Advertisement

அத்தியாயம் – 36_1
“என்ன சொல்றீங்க? நிஜமாவா?” என்று அவன் அதிர்ச்சியை வெளியிட்டான் சிவா.
“ம்ம்..கல்யாணி உயிரோட இருக்கும் போதே செய்யணும்னு நினைச்சேன்..அவ ஒத்துக்கலை..அவ போன பிறகு என்னோட கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிடுச்சு..கௌரிக்கு நல்லது நடக்கறதைப் பார்க்கமாப் போய்ச் சேர்ந்திட்டா கல்யாணி..கௌரி எங்க பொண்ணு போல தான்னு எவ்வளவு சொன்னாலும் யாருக்கும் புரியறதில்லை..அதான் உலகத்துக்குப் புரியற மாதிரி..அவ பெயர்லே சொத்து எழுதி வைச்சு அவளை எங்களுக்குச் சொந்தமாக்கிட்டேன்.” என்றார் மேகலா.
“எங்களுக்கு இருக்கறது எல்லாம் எங்களோட  மூணு பசங்களுக்குண்ணு எழுதி வைச்சிட்டோம்.” என்று மேகலா சொன்னதை வழி மொழிந்தார் ராம கிருஷ்ணன்.
ராம கிருஷ்ணன் குடும்பத்தினர் கௌரியுடன் வைத்திருக்கும் உறவு எத்தனை ஆழமானது, அர்த்தமானது, அன்பு நிறைந்தது என்று ஆச்சர்யமானான் சிவா. அவர்களை போல் ஆழமான, அர்த்தமான, அன்பான உறவைக் கௌரியுடன் ஏற்படுத்திக் கொள்ள ஆசை வந்தது சிவாவிற்கு.
அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் குழந்தைகளை அங்கே விடாமல்,”இன்னைக்கு வேணாம்..கௌரியோட இன்னொரு நாள் வரேன்..இப்போ வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடறேன்..இல்லைன்னா நாளைக்கு ஸ்கூலுக்குப் போகாம ஏதாவது சாக்குச் சொல்வாங்க.” என்று வீட்டிற்குக் கிளம்பி விட்டான் சிவா.  
ஆனால் அவனுக்குத் தெரியாது ஆறு நாள்கள் கழித்து, அவனே சாக்குச் சொல்லி, அவர்களைச் ஸ்கூலிற்கு லீவு போட வைக்கப் போகிறானென்று.
அன்று பிற்பகல் வேளையில், கடையிலிருந்த சிவாவிற்கு மகேஷிடமிருந்து ஃபோன் வந்தது.
அது அவன் பெற்றோரைப் பற்றி தான் என்று யுகித்திருந்ததால்,”நானே பண்றேண்ணு அம்மாகிட்டே சொல்லியிருந்தேனே டா.” என்றான் சிவா.
“அவசியமில்லை..இப்போ தான் அம்மாவையும் அப்பாவையும் உன் வீட்லே விட்டிட்டு வந்தேன்.” என்றான் மகேஷ்.
“என்ன டா சொல்ற? இப்போ என் வீட்லே இருக்காங்களா? அவங்களைக் கொண்டு போய் விடறத்துக்கு முன்னாடி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.” என்றான் சிவா.
“எதுக்குச் சொல்லணும்?” என்று கேட்டவன் அறிந்திருக்கவில்லை, கூடிய விரைவில், அதே போல் தகவல் சொல்லாமல்,  அவர்களை மீண்டும் அவன் வீட்டிற்கு அழைத்துப் போக வரப் போகிறானென்று. அப்போது பூட்டியிருக்கும் சிவாவின் வீட்டைப் பார்த்துக் கலவரமாகப் போகிறானென்று. 
“அக்கா வீட்லேர்ந்து அவங்களை நேரே என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டேயா?” என்று சிவா விசாரிக்க,
ஏற்கனவே அவனுக்கு இருந்த பிரச்சனை, அவன் அக்கா வீட்டு கிருஹப்பிரவேசத்தில் பூதாகாரமாகி இருந்தது. சிவாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் மன நிலையில் மகேஷ் இல்லாததால்,
“இப்போ தான் உன் வீட்லே விட்டேன்..சாவித்திரி அம்மா இருந்தாங்க..தீபாவும் சூர்யாவும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.” என்று அதே தகவலைக் கொடுத்தான்.
“எத்தனை நாளைக்கு?” என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டன் சிவா. 
“விஜிக்குக் குழந்தை பிறந்து, அவங்க வீட்லேர்ந்து திரும்பி வர்ற வரை.” என்று சொன்னவன் அறியவில்லை, அவன் இரண்டாவது குழந்தையின் வருகை அவன் வீட்டில், அவன் அம்மாவின் மேற்பார்வையில் தான் நடக்கப் போகிறதென்று.  
இனி மகேஷுடன் பேசி பிரயோஜனமில்லை என்று அழைப்பைத் துண்டித்தான் சிவா.  அதன் பின் கௌரிக்கு ஃபோன் செய்து, அவன் பெற்றோர்கள் அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பதை அவளுக்குத் தெரியப்படுத்தினான். அடுத்து, மனோகரை பழைய கடைக்கு அனுப்பி, அவன் அம்மாவின் மூட்டு வலிக்குத் தைலம் வாங்கி வரச் சொன்னான்.  அன்றிரவு வழக்கத்தை விட சீக்கிரமாக கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றான் சிவா. 
வீட்டுக் கதவை திறந்து உள்ளே நுழைந்தவனை, வரவேற்பறையில் அலறிக் கொண்டிருந்த தொலைக்காட்சி தான் வரவேற்றது.  ஜமுனா, வெங்கடாசலம் இருவரும் சோபாவில் அமர்ந்து, தீவிரமாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். கௌரியும், குழந்தைகளும் கண்ணில் படவில்லை.  அவன் கையிலிருந்த தைலத்தை அவன் அம்மாவிடம் கொடுத்து விட்டு,
“சாப்பிட்டீங்களா?” என்று விசாரித்தான்.
“உங்கம்மாக்கு இன்னும் நேரமாகலை.” என்று பதில் அளித்தார் வெங்கடாசலம்.  உடனே கடிகாரத்தைப் பார்த்தான் சிவா.  எட்டு மணி ஆகியிருந்தது.  எப்படியோ போகட்டுமென்று படுக்கையறைக்குச் சென்றான். அங்கே தீபாவும் சூர்யாவும அவர்கள் புத்தகப் பையைத் திறந்து வைத்து எழுதிக் கொண்டிருந்தனர். 
“என்ன இன்னைக்கு, லீவு எடுத்த அன்னைக்கு இன்னும் படிச்சுக்கிட்டு இருக்கீங்க? என்று கேட்டான். அதற்கு அவர்கள் பதில் சொல்லுமுன், பாத் ரூமிலிருந்து வெளியே வந்த கௌரி,”நீங்க சீக்கிரமா வந்திட்டு அவங்களைக் கேள்வி கேட்கறீங்க..தினமும் இந்த டயமாகுது அவங்களுக்கு..லீவு போட்டா என்ன..தினமும் படிக்கணும்னு பழக்கப்படுத்தணும்.” என்றாள்.
“நான் சீக்கிரமா வந்த அன்னைக்கு அவங்க டி வி பார்த்துக்கிட்டு இருப்பாங்க.” என்றான் சிவா.
அதைக் கேட்டு கௌரியைப் பார்த்தனர் தீபாவும் சூர்யாவும். அவர்களுக்கும் டி வி பார்க்க ஆசை தான்.  ஆனால், இப்போது டி வி ஜமுனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அதனால் தான் இருவரையும் பாடங்களைப் படிக்கும்படி கட்டளையிட்டைருந்தாள் கௌரி. மாலை, ஆபிஸிலிருந்து வந்த கௌரிக்கு, மாமியார், மாமனாரை அவள் வீட்டில் பார்த்து லேசான சங்கடம் ஏற்பட்டது. 
அவள் சாவி போட்டுக் கதவைத் திறந்தவுடன், கௌரி வந்ததைக் கண்டு கொள்ளாமல், சோபாவில் படுத்தபடி டி வி பார்த்துக் கொண்டிருந்தார் ஜமுனா.  சாப்பாடு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வெங்கடாசலம்.  தீபாவும் சூர்யாவும் படுக்கையறையிலிருந்து ஓடி வந்து,”அம்மா” என்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டனர். சாவித்திரி அம்மாவைக் காணவில்லை.  நேரே அவள் படுக்கையறைக்குக் கௌரி செல்ல, அவளைப் பின் தொடர்ந்தனர் குழந்தைகள்.  வேறு உடைக்கு மாறிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள் கௌரி.  அங்கே இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி அம்மா.
“என்ன சாவி ம்மா இப்போவே செய்ய ஆரம்பிச்சுட்டீங்க?” என்று விசாரித்தாள்.
“உன் மாமனாருக்குப் பசிக்குதுண்ணு சொன்னார்..அதான்..இன்னைக்கு ஒரு நாள் செய்யறேன்….நாளைலேர்ந்து நம்ம டயத்துக்கு அவங்க மாறிக்கிட்டா தான் நம்ம வேலை கரெக்ட்டா நடக்கும்..சிவா தம்பிகிட்டே சொல்லிடு.” என்றார் சாவித்திரி அம்மா. 
ஆனால் அவர்கள் அனைவரையும் மாற்றும் முயற்சியில் ஜமுனா இறங்கியதால், சாவித்திரி அம்மா, என்னால் முடியாதென்று, பழையபடி, கவசம் போட்டுக் கொண்டு போர்க் களத்தில் குதித்தார்.
சாவித்திரி அம்மா சமைத்து வைத்து விட்டு போய்விட்டார்.  இன்னும் டிவியை விட்டு அகலவில்லை பெரியவர்கள் இருவரும்.  சிவாவும் உடை மாற்றிக் கொண்டு வந்த பின்,”அப்பா, டி வி பார்க்கணும்.” என்றாள் தீபா.
ஜமுனாவுடன் முதல் நாளே பிரச்சனை வேண்டாமென்று,“இன்னைக்கு வேணாம்…இப்போ சாப்டிட்டு தூங்கப் போ.” என்று மகளை அடக்கினான் சிவா.
மேஜையில் சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, மாமனார் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு விட்டதால், மாமியாரை மட்டும் அழைத்தாள் கௌரி.  
“இப்போ பசிக்கலை.” என்று பதில் அளித்தார் ஜமுனா.  ஆனால் வெங்கடாசலம் சாப்பிட வந்தார். இதுயென்ன இரண்டாவது முறை என்ற கேள்வியை உள்ளேயே புதைத்தாள் கௌரி. குழந்தைகளுக்காக  இரண்டு உயரமான நாற்காலிகள் வாங்கியிருந்ததால், அதில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர் சூர்யாவும் தீபாவும்.  சிவாவின் அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் கௌரி. அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டார் வெங்கடாசலம். அவர்கள் புறம் திரும்பிக்கூட பார்க்கவில்லை ஜமுனா. அதனால் அவர்களாக எடுத்துப் போட்டுக் கொண்டு அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, டி வியிலிருந்த எழுந்த ஓசை காதை வலிக்கச் செய்தது. அதனால்,
“அம்மா, சவுண்ட் கம்மியா வைங்க.” என்று கத்தினான் சிவா.
அது காதில் விழுந்தால் தானே சரி செய்வதற்கு.  உடனே அவள் நாற்காலியிருந்து குதித்து, ஓடிப் போன சூர்யா, ரிமோட்டை எடுத்து, நொடியில் ஒலியைக் குறைக்க, அப்போது தீவிரமாக டி வி  பார்த்துக் கொண்டிருந்த ஜமுனா, திடீரென்று ஒலி குறைந்து போனதில் கோபமடைந்து, சூர்யாவின் கையிலிருந்த ரிமொட்டைப் பறித்து, அவள் முதுகில் ஓர் அடி வைத்தார். 
உடனே, “அம்மா” என்று இரு குரல்கள் கேட்டது.  “அம்மா” என்று கத்தியபடி அழ ஆரம்பித்தாள் சூர்யா. “அம்மா” என்று ஜமுனாவைக் கத்தினான் சிவா. அதற்குள் சூர்யாவிடம் ஓடிப் போன கௌரி, அவளைத் தூக்கிக் கொண்டு சமாதானம் செய்தாள்.
அப்போது விளம்பர இடைவெளி வர,”இதென்ன பழக்கம்? பார்த்துக்கிட்டு இருக்கற போது சவுண்ட் கம்மி செய்யறது?” என்று கௌரியின் தோளில் முகம் புதைத்திருந்த சூர்யாவின் தலைமுடியைத் பிடித்து இழுத்துக் கேட்டார் ஜமுனா.
அவர் கையை அகற்றி,”விடுங்க.” என்று சொல்லி அங்கிருந்து அகன்றாள் கௌரி. விக்கி விக்கி அழுதுக் கொண்டிருந்தாள் சூர்யா.  மூக்கு ஒழுக ஆரம்பித்திருந்தது.  அவளைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்று, முகத்தைக் கழுவி, மறுபடியும் சாப்பாட்டு மேஜையில், அவள் நாற்காலியில் உட்கார வைத்த போது, அதில் உட்கார மறுத்தாள் சூர்யா. அவளை மடியில் வைத்துக் கொண்டு, அவளுக்கும் ஊட்டி விட்டு, தானும் சாப்பிட ஆரம்பித்தாள் கௌரி.
சூர்யா அடி வாங்கியதைப் பார்த்துப் பயந்து போய், அமைதியாக அவள் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தீபா.  சிவாவும் அமைதியாக உணவருந்தி கொண்டிருந்தான். வெங்கடாசலம் மட்டும்,
“அவளுக்கு நாடகம் பார்க்கும் போது இடைஞ்சல் செய்தாப் பிடிக்காது.” என்று ஜமுனாவின் நடவடிக்கைக்கு நியாயம் அளித்து, மனைவிக்கு ஆதரவாகப் பேசினார். 
அதற்குச் சிவாவிடமிருந்தோ, கௌரியிடமிருந்தோ எதிரொலி இல்லை.  சீக்கிரமாகச் சாப்பிட்டு முடித்து, கௌரியின் மடியிலிருந்த சூர்யாவை தூக்கிக் கொண்டு,”நீ சாப்பிடு..நான் இவளுக்கு ஊட்டறேன்.” என்று சின்ன மகளைப் பால்கனிக்கு அழைத்துச் சென்று, ஊஞ்சலில் அமர்ந்து, அவளைச் சமாதானம் செய்தபடி ஊட்ட ஆரம்பித்தான் சிவா.  சூர்யாவும் அழுத படியே சாப்பிட்டு முடித்தாள்.  அதற்குப் பின், எப்போதும் போல், அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து, கௌரி படுக்கையறைக்கு வந்த பின்னும், ஜமுனா டி வி பார்த்துக் கொண்டிருந்தார். 
அப்போது அவன் அப்பாவிற்கு, வீட்டுக் கதவை எப்படிப் பூட்டுவது, எப்படித் திறப்பது, டி வியை எப்படி அணைப்பது என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தான் சிவா.  அதன் பின் இன்னொரு படுக்கையறைக்கு அழைத்துச் சென்று எது, எங்கே இருக்கிறது என்று அனைத்தையும் அவருக்கு விளக்கி விட்டு அவன் படுக்கையறைக்கு வந்த போது, கௌரியும் சூர்யாவும் ஒருவரையொருவர் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தார்கள்.  சூர்யாவை அடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் தீபா.  தீபாவின் அருகில் படுத்துக் கொண்டான் சிவா.  இன்று தான் முதல் நாள்.  இனி வரும் நாள்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில் விழித்திருந்தவன், விடியற் காலையில் தான் உறங்க ஆரம்பித்தான். உறங்கிய சில நிமிடங்களில், கௌரியின் நடமாட்டத்தில் விழித்துக் கொண்டான்.

Advertisement