Advertisement

அத்தியாயம் – 35_1
அந்த விடியற் காலை வேளையில், வெளிச்சம் வர இன்னும் சில நிமிடங்கள் இருக்க, சாந்தியின் புது வீட்டின் கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீபா, சூர்யாவுடன் வந்தனர் சிவாவும் கௌரியும்.  கடந்த இரண்டு நாள்களாக, சிவாவுடன் பேசி, சாந்தியின் வீட்டிற்கு எப்போது வரப் போகிறான், என்ன சீர் செய்யப் போகிறான் என்று சிவாவின் திட்டத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருந்தார் ஜமுனா.  பிறந்த வீட்டின் சார்பாக அவர்கள் செய்ய வேண்டியதை அவர் பட்டியலிட, தான் தனியாக செய்யப் போவதாக சொல்லி அதிலிருந்து கழண்டு கொண்டான் சிவா. அதே போல் முதல் நாள் வரமுடியாது என்று மறுத்துவிட்டு, அடுத்த நாள் காலை வருவதாக அவருக்குத் தெரியப்படுத்தினான்.
சாந்தி அக்காவிற்கு என்ன பரிசு கொடுக்கலாமென்று அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. சாந்தி அக்காவிற்கு முறைப்படி செய்ய வேண்டியதை, அவன்  அப்பா, அம்மா செய்வார்கள் என்று சொல்லியதால், அவர்கள் இருவர் சார்பாக வீட்டிற்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்றாள் கௌரி.  என்ன வாங்கிக் கொடுப்பது என்று தான் தெரியவில்லை. அதனால் புது வீட்டைப் பார்த்த பின் அதைப் பற்றி முடிவு செய்யாலமென்று என்று  முடிவு செய்தனர். 
அந்தத் தெருவில் காரை பார்க்க செய்ய சரியான இடம் அமையவில்லை. தெரு முழுவதும் டூ வீலர்களைத் தாறு மாறாக நிறுத்தி வைத்திருந்தனர்.  அவர்கள் வண்டியை எங்கே நிறுத்தவது என்று யோசனையுடன் மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்த சிவா, ஷாமியான போடப்பட்டிருந்த வீட்டிற்கு அருகில் நிறுத்த முயன்று கொண்டிருந்தான்.
ஷாமியானவின் டியுப் லைட் வெளிச்சத்தில் ராஜந்திரன், மகேஷ் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டனர் குழந்தைகள். அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் வெங்கடாசலம்.  அவரருகே யாரோ நின்றிருந்ததால், அவர் முகம் சரியாகத் தெரியவில்லை.  ஏற்கனவே வீட்டிலிருந்து புறப்பட தாமதமாகி விட்டதால், 
“நீங்கெல்லாம் இறங்குங்க..நான் வண்டியைச் சரியா நிறுத்திட்டு வரேன்.” என்று கௌரியையும் குழந்தைகளையும் காரிலிருந்து இறங்கச் சொன்னான் சிவா.
காரிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்து மகேஷுக்கு மயக்கம் வராத குறை.
முன் சீட்டிலிருந்து சூர்யாவைத் தூக்கிக் கொண்டு கௌரி இறங்க, பின் பக்கத்திலிருந்து இறங்கினாள் தீபா.  தீபா இறங்கியவுடன், கதவை அழுத்தமாக சாத்தி விட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் கௌரி.  உடனே,
“வா ம்மா..வா ம்மா கௌரி..ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா பூஜைலே கலந்துகிட்டு இருந்திருக்கலாம்..பரவாயில்லை..அத்தனை முறை கூப்பிட்டும் நம்ம வீட்டுக்கு நீ வரலை..இப்படிப் புது வீட்டுக்கு வரணும்னு இருக்கு.” என்று கௌரியை வரவேற்ற ராஜேந்திரன்,”சாந்தி, சாந்தி” என்று உரக்க அழைக்க, அந்த தெருவில், அந்த நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த அத்தனை சாந்தியும் அந்த அழைப்பில் விழித்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர் மனைவி சாந்தி தான் அந்த  அழைப்பிற்கு வரவில்லை.  
எங்கேயிருந்தோ,”அப்பா, அம்மா வருவாங்க..பூஜையைச் சரி செய்துக்கிட்டு இருக்காங்களாம்.” என்று குரல் கொடுத்தான் விஜய்.
அதுவரை ராஜேந்திரன் அருகே மௌனமாக நின்று கொண்டிருந்த மகேஷ்,”வாங்க.” என்று கௌரியை அழைத்தான்.  இவன் நம்மிடமா பேசினான் என்று அக்‌ஷயாவைத் தூக்கிக் கொண்டிருந்தவனை ஆச்சர்யமாக பார்க்க, அடுத்த அதிர்ச்சியாக, நாற்காலியில் அமர்ந்திருந்த வெங்கடாசலம்,”வா ம்மா.” என்று கௌரியை அழைத்தார்.  அதைவிட பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று அப்போது கௌரி அறிந்திருக்கவில்லை. இதுவரை அவள் மாமனார், மாமியார், மச்சினன் மூவரும் அவளுடன் பேசியதே இல்லை.  மாமனார், மச்சினன் அழைப்பைத் தலையசைவில் ஏற்றுக் கொண்டாள் கௌரி.
”டேய்..நீ கீழே வந்து கௌரி மாமியை உள்ளே அழைச்சுக்கிட்டு போ.” என்று விஜய்க்கு அழைப்பு விடுத்தார் ராஜேந்திரன்.
அடுத்த சில நிமிடங்களில் கௌரியின் முன் விஜய் ஆஜரானான். “வாங்க மாமி.” என்று கௌரியை அவனுடன் அழைத்துச் சென்றான். 
விஜிக்கு சௌகர்யமாக இருக்குமென்று, அவன் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு, முதல் நாளே, குடும்பத்துடன் சாந்தியின் வீட்டிற்கு வந்து விட்டான் மகேஷ். அதனால் வீட்டினுள் கௌரி நுழைந்தவுடன்,
“இப்போ தான் உனக்கு வர முடிஞ்சுதா?” என்று கோபமாகக் கேட்டு, நான் உன் மாமியார் என்று கௌரியிடம் தன் நிலையை நிலைப்படுத்திக் கொண்டா ஜமுனா.  திடீரென்று அத்தனை பேர் முன்னிலையில் அவர் கேட்டவுடன், அவள் மனத்தில் தோன்றிய பதிலை சொல்லாமல் சிறிது தள்ளிப் போட்டாள் கௌரி.  அப்போது உள்ளே நுழைந்த சிவா,
“இரண்டு பேரையும் எழுப்பி, தயார் செய்து அழைச்சுக்கிட்டு வர வேணாமா? டயமெடுக்காதா?” என்று அவன் அம்மாவை பதில் கேள்வி கேட்டான். அந்த நொடி அப்பாடா என்று இருந்தது கௌரிக்கு.  அவன் வரக் கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும், “ஆமாம்.” என்ற ஒரு வார்த்தையில் ஜமுனாவை ஓரத்தில் உட்கார்த்தி வைத்திருப்பாள்.  அவளுடைய நல்ல மன நிலையை அவருடைய அந்தக் கேள்வியால் கெடுத்தார் ஜமுனா. 
சிவாவின் பதிலைக் கேட்டு ஜமுனாவும் விஜியும் அவன் குடும்பத்தை மும்முரமாக ஆராய்ச்சி செய்தனர். மாம்பழ நிறத்தில் ஆரஞ் பார்டர் போட்ட பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள் கௌரி.  இங்கேயிருந்து நேராக அலுவலகம் செல்ல வேண்டுமென்பதால் ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிலாக இருந்தது அவள் உடை. அதற்கு மாறாக  தீபா, சூர்யா இருவரும், ஜரிகை வைத்த பட்டு பாவாடை, சின்ன பொனிடெயில், அதில் குட்டியாக மல்லிக்கைப் பூச்சரம், கழுத்தில் தங்கச் சங்கிலி, காலில் கொலுசு, கைகளில் பளபளக்கும் வளையல் என்று அத்தையின் புது வீட்டுப் பூஜைக்கு அமர்களமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். காட்டன் ஜரிகை வேஷ்டி, காட்டன் சட்டை அணிந்திருந்தான் சிவா.  அவர்கள் நால்வரையும் அப்படிப் பார்த்தவுடன் ஏனோ ஜமுனாவிற்கு எரிச்சலாக வந்தது.
“ஏன் டா, அக்கா வீட்டுக் கிருஹப்பிரவேசத்திற்குத் தம்பி நீயே சரியான டையத்துக்கு வரலைன்னா எப்படி?” என்று மறுபடியும் அதே பேச்சை ஆரம்பித்தார் ஜமுனா.
அதற்குச் சிவா பதில் அளிக்கு முன்,”வா டா, வா கௌரி, இந்த அழகு தேவதைங்க யாரு? அடையாளம் தெரியலையே? என்று சூர்யாவை கௌரியிடமிந்து வாங்கிக் கொண்டு கொஞ்சினார் சாந்தி.
அந்தக் கேள்வி உண்மை என்று நினைத்து,”நான் சூர்யா..இது தீபா.” என்றாள் சூர்யா.  அதைக் கேட்டு உரக்கச் சிரித்த சாந்தி,”ஆமாம் டா..நீங்க சொல்லித் தான் இந்த அத்தைக்கு அடையாளம் தெரியுது..தலைமுடி எல்லாம் நீளமா வளர்ந்திடுச்சு..கைலே, கால்லே எல்லாம் என்னென்வோ போட்டுக்கிட்டு இருக்கீங்க.’ என்று பேசியபடி அவர்களை அழைத்துச் சென்று, சற்று முன் நடந்து முடிந்திருந்த ஹோமத்திலிருந்து ரக்‌ஷையை எடுத்து நால்வரின் நெற்றியிலும் இட்டு விட்டு, சூர்யாவை இறக்கி விட்டு, விழுந்து கும்பிட்டுக்கோங்க.” என்றார் சாந்தி.
அவர்கள் நால்வரும் வணங்கிய பின், சாந்தியின் அருகில் வந்த சூர்யா, அவள் கைகளைக் காட்டி,”வளையல் அம்மா வாங்கிக் கொடுத்தாங்க..இது மாலினி பெரியம்மா.” என்று காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசைக் காட்டினாள்.
“உனக்குப் புது ஃபிராக் வாங்கி வைச்சிருக்கேன் அத்தை.” என்றார் சாந்தி.  அப்போது அங்கே வந்த ராஜேந்திரன்,”வீட்லே எல்லாரும் சௌக்கியமா மா?” என்று கௌரியிடம் விசாரித்தார்.
“நல்லா இருக்காங்க.” என்றாள் கௌரி.
“ஸாரி மாமா..கொஞ்சம் லேட்டாயிடுச்சு..” என்று மன்னிப்பு கேட்டான் சிவா.
“அதான் நேத்து நைட்டே உன்னை எங்க வீட்டுக்கு வரச் சொன்னேன்..நீதான் கௌரிக்கும் குழந்தைங்களுக்கும் சரிப் பட்டு வராதுண்னு சொல்லிட்டே.” என்றார்.
“ஆமாம் மாமா.” என்று முடித்துக் கொண்டான் சிவா. நேற்று இரவு கடையை மூடிவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்திருந்தான். அவளுக்குத் தெரிந்தவர்கள் மூலம் தீபா, சூர்யா இருவருக்கும் வெள்ளிக் கொலுசு வாங்கி அனுப்பியிருந்தாள் மாலினி.  அதைப் போட்டுக் கொண்டு இருவரும் வீடு முழுக்க ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.  இரவு சாப்பாடு முடிந்த பின், மாலினியை வீடியோவில் அழைக்க, அவினாஷும் அதில் சேர்ந்து கொண்டான்.
“பாருங்க.” என்று இருவரும், கொலுசு போட்டிருந்த கால்களைக் காட்ட, கீழே குனிந்து, இருவரின் பாதங்கள் அருகே ஃபோன் கமெராவை எடுத்துச் சென்றாள் கௌரி.  அதைப் பார்த்து,
“ரொம்ப அழகா இருக்கு..நாளைக்கு அத்தை வீட்டுக்குப் போட்டிட்டு போங்க” என்றாள் மாலினி.
“அத்தை புது வீடு கட்டியிருக்காங்க.” என்றாள் தீபா.
“பெரிய வீடு” என்றாள் சூர்யா.
“ஓ..அப்படியா.” என்று மாலினி பேச்சுக் கொடுக்க, அப்போது அவளருகில் வந்து அமர்ந்தான் விட்டல்.  
“இவர் தான் கூரியர் பாயா இருந்தார்..திடீர்ன்னு வேற ஆளை சென்னைக்கு அனுப்பிடாங்க..அதான் பார்சலை கௌரி ஆபிஸ்லே கொடுக்கச் சொன்னேன்.” என்றாள் மாலினி.
“யெஸ்..உங்களையெல்லாம் நேர்லே சந்திக்கலாம்னு நினைச்சேன்..மிஸ் ஆயிடுச்சு.” என்றான் விட்டல்.
“லீவு எடுத்துக்கிட்டு வரவேண்டியதுதானே.” என்றான் சிவா.
“எனக்கு லீவு கிடைச்சாலும், மாலினிக்கும் பசங்களுக்கும் கிடைக்காது..ஸ்கூல் முடியட்டும் எல்லாரும் வரோம்.” என்று சிவாவிற்கு வாக்குறுதி கொடுத்தான் விட்டல்.
“நீங்க இந்த வீட்லே செட்டில் ஆகிட்டீங்களா?” என்று விசாரித்தாள் மாலினி.
“ஆச்சு க்கா..ஏஸி போட்டாச்சு.” என்றாள் கௌரி.
“நாளைக்கு நீ லீவா?” என்று கேட்டாள் மாலினி.
“இல்லை க்கா..கிருஹப்பிரவேசத்துக்குப் போயிட்டு ஆபிஸ் போகணும்..தீபாவும் சூர்யாவும் ஸ்கூலுக்கு லீவு.. வீட்லே தான் இருப்பாங்க..சாவி அம்மாவை மத்தியானமா வரச் சொல்லியிருக்கேன்.” என்றாள் கௌரி. அப்போது அந்த வீடியோ காலில் சேர்ந்து கொண்டான் அவினாஷ். நித்யா ஆபிஸிலிருந்து வரவில்லை. சிதார்த்தையும், அனன்யாவும் அவர்கள் அறையில் இருந்தனர்.  அவினாஷிடமும் கொலுசைக் காட்டியவுடன்,
“எல்லாத்தையும் எனக்கே அனுப்பிக்கிட்டு இருக்கீங்க.. கௌரிக்கும் குழந்தைங்களுக்கும் ஒண்ணும் வாங்கிக் கொடுக்கறதில்லை.. நானும் மாலினியும் வாங்கிக் கொடுப்போம்னு இந்த மாதிரி நடந்துக்கறீங்களா? என்று சிவாவிடம் குரலை உயர்த்தினான்.
“என்ன அண்ணா சொல்றீங்க? என்று புரியாமல் கேட்டாள் கௌரி.
“இரண்டு மாசத்திலே எத்தனை லட்சம் திருப்பிக் கொடுத்திருக்கார்ன்னு உனக்குச் சொல்லலையா?” என்று கேட்டான் அவினாஷ்.
‘இல்லை’ என்று கௌரி தலையசைத்தவுடன்,”நானும் சொல்லப் போகறதில்லை..ஆனா உனக்கும் குழந்தைங்களுக்கும் எதுவும் வாங்கிக் கொடுக்காம, எனக்கும் மட்டும் கொடுத்துக்கிட்டு இருந்தா, நானும் கடன் கொடுத்தவனாட்டம் வட்டியோடு வசூல் செய்ய ஆரம்பிப்பேன்.” என்று மிரட்டினான் அவினாஷ்.
“இவங்களுக்கும் வாங்கித் தருவேன்..இன்னும் கொஞ்சம் கடை பிக் அப் ஆகட்டும்.” என்றான் சிவா.
அவினாஷிற்குப் பணத்தைத் திருப்பி கொடுக்க ஆரம்பித்தது வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  
”சரி..அப்போ கடை பிக் ஆப் ஆன பிறகு எங்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்.” என்றாள் மாலினி.
“அடுத்த ட் ரிப் என்னோட டீரிட்ன்னு சொல்லிட்டேன்..சொன்ன பிறகு தான் உங்களையெல்லாம் அழைச்சுக்கிட்டுப் போய் எப்படி மேய்க்கப் போறேன்னு கவலை வந்திடுச்சு…அதான் இப்போலேர்ந்து சேர்த்துக்கிட்டு வரேன்.” என்றான் சிவா.
“நிறைய சேவ் செய்யுங்க..பெரிய ட்ரிப்பா போவோம்…அப்பா, அம்மாவையும் அழைச்சுக்கிட்டு..அம்மாவைப் போய்ப் பார்த்தேயா கௌரி?” என்று கேட்டாள் மாலினி.
“இல்லை க்கா..ஃபோன்லே தான் பேசறேன்..இவங்க தான் போய்ப் பார்க்கறாங்க.”
“நாளைக்குக் கிருஹப்பிரவேசம் முடிச்சிட்டு, கௌரியை ஆபிஸ்லே விட்டிட்டு, குழந்தைங்களை அழைச்சுக்கிட்டு அங்கே போகலாம்னு இருக்கேன்..நாங்க வரப் போகறதை இன்னைக்குக் காலைலே அவங்களுக்குப் ஃபோன் செய்து சொல்லிட்டேன்.” என்றான் சிவா.
அப்போது, “அம்மா, தூக்கம் வருது.” என்றாள் சூர்யா.
“அக்கா, நீங்க பேசிக்கிட்டு இருங்க..நாளைக்குப் பூஜைக்குச் சீக்கிரமாக் கிளம்பணும்..நாங்க தூங்கப் போறோம்” என்று விடைபெற்றுக் கொண்டாள் கௌரி. 
“எப்போ வேணும்னாலும் நீங்க அந்த வீட்டுக்குப் போகலாம்..அது கௌரியோட வீடு.” என்றான் அவினாஷ்.
கௌரியோடு வீடு என்று அவினாஷ் சொன்னதற்கு வேறு அர்த்தம் இருக்குமென்று அடுத்த நாள் ராம கிருஷ்ணன் சொல்லும் வரை சிவாவிற்குத் தெரியவில்லை.

Advertisement