Advertisement

அத்தியாயம் – 39_1
அந்த ஹோட்டல் மதுரை நகரத்தின் மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்தது.  சிவாவும் குழந்தைகளும் அங்கே போய்ச் சேர்ந்த போது பிற்பகல் ஒரு மணி. அங்கேயிருந்து கௌரிக்கு ஃபோன் செய்தான் சிவா.  அவன் அழைப்பு ஏற்கப்படவில்லை.  அதற்குக் காராணம் அவனுடன் பேசும் மன நிலையில் அவள் இல்லையா இல்லை வேலையில் பிஸியா என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளுடைய அனுமதி இல்லாமல் அவள் அறையின் சாவி கிடைக்காது. அதனால் அவனும் விடமால் அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.  
சில முயற்சிகளுக்குப் பின்  கௌரியின் குரல் கேட்டவுடன், அவன் கையிலிருந்த கைப்பேசியை தீபாவிடம் கொடுத்தான் சிவா.
“அம்மா, நாங்க இப்போ ஹோட்டல்லே இருக்கோம்.” என்று எந்தவிதமான முன்னுரையும் இல்லாமல் அறிவித்தாள் தீபா.
தீபாவின் குரலும் அவள் சொன்ன செய்தியும் கௌரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவள் அழுது, அடம்பிடித்து காரியத்தைச் சாதித்து விட்டாள் என்று தோன்றியது.  தீபா மேல் எழுந்த கோபத்தை அடக்கியபடி, ஒருவேளை நாம் தான் தப்பாக யோசிக்கிறோமோ? என்ற எண்ணினாலும், அவள் எந்த ஹோட்டலைப் பற்றிப் பேசுகிறாள் என்று கௌரிக்குத் தெளிவாக, திண்ணமாக உள்ளுணர்வு உணர்த்த, ஆனாலும்,“எந்த ஹோட்டல்? என்று அவள் கேட்டவுடன், சிவாவிடம் கைப்பேசியைக் கொடுத்த தீபா, “எந்த ஹோட்டல்னு கேட்கறாங்க.” என்றாள்.
“மதுரைலே..நீ தங்கியிருக்கற ஹோட்டல் ரிசெப்ஷன்லே இருக்கோம்…இப்போ தான் வந்தோம்” என்றான் சிவா.
அடுத்த நொடி,”அறிவு இருக்கா உங்களுக்கு? எதுக்கு இங்கே வந்திருக்கீங்க?” என்று தீபாவின் மீது எழுந்த கோபத்தை அவனிடம் காட்டினாள்.
“உனக்காக தான்” என்று பதில் அளிக்க நினைத்தான். ஆனால் அதை இப்போது, ஹோட்டல் ரிசப்ஷனில், அன்னியர்கள் அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவளிடம் சொல்ல முடியாது என்று உணர்ந்து அமைதியாக இருந்தான். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால்,”நீங்க ரிசெப்ஷன்லே இருக்கறவங்ககிட்டே ஃபோனைக் கொடுங்க..ரூம் சாவி தரச் சொல்றேன்..நான் வர இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும்..ரூமுக்கு லன்ச் வரவழைச்சு சாப்பிடுங்க..முடிஞ்சா சீக்கிரமா வரப் பார்க்கறேன்.” என்று சொல்லி விட்டு ரிசெப்ஷனில் பேசிய பிறகு அழைப்பைத் துண்டித்தாள் கௌரி.
இரண்டு மணி நேரம் தாண்டியும் கௌரியால் அலுவலகத்தை விட்டுக் கிளம்ப முடியவில்லை.  அவளுடைய வேலையைப் பார்த்துக் கொண்டே,  வேறு சில ஏற்பாடுகளை, அந்தக் கிளையின் மேனஜரின் உதவியோடு செய்து முடித்தாள். மாலை ஐந்து மணிக்கு அறையின் அழைப்பு மணியை அவள் அழுத்தியவுடன், கதவைத் திறந்த சிவாவைத் தாண்டி ஓடி வந்த தீபாவும் சூர்யாவும் அவளைக் கட்டிக் கொண்டனர்.  
அவள் கையில் இருந்த ஃபைல்களை வாங்க கை நீட்டிய சிவாவிடம், அவள் கைப்பையையும் ஃபைல்களையும் கொடுத்து விட்டு, சூர்யாவை தூக்கிக் கொண்டு அறையினுள் வந்தாள் கௌரி.
“அம்மா..இன்னைக்கு ஸ்கூல் போகலை..பஸ்லே ஊருக்குப் போனோம்.” என்றாள் சந்தோஷத்துடன். அதைக் கேட்டு மதுரைக்குப் பஸ்ஸில் பயணம் செய்து வந்திருக்கிறார்கள் என்று புரிந்தவுடன் சூர்யாவை அணைத்திருந்த கைகளில் அழுத்தம் கூடிய அதே சமயம் தீபாவுடன் உடனே பேச வேண்டுமென்று எழுந்த எண்ணத்தை அடக்கி வைத்தாள்.
குழந்தைகளுடன் கௌரி உள்ளே சென்றவுடன் அறையின் கதவைச் சாத்தினான் சிவா.  அவள் கொடுத்த பொருள்களை சோபாவில் வைத்தான். அதே சோபாவின் மேலிருந்த அவன் பையைப் பார்த்து,”இந்த ஒரு பைதானா? என்று அவனிடம் கேட்டாள்.
“ஆமாம்.” என்றான் சிவா.
சூர்யாவைப் படுக்கைமீது இறக்கி விட்டு,”அம்மா பாத் ரூம் போயிட்டு வரேன்.” என்று பாத் ரூமிற்குள் புகுந்து கொண்டாள் கௌரி. பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள், மறுபடியும் வெளியே செல்லத் தயாராகி வந்து இருந்தாள். அதன்பின் குழந்தைகள் இருவருக்கும் அவள் சீப்பை வைத்து தலை வாரிவிட்டு,  முகம் கழுவி தயார் செய்த பின்,”நீங்களும் முகம் கழுவிக்கிட்டு ரெடியாகுங்க..வேற ஹோட்டல் போறோம்.” என்று சிவாவிற்குத் தெரிவித்தாள். அவள் சொன்னபடி அவனும் தயாராகி வந்தவுடன், அவர்கள் சாமான்களை எடுத்துக் கொண்டு நால்வரும் கீழே வந்தனர்.  அங்கே அவர்களை வேறு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல கார் தயாராக இருந்தது.  டிரைவருக்கு அருகே சிவா அமர்ந்து கொள்ள, கௌரியும் குழந்தைகளும் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டனர். 
சிறிது நேர கார் பயணத்திற்குப் பின், மதுரை நகரத்திற்கு வெளியே, திருப்பரங்குன்றம் செல்லும் வழியில், சிறு குன்றின் மீதிருந்த ஹோட்டலை அடைந்தனர்.  அதற்குள், களைப்பினால் கௌரியின் மடியில் தூங்கிப் போயிருந்தாள் சூர்யா.  தீபா மட்டும், ஹோட்டலை அடையும் வரை, அடைந்த பின்னும் மதுரையைப் பற்றி கௌரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.  அவளுக்குப் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கௌரி.  செக் இன் செய்யும் போது சூர்யாவை சிவாவிடம் ஒப்படைத்து விட்டு தீபாவை அவளுடன் அழைத்துச் சென்றாள்.  
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையை அடைய மேலும் பத்து நிமிடங்கள் ஆனது.   அந்த ஹோட்டல் அறையை விட இந்த அறை பெரியதாக இருந்தது. கதவைத் திறந்தவுடன் வலது புறச் சுவரை ஒட்டி நீளமான குஷன் சோபா.  அதற்கு நேரெதிரே மூன்றடி இடைவெளியில் சின்னது, பெரியது என்று இரண்டு கட்டில்கள். அதை அடுத்து, மூன்று புறமும் சுவருக்குப் பதிலாக கண்ணாடி ஜன்னல்கள். அங்கே ஒரு வட்ட மேஜை, நான்கு குஷன் நாற்காலிகள். கண்ணாடி ஜன்னலை மறைத்திருந்த திரையைக் கௌரி விலக்கியவுடன், தூரத்தில் தெரிந்த மதுரை நகரமும், பக்கத்தில் தெரிந்த ஹோட்டலின் தோட்டமும் கண்களுக்கு விருந்தாகியது. கண்ணாடி ஜன்னலை ஒட்டி நின்று கொண்டு, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் தீபா. அவன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவைப் பெரிய கட்டிலில் படுக்க வைத்தான் சிவா.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீபா,“அம்மா, வெளியே போகலாமா? மயில் இருக்கு.” என்றாள்.
“சூர்யா தூங்கிக்கிட்டு இருக்காளே.” என்று கௌரி மறுத்தவுடன்,
“அவளை அப்பா பார்த்துப்பாங்க..நாம இரண்டு பேரும் போகலாம்.” என்று கௌரியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.  கௌரியும் தீபாவும் வெளியேறிய பின் அறை கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் படுத்திருந்த சூர்யா மீது பார்வை வைத்தபடி, தீபாவைப் போல் ஜன்னல் வழியாக, இருளை விரட்டியடித்து, வெளிச்ச முத்துக்களால் ஆன மாலையை அணிய ஆரம்பித்திருந்த முக்கூடல் நகரையும், அதற்கு முகப்பாக ஒளிர்ந்து கொண்டு இருந்த மீனாக்ஷி அம்மன் கோவில்  கோபுரங்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. 
அப்போது அவன் கைப்பேசி ஓசை எழுப்ப, உடனே அதை ஏற்றவனிடம்,”எங்கே டா இருக்க..உன் வீடு பூட்டியிருக்கு.” என்று கேட்டான் மகேஷ்.
“நீ எங்கே இருக்க?”
“உன் வீட்டு வாசல்லே தான்.”
“நான் வெளியூர்லே இருக்கேன்.”
“அம்மா, அப்பாவை உன்கூட அழைச்சிட்டுப் போயிருக்கேயா?”
“இல்லை..சாந்தி அக்கா வீட்லே விட்டிருக்கேன்.”
“சரி..நான் அவங்களை அங்கேயிருந்தே என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடறேன்.” என்று திடீரென்று தெரிவித்தான் மகேஷ்.
குழந்தை பிறந்த பிறகு தான் அவர்களை அழைத்துப் போவேன் என்று ஒரு வாரத்திற்கு முன் அறிவித்தவன், ஆறு நாள்களில் திரும்பி வந்திருக்கிறான். அதனால்,
“ஏன்?” என்று கேட்டான் சிவா.
“விஜிக்கு டெலிவரி நானே பார்த்திடலாம்னு நினைக்கறேன்…இரண்டாவது குழந்தை..எதுக்கு மாமியார் வீட்லே பார்க்கணும்..குழந்தை பிறந்த பிறகு விஜினாலே தனியாச் சமாளிக்க முடியாது….அதனாலே அம்மா, அப்பாவை என்கூடவே நிரந்தரமா வைச்சுக்கலாம்னு நினைக்கறேன்..நீ என்ன சொல்ற?” என்று சிவா பேச நினைத்ததை மகேஷ் பேசினான்.
“எனக்கு விருப்பமில்லை..அது சரியா வராது..நம்ம இரண்டு பேருக்கும் பொதுவா ஓர் இடத்திலே அவங்களைத் தனியா வைக்கறது தான் நல்லது.” என்றான் சிவா.
அதைக் கேட்டு அதிர்ச்சியானான் மகேஷ். அப்படிச் செய்தால் புது வீடு வாங்க அவன் போட்டிருக்கும் திட்டம் முழுவதும் பாழாகி விடும் என்று பயந்து போய்,”ஏன் டா சரி வராது? நான் நல்லாப் பார்த்துப்பேன் டா.” என்று வாக்குறுதி கொடுத்தான்.
சில நிமிட மௌனத்திற்குப் பின்,
“சரி நீயே அவங்களை உன் வீட்லே வைச்சுக்கோ..ஆனா எல்லாத்தையும் அக்கா, மாமா முன்னாடி பேசணும்..அம்மாவும் அப்பாவும் ஒத்துக்கணும்..திடீர்னு நீயோ, விஜியோ இல்லை அம்மா, அப்பாவே மனசு மாறி, என் வீட்டுக்கு வரணும்னு விரும்பினா என்னாலே அவங்களை வைச்சுக்க முடியாது..அதனால் தான் அவங்களைத் தனியா வைக்கறது தான் நல்லதுண்ணு நினைக்கறேன்..அவங்களுக்கு ஆகப் போகற மாச செலவை நீயும் நானும் பாதி பாதியாப் பிரிசுக்கலாம்..பெரிய செலவுக்கெல்லாம் அவங்க பங்கு பணம் இருக்கு.” என்றான் சிவா.
உடனே, “வேணாம்..வேணாம்..என்னாலே மாசா மாசம் அவங்களுக்குத் தனியாச் செலவழிக்க முடியாது..அவங்க என்னோடவே இருக்கட்டும்..நானே எல்லாம் பார்த்துக்கறேன்..நீ எதுவும் செய்ய வேணாம்.”
“சரி..நான் திரும்பி வந்த பிறகு உன்னோட பேசறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான் சிவா. 
தீபாவும் கௌரியும் வெளியே சென்ற போது அவர்களைப் போலவே விருந்தினர்கள் சிலர் ஹோட்டலின் பொது பால்கனியிலிருந்து, அந்தி சாயும் நேரத்தில், மாலைத் தென்றலின் சுகத்தை அனுபவித்தபடி சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தென்மதுரை நகரின் பிரம்மாண்டத்தில் லியித்துப் போயிருந்தனர். 
அப்போது,”தீபா” என்று அழைத்தாள் கௌரி.
“என்ன ம்மா?” என்று கேட்டாள் தீபா.
“நான் உன்னை என்கூட அழைச்சிட்டு வரலைன்னு அப்பாகிட்டே அழுது, அடம்பிடிச்சு இங்கே வந்திருக்கேயா?” என்று கேட்டாள் கௌரி.
“இல்லை ம்மா..அப்பாவே தான் அழைச்சிட்டு வந்திருக்காங்க.” என்றாள் தீபா.
அந்தத் தகவலில் ஆச்சர்யமடைந்தாள் கௌரி. இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறான்? என்று கேள்வி எழுந்தது.  அதைப் புறம் தள்ளிவிட்டு, தீபாவிடம் பேச கிடைத்திருந்த சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை கௌரி. அதனால்,
“எதுக்காக நேத்திக்குப் பாட்டிகிட்டே அம்மா புதுசு இல்லைன்னு கத்தின?” என்று கேட்டாள்.
சில நிமிடங்கள் யோசித்த தீபா,”நீங்க புதுசு இல்லை பழைசு..அதான் எனக்கு உங்களைப் பிடிக்குது.” என்றாள்.
அடுத்த கேள்வியைக் கௌரி கேட்குமுன் தீபாவே அதைப் பற்றி பேசினாள்.
“இப்போயெல்லாம் உங்க ரூம்லே தான் இருக்கேன், இராத்திரி உங்களோட தான்  தூங்கறேன்….ஆனாலும் உங்களுக்கு நான் புதுசு தான் இருக்கேன்..அதான் என்னை உங்கக்கூட ஊருக்கு அழைச்சிட்டுப் போக முடியாதுண்ணு நேத்து திட்டுனீங்க.” என்று சமீபக் கால நிகழ்வுகளை விளக்கி, மதுரைக்கு உடன் அழைத்து வராததற்கு அவளையே காரணமாக்கி, அவள் மீது பழிப் போட்டுக் கொண்டாள் தீபா.  
ஏற்கனவே அதிதியால் புதுசு, பழைசு என்ற குழப்பத்தில் இருந்தவளை, நேற்று, அவளுடன் அழைத்துச் செல்ல முடியாது என்று மறுத்த போது, தன்னைப் புதுசு என்று ஜமுனா பேசியது இவளை மேலும் குழப்பி விட்டிருக்கிறது என்று தீபாவின் மனத்தை சரியாகப் புரிந்து கொண்டாள் கௌரி. இப்போது இதைச் சரி செய்யாவிட்டால் எப்போதுமே சரி செய்ய முடியாதென்று உணர்ந்தாள்.
பல காலமாக தொடர்ந்து வரும் உறவுகள் முறிய, சில கணங்கள் போதும்.  பலமான உறவுகள் உருவாகவும் சில கணங்கள் போதும்.  இரண்டிற்கும் காரணம் மனசு தான் என்று எப்படித் தீபாவிற்குப் புரிய வைப்பது என்று யோசித்து கௌரி ஒரு முடிவிற்கு வந்தாள். 
“தீபா, அம்மான்னா அன்பு மட்டும் செய்ய மாட்டாங்க..அதட்டுவாங்க..திட்டுவாங்க..அப்படிச் செய்யறது குழந்தைங்களோட நல்லதுக்காக தான்..காயத் ரி அம்மா இருந்திருந்தா அவங்களும் நேத்து உன்னை அதட்டியிருப்பாங்க.” என்று காயத்ரியும் அவளைப் போல் தான் நடந்து கொண்டிருப்பாள் என்று புரிய வைக்க முயன்றாள் கௌரி.
அதன் பின் தீபாவிடமிருந்து கேள்வியோ, பதிலோ வரவில்லை.  அதனால் அவள் என்ன புரிந்து கொண்டாள் என்று கௌரிக்குத் தெரியவில்லை. 
வெளிச்சம் முழுவதும் மறைந்து, இருள் சூழ ஆரம்பித்தவுடன் அறைக்கு வந்து சேர்ந்தனர் தீபாவும் கௌரியும்.  அறை கதவை அவர்கள் லேசாகத் தட்டியவுடனேயே திறந்து விட்டான் சிவா.  இன்னுமும் உறங்கிக் கொண்டிருந்தாள் சூர்யா. அறையினுள்ளே நுழைந்தவுடன்,
“அப்பா, வெளியே பெரிய தோட்டம் ….அங்கேயிருந்து மீனாக்ஷி அம்மன் கோவில் நல்லா தெரியுது ப்பா.” என்றாள் தீபா.
சிவா அதற்குப் பதில் சொல்லுமுன்,
“நாளைக்குக் காலைலே மீனாக்ஷி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் இரண்டு இடத்திற்கும் போகலாம்..அப்புறம் அம்மா ஆபிஸுக்குப் போயிடுவேன்..சாயந்திரம் நாம எல்லாரும் தோட்டத்திற்குப் போகலாம்….இப்போ சாப்பிடற நேரமாயிடுச்சு..மெனு கார்டை எடுத்துப் படிச்சிட்டு உனக்கு என்ன வேணும்னு சொல்லு ரூமிற்கு வரவழைக்கலாம்.” என்று மூத்த மகளின் ஆர்வத்தை ஆதரிக்கும் விதமாக பேசினாள் கௌரி.
அதன் பின் அவளுடைய பையைத் திறந்து வேறு உடையை எடுத்துக் கொண்டு பாத் ரூம் சென்ற கௌரி, பத்து நிமிடத்தில் திரும்பிய போது இரவு அணியும் பேண்ட் சட்டையில் இருந்தாள்.  அதுவரை மெனு கார்டை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்த தீபாவினால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.  மகளுக்கு உதவி செய்யாமல் அமைதியாக அமர்திருந்த சிவாவின் பார்வை கௌரியைத் தொடர்ந்து கொண்டிருந்தது.  
சில நிமிடங்கள் கழித்து,”அம்மா, நீங்களே ஆர்டர் பண்ணுங்க.” என்று சொல்லி விட்டு சூர்யாவின் அருகில் படுத்துக் கொண்டாள் தீபா.
உடனே அவளிடமிருந்து மெனுக் கார்ட்டை வாங்கிக் கொண்டாள் கௌரி.  அதுவரை அவன் சோபாவில் அமர்ந்திருந்த சிவா, எழுந்து பாத் ரூமிற்குச் சென்றான். அவன் உணவு விருப்பத்தைச் சொல்லாமல் பாத் ரூமிற்குள் சென்றவனை யோசனையுடன் பார்த்தாள் கௌரி. இங்கே வந்த பின் அவர்கள் இருவரும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை.
அதன் பின் மெனு கார்ட்டைப் புரட்டியபடி,”தோசையா? சப்பாத்தியா?” என்று தீபாவிடம் கேட்டாள்.
“சப்பாத்தி.” என்று அவள் சொன்னவுடன், சிவாவிற்காகக் காத்திருக்காமல், அவனுக்குத் தேவையானதையும், அவளுக்கு விருப்பமானதையும், உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவிற்கும் சேர்த்து ரூம் ஸர்வீஸை அழைத்து ஆர்டர் செய்தாள். அதன் பின் சிவா கொண்டு வந்திருந்த பையைத் திறந்து, என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று ஆராய்ச்சி செய்தாள். அதனுள்ளே குழந்தைகள் இருவரின் இரண்டு செட் டிரெஸ், உள்ளாடைகள், அவனுடைய ஒரு செட் டிரெஸ், வேஷ்டி, இரண்டு டி ஷர்ட் இருந்தது.  அவளுடைய பெட்டியைத் திறந்து, அதிலிருந்த நல்ல துணி, அழுக்குத் துணி இரண்டையும் பிரித்து, இரண்டையும் அலமாரியினுள் வைத்தாள். இன்று முடிக்க வேண்டிய வேலையை உடன் கொண்டு வந்திருந்ததால், அந்த  ஃபைல்களுடன் உட்கார்ந்து கொண்டாள் கௌரி.
அப்போது பாத் ரூமிலிருந்து வெளியே வந்த சிவா மறுபடியும் சோபாவில் அமர்ந்து கோண்டான். இவன் என்ன வந்ததிலிருந்து அமைதியாவே இருக்கான்? நேற்று வீட்டில் என்ன நடந்திருக்கும்? என்று கொஞ்சம் போல் அவள் மனது மறுபடியும் நேற்றைய நிகழ்விற்குச் செல்ல, அதை மறுபடியும் மதுரைக்கு அழைத்து வந்து வேலையில் முழ்கினாள் கௌரி.
 சூர்யா அருகே படுத்திருந்த தீபா, திடீரென்று,”அப்பா,  நேத்து பாட்டியோட சண்டை போட்ட மாதிரி அம்மாவோடவும் சண்டை போட்டீங்களா?’ என்று சிவாவைக் கேட்டாள்.
அதைக் கேட்டு சிவாவிற்குத் திக்கென்றானது.  நேற்று நடந்த சண்டை முழுவதையும் இவள் கேட்டு விட்டாளா?  
இங்கே வந்ததிலிருந்து அவள் அப்பாவும் அம்மாவும்  சாதாரணமாக கூட பேசிக் கொள்ளவில்லை என்று கண்டு கொண்டாள் தீபா.  அதனால் தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள். சிவாவின் பதிலிற்காக தீபாவோடு கௌரியும் காத்திருந்தாள்.
அவர்களைச் சில நிமிடங்கள் காக்க வைத்து விட்டு, நிதானமாக,”உன் அம்மாவோட சண்டையா? இல்லையே.” என்று ‘உன் அம்மா” வில் அழுத்தத்துடன் பதில் கொடுத்தான். அவளோடு இல்லை அவன் அம்மாவோடு தான் சண்டை என்ற தகவல் கௌரியைப் போய்ச் சேர்ந்தாலும், உணர்ச்சியற்ற முகத்துடன் அவள் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
“அப்போ ஏன் உங்களுக்கு என்ன சாப்பாடு வேணும்னு அம்மாகிட்டே சொல்லலை..உங்களுக்குப் பிடிச்சது ஆர்டர் செய்திருப்பாங்க.” என்றாள் தீபா.
“எனக்கு என்ன பிடிக்கும்னு அவளுக்குத் தெரியும்.” என்று பதிலளித்தவனுக்கு அப்போது தெரியவில்லை அவனுக்குப் பிடித்ததை தான் அவள் ஆர்டர் செய்திருக்கிறாளென்று.   அதற்குக் காரணம் அவளுக்கு என்ன பிடிக்குமென்று இன்றிரவு எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவன் யோசித்துக் கொண்டிருந்தது தான்.

Advertisement