Advertisement

அத்தியாயம் – 37_2
“எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா, இரண்டு பேருக்கும் நல்லது, கெட்டது தெரியறவரைக்கும் அவங்களுக்குத் துணையா இருக்கணும்னு நினைச்சுப்பேன்..அப்பப்போ உடம்பு பிரச்சனை செய்யும் போது  இதுங்க இரண்டு பற்றித் தான் கவலையா இருக்கும்..அந்தக் கவலையெல்லாம் இப்போ தீர்ந்திடுச்சு..கடவுள் உன்னை அனுப்பி வைச்சிட்டார்.” என்றார் சாவிம்மா.
பணத்திற்காக வேலை செய்பவர் இல்லை சாவித்திரி அம்மா என்று சிவா சொன்னது எத்தனை உண்மை என்று உணர்ந்த கௌரியின் கண்களுக்கு அவர் தான் குழந்தைகளின் பாட்டியாக தெரிந்தார்.
அப்போது, தீபா வயதில், அங்கே வந்த சிறுமி ஒருத்தி,”ஆன் ட்டி, தீபா என்னோட விளையாட மாட்டேங்கறா.” என்று கௌரியிடம் கம்ப்ளெண்ட் செய்தாள்.
தீபாவைக் கண்களால் தேடிப் பார்த்த கௌரிக்கு, அவள், வேறு சில குழந்தைகளுடன் விளையாடுவது தெரிந்தது. 
“அவ அங்கே விளையாடறா..நீ போய் சேர்ந்துக்கோ.” என்றாள் கௌரி.
“இல்லை..சேர்த்துக்க மாட்டா..இப்போயெல்லாம் அவ என்னோட விளையாடறதில்லை.” என்றாள் அந்தச் சிறுமி.
“நான் அவக்கிட்டே சொல்றேன்..நாளைலேர்ந்து உன்னோட விளையாடுவா.” என்று வாக்குக் கொடுத்தாள் கௌரி. 
உன் பெயர் என்ன என்று கௌரி கேட்குமுன்,“தாங்க்ஸ் ஆன் ட்டி.” என்று சொல்லி விட்டு அந்தச் சிறுமி ஓடிப் போனாள். 
“இந்தப் பொண்ணு யார் சாவிம்மா?”
“அதிதி..நம்ம பில்டிங்லே தான் இருக்கு.”
அதைக் கேட்டு அதிர்ச்சியானாள் கௌரி. நெருங்கிய சினேகிதிகளுக்குள் என்ன பிரச்சனை? எப்போதிலிருந்து? என்று கேள்விகள் எழுந்தன. அவர்கள் நால்வரும் பார்க்கிலிருந்து திரும்பிய போது,”ஏன் அதிதியோட விளையாடறதில்லை?” என்று தீபாவை விசாரித்தாள்.
“நான் புதுசுன்னு அவ என்னைப் பர்த் டே பார்ட்டிக்குக் கூப்பிடலை.”
அதனால் தான் அன்று அவளுக்கு ஃபோன் செய்து தொந்தரவு செய்யவில்லை என்று புரிந்தவுடன்,“இப்போவும் அவளோட விளையாடாம, பழகாம இருந்தா எப்போதும் புதுசா தான் இருப்ப..உன்னை அவ எந்தப் பார்ட்டிக்கும் கூப்பிட மாட்டா.” என்றாள் கௌரி.
“கூப்பிட வேணாம்.” என்று தெளிவாகப் பதில் அளித்தாள் தீபா.
‘இதுயென்ன பழைசு, புதுசு என குழந்தைகள் உறவில் இத்தனை சிக்கல்.’ என்று யோசித்த கௌரி அறியவில்லை  அதே புதுசு, பழைசு வைத்து அவள் மனத்தில் குழப்பத்தை ஜமுனா ஏற்படுத்தப் போகிறாரென்று. 
”நாளைக்கு நீ அவளோட விளையாடுவேன்னு அவக்கிட்டே நான் பிராமிஸ் செய்தேன்.” என்றாள் கௌரி.
“நீங்க ஏன் பிராமிஸ் செய்தீங்க?’ என்று கரெக்ட்டான கேள்வி கேட்டாள் தீபா.  
தீபா கேட்பது சரிதானே. அவர்களுக்குள் ஏன் இந்தப் பகைமை என்று விசாரிக்காமல், எப்படித் தீபா சார்பாக நான் வாக்குறுதி கொடுத்தேன்? தான் செய்தது தப்பென்று உணர்ந்தாள் கௌரி. தீபாவைப் பாதிக்கும் விஷயங்களில் அவளைச் சிறுமியாக ஒதுக்காமல், அவளுடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்று முடிவுச் செய்தாள்.
அவர்கள் வீட்டினுள் நுழைந்தவுடன்,”இதென்ன வீட்லே ஒரு ஆள் இல்லாம இப்படித் தான் வெளியே சுற்றப் போகறதா? டீ சாப்பிடற டயம் போய் டிஃபன் சாப்பிடற டயம் வந்திடுச்சு.” என்று கத்தினார் ஜமுனா.
அவர் கத்தலில் பயந்து போய் கௌரியைக் கட்டிக் கொண்டாள் சூர்யா.  தீபாவோ, அவள் பாட்டி கத்த ஆரம்பித்தவுடன், படுக்கையறைக்கு ஓடிப் போய் விட்டாள்.  
எப்போதும் பூங்காவிலிருந்து திரும்பியவுடன், குழந்தைகள் இருவருக்கும் ஏதாவது சாப்பிட தருவது வழக்கம்.  இன்று அது போல் செய்ய முடியாது என்று உணர்ந்த சாவித்திரி அம்மா,
“இதோ இரண்டும் எடுத்திட்டு வரேன்.” என்று ஜமுனாவின் கத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது போல் தொடர முடியாது.  சீக்கிரம் இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்று என்று யோசனை செய்தபடி,  இரவு உணவு ஏற்பாட்டில் இறங்கினாள் கௌரி.
வீட்டில் நிலவரம் சரியில்லாததால், கடையை மனோகரின் பொறுப்பில் விட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்தான் சிவா.  எப்போதும் போல் டி வி பார்த்துக் கொண்டிருந்தனர் ஜமுனாவும் வெங்கடாசலமும்.  அவர்கள் எதிரே இருந்த மேஜையில் காப்பி டம்பளர்களும்  டிஃபன் பிளேட்டுக்களும் காய்ந்து போயிருந்தன.  சாவித்திரி அம்மாவும் கௌரியும் சமையலறையில் இருந்தார்கள்.
“சாவிம்மா, நீங்க கிளம்புங்க..இந்தாங்க.” என்று அவர் கையில் ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.  சாவித்திரி அம்மா சென்ற பிறகு தனியாக இரவு சமையலைத் தொடர்ந்தாள் கௌரி. 
சீக்கிரமாக வந்து விட்டதால், தீபா, சூர்யா இருவருடன் நேரத்தை செலவிட்டான் சிவா.  அப்போது,
“இன்னைக்கு அம்மாவும் எங்களோட பார்க் வந்தாங்க.” என்றாள் தீபா.
“நான் சுயிங்க்ன்னு சறுக்கினேன்.” என்று அதைச் செய்து காண்பித்தாள் சூர்யா.
“நீங்களும் ஒரு நாள் எங்ககூட பார்க் வாங்க ப்பா.” என்று சிவாவையும் அழைத்தாள் தீபா.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.  வரேன் என்று சொன்னால், எப்போது என்று கேட்பாள், இயலாது என்று சொன்னால், ஏன் என்று கேட்பாள்.  அதனால் மௌனம் காத்தான் சிவா.
அப்போது, சிவாவின் மடியில் உட்கார்ந்த சூர்யா,”பசிக்குது.” என்றாள்.
“சாயங்காலம் என்ன சாப்பிட்டீங்க?” என்று விசாரித்தான்.
“எதுவும் சாப்பிடலை..டீ, டிஃபன் கொடுக்காம பார்க்ப் போயிட்டோம்னு சாவி அம்மாவை பாட்டி திட்டினாங்க.” என்றாள் தீபா.
‘இன்று அவர் வேலைக்கு வருவார் என்று நினைக்கவேயில்லை. அவருடைய விடுமுறை தினத்தில் வேலைக்கு வந்து உதவி செய்பவரை திட்டினால் அவர் பொறுத்துக் கொள்வாரா? நிச்சயம் அவன் அம்மாவுடன் அவருக்குச் சண்டை வரப் போகிறது.  முன்பு இது போன்ற சூழ் நிலையில், அவன் பெற்றோர்களை உடனே மகேஷின் வீட்டிற்கு அனுப்பி விடுவான்.  இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை.  அவன் அம்மா செய்யும் அராஜகத்தில் சாவித்திரி அம்மா வேலையை விட்டு போய் விட்டால் என்ன செய்யப் போகிறானென்று யோசித்தவன், கௌரி அவர்களை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வானென்று அப்போது யோசிக்கத் தோன்றவில்லை.
சாவித்திரி அம்மா சென்ற பின் கௌரி மட்டும் தனியாக சமைத்துக் கொண்டிருக்கிறாள்.  அவர்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து சமையலறை பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை அவன் அம்மா.   இது போல் வீட்டு வேலைகளில் உதவி செய்யாமல், ஒத்துழைக்காமல் இருந்தால், அவர்களுடன் எப்படி இருக்கக் போகிறார்? என்று கவலை கொண்டான்.
அப்போது, அறையினுள் வந்த கௌரி,”சாப்பாடு ரெடியாகிடுச்சு..இரண்டு பேரும் கை கழுவிக்கிட்டு வாங்க.” என்றாள்.
குழந்தைகளுக்குப் பசித்ததால் தினமும் சாப்பிடும் நேரத்தை விட சீக்கிரமாக சாப்பிட உட்கார்ந்தனர் சிவாவும் கௌரியும். அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார் வெங்கடாசலம். டி வி பார்த்துக் கொண்டே அதைக் கவனித்த ஜமுனா,”என்ன டா இப்போவே சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.
“பசிக்குது..சாப்பிடறோம்.” என்று வெடுக்கென பதில் கொடுத்தான் சிவா.
அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், மேஜையை சுத்தம் செய்ய ஆரம்பித்த கௌரியிடம்,”நான் பார்த்துக்கறேன்..நீ போய் படுத்துக்கோ.” என்றான்.
அவளும், குழந்தைகளுக்கும் அவர்களின் இரவு கடமைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்கு வந்த பின்னும் சிவா வரவில்லை.
பத்து மணிவரை டி வி பார்த்துக் கொண்டிருந்த ஜமுனாவிடம்,”என்ன இருக்கு அந்த டி வி லே..ஒரு வேலையும் செய்யாம எப்போதும் இதையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” என்று கத்தினான் சிவா.
“நான் ஏன் டா வேலை செய்யணும்? என்னைப் பார்த்தா உனக்கு சாவித்திரி மாதிரி தெரியுதா?” என்று ஜமுனாவும் பதிலுக்குக் கத்தினார்.
“அம்மா, நீங்க இந்த மாதிரி இருந்தா, சரி வராது.” என்றான் சிவா.
“ஏன் டா..உங்கம்மாவாலே எதுவும் செய்ய முடியாது..அவ எப்போவும் இப்படித் தான்னு உனக்குத் தெரியாதா? எதுக்கு டா அவளைத் திட்டற? உன் வீட்டுக்கு நாங்க வந்தா சாவித்திரிதானே எப்போவும் எல்லாம் செய்வா.” என்று மனைவிக்குப் பரிந்து கொண்டு வந்தார் வெங்கடாசலம்.
“முன்னே மாதிரி, எப்போவும் போல, அந்த மாதிரி இப்போ நீங்க இங்கே இருக்க முடியாது.” என்றான் சிவா.
“ஏன் டா? ஏன் டா இருக்க முடியாது?” என்று ஜமுனா கேட்க,
“ஏன்னா, முன்னே மாதிரி இப்போ எதுவுமே இல்லை.” என்று அவன் மறுமணத்திற்குப் பிறகு அவன் வாழ்க்கை முறை மாறிப் போய்விட்டது என்று அவருக்குப் புரிய வைக்க முயன்றான். 
“நான் எப்போவும் போல தான் இருப்பேன்…புதுசா வந்திருக்கிறது நானில்லை.” என்றார் ஜமுனா.
அவர் யாரைப் பேசுகிறார் என்று புரிந்து கொண்ட சிவா,“அம்மா,  தேவையில்லாம பேசாதீங்க” என்று அந்தப் பேச்சை முடித்து உறங்கச் சென்றான்.  
இப்படியே போனால் அவனால் அவர்களை அவனுடன் வைத்துக் கொள்ள முடியாது. மகேஷுடன் பேசி அவன் பெற்றோருக்கு ஒரு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டுமென்று முடிவு செய்தான். அதுவரை அவன் அப்பா, அம்மாவை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தபடி உறங்கிப் போனான்.
அன்றைய இரவு, சூர்யாவிடம் பெரும் முன்னேற்றம் இருந்தது.  அவளுக்குப் பாத் ரூம் வந்தவுடனேயே, அம்மா என்று எழுந்து கொண்டு, கட்டிலிருந்து இறங்கி விட்டாள்.  அங்கே தரையில் பாத் ரூம் போய் விட, பரவாயில்லை என்று அவளுக்கு உடை மாற்றி விட்டு, அந்த இடத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, பாத் ரூம் மேட்டை வைத்து துடைத்து விட்டு தூங்கப் போனாள் கௌரி. இதை எதையும் அறியாத சிவா, இரண்டு நாள்களாக சூர்யா படுக்கையை நனைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டான்.  இரவு வேளையில் இது போல் விழித்துக் கொள்கிறாள் என்ற விவரம் அவனுக்குத் தெரிந்திருந்தால், அவனும் உஷாராக இருந்திருப்பான் அவன் மனைவியையும் கொஞ்சம் உஷராக இருக்கச் சொல்லியிருப்பான்.

Advertisement