Advertisement

அத்தியாயம் – 37_1
அவள் மாமியாரை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்த கௌரி, கோபத்தை துறந்து சிந்தனைவயப்பட்டாள். அப்போது தீபாவும் சூர்யாவும் அம்மா என்று அழைத்து அவளருகே வர, அவர்களை விலக்கி விட்டு, அவர்களிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவள் படுக்கையறைக்குச் சென்றாள். உடனே குழந்தைகளின் முகம் வாடிப் போக, அதைப் பார்த்து சாவித்திரி அம்மா வேதனையடைந்தார்.  ஜமுனா சந்தோஷமடைந்தார்.  
எத்தனை நாளைக்கு இன்னொருத்தி குழந்தைகள் மீது அன்பு காட்ட முடியும்? அம்மா என்று சுற்றி வந்த குழந்தைகளையும், அவர்கள் மீது பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்த கௌரியையும் பார்த்து எரிச்சலடைந்திருந்தார் ஜமுனா.  அழகான புத்தம் புது உடை கண்களை மயக்குவது போல்,  புது உறவும் ஆரம்பத்தில் அன்பாக தான் தெரியும்.  கௌரியின் உண்மை சொரூபம் வெளி வரும் வரை காத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, இத்தனை சீக்கிரம் அது நடக்கும், அதுவும் அவர் கண் முன்னே என்று எதிர்பார்க்கவில்லை.  
தீபா, சூர்யா இருவருக்கும், கௌரி ஏன் அவர்களிடம்  பேசவில்லை என்று புரியவில்லை.  தினமும் அவள் ஆபிஸிலிருந்து வந்தவுடன் இப்படித் தான் அவளை இருவரும் வரவேற்பார்கள்.  இன்று எதுவுமே பேசாமல் மௌனமாக படுக்கையறைக்குள் நுழைந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.  படுக்கையறையின் கதவைக் கௌரி சாத்தியடவுடன்,
“இன்னைக்கு உங்கம்மா டயர்டா இருக்காங்க போல..அதான் நேரே ரூமுக்கு போயிட்டா.” என்று குழந்தைகளைச் சமாதானம் செய்தார் சாவித்திரி அம்மா.  அதுதான் காரணமாக இருக்கக்கூடும் என்று சமாதானமடைந்த இருவரும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.
படுக்கையறையினுள் நுழைந்த கௌரி, கட்டிலில், கண் மூடி அமர்ந்து கொண்டாள். மூன்று நாள்களாக ஓயாமல் சூர்யாவின் பிரச்சனையைப் பற்றி தான் தீவிரமாக யோசனை செய்து கொண்டிருந்தாள். எந்த மாற்றம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு வேளைகளில் ஏசி உறங்குவது பழக்கமில்லாததால் தான், சூர்யா படுக்கையை ஈரமாக்குகிறாளோ என்று எண்ணலானாள். 
அதனால் இன்றிரவு மின் விசிறையை மட்டும் உபயோகித்துப் பார்க்க வேண்டுமென்று என்ற எண்ணியபடி வீட்டிற்குள் நுழைந்தவளுக்குத் தலை வாரிக் கொண்டு தரிசனம் கொடுத்தார் அவள் மாமியார். அதைப் பார்த்துத் தலையைக் காட்டிக் கொண்டிருந்தவர், தலை பின்னிக் கொண்டிருந்தவர், இருவர் மீதும் கோபமானாள் கௌரி. அந்தக் கோபத்தை வெளியிட முடியாமல் வேறோரு சிந்தனை அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் விளைவாக சற்று முன்  சாவித்திரி அம்மாவிடம் தலை வாரிக் கொண்டிருந்த மாமியாரின் முகத்தை அவள் மனத்துள் கொண்டு வர முயன்றாள் கௌரி.  எத்தனை முயன்றும் அந்த முகத்திற்குப் பதிலாக, சூர்யாவின் தலை முடியைப் பிடித்து, திருப்பிய மாமியாரின் முகம் தான் வந்தது. உடனே அவளுள் தெளிவு பிறந்தது. இவர் தான், இவர் தான் காரணம்.  இந்த நான்கு நாள்களில் வீட்டில் ஏற்பட்டிருந்த  ஒரே மாற்றம் இவரின் வருகை தான். 
சூர்யாவின் பிரச்சனை என்னயென்று கௌரிக்குப் புரிப்பட்டு விட்டது. ஆனால் அதை எப்படிச் சமாளிப்பது என்று தான் புரியவில்லை.  அவள் அலுவலகத்தில் இருக்கும் பொழுது, குழந்தைகளிடம் ஜமுனா எப்படிப் பழகுகிறார் என்று தெரியவில்லை. அடித்திருக்க முடியாது, அப்படி ஏதாவது என்றால் சாவித்திரி அம்மா சொல்லியிருப்பார்.  மிரட்டி இருப்பாரோ? அப்படி ஏதாவது என்றால் தீபா சொல்லியிருப்பாள். அவள் மாமனாரும், மாமியாரும் மாதக் கணக்கில் இங்கே இருக்கப் போகிறார்கள்.  அதில் எத்தனை இரவுகள், பயத்தில், படுக்கையை நனைக்கப் போகிறாள் சூர்யா? இதற்கு என்ன தீர்வு? என்ற யோசனையுடன் வேறு உடைக்கு மாறி சமையலறைக்குச் சென்றாள் கௌரி. அப்போதும்  தீபாவும் சூர்யாவும் இன்னுமும் விளையாடிக் கொண்டிருந்தனர்.  
“விளையாடினது போதும்..போய்ப் படிங்க…வீட்டுப் பாடத்தை முடிங்க.” என்று அவர்களைப் படுக்கையறைக்கு அனுப்பி வைத்தாள். 
அவளுக்கான காப்பியைப் போட்டுக் கொண்டிருந்த போது சமையலறைக்கு வந்தார் சாவித்திரி அம்மா.
உள்ளே நுழைந்தவுடன்,”என்னாலே முடியலை கௌரி…இந்தப் பிரச்சனைக்குத் தான் தீபாக்கும் சூர்யாக்கும் மொட்டை அடிச்சுகிட்டு இருந்தார் சிவா தம்பி..இப்போ தலைமுடியோட குழந்தைங்களைப் பார்க்கற போது அவ்வளவு நல்லா இருக்கு..சரி சாயங்காலம் பார்க் கூட்டிட்டுப் போக முடியலை..தலையாவது பின்னிவிடலாம்னு சீப்பெடுத்திட்டு தீபான்னு கூப்பிட்டேன்..
உடனே, எனக்குப் பின்னி விடு..தலையை அரிக்குதுண்ணு சொல்றாங்க..பேன் வந்திடுச்சாம்..உனக்கும் எனக்கும்  வராதது, பசங்க மூலம் இரண்டு நாள்லே இவங்க தலைக்கு ஏறிடுச்சுப் போல…திரும்ப அவங்க வேலையை ஆரம்பிக்கறாங்க..அடுத்து, கை ஒரு பக்கமாப் போகுது, பின்னாடி போக மாட்டேங்குது.. தினமும் பின்னி விடுண்ணு சொல்லுவாங்க..இன்னைக்கு மதியம், கால் வலின்னு இரண்டு பேரையும் மாற்றி மாற்றி  மிதிக்க வைச்சாங்க..பிள்ளைங்களுக்குக் கால் வலிச்சிடப் போகுதுண்ணு நான் தான் கொஞ்சம் நேரம் போனதும்.. விளையாடலாம்னு கூப்பிட்டு விட்டேன்..
பழைய வீட்லே, தரைலே உட்கார்ந்து எழுந்திருக்க முடியாதுண்ணு, எல்லாம் சோபாவிலே தான் செய்வாங்க..இங்கே மேஜைலே உட்கார்ந்து சாப்பிட்டாலும் எதையும் சுத்தம் செய்து, கழுவப் போடறதில்லை..காலை, மதியம் இரண்டு வேளையும் டேபிளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கு. சாயங்காலத்திலே டி வி முன்னாடி உட்கார்ந்துகிட்டு காப்பி, பலகாரம்னு ஆர்டர் போடறாங்க..எனக்கும் கால், கை கழண்டு போயிடுச்சு..அந்த வீட்டிலே  இதுக்குள்ளே சண்டை போட்டு, சிவா தம்பிகிட்டே சொல்லி மகேஷ் வீட்டுக்கு அனுப்பி விட்டிருப்பேன்..இப்போ என்னவோ அப்படி நடந்துக்க முடியலை..இவங்களை வைச்சு என்னாலே மேய்க்க முடியாது கௌரி..நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை..என்ன செய்யப் போற? என்று கேட்டார் சாவித்திரி அம்மா. கௌரியிடம் பதில் இல்லை.
என்ன செய்யப் போகிறாளென்று யோசித்து அன்றிரவு தூக்கம் கெட்டுப் போனது கௌரிக்கு.  அவள் உறங்க ஆரம்பித்த சில மணி நேரத்தில் அவளை, அம்மா என்று எழுப்பினாள் சூர்யா. எதற்காக என்று புரிந்தவுடன், அவசரமாக அவளைத் தூக்கிக் கொண்டு பாத் ரூம் செல்வதற்குள், கொஞ்சம் போல் படுக்கையும், முழுவதுமாக சூர்யாவின் ஜட்டியும் ஈரமாகியிருந்தது.  அவளை வேறு உடைக்கு மாற்றி அவர்கள் இருவரும் அங்கேயே படுத்துக் கொண்டார்கள்.
கௌரியிடம் என்ன செய்ய போகிறாய்? என்று கேட்ட சாவித்திரி அம்மா தான் மறு நாள் காலையில் எப்போதும் போல் வேலைக்கு வந்தார். அதுவே, இப்பொழுது அவர் காசிற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யவில்லை என்று உணர்த்தியது.  கௌரி வீட்டிலிருக்க, ஞாயிற்றுக் கிழமையன்று வேலைக்கு வந்திருந்த சாவித்திரி அம்மாவைப் பார்த்து ஆச்சர்யமடைந்தான் சிவா.  அவர்களுக்காக தான் என்று புரிந்ததும் அவனுக்கு கொஞ்சம் நிம்மிதியானது. இன்றைய தினத்தை கௌரி எப்படிக் கடத்தப் போகிறாள் என்று கவலையடைந்திருந்தான்.  சாவித்திரி அம்மா துணையோடு கடந்து விடும் என்ற நம்பிக்கையில் கடைக்குக் கிளம்பிச் சென்றான்.
அன்று மதியம், மகேஷைக் கைப்பேசியில் அழைத்த போது, அவன் மாமியார் வீட்டிற்கு வந்திருப்பதால், இப்போது பேச முடியாது என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.  சில நிமிடங்கள் கூடவா அவனால் பேச முடியாது என்று கோபம் கொண்ட சிவாவிற்கு மகேஷ் இருந்த நிலை தெரிந்திருந்தால் அவன் மேல் பரிதாபம் தான் வந்திருக்கும்.  
அப்போது விஜியின் வீட்டில் பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது.  சாந்தி அக்காவிற்கு அவர்கள் வீட்டில் பங்கு கொடுத்தது போல், அவளுக்கு உரிய பங்கை கொடுக்க வேண்டுமென்று அவள் பெற்றோரிடம், சகோதரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் விஜி.  அவர்கள் வீட்டில் சொத்து விஷயத்தை ஆரம்பித்தது விஜி தான்.  அதனால் அவள் வீட்டில் அதே விஷயத்தை ஆரம்பித்த போது, அவர்களுக்குப் பங்கு கிடைக்கப் போகிறது என்று மனைவியைப் பேச விட்டு சும்மா இருந்தான் மகேஷ்.  அது அவனுக்கே வினையாக வரப் போகிறது என்று சில மணி நேரம் கழித்துத் தெரிந்து கொண்டான். ஏனென்றால் விஜி சாந்தியில்லை, விஜியின் சகோதரன் சிவா இல்லை, அவன் மனைவியும் கௌரியில்லை.
அதனால் விஜியின் பங்கைப் பிரித்து கொடுத்த பின், இனி அவள், அவர்கள் வீட்டு வாசப்படி மிதிக்கக்கூடாதென்று திட்டவட்டமாகத் தெரிவித்தான் அவளின் சகோதரன். சொந்த வீட்டு ஆசையில் அவள் பிறந்த வீட்டோடு சண்டை போட்ட மகள் செயலில் மனசோடிந்து போன அவள் பெற்றோர்களும் மகன் சொன்னதை ஆமோதித்தனர்.
அன்று மாலை, அவன் வீட்டிற்கு திரும்பியவுடன், குழந்தை பிறப்பை எப்படிச் சமாளிப்பது என்று கவலை கொண்டான் மகேஷ். விஜியுடன் அதைப் பகிர்ந்து கொண்ட போது, ஜமுனாவை வீட்டிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டாள்.  அப்படியே அவர்களின் பங்குப் பணத்தை அவர்களுடையது ஆக்கிக் கொள்ள திட்டம் போட்டாள்.
அன்று முழுவதும் ஜமுனா செய்த எந்தச் செயலையும் கண்டிக்கவில்லை கௌரி.  ஒரு நாளில் அவர் என்னயென்ன செய்கிறார் என்று கண்காணித்துக் கொண்டிருந்தாள்.  சாவித்திரி அம்மா சொன்னது போல், இருந்த இடத்தில் அத்தனை சேவையும் செய்து கொண்டார்.  அவர் குளித்து முடித்து வந்த பின் அந்த அழுக்குத் துணியைத் துவைத்து, காய வைத்து, மடித்து வைத்தது சாவிம்மா தான்.  வெங்கடாசலம் எதிலும் தலையிடாமல், உணவு, தொலைக்காட்சி என்று சகலத்திற்கும் ஜமுனாவிற்குத் கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார். பெரியவர்கள் இருவருக்கும், பேத்திகள் இருவருடன் எந்த விதமான தொடர்பும் இல்லை.  ஏற்படுத்திக் கொள்ளவும் முயலவில்லை.  
ஜமுனாவும், வெங்கடாசலமும் மதிய உறக்கத்தை மாலை வரை தொடர்ந்து கொண்டிருந்தனர். அன்று வீட்டு வேலைகளில் சாவிம்மாவிற்கு கௌரியும் உதவி செய்ததால், வேலை முடிந்தவுடன், வீட்டைப் பூட்டிக் கொண்டு தீபா, சூர்யாவுடன் பூங்காவிற்குச் சென்றாள்.  இதுவரை குழந்தைகளுடன் பூங்காவிற்குக் கௌரி சென்றதில்லை.  அதனால், அவளை அம்மா என்று அவர்கள் தோழர், தோழியர்க்கு அறிமுகம் செய்து வைத்தனர் தீபாவும் சூர்யாவும். இன்று அவர்களுடன் பூங்காவிற்குக் கௌரி வந்ததில் இருவருக்கும் ஒரே சந்தோஷம்.  
அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் தீபா விளையாடச் சென்றவுடன், கௌரியின் கையைப் பிடித்து சறுக்குமரம் இருக்குமிடம் அழைத்துச் சென்றாள் சூர்யா. அங்கே, அவள், ஒவ்வொரு முறையும், வேகமாக சறுக்கி வரும் போது, தரையைத் தொடுவதற்கு முன், அவளை  அப்படியே தூக்கி விட வேண்டும். சறுக்கின் மேலேயிருந்து சாவிம்மா என்று கத்தியபடி கீழே வந்த சூர்யாவை உயரே தூக்கிக் கொண்டார் சாவிம்மா. எப்போது சூர்யா குரல் கொடுத்தாள், எப்போது அவளை அவர் தூக்கினார்யென்று கௌரிக்குப் புரிபடவில்லை.  அவர் பிடியிலிருந்து இறங்கி, மறுபடியும் வரிசையில் போய் நின்று கொண்டாள் சூர்யா. அந்த வரிசையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த சாவிம்மா, அதே சமயம் தீபாவின் மீதும் ஒரு கண் வைத்திருந்தார்.  பூங்கா முழுவதும் குழந்தைகள், பெரியவர்கள் என்று மக்கள் தான்.  அந்தக் கூட்டத்தில் யாரிடமும் வெட்டிப் பேச்சு வைத்துக் கொள்ளாமல், இரண்டு குழந்தைகள் மீதும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவரை அணைத்து,
“எவ்வளவு கவனமாப் பார்த்துக்கறீங்க..பார்க் இவ்வளவு கூட்டமா இருக்கும்னு நான் நினைக்கவேயில்லை..தாங்க்ஸ் சாவிம்மா.” என்றாள்.

Advertisement