Advertisement

அத்தியாயம் – 36_2
அவள் உடையின் ஈரத்தில் விழித்துக் கொண்ட கௌரி, கட்டிலிற்கு அருகே இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மணி மூன்று.  என்ன இது ஈரமென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில், அவளின் இடதுப் புறத்தை ஊற்று பார்க்க, அந்தப் புறம் படுக்கை விரிப்பு, அவள் இரவு உடை, சூர்யாவின் உடை மூன்றும் நனைந்து இருந்தது.  உடனே அது என்னெயென்று புரிந்து போனது.  உடை ஈரமானது கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவைத் தூக்கிக் கொண்டு போய் பக்கத்து அறையில், பங்க் பெட்டில் படுக்க வைத்தாள். அங்கே அலமாரியைத் திறந்து சூர்யாவின் மாற்றுடையை வெளியே எடுத்தாள்.  அவள் தூக்கம் கலையாமல் அவளுக்கு உடை மாற்றி விட்டுக் கொண்டிருந்த போது கதவருகே நிழலாட, சிவா.
“என்ன ஆச்சு? இங்கே படுக்க வைச்சிருக்க இவளை?” என்று கேட்டான்.
“பாத் ரூம் போயிட்டா..டிரெஸ் ஈரமாயிடுச்சு..மாத்திவிட்டேன்.”
“உன்னோடது மா?”
“ம்ம்..என் ஸைட் படுக்கையும் ஈரமாயிடுச்சு..நானும் இவளும் இங்கே படுத்துக்கறோம்..நீங்களும் தீபாவும் அங்கே படுத்துக்கோங்க.” என்றாள்.  
அதன் பின், அவர்கள் படுக்கையறைக்கு வந்து அவளுடையை மாற்றுடைய எடுத்துக் கொண்டு, தீபா புரண்டு படுத்தால் அவளுக்கு ஈரம் தெரியக் கூடாதென்று, அந்த இடத்தில் வேறொரு விரிப்பை போட்டு விட்டு, பக்கத்து அறையில் சூர்யாவுடன் படுத்துக் கொண்டாள்.  சில நிமிடங்களில் தூங்கிப் போனவள், அம்மா, என்ற அலறலில் விழித்துக் கொண்டாள்.  என்ன ஏதுயென்று உணருமுன், தீபாவை அழைத்து வந்த சிவா,”இங்கே தான் இருக்காங்க..அங்கே ஈராமாயிடுச்சுன்னு இங்கே வந்து படுத்திருக்கா.” என்று தீபாவிற்கு விளக்கினான்.
“நானும் இங்கேயே படுத்துக்கறேன்.” என்று ஏணி மேல் ஏறி, பங்க் பெட்டின் மேல் படுக்கையில் படுத்துக் கொண்டாள் தீபா.
“திடீர்ன்னு விழிச்சிருக்கா..நீ பக்கத்திலே  இல்லைன்ன உடனே பயந்து போய் கத்திட்டா.” என்றான் சிவா.
அதற்குப் பதில் சொல்லாமல், சூர்யாவை அணைத்தபடி தூக்கத்தை தொடர்ந்தாள் கௌரி.  
படுக்கையறைக்குத் திரும்பி வந்த சிவாவிற்குத் தூக்கம் போய்விட்டது.  சில நாள்களாக, அமைதியாக, புதுப் பாதையில் போய்க் கொண்டிருந்த வாழ்க்கை, ஒரே நாளில் பழையப் பாதையில் மாறிப் பயணிக்க ஆரம்பித்து விட்டதோ? அதிக தூரம் பயணிக்கும் முன் எப்படி அதைப் புதுப் பாதைக்குத் திருப்புவது? என்று யோசிக்கலானான்.
மறு நாள் காலையில், எப்போதும் போல் விழித்துக் கொண்டு, அவள் வேலைகளை ஆரம்பிக்க சமையலறைக்குச் சென்ற கௌரியின் கண்களில், முந்தைய இரவு, சாப்பாடு மேஜையில் அப்படியே விடப்பட்டிருந்த பாத்திரங்கள் பட்டன.  கடைசியாக சாப்பிட்ட ஜமுனா, மேஜையைக் கூட சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டு வைத்துவிட்டு உறங்கப் போய்விட்டார் என்று புரிந்தவுடன் எரிச்சலடைந்தாள் கௌரி.  
ஏற்கனவே நேற்றிரவு தூக்கம் சரியில்லை, இப்பொழுது, எப்போதும் செய்யும் வேலைகளுடன் எக்ஸ்ட் ரா வேலையாக, மேஜையை சரிச் செய்து, அந்தப் பாத்திரங்களைக் கழுவப் போட்டு, அதன் பின் அன்றாட வேலைகளை ஆரம்பித்து, என்று எத்தனை வேகமாக வேலைகளை செய்தாலும், அன்று அவளால் சரியான நேரத்திற்கு எதையும் செய்ய முடியவில்லை.  
சாவித்திரி அம்மா வரும் வரை உறங்கிக் கொண்டிருந்த ஜமுனா, அவர் வந்த பின், தன்னுடைய தேவைகளை, காப்பி, டிஃபன் என்று அடுத்தடுத்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.  இதற்கிடையில் கௌரி அலுவலகத்திற்குத் தயாராக,  தீபாவிற்கும் சூர்யாவிற்கும் வேண்டியதை செய்து, அவர்களைப் பஸ் ஸ்டாப்பில் விட என்று சிவா அவனின் கடமைகளைச் செய்து கொண்டிருந்தான்.
காலை உணவு சாப்பிட உடகார்ந்த கௌரியிடம்,”எத்தனை நாள் இருக்கப் போறாங்க?” என்று விசாரித்தார் சாவித்திரி அம்மா.
“தெரியலையே.” என்றாள் கௌரி.
“சிவா தம்பியைக் கேட்டுக்கறேன்..காலைலேயே ஆரம்பிச்சிட்டாங்க..ஏன் தக்காளி சட்னி செய்தேண்ணு..தனித் தனியா சட்னி செய்துக்கிட்டு இருந்தா எப்போ சமையல் செய்து முடிக்கறது..எப்போ பாத்திரங்களைச் சுத்தம் செய்து கழுவப் போடறது? எப்போ துணியைத் மெஷின்லே துணி துவைக்கப் போடறது?..எல்லாம் லேட்டாயிடும்.. அவளுக இரண்டு பேரும் டான்னு வந்து நிப்பாளுக.” என்றார்.
கழுவியப் பாத்திரங்களை அலமாரியில், அந்தந்த இடத்தில் வைப்பது சாவிம்மாவின் வேலை.  அதே போல் மெஷினில் துணியைத் துவைத்து, பால்கனியில் காய வைத்து, உள்ளே கொண்டு வந்து போடுவது அவர் வேலை.  அதை மடித்து, அலமாரியில் வைப்பது, இஸ்திரிக்குத் தனியாக பேக்கில் போட்டு வைப்பது கௌரியின் வேலை. எல்லாம் நேரத்திற்கு நடந்தால் தான் மற்ற இரண்டு வேலைக்காரிகளுக்கும் சுலபமாக இருக்கும். 
“சாவிம்மா..இன்னைக்கு நான் மெஷின் போட்டிட்டேன்..பெட்ஷிட் துவைச்சுக்கிட்டு இருக்கு.”
“பெட்ஷீட்டா? போன வாரம் தானே துவைச்சேன்.”
“நேத்து இராத்திரி சூர்யா பாத் ரூம் போயிட்டா.”
“ஐயோ..திரும்ப ஆரம்பிச்சிடுச்சா.” என்று சாவித்திரி அம்மா அதிர்ச்சியான போது கூட ஏன் திரும்ப ஆரம்பித்தது என்று கௌரி சிந்திக்கவில்லை. 
அடுத்து வந்த நாள்கள் முதல் நாளைப் போல் ஒரே பாணியில் செல்ல, சிவா, கௌரியை விட, வீட்டில் இருந்த சாவித்திரி அம்மாவையும் குழந்தைகளும் தான் அதிக பாதிப்பிற்கு உள்ளானார்கள். தொடர்ந்து மூன்று இரவுகள் படுக்கையை நனைத்தாள் சூர்யா. இரண்டு இரவுகள் தொடர்ந்து தூக்கம் கெட்டுப் போனது கௌரிக்கு.  மூன்றாவது இரவு, சூர்யாவிற்குப் பல் தேய்த்து விட்டபடி, தூக்கத்தில் பாத் ரூம் வந்தால் எழுப்ப வேண்டுமென்று கொஞ்சம் கடுமையாகச் சொன்னாள் கௌரி. அதைக் கேட்டு கண்ணீருடன் சரியென்று தலையசைத்தாள் சூர்யா. அவளருகில் நின்றிருந்த தீபாவிடம்,’நான் வர லேட்டாகிட்டா, இல்லை ஊருக்குப் போயிருந்தா, நீதான் இவளை நியாபகமா இராத்திரி பாத் ரூம் அழைச்சிட்டுப் போகணும்.” என்று கண்டிப்புடன் சொன்னாள். அதற்குச் சரியென்று கண்ணீருடன் தலையசைத்தாள் தீபா.  இரண்டு பேரும் அழுவதைப் பார்த்து மனம் கஷ்டப்பட்டாலும், இந்தப் பழக்கம் நல்லதில்லை, முறிக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்த கௌரி, அவள் மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்.
ஆனால் அன்றிரவும் அவள் படுக்கையை நனைத்தாள் சூர்யா.  ஏன் இப்படித் திடீரென்று? இதற்கு என்ன தான் தீர்வு? தினமும் இரவு வேளையில் பாத் ரூமிற்குப் போய் வந்த பின் தான் இரண்டு பேரும் உறங்குகிறார்கள்.  ஏன் இப்படி ஆகிறது? தினமும் பெட்ஷீட் துவைக்க வேண்டியிருக்கிறது.  மெஷின் தான் துவைக்கிறது என்றாலும், ஏனோ வேலை பளு கூடியது போல் தோன்றியது கௌரிக்கு. அதனால் வேறு வழி தெரியாமல், நான்கு வயது முடிந்திருந்த சூர்யாவிற்கு, இரவு வேளைகளில் டய்ப்பர் மாட்டி விடலாமா என்று யோசனையில் இறங்கினாள் கௌரி.
கௌரிக்கு மட்டுமில்லை சாவித்திரி அம்மாவிற்கும் வேலை பளு கூடி விட்டதாக தான் தோன்றியது.  விஜிக்குக் குழந்தை பிறக்கும் வரை இங்கே தான் இருப்பார்களென்று சிவா சொன்னவுடன், அவரால் அத்தனை நாள்கள் ஜமுனாவைப் பொறுத்துப் போக முடியுமாயென்று தெரியவில்லை.  காலையிலிருந்து இரவு வரை, ஒரு வேலையும் செய்யாமல், உட்கார்ந்த இடத்திலிருந்து அதிகாரம், அதட்டல் செய்பவரை எத்தனை நாள் சகித்துக் கொள்ள முடியும்? 
கடந்த மூன்று, நான்கு நாள்களாக மாலை வேளையில் பூங்கா செல்வது நின்று போய்விட்டது.  அவருக்கு நேரமே கிடைப்பதில்லை.  இத்தனைக்கும் இங்கே சமையல் வேலை மட்டும் தான். காலையில் வீட்டினுள் நுழைந்தால், மதியம் குழந்தைகளை பேருந்து நிறுத்ததிலிருந்து அழைத்து வருவதோடு சரி.  இரவு, கௌரி வந்த பின் தான் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இதுவரை ஞாயிற்றுக் கிழமைகளில் கௌரியே சமாளித்துக் கொள்வதால், அந்த ஒரு நாள் அவருக்கு ஓய்வு கிடைக்கிறது. இனி என்னவோ தெரியவில்லை.  முன்பு சிவாவுடன் அதிக நாள்கள் அவன் பெற்றோர்கள் தங்க நேர்ந்தால், ஞாயிற்றுக் கிழமைகளில், வெளியிலிருந்து சாப்பாடு வந்துவிடும்.  இனி ஞாயிற்றுக் கிழமைகளில்  தன்னை வேலைக்கு வரச் சொல்லுவார்களோ? அப்படிச் சொன்னால், நம்மால் முடியுமா? என்று கவலையானார் சாவித்திரி அம்மா.  அவரே போலவே அதே கவலையில் இருந்தாள் கௌரி. 
அவள் வெளியூர் போகும் பட்சத்தில் சாவித்திரி அம்மா தான் சகலத்தையும் சமாளித்து வந்தார். இனி அவரால் முடியுமா என்று யோசனையானாள் கௌரி. 
பூங்காவிற்குப் போக முடியாததால், குழந்தைகள் இருவரும், அவிழ்ந்து போன பின்னலோடு வீட்டிற்குள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை வேளையில், பூங்காவிற்குச் செல்லும் முன், இருவருக்கும் தலை வாரி, வேறு உடை அணிவித்து அழைத்துச் செல்வார் சாவித்திரி அம்மா.  கடந்த சில நாள்களாக, தலை வாரிவிடக்கூட நேரமில்லை. இன்று தலையாவது வாரி விடலாமென்று சீப்புடன், “தீபா” என்று அழைத்தபடி ஓடிக் கொண்டிருந்த தீபாவைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார் சாவிம்மா. அப்போது, 
“சாவித்திரி.” என்று அழைத்தார் ஜமுனா.
இந்த நேரத்தில் இது போல் அழைத்தால்,  நொறுக்குத் தீனிக்காக தான்யென்று தெரியுமாதலால், சீப்பை அவர் தலையில் சொருகிக் கொண்டு, சமையறைக்கு சென்று திரும்பிய போது, அவர் கையில், ஒரு தட்டில் பிஸ்கெட்டுக்கள் இருந்தன.
“அதை அப்படி வைச்சிட்டு, எனக்குக் கொஞ்சம் தலையைப் பின்னி விடு.” என்றார் ஜமுனா.
அதைக் கேட்டு கடுப்பானார் சாவிம்மா. இதற்காக தான் அவனுடைய இரண்டு மகள்களுக்கும் முடியை வளரவிடாமல் மொட்டையடித்துக் கொண்டிருந்தான் சிவா.
“என் ரூம்லேர்ந்து சீப் எடுத்திட்டு வா..தலை நம நமங்குது..இதுங்க இரண்டும் தான் ஸ்கூலேர்ந்து பேன் கொண்டு வந்திடுச்சுங்க.” என்று வீட்டினுள் ஒளிந்து, ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த தீபாவையும் சூர்யாவையும் குற்றவாளி ஆக்கினார் ஜமுனா.
சிறிது நேரம் கழித்து அவள் சாவியைப் போட்டுக் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்த கௌரி,  தன் மாமியாருக்குத் தலை வாரி விட்டுக் கொண்டிருந்த சாவித்திரி அம்மாவைப் பார்த்துக் கொதித்துப் போனாள்.

Advertisement