Advertisement

அத்தியாயம் – 34
இப்போது சிவா வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது கௌரிக்கு.  அந்த நினைப்பை மெய்ப்பிப்பது போல் அழைப்பு மணி ஒலித்தது. 
வாசலில் நின்று கொண்டிருந்த சிவாவை மானிட்டரில் பார்த்து,”மாமா, வந்திட்டாங்க.” என்றான் விஜய்.
“நிஜமவா?” என்று கேட்டு சில நொடிகள் காத்திருந்த கௌரி, எதற்கு அழைப்பு மணி அடித்தான் என்று புரிந்தவுடன், அவனிடம் சாவி இல்லை என்று உணர்ந்தாள். அப்போது,
“அவனுக்கு நேரம் கிடைச்சா என்னைப் பார்க்க வரேன்னு சொன்னான்.” என்றார் சாந்தி.
இன்று காலையில் தான் சாந்தியின் கைப்பேசி அழைப்பையும், அவரை வீட்டிற்கு அழைத்திருப்பது பற்றியும் சிவாவிற்குத் தெரிவித்தாள் கௌரி. முதலில்,
“எதுக்கு வீட்டுக்குக் கூப்பிட்ட?” என்று கேட்டான் சிவா.
“வரட்டுமான்னு கேட்கறாங்க..வர வேணாம்னு எப்படிச் சொல்ல முடியும்?”
“நான் அவ ஃபோன் எடுக்கறதில்லை..அவளுக்கு ஃபோன் செய்யறதில்லை..அவ வீட்டுக்குக்கு நம்மை கூப்பிட்டா ஆனா உன்னை அழைச்சுக்கிட்டுப் போகலை…நான் ஒதுங்கிப் போனாலும் அவ விடறதா இல்லை..இப்போ நம்ம வீட்டுக்கே வரப் போறா. ” என்றவுடன், அவன் அக்காவின் மீதிருந்த கோபம் இன்னும் போகவில்லை என்று புரிந்தது கௌரிக்கு.
“பதினொரு மணிக்கு மேல தான் வரச் சொல்லியிருக்கேன்..முதல்லே அவங்க வராங்களான்னு பார்ப்போம்…நீங்க கொஞ்சம் லேட்டா கடைக்குப் போக முடியுமா? இல்லை ஒரு பன்னிரெண்டு மணி போல வீட்டுக்கு வரமுடியுமா?” என்று கேட்டவுடன்,
“லேட்டா போக முடியாது..எப்போ வர முடியும்னு கடைக்குப் போன பிறகு தான் என்னாலே சொல்ல முடியும்..நீயே அவக்கிட்டே பேசு..என்ன விஷயம்னு விசாரி.”
“ம்ம்..எப்படியும் நீங்க சாப்பாட்டுக்கு வந்து தானே ஆகணும்.”
“அது ஒரு மணி ஆகிடும்..அதுவரை அவ இருக்கப் போறாளா? அவளுக்கும் சேர்த்து சமைக்க போறேயா? சாவித்திரி அம்மாவை வரச் சொல்லட்டுமா?”
“வேணாம்..ஸ்பெஷலா எதுவும் செய்யப் போகறதில்லை..நாம எப்போதும் சாப்பிடறது தான்.”
“நீயே பார்த்துக்கோ.” என்று கௌரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புறப்படவனுக்கு கடையில் இருப்பு கொள்ளவில்லை.  அதனால் தான் முதலில் கைப்பேசியில் அழைத்துப் பேசினான். இப்போது நேரிலேயே வந்துவிட்டான்.
அவனுக்குக் கதவைத் திறந்து விட்ட கௌரி,”வீட்டுச் சாவி எடுத்துக்கிட்டுப் போகலையா?” என்று கேட்டாள்.
“கடைலேயே மறந்திட்டேன்.” என்ற பதிலில், அவன் அக்காவைப் பார்க்க தான் அவசரமாகப் புறப்பட்டு வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் கௌரி.
உள்ளே நுழைந்தவுடனேயே,”அக்கா, சாப்பிட்டாங்களா?” என்று விசாரித்தான்.
“ம்ம்ம்..பத்து நிமிஷமாயிடுச்சு.”
“குழந்தைங்க?”
“ம்ம்”
சில மாதங்கள் கழித்து நேரில் சந்தித்த தம்பியைப் பார்த்து,”இப்போ தான் டா உன் முகம் தெளிவா இருக்கு.” என்றார் சாந்தி.
“இப்போதான் முகம் தெளிவா தெரியுதுண்ணு சொல்லுங்க அண்ணி.” என்று கணவனின் தோற்றத்தை விமர்சித்தாள் மனைவி.
உடனே அதைப் புரிந்து கொண்ட சாந்தியும்,”ஆமாம் டா..நான் தான் தப்பாச் சொல்லிட்டேன்….தாடி, மீசை, தலைமுடி எல்லாம் முகத்தை மறைச்சிடும்..இப்போ தான் உன்  முகம் தெளிவாத் தெரியாது.” என்றார். 
“இப்படி இருக்கணும்னா அடிக்கடி முடி வெட்டணும்…தாடியை மழிக்கணும்..அதுகெல்லாம் நேரம் கிடைக்கறதில்லை” என்றான் சிவா. ஆனால் அந்த நேரமில்லாதவன் தான் தன்னுடைய இரண்டு மகள்களையும், இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தவறாமல் கடைக்கு அழைத்து சென்று, மொட்டை அடித்து விட்டிருக்கான் என்ற விவரம் அப்போது கௌரி அறிந்திருக்கவில்லை.
மற்றொரு படுக்கையறைக்குச் சென்று, கை, கால், முகத்தை கழுவிக் கொண்டு வந்தான் சிவா.  அப்போது, “அம்மா, எப்போ கிளம்பறோம்?” என்று அவன் அம்மாவிடம் கேட்டான் விஜய். அதற்குச் சாந்தி பதில் சொல்லு முன்,”உங்கம்மாவோட நான் கொஞ்சம் பேசணும்..நீயும், மேக்னாவும் அந்த ரூம்லே போய் ரெஸ்ட் எடுங்க..இல்லை இரண்டு பேரும் இங்கேயே உட்கார்ந்து டிவி பாருங்க.” என்றான் சிவா.
அதைக் கேட்டு, இவன் ஏதோ திட்டத்தோடு தான் வந்திருக்கிறான் என்று தோன்றியது கௌரிக்கு.  அக்கா,  தம்பி இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளட்டுமென்று, சாந்தியின் குழந்தைகளிடம்,”நீங்க இரண்டு பேரும், பங்க் பெட்லே படுத்துக்கோங்க.” என்றாள் கௌரி.
அதைக் கேட்டு விஜய்யும் மேக்னாவும் அவர்கள் அம்மாவின் முகத்தைப் பார்க்க,”இல்லை டா..ரெஸ்ட் எல்லாம் வேணாம்..நீ சாப்பிட்டு முடி..அப்புறம் உன்கிட்டே கொஞ்சம் பேசிட்டு நான் கிளம்பறேன்..இவனுக்கும் படிக்கணும்..எனக்கு வழித் தெரியாதுண்னுதான் இவனைத் துணைக்கு அழைச்சுகிட்டு வந்தேன்..உன் மாமா வீட்லே இல்லை..சைட்டுக்கு ஆள்களை அழைச்சிட்டுப் போயிருக்கார்.” என்றார் சாந்தி.
“சரி..அவங்க இரண்டு பேரும் இங்கேயே இருக்கட்டும்..நாம ரூமுக்கு போகலாம்.” என்றான் சிவா.
“நீ இன்னும் சாப்பிடலையே டா.” என்றார் சாந்தி.
அதற்குப் பதில் சொல்லாமல்,”வா.” என்று இன்னொரு படுக்கையறைக்குச் சென்றான் சிவா.  அவர்களைப் பின் தொடராமல், சாப்பாடு மேஜை அருகில் நின்று கொண்டிருந்த கௌரியிடன்,”நீயும் வா.” என்றான் சிவா.
‘நான் எதுக்கு?’ என்று கேட்க நினைத்த கௌரி, சிவாவின் முகத்தைப் பார்த்து அது வேஸ்ட் என்று உணர்ந்து அவர்களைத் தொடர்ந்து படுக்கையறைக்குச் சென்றாள். அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்தவுடன், கதவை லேசாக சாத்திய சிவா,”என்ன விஷயம் அக்கா? எதுக்கு வந்திருக்க?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
அதுவரை அவள் கேட்க வேண்டும் என்று நினைத்து, எப்படிக் கேட்பது என்று தெரியாமல், அவர் மனத்தில் இருந்ததைச் சாந்தி கொட்டியவுடன், அதற்குத் தான் வந்தார் போல என்று நினைத்துக் கொண்டிருந்தாள் கௌரி.  இப்பொழுது சிவா கேட்டவுடன், அதைப் போன்றொரு விளக்கத்தை எதிர்பார்த்தாள்.  ஆனால் அந்த விளக்கம் வரவில்லை.  சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய,
“என்ன விஷயம்னு சொல்லு..அதைக் கேட்க தான் நேர்லே வந்திருக்கேன்..கடைலே ஏகப்பட்ட வேலை இருக்கு.” என்றான் சிவா.
அதுவரை அமைதியாக இருந்த சாந்தி,
“கொஞ்ச வருஷம் முன்னாடி, ஊர்லே ஓர் இடம் வாங்கிப் போட்டிருந்தார் உன் மாமா..இப்போ அந்த இடத்தையும், என்னோட நகையையும் வித்து, என் பங்கு பணத்தையும் போட்டு, ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கியிருக்கார்..அந்த வீட்டை எங்க இரண்டு பேர்லேயும் பதிவு செய்திட்டோம்.. நான் சொந்தமா வீடு வாங்குவேண்ணு நினைக்கவே இல்லை டா..எனக்கு நீ  பங்கு கொடுத்தாலே தான் என்னாலே இந்த வீட்டை வாங்க முடிஞ்சுது….அதை உன்கிட்டே நேர்லே சொல்லிட்டு உன்னை அப்படியே கிருஹப்ரவேசத்துக்கு அழைக்கணும்னு நினைச்சேன்…இல்லைன்னா எனக்கு மன நிம்மதி கிடைக்காது.” என்று தயக்கத்துடன் பேசி முடித்தார்.
அவர் சொன்ன விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று கௌரிக்குத் தெரியவில்லை.  சொந்த வீடு சந்தோஷமான விஷயம்.  ஆனால், அவர் அதைச் சொன்ன விதத்தில் சந்தோஷமில்லை. அவர் குரலில் குற்றவுணர்ச்சியும் இயலாமையும் தான் இருந்தது.
அவன் அக்கா சொன்ன தகவல் சிவாவைப் போய்ச் சேர்ந்ததா என்று தெரியவில்லை.  அவன் முகத்திலிருந்து கௌரியால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் தான் சாந்தியும் உணர்ந்தார். அவன் முகமும், தாடையும் இறுகி போய், உணர்ச்சிகள், வார்த்தைகள் இரண்டு அவனுள்ளேயே அடைந்து கிடந்தது. சில நிமிடங்கள் கழித்து,
“என்ன டா? ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?” என்று கேட்டார் சாந்தி.
சிவாவின் நெற்றிக் கண்ணைத் திறக்க அது போதுமானதாக இருந்தது.
“என்ன சொல்லச் சொல்ற? எவ்வளவு நடந்தது..ஏதாவது ஒண்ணு நீ என்கிட்டே சொன்னேயா? மாமாகிட்டே கடையை விற்கறதைப் பற்றி பேச, மகேஷ் வந்தான்னு என்கிட்டே சொன்னேயா? உனக்கும் அதிலே பங்கு வேணும்னு என்கிட்டே ஒருவார்த்தை சொன்னேயா? எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகு எனக்கு அத்தனை முறை ஃபோன் செய்தேயே, அதுக்கு முன்னாடி ஒருமுறையாவது எனக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லணும்னு உனக்குத் தோணிச்சா? எத்தனை முறை என் கடைக்கு வந்து சாமான் எடுத்திட்டுப் போயிருப்ப? உன்கிட்டே காசு கேட்டேனா..என்கூட பிறந்தவன்னு தூக்கிக் கொடுக்கலே…. 
நீ என்ன செய்யற? என்னையும் என் குழந்தைங்களையும் நடு ரோட்டிலே நிக்க வைச்சிட்டு, இன்னைக்கு உன் வீட்டு கிருஹப்ரவேசத்துக்கு கூப்பிட வந்திருக்கே.” என்று அவன் மனக்குமுறலை வெளியேற்றினான்.
அதைக் கேட்டு சாந்தி சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார்.  உடனே கதவைச் சாத்தி, தாழ்பாள் போட்ட கௌரி,”இப்போ எதுக்கு நடந்ததைப் பற்றி பேசறீங்க..அது முடிஞ்சு போயிடுச்சு.” என்றாள். 
அவனுடைய அக்கா அழுவதைப் பொருட்படுத்தாமல், சாந்தியைச் சமாதானம் செய்ய முயற்சி செய்யாமல், கௌரியிடம்,
“நீ மட்டும் இல்லைன்னா, இந்த வீடு, கடை, குடும்பம், எதுவும் இல்லை எனக்கு..இவளும் பங்கு கேட்ட பிறகு, அதைக் கொடுக்க, அந்தக் கடையை விற்கறதைத் தவிர வேறு வழியில்லைன்னு இவளுக்குத் தெரியாதா? என்னைப் பற்றி யாராவது யோசிச்சாங்களா? சரி என்னைப் பற்றி யோசிக்க வேணாம்..அன்னைக்கு உன் வீட்லே என்ன சொன்னேன் கௌரி?..தீபா, சூர்யா இரண்டு பேரையும் உனக்கு.” என்று சிவா ஆரம்பித்தவுடன், அவன் எதைப் பற்றி சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்ட கௌரி, ஒரே எட்டில் அவனை அடைந்து, அவன் வாயை அவள் கையினால் அடைத்து,
”அந்தப் பேச்சு வேணாம்.,அதுவும் முடிஞ்சு போயிடுச்சு..இன்னைலேர்ந்து நடந்து முடிஞ்சதைப் பேச வேணாம்…
உங்க சூழ் நிலை எப்படி இருந்திச்சுன்னு எனக்குத் தெரியும்..இன்னைக்கு அண்ணியும் அவங்க சூழ் நிலையை என்கிட்டே சொல்லிட்டாங்க..அதனாலே இனி அதைப் பற்றி பேசறது சரியில்லை..நீங்க சாப்பிட வாங்க.” என்று சொல்லி விட்டு, அறையின் கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
அதற்கு மேல் அவன் அக்காவுடன் பேச விரும்பாமல் கௌரியைத் தொடர்ந்து அறையிலிருந்து வெளியேறினான் சிவா.  அவனுக்கு உணவை எடுத்து வைத்து விட்டு, வரவேற்பறையில், விஜய், மேக்னாவோடு அமர்ந்து டி வி பார்க்க ஆரம்பித்தாள் கௌரி.  அவர்கள் அம்மாவைத் தேடிய குழந்தைகள் இருவரும்,
“அம்மா எங்கே மாமி?” என்று கௌரியிடம் விசாரித்தனர்.
“வருவாங்க..அந்த ரூம்லே இருக்காங்க.” என்றாள். பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார் சாந்தி.  அதற்குள் சாப்பிட்டு முடித்து கடைக்குப் போக தயாராக இருந்தான் சிவா.
“வாங்க அண்ணி, கொஞ்ச நேரம் உட்காருங்க.. டிவி பாருங்க..மெதுவா வீட்டுக்குப் போகலாம்.” என்றாள் கௌரி.
“இல்லை கௌரி..நான் கிளம்பறேன்.” என்று சொன்னவர், நேரே சிவாவிடம் சென்று,”மன்னிச்சிடு.” என்று சொல்லிவிட்டு வாசல் கதவை நோக்கிச் சென்றார். சோபாவில் அமர்ந்திருந்த விஜய்யும், மேக்னாவும் எழுந்து கொண்டனர்.
அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் கௌரி.  சாந்தி புறப்படுவதைத் தடுத்து நிறுத்தவில்லை.  வழியனுப்ப எழவில்லை.  
கடைக்குப் போக தயாராக இருந்த சிவாவிடம்,“மாமா, இந்த நேரத்திலே எங்க வீட்டுக்குப் போகறத்துக்கு ஒரே பஸ் கிடைக்குமா?” என்று கேட்டான் விஜய்.
அதற்குச் சிவா பதில் சொல்லும் முன்,”கிடைக்காது டா..அஞ்சு மணி போல இங்கேயிருந்து கிளம்பினா, உங்களை உங்க வீட்லேயே டிராப் செய்ய வண்டியும் ஆளும் இந்த மாமி ஏற்பாடு செய்யறேன்..என்ன ஓகே வா?” என்று கேட்டாள் கௌரி.
அதைக் கேட்டவுடன், குழந்தைகள் இருவரும், சம்மதம் என்று தலையசைக்க, வேண்டாம் என்று சாந்தி மறுக்க, உடனே அவர்கள் வீட்டு கிருஹப்ரவேசத்திற்கு வரப் போவதில்லை என்று கௌரி மிரட்ட,  அதில் பயந்து போய் சரி என்று சாந்தி ஒப்புக் கொண்டார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்  கடைக்குச் செல்ல ஆயுத்தமான சிவாவிடம்,
“நீங்க எங்கே கிளம்பிட்டீங்க?” என்று கௌரி விசாரிக்க,
என்ன கேள்வி இது என்று சிவா அவளை முறைக்க, அதைப் புறம் தள்ளிய கௌரி,”விஜய்கிட்டே வண்டி மட்டும்னா சொன்னேன்..ஆளும் ஏற்பாடு செய்யறேண்ணு சொல்லியிருக்கேன்.” என்றாள்.
அப்போது தான் அவள் சொன்ன வண்டி எது, சொன்ன ஆள் யாரென்று சிவாவிற்குப் புரிந்தது. 
அடுத்த சில மணி நேரங்களைச் சிவாவின் வீட்டில், சிவாவின் குடும்பத்துடன் கழித்தார் சாந்தி. அக்கா, தம்பி நடுவில் பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், சாந்தியிடம் கோபத்தைக் காட்டவில்லை சிவா.  அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த கௌரி, இதுவரை, சைட் டிஷ் இல்லாமல் வெறும் இட்லியோடு இருந்த அவள் டிஃபன் தட்டில், தேங்காய்ச் சட்னியாக சாந்தி அண்ணியைச் சேர்த்துக் கொண்டாள்.
அன்று மாலை, சாந்தியும் குழந்தைகளும் வீட்டை விட்டுக் கிளம்பிய போது, தீபாவும் சூர்யாவும், பை அத்தை, பை அத்தை என்று வழியனுப்பி வைத்தனர்.  அதே போல் சாந்தியின் குழந்தைகள், மேக்னா, விஜய் இருவரும், கௌரியிடம், பை மாமி, பை மாமி என்று விடைபெற்றுக் கொண்டனர்.  
கௌரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு,”வரேன் கௌரி..ரொம்ப நன்றி..உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு..என்னாலே முடிஞ்சதை செய்யறேன்” என்றார் சாந்தி. 
அப்போது அவர்கள் மூவரும் அறிந்திருக்கவில்லை, கௌரியில்லை சிவா தான் அவரிடம் உதவி கேட்கப் போகிறானென்று.
அதைக் கேட்டு, அதுவரை கடைப்பிடித்து வந்த பொறுமை பறந்து போக,“கிளம்புங்க..உங்களை வீட்லே விட்டிட்டு நான் கடைக்குப் போகணும்..மத்தியானம் லன்சுக்கு வீட்டுக்கு வந்தவன்..இராத்திரி சாப்பாடு டயத்துக்குத் தான் திரும்ப கடைக்குப் போவேன் போல.” என்று புறப்படும் நேரத்தில் அவன் அக்காவின் மனத்தைப் புண்படுத்தினான் சிவா.
அதைக் கேட்டு சாந்தியின் முகம் மாறிப் போக, உடனே,“வீட்டுக்கு விருந்தாளி வந்தா, வேலையெல்லாம் முன்னே பின்னே தான் நடக்கும்…அடுத்த முறை அண்ணி நம்ம வீட்டுக்கு வரும் போது, நானே அவங்களை வீட்லே கொண்டு போய் விடறேன்.” என்று உடைந்து போன உறவை ஒட்ட வைக்க முயற்சி செய்த கணவனின் உடன்பிறப்பிற்கு ஆதரவாகப் பேசி, அவளும் அந்த உறவுடன் ஒட்டிக் கொள்ள விரும்புகிறாள் என்று தெரிவித்து, அவள் கீர்த்தி கௌரி என்று நிரூபித்தாள் கௌரி லக்ஷ்மி.
*********************************************************
கீர்த்திகௌரி, விஜயகௌரி – நல்ல உறவுகளையும், நட்பையும் தருபவள்.

Advertisement