Advertisement

அத்தியாயம் – 33_2
அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி.  வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய் மானிட்டரைப் பார்த்து,” அத்தை.” என்று கத்தினாள்.
அவள் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்த கௌரி, டீ ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தாள்.  பேண்ட்டும் டீ ஷர்ட்டும் ஈரமாக இருந்தது. வாசல் கதவை கௌரி திறந்தவுடன், அவரின் இரண்டு குழந்தைகளோடு உள்ளே வந்த சாந்தியிடம். “வாங்க அண்ணி..உடகாருங்க…ஒரு நிமிஷம் வந்திடறேன்.” என்று சொல்லும் போதே அறையினுள்ளிருந்து,”அம்மா..கண் எரியுது.” என்று குரல் கொடுத்தாள் தீபா. 
“வரேன்.” என்று உள்ளே ஓடிப் போனாள் கௌரி.
அந்த வரவேற்பறையைப் பார்வையிட்டார் சாந்தி.  நேர்த்தியாக, அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  இரண்டு குழந்தைங்கள் இருக்கும் வீடாக தெரியவில்லை.  அத்தனை சுத்தமாக இருந்தது. அப்போது தான் தலைக்குக் குளித்திருந்த சூர்யா, மெலிதான பருத்தி ஃப்ராக் அணிந்திருந்தாள்.  அவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே ஆர்வமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.  
பத்து நிமிடங்கள் கழித்து படுக்கையறையிலிருந்து தீபாவும் கௌரியும் வெளியே வந்தனர்.  தீபாவும் தலைக்குக் குளித்திருந்தாள்.  சூர்யாவைப் போல் பருத்தி ஃப்ராக் அணிந்திருந்தாள்.  
சமையலறையை நோக்கிச் சென்ற கௌரி,“அத்தை என்ன குடிப்பாங்கண்ணு கேட்டுக்கிட்டு வா.” என்று தீபாவை அனுப்பி வைத்தாள்.
உடனே வரவேற்பறைக்கு வந்த தீபா,”அத்தை, ஜுஸ் குடிக்கறீங்களா?” என்று கேட்டாள்.
அவர் சரியென்று தலையசைத்தவுடன், சூர்யாவும் தீபாவும், எல்லார்க்கும் கிளாஸ்களில் ஜுஸ் ஊற்றிக் கொண்டு வந்தனர். குழந்தைங்கள் நால்வரும் ஒரு சோபாவில் அமர்ந்து ஜீஸைக் குடிக்க ஆரம்பித்தனர்.
“தீபா, அம்மாவும் குளிச்சிட்டு வரேன்..சூர்யா, ஜீஸ் கிளாஸைக் கவனமா பிடிச்சிக்கோ..நான் வர்றத்துக்குள்ளே குடிச்சிருக்கணும்.” என்று இரண்டு குழந்தைகளிடமும் சொல்லி விட்டு,“அண்ணி…கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..நான் குளிச்சிட்டு வரேன்.. சாப்பிடலாம்.” என்று சாந்தியிடம் சொல்லிக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றாள்.
இருபது நிமிடங்கள் கழித்து வெளியே வந்த கௌரியும் தலைக்கு குளித்திருந்தாள். மெலிதான குர்த்தி, காட்டன் பேண்ட் அணிந்திருந்தாள். அப்போது கிட்டதட்ட மதியம் பன்னிரெண்டு மணியாகியிருந்தது.  நேராக சமையலறைக்குச் சென்றவள், அங்கே தயாராக இருந்த உணவைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டு, சாந்தியைச் சாப்பிட அழைத்தாள்.
அவர்கள் மூவரையும் குழந்தைகள் அறையிலிருந்த பாத் ரூமிற்கு அழைத்துச் சென்றாள் கௌரி. அவர்கள்  கை கழுவிக் கொண்டு வருமுன், தீபாவும் சூர்யாவும் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.  சாப்பாடு முடியும் வரை குழந்தைகள் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  பாதி சாப்பாட்டிலேயே சூர்யாவிற்கு தூக்கம் வந்தது.  அதைக் கவனித்த கௌரி, உடனே அவளை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, மீதியிருந்த சாப்பாட்டை ஊட்டி முடித்தாள்.  பின் குழந்தைகள் இருவரையும் அவள் அறையில் தூங்க வைத்துவிட்டு வரவேற்பறைக்கு வந்தாள்.  
சாந்தியும் அவர் குழந்தைகளும் சாப்பிட்டு முடித்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தனர்.
“உனக்குப் பிடிக்கற சேனல் போட்டுக்கோ.” என்று டிவி ரிமோட்டை சாந்தியின் மகன் விஜய்யிடம் கொடுத்தாள் கௌரி.  மேக்னாவும் அவள் அண்ணாவுடன் சேர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள். அடுத்து, சாப்பாடு மேஜையை ஒழுங்கு செய்யும் வேலையில் இறங்கினாள் கௌரி.  உடனே சாப்பாடு மேஜைக்கு வந்த சாந்தி,
“சிவா எப்போ வருவான் சாப்பிட?” என்று கேட்டார்.
“ஒரு மணிக்கு மேலே.” என்றாள்.
அவர் வீட்டுக்கு வருவது அவனுக்குத் தெரியுமாயென்று அவருக்குத் தெரியவில்லை.  அதைக் கௌரியிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அப்போது கௌரியின் கைப்பேசி அழைத்தது. சிவா தான் அழைக்கிறான் என்றவுடன் எதற்காக அழைக்கிறானென்று கௌரிக்குப் புரிந்தது. அவள் அழைப்பை ஏற்றவுடன்,”அக்கா வந்திட்டாங்களா?” என்று விசாரித்தான். 
“இங்கே தான் இருக்காங்க..பேசுங்க.” என்று ஃபோனை சாந்தியிடம் கொடுத்தாள் கௌரி.
“என்ன டா வீட்டு பக்கம் வரவே இல்லை…ஃபோன் கூட செய்யலை” என்று கேட்ட சாந்தியின் குரலில் அழுகை தெரிந்தது.  உடனே கௌரியின் பார்வை அவர் முகத்தைத் துளைத்தது.  அதை உணர்ந்தாலும் அவர் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்,”அக்கா மேலே இன்னும் கோவமா?” என்று கேட்டார் சாந்தி. அதற்கு சிவா என்ன பதில் சொன்னானென்று தெரியவில்லை ஆனால் அந்தப் பதிலில் சமாதானமடைந்து அழைப்பைத் துண்டித்தார் சாந்தி.
அவள் வேலையைக் கௌரி தொடர்ந்து கொண்டிருந்ததால், அங்கே, சாப்பாடு மேஜையில் அமர்ந்து பேச ஆரம்பித்தார் சாந்தி.
”எங்க அப்பாவோட பெட்டிக்கடையை சிவா எப்போ கம்ப்யூட்டர் கடையா மாத்தினான்னு எனக்கு ஞாபகம் இல்லை..என் கல்யாண பத்திரிக்கையை டிசைன் செய்து கொடுத்தது அவன் தான்..எங்க வசதிக்குச் சரின்னு பட்ட இடத்திலே என்னைக் கல்யாணம் செய்து கொடுத்தாங்க..முதலேர்ந்து அவங்களுக்கு ரியல் எஸ்டெட் வியாபாரம் தான்..வாடகை, விலைக்கு வாங்கறது, விற்கறது, லீஸ் எல்லாம்..எங்களுக்காவது சொந்தமா கடை இருந்திச்சு..அவங்களுக்கு சொந்தமா எதுவுமில்லை..வீடு, கடை எல்லாம் வாடகை தான்..இப்போவரை..
எல்லார் போல தான் எங்க குடும்பமும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.  அப்படியில்லைன்னு காயத்ரி போன பிறகுதான் தெரிஞ்சது. அப்போ சூர்யாவுக்கு இரண்டு வயசு தான்.  இரண்டு பொண் குழந்தைங்கண்ணு என்னாலே முடிஞ்ச உதவியை இந்த இரண்டு வருஷமா சிவாக்கு செய்துகிட்டு இருந்தேன்… நான் எவ்வளவு செய்ய முடியும்? எனக்குக் குடும்பமில்லையா?
மகேஷ் கல்யாணத்துக்குப் பிறகு இரண்டு தம்பிகளோட இருக்கப் போறேண்ணு அம்மா சொல்லிட்டாங்க..அதனாலே எனக்கு அம்மா வீடு இல்லாமப் போயிடுச்சு..அம்மா வீட்டுக்குப் போய் ஒரு மாசம்கூட இருக்கலாம்..தம்பிங்க வீட்லே அந்த மாதிரி இருக்க முடியுமா? அதான் எங்கேயும் போகாம என் வீட்டோட, குழந்தைங்களோட இருந்துகிட்டேன்..
காயத்ரி போன பிறகு அம்மாவும் அப்பாவும் சிவாவோட இருந்துப்பாங்கண்ணு நினைச்சேன்.. ஆனா அம்மா முடியாதுண்ணு சொல்லிட்டாங்க..முதல்லே கொஞ்ச நாள் சிவாவோட தான் இருந்தாங்க, அவனாலே அவங்களைச் சமாளிக்க முடியலை..இரண்டு சின்ன குழந்தைங்களை வைச்சுக்கிட்டுக், கடையைப் பார்த்துக்கிட்டு, அம்மாவை வைத்தியத்துக்கு அழைச்சுக்கிட்டு போய்கிட்டு..எவ்வளவு செய்வான்? அதான் மகேஷோட இருக்கப் போறேண்ணு அவங்க சொன்ன போது அவனும் வேணாம்னு சொல்லலை..
இந்த ஏற்பாடு வேற பிரச்சனையைக் கிளப்பிச்சு…அம்மா, அப்பாவை அவன் வைச்சுக்கறதுனாலே நிறைய செலவாகுதுண்ணு மகேஷ் புலம்பிக்கிட்டு இருப்பான்..சிவாவும் அவனுக்கு உதவி செய்துகிட்டு தான் இருந்தான்..ஆனா மகேஷ் கண்ணுக்கு அது தெரியலை..இந்த மாதிரி போய்கிட்டு இருந்தப்ப திடீர்ன்னு ஒரு நாள், மகேஷ் என் வீட்டுக்காரர்கிட்டே கடை எத்துணைக்குப்  போகும்ணு கேட்டுப் புதுப் பிரச்சனையை ஆரம்பிச்சு வைச்சிட்டான்..
அதுவரை சும்மா இருந்த என் வீட்டுக்காரர் உடனே அந்தக் கடைலே என் பங்கையும் கேட்டு வாங்கிட்டு வரணும்னு என்னை பாடுபடுத்திட்டாரு..அந்தக் கடையை வைச்சுத்தான் சிவா பொழைக்கறான், அதிலே எப்படிப் பங்கு கேட்கறதுண்ணு தினமும் எங்களுக்குள்ளே சண்டை..
அவருக்கு நிரந்தர வருமானம் கிடையாது..நானும் வீட்டோட இருக்கேன் அதனாலே இந்தப் பணம் வந்தா உதவியா இருக்கும்னு பேசி பேசி என் மனசை அப்படியே மாத்திட்டார்…ஏதாவது ரொக்கம் கொடுத்தா வாங்கிக்கலாம்னு நினைச்சு தான் சிவா வீட்டுக்குப் போனேன்..
எனக்கு எதுவும் கொடுக்க முடியாதுண்ணு மகேஷ் சொன்னவுடனே எனக்குப் கோபம் வந்திடுச்சு..இதுவரை அவன்கிட்டேயிருந்து எந்த உதவியும் எடுத்துக்கிட்டது இல்லை..கேட்டதும் இல்லை..சிவா கடைலேர்ந்து பிள்ளைங்களுக்கு நிறைய சாமான் எடுத்திட்டுப் போவேன்..அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்..அதனாலே மகேஷ் அப்படிப் பேசினவுடனே எங்கே எனக்கு ஒண்ணுமே கிடைக்காமப் போயிடுமோன்னு நினைச்சு தான் தான் கடைலே என் பங்கைக் கொடுக்கணும்னு சண்டை போட்டேன்..அப்போகூட கடையை உடனே விற்கணும்னு நான் சொல்லவேயில்லை..இந்த மனுஷன் தான்” என்று மேலே பேச முடியாமல் அழ ஆரம்பித்தார் சாந்தி.  அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தான் விஜய்.
“என்ன மா? என்ன ஆயிடுச்சு.” என்று அவன் கவலையுடன் கேட்க,”ஒண்ணுமில்லை டா..மாமிகிட்டே பேசிட்டு இருக்கேன்..நீ போ..கொஞ்ச நேரத்திலே கிளம்பிடலாம்..உனக்குப் படிக்கணுமே.” என்று அவனை அனுப்பி வைத்தார்.
சில நொடிகள் கழித்து,”உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே கடையை வித்து கதையை முடிச்சிட்டார்..அதுக்கு அப்புறம் சிவா என் வீட்டுக்கு வரவே இல்லை..அவன் வீட்டைக் காலி செய்த பிறகு மகேஷோட தான் இருந்தான்..கல்யாணம் முடிஞ்சவுடனே என் வீட்டுக்கு வரணும்னு உன்கிட்டேயும் சொன்னேன்….நீங்க வரவே இல்லை..இந்த அக்கா வேணாம்னு சிவா முடிவெடுத்திட்டான் போல..
புகுந்த வீட்லே பொண்ணுங்களோட பேச்சு எடுபடணும்னா, அவங்க பெயர்லே சொத்து இருக்கணும்..சொந்த சம்பாத்தியத்தியம் இருக்கணும்..இல்லை சொல்றபடி கேட்கற புருஷன் அமையணும்.. அப்போதான் அவங்க பேச்சுக்கு அந்த வீட்டுலே மரியாதை இருக்கும்..எனக்கு மூணும் கிடையாது அதனாலே என் வீட்லே நான் சொல்றது எதுவும் எடுபடாது..அந்த மாதிரி சூழ் நிலை என்னாலே  என்ன செய்ய முடியும்? இதையெல்லாம சிவாகிட்டே சொல்லணும்னு நினைச்சேன்.. அவன் வீட்டுக்கும் வரலை, என் ஃபோனையும்  எடுக்கலை, எனக்கு ஃபோனும் செய்யலை.” என்று மேலே பேச முடியாமல், அமைதியாக கண்ணீர் வடித்தார் சாந்தி.

Advertisement