Advertisement

அத்தியாயம் – 38_2
அன்று மாலை சாவித்திரி அம்மா கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுத்து விட்டார் ஜமுனா.  வெங்கடாசலம் எத்தனை முறை கெஞ்சியும் ஜமுனா மசியவில்லை. இரவு உணவை இரண்டு முறை சாப்பிடுபவருக்கு டிஃபனைத் தியாகம் செய்ய மனம் வரவில்லை.  அதனால் அவருக்குக் கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுக்காமல் சாப்பிட்டார் வெங்கடாசலம்.  மதியம் சாப்பாட்டிற்குப் பின் அந்த சாப்பாடு மேஜை அப்படியே இருந்தது. கௌரியின் கட்டளைபடி அதைச் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தார் சாவித்திரி அம்மா.  அதைப் பார்த்து பார்த்துக் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது ஜமுனாவிற்கு. 
ஏழு மணி போல் வீட்டிற்குள் சிவா நுழைந்தவுடன், “நான் வரேன் தம்பி” என்று உடனே வெளியேறி விட்டார் சாவித்திரி அம்மா.  
படுக்கைறைக்குச் சென்று குழந்தைகளைப் பார்த்து விட்டு திரும்பியவனின் கண்களில் சாப்பாடு மேஜை பட்டது.
“என்ன ம்மா? மத்தியானம் சாப்பிட்டது அப்படியே காய்ஞ்சுப் போய்க் கிடக்கு.” என்று கேட்டது தான் தாமதம், “இந்த வீடு யாரோடது?” என்று கேட்டார் ஜமுனா.
இதென்ன சம்மந்தமில்லாத கேள்வி என்று யோசித்தவனை மேலே யோசிக்க விடாமல்,”நான் இந்த வீட்டுக்காரி இல்லையாம்.. இது என் பையனோட வீடும் இல்லையாம்…அப்போ யாரோட வீடுன்னு கேட்டேன்..உங்க பையனைக் கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க..அவர் பதில் சொல்லுவார்ன்னு சொல்றா..எத்தனை திமிர் அவளுக்கு..
குடும்பம் இல்லாதவளைக் கல்யாணம் செய்துகிட்டு அவளுக்கு கௌரவத்தையும், குடும்பத்தையும் கொடுத்திருக்கறது நீ..இரத்த பந்தமில்லாதவங்களை எல்லாம் சொந்தம்னு சொல்லிக்கிட்டு இருக்கற அனாதை அவ..ஒண்ணும் இல்லாதவ என்னை” என்று பேசிக் கொண்டே போன ஜமுனாவிடம்,”நிறுத்துங்க ம்மா.” என்று கூச்சலிட்டான் சிவா.  
அவன் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து ஓடி வந்த மகள்கள் இருவரிடமும்,”உள்ளே போங்க..கதவைச் சாத்திக்கோ தீபா..கொஞ்ச நேரத்திலே அப்பா வரேன்.” என்று அவர்களை அங்கேயிருந்து அப்புறப்படுத்தினான்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு? கௌரியை எதுக்கு கண்டபடி பேசறீங்க?”
“அவ என்னைக் கண்டபடி பேசினா.”
“நீங்க அவளை என்ன பேசினீங்க..முதல்லே அதைச் சொல்லுங்க”
“என்னையும் கூட கூட்டிட்டுப்  போன்னு அழுதுக்கிட்டு இருந்த தீபாவை அவ அதட்டினா..எத்தனை நாளைக்குப் புது அம்மாக்காரி கொஞ்சிக்கிட்டு இருப்பா..இனி எல்லாம் இப்படித் தான்னு உன் பொண்ணுக்குப் புரிய வைச்சேன்.” என்று திமிராகப் பதில் சொன்னார் ஜமுனா.
“புது அம்மாகாரி..புதுசா வந்திருக்கறவ..ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? ஒரு வாரம் இந்த வீட்டிலே, எங்களோட இருந்த பிறகும் இன்னைக்கு இப்படிப் பேசியிருக்கீங்க? இன்னும் எத்தனை நாள் இப்படிப் பேசுவீங்க?” என்று கோபமாகக் கேட்டான் சிவா.
“எப்போதும் பேசுவேன்..அவ என்னைக்கும் புதுசு தான்..உனக்கும், உன் பொண்ணுங்களுக்கும் தான் பழைசுன்னு ஒண்ணு இருந்ததே மறந்து போயிடுச்சே..அந்தத் திமிர்லே தான் அவ என்னை அப்படிப் பேசிட்டா..அவக் காசு உன் கண்ணை மறைச்சிடுச்சு..ரெடிமேட் குடும்பத்தோட ஏன் சேர்ந்துகிட்டான்னு நீ யோசிக்கலை..எதையும் நீ விசாரிக்கலை..அவளுக்கு என்ன கோளாறோ அதான் உன் இரண்டு பொண்ணுங்களையும் கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மான்னு கூப்பிட வைச்சு அவங்களைப் பெத்த அம்மாவை மறக்கடிக்கறா..தனியா சுத்திக்கிட்டு இருந்தவளுக்குத் தாலி கொடுத்து, இரண்டாம் தாரமாக்கி, நீ அவளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கங்கறதை மறந்திட்டு..அவப் பின்னாடி நாயாட்டம் நீ சுத்திக்கிட்டு இருக்க” என்று பேசிக் கொண்டே போனவரை,
“அம்மா..இதுக்கு மேலே நீங்க ஒரு வார்த்தை பேசக் கூடாது..நான் தான் பேசப் போறேன்..இந்த ஒரு தடவை மட்டும்..இனிமே நமக்குள்ளே இதைப் பற்றி எந்தப் பேச்சு வார்த்தையும் இருக்கப் போகறதில்லை..
யார் அனாதை? அவளா? இல்லை நானா? பெத்தவங்க நீங்க இருந்தும் அனாதையா இருந்தது நான் தான்..இரத்த சொந்தம்னு அக்கா, தம்பி இரண்டு பேர் இருந்தும் பலன் எதிர்பார்க்காம, என்கிட்டேயிருந்து காசு எதிர்பார்க்காம அவங்க எனக்கு உதவி செய்தாங்களா?
எந்தச் சொந்தக்காரங்க என்னையும் என் பொண்ணுக்களையும் ஆதரிச்சாங்க? காயத் ரி வீட்லே எங்க பக்கம் திரும்பிக் கூட பார்க்கலை..சொந்த பாட்டி நீங்களே உங்களாலே தீபாவையும் சூர்யாவையும் பார்த்துக்க முடியாதுண்ணு சொல்லிட்டீங்க…சொந்தமே இல்லாத சாவித்திரி அம்மா தான் இப்போவரை எங்ககூட இருக்காங்க..
என் இரத்த சொந்தமெல்லாம் சொத்தை வித்து, பங்கை கூறு போட்டு எடுத்திட்டு போனாங்க. இரத்தம் சம்மந்தமில்லாத அவளோட சொந்தம் தான், அவப் பெயர்லே  சொத்து எழுதி வைச்சு அவளைச் சொந்தம்னு கொண்டாடறாங்க.
யார் பழைசை மறந்து போனாங்க? நீங்க உங்க முதல் மருமகளை மறந்து போயிட்டீங்க..காயத் ரி கையாலே எத்தனை நாளைக்குச் சாப்பிட்டு இருப்பீங்க..அவ திதி என்னைக்கு வரும்னாவது உங்களுக்குத் தெரியுமா? இரண்டு வருஷமா என் வீட்டுக்கு வந்து போய்கிட்டு இருக்கீங்களே, ஒரு முறையாவது காயத் ரியைப் பற்றி சூர்யா, தீபாகிட்டே பேசியிருப்பீங்களா?
 காயத்ரியை நீங்க நியாபகம் வைச்சுக்கணும்..கௌரி இல்லை….நாங்க எல்லாரும் காயத் ரியை நியாபகம் வைச்சுக்கிட்டு இருக்கோம்.. எங்ககூட இருக்கறவளை எப்படி நாங்க மறந்து போக முடியும்? காயத் ரி இந்த வீட்லே தான் இருக்கா.. நீங்க சமையலறைக்கு போனா தானே சாமி அலமாரியைப் பார்க்கறத்துக்கு.. அங்கே தான் காய த்ரி இருக்கா….
யாருக்கு யார் வாழ்க்கை கொடுத்தாங்க? கௌரிக்கு நான் வாழ்க்கை கொடுக்கலை.. இரண்டு குழந்தைங்களோட இருக்கற என்னை இரண்டாம் கல்யாணம் செய்துகிட்டு அவ எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கா..
கௌரி புதுசா இருக்கட்டும்..நான் பழைசா இருக்கேன்..அதைப் புரிஞ்சுகிட்டு தான் எங்க கல்யாணம் நடந்திச்சு..கௌரி எப்படிப் பழைசு ஆகமுடியாதோ அது போல நானும் புதுசா மாற முடியாது..பழைசு, புதுசு இந்த வித்தியாசமெல்லாம் அவளுக்குக் கிடையாது..அதனாலே தான் பூனாக்கு போய் புது வாழ்க்கை அமைச்சுக்காம என்னைப் போல பழைசோட புது வாழ்க்கை அமைச்சுக்கிட்டா..
கடை, வீடு, கார் எல்லாம் கௌரியோடது தான்..நானும், குழந்தைங்களும் கூட கௌரிக்குச் சொந்தம்..யாரை வேணும்னாலும் கல்யாணம் செய்துக்கிட்டு என் பொழைப்பைப் பார்த்துக்க சொன்னீங்க..அதைத் தான் நான் இப்போ செய்யறேன்..என் பொழைப்பு உங்க கண்ணுக்கு நாய் பொழைப்பாட்டாம் தெரியுதா..தெரியட்டும்..எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை…உங்க பொருளெல்லாம் எடுத்துக்கிட்டு நீங்க கிளம்புங்க” என்று கத்தி முடித்தான் சிவா. 
சிவாவின் மனக்குமுறல்களைக் கேட்ட பின் ஜமுனா உயிரோடு இருக்கிறாரா என்று தெரியவில்லை.  சிவாவின் பேச்சில் ஸ்தம்பித்துச் சிலையாக அமர்ந்திருந்தார். 
சிவா பேசியதைப் பொருட்படுத்தாமல்,“என்ன டா, இந்த நேரத்திலே எங்கே டா போகச் சொல்ற? உங்கம்மாவைப் பற்றித் தான் உனக்குத் தெரியுமே…அவ ஏதாவது பேசிக்கிட்டு தான் இருப்பா.” என்று எப்போதும் போல் சமாதானம் செய்ய முயன்றார் வெங்கடாசலம்.
“இனி நீங்க இங்கே இருக்க முடியாது.” என்று அவன் முடிவில் தெளிவாக இருந்தான் சிவா.
“என்ன டா இப்படிப் பேசற? இந்த மாதிரி விஷயத்திலே உடனே முடிவிற்கு வர முடியாது.. காலைலே பேசிக்கலாம் டா.” என்றார் வெங்கடாசலம்.
“ஏன் வர முடியாது? என் கடையை இப்படித் தானே எல்லாரும் சேர்ந்து திடீர்னு விக்க வைச்சீங்க..நான் உடனே முடிவு எடுக்கலே? பணத்தைப் பங்கு போட்டுக் கொடுக்கலே? உங்ககிட்டே அந்தப் பணமிருக்கில்லே..போங்க..அதை வைச்சு ஹோட்டல்லே தங்கிக்கோங்க.” என்று கத்தினான் சிவா.
‘இவன் என்ன எதற்கும் மசியாமல் வீட்டை விட்டு துரத்துவதில் தீவிரமாக இருக்கிறான்.’ என்று பயந்து போனார் வெங்கடாசலம்.  அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த ஜமுனாவும் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். அதனால்,
“எனக்கு இரண்டு பசங்க..தனித் தனியா எங்களுக்குச் செய்ய வேண்டிய கடமை அவங்க இரண்டு பேருக்கும் இருக்கு.” என்றார். நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். எனக்குச் செய்ய வேண்டியது உன் கடமை. என்று அவர் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிவா,
“அப்போ எதுக்கு மகேஷ் வீட்லே இருந்த போது என்கிட்டே உதவி எடுத்துக்கிட்டீங்க? அவன் கடமையை அவனுக்கு உணர்த்த வேண்டியது தானே..அதைச் செய்ய மாட்டீங்க..என் கடமையை மட்டும் எனக்கு உணர்த்துவீங்க..என் வீட்டுக்கு வந்து எல்லாரோடேயும் சண்டை போடுவீங்க..மகேஷ் வீட்லே வாயை மூடிக்கிட்டு வேலை செய்வீங்க.” என்றான் சிவா.
”அங்கேயும் தினமும் சண்டை தான்…உங்கம்மா இப்படித் தான்னு அவன்கிட்டேயும் சொல்லிட்டேன்..மகேஷ் புரிஞ்சுக்கிட்டான்..விஜி பொறுத்துப் போகறா.” என்றார் வெங்கடாசலம். அவன் ஏன் புரிந்து கொண்டான், விஜி ஏன் ஜமுனாவைப் பொறுத்துப் போகிறாள் என்ற விவரம் வெங்கடாசலத்திற்குத் தெரிய வந்த போது, அவர் பங்குப் பணம் விஜியின் புது வீடு நிதி திட்டத்தில் சேர்ந்திருந்தது.
“அப்போ புரிஞ்சுக்கிட்டு பொறுத்துப் போறவங்க வீட்டுக்குப் போங்க.”
“அவன் வீட்லே இல்லை டா..அவன் மாமியார் வீட்லே இருக்கான்.” என்று சொன்ன வெங்கடாசலம் அறியவில்லை, மகேஷ் அவன் வீட்டிற்குத் திரும்பி, இரண்டு நாளாகிறதென்று.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது..நீங்க இந்த வீட்டிலே இனி இருக்க முடியாது.” என்று சொன்னவன் உடனே சாந்தி அக்காவிற்கு ஃபோன் செய்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில், அவன் வீட்டிற்கு வந்தனர் சாந்தியும் ராஜேந்திரனும்.  அவர்களிடம் அவன் பெற்றோரை ஒப்படைத்தான் சிவா. கௌரியைத் தப்பாகப் பேசிய பின், அவன் அம்மாவிற்கு கௌரி வீட்டில் இடமில்லை என்று உண்மையை அவன் அக்காவிற்குத் தெரியப்படுத்தினான். அவன் ஓர் ஏற்பாடு செய்யும் வரை அவள் வீட்டில் அவர்களை வைத்துக் கொள்ளச் சொல்லி, சாந்தியுடன், ஜமுனா, வெங்கடாசலத்தை அனுப்பி வைத்தான் சிவா.  
கௌரி, ஜமுனாவிற்கு இடையே என்ன நடந்ததென்று அவனுக்குத் தெரியவில்லை.  அவன் அம்மாவின் வாயை அவன் அறிவான்.  அவனிடம் பேசியது போல் கௌரியைப் பற்றி அவளிடமே பேசியிருப்பார் என்று எண்ணிக் கவலை கொண்டான். அவளைக் கைப்பேசியில் அழைத்துப் பேசும் துணிவு அவனுக்கு இல்லை.  என்ன செய்வது என்று யோசித்தபடி படுத்துக் கொண்டிருந்த போது, மதுரையில் இருப்பதாக கௌரியிடமிருந்து அவனுக்கு மெசெஜ் வந்தது.  அதைப் பார்த்து நிம்மதியடைந்தான் சிவா. 
பாட்டி, தாத்தா எங்கே? ஏன் அத்தை, மாமா வீட்டிற்கு வந்தார்கள் என்று விவரங்களைக் கேட்டுச் சிவாவைத் தொந்தரவு செய்யாமல், குழந்தைகள் இருவரும் சமத்தாக அவர்கள் கடமைகளைச் செய்து முடித்து விட்டு அவனுடன் படுத்துக் கொண்டனர்.  முக்கியமாக, மறக்காமல், உறங்குவதற்கு முன், சூர்யாவைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்றாள் தீபா.  அன்றிரவு எப்போதும் போல் தூங்கினாள் சூர்யா. நடு இரவில் படுக்கையை நனைக்கவில்லை. பாத் ரூம் வருகிறதென்று யாரையும் எழுப்பவும் இல்லை.
அடுத்த நாள் காலையில் சாவித்திரி அம்மாவிற்கு ஃபோன் செய்து வேலைக்கு வர வேண்டாம் என்று தகவல் கொடுத்தான் சிவா.  ஏன் என்று கவலையாக கேட்டவரிடம், இரண்டு தினங்கள் ஊரில் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்தான். அடுத்து மனோகரிடம் பேசியவன், இரண்டு நாள்கள் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான். தீபா, சூர்யாவின் பள்ளிக்கூடத்திற்குத் தகவல் கொடுத்து விட்டு, இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு, பேருந்து நிலையத்திற்குச் சென்று, மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
**********************************************************
சத்யவீர கௌரி – துணிவு கொடுப்பவள், கொடுத்த வாக்கை காப்பாற்ற துணையிருப்பவள்.
*************************************************
இன்னும் ஒரு பதிவு தான்னு நினைக்கறேன்..கதையோட கடைசி பக்கத்திற்கு வந்தாச்சு.
****************************************************

Advertisement