சிவசங்கரின் கண்களுக்கு மனோரத பூர்த்தி கௌரியாக தெரிந்தாள். 
***************************************
மனோரதபூர்த்தி கௌரி- விரும்பியவற்றைத்  தகுதியானவர்களுக்கு வழங்கும் தேவி. மாயவரம் அபயாம்பிகை இவளது அம்சம் ஆகும்.
**********************************
Readers,
மீண்டுமொரு மாய வலையைப் பின்ன எனக்கு உற்சாகமும், உதவேகமும் கொடுத்த உங்கள் அனைவர்க்கும் நன்றிகள் பல.  Yet another magical journey, thanks to each of you..stay blessed..

Advertisement