Advertisement

அத்தியாயம் – 35_2
“நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கௌரியை அறிமுகம் செய்து வை.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார் ராஜேந்திரன்.
உடனே கௌரியை அவருடைய புகுந்த வீட்டு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தி.  சின்னவள் சூர்யா கௌரியுடனேயே இருக்க, பெரியவள் தீபா, மேக்னாவோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.  ஜமுனாவும் விஜியும் நகமும் சதையும் போல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர்.  விஜியின் வயிற் பெரிதாக இருந்தது.  அவளும் பருமனாகத் தெரிந்தாள்.  மாலினி அக்காவிற்கு இப்படித் தான் இருந்தது.  அவருக்கு இரட்டைக் குழந்தைகள். இவளுக்கும் அப்படியோ,  அதனால் தான் களைப்பில் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாளோ என்று தோன்றியது கௌரிக்கு.  
ஆனால் அது காரணமில்லையென்று மகேஷ், விஜி இருவருக்கு மட்டும் தான் தெரியும்.  மகேஷின் மீது கோபமாக இருந்தாள் விஜி.  அதனால் எந்த விஷயத்திலும் தலையிடாமல், யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்தாள்.
சில மாதங்களுக்கு முன், கௌரியின் வீட்டில், அவளுள் பற்றிக் கொண்ட பொறாமை தீ, நேற்றிலிருந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது. இன்று காலை சாந்தியின் புது வீட்டைப் பார்த்து அதிர்ச்சியாகி இருந்தாள் விஜி. பழைய வீடு என்றாலும், அந்த ஏரியாவில் வீடு வாங்க எப்படி முடிந்தது என்று யோசித்து யோசித்து பைத்தியமாகி இருந்தாள்.  மெயின் ரோட்டிலிருந்து உள்ளே வந்த ஒரு குறுகலான தெருவில், ரோட்டைப் பார்த்தபடி இருந்த வீட்டின் பின்புறத்தில் சாந்தியின் வீடு இருந்தது.  அதை அடைவதற்கு, முன்னாடி இருந்த வீட்டின் வலதுப் பக்கத்தில் குறுகலான சிமெண்ட் பாதை அமைத்திருந்தார்கள்.
கௌரிக்குப் புது வீட்டை சுற்றிக் காட்டினார் சாந்தி.  வீட்டிற்குள் நுழைந்தவுடன் சின்ன வரவேற்பறை. அதன் இடதுப் புறம் ஒரு படுக்கையறை, அதில் ஒரு ஜன்னல். பகல் நேரத்தில் மின்சார விளக்கு தேவைப்பட்டது. அந்தப் படுக்கையறையிலேயே அட்டாச்ட் பாத் ரூம்.  வரவேற்பறைக்கு இடதுப் புறம் சமையலறை. அதனுடைய ஜன்னலை வெளிப்பறமாக, சிமெண்ட் பாதையைப் பார்த்தபடி அமைத்திருந்தார்கள்.  சமையலறையின் பின்பக்கம் ஒரு கதவு.  அதைத் திறந்தவுடன் சின்னதாக வெட்டவெளி. அதையொட்டி மாடிக்குச் செல்லும் படி.
“நல்லா இருக்கு அண்ணி..பின்னாடி வெளிச்சம் வருது..காலி இடம் இருக்கு.” என்றாள் கௌரி.
“எல்லாரும் சந்துலே போய் வீடு வாங்கியிருக்கீங்க..இன்னொரு வீட்டோட பின்பக்கம்..பெட் ரூம்லே வெளிச்சமில்லைன்னு சொல்றாங்க..சாமானெல்லாம் எடுத்திட்டு வர கஷ்டமா இருக்கும்..பெரிய பீரோவெல்லாம், முன்னாடி இருக்கறவங்க மாடி வழியா தான் மேலே ஏத்தி, அப்படியே எங்கே மாடிக்குக் கொண்டு வந்து, இங்கே பின்னாடி இருக்கற மாடிப்படிலே இறக்கி, வீட்டு உள்ளே கொண்டு வரணும்..ஃபிரிஜ்ஜும் அப்படித் தான் செய்யணும்..சந்துலே பெரிய சாமான் கொண்டிட்டு வர முடியாது.” என்று வருத்தப்பட்டார் சாந்தி.
“அதெல்லாம் பிராப்ளமில்லை..ஒரு டிராலிலே சாமானை நிற்க வைச்சு, சந்து உள்ளே தள்ளி விட்டா வீட்டு வாசலுக்குப் பொருள் வந்திடும் அண்ணி..இது உங்க சொந்த இடம்..வசதி வந்த பிறகு இன்னொரு மாடி கூட நீங்க கட்டிக்கலாம்.” என்று ஆறுதலாகப் பேசினாள் கௌரி.
சொந்த இடம்.  அதுதான் விஜியைக் குடைந்து கொண்டிருந்தது.  அவர்களும் கடந்த சில மாதங்களாக, சொந்த ஃபிளாட் வாங்க நிறைய முயற்சி செய்து வருகிறார்கள்.  எதுவுமே சரியாக அமையவில்லை.  பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கும் அவள் கணவனால் முடியவில்லை, இவர்களுக்கு எப்படி முடிந்தது? எங்கேயிருந்து வீடு வாங்கும் அளவிற்கு வசதி வந்தது? நிரந்தரமான வருமானம் இல்லாதவர்களால் எப்படி இது முடிந்தது என்ற கேள்விக்கு, நேற்று இரவு தான் விடை கிடைத்தது.  
சொந்த ஊரில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை விற்று, மொத்த நகையையும் விற்று, பங்காக கிடைத்த பணத்தையும் போட்டு, இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.  இவர்களால் இது முடிந்திருக்கிறது. நமக்கு இதற்கு மேலும் முடிய வேண்டும் என்று மகேஷைப் புரட்டி எடுத்து விட்டாள் விஜி.  அதன் விளைவாக, அவர்களின் வாழ்வில் அடுத்த பெரிய நிகழ்வாக, பிறக்கப் போகும் குழந்தையைக் கருதவில்லை, வாங்கப் போகும் சொத்தை தான் கருத ஆரம்பித்தாள் விஜி.  
“அந்த மாதிரி செய்யறாங்களா? எங்களுக்குத் தெரியலையே.” என்று ஆச்சர்யப்பட்டார் சாந்தி.  
அப்போது, அங்கே வந்த சிவா,”அக்கா, உன் வீட்டைப் பார்த்த பிறகு தான் உனக்குப் பரிசு வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சோம்..அதான் இன்னைக்கு எதுவும் வாங்கிட்டு வரலை.” என்றான்.
“பரவாயில்லை டா..கௌரிக்கு ஒரு புடவை, உன் பொண்ணுங்களுக்கு ஃபிராக் வாங்கி வைச்சிருக்கேன்..உனக்கு ஒண்ணும் வாங்கலை…ஐ ந் நூறு ரூபா தரேன்.” என்றார்.
“எதுக்கு வாங்கின? இவக்கிட்டே நிறைய புடவை இருக்கு..தீபாக்கும் சூர்யாக்கும் இப்போ தான் நிறைய துணி வாங்கினோம்.” என்று மறுத்தான் சிவா.
“இல்லை டா..வாங்கிக் கொடுக்கணும்..மகேஷ்கிட்டே நேத்திக்கே கொடுத்திட்டேன்..அக்‌ஷயா போட்டுக்கிட்டு இருக்கறது அந்த ஃபிராக் தான்.” என்று பேசியபடி அவர்களுக்காக வாங்கி வைத்ததைக் கொண்டு வந்து கொடுத்தார் சாந்தி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜமுனா,”சிவா” என்று அழைத்தார்.
“நீ அம்மாகிட்டே பேசிக்கிட்டு இரு..நான் போய் டிஃபன் வந்திடுச்சான்னு பார்க்கறேன்.” என்று வெளியே சென்றார் சாந்தி.
ஜமுனாவிடம் பேசச் சென்றான் சிவா.  அவனைத் தொடர்ந்தாள் கௌரி.  அவர்கள் இருவரும் அருகே வந்தவுடன், சுவரைப் பிடித்து எழுந்து கொண்ட ஜமுனா,”இப்படித் தான் கதவை பிடிச்சுக்கிட்டு, சுவத்தைப் பிடிச்சுக்கிட்டு எழுந்துக்கறேன்.. நடக்கறேன்..மூட்டு வலி தைலம் வந்து மாசக் கணக்காயிடுச்சு..எத்தனை முறை ஃபோன் செய்தேன்..நீயும் வரலை..மனோகர்கிட்டேயும் கொடுத்து அனுப்பலை.” என்று பொரிந்தார்.
“என்ன ம்மா செய்யச் சொல்றீங்க..இந்தக் கடை பக்கத்திலே அது கிடைக்கலை..தேடிப் பார்த்திட்டேன்..மனோகரைப் பழைய கடைக்குத் தான் அனுப்பணும்..அங்கேயிருந்து வாங்கிக்கிட்டு மகேஷ் வீட்டுக்கு வரணும்..அப்புறம் திரும்ப புதுக் கடைக்கு வரணும்..அவன் இதைச் செய்துகிட்டு இருந்தா எப்போ என் கடை வேலையைப் பார்ப்பான்?” என்று பதிலுக்குப் பாய்ந்தான் சிவா.
“உன்கிட்டே பேசணும்…வா” என்று அழைத்துச் சென்றார் ஜமுனா.
சுவரைப் பிடித்தபடி பின்பக்கம் மாடிப்படி அருகில் வந்த ஜமுனாவை பின் தொடர்ந்து வந்தனர் சிவாவும் கௌரியும்.
“நான் ஏன் டா மகேஷ் வீட்டுக்கு அனுப்பணும்? இப்போவே என்னையும் உங்கப்பாவையும் உன்கூடவே அழைச்சிட்டுப் போயிடு..என் பொருளையெல்லாம் அப்புறமா மகேஷ் கொண்டு வரட்டும்.  உடனே ஃபோன் போட்டு மனோகரைத் தைலம் வாங்கி வைக்கச் சொல்லு..சாவித்திரி வேலைக்கு வரும் போது எடுத்திட்டு வரட்டும்.” என்றார் ஜமுனா.
இவ்வளவு நாள்களாக அவரைத் தவிர்த்து, அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டிருந்த மகனைக் கையும் களவுமாகப் பிடித்து விலங்கிட்டார் ஜமுனா.
“இப்போ எப்படிக் கூட்டிட்டுப் போக முடியும்? கௌரியை ஆபிஸ்லே விடணும்.” என்றான் சிவா.
“அப்போ எப்போ வரேன்னு மகேஷ் கிட்டே சொல்லிடு..நாங்க தயாரா இருப்போம்.” என்றார் ஜமுனா.
“இந்த நேரத்திலே நீங்க விஜிக்குத் துணையா இருக்க வேணாமா?’ என்று கேட்டான் சிவா.
“அவ அவங்க அம்மா வீட்டுக்குப் போகப் போறா..குழந்தை பிறந்து நாலு மாசம் கழிச்சு தான் வருவா.” என்றார் ஜமுனா.
அவன் வீட்டிற்கு அவன் பெற்றோர்கள் வருவதை இனிமேலும் தாமதிக்க முடியாது என்று உணர்ந்தவன்,”மகேஷ்கிட்டே சொல்றேன்.” என்றான்.
அதுவரை அமைதியாக அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள் கௌரி. அவள் தூக்கி வைத்திருந்த சூர்யா, ஜமுனா பேச ஆரம்பித்தவுடனே கௌரியின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.  அப்போது அங்கே வந்த சாந்தி,
“டிஃபன் வந்திடுச்சு..வாங்க சாப்பிடலாம்.” என்று அவர்களை அழைத்தார்.
“விஜினாலே மாடி ஏறமுடியாது..அவளுக்குக் கீழே கொண்டு வந்து கொடுத்திடு.” என்று மகளுக்குக் கட்டளையிட்டார் ஜமுனா. அடுத்து,”சூர்யாவை சிவாகிட்டே கொடுத்திட்டு..நீ என்னை மாடிக்கு அழைச்சிட்டுப் போ.” என்று கௌரிக்குக் கட்டளையிட்டார்.
அவர் சொன்னபடி சூர்யாவைச் சிவாவிடம் கொடுத்து விட்டு, அவள் மாமியாரைக் கை பிடித்து மாடி ஏற்றவதற்குள் கௌரிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்படியொன்றும் அவருக்குக் கௌரியின் உதவி தேவைப்படவில்லை.  ஆனால் ஜமுனாவின் மனத்தில் கௌரிக்கு அவர் யாரென்று தெரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் வந்துவிட்டது. அதனால் மாடிப்படி சுவரைப் பிடித்துக் கொள்ளாமல் கௌரியின் துணையோடு மாடியேறினார் ஜமுனா. அவர்கள் டிஃபன் சாப்பிட்டு முடிக்கும் போது மறுபடியும் அவர் யாரென்று நிரூபிக்கும் வாய்ப்பு கிடைததவுடன் அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டார் ஜமுனா.
மாடியில் மேக்னாவுடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாவையும் அழைத்துக் கொண்டு டிஃபன் சாப்பிட அமர்ந்தனர் சிவாவும் கௌரியும்.   கௌரியின் மடியில் அமந்திருந்த சூர்யாவிற்கு ஊட்டி விட்டபடி டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கௌரி.  விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.  அப்போது மாடிப் படியில் வேக வேகமாக ஏறி வந்த விஜய்,
“மாமா, உங்க காரை இடிச்சிட்டாங்க.” என்றான் சிவாவிடம்.
சாப்பிட்டு முடித்து ஏழ இருந்த சிவா,”எப்படி டா? எங்கே டா?” என்று பதற்றத்துடன் கேட்க,
“அவங்க வண்டியை வெளியே எடுக்கும் போது பின்னாடி பக்கம் பட்டிடுச்சு..நீங்க வந்து பாருங்க.” என்றான்.
“யாரு டா நம்ம வண்டி மேலே இடிச்சது? நான் வரேன்.” என்று சிவாவுடன் புறப்பட்டார் ராஜேந்திரன்.
அதுவரை சிவாவிடம் சொந்தமாக கார் இருக்கிறது என்ற விவரம் அறிந்திராத ஜமுனா, அந்தத் தகவலில் கொதி நிலைக்குப் போனார். தன்னுடைய கார் தான் டமேஜ் ஆனது போல் அந்தப் பைக்காரனைத் திட்டி, தன் அந்தஸ்த்தை புது இடத்தில் தெரியப்படுத்திக்  கொண்டிருந்தார் ராஜேந்திரன்.  அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கும் இரத்தக் கொதிப்பு தீவிரமானது.
டிஃபன் சாப்பிட்டு முடித்து அவனிற்காக காத்திருந்த கௌரியிடம்,”ஸ்கிராட்ச் ஆயிருக்கு..லேசா..பெயிண்ட் வந்திருச்சு” என்றான் சிவா.  
நிதானமாக டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜமுனாவிடம்,”வரேன் ம்மா.” என்று விடைபெற்றுக் கொண்டான் சிவா. 
“சிவா, எங்களை அழைச்சிட்டுப் போக கார் எடுத்திட்டு வந்திடு.” என்று கட்டளையிட்டார் ஜமுனா.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியேறினான் சிவா.  சாந்தி அக்கா வீட்டிலிருந்து கௌரியின் அலுவலகம் செல்ல அரை மணி நேரமானது.  அங்கேயிருந்து ராம கிருஷ்ணனின் வீடு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலானது.  சிவாவையும் குழந்தைகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் மேகலாவும் ராம கிருஷ்ணனும்.
“வாங்க..வாங்க..ரொம்ப நாளா காணாம போயிட்டீங்க..பாட்டி கவலையா இருந்தேன்.” என்றார் மேகலா.
“காணாமப் போகலை..ஸ்கூலுக்குப் போயிட்டோம்.” என்றாள் சூர்யா.  அந்தப் பதிலைக் கேட்டு சிரித்தனர் ராம கிருஷ்ணனும் மேகலாவும்.  ஒரு மணி நேரம் போல் அவர்களுடன் கழித்து விட்டு, புறப்படலாம் என்று கிளம்பிய போது,”நீங்க கடைக்குப் போங்க சிவா..இவங்க இரண்டு பேரும் இன்னைக்கு இங்கேயே இருக்கட்டும்..சாயங்காலம் வந்து அழைச்சிட்டுப் போங்க.” என்றார் ராம கிருஷ்ணன்.
“இல்லை..வேணாம்..சூர்யா சும்மா இருக்க மாட்டா..ஓடிக்கிட்டு இருப்பா..எதையாவது உடைச்சுப் போடுவா..யார் பதில் சொல்றது?” என்று மறுத்தான் சிவா.
“சொந்த வீட்லே யார் கேள்வி கேட்கப் போறாங்க? இந்த வீடு, இதிலே இருக்கற சாமான் எல்லாம் மாலினி, அவினாஷ், கௌரி மூணு பேருக்கும் சொந்தம்.” என்றார் மேகலா. 

Advertisement