Advertisement

அத்தியாயம் – 38_1
மறு நாள், திங்கட்கிழமை, சிவா தாமதமாக எழுந்து கொண்டான். எப்போதும் போல் எழுந்து கொண்ட கௌரி, சாவித்திரி அம்மா வருவதற்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தாள். அவர் வந்தவுடன், சிவா இன்னும் எழுந்திருக்காததால்,  குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கூடத்திற்குத் தயார் செய்தாள். பேருந்து நிறுத்ததில் விட அவளுக்கு நேரமில்லாததால், உறங்கிக் கொண்டிருந்த சிவாவை எழுப்பினாள்.  
இது போல் அவன் உறங்கியது கிடையாது.  சில நாள்கள் தாமதமாக எழுந்து கொண்டாலும், இவ்வளவு தாமதமாக எழுந்து கொண்டதில்லை.  நேற்றிரவு எத்தனை மணிக்கு வந்து படுத்தான் என்று கௌரிக்குத் தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக சாதாரண உரையாடலுக்குக் கூட நேரம் ஒதுக்க முடியவில்லை. வாரத்தின் முதல் நாள் தாமதமாக போனால் நன்றாக இருக்காது என்று வேகமாகத் தயாராகிச் சரியான நேரத்திற்கு அலுவலகம் கிளம்பிச் சென்றாள் கௌரி. அன்று காலையில், அவள் வீட்டிலிருந்த அந்த மூன்று மணி நேரமும் ஜமுனாவை முழுமையாகத் தவிர்த்தாள்.
நேற்று இரவு சிவா சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளாததால், ஜமுனாவின் நடவடிக்கைகளில் மாற்றமில்லை.  அன்று சிவா வீட்டிலிருந்ததால், சாவித்திரி அம்மாவிற்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு வெளி வேலைகள் இருந்தாலும், அத்தனையும் ஒத்திப் போட்டான். மதியம், பேருந்து நிறுத்ததிலிருந்து அவன் தான் தீபாவையும் சூர்யாவையும் வீட்டிற்கு அழைத்து வந்தான். இருவருடன் சேர்ந்து மதிய உணவை உண்டு, மாலை வரை அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டான்.  அதன் விளைவாக சாவித்திரி அம்மாவிற்கு இளைப்பாற நேரம் கிடைத்தது.  அன்றைக்குக் குழந்தைகள் இருவரையும் அவன் தான் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். 
சாவித்திரி அம்மா, சிவா, கௌரி மூவரும் ஜமுனாவைத் தவிர்த்ததால் அன்றைய பொழுது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக கழிந்தது. அன்றிரவும் எப்போதும் போல் கௌரியை எழுப்பினாள் சூர்யா.  இரவு விளக்கு வெளிச்சத்தில் அவள் ஜட்டியை அவிழ்த்து, வேக வேகமாக ஓடிப் போய் அவளை பாத் ரூமில் உட்கார்த்தி வைத்தாள் கௌரி.  இந்த முறை எங்கேயும், எதுவும் ஈரமாகவில்லை.  மறுபடியும் அவளுக்கு உடையைப் போட்டு விட்டுப் படுக்க வைத்தப் போது,”ஈரம் செய்யலை.” என்று கௌரியிடம் சொன்னாள் சூர்யா. 
உடனே அவளை அணைத்துக் கொண்டு,”நீ ரொம்ப குட் கேர்ல் டா.” என்று சொன்ன கௌரி, பேட் கேர்ல் யாரென்று தெரியும், என்ன செய்வதென்று தான் தெரியவில்லை என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் என்ன செய்ய வேண்டுமென்று தெரிய வந்த போது, அதை உடனே செய்து முடிக்கப் போகிறாள் என்று அப்போது கௌரி அறிந்திருக்கவில்லை.
மறு நாள், செவ்வாய்க் கிழமை, திடீரென்று கௌரிக்கு மதுரை போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அதனால் ஆபிஸ் போனவள், முற்பகல் வேளையில் வீடு திரும்பினாள்.  இந்த முறை, ஏனோ, இந்த நேரத்தில் இந்தப் பயணத்தை தவிர்க்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.  ஆனால் தவிர்க்க தான் முடியவில்லை. அதனால் சிவாவிற்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தாள். அவளுடைய துணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்த பின், குழந்தைகளின் வரவிற்காக காத்திருந்தாள்.  இவள் எதற்கு இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்கிறாளென்று கௌரியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் ஜமுனா. 
பள்ளியிலிருந்து வந்த குழந்தைகளுக்குப் படுக்கையறையில் கௌரியின் பெட்டியைப் பார்த்தவுடன் அவள் ஊருக்குப் போகிறாளென்று புரிந்து விட்டது. உடனே, போன முறை அவளை உடன் அழைத்துப் போகவில்லை, இந்த முறையாவது அழைத்துப் போக வேண்டுமென்று தீபாவிற்குத் தோன்றியது. கௌரி வீட்டில் இருக்கப் போவதில்லை என்று சூர்யாவிற்குப் புரிந்தாலும், அதை வெளிப்படுத்த தெரியவில்லை.  அதனால் இரண்டு பேரும் மௌனமாக சாப்பிட வந்தனர்.  அவர்களுடன் சேர்ந்து சாப்பிட வெங்கடாசலம் வர, அவருடன் ஜமுனாவும் வந்தார். சமையலறையில் அவர் மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சாவித்திரி அம்மா.
முதலில் அமைதியாக தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென்று,”அம்மா, நானும் வரேன்.” என்றாள் தீபா.
அந்த வாக்குவாதம் அங்கே வேண்டாமென்று, தீபாவிற்குப் பதில் சொல்லாமல்  சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கௌரி.
ஆனால் தீபாவிற்கு பதில் தேவைப்பட்டது. அதனால்,”நானும் உங்ககூட வருவேன்..என்னை அழைச்சிட்டுப் போகணும்.” என்று சொல்லிவிட்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
அவள் எதற்காக அழுகிறாளென்று புரியாமல், தீபாவின் அழுகையில் பயந்து போனாள் சூர்யா.  அப்போது, சமையலறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாவித்திரி அம்மா,”என்ன ஆச்சு” என்று அவசரமாக வந்தார்.
“ஓண்ணுமில்லை..நீங்க சாப்பிடுங்க..நான் பார்த்துக்கறேன்.” என்றாள் கௌரி.
தீபா அழுகையை நிறுத்தவில்லை.  அதனால்,”தீபா, அழுகையை நிறுத்திட்டுச் சாப்பிடு.” என்று குரலை உயர்த்தி மிரட்டினாள் கௌரி. அப்போதும் தீபா அழுவது நிற்கவில்லை. 
இப்போது வீடு இருக்கும் சூழ் நிலையில் சூர்யாவை நினைத்துக் கவலையாக இருந்த கௌரிக்கு, தீபாவும் அழுதவுடன், இந்த முறை போக வேண்டாமென்று ரத்து செய்துவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் இப்போது பயணத்தைத் தள்ளி போட முடியாது.  அதனால், தீபாவும் இது போல் இருந்தால், சாவித்திரி அம்மாவினால் இருவரையும் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த கௌரி,
தீபாவின் கையைப் பிடித்து அவள் புறம் திருப்பி,”நான் ஏன் கூட்டிட்டுப் போக முடியாதுண்ணு போன முறையே உனக்குச் சொன்னேனில்லே..இதென்ன புதுப் பழக்கம்..அழுகறது, அடம் பிடிக்கறது.” என்று சீறினாள்.
அதில் தீபாவின் அழுகை உடனே நின்று போனது.  ஜமுனாவின் பேச்சு ஆரம்பமானது.
“இந்தப் புது அம்மாவோட கொஞ்சல் எல்லாம் இன்னும் எத்தனை நாள்னு நினைச்சேன்..இனிப்பா பேசறது, இளிக்கறது, சிரிக்கறது எல்லாம் இன்னைக்கே முடிஞ்சிடுச்சு.” என்றார்.
உடனே,”அவங்க புது அம்மா இல்லை பாட்டி.” என்று கத்தினாள் தீபா.
“அவ என்னைக்கும் புதுசு தான்..கொஞ்சிக்கிட்டு இருந்ததாலே உன் கண்ணுக்குத் தெரியலை” என்றார் ஜமுனா.
அதைக் கேட்டு அமைதியாகிப் போனாள் தீபா.  திடீரென்று அமைதியாகப் போன தீபாவை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி. அப்போது, தீபாவின் கத்தலில் அங்கே வந்த சாவித்திரி அம்மாவிடம்,
“இவங்க இரண்டு பேரையும் பெட் ரூமுக்கு அழைச்சிட்டுப் போய்ச் சாப்பாடு கொடுங்க.” என்று இரண்டு குழந்தைகளையும் அவர்கள் தட்டுக்களுடன் படுக்கையறைக்கு அனுப்பி வைத்தாள் கௌரி.
அதன்பின் அவளுடைய உணவை நிதானமாகச் சாப்பிட்டு முடித்தாள்.  ஜமுனாவும் வெங்கடசாலமும் சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டனர்.  அவர்கள் கை கழுவிக் கொண்டு வந்தவுடன்,”இந்த மேஜையை சுத்தம் செய்து..எல்லாப் பாத்திரத்தையும் கழுவப் போடுங்க அத்தை.” என்றாள் கௌரி.
“நான் எதுக்கு அதெல்லாம் செய்யணும்? நான் இங்கே வேலைக்காரி இல்லை.” என்று சிவாவிடம் சொன்னதையே சொன்னார் ஜமுனா.
அதற்கு ஜமுனா, வெங்கடாசலம், இருவரும் எதிர்பார்க்காத பதிலைக் கொடுத்தாள் கௌரி.
“இங்கே நீங்க வீட்டுக்காரியும் இல்லை.. இது உங்க வீடும் இல்லை.” என்றாள்.  
அவர் முகத்தில் அடித்தார் போல் பேசி, கௌரி அவமானப்படுத்தியவுடன், ரௌத்திரமானார் ஜமுனா.
“இது என் பையனோட வீடு..நான் இப்படி தான் இருப்பேன்.” என்று கத்தினார்.
அந்த வீட்டில் ஒரு வாரமாக இருக்கிறார்கள்.  இதுவரை அவர்களை மரியாதையுடன் நடத்தி வந்த கௌரி, திடீரென்று அப்படிப் பேசியவுடன்,”ஜமுனா, விடு.. சிவா வீட்லே இருக்கும் போது இதெல்லாம் பேசிக்கலாம்..இப்போ எதுவும் பேசாத.” என்று மனைவியை அடக்கினார் வெங்கடாசலம்.
“இப்போவே அவனுக்கு ஃபோன் போடுங்க..அவனை வீட்டுக்கு வரவழைங்க.” என்று வெங்கடாசலத்திற்குக் கட்டளையிட்டார் ஜமுனா.
ஜமுனாவின் கோபத்தை பொருட்படுத்தாமல், 
“இல்லை..இது உங்க பையனோட வீடு இல்லை.” என்று அவர் சொன்னதைத் தகர்த்து, அவள் சத்யவீர கௌரி என்று நிரூபித்தாள் கௌரி லக்ஷ்மி.
அது ஜமுனாவின் கோபத்தை மேலும் கிளறி விட,
“அப்போ யாரோட வீடு இது?” என்று அந்தக் கேள்விக்கு என்ன பதில் கிடைக்குமென்று தெரிந்து கொண்டே கேட்டார் ஜமுனா.  அவருக்குத் தெரியும் என்று தெரிந்திருதாலும் அதைச் சொல்ல வேண்டியவன் வந்து சொல்லட்டுமென்று,”அதை உங்க பையனை வீட்டுக்குக் கூப்பிட்டு அவங்கிட்டேயே கேட்டுக்கோங்க.” என்று அலட்டலில்லாமல் பதில் சொல்லிவிட்டு படுக்கையறைக்குச் சென்றாள் கௌரி.
அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைகளிடம், டாடா சொல்லி விட்டு, வெளியே அவள் பெட்டியுடன் வந்தவள், வாசல் கதவருகே சென்றவுடன்,”சாவித்திரி அம்மா” என்று உரக்க அழைத்தாள்.
“என்ன கௌரி?” என்று படுக்கையறையிலிருந்து வெளியே வந்தவரிடம்,
”சாப்பாடு மேஜையை அத்தை தான் சுத்தம் செய்யணும்..நீங்க செய்யக்கூடாது.” என்று கட்டளையிட்டு விட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
தாயில்லாத குழந்தைகளுக்குத் தாயாக இருக்க விரும்பியதால் தான் சிவாவை புதுமணம் செய்து கொண்டாள். அதை நிர்மூலமாக்கப் பார்க்கிறார் ஜமுனா. வேற்றுமைகளையும் வித்தியாசங்களையும் வளர்ப்பவர்களுக்கு அவள் வீட்டில் இடமில்லை. இன்று ஜமுனாவின் பேச்சினால், தீபாவின் மனத்தில் வேற்றுமை விதை விழுந்து விட்டதோ? என்ற கௌரியினுள் எழுந்த கேள்விக்கு எத்தனை யோசித்தும் விடை கிடைக்கவில்லை. அந்த மனசஞ்சலத்துடன் மதுரையை அடைந்த பின், மதுரை வந்து சேர்ந்ததையும், அவள் தங்கியிருக்கும் ஹோட்டல் விவரங்களையும் எப்போதும் போல் சிவாவிற்கு ஒரு மெஸெஜ் மூலம் அனுப்பிவிட்டு உறங்கப் போனாள்.
கௌரி வாசல் கதவை அடைத்துச் சென்றவுடன், சிவாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தார் ஜமுனா. ஏதாவது வாங்கி வரச் சொல்லுவார் என்ற எண்ணத்துடன் அழைப்பை ஏற்றவனிடம்,”நீ உடனே வீட்டுக்குக் கிளம்பி வா.” என்று கூச்சல் போட்டார் ஜமுனா.
எதற்காக கத்துகிறார் என்று சிவாவிற்குப் புரியவில்லை.  அவருக்கும் சாவித்திரி அம்மாவிற்கும் வாக்குவாதமா? அப்படி ஏதாவதுயென்றால் சாவித்திரி அம்மா தானே அழைப்பார், இவர் ஏன் அழைக்கிறார் என்று புரியவில்லை. நேற்று கடைக்கு விடுமுறை அளித்திருந்ததால், இன்று ஏகப்பட்ட வேலைகள் முடிக்க வேண்டியிருந்தது.  மதிய உணவிற்கு வீட்டிற்குப் போக வேண்டாமென்று கடைலேயே முடித்துக் கொள்ள நினைத்தான்.  இப்போதே, அவன் வீட்டிற்கு வரவேண்டுமென்று சொன்னவுடன்,
“வேலை முடிக்க வேண்டியிருக்கு ம்மா..கொஞ்ச நாளா சீக்கிரமாக் கடையை மூடறேன்..நேத்திக்கு லீவு வேற..சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரணும்னு நினைச்சேன்..முடியாது போல.” என்றவனுக்கு, “வாடா வீட்டுக்கு.” என்று கட்டளையிட்டு விட்டு அழைப்பைத் துண்டித்தார் ஜமுனா.
சிவாவிற்கு வீட்டிற்குப் போகும் எண்ணமில்லை.  அதனால் என்ன என்று விசாரிக்க சாவித்திரி அம்மாவிற்கு ஃபோன் செய்தான். அவர் எப்போதும் போல் அவனுடன் பேச, பிரச்சனை அவருக்கும் ஜமுனாவிற்கும் இல்லை என்று புரிந்து போனது.  அதனால் வேலையை முடித்து விட்டு நிதானமாக வீட்டிற்குப் போகலாமென்று முடிவு செய்தான்.

Advertisement