Advertisement

அத்தியாயம் – 39_2
அப்பா, பெரிய மகளின் பேச்சில் கலந்து கொள்ளாமல், சூர்யாவை எழுப்பும் முயற்சியில் இறங்கினாள் கௌரி. அவள் லேசில் விழிப்பதாக இல்லை.  அதனால், அவளைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்று முகத்தைக் கழுவி விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்தாள். பாத் ரூமிலிருந்து வந்தவுடன், மறுபடியும் தூங்க வேண்டுமென்று சிணுங்கியவளை, கௌரி அதட்ட, பெரிதாக அழ ஆரம்பித்தாள் சூர்யா. 
“சாப்பாடு வரப் போகுது..தூங்கக்கூடாது..சாப்பிட்டு முடிச்சிட்டுத் தான் தூங்கணும்.” என்று கண்டிப்புடன் சொன்னாள் கௌரி.
அதற்குச் ‘சரி’ என்று தலையசைத்து விட்டு, படுத்துக் கொண்டிருந்த அவள் அக்காவின் அருகில் அமர்ந்து கொண்டாள் சூர்யா.
அதுவரை அமைதியாக இருந்தவன்,
“பஸ்லே என் மடிலே உட்கார்ந்துகிட்டு வந்ததாலே சரியாத் தூங்க முடியலை..அதான் இப்போ அவளுக்குத் தூக்கமா வருது” என்று தெரிந்த விஷயத்திற்கு விளக்கம் கொடுத்தான் சிவா.
தீபாவிற்கு விளக்கியது போல் இவனுக்கும் விளக்க வேண்டுமா? குழந்தைகளை அதட்டினால்  அம்மா ஸ்தானத்தை இழந்து விடுவாளா? இவர்கள் மூன்று பேருக்கும் நான் உறவில்லையா? அம்மா என்று அழைப்பதெல்லாம், குழந்தைகள் இருவரும் பெரியவர்களானவுடன், சுயமாக சிந்திக்க ஆரம்பித்தவுடன் நின்று போய் விடுமா? இவனும்  என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் நான் எப்போதும் வெளி ஆளாக தான் இருக்கப் போகிறேனா?  ஓர் அதட்டல், சிறு சண்டை, மெல்லிய வாக்குவாதம், சிறிய கருத்து வேறுபாடு, குடும்பத்தில் வழக்கமாக நடப்பவையெல்லாம் இவர்கள் மூவரையும் என்னிடமிருந்து  நிரந்தரமாக பிரித்து விடுமா? ஒதுக்கி விடுமா?  
நான் பாதியில் வந்த அம்மா என்பதால் என் அன்பு, அரவணைப்பிற்கு அல்பாயுசா? என் ஆயுள் வரை காப்பீடு கிட்டாதா? என்ற எண்ணங்கள் ஏற்படுத்திய வலியைப் பொறுத்துக் கொள்ளா முடியாமல், 
“இப்போ அவளை என்ன சொல்லிட்டேன்? சாப்டிட்டு தூங்கணும்னு தானே சொன்னேன்..அதிலே என்ன தப்பு?இந்த அம்மா அவ குழந்தைகளை அதட்டக்கூடாதா” என்று ‘இந்த அம்மா, அவக் குழந்தைகள்’ இரண்டிலும் அழுத்தும் கொடுத்துச் சிவாவிடம் எகிறினாள் கௌரி.
கௌரி ரௌத்திரம் கொள்வாள் என்று சிவா எதிர்பார்க்கவேயில்லை. என்ன ஆயிற்று இவளுக்கு? சாதாரணமாக சொன்னதை ஏன் பெரிசாக்குகிறாள்? அவனும் குழந்தைகளும் அவளை நேரில் சந்திக்க வந்ததை சந்தோஷமாக எடுத்துக் கொள்ளாமல் ஏன் கோபம் கொள்கிறாளென்று அவனுக்குப் புரியவில்லை.  
அவன் அம்மாவுடன் சண்டையிட்டான் என்ற தகவலைத் தீபா வெளியிட்ட பின்னும், உன் அம்மா என்று அவன் வலியுறுத்திய பின்னும் அவளுக்கு என்னைப் புரியவில்லையா? கௌரியினுடைய இந்த எதிர்வினை சிவாவை எட்ட நிறுத்தி வைத்து, ஆழந்த யோசனையில் ஆழ்த்தியது.  அதற்கு மேல் அவனுடன் பேச விரும்பாமல், அவள் ஃபைல்களுடன் கட்டிலில் அமர்ந்து, அவள் வேலையைத் தொடர்ந்தாள் கௌரி.
அடுத்து வந்த நிமிடங்களில், கௌரியின் திடீர் கொந்தளிப்பில் குழம்பிப் போயிருந்த சூர்யா, கௌரியை அணுகாமல் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தீபாவின் முகத்தில் பயமோ, குழப்பமோ இல்லை. அதனால் தலையணையுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.  அப்போது அறையின் அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்த சிவாவிடம்,”டின்னர் ஸர்.” என்றான் ரூம் ஸர்விஸ்.  அதற்குச் சிவா பதில் சொல்லுமுன், அவள் தலையை உயர்த்தி,
“மேஜைலே இரண்டு பேருக்கு ஸர்வ் செய்திடுங்க.” என்று வட்ட மேஜையைச் சுட்டிக் காட்டினாள் கௌரி.  அவன் உணவை பரிமாறி முடிக்கும் வரை அமைதியை உண்டு கொண்டிருந்தது அந்த அறை.  ரூம் ஸர்விஸ் சென்ற பின், கதவைத் தாளிட்டு விட்டு சோபாவில் அமர்ந்தான் சிவா. 
அப்போது, திடீரென்று, “சூர்யா, உன் நல்லதுக்கு தான் அம்மா உன்னைத் திட்டினாங்க.” என்று தங்கைக்கு விளக்கினாள் அக்கா.  அதைக் கேட்டு மூத்த மகள் தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்று நிம்மதியடைந்தாள் கௌரி. அடுத்த நொடி, கௌரி அருகே சென்று, அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு,”பசிக்குது.” என்று சொல்லி, அவளும் அவள் அம்மாவைப் புரிந்து கொண்டு விட்டாள் என்று தெரியப்படுத்தினாள் இளையவள். சூர்யாவைத் தொடர்ந்து தீபாவும், கௌரியை மறுபுறத்திலிருந்து அணைத்துக் கொண்டு,”எனக்கும்.” என்றாள்.
உடனே, அவர்கள் இருவரின் கன்னத்திலும் முத்தமிட்டு,”எனக்கும்.” என்று கௌரி சொன்னவுடன், ஆக்கினை நிலையிலிருந்த சிவாவின் குண்டலினி திறனும் பசியில் விழித்துக் கொண்டது. 
அவள் மடியிலிருந்த ஃபைல்களைக், கட்டிலில் ஓரமாக வைத்துவிட்டு, குழந்தைகள் இருவரையும் அழைத்துச் சென்று, ஏற்கனவே உணவு பரிமாறப்பட்டிருந்த இரண்டு தட்டுக்களை அவர்களிடம் கொடுத்தாள்.  அதன் பின், அவர்களுடன் அமர்ந்து, தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் கௌரி.
அவர்கள் மூன்று பேரும் சாப்பிட ஆரம்பித்த பின்னும் சோபாவை விட்டு சிவா அகலவில்லை.  அதைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தைகள் கேட்பதைப் பரிமாறியபடி, அவர்கள் இருவருக்கும் ஊட்டி விட்டபடி, அவர்களுடன் பேசியபடி சாப்பிட்டு முடித்தாள் கௌரி.  அத்தனை நேரமும் கௌரியைப் பார்வையால் புசித்துக் கொண்டிருந்தான் சிவா.  அதற்கு அடுத்து குழந்தைகளைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்று, பிரஷ் செய்ய வைத்து, உறக்கத்திற்கு தயார் செய்தாள் கௌரி.  
ஒரு சொல், ஒரு பேச்சு மூலம் அவன் இருப்பை உணர்த்தாமல் சோபாவில் அமர்ந்திருந்தவனின் இருப்பை மனத்திலிருந்து அகற்றி விட்டு, பெரிய கட்டிலில் குழந்தைகளைப் படுக்க வைத்த பின், அவர்களுடன் பேசிக் கொண்டே ஃபைல்களையும் சரிப் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.  
சில நிமிடங்களிலேயே குழந்தைகள் இருவரும் களைப்பினால் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய் விட்டனர். அப்போதும் அவன் இருந்த இடத்தை விட்டு எழாமல் மனைவியின் அடுத்த நகர்வு என்ன என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான் கணவன்.  இரவு உணவை உண்ணாமல், உறங்கும் எண்ணமில்லாமல், அமைதியாக இருந்த சிவாவைப் பொருட்படுத்தாமல் அவள் வேலையைச் செய்து முடித்த பின், கட்டில் மேலே இருந்த விளக்கை அணைத்து விட்டு குழந்தைகளின் அருகில் படுத்துக் கொண்டாள் கௌரி.  அதுவரை பொறுமையாக அதே இடத்தில் அமர்ந்திருந்தவன், எழுந்து கொள்ளும் ஆரவாரம் கேட்டவுடன், சாப்பிடப் போகிறானென்று நினைத்துக் கொண்டாள் கௌரி.  
அவன் தான் அவன் மனத்தை அவளுக்கு உணர்த்த வேண்டும், அதை அவள் உணர்ந்த பின், அவளின் மனத்தை அவள் உணரும் வரை, அதை அவனுக்கு உணர்த்தும் வரை காத்திருக்க வேண்டும்.  அந்த நிகழ்வை இப்போதே, இந்த நொடியே ஆரம்பிக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்தவன், அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அணைக்க ஆரம்பித்தான். 
அந்த க்ஷணம் அவன் சாப்பிடப் போவதில்லை, தூங்கப் போகிறான் என்று உணர்ந்த கௌரி, ஏன் சாப்பிடவில்லை என்று விசாரிக்காமல், எனக்கென்ன என்ற மன நிலையில் படுத்திருந்தாள். 
அவளும் குழந்தைகளும் பெரிய கட்டிலில் படுத்திருந்ததால், அவன் சின்ன கட்டிலில் தான் படுத்துக் கொள்வான் என்று நினைத்தவளின் நினைப்பைப் பொய்யாக்கி, அவளை நெருங்கிப் படுத்து, இறுக அணைத்தான் சிவா. அந்த நொடி, அவனின் குண்டலினி திறன் ஆக்கினை நிலையிலிருந்து சஹஸ்ராரம் நிலையை நோக்கி விரைவாகப் பயணிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக, கௌரியின் காதோரத்தில்,”பசிக்குது.” என்று கெஞ்சலாக கிசுகிசுத்தான் சிவா.
சிவா அணைத்த அந்த க்ஷணம் அனைத்தும் ஸ்தம்பித்துப் போனது கௌரிக்கு. அடுத்த க்ஷணம் அவன் புறம் திரும்பி,”அறிவில்லையா உங்களுக்கு? என்ன செய்யறீங்க? சூர்யா மாதிரி நடந்துக்கறீங்க..எடுத்துப் போட்டுக்கிட்டு சாப்பிடுங்க.” என்று அடிக்குரலில் கடுப்படித்தாள்.
வசைச்சொல்லை இன்னிசைச் சொல்லாக மாற்றக்கூடிய ஆற்றல் ஆசைக்கு மட்டும் தான் உண்டு.  அதனால் கௌரி திட்டியது தித்திப்பாக சிவாவிடம் போய்ச் சேர்ந்தது.  அதனால் அடுத்த முறை ”பசிக்குது.” என்று அவன் சொன்ன போது, அவன் குரலில் கெஞ்சலுடன் இனிமையும் கலந்திருந்தது.
அந்தக் கெஞ்சலும் இனிமையும் கௌரியைப் போய்ச் சேராததால், எரிச்சலுடன்,”உங்களுக்குப் பிடிச்ச மலபார் பரோட்டா இருக்கு..போய்ச் சாப்பிடுங்க.” என்றாள் காரமாக. 
அந்தக் காரம் அவனுடைய கோபத்தை தூண்டாமல், அவனுக்குப் பிடித்ததை அவள் ஆர்டர் செய்திருக்கிறாள் என்ற நினைப்பே அவன் மோகத்தைத் தூண்டியது. அதனால்  மீண்டுமொருமுறை,”பசிக்குது.” என்றவனின் குரலில் கெஞ்சல், இனிமை, கொஞ்சல் மூன்றும் கலந்திருந்தது.
மூன்றும் சேர்ந்தவுடன் ‘பசிக்குது’ என்ற வார்த்தை, இதுவரை அவள் உணர்ந்திராத புது அர்த்தத்தில் கௌரியைப் போய்ச் சேர்ந்தவுடன், ஆக்கினை நிலையில் அடைப்பட்டுக் கிடந்த அவளின் குண்டலினி திறன், சஹஸ்ராரம் நிலையை நோக்கி மெதுவாகப் பயணத்தை ஆரம்பித்தது. அதை அவள் உடல் மொழி மூலம் உணர்ந்த சிவாவின் குண்டலினி திறன், அதன் துணையோடு ஒன்று சேரும் முயற்சியை ஆரம்பித்தது. 
அதன் விளைவாக, குழந்தைகளுடன் கட்டிலில் படுத்திருந்த கௌரியை அவன் கைகளில் சிவா ஏந்தியவுடன்,  கௌரியின் குண்டலினி திறனும் தன் துணையின் முயற்சியை உணர்ந்து அதன் பயணத்தின் வேகத்தை அதிகரித்தது.  
இன்னொரு கட்டிலில் கௌரியைக் கிடத்தி விட்டு அவளருகில் படுத்துக் கொண்டான் சிவா. 
அடுத்து வந்த நிமிடங்கள் இருவரின் குண்டலினி திறனிற்கும் யுகங்களாகக் கழிந்தது. அடுத்த நகர்வு கௌரியிடமிருந்து தான் வர வேண்டுமென்று தெளிவாக இருந்த சிவாவிற்கு, அது நிகழும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. அதே சமயம் அவனருகே படுத்திருந்த கௌரிக்கு, அடுத்த நிகழ்வின் எதிர்பார்ப்பும், அது நிகழும் போது அவனுக்கு அவள் காயத்ரியா? கௌரி காயத்ரியா? இல்லை கௌரியா? என்ற கேள்வி எழுந்தது. சில நிமிடங்கள் கழித்து, சிவா கொடுத்த சுய விளக்கம் அவளின் கேள்விக்கு விடையானது.
“கௌரி, இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாத எனக்கு இன்னொரு குழந்தைக்குத் தகப்பனாக தகுதி இருக்கான்னு நீதான் தீர்மானிக்கணும்..கல்யாணத்திற்குப் பிறகு இதைப் பற்றி உன்கிட்டே பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கலை..நானும் ஏற்படுத்திக்கலை..
உனக்கு ஏதோ குறை இருக்கறதுனாலே தான் என்னையும் குழந்தைங்களையும் உன் குடும்பமா ஏத்துக்கிட்டு இருக்கே..அந்தக் குறை என்னென்னு விசாரிக்காம, நான் உனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கேன்னு நேத்து அம்மா என்கிட்டே சொன்னாங்க..
அது அப்படியில்லை… என் குறைகளைப் பார்க்காம, என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டு நீதான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கே..நீதான் எங்களோட குடும்பம்னு அவங்களுக்குப் புரிய வைச்சேன்.” என்று சொன்னவன், சில நொடிகள் அமைதிக்குப் பின்,
தீபா, சூர்யா மட்டும் உனக்குப் போதும், வேற குழந்தை வேணாம், நானும் வேணாம்னா எனக்கும் அதுவே போதும்..எனக்கு நீ முக்கியம் கௌரி..இந்த விஷயம் உன் விருப்பம் தான்..ஏற்கனவே எனக்கு இதிலே அனுபவம் இருந்தாலும் என்னோட விருப்பம் உன்கிட்டே எப்படி வெளிப்படும்னு எனக்குத் தெரியலை. அதனால் நம்ம வாழ்க்கை தப்பாகிடுமோன்னு பயமாவும் இருக்கு.” என்று அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்ததைக் கௌரியுடன் பகிர்ந்து கொண்டான் சிவா.
அவள் தான் அவனுடைய வாழ்க்கை. அவள் முக்கியம். அவள் விருப்பம் அதிமுக்கியம். அவளுடன் சேர்ந்து வாழ அவனுக்கு விருப்பம் இருக்கிறது.  அது எப்படி வெளிப்படப் போகிறது என்ற பயமும் கூடவே இருக்கிறது. அவள் வெளியிடாத  கேள்விக்கான பதில் அவன் விளக்கத்தில் புதைந்து இருப்பது புரிந்தது.  ஏற்கனவே அனுபவம் இருந்தாலும், இந்த அனுபவம் புதிதாக இருக்கப் போகிறது என்று தெளிவாக இருக்கிறான் என்று உணர்ந்தவுடன் சிவாவைப் பற்றிய சஞ்சலங்கள் அனைத்தும் கரைந்து, காணாமல் போனது கௌரிக்கு.
அந்த நொடியில், கௌரியின் குண்டலினி சக்தி அவளின் சஹஸ்ராரம் நிலையை நோக்கி  வெகு வேகமாக பயணித்தது.  அதன் விளைவாக சிவாவை நெருங்கிப் படுத்து, இறுக அணைத்து, கன்னத்தில் இதழ் பதித்து,”பசிக்குது.” என்று அவனைப் போலவே அவள் விருப்பத்தை வெளியிட்டாள் கௌரி லக்ஷ்மி. 
வெள்ளி அம்பலத்தில், சந்தியா தாண்டவம் அரங்கேறிய கூடல் நகரில், கௌரியை மகிழ்விக்க, கௌரி தாண்டவத்தில் ஆரம்பித்து, கௌரிலீலாசமன்வித மூர்த்தியாக மாறி, திருவிளையாடல்கள் நடந்த நகரத்தை, சிருங்கார விளையாட்டுத் தளமாக மாற்றி, கேளிக்கைகளில் திளைத்துக், களித்த, கௌரி, சிவா இருவரின் குண்டலினி சக்திகளும் ஒருங்கே சஹஸ்ராரம் நிலையை அடைய, பிரபஞ்சத்தின் அன்னையான ஆதி சக்தியுடன், பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியான ஆதி சிவன் இணைய, கௌரிசங்கர் என்ற பேரானந்ததையும் பேரின்ப நிலையையும் அடைந்தனர் கௌரி லக்ஷ்மியும் சிவசங்கரும்.
**************************************************
சந்தியா தாண்டவம், பிரதோஷ தாண்டவம் 
ஸ்தலம் – ஶ்ரீ நடராஜர், வெள்ளி அம்பலம், மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.
கௌரி தாண்டவம் – கௌரியான ஸ்ரீ உமையவளுக்காக ஆடிய தாண்டவம்
ஸ்தலம் -ஶ்ரீ நடராஜர், திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்
கௌரிலீலாசமன்வித மூர்த்தி : உமையுடன் கேளிக்கைகள் புரிந்த சிவபெருமானின் வடிவம்.
**************************************************
Sahasrara Chakra, seventh stage – sat-chit-ananda, truth-being-bliss state..oneness
கதைலே, அந்த நிலைலே, சிவா, கௌரி இருவரோட குண்டலினி திறனும் இணைந்து, ஒன்றாகி, அவர்களும், ஒருவராக, கௌரிசங்கர் ஆகறாங்க.
********************************************
இந்தக் கதை மூலம்  எனக்குத்  தெரியாத நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். குண்டலினி விழிப்பு நிலை, காயத் ரி, கௌரி, கௌரி காயத் ரி மந்திரங்கள், சப்த சிவதாண்டவங்கள், அறுபத்தி நாலு சிவவடிவங்கள், பத்தொன்பது சிவ அவதாரங்கள், கௌரியின் பதினாறு வடிவங்கள். கதைக்கு பொருந்தி வர்ற இடத்திலே சிலதை உபயோகிச்சு இருக்கேன். அதனால் தான் இந்தக் கதையை எழுத நிறைய நேரமும், கவனமும் தேவைப்பட்டது..
அடுத்த பதிவு, கடைசி பதிவு..அதிலேயே எபிலாக் வந்திடும்..சீக்கிரம் வர முயற்சி செய்யறேன்..
Thanks for the support readers..stay blessed..get vaccinated..remain protected.

Advertisement